‘இரத்தத்தின் கதை’-கதை 03 -‘இடப்பெயர்வு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

ஓவியம் : டிசாந்தினி நடராசா

கிறவல் வீதியில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது உழவு இயந்திரம். பள்ளங்கள் நிறைந்த வீதிமீது இயந் திரத்தை மிகக் கவனமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அதன் சாரதி. உழவு இயந்திரத்தின் முன்பாகவும் பின்பாகவும் வேறுசில வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பெட்டியின் இருபக்கவாட்டிலும் மக்கள் தங்கள் மிதிவண்டிகளில் நகர்ந்தவண்ணமிருந்தனர்.

காற்று கிறவல்வீதியின் செம்மண் புழுதியை பாரபட்சமின்றி எல்லோர் மீதும் வாரியிறைத்தபடி தன் பாட்டுக்கு வீசியபடியிருந்தது. மதியம் கடந்த பொழுதாயினும், வெயிலின் தாக்கம் குறையாத நேரம் அது. உழவு இயந்திரப்பெட்டியின்மேல் பொருள்களோடு பொருள்களாக சிவத்தாரும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள். உழவு இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தது.

‘போக்கறுந்து போவார்… நாசமறுப்பார்… ‘ தமிழீழம்’ எண்டு போராட வெளிக்கிட்டு, இப்படியே தெருத்தெருவா நாயாபேயா அலைய வேண்டிக் கிடக்குது…’

வார்த்தைகள் அவருக்குள் குமுறுகின்றன. அவற்றை வெளியே கொட்டப் பயந்தவர் அப்படியே தன்னுள் அடக்கிக் கொண்டார்.

வாழ்க்கையில் இயலாமைகளில் எழும் மன அவதிகளோடு, உடல் அசெளகரியப்படும் பொழுதுகளில் இப்படியான வார்த்தைகள் அவருள் பீறிட்டு எழும். ஆனால், வெளியே உரைத்து விடுவதற்கு உள்ளூர  எழுந்து  நிற்கும் அச்சம் அவரைத் தடுத்து விடும்.

சிவத்தாருக்கு இது நான்காவது இடப்பெயர்வு! அவரால் தாக்குப்பிடிக்க முடியவிவில்லை. ‘மன்னாரில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேறிவிட்டது…’ என்ற செய்தி பரவலானபோது, அவர் அது குறித்து அச்சப்படவில்லை. அலட்சியப்படுத்தினார்.

‘உதுகள்(புலிகள்) விடாதுகள். எப்பிடியும் அடிச்சுக் கலைச்சு உள்ளுக்கை தள்ளிப் போடுங்கள்…’ என்றுதான் நினைத்தார். அவரது கணிப்பீடு ஒரு வாரம் கழியத் தவறாகி விட்டது. அவருக்கு மனம் இருப்புக் கொள்ள வில்லை. தகிப்பும் தவிப்புமான இருமன நிலை உணர்வு அவருக்குள் எழுந்தவண்ணமிருந்தது.

நகரின் மத்தியில் பிரபலமான பல்பொருள் வாணிபம், ஊரின் ஒதுக்குப் புறத்தில் அரிசி ஆலை. அதனோடிணைந்த தோட்டவெளி என்று எல்லாவற்ருக்கும் உரித்துடையவர். அவரது அதிகார ஆளுமையின் கீழ் பல தொழிலாளிகள் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். ஆலை மற்றும் வாணிபக்கடையில் ஊர் இளைஞர்கள் இருவருடன், மலையகத்தைச் சேர்ந்தவர்களும் வேலை செய்தார்கள். தோட்டவேலைகளுக்கு மட்டும் சமூகத்தில் பின்நிலைப்படுத்தப்பட்டவர்களும் சாதிரீதியில் குறைவானவர்கள் என்று கூறப்படுவோரும் நாள்கூலிகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

தனக்கான சுயகெளரவத்தோடு கூடிய எந்தவொருவிடயத்திலும் தனக்குக் கீழே பணிபுரியும் தொழிலாளர்கள் வரம்புமீறாதபடிக்கு அவர்களை அந்தந்த நிலைகளில் வைத்து வேலையை வாங்கினார் சிவத்தார். காரணம், அவர் தன்னை எப்பொழுதும் ஓர் உயர்சாதிமானாக உருவகப்படுத்தி வாழ்பவர். ‘ காசுக்காரன்’ ,’வெள்ளாமாள்’… என்ற அடைமொழி அவரது பெயருக்கு முன்பாக நிமிர்ந்து  நகர்ந்து போனாலும், புலிப்பொடியள் பலருக்கு மத்தியில் சில நேரங்களில் சில இடங்களில்  பணிந்து குனிந்து அடங்கிப்போக வேண்டியிருந்தது.  இது குறித்து அவர் தனக்குள் குமையாத நாள்களே இல்லை.

பொதுவெளிக்குத் தெரியாமல் தன் மூலதனத்தை விரிவாக்கம் செய்து கொண்டிருந்ததன் நிமித்தம், சேரும் பணத்திற்கும் சாதித்தடிப்புக்கும் ‘ பொடியள்’ எடுபடாமல்போவது அவருக்கு உளரீதியான தாக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. அவர் தனது வருமானத்தை ஒரு மந்தநிலைபோல் மற்றவர்களின் பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும், அவரது செயல்பாடுகள் குறித்த தகவல்கள், அமைப்பின் மேலிடத்துக்கு சென்றவண்ணமே இருந்தன.

பொடியள் அடிக்கடிவந்து நிதி கேட்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் ‘ பஞ்சப்பாட்டு’ பாடினார். நாளடைவில் ‘ஒப்பாரிஓலம்’ ஓதத் தொடங்கினார். பொடியளும் விடவில்லை. மறைமுக கண்காணிப்புடன் அவரைப் பின்தொடர்ந்தவண்ணமே இருந்தனர்.

சிவத்தாருக்கு புலிகள் இயக்கம்மீது வெறுப்பு வந்துவிட்டது. ‘ வரி’ எனும் பெயரில் நிதி வசூலித்து, உடம்பு நோகாமல் பணம் சேர்ப்பதை அவர் தனக்குள் ஒரு கெளரவப் பிரச்சினையாகவே பார்த்தார். இதன் நிமித்தம் அவருக்குள் மெல்ல வளரத் தொடங்கியது பகையுணர்வு.

‘தூத்தேறிக் கூட்டங்கள்… உதுகள் எண்டைக்கு இந்த மண்ணைவிட்டுத் துலையுதுகளோ… அண்டைக்குத்தான் எங்களுக்கு நிம்மதி…’ என்று அவர் தனக்குள் சாபம்போட ஆரம்பித்தார்.

ஒருதடவை தனது தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரை வேலையில் பிழைகண்டு பிடித்ததன் நிமித்தம், பேச்சோடு பேச்சாக அவரைப் பார்த்து அவரது சாதியத்தைக்கூறிப் பேசிவிட்டார்.

ஆனால், அவரோ மாவீரர் குடும்பம். தனது மூன்று பிள்ளைகளை விடுதலைப் போருக்கு ஆகுதியாக்கினவர். அவர் நேரே தனது பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் சென்றார். பொறுப்பாளர் இந்த விடயத்தை தலைமைச் செயலகத் திடம் பாரப்படுத்தினார். விசாரணைக்கு வரும்படி சிவத்தாருக்கு அழைப்புக் கட்டளை

வந்தது. சாதித்தடிப்பும் மிதமிஞ்சிய பணமும் விசாரணை தன்னை என்ன செய்துவிட முடியும்…? என்ற திமிர் அவருக்குள் ஊறியிருந்தது. ‘காசுக்காக தங்களைப் போன்ற முதலாளிகளை நம்பித்தானே புலிகள் அமைப்பு இருக்கிறது.’ என்ற மனவோட்டம் அவரிடமிருந்தது. ‘எப்படியும் அவர்கள் தன்னிடம் வரத்தானே வேண்டும்.’ எனும் நினைப்பும் இருந்தது. இதன்நிமித்தம் அவர் விசாரணைக்குப் போனார். சாதியிலூறிய பணத்தடிப்பு அவரது சுயபுத்தியை பலவீனமடையச் செய்திருந்தது.

“ஓம்… நான் சொன்னனான்தான். ‘நளப்பொறுக்கி’ எண்டு சொன்னனான்தான். அதுக்கிப்ப என்ன?”  சிவத்தாரின் தடிப்புக் குணம் ஏற்படப்போகும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க விடவில்லை.

பொறுப்பாளர் எதுவும் கூறவில்லை. முறைப்பாடு கொடுத்தவரை வீடு செல்லும்படி பணித்தார். சிவத்தாருக்கு மூன்றுமாதங்கள் அமைப்பின் கோழிப்பண்ணையில் வேலை செய்யுமாறு ‘பணிஷ்மன்’ வழங்கப்பட்டது. சிவத்தாரால் அந்தத் தண்டனையை ஏற்கவும் முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்கவும் தெரியவில்லை. தண்டனை முடிந்து வெளியே வந்த பின்பும் அவருக்குள் இருந்த அந்தத் ‘தடிப்பு’ இருந்ததைவிட மேலும் திமிறத் தொடங்கியது.

“வீட்டுக்கொருவர் நாட்டுக்காக விரைந்து வாரீர்…” என்ற பிரசாரத்தை அமைப்பின் பரப்புரையினர் முன்னெடுத்தபோது, பணத்தைச் செலவழித்து ‘ஏதோ ஒருவழியில்’ அவர் தனது இரண்டு மகன்களையும்

ஒரேமகளையும் மன்னார் – இராமேஸ்வரக்  கடல்பாதையூடாக அந்நிய தேசத்திற்கு அனுப்பி விட்டார். பிள்ளைகள் பத்திரமாகப் போய்சேர்ந்து விட்டபோதிலும், அவர்களால் தனக்கும் தன்மனைவிக்கும் செய்யவேண்டிய அந்திமகால காரியங்கள் குறித்து மனம் கவலைப்படவே செய்தது.

வன்னிப்பெருநிலப்பரப்பினுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. துக்கரமான பலநிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்றவண்ணமிருந்தன. வீரச்சாவுகள், விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களின் உடல்கள், உடைமைகள் சேதாரமாகின. எங்கும் ஒரே இழவுகளாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது வன்னிப் பெருநிலப்பரப்பு.

மண்ணில் நிகழும் அவலங்களைப் பார்த்த சிவத்தாருக்கு எதையும் நம்பமுடியவில்லை. நாளுக்குநாள் ஏற்பட்டுவரும் அசாதாரண சூழ்நிலைகள் அவருக்கு எதுவும் புரிபடுவதாக இல்லை. ஏன் இப்படிப் போகிறது…? இயக்கத்துக்குள் என்ன நடக்கிறது…? என்பது குறித்து பொதுமக்களைப் போன்றே அவருக்குள்ளும் பலத்த சந் தேகங்கள் எழுந்தன.

புலிகள் தமது போராட்டத்துக்கான ஆள்பற்றாக்குறையைப் போக்குவதற்கு பொதுமக்களைப் பங்களிப்புச் செய்யுமாறு கோரியபோது, மேட்டுக் குடிவர்க்கமும், நடுத்தரவர்க்கத்தில் பெரும்பாலானவர்களும் ‘கள்ளமெளனம்’ காத்தார்கள். தாழ்நிலை வர்க்கத்திலிருந்தே பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தங்கள் பங்களிப்பைச் செய்ய முன்வந்தனர். இது புலிகள் அமைப்பின் தலைமைப்பீடத்துக்கு சற்று நெருடலைக் கொடுத்திருக்க வேண்டும்.

‘போராட்டத்தில் இணையுங்கள். இல்லையேல் ஆமியை யாழ்ப்பாணத்துக்குள் வரவிடுவம்.’

எனப் புலிகள் மிரட்டியதாக ஒரு ‘வாய்மூல வதந்தி’ பரவியதை சிவத்தார் அறிந்திருந்தார். பின்பு சிங்கள இராணுவம் யாழ்நகருக்குள் ஊடுருவ, அதற்கு ‘வலிகாம இடப்பெயர்வு’ எனும் நாமம் பொறித்ததையும் சிவத்தார் நினைத்துப் பார்க்கிறார்.

‘ஒருவேளை அந்த வலிகாம இடப்பெயர்வுக்கான சூழ்நிலைகள்தான் இப்பவும் வன்னியில் அமைஞ்சிருக்குதோ…?’ சிவத்தாரின் மனதுக்குள் வலுவடையத்தொடங்கியது சந்தேகம்.

“தம்பி! கவனமாப் பாத்துப் போ…”

சிவத்தாரின் மனைவி உழவுஇயந்திர சாரதியைப் பார்த்துக் கூறுகிறாள். சாரதிக்கு அவள் கூறியது கேட்கவில்லை. கிறவல்வீதி சீரில்லாமல் இருந்தினால், அவனது கவனம் முழுக்க வீதியிலேயே நிலைத்திருந்

தது. தூரத்தே வீதியின் அருகோரம் ஒரு ‘லான்ட்மாஸ்டர்’ இயந்திரம் பெட்டியோடு பொருள்கள் உட்பட சரிந்து விழுந்து கிடந்ததைக் கண்டி ருக்க வேண்டும்.

கிளிநொச்சி நகரினுள் ஷெல்கள் விழ ஆரம்பித்தவுடன், சிவத்தார் தனது பல்பொருள் வாணிபத்தையும் ஆலையில் இருந்த நெல் மற்றும் அரிசிமூடைகளையும் விசுவமடுவுக்கு இடம்மாற்றி, இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஆமி பரந்தனுக்கு வந்துவிட்ட செய்தியை அறிந்ததும், மீண்டும் நான்காவது தடவையாக இடம்மாற வேண்டிவந்து விட்டது சிவத்தாருக்கு. மனதுக்குள் புலிகளைத் திட்டிச் சாபம் போட்டவாறு இப்போது மாத்தளன் கடற்கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

பொழுது மெல்ல இறங்கி விட்டிருந்தது. நீலம்பாரித்த பெருங்கடல் கிழக்கே பரந்திருந்தது. காற்றும் ஒருவித ஓசையுடன் வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையை அண்டிய பகுதிகள் எங்கும் ஏற்கனவே வந்தமக்கள் தரப்பாள் கொட்டில் அமைத்து குடியிருந்தார் கள். மக்கள் தொடர்ந்தும் கடற்கரையை நோக்கி வருவதைக் கண்டதும், நிலம்பிடிக்கும் போட்டியைத் தவிர்க்க, சிவத்தார் அவசரம் அவசரமாக அருகில் இருந்த இருவரைக் கூலிக்கு அமர்த்தி, தரப்பாள் கொட்டிலைப் போட்டுக் கொண்டார்.

0000000000000000000000000000

மாலைப்பொழுது கவிழ்ந்து இருள் எங்கும் பரவியிருந்தபோதிலும், முன்நிலவின் ஒளியானது  நிலத்தில் மட்டுமன்றி கடல்நீரிலும் வியாபித்திருந்தது. தரப்பாள் வீடுகளில் ஆங்காங்கே தெரியும் லாம்பு வெளிச்சம் மனிதமுகங்களை இனம் காண உதவியது.

சிவத்தார் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அவருக்கு இயற்கை உபாதை ஏற்பட்டிருந்தது.  கடற்கரை வெளியைத்தவிர, வேறு மார்க்கம் தெரியவில்லை. கடற்கரைக்கு வந்ததும் அவர் திகைத்துப் போனார். கரைநீளத்திற்கு ஆண் – பெண் என்ற பேதமின்றி கிழக்குமுகம் பார்த்தவாறு எல்லோரும் தங்கள் உடைகளை இடுப்புக்கு மேலே தூக்கியபடி குந்திக்கொண்டிருந்தார்கள். ஒரே இடநெருக்கடி! குந்தியவர் எழும்பியதும் உடனே இன்னொருவர் ஓடிவந்து குந்துவதுமாக அந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

‘சே… என்ன அரியண்டம்…’ என்று மனம் அருக்களித்துக் கொள்கிறது சிவத்தாருக்கு.

சிலவிநாடிகளின்பின், அவருக்குப் பக்கத்தில் குந்தியிருந்த கிழவியொருத்தி தனது கடமையை முடித்துக்கொண்டு எழுந்தபோது, ஒருவர் வேகமாக வந்து அந்த இடத்தில் குந்தினார். சிவத்தார் சற்று தலையைத் திருப்பி குந்தியவரைப் பார்த்தார். நிலவொளியாயினும் குந்தியவரது முகம் தெளிவாகத் தெரிவில்லை. எங்கும் ஒரே மலவெக்கை. எல்லோரும் மூக்கைப் பொத்தியபடி இருந்தார்கள்.

சிவத்தார் எழுந்து கொண்டார். கூடவே அவருக்குப் பக்கத்தில் இருந்தவரும் அலைநீரில் கையைக் கழுவிவிட்டு, சிவத்தாருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். இடைவழியில் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தபோது, ஒருபெட்டிக் கடையில் தொங்கவிடப்பட்ட லாம்பு வெளிச்சத்தில் அவரது முகம் தெளிவாகத் தெரிந்தது.

‘அட…! இவனா…?’

சிவத்தார் பதறிப்போனார். அவர் வேறு யாருமல்ல.  ஒருநாள் இயக்கப் பொறுப்பாளருக்கு முன்பாக ‘நளப்பொறுக்கி.’ என விளிக்கப்பட்ட வரும், சிவத்தாரின் தோட்டத்தில் நாள்கூலியாக வேலை செய்தவருமான கதிரன் என்பவர்.

எந்த இடத்திலும் கதிரனது சமூகத்தை தங்களுடன் சமநிலையில் வைத்துப் பார்க்க விரும்பாத சிவத்தாரின் மேட்டுக்குடி உணர்விலூறிய சாதித்தடிப்பும் பணத்திமிரும் கடற்கரையில் ‘கக்கா’ கழிக்க வந்த இடத்திலும், கதிரன் தனக்கு சமநிலையாக இருந்ததை ஏற்க மறுத்தது.

தறப்பாள் கொட்டிலுக்கு வந்தவர், மனைவியிடம் விபரத்தைக் கூறிவிட்டு, வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

“பொடியளுக்குக் கேட்டாலும் பேசாமல் இருங்கோ…”

“நீ பொத்தடி வாயை…” சிவத்தார் தன் மனைவியை அதட்டினார்.

மனிதர்களின் கழிவுகளை எதுவித பேதமுமின்றி, மாத்தளன் கடல் தன்னுள் உள்வாங்கிக் கொண்டிருந்தது. அதற்கு பிரிவினை எண்ணம் கிடையாது. சாதிமத பேதம் தெரியாது. ஒவ்வொரு இரவுகளிலும் அதிகாலை வேளைகளிலும் அந்த மனிதர்கள் கழிக்கும் கழிவுகள் நீரோடு கலந்தபடி… கரைந்தபடி…

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 216 times, 1 visits today)

One thought on “‘இரத்தத்தின் கதை’-கதை 03 -‘இடப்பெயர்வு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்”

Comments are closed.