‘இரத்தத்தின் கதை’-கதை 09 – ‘உண்ணாச் சொத்து மண்ணாப் போச்சு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

பரமனால் தொடர்ந்தும் தரப்பாள் கொட்டிலினுள் உறக்கம் கொள்ள முடியவில்லை. பனிக்காலம்  பகல்நேர வெய்யிலின் வெப்பத்தை  உள்வாங்கி இருந்தது. இரவானதும் அந்த வெக்கையை அது வெளியே உமிழ்ந்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே அவிச்சலும் புளுக்கமுமாக இருந்தன. போதாக்குறைக்கு வெப்பத்தை உள்வாங்கிய குருமணல் மேல் இறப்பர் பாயை விரித்துவிட்டுப் படுத்ததில், பாயூடாக வெப்பம் உடலினுள் பரவுவதை பரமனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவன் படுக்கையை விட்டெழுந்து, கொட்டிலின் வாசலில் குந்தினான். வானத்தில் வளர்பிறை ஒளிர்ந்து கொண்டிருந்தது. எங்கும் ஒரே மயான அமைதி நிலை!  அவனுக்கு அந்த நிலை குறித்து ஆச்சரியமாக இருந்தது. அதேவேளை சற்று அச்சத்தையும் கொடுத்தது.

களமுனைகளில் எதுவித மோதல்களும் இடம் பெறவில்லையென்பது அவனுக்குப் புரிந்தது. இராணுவம் சமரை நிறுத்திவிட்டு, காடுகளூடாக வேவு பார்க்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கக்கூடும் என அவன் நினைத்தான். அதேபோல், புலிகள் தரப்பும் ஆள்கள் பற்றாக்குறை காரணமாகத்  தங்களது எதிர்த்தாக்குதல்களை நிறுத்தியிருக்கலாம் எனவும் அவன்  சிந்தித்தான். அக்கணத்தில் எந்தவொரு வெடி அதிர்வுகளும் எழாமல் இருந்தது அவன் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

பரமன் தன் குடும்பத்துடன் கைவேலியை விட்டுப் புறப்படும்போது, ஒருமாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களும் சிறுதொகைப் பணமுமே இருந்தன.

‘எப்படியும் இயக்கம் விடாது. ஆமியளை அடிச்சுக் கலைச்சுப்போடும். பிறகு வீட்டை போயிடலாம்…’ என்ற நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருந்ததுபோல, அவனிடத்திலும் இருந்தது. நாள்கள் நகர நகர… அந்த நம்பிக்கை சிதைவடையத் தொடங்கியது .

எல்லோரும் தொழிலற்று இருந்தார்கள். அதிலும் தினக்கூலிகளாக விளிம்புநிலை வாழ்வியலைக் கொண்டோர் ஒருநேர உணவுக்காக பெரிதும் போராட வேண்டியிருந்தது. வர்த்தகம் செய்தோர் தாங்கள் இடம்பெயரும்போது எடுத்து வந்த அத்தியாவசியப் பொருள்களை வைத்து, விலை நிர்ணயமற்று, மனம்போன போக்கில் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். இருப்பில் உள்ள பொருள்களும் தீர்ந்து கொண்டிருக்க அப் பொருள்களுக்குப்  பெரும் தட்டுப்பாடு நிலவத்தொடங்கியது. இதன் நிமித்தம் களவுகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக, காசு, நகைகள் என்பவற்றைவிட, அரிசி, மா, சீனி போன்ற பொருள்கள் களவு போகத் தொடங்கின. இவ்வாறான களவுகளின்போது, சிலர் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு ஏனையவர்களால் நையப்புடைக்கப்பட்டார்கள்.

இடைக்கிடை செஞ்சிலுவைச்சங்க அமைப்பின் அனுசரணையுடன் கப்பலில் கொண்டுவரப்படும் மா, சீனி, அரிசி, மைசூர்பருப்பு போன்ற பொருள்கள் குடும்ப அங்கத்தவர்களின் தொகையைப் பொறுத்து பங்கீட்டு அடிப்படையில் வழங்கினாலும் அவை போதுமானவையாக இருக்கவில்லை. சிலர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் சாவடையத் தொடங்கினார்கள்.

பரமனுக்கு பொறுமையுணர்வு அற்றுப்போய் விட்டது. இனித் தன்னால் மீள முடியாது என்கிற உணர்வு எழுந்து கொண்டது. கையில் இருந்த பணமும் செலவாகி விட்டது. கொண்டு வந்த உணவுப்பொருள்களும் முடிவுற்று, தற்போது கையிலிருந்தது ஒண்டரைச்சுண்டு கோதுமைமாவும் இரண்டு போத்தல்மூடி சீனியும் மட்டுமே.

‘இனி என்ன செய்வது ? எங்கு போவது? யாரிடம் இரந்து கேட்பது?’ என்ற சிந்தனை எழுந்து கொண்ட போது, அடிவயிற்றுக்குள் ஏதோ பிசைவது போன்ற உணர்வால், அவன் அவதிப்பட்டான். காலையில் தேநீருடன் இரண்டு சிறிய கோதுமைமா ரொட்டிகளைச் சாப்பிட்டவன், மாலைவரை எதுவும் உட்கொள்ளவில்லை. பசி, பட்டினி அவனுக்குப் புதிதல்ல. ஆனால், அவனால் இப்போது இயலாதிருந்தது. இரவு படுக்கைக்காக உடலைச் சரிக்கும்போது, நாளைய பொழுதுக்கான தேவைகள் அவன் முன்னால் வந்து பயமுறுத்தின. உடலைவிட, மனசு அதிகம் சோர்வாகத் தென்பட்டது. வயிற்றுக்குள் குடல்களைச் சுற்றி ஏதோவொரு எரியுணர்வு படர்ந்து கொதுகொதுப்பது போன்று இருந்தது. ‘தண்ணீர் குடித்தால் நல்லது’ என நினைத்தவன் எழுந்து செல்ல மனமில்லாது அப்படியே இருந்தான்.

தூரத்தில் யாரோ நடந்து வருவது இருளில் சற்று மங்கலாகவே தெரிந்தது. வானத்தில் வளர் பிறையை கருமேகமொன்று மூடிக்கொண்டதில் வருபவரை இனம் காண பரமனால் முடியவில்லை. அவர் அவனருகில் வந்தபின்புதான் அவனால் அடையாளம் காண முடிந்தது.

“ஆர் முருகண்ணையே… ?”

“ஓம் தம்பி நான்தான். உங்காலை கடற்கரைப் பக்கம் போட்டு வாறன். நீர் என்ன இந்த நேரம் வெளியிலை வந்து குந்திக்கொண்டிருக்கிறீர்?” முருகண்ணர் கூறிக்கொண்டே பரமனுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

“நித்திரை வருகுதில்லை. அதுதான் வெளியிலை வந்து இருக்கிறன்” என்று அவன் கூறிக்கொண்டாலும் அவனால் வயிற்றுக்குள் தகித்துக் கொண்டிருக்கும் பசி வெக்கையை வார்த்தைகளாக வெளியே கொட்ட முடியவில்லை .

“தம்பிக்கு ஏதேனும் தொழில் வசதி இருக்கே ?”

“இல்லையண்ணை. ஏன் கேக்கிறியள்?”

முருகண்ணர் எதுவும் கூறவில்லை. அமைதியாக இருந்தார். அவரது அமைதி பரமனுக்கு என்னவோ போலிருந்தது. ஏதோ கேட்க விரும்புவதையும், அதைக் கேட்கக்  கூச்சப்படுவதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

முருகண்ணர் பேச ஆரம்பித்தார். அவர் பேசப் பேசத்தான், தன்னைப்போன்றவர்களின் வாழ்வுக்கான, வயிற்றுக்கான போராட்டம் எந்த அளவுக்கு உச்ச நிலையைத் தொட்டு நிற்கிறது என்பதைப் பரமனால் புரிந்து கொள்ள முடிந்தது. வயிற்றுப்பசி தனக்கு மட்டுமல்ல என்பதும் அவனுக்குத் தெரிந்தது. முருகண்ணர் வேலை விடயம் குறித்து விசாரித்தது… அவரும் தொழில் இன்றி அவரது குடும்பமும் சாப்பாட்டுக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறதென்பதை விளங்கிக் கொண்டான்.

இருவரும், தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்ட பின்னடைவுகள், இராணுவத்தின் முன்னேறும் நடவடிக்கை, குடும்பத்தலைவர்களின் தொழிலற்ற நிலை, பசி பட்டினி நோய்கள் அதற்கான மருந்தின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், பிள்ளைபிடிப்புகள் என்பவை பற்றி ஒருத்தருக்கொருத்தர் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். நேரம் அது தன்பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது.

அந்தவேளையில் ஒருவர் தன்முதுகில் மூடையொன்றைச் சுமந்தபடி கும்பி மணலில் நடக்கச் சிரமப்பட்டவாறு அவர்கள் இருவரையும் கடந்து,  தரப்பாள் கொட்டில்களின் இடைவெளிகளூடாகச் சென்று மறைந்தார். பரமனும் முருகண்ணரும் அவர் போன திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னண்ணை இந்த நேரத்தில முதுகில மூட்டையோடை ?” பரமன் கேட்டான்.

“அதுதான் தம்பி எனக்கும் விளங்குதில்லை. களவோ அல்லாட்டி அறிஞ்சவை தெரிஞ்சவையிட்டை  ஏதேனும் வாங்கிக்கொண்டு போறாரோ தெரியேல்லை”

“இப்ப சாப்பாட்டுப் பிரச்சினைதானே பெரிய பிரச்சினையாகக் கிடக்குது. ஆமி ஏவுற ஷெல்லுகளாலை சாகிறதைவிட சாப்பாடு இல்லாமல்தான் எங்கட சனமெல்லாம்  சாகப்போகுதுகள். உங்கால வலைஞன்மடப் பக்கம் ஆரோ ஒரு அப்பு சாப்பாடு இல்லாமல் கிடந்து செத்தவராம்” என்று பரமன் கூறிக் கொண்டிருக்கையில், முருகண்ணர் குறுக்கிட்டார்.

“இயக்கமும் சாப்பாடில்லாமல் கஷ்டப்படுகுதாம். அடிபாட்டுக்களத்திலை நிற்கிறவைக்கு ஆகப்போக சாப்பாடு இல்லையாம்…”

முருகண்ணர் கூறியதைக் கேட்டு, பரமன் மெதுவாகச் சிரித்துக் கொண்டான். அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் பேச்சொலிகள் கேட்டன.  பரமனும் முருகண்ணரும் திரும்பிப் பார்த்தார்கள். சற்றுமுன், மூடை சுமந்து சென்றவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் மேலும் இரு இளைஞர்கள் வந்தனர். மூடை சுமந்தவர் பரமனுக்குக் கிட்டவந்ததும், அவர் சொன்ன தகவல் முருகண்ணருக்குத் தூக்கிவாரிப் போட்டது. பரமனுக்கு அச்சமாகவும் விருப்பமாகவும் இருந்தது.

“இயக்கத்தின்ரை களஞ்சியமொண்டை சனங்களெல்லாம் ஒண்டு சேர்ந்து உடைச்சு, அதுக்கை கிடந்த சாமான் சக்கட்டெல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போகுதுகள். உங்களுக்கும் ஏதும் தேவையெண்டால், எங்களோடை வாங்கோ. வந்து ஏதாவதை எடுங்கோ.”

அவர் கூறிவிட்டு, தன்னோடு கூடவந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, தரப்பாள் கொட்டில்களின் இடைவெளிகளூடாகச் சென்று கொண்டிருந்தார்.

பரமன் எழுந்து கொண்டான். தன் கொட்டிலின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மனைவியைத் தட்டி எழுப்பி, விடயத்தைக் கூறிவிட்டு வெளியே வந்தான். பரமனின் மனைவிக்குத் திகைப்பாக இருந்தது. படுக்கையை விட்டெழுந்தவள், வாசலுக்கு வந்து பார்த்தபோது, பரமன் முருகண்ணருடன் சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

முருகண்ணர் வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் பரமன் ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தான். கடற்கரையில் இருந்து மேற்குப்புறத்தே தென்னை மற்றும் மாமரங்களினால் சூழப்பட்ட இடத்தில் அந்த உணவுக் களஞ்சியம் இருந்தது. தகரத்தாலான மிக விரிவான நிலப்பரப்பைக் கொண்ட அந்தக் களஞ்சியத்தினுள் போதுமான உணவுப்பொருள்கள் நிறைந்திருந்தன. களஞ்சியத்தின் ஒருபகுதி உடைக்கப்பட்டு, அதனூடாக மக்கள் உள்நுழைந்திருந்தனர். பலரது முகங்களிலும் பசிக்களை.

தொழிலற்றவர்கள், சாப்பிடுவதற்கு பொருளற்று இருந்தவர்கள், விளிம்புநிலை வாழ்வியலைக் கொண்டவர்கள் எனப் பல ரகத்தினரும் அங்கே நிறைந்திருந்தனர். பின்விளைவுகள் எதையும் அவர்கள் நோக்கவில்லை. வருவது வரட்டும் என்ன துணிவு எல்லோரிடமும் மேலோங்கி நின்றது. சிலர் கொண்டுவந்த ‘டோர்ச் லைட்’ மூலம் ஒளி பாய்ச்சப்பட்டு, உடல் வலுவுள்ளவர்கள் மூடைகளை முதுகிலே சுமந்தபடி சென்றார்கள். பெண்கள் கடதாசிப் பெட்டிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். மூடைகளுக்குள் மற்றும் பெட்டிகளுக்குள் என்ன பொருள்கள் இருக்கின்றன என்பது குறித்து எவருக்கும் தெரியவில்லை. அவதி அவதியாக கையில் அகப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு போகும்போதுதான் அந்த வெடிச்சத்தம் கேட்டது.

மக்கள் ஒருகணம் திகைத்துப் போனார்கள். சடுதியாக அந்த இடத்துக்கு வந்த மூன்று போராளிகளில் ஒருவன் மக்களை மிரட்டும் வகையில், வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தொடங்கினான்.

“தின்னுறதுக்கு சனங்களுக்குச் சாப்பாடில்லை. இதெல்லாம் ஆருக்குத் தேடி வைச்சிருக்கிறியள்…?”

அந்த இருட்டுக்குள்ளிருந்து ஆங்காரமாக ஆவேசமாக ஒலிக்கிறது ஒரு பெண்ணின் குரல். மறுகணம், வந்த போராளிகளிலொருவன் நிலைமையின் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டான். பக்கத்தில் நின்றவனிடம் மெதுவாகக் கூறினான்.

“அண்ணை நிலைமை சரியில்லை. நாங்கள் ஆக மூண்டுபேர்தான் நிக்கிறம். சனங்களெல்லாம்பசிவெறியில நிக்குதுகள். உதுக்குள்ள தலையைக் குடுத்தால், எங்கட மூண்டு பேரின்ர தலையும் தப்பாது”

முதலாமவனுக்கு, இரண்டாமவனது கருத்து சரியாகவே பட்டது. வெடிச்சத்தம் கேட்டும் அசராது, பொருள்களை மக்கள் தூக்கிச் செல்வதை அவதானித்தவன், மேற்கொண்டு எதுவும் கூறாது, தன்னுடன் வந்தவர்களோடு இருளோடு இருளாக மறைந்து போனான்.

பரமனும் முருகண்ணரும் ஆளுக்கொரு மூடைகளை முதுகிலே சுமந்தபடி தங்கள் தரப்பாள் கொட்டில்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

‘கடவுளே ! மூடை தீட்டுப்பச்சையாக இருந்திட வேணும். உப்பைப் போட்டுக் காய்ச்சி கஞ்சியெண்டாலும் குடிக்கலாம்.’

பரமனது மனம் கடவுளை வேண்டிக் கொள்கிறது. இருவரும் ஒருவாறாக தங்களது இருப்பிடங்களுக்கு வந்து விட்டார்கள். வந்தவர்கள் அவசரமாக மூடைகளின் வாய்ப்பகுதியைப் பிரித்தெடுத் தார்கள். மறுகணம், பரமனுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவனுக்கு அகப்பட்டது உளுத்தம்பருப்பு மூடை! முருகண்ணர் தூக்கி வந்தது சீனி மூடை.

“சரி அளந்தது அவ்வளவுதான் !” எனக்கூறிய முருகண்ணர், சீனி மூடையில் இருந்து வேண்டியளவு சீனியை எடுத்து, பரமனிடம் கொடுத்து விட்டு, மிகுதியுடன் தன் கொட்டிலை நோக்கிச் சென்றார்.

பொழுது மெல்லப் புலர்ந்து கொண்டிருந்த நேரம் அது! இரவு மக்கள், களஞ்சியத்தை உடைத்து  பொருள்களை எடுத்ததன் களிப்பை நிர்மூலமாக்குவது போன்று, அடுத்தடுத்து மாத்தளன் பகுதியெங்கும் ஷெல்கள் விழுந்து வெடிக்க ஆரம்பித்தன. துவக்கு வெடிச்சத்தங்களும் மிக அருகாமையிலிருந்து ஒலிக்கத் தொடங்கின. மாத்தளன் – கப்பல்றோட்டின் முச்சந்தியின் அருகாமையில் குடியிருந்தவர்கள் அலறியபடி கும்பல் கும்பலாக கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு, கடற்கரையை நோக்கி ஓடிவரத் தொடங்கினார்கள்.

“ஐயோ… ஆமி இரணைப்பாலை தாண்டி வந்திட்டான். எல்லாரும் ஓடுங்கோ…”ஓடிவரும் கூட்டத்திலிருந்து ஒலிக்கிறது ஒரு குரல்.

பரமனால் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை. சிந்திப்பதற்கான அவகாசமும் அப்போதிருக்க வில்லை. ஓடிவந்த  மக்கள் எல்லாம் கடற்கரைக்கு வந்து, பின் அங்கிருந்து அம்பலவன் பொக்கணை, வலைஞன்மடம் பகுதிகளை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். இடையிடையே விழுந்து வெடிக்கும் ஷெல்களினால், பலர் அந்த இடத்திலேயே இறப்பதும், காயப்படுவதுமாக இருக்க, ஏனையோர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

பரமனும் மக்களோடு மக்களாக தனது மனைவி பிள்ளைகளுடன் ஓடினான். ஓடிஓடி இறுதியில், வலைஞன்மடத்தில் உள்ள ஒரு வாகை மரத்தின்கீழ் தஞ்சமடைந்தான். முருகண்ணரைப் பற்றி எதுவும் தெரிய வரவில்லை. ஓடிவந்தகளையில் அவன் மனைவி வெறுந்தரையில் படுத்திருந்தாள். பிள்ளைகள் இரண்டும் அழுதகண்களுடன் தாயோடு ஒட்டியபடி இருந்தன. அவளது தலைமாட்டில் இரண்டு சிறிய பயணப்பொதிகள் மட்டுமே இருந்தன. சீனிப்பொதி…???

ஆமி வந்தமாதிரிக்கு இந்தநேரம் அந்தக்களஞ்சியம்  அவையளிட்டை  வசமாக மாட்டியிருக்கும் என்பது தெளிவாகப் புரிந்தது அவனுக்கு.

“அநியாயப்படுவார் சனங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படேக்கை உந்தச் சாமான் சக்கட்டுகளைப் பகிர்ந்து குடுத்திருக்கலாம். கடைசியில சனத்துக்குமில்லாமல் தங்களுக்குமில்லாமல் ஆமியிட்டை தானம் பண்ணினதுதான் மிச்சம். ‘உண்ணாச் சொத்து மண்ணாப் போச்சு’

பரமன் தனக்குள் குமுறியபடி இருந்தான். தூரத்தே மக்கள் கடற்கரைவழியே கைகளில் மேலதிக பொருள்கள் எதுவுமற்றவர்களாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள். இப்போது பசியில் கொதுகொதுக்கத் தொடங்கியது பரமனின் வயிறு.

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
அலெக்ஸ் பரந்தாமன்
(Visited 138 times, 1 visits today)

2 thoughts on “‘இரத்தத்தின் கதை’-கதை 09 – ‘உண்ணாச் சொத்து மண்ணாப் போச்சு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்”

Comments are closed.