மாற்றுப்பாலினத்தவர் தொடர்பான சமுகப்புரிதல் – கட்டுரை -பவானி தம்பிராசா

பவானி தம்பிராஜாLGBTQ என்றால் Lesbian, Gay, Bisexual ,Transgender & Queer. பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே LGBTQ இன் நோக்கமாகும்.

Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே. Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation.

Gender என்றால்  நமக்குத் தெரிவது முதலில் ஆண், பெண். திருநர் (Transgender) திருநங்கைகள் (Transwomen). திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் “திருநம்பிகள்” (Transmen) என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின (Gender) வேறுபாடுகள் இருக்கின்றன.

Gender என்ற சொல் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது  இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் Gender – இல் இருக்கும். இதைத் தாண்டி Transsexuals, Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexuals, Transgenders என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன.

Gender (பாலினம்). அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?

A. Common genders:

01 ஆண்
02 பெண்

B. திருநர்(Transgender)

01திருநங்கை (Transwomen)
02 திருநம்பி (Transmen)

C. பால்புதுமையர்-Genderqueer

01 பால் நடுநர்-Androgynous
02 முழுனர்-pangender
03 இருனர்-Bigender
04 திரினர்-Trigender
05 பாலிலி-Agender
06 திருனடுனர்-Neutrois
07 மறுமாறிகள்-Retransitioners
08 தோற்ற பாலினத்தவர்-Appearance gendered
09 முரண் திருனர்-Transbinary
10 பிறர்பால் உடையணியும் திருனர்-Transcrossdressers
11 இருமை நகர்வு-Binary’s Butch
12 எதிர் பாலிலி-Fancy
13 இருமைகுரியோர்-Epicene
14 இடைபாலினம்-Intergender
15 மாறுபக்க ஆணியால் -Transmasculine
16 மாறுபக்க பெண்ணியல்-Transfeminine
17 அரைபெண்டிர்-Demigirl
18 அரையாடவர்-Demiguy
19 நம்பி ஈர்ப்பினள்-Girlfags
20 நங்கை ஈர்பினன்-Guydykes
21 பால் நகர்வோர்-Genderfluid
22 ஆணியல் பெண்-Tomboy
23 பெண்ணன் –sissy
24 இருமையின்மை ஆணியல்-Non binary Butch
25 இருமையின்மை பெண்ணியல்-Non binary Femme
26 பிறர்பால்உடைஅணிபவர் –Cross dresser

காலம் காலமாக அலி, அரவாணி என்று பல்வேறு தரப்பட்ட அருவெறுக்கத்தக்க பட்டப்பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தவர்கள், சமீப காலமாகத்தான் பெருத்தமான திருநங்கை என்ற பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்தனர். திரு = ஆண்மகன், நங்கை = பெண்மகள்.

திருநங்கைகளைப்பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமானால்  ‘‘ஆணாக பிறந்து, பாலின உணர்வைப் பெறும் வயதில் குரோமோசோம் குறைப்பாட்டால் மனதளவில் மட்டும் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள்” எனலாம். இது அவர்களே வேண்டுமென்று நினைத்து மாறுவதில்லை.  இது, விடை சொல்ல முடியாத இயற்கையின் விளையாட்டு.

மனதளவில் பெண்ணாக பருவமாற்றம் அடையும் போது அவர்களின் பிறப்பு உறுப்பு மீதே வெறுப்பு உண்டாகி, பின் முறையான ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் உறுப்பை நீக்கி விடுவார்கள்.

உண்மையான ஆணுக்கு உறுப்பை நீக்கி விட்டால், அதோடு அவர்  மரணமடையே வேண்டியதுதான். ஆனால், திருநங்கைகளுக்கு அப்படி இல்லை. இதிலிருந்தே இவர்களது மாற்றம் இயற்கையின் விதிவசத்தால் நடப்பது என்பதை அறியலாம்.

மனதளவில் பெண்ணுக்குரிய  உணர்வுகள்  இயல்பாகவே வந்து விடுவதால், பெண்களைப் போலவே ஆடை, அலங்காரம் ஆகியவற்றை செய்து கொள்வார்கள்.

திருநங்கைகளோ ஆண் என்ற உடம்பில், பெண்ணுக்குரிய உணர்வுகளை அடக்கி வைத்திருந்தவர்கள்.  அந்த அடக்கி வைத்த உணர்வுகளை வெளிப்படுத்தும்போது கொஞ்சம் அதீததன்மை இருக்கும் அல்லவா. இதை நாம் புரிந்துகொள்ளாமல் அவர்களை அருவெறுப்புடனும் வித்தியாசமாகவும் பார்க்கிறோம்.

சமுதாயத்தின் புறக்கணிப்பின் காரணமாகவே வேறு வழியின்றி அவர்கள் பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

பெண் தன்மை உடலில் குடி கொண்டிருப்பதால், இயல்பாகவே இவர்களின் மார்பகமும்  பெண்களைப் போலவே கொஞ்சம் பெரிதாகி விடும். அப்படியே ஆகவில்லை என்றாலும் கூட, மருத்துவ முறையில் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.

மனதளவில் பெண் தன்மை குடி கொண்டிருப்பதால் எதிர்பாலினமான ஆண்களின் ஆதரவுதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆகவேதான்  ஆண்களைச் சீண்டுகிறார்கள்.

திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன:

திருநங்கைகளும் திருநம்பிகளும் சமூகத்தில் அனுபவிக்கும் நிலை குறித்து முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு அது நிறையத் தெரிந்திருக்கும். திருநங்கைகள் அவர்களை அவர்களே ஏற்றுக்கொள்வது முதல் விடயம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய குடும்பத்தினர் எத்தனை விழுக்காடுகள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் வாழ்க்கையே இருக்கிறது. திருநம்பிகள் பெண்ணாக இருந்து ஆணாக வரும்போது சமூகம் அவர்கள் மீது செலுத்தும் அழுத்தத்தை பின்பு பேசுவோம். திருநங்கைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வீட்டினரிடமிருந்து கிடைக்கும் அழுத்தங்கள் முதலான பிரச்சனைகள், அவர்களின் மாற்றங்கள் அறிந்த பிறகு வீட்டிலிருந்து துரத்தப்படுதல் வரை. தங்கள் குழந்தை இப்படி வளர்ந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் அரவணைத்திருந்தால் அவர்களுக்கு அந்தளவுக்கு சிரமங்கள் இருந்திருக்காது. அவர்களை வீட்டை விட்டு வெளியே விரட்டுவது, என்றான பின்பு அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அவர்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற தெரிவு அவர்களிடம் மட்டுமே இருக்கிறது. உண்மையச் சொன்னால் சமூகத்தின் தெருவோரத்தில்தான் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். திருநங்கை என்று சொன்னால் வெறும் விபச்சாரத்திக்கானவர்கள்தான் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அவர்களின் அழுகுரலை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருப்போம். எத்தனையோ பேரிடம் அவர்கள் பாலியல் அத்து மீறலை எதிர்க் கொண்டிருப்பார்கள். கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள். நான் ஒரு கதையில் கூட படித்தேன். திருநங்கையின் கதைதான். வன்கலவி அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இன்னொரு சிரமமான சூழ்நிலை வேலைக்குப் போனாலும் எத்தனை பேர் அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர்? முதலில் அவர்களுக்குக் கல்வியறிவு இருக்கிறதா? கல்வியே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும்போது அந்த வளரிளம் பருவத்தில் (adult) உடலில் ஏற்படும் மாற்றங்களால் தன்னைத்தானே வெறுத்து வாழ வேண்டிய நிலை. தன்னுடலைத் தானே வெறுத்து வாழ்வதுதான் உலகத்திலேயே கொடுமையான விடயம் என்பேன். ஆனால் தானிருக்கும் உடலை தானே வெறுத்து வாழ்வதை ஒரு நிமிடம் எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். சாலையில் போகும்போது திருநங்கைகளை வெறுப்புடன் பார்க்கும் நாம் இது பற்றி ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இன்னொன்று திருநம்பிகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்கள் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள். இவர்கள் குறித்த விழிப்புணர்ச்சி குறைவு. திருநம்பிகளை பெண் சமபால் விருப்புக் கொண்டவர்கள் (Lesbians) எனத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்களிடம் ஈர்க்கப்படும் பெண்களையே Lesbians என்று சொல்கிறோம். பெண்ணாக இருந்து ஆணாக மாறும் பெண்களே திருநம்பிகள் ஆவர். இந்த திருநம்பிகள் பெண்களிடம் ஈர்ப்புக் கொள்ளும்போது அவர்களை Trans-men என்று அழைக்கலாம். பெண் வளர்கையில் அவளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கே குடும்பத்தினர் முன்னுரிமை கொடுப்பர். அக்குழந்தை என்னவாக விரும்புகிறது என்பதைக் காட்டிலும் திருமணம் செய்து கொடுப்பதே சமூகச் சுழற்சியாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் உடலை வெறுத்து வாழ வேண்டும். வீட்டினரின் விருப்பத்தையும் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துவது மாதிரியான அழுத்தங்களை எதிகொள்ள வேண்டும். இப்படியாக அவர்களது சிரமங்கள் இருக்கின்றன. அவர்கள் வெளியேறினாலும் சமூகம் அவர்களை எவ்வளவு ஏற்றுக் கொள்கிறது ? பாலியல் வன்முறை எல்லா இடங்களிலும் இருக்கிறது. திருநங்கைகள், திருநம்பிகள் என எல்லா வகை மூன்றாம் பாலினத்தவரும் சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்களாக, பந்தாடப்படுபவர்களாக, விளையாட்டுப்பொருளாகப் பார்க்கப்படுபவர்களாக இருக்கும் நிலை இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். ஒரு நிமிடம் உங்கள் உடலை வெறுத்து வாழ்ந்து பாருங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அவர்களை சமூகம் எப்படி வன்கலவி செய்கிறது என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

முன்பெல்லாம் இவர்கள் தங்களின் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேச முடியாமல் தற்கொலை செய்திருக்கின்றார்கள். சில ஆசிய ஆபிரிக்க நாட்டுச் சமூகத்தினால் இவர்கள் ஏற்றுக் கொள்ளப்படாததாலும் சில நாடுகளின் சட்டம் மற்றும் மதக்கோட்பாடுகள் இவர்களை ஏற்றுக் கொள்ளாததாலும் இவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோரிவருகின்றனர். இவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இவர்களையும் சக மனிதர்களாக ஏற்று வாழ அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும். இவர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து சுயகௌரவத்துடனும் தன்மானத்துடனும் வாழக்கூடிய சமத்துவமானதொரு சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.

உசாத்துணைகள்:

Real Talk About LGBTQIAP

பவானி தம்பிராஜா -ஹொலண்ட்

பவானி தம்பிராஜா

 

(Visited 281 times, 1 visits today)