‘இரத்தத்தின் கதை’-கதை 07 –’வீரமிகுநாடு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்

அதிகாலையில் இருந்தே இராணுவத்தினர் ஷெல்களை ஏவத்தொடங்கிவிட்டார்கள். இந்த ஏவல் வேலை விடிகாலைவரையும் தொடர்ந்தது. கடற்கரையின் எதிர்ப்புறத்திசையின் அடர்வனத்துள், சமரானது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரு தரப்பினரின் துவக்குகளில் இருந்து வெளிக்கிளம்பும்          வெடியொலிகள், அந்த விடிகாலை வேளையின் ரம்மியத்தையும் அமைதியையும் சிதைப்பதாகவே  இருந்தது.

மனிதவாழ்வியலின் அன்றாட இயக்கம் ஸ்தம்பித்த நிலையில், அச்சம்  மிகுதியாகி மனங்களுள் துயர்மிகுவலிகள் நிறைந்துபோய் கிடந்தன. நாள்களோ விடியலற்ற திசைகளாக… செல்லும்வழி சீரற்றனவாக…  இருள் சூழ்ந்த பொழுதுகளாகவே தினமும் நகர்ந்து கொண்டிருந்தன.

அதிகார வன்முறைகள் எங்கும் விஸ்வரூபமாய் நிமிர்ந்து நின்றன. மெளனமொழிகளே விழிகளால்பேசப்பட்டன. ‘வீரமிகுநாடு’ எனும் வாய்பாடு வங்குரோத்தாகிப்போனது. வில்லங்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைவிட்டுக்கொண்டிருந்தன. ” நம்பினார் கெடுவதில்லை…”  எனும்  முதுமொழியின் மேல் அவவிசுவாசம் பற்றிக் கொண்டிருக்க உதய திசையிலிருந்து மெல்லெனப் பரவத்தொடங் கியது செங்கதிரோனின் பொற்சுடர்கள்.

அடர்வனத்தின் நடுவே மிக உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது சமர். அங்கு ஒரு பகுதிக்கு இழப்புகள் அதிகமாகிக்கொண்டிருந்தன. இடம் பெயர்ந்து கடற்கரைப்பக்கம் குடியேறிய மக்களின் தற்காலிக          இருப்பிடங்களுக்குமேல், ஐஞ்சிஞ்சி, பத்திஞ்சி ஆட்டிலறிக் குண்டுகள் எனப் பலதும் வந்து விழுந்து         வெடித்துக்கொண்டிருந்தன. பல தரப்பாள்கொட்டில்கள் சின்னாபின்னமாகின. வேறு சில தீப்பிடித்து எரிய ஆம்பித்தன.

தரப்பாள் கொட்டிலிலிருந்து எரியும் தீ, அருகில் காவோலைகளால் சூழப்பட்ட வடலிப்பனைமரம் ஒன்றில் பற்றிக் கொள்கிறது. வடலி சுவாலைவிட்டு எரியத்தொடங்குகிறது. அதனருகில் தரப்பாள் கொட்டில்கள்.       கொட்டிலுக்குரியவர்கள் தங்களது கொட்டில்களும் எரிந்து விடக்கூடுமென எழுப்பும் அபய அபாயக்குரல்கள் காற்றோடு காற்றாகக்  கரைந்து விடுகின்றன. அந்த நிலையிலும் சில இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.   இரண்டு கைகளாலும் காலடிக் குருகுமணலை அள்ளி, வடலிமீது எறிகிறார்கள். காற்றுவேறு பலமாக வீசிக்கொண்டிருந்ததில், வடலிப் பெருநெருப்பு பக்கத்து வடலியிலும் பற்றிக்கொள்கிறது.

ஒருபக்கம் ஷெல்வீச்சு, மறுபக்கம் பெருநெருப்பு, இரண்டுக்கும் நடுவில் ஏதிலிக்கூட்டங்கள். இளைஞர்கள் தொடர்ந்தும் மண்ணை அள்ளி எறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களோடு சில பெண்களு ம் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்களது வாய் எதையோ முணுமுணுத்தபடி  இரண்டு கைகளாலும் மணலை  அள்ளி எறிந்து கொண்டிருந்தார்கள். நிச்சயமாக  அந்தப் பெண்களின் முணுமணுப்பு நல்ல வார்த்தைகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மனவேக்காளத்தின் எதிர்வினையாகவும் அவை இருந்திருக்கலாம்.

வடலியில் எரிந்து கொண்டிருந்த காவோலைகள் இரண்டு, காற்றின் இசைவிற்கு ஆட்டம்  காட்டிவிட்டுமரத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கின்றன. ஷெல்வெடிப்பினால் எரியும் கொட் டில்களோடு,       இப்போது மேலதிகமாக இரண்டு கொட்டில்களும் சேர்ந்து  எரியத்தொடங்குகின்றன.

எங்கும் அவலக்குரல் சூழ்ந்திருந்த அப்பகுதிக்கு அருகே ஒரு தரப்பாள் கொட்டில். அதனுள் ஒருபக்கமாக மரவாங்கொன்றின்மேல் படுத்திருந்தார் எண்பது வயது மதிக்கத்தக்க ஓர் அப்பு. அந்த மரவாங்கின் கீழே     பரந்திருந்த குருகுமணல்மீது இறப்பர்பாயை விரித்துவிட்டு, முகம்குப்புறக் கிடந்தான் அப்புவின் மகன். அவர்களது தறப்பாள் கொட்டிலோடு, மிக நெருக்கமாக தென்னைமரக் குற்றிகளாலான ஒரு காப்பரண்  வடிவத்திலமைந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் அப்புவின் மருமகளும்  பேரப்பிள்ளைகள் மூவரும் பாதுகாப்புக் கருதி இருந்தார்கள்.

அப்பு ஒரு பாரிசவாத நோயாளி. அவரைப் பதுங்கு குழிக்குள் வைத்துப் பராமரிக்க முடியாது. அதற்குள் போதியளவு இடமோ, வெளிச்சமோ, காற்றோட்டமோ இல்லை. அப்பு மறுத்து விட்டார். மகனுக்கு மிகுந்த          கவலையாக இருந்தது. அப்புவைத் தனியாக விட்டுவிட்டு, அவன் பதுங்கு குழிக்குள் செல்ல விரும்பவில்லை. ஷெல்கள் ஆங்காங்கே விழுந்து வெடிக்கும்போதெல்லாம், அதன் ஒலி கேட்டு அவனைத்தவிர, அவனது         மனைவியும் பிள்ளைகளும் பதுங்கு குழிக்குள் சென்றுவிடுவார்கள்.

அன்றும் அப்படித்தான். மகன் அப்புவைவிட்டு நகரவில்லை. அவரது மரவாங்கின் கீழ் குப்புறப்படுத்திருந்தான். அப்புவால் அப்படிப் படுக்கமுடியவில்லை. அவருக்கு முதுகுத்தண்டில் வருத்தம் வேறு இருந்தது. அவரால் நிமிர்ந்து படுக்க இயலாத நிலை. ஒருக்களித்துப் படுத்திருந்தார்.

“அப்பு…”  வாங்கின்கீழ் படுத்திருந்த அவரது மகன் அழைத் தான்.

“ம்…”

“பயப்படாதையணை. அவங்கள் ஆமிக்காரர் உப்பிடித்தான் கொஞ்ச நேரத்துக்கு அடிப்பாங்கள். பிறகு நிற்பாட்டிப் போடுவாங்கள்”.

” ம்…” அப்புவிடமிருந்து மீண்டும் அதேபதில்.

மகனுக்குத் தனது தந்தையைப் பார்க்க  கவலையாக இருந்தது. அருகில் ஒரு ஷெல் விழுந்து வெடிக்குமாயின், அதன் அதிர்வு அவருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என அவன் அஞ்சினான். தரையில்   படுத்திருப்பதும் முழுமையான பாதுகாப்பும் அல்ல. இருப்பினும், ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளமுடியும். தரையைவிட்டு மேலெழுந்து நிற்கும்போது, வெடிக்கும் ஷெல்லிலிருந்து சிதறும் ஈயக்குண்டுகள், நெருப்புத்தூண்டங்களாக மாறும். அவை மனித உடல்களைத் துளைக்கும்போது அங்கவீனம், உயிர்ச்சேதம் என்பன உண்டாகும். இதை அப்புவின் மகன் நேரிடையே பார்த்துமிருந்தான். இதனால் அப்புவைக்  குறித்து கவலைப்படவும் பயப்படவும் செய்தான்.

“பொடியா…” இப்போது அப்புவிடமிருந்து எழுகிறது குரல்.

“என்னணை அப்பு…? மகன் கேட்கிறான்.

“நீ கவனமா இரு மோனை…”

“ஓமணை…” மகனுக்குக் கண்கள் கலங்கி விடுகின்றன.

யாழ். குடாநாட்டில் மாதகல் கிராமத்தில் அப்பு பெயரறிந்த ஒரு கடற்தொழிலாளி. பத்துப்பிள்ளைகளின் தந்தை. அதில் கடைசி  இருவர் மாவீரர்கள். ஒருவன் வேவுப்புலி. இன்னொருமகள் கடற்கரும்புலி. வித்துடல் அற்று ஒளிப்படங்களாக வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள். இருமாவீரர்களின் தந்தையென சமூகம் கூறிக்கொண்டாலும், பிள்ளைகளின் சாவு அவரைப் பெரிதும் உளத்தாக்கத்துக்கு உட்படுத்தவே செய்தது.     ஆரம்பத்தில் அப்பு வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மனதுக்குள் குமைந்த துயரத்தை வெளியே கொட்டாமல்,                அப்படியே தனக்குள் அமுக்க அமுக்க அதுவே அவருக்கு நோயாகிக்கொண்டது. பின்பு பாரிசவாதமாகிப்    படுக்கையில் விழுத்தி விட்டது.

அப்புவின் மற்றைய பிள்ளைகள் குடும்பமாகி, அவரை விட்டு வேறு வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். அப்பு தனக்குக் கொள்ளிபோட மகன் கூடவே இருக்க விரும்பினார். அதனால் மூத்த  மகனோடு இருந்து விட்டார். வெகுநேரமாக அப்பு ஒருபக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்ததில், முதுகினில் வலி    ஏற்பட்டிருந்தது. மெதுவாக உடலை அசைத்து, மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டார். சற்று செவிப்புலனற்ற நிலையிலும், தூரத்தில் பெண்ணொருத்தி ஒப்பாரி வைத்து அழுவது அவருக்கு மெதுவாகக் கேட்கிறது.

“பொடியா…”  அப்பு மகனை அழைத்தார்.

“என்னப்பு…?”

“………………….”

அப்புவிடமிருந்து  எதுவித பதிலும் எழவில்லை. மகன் மெதுவாக வாங்கின் அடிப்பரப்பைவிட்டு நகர்ந்து, தலையை மேலாகத் தூக்கிப் பார்க்கிறான். அவனுக்கு அப்புவின் முதுகுப்பக்கம் தெரிகிறது. அவன்               திரும்பவும் இறப்பர் பாயில் படுத்துக் கொண்டான்.

கொட்டிலுக்கு வெளியே அழுகையும் அவலக்குரல் களும் கலந்த ஆரவாரம் கேட்கிறது. காயப்பட்ட ஒருத்தரை         அவசரமாக உறவினர்கள் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்வதை மகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆபத்துமிகுந்த நேரத்திலும், ஓர் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற  துடிப்புணர்வில் அவர்கள்         சென்று கொண்டிருந்தார்கள். அப்படிச் சென்றுகொண்டிருக்கும் அக்கணத்திலும், அருகே ஒரு ஷெல் வந்து விழுந்து வெடிப்பின் பல உயிர்கள் பலி கொள்ளப்படும் என்பதை அறிந்தும் அவர்கள் அவல ஓலங்களை  எழுப்பியபடி சென்று கொண்டிருந்தார்கள். பரவலாக விழுந்து வெடித்த ஷெல்கள், இப்போது ஒன்று இரண்டாக சிறுநிமிட நேர இடைவெளிவிட்டு வெடித்துக் கொண்டிருந்தன.

அப்பு படுக்கையில் இருந்து மெலிதாக அனுங்குவதை மகன் உணர்ந்தான். அவன் படுக்கையை விட்டெழுந்து மெதுவாக வாங்கில் அமர்ந்து கொண்டான். அப்பு சற்று உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. சிறுநீர் வெளியேறி சாரம் நனைந்திருந்ததை அவதானித்தான். ‘ சாரத்தை மாற்றுவம்…’ என நினைத்து, எழுந்தவனை ஷெல் ஒலியொன்று தடுத்து நிறுத்தியது.

எங்கும் ஒரே பதற்றமும் பதகளிப்பும் கண்ணீர் உகுத்தலுமாகவே இருந்தன. இடம்பெயர்ந்து வந்தவர்களின் வளர்ப்பு நாய்கள் சில ஊளையிட்டபடி இருந்தன. கிழக்கே பெருங்கடலில் இருந்து அலைகள் ஆர்ப்பரித்து        எழுந்து அடங்கும் ஓசை சற்று பலமாகவே இருந்தது. ஏதோ ஒரு பாரிய அழிவுக்கான முன்னறிவிப்புப்போல் இயற்கையின் இயல்புநிலை அக்கணத்தில் மாற்றம் பெறத்தொடங்கியது.

“அப்பா…”

அருகே பதுங்கு குழிக்குள் இருந்து அப்புவின் பேத்தி குரல் ஒலிக்கிறது.

மரவாங்கின் கீழ் படுத்திருந்த மகன், ‘என்ன…?’ என எதிர்க்குரல் கொடுத்தான்.

“பங்கருக்குள்ள கனநேரமா இருக்கேலாதாம். புழுங்கி அவியுது. நான் வெளியால வரப்போறன்”.

“கொஞ்சம் பொறம்மா… நிலமை சீரானதும் வெளியிலை வரலாம்…”

பதிலுக்கு அவன் கூறிமுடித்ததும், மிக அருகில் மிக மிக அருகில் ஆட்டிலறி  ஷெல்லொன்று விழுந்து வெடித்துச்          சிதறுகிறது. அதனைத் தொடர்ந்து அந்தச் சுற்றுவட்டாரமெங்கும் பரவலாக விழத்தொடங்கின ஷெல்கள்.              இடையிடையே ஐஞ்சிஞ்சி,பத்திஞ்சிச்ஷெல்கள். அதிலொன்று அப்பு இருந்த தரப்பாள் கொட்டிலுக்குச் சமீபமாக விழுந்து வெடித்தபோது, அதன் சிறு துண்டொன்று அப்புவின் தரப்பாள் கொட்டில் கூரைச்சீலையைக்    கிழித்துக் கொண்டு சென்றது. அப்பு பயந்துபோய் விட்டார்.

“எட பொடியா…?”  மகனைக் கூப்பிட்டார் அப்பு.

பாயில் முகம் குப்புறக் கிடந்த மகன், தலையைத் திருப்பி நிமிர்ந்து பார்தான். அவனுக்கு ஷெல்துண்டு கிழித்ததரப்பாள் கூரையினூடாக நீலவானமும் அதனிடையே  உள்ள வெண்முகிற்கூட்டமும் தெரிந்தது . அவன் அதிர்ச்சிக்குள்ளானான். திடீரெ னப் படுக்கையை விட்டெழுந்தான். அப்புவை தன் இரண்டு கரங்களாலும்               தூக்கி, வாங்கின் கீழ் தன்னோடு படுக்கவைத்துக் கொண்டான். அப்புவின் உடல் தொடர்ந்தும் நடுங்கிக் கொண்டிருந்தது. பயத்தில் சிறுநீரோடு மலமும் வெளியேறியிருந்தது

” ஐயோ… ஆமி வாறானாம்…”

வெளியே ஒருபெண் அலறிக் கொண்டு ஓடுவது மகனுக்குக் கேட்கிறது. ஷெல் வீச்சுகளும் மேலும் அதிகரிக்கத்                  தொடங்கின. அப்பு அனுங்கத் தொடங்கினார். பதுங்கு குழிக்குள் இருந்த பேத்தி பலமாக அழத்தொடங்கினாள். மகனுக்கு மனதுள் அச்ச உணர்வு கனதிகொண்டு உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.

திடீரென ஒரு பயங்கர வெடிச்சத்தம்!

அப்புவின் தரப்பாள் கொட்டிலோடு அமைக்கப்பட்டிருந்த ஒருபக்கப்  பதுங்கு குழித்தென்னைமரக்குற்றிகள் தூக்கி வீசப்படுகின்றன. குழிக்குள் இருந்தவர்கள்மீது  ஏனைய தென்னைமரக்குற்றிகள் விழுந்து மணலாலும் மூடப்பட்டு,அரைகுறை உடல்களாக வெளித்தெரிந்தன. எங்கும் ‘என்ர ஐயோ…’ என்ற        அவலக்குரல்களும், ‘எங்களைக் காப்பாத்துங்கோ…’ எனும் உதவிகோரலுமாக அந்தப்பகுதி அவலத்தின்     உச்சியில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது.

அருகில் இருந்த சில இளைஞர்கள் தமது உயிரச்சத்தையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்து, தென்னங்குற்றிகளை அப்புறப்படுத்தினார்கள். மண்ணுள் சிக்கியிருந்த  அப்புவின் மருமகளையும், பேரப்பிள்

ளைகளையும் வெளியே மீட்டெடுத்தார்கள். மருமகள் சற்று  சுயநினைவோடு வலதுகை முறிந்தநிலையில், உயிர்ப்புப் பெற்றாள். அவளுக்குத் தன் கணவனினதும் மாமனினதும் நினைவு மனதில் தட்டியது. ஒரு இளைஞனின் உதவியுடன் கைத்தாங்கலாக சிரமப்பட்டு எழுந்து கொண்டாள். அப்படியே சற்று திரும்பி          அப்பு இருந்த கொட்டிலைப் பார்த்தாள். கொட்டில் சின்னாபின்னமாகிச் சிதைந்து கிடப்பது அவளுக்குத் தெரிந்தது. மீண்டும் சுயநினைவிழந்து கீழேவிழப்போனவளைத்  தாங்கிப் பிடித்திருந்த இளைஞன் மீண்டும் தாங்கிக் கொண்டான்.

சில விநாடிகளின்பின் யாரோ ஒருவர் அவளது முகத்தில் தண்ணீர் அடித்து சுயநிலைக்கு வரச்செய்தார். அவளுக்கு நினைவு மெல்லத் திரும்பத் தொடங்கியது. மங்கலாகத் தெரிந்த காட்சிகள் அனைத்தும் தெளிவடைய ஆரம்பித்தன. கண்களை முற்றாகத் திறந்தவளுக்கு முதலில் முன்பாகத் தென்பட்டது கந்தகப்புகையில் கருகிப்போய் நின்ற ஒரு பூவரசமரமும் அதன் சிறுகிளையொன்றில் தொங்கிக் கொண்டிருத ஒரு பொருளுமாகும்.

அந்தப் பொருள்…

அப்பு தன்முகத்தில் அணிந்திருந்த வட்ட வடிவிலான வெள்ளிப்பிரேம்போட்ட மூக்குக் கண்ணாடியின் பாதிப்பகுதி.

அலெக்ஸ்பரந்தாமன்-இலங்கை 

அலெக்ஸ் பரந்தாமன்
அலெக்ஸ் பரந்தாமன்

 

 

 

(Visited 166 times, 1 visits today)