அப்பல்லோ-நாவல்-நூல்விமர்சனம்-சுந்தரசபாநாயகம்.சஞ்சீவன்

அப்பலோ ‘அப்பல்லோ’ பெயரை வாசித்தவுடனேயே உள்ளுராக ஒரு சிந்தனைப் பூச்சி “சடக்” என்று சிறகடித்து நினைவுப்பெட்டகத்தினை ஊடறுத்து உள்நுளைகின்றது. ‘அப்பல்லோ….’, ‘அப்பல்லோ…..’ உதடுகள் என்னை அறியாமல் இரு தடவை பெயரை உச்சரிக்கின்றது. ‘அண்டனூர் சுரா’ அவர்களின் படைப்பில் முகிழ்ந்த நாவல் ‘அப்பல்லோ’ .

நூல்களும் சிறுகதைகளும் நாவல்களும் கைகளுக்கு வந்துவிட்டாலும் வாசகர்களின் கவனத்தையும் எண்ணவோட்டத்தையும் தன்வயப்படுத்தி அதனை கையிலேந்திய வாசகர்கள் அதனை கீழே வைத்துவிடாதபடி தனக்குள்ளேயே அவர்களின் பொறிகள் அனைத்தையும் உள்வாங்கியபடி பயணப்பட வைப்பது என்பது அரிதான விடயமாகும். அத்தகைய உணர்வினை அப்பல்லோ தனது ஆரம்பத்திலேயே ஏற்படுத்துகிறது.

‘மெனிலாஸ் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதன் பிறகு மருத்துவசாலைக்குளிலிருந்த பலரும் அவசரமாக ஒட்டடையாக வெளியேற்றப்பட்டார்கள். வெளியேறியவர்களில் யாரும் திரும்பவும் அதற்குள் நுழைய முடியவில்லை. நுழைந்தவர்கள் எவரும் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. குடிலின் அகன்ற வெளிக்கதவுகள் இழுத்து அறைந்து சாத்தப்பட்ட சத்தம் காத தூரம் வரைக்கும் கேட்டது. கதவிற்கு வெளியே மூங்கில் கழிகளால் குறுக்கும் நெடுக்குமாக பிணைக்கப்பட்ட பெரிய வேலி. அதற்குள் நீள்வாக்கில் சொருகப்பட்ட ஒரு பெரிய ஆப்பு.’

என்ற வசனங்கள் நாவலுக்குள் வாசகனை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளீர்க்கின்றது. நாவல் என்பது வர்ணிப்புக்களுக்கு பஞ்சம் இல்லாதது எனினும் அதன் அளவு சாதத்திற்கு சேர்க்கும் உப்புக்கு சமமானது. அது சற்று அதிகரித்தாலும் அலுப்புத்தட்டிவிடும். குறைந்து விட்டாலோ ரசனையின் ஈடுபாடு குறைந்துவிடும். கற்பனைக் குதிரைகளின் கடிவாளம் இறுக்கப்பட்டு குதிரையின் ஓட்டம் தடைப்பட்டுவிடும். இந்த விடயத்தில் அப்பல்லோ நாவல் திறமையாக செயலாற்றுகிறது. கற்பனைக்குதிரைகள் நாவலின் வாசகர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் சுதந்திரமாகவும் வழங்கப்பட்டிருப்பதும் அவற்றின் சீரான ஓட்டமும் மனத்திரைகளில் விரியும் காட்சிகளும் அற்புதமான மனோநிலையை வாசகனுக்கு வழங்குகின்றன.

‘பெண்களின் வாயும் கண்களும் திறந்தபடியே இருந்தன. மார்புக்கூடுகள் ஒடுங்கி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கின. தண்டுவடம் சில்லிட்டது. பயத்தில் உடம்பு குறுகியதில் கையில் கிடந்த வளையல்கள் நழுவிக்கொண்டு கீழே விழுந்து உருண்டு ‘கிளாங்…’ சத்தமிட்டன. மக்கள் மனதிற்குள் காட்டாற்றின் ஓட்டம். என்ன செய்தியோ! ஏன் இத்தீயோ! பெண்கள் சிப்பாய்களின் வீட்டுக்கதவைத் தட்டினார்கள். ‘நம்நாட்டிற்கு வந்த பீடை என்னே!’ சிப்பாய்கள் நெற்றிக்குக் கைக்கொடுத்து நிமிர்ந்து பார்த்தார்கள். தீயின் இரைச்சல் கோடை கால புயலைப்போலப் பேரிரைச்சலைக் கொடுத்தது. வாளை அறுக்கும் வாளையொத்தவாளை எடுத்தார்கள். வாளைக் கொண்டு வாளைத் தீட்டினார்கள். தீட்டலில் தீச்சுடர்கள் பறந்தன.’

பிரம்மாண்டம் மிக்க பிரமிப்பான விறுவிறுப்பான சம்பவ வெளிப்பாடுகள் மனக்கண்ணில் கணப்பொழுதில் தோன்றி விரிகிறது. அதன் தன்மை மனதில் வித்தியாசமான அதிர்வெண்ண அலைகளை உருவாக்குகின்றது. நாவல் ஒன்றின் விறுவிறுப்புக்கும் அதன் தனித்தன்மைக்கும் காரணம் அதன் கதாபாத்திரமாந்தர்கள், அவர்களின் பெயர்கள், அவர்கள் தொடர்பான வர்ணனைகள், பின்புலக்கதைகள், நடத்தைகள், செயல்பாடுகள் எனலாம். ‘அப்பல்லோ’ நாவலானது  தனித்தன்மை மிக்க கதாபாத்திர மாந்தர்களை தனது ஒவ்வொரு தாள்களிலும் சுமந்து நிற்பது சிறப்பான விடயமாகும்.

பண்டைய கிரேக்ககால இதிகாச நூல்களான இலியட் மற்றும் ஒடிசி என்பவற்றில் காணப்படும் கதா மாந்தர்களின் பெயர்கள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை என்பது சிறப்பான நாவலியல் நுட்பமாகவே நான் பார்க்கின்றேன். அவை ஆவலை தூண்டுபவை. வாசகர்களின் பசிக்கு ருசியான தீனியை வழங்கும் அட்சய பாத்திரங்கள். பாரிஸ்,அகமெனான்,மெனிலாஸ், கெலன் ஆகிய கதா மாந்தர்களை இங்குகாணலாம். இவற்றுடன் ஆசிரியர் அவருடைய எண்ணத்திலும் சில பாத்திரங்களை சிருஷ்டித்திருக்கலாம்! என எண்ணத்தோன்றுகிறது. தமிழ்மரபின் அடியாக சில பாத்திரங்களின் பெயர்கள் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ‘மன்னராயன்’ என்ற பாத்திரம் சில தனித்துவ தன்மைகளை கொண்டு படைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது.

பாத்திரங்கள் கிரேக்கத்திற்கு உரியவையாக இருப்பினும் நாடுகள் கிரேக்கத்திற்கு உரியவையாக இருப்பினும் நாவலின் பண்பாட்டியல் என்பது தமிழ் மரபினடியாக உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு. தமிழர்களின் கலை கலாச்சாரபண்பாட்டியல், உணவுமுறைகள், என்பனவும் போர்க்கலையின் தனித்துவமும் மரபுவழி ஆயுதங்களும் இங்கே நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றது. இது வாசகர்கள் நாவலை வேற்று மனதுடன் அணுகுதலை தவிர்க்கும் உத்தியாகவும் குறியீட்டியல் நுட்பமாகவும் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளாரோ? என எண்ணத்தோன்றுகிறது.

டிரோஜன் நகரத்துக்கு பாரிஸ் மன்னன் வருகையின் பொழுது

“தனதடங்…தனதடங்…” என்று பறையொலிப்பதும்.

“டங்கன்…டங்கன்…” என்று மேளதாளங்கள் முழங்குவதும்.

வீதியெங்கும் “பல்லியமுழக்கம்”; ஒலிப்பதும்.

சிறுவர்இசிறுமிகள் வாளேந்தி “வாளாட்டம்”.

“வில்லாட்டம்” “வேலாட்டம்” என்பனவும் இடம்பெறுகின்றது.

இது போன்று பல தமிழர் பண்பாட்டியல் கூறுகள் நாவலில் வேரூன்றிக்கிடக்கிறது. உணர்வுகளின் சங்கமமாக ஒரு நாவல் உருக்கொள்ளுவது என்பதும் அதனை உருக்கொள்ள வைத்தல் என்பதும் நாவலாசிரியருக்கு சவாலான விடயங்கள். இந்த விடயத்தில் அண்டனூர் சுரா அவர்கள் வென்றிருக்கிறார் என்றே கூறவேண்டும். நாவலின் பக்கத்துக்கு பக்கம் அங்கத்துக்கு அங்கம் மாறுபட்ட உணர்வலைகள் நம்மை ஆட்கொள்கின்றன. மாற்றமடைகின்றன மாறவைக்கின்றன.வீரம்,கோபம், திமிர், செருக்கு,அகங்காரம், பாசம், அன்பு, காதல், காமம், சூது, வஞ்சகம், இறுமாப்பு, போர்வெறி என அனைத்தும் ஒற்றை நாவலுக்குள் புதைந்துள்ளது சிறப்பு. காதலும் வீரமும் தமிழர் மரபு காதலின் தண்மையும் வீரத்தின் வெம்மையும் தகிக்கும் தழலும் நாவலின் பக்கங்ககளிலிருந்து நமது கைகளுக்கூடாக உடலெங்கும் பிரவாகித்து பாய்கின்றது. அது ஒரு போதையாக மாறி நமது மனதினை ஆக்கிரமிக்கிறது.

‘அவளை அவன் திருப்பினான். தன் இரண்டு விரல்களை முதுகு சுழிக்குக் கொண்டு சென்று விரல்களால் தண்டுவட நீட்சியில் ஒரு முடிச்சிட்டான். நின்றபடியே அவள் உணர்ச்சியற்று நினைவிலிக்குச் சென்றாள். அவளது சந்தன மேனியை மேகமெத்த ஆடையொன்று தழுவியிருந்தது. அத்துடன் அவளது கச்சை முடிச்சுகளை அவிழ்த்தான். ‘பகலுக்கு ஒரு கண். இரவிற்கு ஆயிரம் கண்கள்…! அவளது மேனியை யாரேனும் பார்த்துவிட்டால் பார்த்து கண் வைத்துவிட்டால்… வைத்தியம் மட்டும்தெரிந்த எனக்கு அவள் மீது விழும் கண் திருஷ்டியை எப்படியாம் போக்குவது…?. கல்லடியை விடவும் கண் அடி பொல்லாதது’ அவளது கூந்தலைக் கொண்டு அவனது மேனியை மறைத்தான்.’

‘காதல்ரசம்’ பொங்கி பிரவாகித்து மனங்களை நனைக்கிறது. அந்தக் காதலர்களின் தனிமையினை இரசிக்கும் மூன்றாம் நபராக நம்மையும் களத்தில் நிலை நிறுத்துகிறது. படிக்கும் வேளையில் காதல் உணர்வு துளிர்த்து மலர்ந்து தேன்சிந்தும் அதிசயம் ஒன்று நமக்குள் நடந்து முடிகிறது. இது அப்பல்லோவின் அதிசயம். போரின் கணங்களும் வீரத்தின் செறிவும் திமிரும் பல இடங்களில் மண்டிக்கிடக்கிறது. இவ்வாறு நகர்ந்து வாசகர்கள் மனதில் பயணிக்கும் நாவல் தனது பக்கங்களில் மறைமுகமாக சூசகமாக தற்கால அரசியல்,பொருளாதார விஞ்ஞான நவீனமயமாதல், உலகமயமாதல் சிந்தனைகளையும் எதிர்காலத்தில் மனித சமுதாயம் எதிர்நோக்க இருக்கும் போரியல் பேரழிவுத்தாக்கங்கள் பற்றிய எதிர்வு கூறுதலையும், சுதேசிய பண்பாட்டியல் மரபியல் பொக்கிஷங்களின் திட்டமிட்ட அழிப்புக்களையும் மடமையினதும் மூடநம்பிக்கைகளினதும் மதவாதத்தினதும் பயங்கரவாத முகத்தையும் ‘வலியவன் வாழ எளியவன் சுரண்டப்படும்’ கொடுமையான உண்மை முகத்தை திரை கிழித்துக்காட்டுகிறது. இதுவே நாவலின் உயிர் நாடியாக நாவலில் வலுவாக எழுந்து நிற்கிறது.

‘அப்பல்லோ’, ‘மருத்துவக்குடில்’ மன்னன் அனுமதிக்கப்பட்டிருத்தல். உயிருடன் உள்ளாரா? இல்லையா? மக்களின் தவிப்பு, பல நாட்டு மன்னர்களின் கேள்வி? என்ற விடயங்கள் சிறிது காலத்துக்கு முதல் தமிழகத்தில் இடம்பெற்ற இன்றும் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாத தமிழகத்தின் இரும்புப்பெண்மணி என அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் விடயத்தை மனக்கண்ணில் கொண்டு வருவது எனக்கு மட்டுமாக இருக்காது என நிச்சயம் நம்புகின்றேன்.

‘அப்பல்லோ மருத்துவசாலைக்கு வெளியே துக்கம் சூழ குழுமியிருந்தனர். அவர்களின் கண்களில் மெனிலாஸ் குறித்த நினைவோட்டம். தவமிருக்க சிலர். மண்ணைத் தின்ன சிலர் கண்ணீரும் கம்பலையுமாக சிலர். ஒரு மூதாட்டி மண்ணையும் சோற்றையும் கலந்து தின்பதாக இருந்தாள். மன்னர் பிழைத்து வருவதற்கான அவளது வேண்டுதல் அது. ஒருவர் தான் ஆசையாக வளர்த்த கூந்தலை தெய்வத்திற்குக் கொடுத்தாள். ஒருவன் தன் கட்டை விரலை வெட்டி ஒற்றை இலையில் வைத்தான். மன்னருக்காக நூறு பேர் அன்னம் தண்ணீர் புழங்காமல் விரதமிருந்தார்கள். ஆயிரம் பேர் ஒற்றை காலில் நின்றார்கள். மன்னருக்காக ஒருவன் தன்நாவை அறுத்து இலையில் வைத்துவிட்டு வந்தான். இன்னொருவன் மன்னர் பிழைத்து வந்தால் மன்னருக்காகத் தன் தலையைத் தருவதாக வேண்டிக் கொண்டான்.’

‘அச்செய்தி என்ன அமைச்சரே…?’ ‘நான் மன்னரைப் பார்த்தேன்…’ ‘எப்படி இருக்கிறார்….?’ ‘நல்ல ஆகிருதியுடன் இருக்கிறார். மக்களின் தேவை குறித்து விசாரித்தார். விரைவில் நாடு திரும்பி டிரோஜன் தேசத்து மன்னன் பாரிஸ் மீது போர் தொடுக்கப் போவதாகச் சொன்னார். அதற்காக அத்தனைபேரும் ஆயத்தமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்…’ ‘ஆகாரம்….?’ ‘இரண்டு ரொட்டிகள் எடுத்துக் கொண்டார்…’ மக்கள் துள்ளிக் குதித்தார்கள். எண்திசையும் அதிர்ந்திட ஆனந்த வெள்ளங்கண்டாடினார்கள். அந்த இடம் சற்று நேரத்திற்குள் பண்டிகைக் கோலம் கண்டது.’

‘ஒரு நாட்டினை ஆட்சி செய்ய அதிகாரம் ஒன்று போதும். அதிகாரத்தின் அச்சாணி சுட்டும் விரல். விரல்களைக் கொண்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு மத்தியில் மெனிலாஸ் பாதங்களைக் கொண்டு ஆட்சிபுரிந்தவர். பாதங்களே அவருக்குப் பிரதானம். பாதங்களே அவரது சிரம்.பாதங்களே சிகரம். அவரது பாதங்களை யாரேனும் கழுவினால் அவருக்குத் தளபதி பதவி. பாதங்களைத் தழுவினால் அமைச்சர் பதவி.’

‘ஆர்கோ தேசத்தில் முதலாம் மெனிலாஸ் ஆட்சிபுரிந்த காலம் வரைக்கும் தளபதியாக விரும்புபவர்கள் மன்னன் முன் போர்க்கலை புரிந்து சாகசம் நிகழ்த்த வேண்டும். முதலாம் மெனிலாஸ் இறந்தவுடன் அந்த முறை மலையேறி விட்டது. இரண்டாம்மெனிலாஸ் என்றைக்கு ஆர்கோ மன்னனாகப் பதவி ஏற்றாரோ அன்றைய தினமே காலில் விழும் சடங்கு சட்டமானது.’

“மெனிலாஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு ஆர்கோதேசத்து இடைக்கால மன்னர்கள் அமைச்சு தளபதிபடை சூழ வந்து செல்வதாக இருந்தார்கள். அவர்களில் சிலர் அவ்விடத்தில் அமர்ந்து தியானம் செய்யவும் மொட்டை அடிக்கவும் சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ளவும் செய்தார்கள். சிலர் எப்படியேனும் தான் மூன்றாம் மெனிலாஸாகிவிட வேண்டுமென வைராக்கியம் கொண்டார்கள். மக்கள் சங்கமிக்கும் இடமாக அது மெல்ல மாறிக்கொண்டிருந்தது. அவர்கள் மெனிலாஸ்க்கு மரியாதை செய்யும் பொருட்டு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் காதினை வைத்து ‘மன்னரே நீர் இறந்தது போர்க்களத்திலா செல்லும் வழியிலா அப்பல்லோ குடிலிலா..? எனக் கேட்பதாக இருந்தார்கள்.’

இவை அதை ஞாபகமூட்டுகின்றன. சூட்சுமமான முறையில் உலகின் சதிகார அரசியல் பின்னல்களை வெளிப்படுத்துகிறார் அண்டனூர் சுரா. போரானது  இன்றைய உலகின் மிகப்பெரிய வர்த்தகநாமம். இந்தப் பெயரின் பின்னணியில் பல வர்த்தகங்கள் நடைபெறுகின்றன. நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. இனியும் நடைபெறும் என்ற விடயங்களையும் அதில் பெருத்த இலாபம் சம்பாதிக்கும் முதலைகள் பற்றியும் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. போருக்கான உத்வேகம் வழங்கப்படுகிறது. அதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. எளியோர் பற்றி எள் அளவும் சிந்திக்காத ‘கார்ப்பிரேட்’ சக்திகளை வெளிப்படுத்துகின்றது.

‘அப்பல்லோ’ நாவலில் யுத்தம் என்பது குழந்தைகளை பெண்களை சிறுவர்களை முதியவர்களை எப்படி எல்லாம் வாட்டி வதைக்கிறது? அவர்களின் சுதந்திர கனவுகளை எப்படி சிதைக்கிறது? என்பதை துகிலுரித்து காட்டுகிறார் அண்டனூர் சுரா. வெறுமனே உலோக ஆயுதங்களால் பெருமளவு அழிவுகளை ஏற்படுத்த முடியாது! அழிவின் அடர்த்தி போதாது இன்னும் வேண்டும்! இன்னும் வேண்டும்! என்ற வல்லரசு நாடுகளின் அவாவும் அணுவாயுத இரசாயன ஆயுத பரிசோதனை முயற்சிகளையும் அதன் கொடூரமான தாக்கங்களையும் இங்கு காண்கின்றோம்.

‘டிரோஜன் மன்னன் பாரிஸ்  அவனது தேசத்தில் அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தான். தன் நிதிநிலை அறிக்கையில் உணவிற்கு ஒதுக்கிய எண்பது விழுக்காடு நிதியை ரத்து செய்து ஆயுதம் கொள்முதலுக்கு ஒதுக்கினான். அந்நிய வியாபாரிகள் டிரோஜன் தேசத்தில் குவிந்தார்கள். மக்கள் கூடும் வாரச் சந்தை ஆயுதச் சந்தையானது. தானிய கிடங்கு இரசாயன கிடங்கானது. ‘இந்த இரசாயனம் நேற்று வந்தது…’ ‘இதன் சிறப்பு…?’ ‘நீரை விஷமாக்கும்…’ ‘இது…?’ ‘நிலத்தை நஞ்சாக்கும்….’ ‘இதெல்லாம் வேண்டாம். காற்றை நஞ்சாக்கும் இரசாயனம் இருக்கிறதா…?’ ‘ஆம் இருக்கிறது. எவ்வளவு வேணும்…?’ ‘மொத்தமாகக் கொடும்..’ என்றான் பாரிஸ். பிறகு அதை மறுத்து ‘வேண்டாம் அந்த இரசாயனம் தயாரிக்கும் தொழிற் பட்டறையை விலைக்குக் கொடும்…’ எனக் கேட்டு மிரட்டி நின்றான். பாரிஸ் போர்க்களத்தை மனதில் நிறுத்தி பலவாறு யோசித்தான். யோசித்ததை நடைமுறைப்படுத்தத் தொடங்கினான். ‘போர்த் தேசத்திற்கு ஆயுதங்களை விடவும் ஆண் பிள்ளைகளே தேவை. ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுக்க திடகாத்திரமான பெண்கள் தேவை…’ அதுகுறித்து பாரிஸ்யோசித்தான்.

அவனது யோசனையில் தென்பட்ட வித்துகளை மந்திரி சபையைக் கூட்டி விவாதித்தான். ‘திட காத்திரமான ஆண்குழந்தைகளைப் பெற்றெடுக்கப் பெண்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவார்கள். நாட்டில் கர்ப்பத்தடை கிடையாது. யாரும் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆண் குழந்தைகளை மட்டுமேபெற்றெடுக்கவேண்டும். பெற்றெடுக்கும் குழந்தைகளைச் சிப்பாயாக மட்டுமே உருவாக்கவேண்டும். பெண் குழந்தை பிறக்கத் தடை. பிறந்தால் வளரத் தடை. பெண் குழந்தைகள் பொது இடத்தில் காடு  கழனியில் விளையாடத் தடை. பாலியல் பலாத்காரம் குற்றமன்று.

போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களே அதன் வலியை உணர்வார்கள் அந்த கொடுமை ஏனையவர்களுக்கு இடம்பெறக்கூடாது என்ற எண்ணம் அவர்களுக்குள் திடமாக குடிக்கொண்டிருக்கும். ‘வினை விதைத்தவன் வினையறுப்பான்’; போரிற்காக கொடிய ஆயுதங்களை கண்டறிந்தவர்கள் அவற்றின் தாக்கத்தால் அவர்களே தமது நாட்டின் அழிவுக்கு காரண கர்த்தாக்களாகுவார்கள்.

‘எதிர்ப்படையின் சுவாசிக்கும் காற்றில் விஷத்தைக் கலந்தான். காற்று வீசும் திசை அறிந்து படகைச் செலுத்த வேண்டும். பட்டத்தைப் பறக்க விட வேண்டும். அவன் பக்கமாக காற்று வீசுகையில் காற்றில் நஞ்சைக் கலந்தான். அவன் கலந்த நஞ்சு அவனது படையையே முதலில் சாய்த்தது. அடுத்து திரவநஞ்சை குடிநீரில் கலந்தான். கலந்த நீர்நிலை எவை எவையென்று மனதில் குறித்துக் கொள்ள மறந்தான். போரில் தோற்று பின்னோக்கி ஓடுகையில் நஞ்சு கலந்த நீரையே அவனது படையினர் பருகினார்கள். தாகம் தணித்த தண்ணீர் உயிரைத் தணித்தது. மான் போல நீரில் வாயை வைத்தவர்கள் மீனைப்போல மிதந்தார்கள்.’

போரின் வடுக்களை தாங்கி நடந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம் ஆக்கபூர்வமான சிந்தனைப்போக்கு நோக்கி திரும்ப வேண்டிய முக்கிய தருணத்தில் இருப்பதையும் இச் சந்தர்ப்பம் தவறவிடப்படின் மனிதவர்க்கம் சீவனம் செய்ய முடியாத ஒரு பூமியை  நாமே உருவாக்கிய பாவிகளாக மாறிவிடுவோம் என்பதை சிரசில் ஓங்கியடித்துக் கூறுகிறார் அண்டனூர் சுரா அவர்கள்.

‘மருத்துவக்குடிகள்’ சுதேசிய மருத்துவத்தின் மாண்பு அதன் பக்க விளைவுகளற்ற குணமாக்கல் முறைகள் பாரம்பரிய மூலிகைகள் பற்றிய விபரிப்புக்கள் என்பன இங்கு முக்கியம் பெறுவதையும் அதன் சக்தியை வலுவாக உணர்த்துவதையும் அவதானிக்க முடிகிறது. மருத்துவத்துக்கும் மந்திரத்துக்கும் இடையேயான முரணாகவே இதனை காணமுடிகிறது. மதம் என்ற பெயரின் பின்னணியில் நிகழ்த்தப்படும் போலித்தனமான செயற்பாடுகள் ஏமாற்று வேலைகள் என்பவற்றையும் இங்கு சுட்டி நிற்கிறரர் அண்டனூர் சுரா.

‘ஒரு நோய் இரண்டு தீர்வுகள். ஒரு பக்கம் மருத்துவன் இன்னொரு பக்கம் மந்திரன். சரியான போட்டி… என்பதைப்போல மனதிற்குள் குதித்தான். மருத்துவக்கிழவர் கேட்டார் ‘என்ன வேடிக்கைத் தனம் இது…? மந்திரத்தால் மாங்காய் பழுக்காது’ ‘பழுக்கும்…’ ‘எங்கே பழுக்க வைத்துக் காட்டும்…’ மந்திரவாதி பூபூம்பா தன் முடிச்சிலிருந்து ஒரு காயை எடுத்தான். அதைத் தன் உள்ளங்கையில் வைத்தான். காய் பார்க்க பச்சையாக இருந்தது. அதன் மீது ஒரு பசையைத் தடவி புகையில் காட்டி இரண்டு மந்திர சுலோகங்களைச் சொன்னான். மாங்காய் பழுத்துவிட்டது. ‘பலே!’ என்றான்.’

போலிகள் வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்ற நிலை வருகின்ற பொழுது அதீதமான பய உணர்வை உண்டாக்கி அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவரும் யுக்தியை மடமைத்தனம் விதைப்பவர்கள் கையாளுவது நடைமுறையான விடயமாகும்.

‘வாழைப் பழத்தை வெறும் வயிற்றில் திகட்டத் தின்று கடைசியாக மோதிரத்தை விழுங்கி இப்பொழுது அதை உமட்டி வெளியில் எடுத்திருக்கிறாய்…’ மந்திரவாதியின் முகம் இருண்டது. ‘மருத்துவனே என் செய்கை உனக்குப் பொறாமை தருகிறது போலும். அதனால்தான் இப்படியாகப் பேசுகிறாய் பிதற்றுகிறாய். நான் நிகழ்த்தியது மீது உனக்குச் சந்தேகமென்றால் கடைசியாக இன்னொன்றை என் மந்திரத்தால் செய்து காட்டட்டுமா…?’ ‘ஆம் காட்டும்…?’ ‘என் மந்திரத்தால் இராணியின் மொத்த ஆடையையும் அவிழ்த்துக் காட்டுகிறேன்..’ மந்திரவாதி சொன்னதும் இராணி பல்லக்கிலிருந்து குதித்தாள். குதித்த வேகத்தில் அரண்மனைக்குள் ஓடினாள். மந்திரவாதி தனக்குள் சிரித்துக்கொண்டான். தன் சூழ்ச்சியை மெச்சிக் கொண்டான்.’

இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் அழகியலும் ஆரோக்கியமானதுமான தன்மையை நாவலின் விபரிப்புக்கள் தமக்குள் எம்மை சிறைப்பிடிக்கின்றன.

‘பரந்து விரிந்த குட்டையில் பனம்பழங்கள் மிதப்பதைப்போல கருங்குடில்களாக இருந்தன. கம்பு கேழ்வரகு கோதுமை கூலத்தினால் கூரைகள் வேயப்பட்டிருந்தன. ஒவ்வொரு குடிலைச் சுற்றிலும் பரந்து விரிந்து தோட்டம். தோட்டத்தில் கொடி வகை பூ வகைவேர் வகை மரம் வகை மூலிகைப் புதர்கள். எங்கும் பச்சைப்பசேல். பூவாக காயாக கனியாக..செடிகள் பூத்துக் காய்த்திருந்தன. தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகளும் தட்டான்களும் ஆலவட்டமடித்தன. ஒவ்வொரு குடிலுக்குமிடையே மெல்லிய ஒற்றையடிப் பாதை ஓடிக்கிடந்தது. பாதையின் விளிம்புகளில் மருந்து வகை புற்கள். பனை பாக்கு மரங்கள். ஆடவர்கள் மூலிகை பறிக்கவும் எடுக்கவும் தொடுக்கவும் பெண்கள் களையெடுப்பதுமாக இருந்தார்கள். வீட்டுக்கு வீடு நன்பால் தரும் மடிபால் பசுக்கள். ஆடுகள் நாய்கள் கோழி புறாக்கள்.’

பாரம்பரிய மூலிகைகளின் மகத்துவத்தையும் அதன் செய்முறைகளையும் பாரம்பரிய உணவுமுறைகளினையும் அதன் ஆரோக்கியமான தன்மையினையும் ஒவ்வொரு வரிகளும் உணர்த்துகிறது.

‘குடிலுக்கு குடில் மூலிகைகள் சேகரிக்க இடிக்க வறுக்க வதைக்க அரைக்க தேய்க்க…என இருந்தார்கள். ஒரு தாய் கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் சேர்த்து திரிபலா செய்து வெயிலில் காய வைத்தாள். மற்றொரு தாய் திரிகடுகம் செய்து பிள்ளைகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள். சந்தனம் அகில்கட்டை தேவதாரு சேர்த்து வறுத்து இடித்து உருண்டையாக உருட்டி தன் வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளியிடம் இதுதான் திரிகந்தம் என்றாள். அவர்களின் காலை சுற்றுண்டி திரிபழுகமாக இருந்தது. பால் நெய் தேன் முக்கூட்டுகளின் கூட்டு அது. யாரேனும் வீட்டிற்கு வந்தால் இருக்கவே இருக்கிறது பஞ்சஅமிர்தம். பால் சர்க்கரை நெய் தேன் வாழைப்பழம் கலந்து பிழிந்த சாறு. மருத்துவக்குடியில் எப்பொழுதேனும் நிகழும் ஒரு மரணம் வயோதிக மரணமாக மட்டுமே இருந்தது. வாதம் பித்தம் சிலேத்துமம் அற்ற பெருவாழ்வு வாழக்கூடிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.’

‘மூன்’ மன்னனுக்கு நிகழும் சிகிச்சை முறைகள் வாசகர்களின் மனதில் பாரம்பரிய மருத்துவத்தின் வாசனையை பரவவிடுகிறது என்பதும் அதன் அலாதியான உணர்வுக்குள் நம்மை அழைத்து செல்;வதும் சிறப்பான விடயங்கள்.

‘பூவரசு ஆவாரை பற்படாகம் வேப்பங்கொழுந்து இலுப்பை அரப்பு இவ்வளவையும் உடலில் தேய்த்து முதல் நாள் குளிப்பாட்டினார்கள். ஒதியம் பட்டையைச் சிதைத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி உடல் முழுவதும் தடவி மறுநாள் குளியலை நிகழ்த்தினார்கள். புற்று மண் குளியல் இன்னொரு நாள். நொச்சியிலை தும்பை ஆடுதின்னாப்பாளை சிறியாநங்கை துளசி வேம்பு ஊமத்தை இவைகளைச் சேர்த்து நீர் விட்டு அரைத்து உடலில் பூசி ஒரு நாள். வெப்பாலை தைலக்குளியல் வேப்பெண்ணெய் குளியல்.

இப்படியாக பதினைந்து நாட்கள். பிறகு அதையே இறங்கு கிரமமாக மறு குளியல். நாளொன்றுக்கு மூன்று முறை மலம் கழிக்கணும் ஆறு முறை சிறுநீர் கழியணும். தேனுடன் பலாப்பழம் சேர்த்து முதல் வேளை உணவு. வெல்லத்துடன் நிலக்கடலை மறு வேளை உணவு. கீரையுடன் பெருங்காயம்  மிளகு. பழங்களுடன் காய்கறிகள். முளைக்கட்டிய தானியங்கள்…. மூன் மன்னனின் உடம்பு பழைய நிலைக்குத் தேறி வந்தது. அவருடைய உடல்வாகு ஒரு சுற்று பெருத்து பளபளத்திருந்தது

என்ற பகுதிகள் இத்தகைய அலாதியான உணர்வை ஏற்படுத்துகின்றன. மருத்துவக்குடிகள் அவர்களின் தொன்மை அவர்களின் வைத்திய முறைகள் என்பன தமக்கு ஊறு விளைவிக்கும் என்ற எண்ணத்துடன் “பூபூம்பா” சதித்திட்டத்தில் இறங்கி தந்திரமாக அவர்களை கொடூரமான முறையில் அழிப்பது என்பது இங்கு சுதேசிய பாரம்பரிய நடைமுறைகளை வைத்திய முறைகளை பண்பாட்டியல் கூறுகளை திட்டமி;ட்டு அழிக்கும்இ அதனை தமது உடமையாக்கி காப்பீடு பெற்று திரும்பவும் மக்களிடத்தில் அதனை அறிமுகப்படுத்தி அதிக இலாபம் கொள்ளையடிக்கும் அந்நிய ஆதிக்க நிறுவனங்களின் மறுமுகம் காட்டி நம்மை விழிப்பூட்டுகிறது.

‘தீ ஒவ்வொரு குடிசையாகப் பற்றியது. குடிசைகள் எரித்து மரங்களில் பற்றியது. ஓடினார்கள் மக்கள். ஓடி தண்ணீருக்குள் குதித்தார்கள். தீ எரித்ததோலை தண்ணீர் உரிக்கிறது. மீன்கள் எரிந்த தோலைப் பிய்த்துத் தின்றன. நடக்கவேண்டிய உடல்கள் தண்ணீரில் மிதந்தன. தூரத்தில் எரிவது தீப்பந்தமா? தீ பந்தலா? ஆங்காங்கே மூலிகை சேகரித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களை வளைத்துப் பிடித்து காலிலிட்டு மிதித்து ஆடையைப் பறித்து கிழித்து மரத்தில் கட்டினார்கள். ‘சொல்லுங்கள் மன்னனின் பிணி நீங்கியது மந்திரத்தால்….’ ‘மன்னன் பிணி நீங்கியது மருத்துவத்தால்….’ சொன்னவனின் தலையைக் கொய்தார்கள். ‘இப்பொழுது சொல்லுங்கள் மருத்துவத்தை மந்திரம்வென்றது…’ ‘மந்திரத்தை மருத்துவம் வென்றது…’

‘சொல்லும் இல்லையேல் கழுவேற்றுவேன் மந்திரமே வென்றது…’ ‘மருத்துவமே வென்றது…’ அவனைத் தலைக்கு மேல் தூக்கினார்கள். ஆசன வாயில் சீவிய முனையைச் செருகித்  தரையை நோக்கி அழுத்தினார்கள். மலமும் மூத்திரமும் இரத்தமும் மரத்தில் வழிந்தன. ‘நீயாவது சொல் அரிப்பு நோய்க்கு மருந்து மந்திரமே. எந்நோய்க்கும் மருந்து மருத்துவமே…’அவனையும் தலைக்கு மேல் தூக்கினார்கள். கழுவேற்றும் மரத்தில் பாய்ச்சினார்கள் ‘அய்யோ….’

இறுதியாக “அப்பல்லோ” பற்றி ஒரே வரியில் கூற வேண்டுமெனில் ‘விடை காணமுடியா யதார்த்தத்தின் வினாக்களை வரலாற்றினூடு விடைதேடும் முயற்சி’ என்று கூறலாம். நிச்சயமாக நவீன மருத்துவத்தின் வருகையாலும் காலனித்துவ சக்திகளினாலும் அழிக்கப்பட்ட எம்மால் மறக்கபட்ட மருத்துவக்குடிகளுக்கு இந்நூலை சமரப்;பித்திருப்பது பெருமைக்குரியது. அழிந்து போன ஆதி மருத்துவத்தின் எச்சங்கள் இன்றும் எம்மிடையே சிதறிக்கிடக்கிறது. அதனை ஒன்றிணைத்து எமக்கான சுதேசிய மருத்துவ பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தருணமிது என்பதையும் உணர்த்துகிறது. யதார்த்தத்தினூடு தீர்வுதேடும் போக்கும் நடைமுறை விடயங்களில் புலனறிவும் தேடலும் மிக்க ஒவ்வொரு வாசகர்களினதும் தரமான விருந்துச்சாலையாகவே “அப்பல்லோ” வை நான் பார்க்கின்றேன்.

சுந்தரசபாநாயகம்.சஞ்சீவன்-இலங்கை

சுந்தரசபாநாயகம்.சஞ்சீவன்

(Visited 254 times, 1 visits today)