“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்-கதை 01-அலெக்ஸ் பரந்தாமன்

இரத்தத்தின் கதையை சொல்ல முன்பு :

வன்னிப்போரியல் வாழ்க்கைக்குள் எவருமே எதிர்பார்த்திருக்காத திருப்பங்களும், அவலங்களும் நடந்து முடிந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் அவை. அந்த அனுபவங்களானது சந்தோஷப்படுதல் ஒன்றைத்தவிர, மற்றைய எல்லாவிதமான உணர்வுகளையும் உள்வாங்கி, மீண்டெழுந்தனவாக அமைந்தன. அந்த மீண்டெழுதலோடு வாழ்வின் இன்னொருபக்கத்தை  அனுபவங்கள் வெளிக்காட்டி நின்றன. சக மனிதர்களைப் பற்றித் தெரியவும் அவர்களது குணவியல்புகள் மற்றும் குரோதச் செயற்பாடுகள் பற்றியும் அறியச் செய்தன.

வன்னிப்போர் முடிவடைந்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போர் மனப்புரிதலுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, ஏனையோருக்கும் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றவை ஏராளம்! இந்தப்போருக்குள் அநேகமானவர்கள் இறந்தும், ஏனையோர் உயிர்மீண்டவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி வாழ்பவர்களைப் பார்ப்பதிலும், அவர்களது அனுபவங்களைப் படிப்பதிலும் ஒரு சுவாரஸ்சியம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு கட்டத்தில் உளரீதியான சுகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது. சிந்தனை செய்பவர்களுக்கு அவர்தம் வாழ்க்கையைச் செழுமைப்படுத்த உதவியிருக்கின்றது. எழுத்து இலக்கியத்துக்கு கருக்களமாகவும் அமைந்திருக்கின்றது.

இந்த மனிதர்களைப்பற்றி நிறையவே எழுதலாம்! எழுதிக்கொண்டே போகலாம்! தொய்வில்லாத வசனநடைக்கு, அவர்களது துயர் தோய்ந்த வாழ்வின் பல பகுதிகளைத் தெரிந்தெடுக்கலாம். எழுதுவதை விரும்புபவனுக்கும், எழுத்தின்மீதான தேடல்களை அறிந்து கொள்பவனுக்கும் இந்த மனிதர்களின் வாழ்க்கை ஒரு கட்டாய தேவையாக இருக்கிறது.

புலிகளின் தமிழ்மக்களுக்கான விடுதலைப் போராட்ட காலத்தில், சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆங்காங்கே தமது சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்த இந்த மனிதர்களை, நிலம்மீதான படையினரின் ‘ முன்னேறுதல்’ நடவடிக்கை மெல்லமெல்ல அவர்களது இருப்பிடங்களை விட்டு நகர்த்தியது. துடைப்பங்களால் கூட்டி ஒதுக்கப்படும் குப்பைகள்போன்று ஓரிடத்தில் சேர்த்து விட்டது. அப்படிச் சேர்த்து விட்டதன் மூலம், அந்த இடத்தில் மிக நெருக்கமாக வாழ்ந்த இவர்களிடமிருந்து பல அனுபவங்களைப் பெறவும், அந்த அனுபவங்களூடாக அநேக விடயதானங்களையும் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாத்தளன் கடற்கரைப் பகுதியில் இருந்து  அம்பலவன் பொக்கணை, வலைஞன்மடம், முள்ளிவாய்கால் வரை, ஒன்று சேர்த்து விடப்பட்டிருந்த இந்த இடம்பெயர் மனிதர்களுக்குள் பலகதைகள் கனத்தனவாய் தேங்கிக் கிடந்தன. அக்கதைகள்  ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ள முடியாத சோகக்கதைகளாகவே இருந்தன. யாரை யார் தேற்றுவது என்பதுகூடத் தெரியாததொரு அவலநிலைக்குள்ளும் பல அராஜகச் செயற்பாடுகளும் அரங்கேறத்தான் செய்தன.

எல்லா மனித முகங்களிலுமிருந்து வழிந்து கொண்டிருந்தன கண்ணீர்த்துளிகள். வாய் இருந்தும் ஊமைகளாக… பேசுவதற்கு சுதந்திர மற்றவர்களாக… அவலக்குரல்களை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவர்களாக… இருந்தார்கள். அழுது… அழுது… அரற்றியபடியே, தங்களது அன்றாட வாழ்வினைக் கடந்து சென்ற இந்த மனிதர்கள், படிப்பதற்கு தலைசிறந்த நூல்களாகவே இருந்திருக்கிறார்கள் ; இன்றும் கூட இருக்கிறார்கள்!

போரியல் நிகழ்வுகள்… வாழ்வனுபவத்துக்கு புதுப்புது அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன. இந்த அனுபவமானது அவர்களோடும் அவர்கள் மத்தியிலும் வாழ்ந்த எனக்கும் ஏற்பட்டிருந்தது என்பது புனைவல்ல.

இலக்கு நோக்கி நகர்வதாகத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்த விடுதலைப் போராட்டம், இடைநடுவில் பல பாதைகளில்  பயணிக்கத்தொடங்கியபோது, வாழ்வின் இன்னொரு பக்கத்தையும்,  வஞ்சகங்களின் உச்சித் தொடுகையையும் அவ்வப்போது காணக்கூடிய தாக இருந்தது.

அசலெது? நகலெது? உண்மையெது? பொய்மையெது? நீதியெது? அநீதியெது? நட்பெது? பகையெது? என்பதையெல்லாம் வன்னிப்போருக்குள் பெற்றுக்கொள்ளக்கூடிய தாக இருந்தது.

மன அயர்ச்சியும் மரணத்தை நிதம்நிதம் ருசித்துப்பார்க்கும் வாழ்வுமாக, அவை எமக்கு எழுதப்படாத விதியுமாக இருந்த போதிலும், அவற்றையெல்லாம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு அஞ்சியபடி… கடந்துதான் போகவேண்டியிருந்தது. சுதந்திரத்துக்காகப் போராடியநாம்,  இறுதிவரை சுதந்திர மற்ற மனிதர்களாகவும் சுகம் யாவும் இழந்து சோகத்தைச் சுமப்பவர்களாகவுமே வாழ்ந்து கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டிருந்தது முல்லைப் பெருங்கடல்வெளி.

கடற்கரைவெளியில் கிழக்குத் திசையில் தோன்றும் பூரண உதயத்தின்  ஒவ்வொரு அழகியலையும் ரசிக்கமுடியாதவர்களாக நித்தமும்  அவலங்களைச் சுமந்து வாழ்ந்த காலங்கள் கொடிதிலும் கொடியவை. இந்த அவலக்கொடுமைகளுக்குள் சாதி, சமயம், பணம், படிப்பு, பிரதேசவாதம் மற்றும் தமக்கான ‘ பிற தகைமை’ களை வெளிப்படுத்தியவர்களும் உண்டு.

குண்டுகள் உடலைத் துளைப்பினும், உயிரது கணங்களில் பிரியினும் ; கூடவே கொண்டுவந்த மரபுசார் கொள்கைகளை விட்டுக்கொடுக்காது வாழ்ந்த மனிதர்கள் மத்தியில் தான், நானும் வாழ்ந்திருக்கிறேன்.

இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் விசித்திர மனப்பாங்குடையவர்கள். இந்த விசித்திரமனோபாவமே என்னை எழுதத் தூண்டுகிறது. வன்னிப்போர்  எனக்குக் கற்றுத்தந்தவை ஏராளம்! இந்த ஏராளத்தில் இருந்து சிலவற்றை எழுத்துக்களாகத் தொகுத்து ‘நடு’ வாசகர்களுடன்  இனிவரும் நாள்களில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நன்றி!

அலெக்ஸ் பரந்தாமன்-புதுக்குடியிருப்பு- இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்

(Visited 313 times, 1 visits today)

2 thoughts on ““இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்-கதை 01-அலெக்ஸ் பரந்தாமன்”

Comments are closed.