‘இரத்தத்தின் கதை’-கதை 06 – ‘சாவொறுப்பு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

இரத்தத்தின் கதை
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்

என்றுமில்லாதவாறு அன்றையதினம் மாத்தளன் கடற்கரைப் பகுதிக்குட்பட்ட மக்களிடையே ஒரு மெளனம் தோய்ந்த பரபரப்புக் காணப்பட்டது. மக்கள் ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒலி குறைந்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டி ருக்கிறார்கள்? ஆமிக்காரர் நெருங்கி வந்து விட்டார் களா? என்ன நடந்தது? யாரைக் கேட்பது? எவரை விசாரிப்பது? பரமனுக்கு குழப்பமாக இருந்தது.

பரமனது தரப்பாள் கொட்டிலுக்கருகில் ஒரு வாகைமரம் வளர்ந்து காணப்பட்டது. அதனருகில் இரண்டு சிறு பாரைக்கற்கள் இருந்தன. வெய்யிலின் உக்கிரம் தாங்கமுடியாத பொழுதுகளில் அவன் தன் தறப்பாள் கொட்டிலைவிட்டு வெளியே வந்து அந்த மரத்தின் கீழுள்ள பாறைக்கற்களின்மீது அமர்ந்து கொள்வான். அவனைப்போலவே வேறு சிலரும் நிழல் குளிர்மைக்காக அந்த மரத்தின்கீழ் வந்து குந்திக்கொள்வார்கள்.

இன்று அந்த வாகைமரத்தடி அமைதியாக இருந்தது. அங்கு எவருமிருக்கவில்லை. கடற்காற்று மிதமாக வீசிக்கொண்டிருந்தது. காலை வெயிலின் இளஞ்சூடு வெண்மணற்பரப்புமீது பதிவிறங்கத் தொடங்கியது. எங்கேயோ ஒரு தரப்பாள் கொட்டி லுக்குள்ளிருந்து அடுப்பில் ரொட்டிகருகும் வாசனையை காற்று ஊதிச்சென்று கொண்டி ருந்தது.

பரமன் வாகை மரத்தடியை நோக்கி நடந்தான். மரத்தின்கீழ் இருந்த பாறைக்கல்லின் மீதமர்ந்தவாறு, எதிரே போக்கும் வரவுமாக இருந்தவர்களை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணுக் கெட்டிய தூரத்தில் இருவர் ஒருவரோடொருவர் உரையாடியபடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கிட்ட வந்ததும், பரமனால் அவர்களை இனம் காண முடிந்தது. அந்த இருவரும் பரமனது தரப்பாள் கொட்டிலுக்கு அருகில் இருப்பவர்கள். ஒருவர் வயது கடந்த அப்பு! மற்றவர் ஓர் இளைஞர். வாகை மரத்தின்கீழ்  பரமன் இருப்பதைக் கண்டதும்

அந்த அப்புவும் இளைஞனும் அவனருகில் அமர்ந்து கொண்டார்கள்.

“என்னடா பொடி… யோசினை… ?”

முகத்தில் வழிந்த வியர்வையைத் தனது துவாய்த்தலைப்பினால் துடைத்தபடி பரமனைப் பார்த்துக் கேட்கிறார் அப்பு!

”பெரிசா ஒண்டுமில்லையணை. உங்கை சனங்கள் ஏதோ பதகளிப்பட்டுத் திரியுறமாதிரி தெரியுது. என்னத்துக்கு…?”

“நீங்கள் ஒண்டும் கேள்விப்படேல்லையே… ?”  அப்புவோடு வந்த இளைஞன் கேட்டான்.

பரமனுக்கு அந்த இளைஞனது பதில் திகைப்பைக் கொடுத்தது. பரமன் அப்புவைப் பார்த்தான். அப்பு, தான் அறிந்துகொண்ட விடயத்தைப் பரமனுக்குக் கூறினார்.

“இண்டைக்கு ஆரோ மூண்டுபேருக்கு ‘சாவொறுப்பு’ வழங்கப்போகினமாம்… அதுதான் சனங்கள் கேள்விப்பட்டு, பேயடிச்சமாதிரி புறுபுறுத்துக் கொண்டு திரியுதுகள்…”

அப்புவின் பதிலைக்கேட்டு பரமன் அதிர்ச்சிக்குள்ளானான்.

“இந்த நேரத்திலையுமா… ? சனங்கள் படுகிற பாட்டுக்கை…?”  என்று கூறிய பரமனைப்பார்த்து, அப்பு மெதுவாகச் சிரித்தார்.

“தம்பி… வேட்டைக்குப்போற வேட்டைக்காரனுக்கு பகலும் ஒண்டுதான். இரவும் ஒண்டுதான். அவனுக்குப் பொழுதுகளைப் பற்றிப் பிரச்சினையில்லை. இரையிலைதான் அவன் எப்பொழுதும் கவனமாக இருப்பான் கண்டியோ…”

அப்பு பூடகமாகக் கதைப்பதை பரமனால் புரிந்து கொள்ள முடிந்தது. விநாடிகள் சில அங்கு நிலவிய மெளன நிலைக்குள் அடங்கி விடுகின்றன.

“முன்னம் ஒரு காலம் போஸ்ற்மரத்திலை மனிசர் சவங்களாகத் தொங்கின கதை இன்னும் முடியேல்லையடா தம்பி ! உயிர்களெல்லாம் இப்ப பெறுமானமற்றுப் போச்சுது. ஒரு சிறு கைத்துப்பாக் கியிலிருந்து தொடங்கின போராட்டத்துக்கு எத்தனை உயிர்ப்பலியள் குடுத்தாச்சு. ஆனாலும், அது இப்பவும் நரபலி கேட்டு ஆடுது… அழுகுது”.

அப்பு சலித்தபடி கூறுகிறார். அவரது பார்வையில் துயரம் தெரிந்தது. அவரது வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.

“எதுக்காக இந்தச் சாவொறுப்பு அப்பு… ?”  பரமன் கேட்கிறான்.

“சனங்கள் ஆமியிட்டை போறதுக்கு வழிகாட்டினவையாம்…”

அப்புவோடு கூடவந்த இளைஞன் கூறுகிறான். பரமன் அப்புவைப் பார்க்கிறான். அப்பு அந்த இளைஞனின் வார்தையை ஆமோதிப்பது போல பரமனைப் பார்த்து தலையசைக்கிறார்.

”இது சனங்களின்பால் கொண்ட அக்கறையல்ல. சனங்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கடற்கரைப்பகுதியைவிட்டு வெளியேறிவிட்டால், தாங்கள் தனித்துப் போய்விடக்கூடும் என்ற அச்ச உணர்வு மேலெழுந்திருக்கிறது. எத்தனைமக்களைப் பலி கொடுத்தேனும், தங்கட இருப்பைத் தக்கவைப்பதற்கான செயற்பாடுதான் இந்தச் சாவொறுப்பு. இப்படியான சாவொறுப்புகள் மூலம் சனங்களுக்கும் ஆமியிட்டை கூட்டிக்கொண்டுபோற ஆக்களுக்கும் அச்சுறுதல் விடுக்கப்படுகுது. ஆனால், சாவுகளைக் கண்டு ருசித்த; ரசித்த எங்கட சனங்கள் இவையின்ர கட்டுப்பாட்டுக்கை இருக்க மாட்டுதுகள். எப்பிடியும் ஏதோ ஒருவகையால… வழியாலை தடையளை உடைச்சுக்கொண்டு ஆமியிட்டை போகத்தான் செய்யுங்கள்…”

அப்பு கூறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் யதார்த்தம் உறைந்து கிடப்பதை பரமன் உணர்ந்து கொண்டான். எதிரே இளம்பெண்கள் சிவில் உடையில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தோள்களில் துவக்குகள் தொங்கியவண்ணம் இருந்தன. அப்பு மெளனமானார். துவக்குப்பெண்கள் அவர்களைக் கடந்து சிறிதுதூரம் சென்றுவிட்டார்கள். அப்பு அவர்கள் போன திக்கைப் பார்த்துவிட்டுக் கூறுகிறார்.

”இண்டைக்கு உங்காலை எந்தவீட்டிலை இழவு நடக்கப்போகுதோ தெரியாது…”

”மெய்யணை அப்பு… சாகப்போறவை ஆரெண்டு தெரியுமே… ?”’ பரமன் அப்புவைப் பார்த்துக் கேட்கிறான்.

”ஆரோ தமிழிச்சி பெத்த புள்ளையள்தானடா தம்பி…”  அப்புவுக்கு குரல் பிசிறுகிறது… அவர் அந்த சாவொறுப்பை விரும்பவில்லை. அவர் மெளனமானார். அவருக்கு கடந்துபோன காலங்களில் நடந்து

முடிந்த சில நிகழ்வுகள் மனக்குழிக்குள் வந்து இறங்குகின்றன.

சிங்கள இராணுவத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள்… தகவல் வழங்கியவர்கள்… ஆதரவளித் தவர்கள்… என்ற குற்றச்சாட்டுகளுக்குள் பலர் தள்ளப்பட்டார்கள். அவர்கள் ‘துரோகி’களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். அந்தத் துரோகிகளில் சிலர், பின்பு மின்கம்பங்களில் சவமாகத் தொங்கினார்கள். இதை அப்போதைய மக்களும் வரவேற்றார்கள். அது அவர்களுக்கு விருப்பமாகவும் வேண்டுதலாகவும் இருந்தது. ‘ மின்கம்பத்தண்டனைக் கலாசாரம்’ ஒரு தொடர்கதையானது.

இதைவிட, இயக்கங்களுக்குள் நிலவிய சாவொறுப்பு வழங்கும் போட்டி மனப்பான்மை காரணமாக சில அப்பாவி மக்களும் துரோகிகளானார்கள். இதன் ஒருகட்டமாக நெல்லியடி – பருத்தித்துறை வீதியில் மஹாத்மா திரையரங்குக்கு முன்பாக வுள்ள முன்பாகவுள்ள மின்கம்பம் ஒன்றில், ஒரு சலவைத்தொழிலாளி சுடப்பட்டு, துரோகி(?)யாக தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட காட்சி… அப்புவின் நினைவுக்கு வந்து போனது.

”என்னப்பு யோசனை… ?” அப்புவோடு கூடவந்த இளைஞன் கேட்டான்.

“ம்… ஒண்டுமில்லையடா பொடியள். ஏதோ பழைய நினைவுகள்…?”

தூரத்தில் எங்கேயோ இரண்டு நாய்கள் அபசகுன தொனியில் ஊளையிட ஆரம்பித்தன. அந்த ஊளை யொலிகளோடு, ஒலிபெருக்கியூடாகவும் இன்னொரு குரல் ஒலிக்கத் தொடங்கியது.

”அன்பார்ந்த தமிழீழ மக்களே ! எமது போராட்டத் துக்கு விரோதமாகவும் எதிரிப்படைகளிடம் எம்மக்கள் செல்வதற்கு வழிகாட்டிகளாகவும் செயற்பட்ட எம் இனத்தின் துரோகிகள் மூவருக்கு இன்றைய தினத்தில் தனித்தனியே மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞன்மடம் ஆகிய மூன்று இடங்களில் வைத்து சாவொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. எனவே… ”

ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனம் கப்பல்றோட்டால் கடற்கரைவரை சென்று, மீண்டும் அதேவழியாக மாத்தளன் சந்தியை நோக்கி நகருகிறது. கப்பல் றோட்டின் அருகே குடியிருந்தவர்கள் தங்கள் கொட்டில்களை விட்டு, வெளியே வந்தார்கள். விடுப்புப் பார்க்கத் தலைப்பட்டார்கள். சின்னஞ்சிறுசுகள் அடுத்து நிகழப்போகும் விபரீதத்தை அறியாதவர்களாக தமது பெற்றோருடன் ஒட்டியபடி பிக்கப்வாகனத்தை நோக்கினார்கள்.

ஒலிபெருக்கி உரைத்த வார்த்தைகளைக் கேட்டதும், மக்களில் ஒருபகுதியினர் முகம் சுழித்தனர். வேறு சிலர் அச்சப்பட்டனர்; பரிதாபப்பட்டனர். இன்னொருவகையினர் அந்தச் சாவொறுப்பை தம்மனதுக்குள் வரவேற்றனர்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது… பரமனும் அப்புவும் அந்த இளைஞனும் அதேயிடத்திலேயே இருந்தார்கள். சூரியன் வான உச்சிக்கு வந்து நின்றான். வாகைமர நிழல் இப்போது மரத்தைச் சுற்றி வட்டவடிவமாக விரிந்திருந்து.

எவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்பு தோளில் கிடந்த துவாயை உதறி மணலில் விரித்து விட்டு, மரத்தின் அருகேயிருந்த பாறைக்கல்லின் மேல் தலையைச் சரித்துப்படுத்துக் கொண்டார். அப்புவோடு வந்த இளைஞன் எழுந்து தனது தரப்பாள் கொட்டிலை நோக்கிச் சென்றான். பரமன் தனித்திருந்தான்.  இன்னும் சொற்ப நேரத்தில் சாகப்போற அந்த மூவரையும் குறித்து அவனது சிந்தனை குழம்பிக் கொண்டிருந்தது.

வாழ்வதற்கு எந்த ஆதாரமுமற்ற நிலையில், அதற்கான மாற்றுவழி தேடிப்புறப்படுபவர்களையும்

அதற்கான வழிகாட்டல்களையும் தடுப்பது எந்த வகையில் நியாயமாகும்? நிலையான இருப்புக் கேற்ற வலுவான பொருளாதாரம் எதுவுமற்ற ஒரு சூனியப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழ்வது எங்கனம்… என்று சிந்திப்பது தவறா? அப்படிச் சிந்திப்பவர்கள் இனத்தின் துரோகிகளா?

பரமனால் மேற்கொண்டு சிந்திக்க முடிய வில்லை. ”அழிவுக்கு முன்னானது அகந்தை (நீதிமொழிகள் – 16 : 18)” என்ற பைபிள் வசனம் ஏனோ அப்போது அவன் நினைவுக்கு வந்து போனது.

மாத்தளன் – கப்பல் றோட்டில் மீண்டும்… பிக்கப் வாகனத்திலிருந்து ஒலிபெருக்கிச்சத்தம் கேட்கிறது. வாகைமரத்தின் கீழ் படுத்திருந்த அப்பு வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தார்.

”அன்பார்ந்த தமிழீழ மக்களே ! இதோ… எம் இனத்தின் துரோகிகளான  இம்மூவருக்கும் இப்பொழுது சாவொறுப்பு வழங்கப்படும்நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞன்மடம் ஆகிய இடங்களில் வைத்து சாவொறுப்பு வழங்கப்படும்…”

பிக்கப்வாகனம் கடற்கரையை நோக்கிச் செல்கிறது. பாடையில் பிணப்பெட்டியை ஏற்றும் நேரம், உறவுக்காரப்பெண்கள் மாரடித்து, ஒப்பாரிபாடி வழியனுப்பி வைப்பதுபோன்று, அந்தப்பிக்கப்வாகனத்தின் பின்னால் குஞ்சு குருமன், கிழடு கட்டையென எல்லாம் ஒன்று திரண்டு சென்று கொண்டிருந்தன. பரமனுக்கு அந்த நிகழ்வைப் பார்க்க அருவருப்பாக இருந்தது.

”எட தம்பி மோனை…  வாவன்ரா ஒருக்கா என்ன நடக்குதெண்டு பாத்திட்டு வருவம்… ”

பரமன் எதுவும் கூறவில்லை. அப்புவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

”நான் உதுகளைப் பாக்கிற ஆள் இல்லை. ஆனால், வெடிவாங்கிச் சாகப்போறவன் ஆரெண்டதைப் பாக்க வேணும். நீ வாறதெண்டால் வா… நான் போறன்…’‘ அப்பு கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.  பரமன் மேற்கொண்டு எதுவும் கூற வில்லை. அவனும் அப்புவுக்குப் பின்னால் நடக்கத் தொடங்கினான்.

கப்பல்றோட்டுக் கடற்கரையில் வட்டவடிவத்தில் மக்கள் கூடியிருந்தார்கள். நடுவே பிக்கப்வாகனம். அதன் பின்புறத்தில் இரண்டு இளைஞர்கள், ஒரு நடுத்தர வயதானவர்… கண்கள் கறுப்புத்துணியால் கட்டப்பட்டு, கைகள் கயிற்றினால் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள்.

இடுப்பில் ‘பிஸ்டல்’ கொழுவியிருந்த ஒருவன், அந்த மூவர்மீதான குற்ற அறிக்கையை ஒலிபெருக் கியூடாக அறிவித்தான். அதன்பின், பிக்கப்பில் இருந்த ஒருவர் நிலத்தில் இறக்கப்பட்டார். மக்கள் நடுவினில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். பிஸ்டல்காரன் தன் பிஸ்டலை வெளியே எடுத்தான்.

மக்கள் பலரது முகங்களிலும் பீதி உணர்வு வெளிப் பட்டது. சிலருக்குக் கறுத்து இறுகிக் காணப்பட்டது. இன்னும் சில விநாடிகளில் உயிரொன்று அதன் உடலில் இருந்து வெளியேறும் அவலத்தைக் காண விரும்பாத ஆதவனும் அச்சப்பட்டிருக்க வேண்டும். கருமுகில் ஒன்றினுள் தன்னை மறைத்து… முகிலோடு நகர்ந்து கொண்டிருந்தான்.

டுமீல்…

காற்றோடு கலந்து… கரைகிறது ஒரு வெடிச்சத் தம்! உயிர் சுமந்த அந்த உடல் இப்போது வெறும் கூடாக மண்ணில் சரிகிறது. தலையில் செப்புச் சன்னம் துளைத்த துவாரமூடாக பெருகுகிறது குருதி. குருகுமணல் சிவப்பாகிறது. வேடிக்கை பார்க்க வந்த சின்னஞ்சிறுசுகளின் முகங்களில் திகில் அப்பிய உணர்வு.

உயிரற்ற உடலருகில் வந்த ஒருவன், அந்த உடலின் முகத்தில் கட்டியிருந்த கறுப்புத்துணியை நீக்கிவிட்டு, பிக்கப்பில் ஏறிக்கொள்கிறான். பிக்கப் ஏனைய இருவரையும் சுமந்து கொண்டு அம்பலவன் பொக்கணை நோக்கி விரைகிறது. துரோகியாய் வீழ்ந்தவனின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் சிலர் அவனது உடலம் அருகே செல்கிறார்கள்.

சுடலையில் சவத்திற்கு கொள்ளி வைத்துவிட்டு, கொள்ளிக்காரனுக்குப் பின்னால் திரும்பும் கூட்டத்தைப்போன்று, கடற்கரையில் நின்ற மக்களும் பிக்கப் வாகனம் சென்றபிற்பாடு, அவரவர் தங்கள் தரப்பாள் கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்புவும் பரமனும் வாகை மரத்தடிக்கு வந்து விட்டனர். இருந்தாற்போல், அப்பு பரமனைப் பார்த்து  ஒரு கேள்வி கேட்டார்.

”ஏன்ரா பொடியா…பிக்கப்பாலை இறக்கின வனுக்கு தலையில வெடி வைச்சதும், பிக்கப்பிலை இருந்த ஏனைய ரண்டு பேற்ர மனநிலையும் அப்ப எப்படியிருந்திருக்கும்…”

அப்புவின் கேள்விக்கு பரமனால் பதில் கூற முடிய வில்லை. ஆனால், அவனது கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்தன கண்ணீர்த்துளிகள் பதில்களாக…

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
அலெக்ஸ் பரந்தாமன்
(Visited 200 times, 1 visits today)