‘இரத்தத்தின் கதை’-கதை 02 -‘உப்புக்காற்றினுள் உறைந்த உண்மைகள்’- போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

ஓவியம் : டிசாந்தினி நடராசா

“ஆமி கிளிநொச்சியைவிட்டு வெளிக்கிட்டு விட்டானாம். உங்கை சனங்களெல்லாம் அள்ளுப்பட்டு வருகுதுகள்.”

வெளியே யாரோ கூறிக்கொண்டுசெல்வது தரப்பாள் கொட்டிலுக்குள் இருந்த அவனுக்கு வெகு துல்லியமாகவே கேட்டது.

அவன் தரப்பாள் கொட்டிலை விட்டு வெளியே வந்தான். கடலில் இருந்து வீசும் உப்புக்காற்று அவனை உதைத்துத் தள்ளுமாப்போல் வீசிக்கொண்டிருந்தது.

இந்த நிகழ்வு உண்மையா? அன்றிப் பொய்யா? சிலவேளைகளில் உண்மையாகவும் இருக்க்கூடும். பொய் யெனில், மக்களின்  மனதைக்குழப்பி… அக்குழப்பத்தில் அவர்கள் பதற்றப் படுவதை சிலர் ரசிக்கக் கூடும். ஊர் இரண்டு படும்போது அதன் இடையே இருக்கும் கூத்தாடிகள் தமக்குள் குதூகலிப்பதுபோன்று, புலிகள் – இராணு வத்தின் போர்க்கள நிலைவரத்தைப் பல புனைவுகள் கொண்டு சோடிப்பதனூடாக மேலும் பல குழப்பநிலைகள் உருவாகு வதை அவர்கள் விரும்பக் கூடும்.

 சிந்தனைகள் அவனுள் பலதெனவாய் விரிவடையத்தொடங்கின.

01.2009,

திங்கள்கிழமை முற் பகல் பத்துமணியளவில்,கைவேலிக் கிராமத்தில் முதன்முதலாக ஷெல் ஒன்று வந்து விழுந்து வெடித்துப் பெரும் சேதாரத்தை உண்டுபண்ணிய அந்த நிகழ்வை அவன் நினைத்துப் பார்க்கிறான்.

வீட்டின் பின்வளவுள் மரவள்ளிப் பாத்திகளுக்குள் சொரிந்து கிடந்த மரத்தின் இலைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோதுதான், அந்தச் ஷெல் கூவிக்கொண்டு வந்து விழுந்து வெடித்துச் சிதறியது.

அதிர்ந்துபோனது அவன்மட்டுமல்ல. அந்தப்பகுதி மக்களும்தான். அடுத்த ஷெல்லும் வரக்கூடும்… என்ற அச்ச உணர்வு அற்றவர்களாக அயலில் இருந்த அனைவரும் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றார்கள்.

என்ன அகோரமான காட்சி அது.

அங்கு சிதறிப்போனதில் எதுவுமே மிச்சமாக இருக்கவில்லை.

எங்கோ தூரத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, அக்காணியுள் தஞ்ச மடைந்திருந்த குடும்ப உறவுகள் அனைத்தும், தறப்பாள் கொட்டிலுடன் சின்னாபின்னமாகிக் கிடந்தன. குளறி அழுவதற்கு அந்தக்குடும்ப உறவுகளுக்காக அங்கு எவருமிருக்கவில்லை. ஒரு கிழவிமட்டும் அவலமாய் கத்திக்கொண்டிருந்தாள்.  அதுகூட அவளால் முடியாதிருந்தது. அவளது அகவையின்  உச்ச மும் மனதுள் பரவி நின்ற அச்சத்தின் முழுமையும் அவளது உடலை நடுங்கச் செய்து கொண்டிருந்தன.

அவனால் மேற்கொண்டு அங்கு நிற்க முடியவில்லை.அவனுள் விபரிக்க முடியாத விபரீத உணர்வுகள்…

“நாசமறுப்பார்! எங்கையிருந்து அடிச்சாங்களோ தெரியேல்லை?”

விடுப்புப் பார்க்கும் கூட்டத்தைவிட்டு அவன் வெளியேறிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து யாரோ கூறுவது அவனுக்குக் கேட்டது.

கைவேலிக்கிராமத்துள் ஷெல் வந்து விழுந்து வெடித்ததைத் தொடர்ந்து, பலர் கிராமத்தைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அங்கு இனியும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவனையும் விட்டு விலகியது. அவனும் தன் குடும்பத்தோடு கிராமத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தான். மக்க ளோடு மக்களாக மூடை முடிச்சுகளுடன் அயற்கிராமமான மாத்தளன் கடற் கரையை நோக்கி நடந்தவன், கடற்கரை க்கு அருகாமையில், தரப்பாள் கொட்டில் அமைத்துத் தங்கிக்கொண்டான்.

மக்கள் தொடர்ந்தும் மாத்தளனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மன்னாரில் இருந்து தொடங்கப்பட்டது இராணுவத்தினரின் முன்னேறும் நடவடி க்கை. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தார்கள்.

‘ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகின்ற நாய்களுக்கு இலகு’ என்பது போன்று, மக்களும் உயிருக்கஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு நகர, நகர இராணுவமும் அதனூடாக ஊடுருவி, இப்போது கிளிநொச்சி வரைக்கும் வந்து நின்றது.

கைவேலியை விட்டு வெளிக்கிட்டு மூன்று மாதங்களாகி விட்டன. அவனு க்கு வீட்டின் நினைவுகளே மனதுள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தன. அவரவர் ஏதோ அசட்டுத் துணிவில் தமது வீடுகளைப் பார்த்து விட்டு வருவதை அறிந்து கொண்ட அவனுக்கும், தனது வீட்டையும் வளவையும் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எழுந்தது.

குறிப்பாக, அவன் ஆசையோடு நட்டு வளர்த்த மரவள்ளிச்செடிகள், மனதில் வந்து நின்றன. இன்னும் ஒருமாதமும் பத்து நாள்களும் கடந்தால்  கிழங்குகள் அனைத்தும் உண்பதற்கேற்ற உணவாகிவிடும். சிங்கள அரசின் பொருளாதாரத் தடையின் நிமித்தம், அவன் நட்டு வளர்த்த பயிர்கள் அவை. ஆள் அரவம் இல்லையென்றால், குரங்குகள் கூட்டமாக வந்து எல்லாவற்றையும் சேதாரப்படுத்தி விடும். அவனுக்கு மரவள்ளிச் செடிகள் குறித்து கவலையாக இருந்தது. கைவேலிக்குப் போக வெளிக்கிட்டவனைத்  தடுத்து நிறுத்தினாள் மனைவி. மனைவியின் உறவினர்களும் அதை விரும்பவில்லை.

ஒருநாள் மாத்தளனுக்கு அருகில் உள்ள வலைஞன்மடம் எனும் இடத்தில் ஒருவரைப் பார்த்து விட்டு வருவதாக மனைவிக்குப் பொய் கூறிவிட்டு, தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு, கைவேலி நோக்கிப் புறப்பட்டான்.

மாத்தளன் கடற்கரையில் இருந்து கப்பல்றோட்டு வழியாக வந்து, பிரதான கிறவல்வீதியில் ஏறி ஓடிக்கொண்டி ருந்தது அவனது மிதிவண்டி. எதிரே சிலர் தலையில் மூடை முடிச்சுகளுடன்

கால்நடையாக வந்து கொண்டிருந்தனர். இடம்பெயர்ந்துவந்த ஒரு குடும்பமொ ன்று இரணைப்பாலை மாதா கோவில் முன்பாக இளைப்பாறிக் கொண்டிரு ந்தது. அருகே சிலமாடுகளும் மேச்சலுக்குச் செல்ல மனமன்றி, சோர்ந்துபோய் படுத்திருந்தன. மாடுகளுக்கு எதிர்த்திசையில் பல நாய்கள் கூட்டமாகச் சேர்ந்தநிலையில், ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

நாய்கள் ஊளையிடுவது அபசகுனத் துக்குரியது… என்பது அவனது ஆன்மீக நம்பிக்கை. பொதுவாக, ஒருவர் இறப்பதற்கு முன், நாய்கள் இப்படி ஊளையிடுவதைக் கண்டிருக்கிறான். அப்படி யானால்…? அவனுக்கு திக்கென்று மனதுள் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது அவனது மனைவி அவன் வலைஞன்மடத்தில் நிற்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பாள்.

புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் காட்டுப்பக்கமாக ஷெல் ஒன்று விழுந்து வெடிக்கும் ஒலி கேட்கி றது. அவன் தனது மிதிவண்டியை நிறுத்தி விட்டு, அந்த இடத்தில் நின்ற வாறு யோசித்தான்.

‘கைவேலிப்பக்கம் போவமா? விடுவமா?’

எதிரே வந்த  சிறிய உழவு இயந்திர மொன்று அவனைக்கடந்து அப்பால் போனது.

‘சரி… போவம்!’

மனதில் துணிவு வந்தது. தனது மிதிவண்டியை பிரதான வீதியில் இருந்து உள்ஒழுங்கையில் திருப்பினான். ஷெல் கூவிவரும் ஒலிதனைக் கேட்டால், ஒருகணத்துள் நிலத்தில் விழுந்து படுத்து விடலாம். வெடிக்கும் ஷெல்லில் இருந்து பறக்கும் ஈயத்துகள்களை மரம் தடிகள்  கூடுமான வரை தடுத்து நிறுத்தும்… என்ற நம்பிக்கையோடு சென்று கொண்டிரு ந்தான்.

ஆள்களற்ற வீட்டில் சிலரது நடமாட்டம் தெரிந்தது. அவர்கள் கள்வராகவும் இருக்கக் கூடும். எரிகிற வீட்டில் பிடுங்குவதே இப்போது பலருக்குத் தொழிலாகி ப்போய்விட்டதை அவன் உணர்ந்தான். அவனுக்கு தனது வீட்டின் நினைவு வந்தது. கிடுகினால் வேயப்பட்ட ஒரு சிறுவீடு. அவனது குடும்பத்துக்குப் போதுமான வீடு அது. வீட்டை நினைக்க அவனுக்கு கவலை அதிகரித்தது.

உள் ஒழுங்கைகளால் ஓடிக்கொண்டிரு ந்த அவனது மிதிவண்டி, இப்போது வேறு ஒரு பிரதான வீதியில் ஏறி…ஓடிக்கொண் டிருந்தது. சுற்று வட்டமெங்கும் அமைதி கலந்த ஓர் அச்சநிலை காணப்பட்டது. தெருவில் ஓரிருவர் ஆங்காங்கே மிதிவண்டிகளில் வந்து கொண்டிருப்பது அவனுக்கு சற்று ஆறுதலைக் கொடுத் தது.

அவன் தன் வீட்டு வளவினுள் நுழைந்தான். அங்கே வீட்டு முற்றத்தில், நான்கு பேர் துவக்குகளுடன் நின்றார்கள். அவனது வருகையை அவர்கள் விரும்பவில்லை என்பதை அவர்களின் முகங்கள் வெளிக்காட்டி நின்றன.

“எதுக்கு இஞ்சை வந்தனீங்கள்?”

கேள்வி கேட்டவனின் குரலில் கடுமை இருந்தது. அவனுக்கோ கடும் சினம் பொங்கியது.

“இது எங்கட வீடு. வீட்டைப் பாத்திட்டுப் போவமெண்டு வந்தனான்”.

கேள்வி கேட்டவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் பதிலளித்தான் அவன்.

துவக்கு வைத்திருந்தவன் எதுவும் கூறவில்லை. கடுப்பேறிய தனது முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

வீட்டின் உள்கதவு உடைக்கப்பட்டு, அறையினுள் இருந்த பொருள்கள் பலவும் சூறையாடப் பட்டிருந்தன. அவனுக்கு அதிர்ச்சியும் கவலையும் ஒருங்கே சேர்ந்தன. திரும்பி துவக்கு களுடன் நின்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

“கதவு உடைச்சுக் கிடக்குது. ஆர் உடைச்சது?”

“ஆமி வந்து உடைச்சிருப்பான்…”

துவக்குக் கூட்டத்திலிருந்து வந்தது பதில்!

“ஆமி வந்து உடைக்கும் வரைக்கும் நீங்கள் என்ன செய்தனீங்கள்?”

“ஹலோ…………..! வீட்டைப் பாக்க வந்தால், பாத்திட்டுப் போம்.  தேவையில்லாமல் உதில நிண்டுகொண்டு விசர்க் கதை கதையாதையும்”.

அவன் எதுவும் கூறவில்லை. தான் நிற்கும் சூழ்நிலையை உணர்ந்தான். மனித சஞ்சாரமற்ற, எதுவித சாட்சிகளுமற்ற அந்தச் சூழ்நிலையில், தனக்கு எதுவும் நேரிடலாம்… என்ற அச்ச உணர்வு அவனுள் எழுந்தது. மனைவி மற்றும் பிள்ளையின் முகங்கள் ஒருகணம் மனத்திரையில் வந்துவிட்டு  மறைந்தன.

அவன் திரும்பிக் கிணற்றடிப்  பக்கம் வந்தான். கிணற்றை ஒருதடவை எட்டிப் பார்த்து விட்டு, பக்கத்து வேலியோரம் சென்று தனது மைத்துனரின் வீட்டை எட்டிப் பார்த்தான். அங்கே முற்றத்தில் தாழப்பதிந்த வேப்பமரக்கிளையொன்றில் தோல் உரிந்த நிலையில், ஒரு குட்டி ஆடு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக்குட்டியின் தோலை இடுப்பினில் ‘பிஸ்டல்’கொழுவியிருந்த ஒருவன் மேலும் உரித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு தலைக்குள் விறைக்கத் தொடங்கியது. திரும்பி தனது வீட்டின் முற்றத்துக்கு வந்தவன், தற்செயலாகத் திரும்பி வளவின் பின்பக்கத்தைப்பார்த்தான்.

நட்ட மரவள்ளித்தடிகளில் அரைக் கரைவாசி கிழங்குகளோடு பிடுங்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஏனைய கிழங்குத் தடிகளில் ஒன்றை இரு துப்பாக்கிக்காரர் இழுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அவன் மெளனமாக தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினான். தெரு இப்போது வெறிச்சோடிப்போய் இருந்தது. அதேநேரம் மாதா கோவில் வளவினுள் அபசகுனமாக ஊளையிட்ட நாய்களும் நினைவினில் வந்து நின்றன.

விடுதலைக்கான பயணம் திசைமாறிப் பயணிப்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அமைப்புக்குள் எங்கேயோ பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டு விட்டதையும், அந்த வெடிப்பினூடாக விரும்பத்தகாதவர்கள் ஊடுருவி விட்டதையும் சமகள நிகழ்வுகள் சாட்சியங்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

ஆமி கிளிநொச்சியைவிட்டு வெளிக்கிட்டு விட்டான்… என்ற செய்தி வெறும் புனைவல்ல என்பது புரிந்தது அவனுக்கு.

கதை விரியும்

அலெக்ஸ் பரந்தாமன்-புதுக்குடியிருப்பு-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்

(Visited 262 times, 1 visits today)