‘இரத்தத்தின் கதை’-கதை 10 – “கண்ணீரோடு விதைப்பவர்கள் கம்பீரத்தோடு அறுப்பார்கள்”-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

பரந்த நிழல் பரத்தி நின்ற வாகைமரத்தின்கீழ் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தரப்பாள் கொட்டில் சங்கக்கடையாக மாறியிருந்தது. நாட்டின் தென்பகுதியில் இருந்து கப்பலில்வரும் உணவுப் பொருள்களை சிறுபடகுகளில் இறக்கி, கரைக்குக் கொண்டுவந்து, பின் அவற்றை கரையிலிருந்து உழவு இயந்திரத்தின் பெட்டிகளில் ஏற்றி, கப்பல்றோட் வழியாக மாத்தளன் சந்திக்கு நகர்த்தி, அங்குள்ள தற்காலிக சங்கக்கடையில் களஞ்சியப்படுத்தியிருந்தார்கள் அரச அதிகாரிகள்.

மாத்தளன் சந்தியில் இருந்து வலைஞன்மடம் செல்லும்பாதையில் சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்தது அந்தச் சங்கக்கடை. பனிப்புகார் நீங்கி, சூரிய ஒளி மென்சூடாக நிலமெங்கும் பரவத் தொடங்கியபோது, நேரம் ஏழு மணியைக் கடந்து கொண்டிருந்தது. இன்றைக்கு முதல் தினமே பிற்பகல் பொழுதில் பொதுமக்களின் வாய்வழியூடாகப் பரவிய தகவலையடுத்து, பலரும் நேரத்தோடு, சங்கக்கடைக்கு முன்பாக வந்து சேர்ந்து விட்டார்கள். வந்தவர்கள், தாம் கொண்டு வந்த சிறு வெறும் உரப்பைகளை வரிசையில் ஆள் அடையாளமாக வைத்துவிட்டு, வாகைமரத்தின் கீழ் வந்தமர்ந்தார்கள். வாகைமரத்தடி பேச்சொலிகளால் நிறைய ஆரம்பித்தது.

சமகால அரசியல், இயக்கத்தின் ‘பிள்ளை பிடிப்பு’ விவகாரம், போர்க்களத்தில் புலிகளுக்கு ஏற்பட்டும் பின்னடைவு, புலம்பெயர் தேசமொன்றிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் ‘வணங்காமண்’ கப்பல் வருமென்ற எதிர்பார்ப்பு, என்று அங்கு நிற்பவர்களது உரையாடல்கள் பல விடயங்களைத் தாங்கி வெளிக்கொண்டிருந்தன. அமெரிக்க அதிபர் ஒபாமா புலிகளுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை… போன்ற விடயங்கள் அவரவர் அறிவுக்கும் பார்வைக்கும் அனுபவத்துக்கும் எட்டிய வகையில், அலசப்பட்டுக் கொண்டிருந்தன.

நிவாரண வரிசையில் எனது உரப்பைப் பொதியை அடையாளமாக வைத்துவிட்டு, வாகைமரத்தடிக்கு வருகிறேன். மரத்தடியில் நிற்பவர்களது உரையாடல்கள்… எனக்குள் ஈர்ப்புக் கொள்கின்றன. சிலரது கருத்துக்களில் அதிமேதாவித்தனம் வெளிப்படுகிறது. நடந்தது… நடக்கப்போவது… குறித்தும் ‘ தீர்க்க தரிசனங்கள்’ உரைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

எனக்குச் சிரிப்பு வருகிறது. மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன். வேறு சிலரது உரையாடல்களில் அவநம்பிக்கை வெளிப்படுகிறது. அவை நம்பிக்கெட்ட உணர்வின் வெளிப்பாடு என்பது எனக்குப் புரியாததொன்றல்ல. தந்தை செல்வநாயகத்தின் அகிம்சைப்போராட்டமும் பிரபாகரனது ஆயுதப்போராட்டமும் முடிவில் மக்களுக்கு நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்திவிட்டு நின்றன. இந்த நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடுகளாக மண்வாரித் தூற்றல்கள், அறம் சார்ந்த சாபங்கள், என்பன ஆங்காங்கே கடற்கரையில் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

திடீரென வானத்தில் கிபிர் விமானத்தின் பிரசன்னம் நிகழ்கிறது. வாகைமர உரையாடல்கள் பலவும் மெளனம் கொள்கின்றன. அப்படியிருந்தும், அங்கிருந்த ஒரு வயோதிபமாதுவிடமிருந்து மனத்தகிப்பாக வார்த்தைகள் வெளிவருகின்றன.

“அழிவான்… முறிவான் இந்தக் காலங்காத்தாலை வந்திட்டான் நரபலி எடுக்கிறதுக்கு. கோதாரியில போன எங்கடயள் நேரத்துக்கு வந்து, இந்தச் சாமான் சக்கட்டுகளைத் தருகுதுகள் இல்லையே…!”

கிபிர் விமானம் வானத்தில் வட்டமடித்துவிட்டு, அப்பால் சென்று மறைந்ததும், மக்கள் மீண்டும் வாகை மரத்தின்கீழ் வந்தமர்ந்து கொண்டார்கள். நானும் மரத்தின் அருகில் அமர்ந்து கொள்கிறேன்.

திரும்பவும் கிபிர்விமானத்தின் மெலிதான மிகையொலி கேட்கிறது. வாகை மரத்தடி மீண்டும் சலசலப்புக்குள்ளாகிறது. எல்லோர் முகங்களிலும் சிறு பதற்ற உணர்வு தெரிகிறது. கடை வாசலுக்கு முன்பாக அரிசிமூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. இது விமானமோட்டிக்கு தவறான காட்சியாகப் புலப்பட்டுவிடுமென அங்கு நின்ற பலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர். நான் இருந்த இடத்தைவிட்டு எழும்பவில்லை. கண்கள் வானத்தைத் துழாவியபடி இருந்தன.

“இண்டைக்கு கூப்பன் சாமான்களை வாங்க விட மாட்டான் போல கிடக்குது…”,

என்று எனக்கு மிக அருகில் இருந்து ஒரு குரல் வருகிறது. நான் திரும்பிப் பார்க்கிறேன். ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர், வானத்தை அண்ணாந்து பார்த்தபடி கூறுகிறார். சற்று கட்டையான மெலிந்த உடலமைப்பு. நரைத்த தலைக்கேசம். நீண்ட நாள்களாக சவரம் செய்யப்படாத முகம். மிகவும் பழசாப்போன நாலுமுழ வேட்டியுடன், தோளில் ஒரு துவாயுடன் காணப்பட்டார்.

தற்செயலாக தன்முகத்தை என்பக்கம் திருப்பியவர், நான் அவரைப் பார்ப்பது கண்டு, மென்மையாகப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு, திரும்பும் வானத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

“பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போனமாதிரி… சும்மா வந்து பயப்புடுத்திப் போட்டுப் போறான்…” அவர் கூறிக்கொண்டே என்னைப் பார்க்கிறார். நான் அதற்குப் பதிலாக மீண்டும் ஒரு புன்னகையை உதிர்க்கிறேன்.

“தம்பி எவடமடியப்பு… ?” அவர் கேட்கிறார்.

“புதுக்குடியிருப்பு…”

“அப்ப உதில பக்கத்திலதான்…”

“ஓமோம்…”

“ம்…”

நேரம் எட்டு மணிக்கு மேலாகியிருக்க வேண்டும். அந்த இடத்தில் எவரிடமும் கைக்கடிகாரம் இருக்கவில்லை. சங்க முகாமையாளர், கிராம அலுவலர் மற்றும் கடைப்பணியாளர்கள் என்போர் இன்னமும் வந்து சேரவில்லை. வாகைமரத்துக்கு அப்பாலும் சிறுநிழல் பரத்தி நின்ற பூவரசமரங்களின் கீழ் மக்கள் குழுமியிருந்து சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் நேரம் நகர்வது சிரமமாக இருந்தது. அருகில் இருந்த அந்தப் பெரியவருடன் உரையாட ஆரம்பித்தேன்.

“அப்பு நீங்கள் எவடம்… ?”

அப்பு என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுக் கூறத்தொடங்கினார்.

“என்ரை பேர் சூசையப்பு தம்பி. நான் யாழ்ப்பாணம் வலிகாம இடப்பெயர்வோடை இஞ்சாலை வன்னிக்கு வந்தனான். மல்லாவிப்பக்கம் மகளோடை இருந்து, அங்கினேக்கை மருமோனோடை கூலிவேலைக்குப் போறனான். இப்ப சொந்த ஊருமில்லை. வந்த ஊருமில்லை. இரண்டுங்கெட்ட ஊரில இருக்கிறன்.”

நான் மெளனமாக அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“எட தம்பி… நாங்கள் பழையபடி எங்கட இடங்களுக்குப் போவமே மோனை… ?”

எனக்கு அப்புவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவரைப்போன்று இந்தக்கடற்கரையில் இருக்கின்ற, இடம்பெயர்ந்து வந்திருக்கின்ற அத்தனை மக்களுடைய மனங்களிலும் ஊறிக்கிடந்து… உபத்திரவப்படுத்துகின்ற கேள்வியல்லவா இது. இராணுவ முகாம்களில் இருந்து, மக்கள் குடியிருப்பை நோக்கி பாரிய தாக்குதல்களோடு புறப்படுகிற இராணுவத்தை விரட்டியடித்து, அதே முகாம்களுக்குள் முடக்கி வைத்து, பசி பட்டினி போட்ட இயக்கம்மீது இந்த மக்கள் வைத்த நம்பிக்கை அனைத்தும் இன்று பொய்யாகி, புனைவாகிப் போய்நிற்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏன் இப்படி ஏற்பட்டது? என்னால் விடை பகிர முடியவில்லை. ஆயினும், அப்புவின் கேள்விக்குப் பதில் கூறியே ஆகவேண்டும்… என்ற எண்ணத்தில், அக்கணம் என்மனதில் பட்டதை அப்படியே அவரிடம் கூறினேன்.

“திரும்பவும் போவம் என்கிற நம்பிக்கையில்தானே வந்திருக்கிறம் அப்பு. எப்படியும் போய்த்தானே ஆக வேண்டும்…?”

எனது பதிலைக்கேட்டு அப்பு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார். சிரித்தவர், அடுத்ததாக ஒரு கேள்வியொன்றை என்முன் உரைத்தார்.

“நீ பைபிள் படிச்சிருக்கிறியா பொடியா… ?”

எனக்கு அவரது கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. திரும்பி வீட்டை போறதுக்கும், பைபிள் படிப்புக்கும் என்ன சம்பந்தம்…? என்பது குறித்து எனக்குக் குழப்பமாக இருந்தது. இருப்பினும், அப்புவின் கேள்விக்குப் பதிலளித்தேன்.

“இல்லையப்பு ! நான் பைபிள் படிக்கேல்லை. நான் இந்து…”

எனது பதிலைக்கேட்டு, முறுவலித்தவர், மேற்கொண்டு கூற ஆரம்பித்தார்.

“தம்பி ! இனி நாங்கள் எங்கட வீடுகளுக்குப் போறதற்கான சாத்தியம் இல்லை. நிலைமை இதைவிட மோசமாகப் போகப்போகுது…”

நான் திகைத்துப் போனேன். இவர் எந்த அடிப்படையில் இப்படிக் கூறுகிறார். சற்றுமுன் கூறிய பைபிள் படிப்புக்கும்  தற்போது கூறிய வார்த்தைகளுக்கும் ஏதாவது தொடர்பாடல் உண்டா…? என என்மனம் குழப்பத்தினுள் தவித்தது.

“ஏனப்பு இப்படிச் சொல்லுறியள்… ? அப்பிடியெண்டால்…”

“சொல்லுறன் கேள். தற்கால உலக நடப்புகள் குறித்து பைபிளிலை ஏற்கனவே சில இடங்களில சொல்லப்பட்டிருக்கு. அதில சில சத்திய வசனங்கள் இப்ப எங்களுக்கு நல்லாப் பொருந்திப்போகுது கண்டியோ…”

“என்னப்பு சொல்லுறியள் ? எனக்கொண்டும் விளங்குதில்லை…”

“தம்பி…” எனத் தொடர்ந்தவர், ஒருகணம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, கூறத் தொடங்கினார்.

“பைபிள்ளை பழைய ஏற்பாட்டில ஒரு வசனம் இருக்குது.

“ஆண்டவர் கட்டளையிடாதிருக்க காரியம் சம்பவிக்கும் என்று சொல்கிறவன் யார் (புலம்பல் – 3 : 37)  முன்னம் நடந்தது, இப்ப நடக்கிறது, இனி நடக்கப்போறது, எல்லாமே அவன் (ஆண்டவர்) கட்டளையிட்டுத்தான் நடக்கிறது. நடக்கிற விளைவுகளானது அவனவன் செய்த நன்மை தீமைகளைப் பொறுத்தே நியாயத்தீர்ப்பாக அமைகிறது. இந்தத் தீர்ப்புகளை மனிசன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் அகிம்சைப் போராட்டத்திலிருந்து, பிரபாகரன்ர ஆயுதப்போராட்டம்வரை எல்லாமே தோத்துப்போய், சனங்களும் இப்ப அகதியளா வந்திருக்குதுகளெண்டால், இந்தச் சனங்களை மேய்ச்சு வழிநடத்தினவையள் சரியில்லையெண்டதுதான் அர்த்தம். இதுக்கு உதாரணமா ஒண்டைச் சொல்லலாம். பழைய ஏற்பாட்டில தாவீதுராஜா எண்டொரு அரசன் கடவுளுக்கு உண்மையாக இருந்தவன். அவன் ஒரு தடவை தவறிழைக்கும்போது, கடவுள் அவனது மக்களைத் தண்டிக்கிறார். அதை உணர்ந்த அரசன்,

“தவறு செய்தது நான். அதுக்காக ஏன் எனது ஜனங்களைத் தண்டிக்கிறீர்?” எனக் கேட்கிறான். எங்களுக்கு தன் தவறுகளை ஒப்புக்கொள்ளுகிற தாவீதுராஜா மாதிரி அரசனுகள் வந்து வாய்க்கேல்லை. அதுதான் இவ்வளவு வலி எங்களுக்கு. அதோடை, தனிமனித வழிபாடு எவ்வளவு ஆபத்தானது எண்டதை பழைய ஏற்பாட்டில ‘தானியேல்’ எண்ட சுவிஷேசம் வெளிப்படுத்துது. பிரபாகரன் ஒரு போர் வீரனாக இருக்கலாம். ஆனால், உயிரோடை இருக்கிற அந்தாளை கடவுளுக்குச் சமனாக வைச்சுப் பார்க்கறதில எனக்கு உடன்பாடில்லை.

“இன்னுமொண்டைச் சொல்லுறன் கேள்…

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் (மத்தேயு – 7 :12)”

இது இயேசு சொன்ன சத்திய வசனம்! நாங்கள் மன்னாரிலயிருந்தும் மாவிலாறிலயிருந்தும் ஊரூரா இடம்பெயர்ந்து இப்ப கடற்கரையில தஞ்சமடைஞ்சிருக்கிறமெண்டால், இது ஏதோ முற்பழி எண்டதை உணர வேணும். யாழ்ப்பாணத்தில இருந்து முஸ்லிம் சனங்களை வெளியேற்றேக்கை அதுகளின்ர மனம் எந்தளவுக்கு பதகளிப்பட்டு வலிச்சுதோ தவிச்சுதோ அந்தளவுக்கு நாங்களும் இப்ப இந்தக் கடற்கரைக்குக் கிட்ட இருந்து கொண்டு வலியளைச் சுமக்கிறம். தவிச்சுக் கொண்டிருக்கிறம். இந்த வலிப்பையும் தவிப்பையும் நாங்கள் வலிகாம இடப்பெயர்வில உணர்ந்திருக்க வேணும். வலிகாம இடப்பெயர்வு முஸ்லிம் சனத்தை வெளியேற்றின முற்பழி எண்டதை இன்னமும் ஒருதரும் உணருகினமில்லை.

“அதோடை இன்னுமொரு விசயம்… ஆரெண்டாலும் எவையெண்டாலும் என்னதான் பிரச்சினையெண்டாலும், அதை வாயால பேசித் தீர்க்கப் பார்க்க வேணும். அல்லது காலத்தின்ர நியாயத்தீர்ப்புக்கு விட்டிட்டு இருந்திட வேணும். அதை விடுத்து, “நானே எல்லாம்…” எண்டு வெளிக்கிடுகிறது மெத்தப்பிழை கண்டியோ! இப்படி வெளிக்கிடுகிற ஆக்களுக்கு அறிவு சீராக வேலை செய்யாது. அது ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கும். கடைசில விழுந்து கிடக்கேக்கைதான் ‘சுடலைஞானம்’ வேலை செய்யத் தொடங்கும். இதைத்தான்,

“அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மேட்டிமை ( நீதிமொழிகள் – 16 :18)” எண்ட வசனம் சொல்லுது. இயக்கத்துக்கு ஆயுதபலம் இருக்கெண்ட அகந்தையும், எங்களுக்கு இயக்கம் இருக்கெண்ட மேட்டிமையும்தான் இண்டைக்கு இப்படி விழுந்துபோய் கிடக்கிறம்.

“ஒரு உயிர் உருவாகிறது இன்னொரு உயிரின் மூலம். இதை அழிக்கிறதுக்கு மனிசனாய் பிறந்த எவனுக்கும் உரிமை கிடையாதடா தம்பி. “உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக

(மத்தேயு – 19 : 19)” எண்ட வசனத்தை மறந்து, நாங்கள் எத்தனை பேரைத் துரோகியள் எண்டும், காட்டிக் கொடுத்தவையள் எண்டும் ‘போட்டுத் தள்ளி’யிருக்கிறம். இப்பிடிப் போட்டுத் தள்ளேக்கை, செத்துப்போறவனின் குடும்பம் எவ்வளவு மனவேதனை, எவ்வளவு மனக்கவலை, எவ்வளவு கண்ணீப்பெருக்கென எத்தனையை அனுபவிச்சிருக்கும்? தீண்டத்தகாதவர்கள், வேண்டத்தகாதவர்கள், எங்கட வழிக்கு வராதவர்கள், எங்கட கொள்கைக்கு மாறானவர்கள் எண்டு எத்தனையோ பேரைத் தீர்த்துக்கட்டேக்கை, அவையளின்ரை பெண்டில், பிள்ளையள் விட்ட கண்ணீரும் பெருமூச்சும்தான் எங்களை இண்டைக்கு இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கு. உண்மையில அவையளின்ர கண்ணீர் பெறுமதிமிக்கது. இதைத்தான்,

“கண்ணீரோடு விதைப்பவர்கள் கம்பீரத்தோடு அறுப்பார்கள்

(சங்கீதம் – 126 : 5)” எண்டு வேதவசனமும் சொல்லுது.

“மனிசன் எதை விதைக்கிறானோ அதை அறுப்பான் (எபேசியர் – 6 : 9)” எண்டு வேதம் சொல்லுறமாதிரி, இயக்கத்தின்ர உந்தப் பிள்ளைபிடிப்பு, தமிழ்நாட்டுக்கு தப்பிப்போற ஆக்களின்ர வள்ளங்களைச் சுடுகிறது, ஆமியிட்டை சரணடையப் போறவையைப் பிடிச்சு சித்திரவதை செய்யிறது, இதெல்லாம் கடற்கரைக் காத்தோடை அள்ளுப்பட்டுப் போகிடுமெண்டே நினைக்கிறாய் ? அறத்துக்கு மாறான, மனிதத்துக்கு விரோதமான இந்த வேலையளுக்கு, அவையவை அதற்குரிய பலனை அனுபவிச்சுப்போட்டுத்தான், இஞ்சையிருந்து வெளியேறுவினம். ஏனெண்டால், நான் முன்னம் சொன்னமாதிரி அவையள் எதை விதைக்கினமோ அதை அறுவடை செய்யாமல் இஞ்சையிருந்து வெளிக்கிடப்போறதில்லை.

“இதையும் ஒருக்காக் கேளடா பொடியா !

“மனிசன் தனக்கு எது பாதுகாப்பெண்டு நினைக்கிறானோ அதுவே அவனுக்குக் கடைசியில எமனாகிப் போயிடும். பாம்பாட்டிக்கு பாம்பு மாதிரி, பாகனுக்கு யானை மாதிரி, இடுப்பில ஆரெவன்  ‘பிஸ்டல்’ கொண்டு திரியுறானோ, அதேமாதிரிப் பிஸ்டலால்தான் அவனும் கொல்லப்படுவான். இதைத்தான் இயேசுவும் “பட்டயத்தை (ஆயுதம்) எடுக்கிற யாவரும் பட்டயத்தாலே மடிந்து போவார்கள் (மத்தேயு – 26 : 52)” எண்டு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.”

“நிலைமை வரவர மோசமாகுது. மன்னாரில இருந்த ஆமி இப்ப பரந்தனுக்கு வந்து, முல்லைத்தீவுக்கு வாற றோட்டில நிக்கிறானாம். அந்தநேரம் அன்ராசபுரம்(அனுராதபுரம்) ஏயாப்போட்டுக்குள்ளை புகுந்து விளையாடிய ஆக்களுக்கு, ஏன் இப்ப ஆமியளைத் தடுத்து நிறுத்தேலாமல் கிடக்குது தெரியுமே! இது அவனவன் செய்த அக்கிரமங்கள், அநியாயங்கள் எல்லாம் ஒண்டு சேர்ந்து, நியாயம் தீர்க்க வெளிக்கிட்டிருக்குது.

“அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது (॥ தெசலோனிக்கேயர் – 2 : 7)” எண்டது பொய்யில்லைக் கண்டியோ ! நான் சொல்லுறதெல்லாம் பொய்யெண்டு நீ நினைச்சால், இருந்து பார்… ஒருநாளைக்கு எல்லாரும் ஒருடத்தில இருந்து கொண்டு ” மாயை மாயை இதெல்லாம் மாயை ( பிரசங்கி 1 : 2)” எண்டு புலம்பிக்கொண்டு திரியாட்டி!”

அப்பு சொல்லச்சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓர் ஆகம நூலில் உள்ள சத்திய வசனங்களுக்கு சமகால நிகழ்வுகள் எவ்வளவு தூரம் பொருந்திப்போகின்றன  என்பதை நினைக்கும்போது, எனக்கு மேலும் வியப்பாக இருந்தது. அப்பு ஒரு மதபோதகர் அல்ல. ஒரு சாதாரண தினக்கூலி! வாழ்க்கையின் பெரும் பாகத்தைக் கழித்துவிட்டு நிற்பவர். படிப்பு வாசனையற்ற ஒரு தினக்கூலிக்குத் தெரிந்த விடயங்கள், ஏன் இதுவரை தம்மைப் புத்திஜீவிகளாகக் காட்டிக்கொண்டிருப்போருக்குத் தெரியவரவில்லை… என்பதைக் குறித்து நான் யோசித்தேன்.

அப்புவின் இருபேரப்பிள்ளைகள் மாவீரர்கள்! அதிலும் ஒருவர் கடற்கரும்புலி! என்பதை இடையே அவரது பேச்சிலிருந்து அறிய முடிந்தது. மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே அதன் அமைப்புக்குறித்து எந்தளவுக்கு தன்னுள் எண்ணங்களைத் தேக்கிவைத்திருக்கின்றார் என்பதை நினைக்கும்போது, ”மாயை… மாயை… எல்லாம் மாயை…(பிரசங்கி – 1 : 2)” என்றுதான்இறுதியில் எல்லோரும் கூறவேண்டி வரப்போகுதோ….?

அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 210 times, 1 visits today)