” அரோகரா “-சிறுகதை-அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்” யாழ்ப்பாணம்… வாங்க…வாங்க… யாப்பனய…. என்ட … என்ட… என்ட…”

கொழும்பு- கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து ஒன்றின் நடத்துனர் இருமொழிகளிலும் மாறிமாறிப் பயணிகளை அழைப்பது ஆரியசிங்கவுக்குத் தெரிந்தது. உடனே அவன் அந்த இடத்தை நோக்கி நடந்தான்.

இரவு ஏழு மணியளவில் குறிப்பிட்டதொகைப்  பயணிகளுடன் பேருந்து யாழ். நோக்கிப் புறப்படு கிறது. இடையில் சில இடங்களில் நிறுத்தப்பட்டு,  மீண்டும் புறப்பட்ட பேருந்து, அதிகாலை நான்கு முப்பது மணியளவில், கொடிகாமத்தை வந்தடை கிறது. ஆரியசிங்க பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினான். அன்று சந்தைநாளாகையால், வியாபாரிகளின் நடமாட்டமும் விற்பனைப்பொருள்களைக் கொண்டுவருவோர் எண்ணிக்கை அதிகமாகவும் சந்தைப் பகுதி காட்சியளித்துக் கொண்டிருந்தது.

ஆரியசிங்க அருகில் உள்ள தேநீர் கடையொன்றினுள் நுழைந்தான். ரீ ஒன்றை வாங்கிக் குடித்தவன், சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியே வந்தான். பருத்தித்துறைக்குச் செல்வதற்கான  மினிபேருந்தொன்று அவனுக்காகக் காத்திருந்ததுபோன்று அங்கு நின்றது.

“மல்லி… பஸ் இப்ப போறதுதானே…” பேருந்து அருகோரம் நின்ற நடத்துனர் பொடியனிடம் வினவுகிறான் ஆரியசிங்க.

“ஓமோம்… ஐஞ்சு நிமிசம் இருக்கு போறதுக்கு…”

“அஞ்சு? ”

“ஓமோம்…”

கிழக்கு வான்மீது இயற்கை தன் மெலிதான வண்ணச்சாயத்தை பூச ஆரம்பித்தது. வானவெளி யெங்கும் சிதறிக்கிடந்த நட்சத்திரப்பூக்கள் ஓரிரண்டு கண்களைச் சிமிட்டியபடி… குறும்புத்தனம் புரிந்து கொண்டிருந்தன. பூக்களின் இந்தக் குறும்புத்தனம் பிடிக்காத நிலையில், வெளவால்கள் பல அங்குமிங்குமாக ஆக்ரோஷமாகப் பறந்தபடியிருந்தன.

ஆரியசிங்க சிகரெட் முழுவதையும் புகைத்துவிட்டு, மினிபேருந்தினுள் ஏறி ஓர் இருக்கையில்  அமர்ந்து கொண்டான். சரியாக நான்கு முப்பதுக்குப் புறப்படுகிறது பேருந்து. ஆரியசிங்கவுக்கு தன்னுடல் சற்று அசதி கொண்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இரவு பேருந்தினுள் ஒலிக்க விடப்பட்ட பாடல்கள் அதிக அதிர்வலையாக இருந்தன. போதாக்குறைக்கு சீற்றுக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் நித்திரை மயக்கத்தில் அவனது தலையோடும் தோள்மூட்டிலும் தனது தலையைப் போட்டடித்தது வேறு எரிச்சலாக இருந்தது.

‘முகாமுக்குச் சென்றதும் நன்றாக உறங்க வேண்டும்…’  என நினைத்தபடி… இறங்க வேண்டிய இடம் வந்ததும், பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டான் ஆரியசிங்க. அவன் இறங்கும்போது இருள் முற்றாக விலகியிருந்தது. மனித வாழ்வியலுக்கான இயக்கம் மெல்ல ஆரம்பிக்கத் தொடங்கியது. பக்கத்தில் சேவல் கூவும் ஒலி கேட்கத்தொடங்கியது. வீதியின் மறுபுறத்தேயுள்ள தோட்ட வெளிகளுக்கப்பாலுள்ள ஒரு கோவிலில் இருந்து கோபுர மணியோசையைக் காற்று சுமந்து கொண்டுவரத் தொடங்கியது.

ஆரியசிங்க தனது முகாமை நெருங்கி விட்டான். வாயிற்காவலனிடம்  தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, முகாமின் நடுப்பகுதிக்குச் சென்றான். வடக்குப்பக்கம் இருக்கும் இரண்டாம்நிலை அதிகாரியின் அலுவலகத்தினுள் சென்று, மீண்டும் முகாமுக்குள் வந்துவிட்டதை அறிவிக்கும் பொருட்டு, அங்கிருந்த வரவுப்பதிவேட்டில் கையொப்பம் வைத்துவிட்டு, தனது விடுதியைநோக்கி நடந்தான்.

நேரம் ஒன்பது மணியாகிக் கொண்டிருந்தது. படைச்சிப்பாய்கள் தங்கும் விடுதிக்குள் திடீரென பரபரப்பு ஏற்படுகிறது. எல்லாச் சிப்பாய்களும் எங்கேயோ புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள சிப்பாய்களில் ஒருவனான தர்மசேன ஆரியசிங்கவின் அறைக்குள் நுழைந்தான். ஆரியசிங்க நல்ல உறக்கத்தில் இருப்பது அவனுக்குத் தெரிந்தது. கட்டிலுக்கு அருகில் சென்றவன், அவனது உறக்கத்தைக் கலைத்து எழுப்பினான். ஆரியசிங்கவுக்கு எரிச்சலாக இருந்தது. விடயம் என்னவெனக் கேட்டான்.

“பெரியையா எல்லோரையும் அவசரமாக அழைக் கிறார்…” மேற்கொண்டு தர்மசேன எதுவும் கூறவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தான்.

துயில்மாறா நிலையில், ஆரியசிங்க கட்டிலை விட்டெழுந்தான். கண்கள் இரண்டும் எரிவெடுத்து… சிவந்த நிலையில் இருந்தன. உடல்நிலை சற்று வேதனையைக் கொடுத்தது. காய்ச்சல் குணமாகவும் இருந்தது. வேண்டாவெறுப்பாகக் கட்டிலைவிட்டு எழுந்தவன், சீருடைகளை அணிந்துகொண்டு முகாமின் பிரதான வாசலுக்கு வந்தான். வாசல் அருகில் ‘ட்ரக்’ வண்டியைச்சுற்றி பல சிப்பாய்கள் நின்றார்கள். வண்டிக்குள்ளும் சிலர் அமர்ந்திருந்தார்கள். இராணுவ உயரதிகாரியொருவர் வந்து ட்ரக்வண்டியின் முன்இருக்கையில் ஏறிஇருந்ததும், சிப்பாய்கள் எல்லோரும் வண்டிக்குள் ஏறினார்கள். வண்டி முகாமிலிருந்து வெளியேறி பிரதானவீதிக்குவந்து, ஓடத்தொடங்கியது வேகமாக.

கிராமத்தின் எல்லையோடு அமைந்திருந்தது சித்திவிநாயகர் ஆலயம். இன்று தேர்த்திருவிழா! கோவிலில் அதிகளவுமக்கள் கூடியிருந்தார்கள். பலரது முகங்கள் இறுகியநிலையில் காணப்பட்டன. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து, திருவிழா தடைப்பட்டுவிடுமோ…? என்ற அச்சத்தில் இருந்தவர்களுக்கு, சிப்பாய்கள் வண்டியில் வந்து இறங்கி நிற்பது, மேலும் பயப்பீதியைக் கொடுத்தது.

இராணுவ உயரதிகாரியின் கட்டளைப்படி கோவிலின் தர்மகர்த்தா சபைத்தலைவர் வண்டிக்கருகில் வரவழைக்கப்பட்டார். அவருடன் உயரதிகாரி சிலநிமிடங்கள்வரை பேசிவிட்டு, அவரை அனுப்பி வைத்தார். சபைத்தலைவர் திரும்பிச் செல்லும்போது, அவரது முகம் கடுப்பேறிக் கிடந்ததை அவதானித்தான் ஆரியசிங்க.

விநாயகப்பெருமான் கோவிலின் உட்பிரகாரத்தைச் சுற்றி வலம்வந்தபின், இப்போது வெளிமண்டப வாசலுக்கு முன்னால் வந்து நின்றார். சிப்பாய்கள் அனைவரும் உடலிலிருந்த மேல்சீருடைகளைக் கழற்றிவிட்டு, நீளக்காற்சட்டையுடன் தேரடியை நெருங்கினார்கள். தேரை இழுப்பதற்காக அங்கு காத்துநின்றவர்கள் அவர்களைக் கண்டதும் விலகிக் கொண்டார்கள். தேரை இழுப்பதற்காக போடப்பட்டிருந்த கயிற்றின் நீளத்திற்கு சிப்பாய்கள் போய் வரிசையாக நின்றார்கள். எவரும் எதுவும் கதைக்கவில்லை. கதைப்பதற்கு துணிவும் எழவில்லை. கும்பிடவந்தவர்களில் சிலரது முகத்தில் மெலிதான பெருமிதமான புன்முறுவல்.

விநாயகரைத் தேரில் ஏற்றி வைத்தாயிற்று. சிப்பாய்கள் கயிற்றைத் தூக்கிக் கொண்டார்கள். மறுபக்கக் கயிற்றை ஊர்இளைஞர்கள் கைகளில் பிடித்தவண்ணமிருந்தனர். சிலநிமிட நேரத்துக்குப் பின் தேர் நகர ஆரம்பித்தது. எல்லோர் வாயிலிருந்தும் ” அரோகரா…” கோஷம் வெளிக்கியம்பியது. சிப்பாய்கள் சிலரும் அதேபோல் கூறினார்கள். வேறுசிலருக்கு அந்த வார்த்தை சரியான உச்சரிப்போடு வாயில்வர மறுத்தது.

வானவெளியில் வெண்மேகப்பொதிகள் எதுவும் இல்லாததால், சூரியனின் கனலாதிக்கம் நேரம் நகரநகர அதிகரித்துக்கொண்டே சென்றது. வெயிலின் கனதி… ஆரியசிங்கவின் கண்களை மேலும் எரிவூட்டிக் கொண்டிருந்தது. பக்கத்தில் நிற்கும் சகசிப்பாயான தர்மசேன, இவனது நிலைமையைப் புரிந்து கொண்டவனாய் வினாவுகிறான்.

“என்ன இயலாமல் இருக்கா..?”

“இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத வேலை.” ஆரியசிங்கவின் பதிலில், வெறுப்பும் வெஞ்சினமும் வெளிப்படுகின்றன.

“காரணமில்லாமல் நம்மட பெரியய்யா எங்களை இங்கு கூட்டிவரமாட்டார்…” என்று கூறிய தர்மசேன ஆரியசிங்கவைப் பார்த்து முறுவலித்தான்.

“இந்தக்கோயில் ஆக்கள் உயர்சாதி ஆக்களாம். இண்டைக்குச் சாதி குறைச்ச ஆக்களும் தேர் இழுக்கப்போகினமாம். அதனால், குழப்பங்கள் ஏதும் ஏற்படலாமென்று  யாரோ ஒருத்தன் பெரியய்யாவுக்குத் தகவல் குடுத்திருக்கினம். அதுதான் அவர் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

தர்மசேனவின் பதில்… ஆரியசிங்கவுக்கு வெயில் வெக்கையோடு, மிகுந்த மனக் கொதிப்பையும் ஏற்படுத்தி விட்டது.

“இன்னுமா இவர்கள் திருந்தவில்லை…?”

ஆரியசிங்க கூறியதைக்கேட்டு, தர்மசேன சிரித்தான்.

“இவர்கள் என்றைக்குமே திருந்தப்போவதில்லை. ஏனென்றால், இவர்களை வழிநடத்துற அரசியல்வாதிகள் சாதி, சமயம், பணம், படிப்பு என்பதில் மிகவும் தடிப்பானவர்கள் மட்மல்ல ஆசாரம்மிக்கவர்கள்…”

ஆரியசிங்கவின் முகத்தில் இகழ்ச்சியானதொரு உணர்வு வெளிப்படுகிறது. தர்மசேன கூறிய “ஆசாரம்…” எனும் சொல், அவனுக்குள் சிரிப்பை வரவழைத்தது.

ஆசாரம்????

ஆரியசிங்க… காலையில் பயணத்தால் வந்துபடுத்தவன் இன்னமும் பல்துலக்கவில்லை… முகம் கழுவவில்லை… மலசலம் கழிக்கவில்லை…குளிக்கவில்லை… வேட்டி அணியவில்லை… இதைவிட,  முதல்நாள் மாலைநேரம் பயணத்துக்குப் புறப்படுப்போது சோற்றுடன் கலந்து சாப்பிட்ட மாட்டிறைச்சி மற்றும் நண்டுக்கறி யாவும் இப்போதுவரை செரிமாணம் அடையாமல் வயிற்றுக்குள் கிடந்து ‘குழப்படி’ செய்தவண்ணமிருந்தன.

ஆரியசிங்க வாய்விட்டுச் சிரித்தான். தர்மசேன அவனை வியப்புடன் பார்த்தான்.

“ஒன்றுமில்லை! இந்தக் கோயில்காரர் கடைப்பிடிக் கிற ஆசாரத்தை நினைச்சன்.  சிரிப்பு வந்திட்டுது. சிரிச்சன்…” என்று கூறியவன் –

“தர்ம… செய்யிற தொழிலால் சாதி குறைந்தவர்கள்… அவர்கள்   தேர் இழுக்கக் கூடாதென்றால்,

நான் யாரென உந்தச் சாதித்தடிப்புக்காரருக்குத் தெரியுமா? ”

தர்மசேன அவன் கூறுவதை  அமைதியாகக் கேட்டபடி நின்றான்.

“நானொரு கரையான்! என்ர தகப்பன் ஆற்றில மீன் பிடிக்கிறவர்”.

ஆரியசிங்க கூறுவதைக்கேட்ட தர்மசேன, பதிலுக்குத் தானும் தன்பங்கைக் கூறினான்.

“எனது தந்தை ஒரு ‘ பாபர்’. முடி வெட்டுறவர்…”

“ஓ…! அப்ப இண்றைக்கு சாதி குறைஞ்ச ஆக்கள் தான் தேரிழுக்கினம்…”   சிரித்துக் கொள்கிறார்கள் சிப்பாய்கள் இருவரும்.

தேர் இப்போது தெற்குவீதிக்கு வந்து விட்டது!

ஆரியசிங்க அந்த மனிதரைக் உற்றுக் கவனித்தான். தேர், அதன் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டநேரம் தொடக்கம், அவர் தங்களுக்குப் பக்கத்திலேயே வந்தபடி… அவரது முகத்தில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்தபடி… கன்னங்கரிய நிறம். திடமான முறுக்கேறிய உடல்வாகு. சாதாரண வேட்டி, சால்வையை அணிந்திருந்தார். நெற்றியில் விபூதி உத்தூளனமாகக் காணப் பட்டது. அதன் நடுவில் சந்தனப்பொட்டு. அதன்மேல் சிறியதொரு  குங்குமப்பொட்டு. வலதுகாதின் மேற்புறத்தில், செவ்வரத்தம் பூவின் இதழொன்று செருகப்பட்டிருந்தது.

ஆரியசிங்கவுக்கு ஏதோ ஓர் உணர்வு… ஒரு புரிதலை ஏற்படுத்தி விடுகிறது. அவன் அந்த மனிதரைத் தன்னருகில் வரும்படி அழைத்தான். அவர் சற்று தயங்கினார். பின்பு அவனருகில் சென்றார்.

“ஐயா… கயிறு பிடிக்கிறதுதானே…”  என்று கூறியவன், தனக்கும் தர்மசேனவுக்கும் இடையில் அந்த மனிதரையும் சேர்த்து, தேர்க்கயிறைப் பிடிக்க இடமளித்தான்.

தேர் வடக்குவீதியில் நகர்ந்து… தனது இருப்பி டத்தை நெருங்குகிறது. தர்மகர்த்தா சபைத்தலைவர் சபை அறையைவிட்டு வெளிமண்டபத்துக்கு வருகிறார். வந்தவருக்குக்கு முதலில் தென்படுகிறது அந்தக்காட்சி!

மறுவிநாடி -தீயை  மிதித்தவர்போல் பதறியடித்தபடி… திரும்பவும் சபைஅறைக்குள் ஓடுகிறார். அவரது அவசரத்தைக் கண்டு, அறைக்கு முன்னால் இருந்தவர்கள் மிகவும் பதற்றத்திள்குள்ளானார்கள்.

“என்ன அநியாயமடா இது… அவன் அந்த எளிய நாய்ப்பயல் கள்ளு இறக்கிற சீவல்கார மாரிமுத்தன், ரண்டு ஆமிக்காரருக்கிடையில நிண்டு தேரிழுக்கிறான்.”

தேர் இருப்பிடத்துக்குள் வந்துவிட்டது.

எல்லோர் வாயிலிருந்தும் ஒலிக்கிறது  “”அரோகரா…” ஒலி.

“அரோகரா… அரோகரா… அரோகரா…”

அலெக்ஸ்பரந்தாமன்இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
அலெக்ஸ் பரந்தாமன்
(Visited 247 times, 1 visits today)
 

2 thoughts on “” அரோகரா “-சிறுகதை-அலெக்ஸ் பரந்தாமன்”

Comments are closed.