‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு-கட்டுரை-நிவேதா உதயராஜன்

‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள்.

போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகவேண்டிய ஒரு கட்டாய நிலை தோன்றியது. இதன் காரணமாக பலர் மனவுளைச்சல்களுக்கும் ஆளானார்கள். ஆனாலும் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற நிலையில் பலவிதமான இன்னல்களையும் ஆரம்பநாட்களில் சகித்துக்கொண்டு தமக்காகவும் தம் குடும்பத்துக்காகவும் உழைத்தார்கள்.

பல தமிழர்கள் காணிகளை, வீடுகளை, நகைகளை ஈடுவைத்து அல்லது விற்று தம் பிள்ளைகளை, கணவன்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியும் வைத்தனர். தம் உறவினர் வெளிநாடு சென்றுவிட்டால் பணமழை அங்கு கொட்டும். தம் துன்பங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்றே ஆரம்பத்தில் பலரும் நம்பினர்.

நாம் பிறந்து வளர்ந்த வீட்டையும் கூடித் திரிந்த நண்பர்களையும், உறவினர்களோடு  கூடி வாழ்ந்த  பூர்வீக நிலங்களையும் கிராமங்களை, கல்விகற்ற பள்ளிகளை, வேலைத்தலங்களை மட்டுமல்ல தம் தகுதிகளையும் விட்டுவிட்டு கற்பனைகளோடு கவலைகளையும் சுமந்து வெளிநாடு வந்த சிலர் மகிழ்வோடு இருந்தாலும் பலரும் பிரிவுத் துயரில் பலநாட்கள் தூக்கம் தொலைத்து விழித்திருந்ததைப் புலத்தில் உள்ளவர்கள் அறியமாட்டார்கள்.

உண்மையான அக்கறையோடு உயிர்காக்கப் பெற்றோரால் அனுப்பப்பட்டவர்களும் தாமாக வந்தவர்களுமாக 2009 வரை இலட்சக்கணக்கில் தமிழர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் 2009 இன் பின்னர் வருபவர்களும் ஒருசிலர் போரின் வடுக்கள் தாங்கி வாழமுடியாதவர்களாக இருந்தாலும்கூட மற்றவர்கள் வெளிநாடு வருவதன் நோக்கம் என்ன???பணமும் வசதியான வாழ்வும் மட்டுமே காரணிகள்.

புலத்தில் வாழும் இளம் பெண்களைப் பொறுத்தவரை வெளிநாடு என்பது சொர்க்கம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்கள் எல்லோர் மனதிலும் வேரூன்றியிருக்கிறது. வெளிநாட்டு மாப்பிளைகளையே பெற்றோரும் விரும்புவதற்குக் காரணம் பிள்ளைகள் அங்கு சென்றால் தம் பொருளாதார வளம் சீரடையும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் பிள்ளை வசதியாக வாழ்வாள் என்ற எண்ணப்போக்கும்தான். பல பெற்றோர் கூட மணமகனுக்கு எந்தவிதக் கல்வித் தகுதியோ  அல்லது எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் கூட அதைப்பற்றி எவ்வித கவலையும் இன்றி மணமகனின் குணநலன்களைக் கூட விசாரிக்காது அல்லது கண்டுகொள்ளாது  மணமுடித்துக் கொடுக்கின்றனர். இதற்கான காரணம் பணமும் வசதியான வாழ்வும் என்ற எண்ணமேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?

சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள். இதைவிடக் கேவலமான செயல் வேறொன்றுமில்லை.

பெற்ரோரைக் கடவுளாக மிகைப்படுத்திக் கூறும் எம் சமுதாயத்தில் பெற்றவர்கள் பலர் பிள்ளைகளின் வாழ்வைப் பற்றிய எந்தக் கரிசனையுமற்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளிடம் பணம் கறப்பதையே நோக்கமாகக் கொண்டு, தாம் மகிழ்வாக வாழவும், போலி கெளரவத்துக்காக தம் பிள்ளைகளை ஓட்டாண்டியாக்கி வெளிநாடுகளில் நடைப்பிணங்களாக வாழவைத்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

பெற்றோர் ஒருபுறமிருக்கட்டும். பல சகோதரர்கள் வெளிநாட்டுச் சகோதர சகோதரிகளின் உழைப்பைச் சுரண்டி தாம் அங்கு ஆடம்பரவாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பது கண்கூடு. உறவினர் பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி அவர்கள் பணத்தில் பெற்றோல் போட்டுத் திரியும் இளம் பெண்கள் ஆண்கள் எத்தனைபேர்? தம் பிள்ளைகளின் கல்வி, திருமணச் செலவு, குடும்பத் செலவு,  தம் வைத்தியச் செலவு மட்டுமன்றித் தாம் விடுமுறை சென்று மகிழ்வதற்கு வெளிநாட்டவர் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவுசெய்வதைப் பலரும் அறிந்திருந்தாலும் தொடர்ந்தும் தம் உறவுகள் நல்லாய் இருக்கட்டும் என்ற பரந்த நோக்கில் தம் செலவுகளைச் சுருக்கி, தம் பிள்ளைகள் கேட்கும் பல பொருட்களை வாங்கிக் கொடுக்காது, ஒரு நாளில் மேலதிக வேலை செய்து, கடுங் குளிரில் விறைத்தபடி வேலைக்குச் செல்வதை புலம்பெயரிகள் பணத்தை ஏப்பமிடும் எவரும் அறியமாட்டார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள்  பெயரில்  ஏதாவது சொத்துக்கள் இருந்தால் அவ்வளவுதான். அவர்களுக்கு எதற்கு இங்கிருக்கும் சொத்து? எனத் தாமாகவே முடிவு செய்துகொண்டு அவர்களுக்கே தெரியாமல் அச் சொத்துக்களில் தம் ஆதிக்கத்தைச் செலுத்துவதும், கள்ள உறுதி முடித்துத் தமதாக்கிக்கொள்வதும், அவர்களை நிர்ப்பந்தித்து அச் சொத்துக்களை தம் பெயருக்கு மாற்றி எழுதிக்கொள்வதும் பல இடங்களில் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்து புலத்தில் வாழும் எம் உறவுகள் பலருக்கு மானஉணர்ச்சியே  அற்றுப் போய்விட்டமை தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

போர் கொடுமையானதுதான். எம்மினத்தின் ஆன்ம பலத்தை அடியோடு அழித்து, பலரை நிற்கதியாக்கிப் பல சந்ததிகளையே அடையாளம் தெரியாமலும் ஆக்கிவிட்டது. அதை எம் எதிரிகள் தான் செய்தார்கள். ஆனால் உங்கள் உறவுகளை, உங்கள் இனத்தவரை இப்படிச் சுரண்டி, ஏமாற்றி, எதிரிகளாக எண்ணி அவர்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களைத் தூற்றுபவர்களை ஐந்தறிவு கொண்டவைகளில்க் கூட அடக்கமுடியாது.

இனி நாம் எம்மூரில் வாழமுடியாது.சரி விடு முறைக்காவது அங்கு சென்று உறவுகளைக் கண்டு மகிழலாம், எம் பிள்ளைகளுக்கும் எம் நாட்டை, ஊரைக் காட்டிப் பற்றுக்கொள்ள வைக்கலாம் என்னும் அற்ப ஆசையுடன் புலத்துக்குச் செல்லும் பலர் இனிமேல் அங்கு போவதில்லை என்னும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தனை காலமும்எம்பணத்தை அவர்களுக்கு அனுப்பியது போதாதென்று வெளிநாட்டிலிருந்து போகும்போதும் இலட்சக் கணக்கில் கொண்டுபோக வேண்டி உள்ளது.

ஆயிரங்கள் எல்லாம் ஒரு பெறுமதி அற்ற பணம் அவர்களுக்கு. ஒரு சிலஅறிவற்ற புலம்பெயர் தமிழர்கள் அவர்களையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்துவிட்டு வருவோம் என்று தம் பணத்திலோ அன்றி வட்டிக்கு வாங்கிக்கொண்டோ சென்று ஊதாரித்தனமாகச் செலவு செய்வதைக் காணும் மற்றவர்கள், சாதாரணமாகச் செல்லும் ஒருவரிடம் காணும் எளிமையைக் கூடப் போற்றுவதில்லை. நாம் எப்போதும் இங்கு வாகனத்திலேயே திரிகிறோம். காற்றாட எம் ஊரில் பேருந்துக்களில் திரிவோம் என்றாலோ, பணத்தை விரயமாக்காது கவனமாகச் செலவழித்தாலோ எமக்கு கிடைக்கும் பெயர் நம்பி, கசவாரம் என்பதுதான். சில வெளிநாட்டில் இருந்து செல்லும் குடும்பங்கள் பணத்தை ஆடம்பரமாகச் செலவுசெய்து, அங்குள்ளவர்களிடம் தாம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று பணத்தை வீண் செலவு செய்கிறார்கள். அது அவர்களின் அறியாமை என்பது ஒன்று. மற்றும் புலம் பெயர் தேசத்திலும் சொந்த உழைப்பில் வாழாது அரச உதவிப் பணங்களில் வாழும் கேடுகெட்ட சிலர் செய்யும் அர்த்தராத்திரியில் குடைபிடிக்கும் வேலையால் ஒட்டுமொத்த புலம் பெயர் சமூகத்தின் பெயரும் கெட்டுப்போகின்றது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் புலத்தில் உள்ளவர்களுக்கு நாங்கள் வெறும் பணம் காய்க்கும் மரங்கள் மட்டும்தான்.

புலத்தில் உள்ளவரின் அந்த மனநிலை பற்றித் தெரிந்தும் கூடப் பல உறவுகள் இன்னும் இன்னும் தம் உறவுகளுக்குப் பணம் அனுப்பி உதவியபடிதான் உள்ளனர். அப்படி இருந்தும் எமக்கெல்லாம் அவர்களிடம் இருந்து கிடைக்கும் மகத்தான பட்டம் நாட்டை விட்டிட்டு ஓடிப் போனவர்கள். இதை நாட்டுக்காகப் போராடிய போராளிகளோ அவர்கள் குடும்பத்தவரோ சொன்னால் கூட நாம் ஏற்றுக்கொள்வோம்.  சரி நாங்கள் ஓடிப்போனவர்களாகவே இருக்கட்டும். நீங்கள் நாட்டுக்காக என்ன செய்தீர்கள்? போராடப் போனீர்களா? அல்லது நாட்டுக்காக மனமுவந்து ஒரு துரும்பைத்தான் எடுத்துக் போட்டீ ர்களா அல்லது புலம்பெயர்ந்த உங்கள் உறவுகள் சொந்தங்கள் அனுப்பிய பணத்தில் ஒரு பத்து ரூபாயைத் தன்னும் போராட்டத்துக்காக வழங்கினீர்களா? அல்லது போரினால் துன்பப்பட்ட மக்களில் ஒருவருக்காவது மனிதநேயத்தோடு ஓர் உதவியாவது செய்தீர்களா ? என்றால் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. ஒரு சிலர் விதிவிலக்கணவர்களும் இருந்தார்கள். நான் அவர்கள் பற்றிப் பேசவில்லை. உங்களிடம் பணம் இருந்திருந்தால் எமக்கு முன்னோ பின்னோ நீங்களும் தான் ஓடி வந்திருப்பீர்கள்.

உறவுகளுக்காகப் பணம் அனுப்பினோம் சரி. முகமே தெரியாத எத்தனையோ உறவுகளுக்கு இடப்பெயர்வின்போது, சுனாமியின் போது, மழை வெள்ளம் ஏற்பட்டபோது, மண்சரிவு ஏற்பட்ட போது, நாட்டைக் காப்பதற்காய், போர் ஓய்ந்தபின்னும் எமினத்தவர் என்ற காரணங்களுக்காய் அள்ளி அள்ளிக் கொடுத்தோமே…. இன்றுவரை கொடுப்பது இன்னும் நிற்கவே இல்லை. எம்மைப் பார்த்து இன்னும் சொல்ல முடிந்தவை எல்லாம் சொல்வீர்கள். ஏனெனில் நாம் நாடற்று அகதிகளாய் அலையும் புலம்பெயர் தமிழர்கள்.

வசதி வாய்ப்பிருந்தும் வெளிநாட்டு ஆசை அறவே இன்றி தான் பிறந்த மண்ணை விட்டுப் போகமாட்டேன் என்னும் மனது துணிவோடு இருந்தவர்களுக்கு என் தலை தாழ்த்தி வணக்கமும்  நன்றியும் கூறிக்கொள்வதில் நான் பெருமைதான் கொள்கிறேன்.

தாய் நாட்டுக்கு விடுமுறையில் செல்லும் உறவினரை உள்ளன்போடு எதிர்பார்த்துக் காத்திருப்போர் மிகச் சொற்பமே. அக்காலத்துக்கு ஏற்ற நாகரிக உடை அணிந்து வாழ்வை வசதியாக்கிக்கொண்டு நல்ல வீடு, வாகனங்கள் என சுகவாழ்வு வாழ்பவர் பலர்  இங்கு இருக்கிறார்கள் தான். ஆனாலும் பலர் தம் சொந்தங்களுக்காக இன்னும் கடன் கட்டிக்கொண்டு, விடுமுறைக்கு எங்கும் செல்லாது பணம் மட்டுமே குறிக்கோளாய், எத்தனையோ நோய்களை உடலில் சுமந்துகொண்டு, விரும்பிய உணவுகளைச் சுவைக்க முடியாதவர்களாக, தம் அற்ப ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாதவர்களாகவும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆனால் எம்பணத்தில் உண்டுகொண்டே எம்மைப்பற்றிக் கட்டுரைகள், கவிதைகள், நக்கல் நளினங்கள் என இணையத்தளங்களிலும் முகநூல்களிலும்  பகிரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் எம்மைக் குறை கூற புலத்தில் உள்ள எவருக்கும் அருகதையே இல்லை. ஏனெனில் நீங்கள் உண்பது, உடுப்பது, வாழ்வது, வீணடிப்பது எம் உழைப்பும் தான்.

புலம்பெயரிகள் செலவழிக்கலாம்,  படாடோபமாகக்கூட வாழலாம். அதைக் கேட்க உறவுகள் , எம்மினம் என்பதைத் தவிர உங்களுக்கு எந்த உரிமையோ அன்றி கடமையோகூட இல்லை. ஏனெனில் நாம் எம் பணத்தில் வாழ்கிறோம். எம் பணத்தைச் செலவு செய்கிறோம், எம்பணத்தில் உண்கிறோம்.

ஒருவராவது வெளிநாட்டவர்களுக்கு ஒருநேர உணவை எதிர்பார்ப்பின்றித் தந்தீர்களா? ஒருதரமேனும் எதிர்பார்ப்பின்றி நலமாக இருக்கிறீர்களா? என விசாரித்திருக்கிறீர்களா? உங்கள் உழைப்பில் ஒருநாள் ஊதியத்தை எமக்குத் தந்துள்ளீர்களா? தந்திருப்பவர்கள் கூட ஒரு எல்லை வரை தான் கேட்க முடியும். அவர்கள் கேட்காதவற்றையெல்லாம் எதுவுமே செய்யாது, சொந்த உழைப்பின்றி எம் பணத்தில் உண்டு வாழும் நீங்கள் கேட்பதே தவறு.

ஆனாலும்  அதன்பின்னும் கூட நாங்கள் பலர் உங்களை மன்னிக்கிறோம். ஏனெனில் நீங்கள் எம் உறவுகள் என்பதும் எம்மால் வாழமுடியாத எம் தேசதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்  என்னும் காரணம்தான். அதை புரிந்து இனியாகிலும் எங்களைத் தூற்றுவதைவிட்டு உங்கள் சொந்தக் காலில் நின்று உங்கள் எண்ணங்களையும்  வாழ்வையும் வளம்படுத்தப் பாடுபடுங்கள். உங்கள் உயர்வுகண்டு நாங்கள் உங்களை போற்றுவோமேயன்றி எப்போதும் தூற்றவே மாட்டோம் புலத்தவரே.

நிவேதா உதயராஜன் -ஐக்கிய ராச்சியம்           

நிவேதா உதயராஜன்

(Visited 174 times, 1 visits today)