‘இரத்தத்தின் கதை’-கதை 04 -‘பிள்ளைபிடிகாரர்’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

இரத்தத்தின் கதை

எங்கும் அவலக்குரல்களும் அந்தரிப்பு நிகழ்வு களுமாக கடற்கரைப்பகுதி காட்சியளித்துக் கொண் டிருந்தது.உப்புநீர்க் கடலலைகளும் அன்று ஏனோ ஆர்ப்பரித்து எழாமல் அமைதியாகக் கிடந்தன.வீசும் காற்றும்கூட கள்ள உறக்கத்தையே கடைப்பிடித் தது. கதிரவன் மட்டும் உச்சிப்பொழுதில் தனது காங்கைகளை உக்கிரமமாக வெளிப்படுத்திக் கொண்டதில், காலடி மண்துகள்கள் கொதிநிலை கொண்டு தகித்தன.

அதுவோரு கனத்தநாள்… என்பதை வெளிப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் தமது முனைகளில் இருந்து ஏவும் ஷெல்கள் பலவும், ஒன்றன்பின் ஒன்றாக விண்ணதிரக் கூவியபடி… தரப்பாள் வீடுகளின்மேல் விழுந்து வெடித்துக் கொண்டிருந் தன. சிதறும் ஷெல்களில் இருந்து பரவும் ஈயத் துண்டுகள், ஏனைய தரப்பாள் கூரைகளையும், பாதுகாப்பற்ற மனிதர்களையும் துளையிட்டபடி… மறுபக்கமாகப் போய் விழுந்தன. சில தரப்பாள் வீடுகள் எரிகுண்டுகளின் நிமித்தம், தீப்பிடித்து எரியும் நிலையில்… அதை அணைப்பதற்கு ஆள்களற்று அதற்குள் இறந்து கிடந்தவர்களும் கருகிக் கொண்டிருந்தனர்.

வன்னிப்போர்க்களமுனை அதிர்ந்து கொண்டிருந்தது. புதுக்குடியிருப்பையும் மாங்குளத்தையும் இணைக்கும் ஒட்டுசுட்டான் பிரதானவீதியில் மன்னாக்கண்டலுக்கும் கற்சிலைமடுவுக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருந்த மோதலில், இராணுவத்தரப்புக்கு புலிகள் பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.அதனால்தான் என்னவோ அவர்கள் அன்றைய பகல்பொழுதினில், ஷெல்வீச்சுக்களை மிகவும் மூர்க்கத்தனமாக நடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஷெல்கள் வந்து விழுவதும் அவை வெடித்துச் சிதறுவதும் ஓய்வதாக இல்லை. அதேவேளை, அவலக்குரல்களும் நின்றபாடாக இல்லை. பரமன் பதுங்குகுழிக்குள் மனம் இறுகிய நிலையில் இருந்தான். வெளியே உதவிகோரி அழைப்பவர்களின் குரல்கள் அவனது செவிகளில் வந்து விழுகின்றன. அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை. அவனுக்கு அக்கணத்தில் தனது உயிர் முக்கியமாக இருந்தது. ஆனால், அது சுயநலப்பாங்கானதல்ல. பாதுகாப்பற்ற… அதேசமயம் எந்தநேரத்திலும் எதுவும் நடந்துவிடக் கூடும்… என்ற அச்ச மனோநிலையில், யாரும் எவருக்கும் உதவிசெய்ய முடியாததாகவே இருந்தது. அவரவர் தங்களுக்கான இழப்பின் துயர்களை அவர்களே அழுதுகுளறி ஆற்றுப்படுத்த வேண்டியிருந்தது.

தறப்பாள் வீடுகளுக்கு வெளியே ஆள்நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், மனம் சலித்து வாழ்வின் விரக்திநிலைக்கு உச்சமாய் வந்துவிட்ட ஒருசிலரே “வருவது வரட்டும்…” என்ற மனப்பாங்குடன்ஆங்காங்கு உலாவிக் கொண்டிருந்தார்கள். ஷெல்கள் தொடர்ந்தும் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன.

‘இண்டைக்கு என்ன நடந்தது? ஏன் இப்படிச் ஷெல்லுகளை அடிக்கிறாங்கள்…?’

பரமனுக்குக் குழப்பமாக இருந்தது.

“ஆமிக்காரருக்கு என்னவோ நடந்திட்டுது…”

பதுங்குகுழிக்குள் பரமனோடு இருந்த ஒருத்தர், அங்கு நிலவிய மெளனத்தைக் கலைக்கும் முகமாக தனது மன எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

“அதுக்காக இப்படியே ஷெல்லை அடிச்சுச் சனத்தைச் சாக்காட்டுறது…?”

குழிக்குள் இருந்த குடும்பப் பெண்ணொருத்தி வார்த்தைகளால் பொரிந்து தள்ளிளாள்.

பரமன் எதுவும் பேசவில்லை. மெளனமாக இருந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது மனைவி சப்பாணம் கட்டிய நிலையில் இருந்தாள். அவளது மடியில் அவர்களது குழந்தை வாயில் சூப்பியுடன் புறநிகழ்வுகள் எதுவும் அறியாது, தாயின் மார்போடு சாய்ந்திருந்தது.

“போற போக்கைப் பார்த்தால், நிலமை மோசமாகும் போலைதான் கிடக்குது. ஆராச்சும் இப்படி நடக்குமெண்டு எதிர்பாத்தவையே! இது எங்கையோபோய் முட்டிமோதிப்போட்டு நிக்கும்தானே…. நிக்கட்டும்! ” கூறிக்கொள்கிறார் குழிக்குள் இருந்த இன்னொருத்தர்.

அவர் கூறிய கருத்து சரியெனப்பட்டது பரமனுக்கு.

எந்தவொரு செயல்களுக்கும் அது நன்மையோ தீமையோ ஒரு முடிவு என்பது உண்டு. அந்தச்செயல்களின் பாவ புண்ணியத்தைப் பொறுத்தே அதன் நன்மையும் தீமையும் அமைகின்றன. “நீ எதை விதைக்கிறாயோ அதை அறுவடை செய்யாமல் மதிப்பதில்லை…” என ஓர் ஆகமநூல் கூறுகின்றது. அப்படியானால், வன்னிப்போர்க்கள நிலைமையின் பலாபலன் தான் என்ன? இதன் அறுவடை நன்மையாக முடியுமா? அன்றித் தீமையாக முடியுமா?

விடுதலைக்கான போராட்டம் திசைமாறிப் பயணிக்கும் போதே, அதன் இலக்கு ஒரு பூச்சியமாக மாறி, வெறும் புள்ளியாக முடிவுறப் போகுது… என்பதை மட்டும் பரமனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு இது ஏற்கனவே விளங்கிய விடயம்தான்.

ஒருசிறு கைத்துப்பாக்கியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் இனத்துக்கான விடுதலைப் போராட்டம், விலைமதிக்கமுடியாத ஆயுதங்களோடு வீங்கிப் பெருத்து நிற்கும் தருணத்தில், அப்போராட்டத்தை நிலை குலைப்பதற்காக முன்நகர்த்தப்படும் செயல்கள் தீவிரமடைந்து திசைமாறிப் பயணிப்பதையும் பரமனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

தெருவெங்கும் ‘பிள்ளைபிடிகாரர்’ உலாவத் தொடங்கிய போதே அவனது உள்ளுணர்வு ஏதோ ஒருவகையில் அவனை எச்சரித்துக் கொண்டிருந்தது. அவனும் இளவயதுடையவனாக இருந்தான். ஒரு குழந்தைக்குத் தந்தையாக… ஒரு பெண்ணுக்குக் கணவனாக… குடும்பப் பொறுப்புள்ளவனாக இருந்தான். களமுனைக்குத் தேவையான உடல்வாகு அவனிடமிருந்தது. இதனால், என்றாவது ஒருநாள், தானும் சிக்கல்களுக்கு உள்ளாகவேண்டிவரும்… என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவன் நினைத்ததுபோலவே நடந்தும் விட்டது.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் விவசாயச் செய்கைக்கு பெயர்போனது முத்தையன்கட்டு எனும் கிராமம். இக்கிராமத்தில் தனக்குத் தெரிந்த ஒரு கமக்காரரிடம் மரவள்ளித்தடிகள் வாங்கிக் கொண்டு, தனது மிதிவண்டியில் ஒட்டுசுட்டான் வீதிவழியாக வந்து கொண்டிருந்தபோது இடைவழியில் மன்னாகண்டல் எனும் இடத்தில் வழிமறிக்கப்பட்டான்.

பரமன் பதட்டமடையவில்லை. ‘ பிள்ளைபிடிகாரர்’ கேட்ட கேள்விகளுக்கு தக்கபதில்களை அவன் வழங்கினான். அவனிடமிருந்து சகல விபரங் களையும் உள்வாங்கிய அவர்கள், பலமணிநேரம் அவனைத் தடுத்து வைத்துவிட்டு, பொழுது மாலையானதும் வீடு செல்ல அனுமதித்தார்கள்.

போராட்ட அமைப்பின் ஆரம்பகாலக் கொள்கைகள் சிதிலமடையத் தொடங்கின. மக்களின் முகங்களில் கேள்விக்குறிக்கான உணர்வு பரவத் தொடங்கியது. சிங்கள அரசின் பொருளாதாரத்தடைகளுக்கு மத்தியில், வாழ்வதா? அன்றிச் சாவதா? என்ற எண்ணப்பாங்கு மக்களின் மனங்களில் பரவ ஆரம்பித்தது. பகைவனைவிட நண்பனாகத் தோற்றம் காட்டிய பலரும் இறுதியில் துரோகிகளாக மாறிப்போனார்கள். ‘தாகத்தில்’ தவித்தவர்களுக்கு இறுதியில் உப்புக் கடல்நீரே வழங்கப்பட்டது. கருத்துக் கூற எவருக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. இது ஏன்? எதற்கு? என்ற எதிர்வினையாற்றவும் அதை எழுதவும் துணிவு எழவில்லை. எல்லோரும் உயிருக்குப் பயந்து ஊரோடு ஒத்தபடி ஓடிக் கொண்டிருந் தார்கள்.

இறுதியில்… எல்லாவற்றையும் இழந்து ‘அம்மணமாகி’ நிர்க்கதியாய் நின்றார்கள். கையும் மனமும் வரண்டுபோயிருந்தன அவர்களுக்கு. வாழ்வதற்கு நிலம் இருந்தது. ஆனால், அவர்கள் வாழ முடியாதவர்களாக இருந்தார்கள். ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து, ஓரிடத்தில் பல ‘உபத்திரவங்களுக்கு’ மத்தியில் வாழத்தலைப்பட்டார்கள். மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல்வரை பரந்திருந்த நிலவெளியானது, மனிதர்களால் மட்டுமன்றி, மலவெக்கையாலும்
நிறைந்திருந்தது.

உண்ண உணவில்லை… உழைத்து உண்ணத் தொழில் இல்லை… நோய்க்கு மருந்தில்லை… பிரச்சினைத்தீர்க்க தலைமைக்கு வழி தெரியவில்லை… இந்த நிலையிலும், ” தூக்குங்கள் துப்பாக்கி… துணிந்துவிட்டால் எவன்பாக்கி…” என்ற பிரசார வாடையும் குறையவில்லை. இந்த வலிமிகுந்த வாழ்வியலுக்குள் மேலும் ஊடுவத் தொடங்கினார்கள் ‘ பிள்ளைபிடிகாரர்கள்’

எங்கும் ஒரே அவலக்குரல்கள்… ஒருபுறம் இராணுவத்தினரின் ஷெல்லடிகள்…மறுபுறம் விமானப் படையினரின் குண்டு வீச்சுகள்… இவைகளுக்கு நடுவில், அவலத்தைச்சுமந்து வந்தோரின் அல்லாடும் வாழ்வியலை மேலும் அச்சுறுத்தி. சிதைத்துக் கொண்டிருந்தது வன்னிப் போர்க்கள அரசியலும் போராட்டமும்.

சுமார் ஒருமணித்தியாலம்வரை பதுங்கு குழிக் குள் குந்திக்கொண்டும், சப்பாணம் கட்டிக்கொண் டும் இருந்ததால், பரமனுக்கு மேற்கொண்டும் அதற்குள் இருக்க முடியவில்லை. இராணுவத் தினரின் ஷெல்வீச்சுக்களும் சற்று தணிந்திருந்த நிலையில், தூரத்தில் எங்கேயோ பாரிய வெடியொலிகள் கேட்டவண்ணமிருந்தன.

“சரி ஒருக்கா வெளியிலை தலையை நீட்டிப் பார்ப்பம்…” என்று ஒருவர் கூறியபடி… ‘ L ‘வடிவத்தி
லான அந்தப்பதுங்குகுழியின் முன்பகுதியில் இருந்த ஒருத்தர், தவழ்ந்தநிலையில்… மெல்ல வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் ஒவ்வொருத்தராக வெளியே வந்தார்கள்.

பரமனும் தன் மனைவி பிள்ளையுடன் வெளியே வந்தான். கடற்காற்று தன்னில் குளிர்மையைச் சுமந்து வந்து அவன் முகத்தில் பட்டென அறைந்து விட்டுச் சென்றது. அந்தவலி மனதுக்கும் உடலுக்கும் சுகமளிப்பதாக இருந்தது அவனுக்கு.

ஷெல்கள் விழுந்து வெடித்த இடங்களில் தரப்பாள் வீடுகள் அலங்கோலமாகக் கிடந்தன. அதனுள் மனித உடலங்கள்… எங்கும் ஒரே இரத்தச் சிதறல்கள்… சதைத்துண்டங்கள்… உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் சாபவார்த்தைகள்… அந்தச் சாப வார்த்தைகளுக்குள் சிங்கள அரசும் இயக்கத்தின் தலைமையும் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தன.

மரணத்தை நோக்கி அடுத்தது யார்…? எவர்…? எங்கு…? என்ன வடிவத்தில்…? என்ற வினாக் களுக்கு எவருக்கும் விடை தெரியவில்லை. இருப்பினும், அவரவர் தங்கள் வாழ்வியக்கச் செயற்
பாட்டினுள் உள்நுழைந்து… மீண்டும் இயங்க ஆரம்பித்தனர்.

சற்று தூரத்தே ஒருமித்த அவலக் குரல்கள்… ஒலித்து வருவதைப் பரமன் அவதானித்தான். தனது தரப்பாள் கொட்டிலைவிட்டு நகர்ந்து, இடதுபக்கமாக சில அடிதூரம் நடந்தவன்… எதிரே வரும் சனக்கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றான்.

ஆண்கள் மற்றும் பெண்களாக… ஆறேழுபேரு க்கு மேற்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் ஒருசிறு பொதியைச் சீலைத் துணிகளால் சுற்றிக்கட்டிய நிலையில், அதைத் தூக்கிக் கொண்டு, கும்பிமணலினுள்நடக்க முடியாத நிலையிலும், ஓடிவந்து கொண்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து… ஏனையோர் குளறியபடி வந்தபடியிருக்க, அவர்களில் ஒரு பெண்னின் கைகளில் சிறு குழந்தையொன்றின் தலை. அதன் முகமெங்கும் இரத்தச் சிதறல்கள். குளறிவந்த கூட்டம் அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்தது.

பரமனின் தலைக்குள் கிபிர் விமானத்தின் மிகையொலி போன்ற உணர்வு… கண்கள் இருட்டிக் கொண்டு வருவதை அவன் உணர்ந்தான். தனக்கு ஏதோ நேரப்போவதை அவனால் ஊகிக்க முடிந்தது. அப்படியே அந்த இடத்தில் குந்திக் கொண்டான். இராணுவத்தினரால் ஏவப்பட்ட ஷெல் வீச்சுக்களின் அறுவடையின் ‘ஒரு பகுதி’ அதுஎன்பதை அவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது.அதேநேரம் அவனைக் கடந்து சென்ற அவல ஒலிகளும் காற்றில் தேய்ந்த படி…மறைந்து கொண்டிருந்தன.

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
அலெக்ஸ் பரந்தாமன்
(Visited 229 times, 1 visits today)