‘இரத்தத்தின் கதை’-கதை 08 – ‘செந்தூரன்’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன் பகல் முழுவதும் ஒரே அடைமழையாக இருந்தது. கடலில் இருந்து அலைகளும் ஆர்ப்பரித்து எழுந்து கரைகளில் வந்து மோதித் தணிந்து கொண்டிருந்தன. காற்றும் பலமாக வீசியபடிஎங்கும் குளிர்நிலை வியாபித்திருந்தது. மாலைநேரம் மழை சற்று ஓய்வெடுக்க வலையன் மடத்திலுள்ள ஒரு உறவினரைச் சந்தித்துவிட்டு, பிரதானவீதி வழியாக மாத்தளனுக்கு வந்துகொண்டிருந்தேன். வரும்வழியில் அம்பலவன் பொக்கணைச்சந்திக்கு அருகாமையில் யாரோ என்னை அழைப்பது கேட்கிறது.

“அண்ணை !  ஒருக்கா நில்லுங்கோ… உங்களோடை ஒரு விசயம் கதைக்கவேணும்…”

எனக்குத் திக்கென்றது. குளிர்கால நிலையையும் மீறி  ஊசிகள் குத்துவதான உணர்வுடன், உடல் ஒருகணம் குளிர்ந்து கொண்டது. ‘பிள்ளைபிடிகாரர்’ மனதிலே வந்து போனார்கள். கூடவே, மனைவி மற்றும் மகளது முகங்களும் ஞாபகத்துக்கு வந்தன.

நான் கேளாதது போன்ற பாவனையில் எனது நடையைச் சற்று துரிதப்படுத்தினேன். என்னைக் கூப்பிட்ட குரலுக்குரியவர் ஓடிவருவது அவரது காலிலுள்ள கனத்த சப்பாத்தின் ஒலியிலிருந்து அவர் ஒரு போராளி என்பதைப் புரியக்கூடியதாக இருந்தது.

எனக்கோ, ‘இனி மீட்சியில்லை. அவர்களுடன் போகவேண்டியதுதான்’ என்கிறதான ஓர் அதிர்வு உடலுக்குள் பரவிக்கொண்டிருந்தது. தொடர்ந்து கூப்பிடும் குரலைக் கேளாதவன்போல் பாசாங்கு செய்தால், அவர்கள் நிச்சயமாகக் காதைப்பொத்தி அறைவார்கள். திருப்பி பதிலுக்கு அடிக்கவோ, தர்க்கம் புரியவோ, நியாயம் கேட்கவோ முடியாது. கேட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்பது எனக்கு நன்கு தெரியாததொன்றல்ல.

ஏற்கனவே,  இந்தியன் ஆமி ‘அமைதிப்படை’யாக ஈழத்துக்கு வந்த நாள்களில், ஒருநாள் கோண்டாவில் – உப்புமடப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், ஒரு கூர்க்காஸ் படைச்சிப்பாயால் காதைப்பொத்தி அடிவாங்கி, ஒருவாரமாக இரத்தம் ஒழுகிய நிலையில், இன்று அக்காது செயலிழந்து கிடக்கிறது. இனி அதேபோன்று மறுகாதுக்கும் ஏற்பட்டால்…?

‘வருவது வரட்டும்…’ என்றதொரு அசட்டுத் துணிவில் நடையைச் சற்று தளர்த்தினேன். அதற்கிடையில், என்னைக் கூப்பிட்டபடி என்பின்னால் மெதுவாக ஓடிவந்த அந்தப் போராளியும் என்னருகில் வந்து என் தோள்மீது கையைப் போட்டார். முகம் இறுகிய நிலையில் மெதுவாக முகத்தைத் திருப்பினேன்.

‘செந்தூரன்’

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

90 களின் ஆரம்பத்தில் என்னோடு ஓர் அரிசி ஆலையில், சாதாரண ஒரு தொழிலாளியாகப் பணியாற்றியவன். கள்ளங்கபடமற்றவன். வெகுளித்தனம் நிறைந்தவன். நகைச்சுவையாளன். நல்ல பண்பாளன். எல்லா இளைஞர்களையும் போலவே, அவனும் ஒருநாள் இயக்கத்துக்குப் போய்விட்டான். அதன்பின், அவனைச் சீருடையில் ஏ.கே. துவக்கோடு சில இடங்களில் கண்டிருக்கிறேன். அவனும் என்னைத்தேடிவந்து கதைத்துவிட்டுச் செல்வான். வார்த்தைகள்  மிகச்சிக்கனமாக இருக்கும். போராட்ட அமைப்புக்குள் நிலவும் சிலரது செயற்பாடுகள் குறித்து,  என்னோடு தனிப்பட்ட ரீதியில், விவாதிப்பான். சிலநேரங்களில் அவனது அமைப்புச் சார்ந்த கருத்துகள் அவனது வெறுப்பையும், விரக்தியையும் வெளிக்காட்டுவனவாக அமையும்.

தொடர்ந்து நாட்டின் நிலைமை மோசமடையத் தொடங்கியது. தொடர் இடப்பெயர்வுகள், சொத்தழிவுகள், வீரச்சாவுகள், அகாலமரணங்கள், என்பன முடிவின்றி நீண்டு கொண்டு சென்றன. சில இரவுகளில் உறக்கமற்று இருக்கும்போது, இவனது முகம்வந்து என்முன்னே அழகுகாட்டி மறையும். அப்போதெல்லாம் இவனைக்குறித்து என்மனம் கவலைப்பட்டுக் கொள்ளும். ‘எந்த இடத்தில எந்தக் களத்தில யாரோடு நிற்கினானோ ?’ என எனக்குள் ஓர் உணர்வு அவதிப்படும். அக்கணம் அவன்மீது அனுதாபம் எழும்.

மன்னாரிலிருந்தும் மாவிலாறில் இருந்தும் படைநடவடிக்கை தொடங்கியபின், வன்னிப் பெருநிலப்பரப்பு சனசந்தடியற்ற நிலமாக மெல்ல மெல்லக் குறுகத் தொடங்கியது. போராட்ட அமைப்பின் ஆரம்பகால நடைமுறைகளில் மாற்றம் ஏற்படத்தொடங்கின. இந்த மாற்றத்தின் நிமித்தம் மக்களின் முகங்களில்  வினாக்குறி ஒட்டிக்கொண்டு நின்றது. மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த மக்களில் நானும் ஒருவனாக வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான், இன்று செந்தூரனைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. அதுவும், மிக மோசமான கள, சமூக சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவனைச் சந்திக்கிறேன்.

என்னைக் கண்டதும் அவனது முகத்தில் ஆனந்தப் புன்முறுவல்! அந்தப் புன்முறுவல் ஒன்றே அவை எனக்கு இனம் காட்டியது. அதேவேளை அவன் ‘பிள்ளைபிடிகாரன்’ அல்ல… என்பதையும் தெளிவாக்கியது.

“எப்படி அண்ணை ! சுகமாக இருக்கிறியளே…?”

அவன் என்னைச் சுகம் விசாரிக்கிறான்.

நான் அவனைச் சந்திப்பேன் எனக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் அதேபோன்ற உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்தும் என்னையே ஆச்சரியத்துடன் பார்த்தபடி திரும்பவும்  கேள்வி கேட்கத் தொடங்கினான்.

“இப்ப எங்கை இருக்கிறியள்… ?”

எனக்குப் பதிலளிக்க முடியவில்லை. காரணம், அவனது உடற்கோலம் அப்படியாக இருந்தது.

நன்கு கறுத்து சற்று மெலிந்தும் காணப்பட்டான். நீண்ட நாள்களாக எண்ணெய் கண்டிராத நிலையில் தலைக்கேசங்கள் பரட்டைபத்திக் கிடந்தன.அவன் அணிந்திருந்த சீருடையிலிருந்து, ‘குப்… ‘-பென அடிக்கும் வியர்வைமணம். நீண்ட நாள்களாக அவன் குளிக்கவில்லை என்பது தெரிய வந்தது. பசிக்களை வேறு முகத்தில் தெரிந்தது.

“இப்ப எங்கை இருக்கிறியள்… ?”  திரும்பும் அதே கேள்வியை என்னிடம் கேட்கிறான்.

“மாத்தளன் -கப்பல் றோட்டில…”

“சரி வாங்கோ.  ஒருக்கா உங்கட வீட்டை போவம்…”

எங்கும் ஒரே கும்மிருட்டாக இருந்தது. மழைமேகங்கள் வானைமூடி ஆக்கிரமித்து நின்றதால், நட்சத்திரங்களின் சிறு ஒளிகூட பூமியில் விழவில்லை. ஆங்காங்கே தரப்பாள் வீடுகளில் சிறுவெளிச்சமாக லாம்புகள், போத்தல் விளக்குகள் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்தன.

நான் அவனையும் அழைத்துக்கொண்டு பிரதான வீதியில் நடக்க ஆரம்பித்தேன்.

“அண்ணை ! மெயின் ரோட்டாலை போகவேண்டாம். உள்ளுக்குள்ளாலை போவம்.”

“ஏன்ராப்பா… உள்ளுக்குள்ளாலை போறதுக்கு இந்த இராஇருட்டிலை கரைச்சல். அதோடை நேரத்தையும் விழுங்கிப்போடும். மெயின்ரோட்டாலை எண்டால், ஓரளவு மேக வெளிச்சத்தில நேரத்துக்குப் போயிடலாம்…”

“நேரம் போனாலும் பிரச்சினையில்லை. உள்ளுக்குள்ளாலை, தரப்பாள் கொட்டிலுகளுக்கிடையால போவம்…”

எனக்கு ஏதோ மனதுக்குள் உதைப்பதான உணர்வு. அதேசமயம்,  அவனது வார்த்தைகள் பல விடயத்தைப் புரிய வைப்பன போலவும் தோன்றின.

“சரி நட போவம்…” என்றேன் நான்.

பிரதான வீதியில் இருந்து கிழக்கே திரும்பும் ஒரு ஒற்றையடிப்பாதையூடாக இருவரும் சென்று கொண்டிருந்தோம். மழைக்காலமாகையால், பாதை சேறாகக் காணப்பட்டது. ‘பாட்டா’ செருப்போடு சேற்றினுள் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும்,  மெதுவாகவும் நிதானத்துடனும், இருளைப் பார்வைகளால் ஊடறுத்தும் நடப்பதற்கு அந்த மெதுவானநடை மிகவும் உதவியாக இருந்தது.

சிலயார் தூரம் சென்றபின்பு, அந்த ஒற்றையடிப் பாதையின் இருமருங்கிலும் வடலிப்பனைகள் மற்றும் மண்டுப்பற்றைகள் நிறைந்து காணப்பட்டன. அதனையும்தாண்டி அப்பால் செல்கையில்  தரப்பாள் வீடுகள் தென்படத்தொடங்கின. செந்தூரன் முன்னே நடந்து கொண்டிருந்தான்.

இருந்தாற்போல், மழை பெய்யத் தொடங்கியது. இடைக்கிடை மின்னல்களும் தோன்ற ஆரம்பித்தன. காற்றின் குளிர்ச்சி அதிகமாக இருந்தது. செந்தூரன் தனது தோளில் தொங்கிய துவக்கினை எடுத்து, அதன் முனையைக் கீழே விட்டபடி நடந்துகொண்டிருந்தான். தரப்பாள் வீடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளால் நாம் இருவரும் போய்க்கொண்டிருந்தோம். பாதை நேராக இருக்கவில்லை. தரப்பாள் விளிம்புகளை இழுத்துக்கட்டிய கயிறுகள் பாதையெங்கும் குறுக்கும் நெடுக்குமாக நிறைந்து கிடந்தன. இவ்வாறாக, நடந்து நடந்து கடற்கரைக்கு அருகில் வந்துவிட்டோம். இனிக்கப்பல் றோட்டுக்கு நேராக நடந்து அதில் ஏறிவிட்டால், வீட்டுக்குப் போய்விடலாம்.

“ஏனப்பா இவ்வளவு நேரம்… ?”

பொழுது நன்றாக இருட்டிவிட்டதனால்  வழியில் ஏதாவது ‘அசம்பாவிதங்கள்’ நிகழ்ந்திருக்கக்கூடும் என அவள் பயந்திருந்தாள்.

“ஒண்டுமில்லை வழியிலை இந்தத் தம்பியைக் கண்டாப்போல கதைச்சுக்கொண்டுவர நேரம் போட்டுது.”

அப்போதுதான் அவள் செந்தூரனைக் கவனித்திருக்க வேண்டும். கையிலே துவக்குடன் நின்றவனைப் பார்த்துவிட்டு, என்பக்கம் திரும்பினாள்.

“பயப்பிடாதை. அவன் நம்மட தம்பிதான். அவன் இருக்கிறதுக்கு ஒரு பாயை எடுத்துப்போடு.”

மணல்தரையில் அவள் விரித்துவிட்ட இறப்பர் பாயில் நாங்கள் இருவரும் அமர்ந்து கொண்டோம்.  தரப்பாள் கொட்டிலின் ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ள அடுப்படியில், மனைவி எங்கள் இருவருக்கும் தேநீர் தயாரிக்க ஆயத்தமானாள்.

“ம்… சொல்லு செந்தூரா !  இப்ப எங்கை நிக்கிறாய்? பிரச்சினைகள் என்னமாதி? அடிபாடு இதோடை முடியுமோ? அல்லாட்டி இன்னும் தொடருமோ?”

அவனிடமிருந்து எந்தப்பதிலுமில்லை. அவனுக்குப் பின்புறமாக லாம்பு ஒளிர்விட்டுக் கொண்டிருந்ததால், அவனது முக அசைவுகளை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

“உங்கை எல்லாச் சனமும் ஆமியிட்டை போகுதுகள். உங்களுக்குப் போக விருப்பமில்லையோ…?”

அவனது கேள்வி என்னைத் தூக்கிவாரிப் போட்டது. என்ன அர்த்தத்தில் இப்படிக் கேட்கிறானெனப் புரியாமல் தவித்தேன். லாம்பு வெளிச்சத்தில் அவன் என் முக உணர்வுகளைக் கவனித்து விட்டான்.

“ஆமிட்டை போறதுக்கு ஏதாவது வழி தென்பட்டால் இப்பவே ஓடித் தப்பியிடுங்கோ.”

அவனது வார்த்தைகள் எனக்குத் திகைப்பைக் கொடுத்தன.  ஒரு நீண்டகாலப் போராளி அவன். அவனே இப்படிக் கூறும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத் தெரிந்தன.

“ஏன்ராப்பா… என்ன நடந்திட்டுது ?” பதற்றமாய் ஒலிக்கிறது எனது குரல்.

களநிலைமை இப்ப சரியில்லை. ஆமி வாற நிலையைப் பார்த்தால் இந்தக் கடற்கரைப்பகுதி இன்னும் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்குமெண்டது எனக்கே தெரியாமல் கிடக்குது.”

“மெதுவாப் பேசு. அங்காலை இஞ்சாலையெல்லாம் ஆக்கள் இருக்கினம்.”

நான் அவனை எச்சரிக்கிறேன்.

அவன் தனது குரலைத் தாழ்த்தி மெதுவாகக் கூறத் தொடங்கினான்.

“சண்டைக்களத்தில இப்ப நிலைமை சரியில்லை. இயக்கத்துக்குள்ளை ஏதோவொரு பிறசக்தி ஊடுருவி விட்டமாதிரித் தெரியுது. அண்ணையின்ரை பேச்சு மூச்சைக் காணோம். தளபதிமாரெல்லாம் திக்கொன்றாய் பிரிஞ்சுபோய்க் கிடக்கினம். ஆமியளோடை அடிபடுகிறதுக்கு இப்ப ஆக்கள் காணாமல் கிடக்குது. சனங்களுக்குள்ளை சாவுகள் வரவரக் கூடிக்கொண்டு போகுது. உந்தப் ‘பிள்ளைபிடிப்பு’ வேலையாலை சனங்களிட்டை இருந்த மதிப்பு, மரியாதையெல்லாம் கெட்டுப் போச்சுது. சனத்துக்கு முன்னாலை துவக்கோடை போய் நிக்க வெக்கமாக் கிடக்குது. சாப்பாட்டுக்குக் சரியான கஷ்டம். மேலிடத்துக்குள்ளை என்ன நடக்குதெண்டு ஒருத்தருக்கும் தெரியாதாம். இப்ப போராளியளைவிட, உளவாளியள் கூடிப்போச்சுது. அதுதான் எங்கட சனத்துக்கு உந்தநிலை. இது எங்கைபோய் முடியப்போதுதெண்டது தெரியேல்லை. ஆனால்,  ஒண்டுமட்டும் தெரியுது… இனிச் சனத்துக்கு மீட்சியில்லையெண்டது…”

அவன் கூறியதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. அவன் கூறும்போது அவனிலிருந்து வெளிப்பட்ட விரக்தியையும் வேதனையையும் கண்டு, அவனது வார்த்தைகளை நிராகரிக்க முடியாமலும் இருந்தது.

‘எத்தனை பெரிய களங்களைக் கண்டு, அந்தக் களங்களையே கைப்பற்றி, உலகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர்கள் இப்போது போரியல் முனையிலும் மக்கள் மத்தியிலும் தோற்றுக் கொண்டிருக்கிறார்களெனில் செந்தூரன் கூறுவதுபோன்று, அமைப்புக்குள் ஏதோ ஒரு சக்தி ஊடுருவி விட்டதா ? அப்படியானால், அந்த சக்தி எது?’  எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

அவனுக்கும் எனக்குமிடையில் விநாடிகள் சில, மெளனமாய் கடந்து கொண்டிருந்தன. அந்த மெளன இடைவெளிக்குள் மனைவி தேநீரைக் கொண்டுவந்து வைத்தாள். கூடவே, இரண்டு ரொட்டிகளையும் செந்தூரனிடம் கொடுத்தாள். அவனுக்கு நல்ல பசி. எதுவித மறுப்பும் கூறாமல் வாங்கிக் கொண்டான். ரொட்டியைச் சாப்பிட ஆரம்பித்தான்.

“தலைவர் பாவம். எல்லாரையும் நம்பிக்கெட்டு ஏமாந்து போனார். எப்படியெல்லாம் போராடினம்.?எப்படியெல்லாம் தலை நிமிர்ந்து நிண்டம்…?”

செந்தூரனால் தொடர்ந்து பேச முடியவில்லை. அழுகிறான் போலும். ஒருகை அவனது கண்களைத் துடைத்துக் கொள்கிறது.

எனக்கு செந்தூரனைப்பற்றி நன்கு தெரியும். தனது அமைப்பின்மீதும், அதன் தலைமைமீதும் மிகுந்த விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டவன். தனது மனசாட்சியின்படி வேலை செய்தவன். நீண்டகாலக் களப்பணியாளன். பல சமர்களில் பங்குபற்றியவன். அப்படிப்பட்டவனே விரக்தியும், வெறுப்பும் கொண்டு நிற்கையில், பிள்ளைபிடிகாரர்களால் வலிந்து பிடித்துச் செல்பவர்களிடம், எந்தளவுக்கு விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் எதிர்பார்க்க முடியும்…? என என்மனம் எண்ணிக் கொள்கிறது.

“சரியண்ணை… நான் வெளிக்கிடப்போறன்…” அவன் புறப்பட ஆயத்தமானான். நான் திகைத்துப் போனேன்.

“டேய்… இந்த இருட்டுக்குள்ளை எங்கையடா போகப்போறாய் ? வெளியில மழையும் பெய்யுது…”

“இனி எல்லாமுமே இருட்டுத்தான். எல்லாருக்குமே இருட்டுத்தான். எங்கேயோ சறுக்கிப்போட்டுது. விழுந்து போனம். இனி நிமிருவம்… எண்டது சாத்தியமில்லை. அதோடை, நான் இப்ப உங்களோடை தங்கியிருக்கேக்கை ‘பிள்ளைபிடிகாரர்’ வந்தினமெண்டால், என்னைவிட உங்களுக்குத்தான் நிறையப் பிரச்சினை”.

” நீ… என்னடா சொல்லுறாய்… ?”

“நான் களத்தை விட்டு, இயக்கத்தைவிட்டு ஓடி வந்திட்டன்…”

“என்னது… ?!?”

“என்னாலை இனி ஏலாது…”

வெளியே மழை பெரும் இரைச்சலுடன் கனத்துக் கொள்ளத் தொடங்கியது. மழையோடு சேர்ந்து மின்னல்கள், இடிமுழக்கங்கள், காற்று  என்பனவும் கைகோர்த்துக் கொண்டன. மழைநீர் வழிந்தோட முடியாமல் தரப்பாள் வீட்டுக்குள் வரத்தொடங்கியது.

அவன் எழுந்து கொண்டான்.

“நீ   இப்ப இந்த மழைக்குள்ள எங்கை போகப் போறாய் ?”

“மழையெண்டாலும் சனங்கள் ஆமியிட்டை போறதை விடமாட்டுதுகள். அந்தச் சனத்தோடை சனமா, நானும்போய் ‘சரண்டராகப்’ போறன்..”

அவன் கூறிக்கொண்டிருக்கும்போது, பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைகளில் எடுக்கக்கூடிய பொருள்களை எடுத்துக் கொண்டு, வயது வேறுபாடின்றி, பால்பேதமற்று ஆமியிடம் சரணடைவதற்காக எனது வீட்டின் முன்பாக, மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவனாக செந்தூரனும் தனது துவக்கை மறைத்தபடி அந்த இருளுக்குள் சென்று மறைந்து விட்டான்.

போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டன. முள்ளிவாய்க்காலில் கிபிர் விமானத்தின் ஒரேயொரு குண்டுத்தாக்குலில், அவனது பெற்றோர் மற்றும் சகோதரங்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர் என்ற தகவலைத் தவிர இதுவரை அவனைப்பற்றிய எந்தவொரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை.

அவன் மக்களோடு மக்களாக ஆமியிடம் சரணடைந்திருக்கலாம்?

அல்லது –

ஆமியிடம் சரணடைய முயற்சிக்கும்போது, அவனது அமைப்பால் இனங்காணப்பட்டு, சுடப்பட்டு இறந்திருக்கலாம்?

அல்லது –

இராணவத்தரப்பால் காணாமல் ஆக்கப்பட்டிருக் கலாம்?

அல்லது  –

புனர்வாழ்வுபெற்று வெளியே வந்திருக்கலாம்?

அல்லது –

வெளிநாடொன்றில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம்?

அல்லது –

‘முன்னாள் போராளி’ எனும் அடைநாமத்துடன், வாழ்க்கையோடு அல்லாடுபவனாக, இந்த நாட்டின் எங்கோ ஒரு மூலையில், தன்னை வெளிப்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ?

எது எப்படியோ… செந்தூரன் ஓர் உண்மையான போராளி. மறக்க முடியாத முகம் அது!

இன்னும் இவனைப்போன்று எத்தனை ‘செந்தூரன்’கள்…

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை 

அலெக்ஸ் பரந்தாமன்
அலெக்ஸ் பரந்தாமன்
(Visited 163 times, 1 visits today)