விலகும் புறவுலகு-கவிதை-ஷமீலா யூசுப் அலி

விலகும் புறவுலகு

பனிப்புகார் உறைகின்ற
சாம்பல் நாளின் வெறுமையை-
புகைக்கூண்டுக்குள்ளால்
வெளிக்கிளம்புகின்ற ஆவியின்
வெதுவெதுப்பை
வரைகிறேன்!

முடிவற்று நீள்கின்ற
வசந்தகாலத்தின் பகல்களை
அவை அடைகாக்கும் பதட்டங்களை
செழும்புப்பச்சையும் நீலவூதாவும்
குழைத்து தீட்டுகிறேன்.

கனேரிப் பறவையின்
துயாரார்ந்த பாடலை
கீறுகிறேன்!

இலையுதிர் காலத்தின்
வாதைதரும் வீதிகளை
நெடிதுயர்ந்த பிர் மரங்களை
சிறுகச் சிறுகக் கட்டியிருக்கும்
குருவிக்கூடுகளை வரைகிறேன்.

குண்டுக் கரிச்சான் பறவைகள்
சிறகடித்து
முகில் திரள்களுக்குள் தேய்ந்து
மறைகின்றன!

பெரும் நேசங்களை தனக்குள்
தாங்கிப் பிடித்திருக்கும்
ஏரியின் பெருமூச்சு…
அதில் விழுந்து கிடக்கும்
பாதிச் சூரியன்…
நெளிகின்ற நீரில் விழுந்து கிடக்கின்ற
மயில் வண்ண வாத்து இறகு.

ஒன்றிலிருந்து இன்னொன்றாய்
பட்டுத்துணி மாயவெளிகளை
முடிவற்று நெய்கின் றது
தூரிகைத்தறி!

திரும்பிப் பார்த்தால்…
அசைவற்று
நிச்சலனமாய் இருக்கிறது
புற உலகு!

000000000000000000000000

ஊர் மருந்து

அடுக்கடுக்காய்
கம்பளிப் போர்வைகளால்
போர்த்தியிருந்தாலும்
எப்படியோ உள்நுழைந்து விடுகிறது
காய்ச்சல் குளிர்.

இறுக மூடியிருக்கும்
ஜன்னலுக்கு வெளியே
உருகி வடிகிறது நவம்பர்

காலம்
தன் இலைகளை உதிர்க்கிறது
சிவப்புச் செம்மஞ்சளும்
இன்னும்
சொல்ல முடியாத
ஒரு நிறத்திலும்.

குளிர் நடுக்கம்
தன் வலிய கரங்களினால்
உடம்பை
அங்குலம் அங்குலமாய்
பிசைந்தெடுக்கிறது!

அனத்தலில் வழிதவறிய
பெயரிடப்படாத சொற்களில்
ஆறிக் கிடக்கிறது
தேநீர்.

‘வெயிலை அழைத்து வாருங்கள்’
முனகுகிறேன்.
ஒரு பிடி மண்ணள்ளி
கரகரவென்று சாப்பிட வேண்டும்
போலிருக்கிறது

2019 November 3

ஷமீலா யூசுப் அலி-ஐக்கிய இராச்சியம்

(Visited 187 times, 1 visits today)