‘இரத்தத்தின் கதை’-கதை 11 – “வலைஞன்மடத்து அவலம்”-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன்

அலெக்ஸ் பரந்தாமன்ஒரு வாரமாக அவனுக்கு உடல்நிலை பலவீனமாக இருந்தது. இன்று அது மேலும் உயர்வடைந்திருந்தது. சாதாரண காய்ச்சல் என்றுதான் நினைத்திருந்தான். இப்போது அக்காய்ச்சல் படுத்த படுக்கையாக்கி விட்டிருந்தது அவனை.

முதல்நாள் இரவு நிறைவான தூக்கமில்லை அவனுக்கு. தரப்பாள் வெக்கையும், உடற்புழுக்கமும் அவனை நித்திரை கொள்ள விடவில்லை. அவனது உடல்நிலையறிந்து, அவன் மனைவி அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். பழைய கடதாசிமட்டை ஒன்றினால் காற்றுப் படும்படியாக விசுக்கிக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தொடர்ந்து விசுக்கிக் கொண்டிருந்ததில், கை வலியெடுக்க, மறுகையால்  மாறிமாறி விசுக்கிக் கொண்டிருந்தாள்.

“வேண்டாம் விடு… காணும்…”  அவன் அவளைத் தடுத்தான்.

“இல்லை… விடுங்கோ நான் விசுக்கிறன்…”

“கையல்லோ உளையப்போகுது…”

அவள் எதுவும் கூறவில்லை. விசுக்கிக் கொண்டிருந்தாள். வெப்பமாய் கொதிக்கும் உடல்மீது, அவள் மட்டையால் விசுக்கும்போது, வந்து பட்டுச்செல்லும் அந்த மென்மையான சிறுகாற்று… அவனுக்குச் சற்று சுகத்தைக் கொடுத்தது. ஆயினும், அவனுக்கு மனம் கேட்கவில்லை. அவளது கரத்தைப் பிடித்துத் தடுத்தான்.

“பேசாமல் படுங்கோ… உந்தக்காய்ச்சலுக்கு, நல்லா நித்திரை கொண்டால்தான், எப்பனெண்டாலும் சுகம் வரும்…”

என்று அவள் கூறியபடி, அவனுக்கு விசுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், விடியும் வரைக்கும் அவனையும் அவளையும் புறச்சூழ்நிலைகள் நித்திரை கொள்ளவிடவில்லை.

வலைஞன்மடத்திலிருந்து வடமேற்குப் பக்கமாக சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படபடவென ஒலிக்கும் துப்பாக்கி வெடியோசைகள் சமரின் உச்சத்தை வெளிப்படுத்தியவண்ணம் இருந்தன. பக்கத்ததுத் தரப்பாள் கொட்டில் இருக்கும் அந்த வயோதிபப்பெண் மூன்று நாள்களுக்கு முன்பு ஷெல் வீச்சில் பலியாகிப்போன தனது மகனை நினைத்து இப்பவும் அழுது கொண்டிருந்தாள். தன்மகன் இறந்ததை அவள் இன்னமும் நம்பமுடியாதவளாக, தாங்கமுடியாதவளாக இரவில் பெருங்குரலெடுத்து, மகனை அழைத்த வண்ணம் இருந்தாள். அவளது அழுகையும் பிலாக்கண ஒலியும் அவனை நிம்மதியாக நித்திரைகொள்ள விடவில்லை. இதுதவிர, முன்பக்கத்து கொட்டிலில் படுத்திருந்த ஒரு பத்துவயதுச்சிறுவன், நள்ளிரா வேளையில் விழித்தெழுந்து, பசிக்குதென அடம்பிடித்தழுதது அவன் மனதை வெகுவாகப் பாதித்து விட்டது. பசியும் அழுகையும் சேர்ந்த அவல ஓலம் அவனருகில் நிகழ்ந்து கொண்டிருந்ததில்,  நித்திரை அனைவிட்டு வெகுதூரம் விலகியிருந்தது.

“இந்தாங்கோ மல்லித்தண்ணி.”

அவன் கண் விழித்துப் பார்க்கிறான். தன்மனைவி கையில் ஒரு சிறுகோப்பையுடன் தன்னருகில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

“என்ன நித்திரையா ?”

“இல்லை சும்மா கண்ணை மூடிக்கொண்டு இருந்தனான்”

அவள், அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். காய்ச்சல்சூடு சற்று தணிந்திருப்பது தெரிந்தது.

“காய்ச்சல் கொஞ்சம் விட்டிட்டுது. இப்பிடியே படுத்திருங்கோ. வெளியில வரவேண்டாம். சரியான வெய்யில்”.

“எங்கால மல்லி ?”

“உங்களுக்குக் காய்ச்சல் எண்டு கேள்விப் பட்டு, முன்பக்கத்துக் கொட்டில்ல இருக்கிற ஆச்சி கொஞ்சம் தந்தவ. அவிச்சுக் குடுக்கச் சொன்னவ”.

அவன் எதுவும் பேசவில்லை. அந்த ஆச்சியை மனதுக்குள் நினைந்துருகி, நன்றி சொல்லிக் கொண்டான்.

“இஞ்சரப்பா… வாங்கோவன் ஒருக்கா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போறன்.”

மனைவி கூறியதைக் கேட்டு, அவன் அந்த நோய்வலியிலும் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

“ஏன் சிரிக்கிறியள் ?”

“பின்னை என்ன… உங்கை காயப்பட்டு, சாகப்போற ஆக்களுக்கே மருந்தில்லையாம். காய்ச்சலுக்கா மருந்து வைச்சிருக்கப் போறாங்கள்? ஆஸ்பத்திரிக்குப் போறதைவிட, இதிலை கிடந்து செத்திடலாம்”.

அவள், அவனைக் கவலையுடன் பார்த்தாள். அப்படியே அவனது படுக்கையில் அவனுக்கருகில் ஒருபக்கமாகப் படுத்துக் கொண்டாள். அருகே கடலலைகளின் மெலிதான ஓசை. காற்றின் இசைவோடு ஆடியாடிவந்து கரையைத்தொட்டு அடங்குகின்றன. அவள் மனதிலுள்ளும் கடந்தகால நினைவுகள் அலையென ஆடத்தொடங்குகின்றன.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய கச்சான் தோட்டத்தில் அறுவடைக்காக சகபெண்களுடன் அவள் சென்றபோதுதான், அவனைப் பார்த்தாள். நிரையாக குனிந்த தலைநிமிராது, ஒவ்வொருவரும் கச்சான் செடிகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் ஒரு கதைப்பிரியன்! வேலை நேரத்தில் கதையினூடு, வேலையை நகர்த்திச் செல்வதில் கெட்டிக்காரன். நகைச்சுவை, அரசியல், சினிமா என்று பலவிடயங்களைப் பேசிக்கொண்டிருப்பான். அன்றும் வைகைப்புயல் வடிவேலுவைப்பற்றிக் கூற, கூட நின்ற பெண்கள் கெக்கலித்துச் சிரித்துக் கொண்டார்கள்.

அன்றைய நாளின்பின்பு அவளுக்கு அவன்மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. ஊருக்குள் தினக்கூலிகளாக வேலைக்குப் போகுமிடங்களில் பலதடவை இருவரும் ஒன்றாகச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலில் இருவருக்குமிடையே பேசுவதற்கான தயக்கம்  மெல்லென விலகி,நாளடைவில் நீண்ட உரையாடல்களாகமாறி,

அந்த உரையாடல்கள்மூலம் இருவரது மனமும் நெருக்கமாகி,அது காதலாக முகிழ்ந்தபோது அவனது பெற்றோர் கொதித்தெழுந்து கொண்டனர்.

“அதுகள் என்ன ஆக்களோ ? என்ன கோதாரியோ தெரியாது. கண்ட நிண்ட இடங்களிலைபோய் தலையைக் குடுக்காமல் பேசாமல் இரு. உனக்கு ஆகவேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்ளுவம்.”

சாதித்தடிப்பிலூறிய தன் பெற்றோர்களின் வார்த்தையைக்கேட்டு, மனதுக்குள் சிரித்த அவன், ஒருநாள் மாலைப்பொழுது மங்கும்வேளையில், அவளை அழைத்துக்கொண்டு, அடுத்த ஊருக்குச் சென்று விட்டான். அதற்குப்பின், அவனுக்கும் பெற்றோருக்குமான உறவு, பாசம் எல்லாமே வேரற்ற மரம்போலாகி விட்டன.

“எளியநாய்… எக்கேடுகெட்டுப்போகட்டும்…” என்ற சபித்தலோடு, அவனது பெற்றோர் அவனைக் கைகழுவி விட்டனர்.

அவனைப்போலவே அவனது மாமனும் ஒரு தினக்கூலியாகவே இருந்தார். கூலிக்கு ஆட்கள் தேவைப்படும்போது, இருவரும் ஒன்றாகவே சென்று வந்தார்கள். போர்ச்சூழல் காரணமாக அவரவர்கள் தங்கள் வாழ்மனைகளை விட்டு நகர்ந்தார்கள்.  அவனது குடும்பமும் ஒவ்வோர் இடமாக அலைக்கழிந்து, இறுதியில் உடையார்கட்டு – சுதந்திரபுரம் பகுதிக்கு வந்த சிலநாள்களின் பின்புதான் அந்த அறிவிப்பைக் கேட்க முடிந்தது.

சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், புலிகளிடமிருந்து மக்களை இனம் காண்பதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் அங்கு எல்லோரும் சென்று குடியிருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க, பலரும் அங்கு சென்று குடியமர்ந்து கொண்டார்கள். நம்பிக்கெட்ட அரசியல்வாழ்வின் அனுபவங்களைபெற்றுக் கொண்ட மூத்த வயதுடையோர்கூட,  அந்த அறிவித்தலுக்குப் பின்னாலிலுள்ள இனவாத சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

எல்லாமே சிலநாள்கள்தான். எந்த இடத்தைச் சிங்கள அரசு பாதுகாப்பு வலயமாக அறிவித்துதோ, அந்த இடத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்மீதும் தமது இராணுவத்தைக் கொண்டு, சரமாரியான ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனுள் பலியாகிப் போனவர்களில் அவனது மாமன் குடும்பமும் ஒன்று. அவனது மனைவியைத்தவிர, குடும்பத்தில் வேறு எவருமே உயிரோடு மீளவில்லை.

சிதைந்துபோன உடல்களை அடக்கம் செய்ய முடியாத பதகளிப்பில், கையில் அகப்பட்ட பொருள்களை அவன் அள்ளி எடுத்துக்கொண்டான். கத்திக் குளறிக்கொண்டிருந்த அவளையும் பலவந்தமாக இழுத்துக்கொண்டு, அடுத்த ஷெல்கள் எங்கு விழுந்து வெடிக்கும் என்பது தெரியாத நிலையில், குறுக்குவழிகளூடாக மாத்தளன் கடற்கரைப்பகுதிக்கு வந்தான். அங்கு இருப்பதற்கு இடமில்லையெனத் தெரிந்ததும், அம்பலவன்பொக்கணைக்கு அருகில் உள்ள வலைஞன்மடம் என்ற பகுதிக்கு வந்து அங்கு குடியமர்ந்தான்.

தொழிலற்ற நிலையாயினும், கையிருப்பில் ஓரளவு பணம் இருந்தது அவனுக்கு  நிம்மதியைக் கொடுத்தது. அதுதவிர, மனைவியின் நகைகளும் பத்திரமாக  இருந்தன. ‘எப்படியும் பிரச்சினை தீரும். இயக்கம் ஆமியளை அடிச்சுக் கலைக்கும், வீட்டுக்குப் போகலாம். பழைய வாழ்க்கையைத் தொடங்கலாம்,’ என்ற கற்பனை அவனது மனதுள் ஆழ விரவியிருந்தது.

வலைஞன்மடத்துக்கு அவர்கள் இருவரும் வந்து பலநாள்களாகி விட்டன. பங்குனிமாத வெயில் தனது அகக்குணத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. உள்ளே தரப்பாள் வெக்கை. வெளியே சுடுமணல். ஆங்காங்கே சிறு கண்டல்மரங்கள், தென்னை, பனை மற்றும் பூவரசு மரங்களைத்தவிர குளிர்மையைப் பரப்பும் வேறெந்த மரங்களும் இருக்கவில்லை. வெப்பசுவாத்தியம் அவனது உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இரண்டுநாள்களாக சத்தி எடுத்தவன், மேற்கொண்டு எதுவும் சாப்பிட விருப்பமற்றவனாக மூன்றாம்நாள் படுக்கையில் விழுந்து போனான்.

தூரத்தில் எங்கேயோ கிபிர்விமானத்தின் மிகையொலி கேட்கிறது. அவனுக்குப் பக்கத்தில் படுத்திருந்த அவள், திடுக்கிட்டுக் கொண்டாள். விமானம் மாத்தளன் பகுதிக்கு அப்பால் இரணைப்பாலையை அண்டிய நிலப்பிரதேசத்துக்குமேல்  வட்டமடிப்பது, அதன் சுருதி குறைந்த ஒலியிலிருந்து தெரிந்தது அவளுக்கு.

“இஞ்சரப்பா… ” அவள் அவனது உடலில் லேசாகத் தட்டிக் குரல் கொடுத்தாள். அவன் அசையவில்லை. ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை அவதானித்துக் கொண்டாள். அவனது நித்திரையைக் குழப்ப விரும்பாதவளாக அப்படியே அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள்.

இரணைப்பாலையைச் சுற்றி வட்டமடித்த விமானம், இப்போது மாத்தளன் கடற்கரையூடாக அம்பலவன்பொக்கணை, வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு… பகுதிகளுக்கு மேலாக பாரியதொரு வட்டமடித்துவிட்டு, சடுதியாக அதிவேகத்தில் வலைஞன்மடப்பகுதிக்குள் தாழ்ந்து மேலெழும்பியபோது… அந்தப்பிரதேசம் ஒருகணம் நடுநடுங்கிக் கொண்டது. மறுகணம்… எங்கும் அவலக்குரல்கள் அதிரத் தொடங்கின.

குண்டுவெடிச் சத்தத்தைக்கேட்டு அவன் படுக்கையைவிட்டு எழுந்தான்.

“ஐயோ… படுங்கோ… ” அவள் அலறியபடி அவனின் கையைப் பிடித்திழுத்து, தன்னோடு பக்கத்தில் உறங்க வைத்தாள். காய்ச்சலில் பலவீனப்பட்டிருந்த அவனதுடல், இப்போது மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. அவனது நடுக்கத்தைக்கண்ட அவள், பாயில் கிடந்த பழைய சாரத்தினால் அனைப் போர்த்து மூடிவிட்டு, அவனோடு நெருக்கமாக கைகளை இறுகப் பற்றியபடி படுத்திருந்தாள்.

எங்கும் அழுகையும் அவலமுமாக வலைஞன் மடப்பகுதி காட்சியளித்துக் கொண்டிருந்தது. இடையிடையே கிபிர் விமானங்கள் வரிசையாகவந்து வானத்தில் வட்டமடித்துவிட்டு, தென்பகுதிநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அடக்கத்துக்கு காவமுடியாத சிதைந்த உடல்களை கொட்டில்களுக்குப் பக்கத்தில் உள்ள இடைவெளி இடங்களைத் தெரிந்தெடுத்து, குழிதோண்டி அனைத்தையும் போட்டு மூடினார்கள் அயலவர்கள். சடுதியான இறப்புகளும், சாவுக்கொண்டாட்டங்களுமற்ற பலநிகழ்வுகளை அன்றைய பகல்பொழுது தன்னுள் உள்வாங்கிக்கொண்டு, மறைய ஆரம்பித்தது.

எல்லோரும் அழுதழுது களைத்துப் போயிருந்தார்கள். சற்றுநேரத்துக்கு முன், தமக்கு முன்பாக இருந்தவர்கள் சதைத்துண்டுகளாகி மண்ணுக்குள் மறைந்து போனதை ஏற்கமுடியாதவர்களாய் ஏங்கிக்கொண்டிருக்கையில், இரவு வந்து வெகுநேரமாகி விட்டிருந்தது.

அவள்  திரும்பவும் மல்லித்தண்ணி கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். அவனுக்கு தன்மனைவியை நினைக்கப் பயமாக இருந்தது. வைத்தியசாலையில் எந்தவொரு நோய்க்கும், காயங்களுக்கும் மருந்தில்லாத நிலையில், தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், எந்தவொரு உறவுகளும் உதவிகளுமற்ற நிலையில் இருக்கும் அவளின் நாளைய நிலை…? அதை நினைக்க அவனுக்கு உடல்நிலை மேலும் தளர்வடைய ஆரம்பித்தது.

‘கடவுளே ! சாகிறதெண்டால், ரண்டுபேரும் ஒரே நேரத்தில ஒரே இடத்தில செத்துப்போயிட வேணும்.’ என அவன் மனதுக்குள் வேண்டுதல் செய்து கொண்டிருந்தபோது,  விண்ணதிரக் கூவிக்கொண்டு வந்த ஒரு ஷெல், இருதரப்பாள் கொட்டில்களுக்கிடையில்  விழுந்து வெடித்துச் சிதறியது.

“ஐயோ… ஆமி ஷெல்லடிக்கிறான்…”

முன்பக்கத் தரப்பாள் கொட்டிலுக்குள் இருந்து ஒலிக்கிறது ஒரு குரல். வெடிச்சத்தம் கேட்டதும், ஆங்காங்கே உலாவித் திரிந்தவர்கள் சட்டென நிலத்தில் படுத்து நிலையெடுப்பதும், எழுந்து ஓடுவதுமாக இருந்தார்கள்.

“என்னப்பா… பேந்து ஷெல்லடிக்கிறாங்கள்…”

என்று கூறியபடிஅவள் ஓடிவந்து பாயில் அவனுக்குப் பக்கத்தில் சேர்ந்து கொண்டாள். அவர்களுக்குப் பதுங்கு குழி எதுவும் இருக்கவில்லை. நிலத்தில் படுத்திருப்பதன் மூலம் ஓரளவு பாதுகாப்பு உண்டு என்று நம்பினார்கள்.

இரவிரவாக ஷெல்கள் விழுந்து வெடித்த வண்ணம் இருந்தன. பகல் பொழுதில் கிபிர் தாக்குதலுக்கு முகம் கொடுத்த நிலையில், தற்போது ஷெல் தாக்குதல்களையும் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது இடம்பெயர்ந்த மக்களுக்கு.

“எங்கேயோ ஆமிக்குச் சறுக்கிப் போட்டுது. அதுதான் உந்த அடிஅடிக்கிறான்…” அவன் கூறுகிறான்.

எங்கும் ஒரே கும்மிருட்டு. ஷெல் அதிர்வில் எண்ணெய் விளக்குகளும் அணைந்து விட்டன. மேகவான் வெளிப்பைத் தவிர, வேறு எந்த ஒளியும் அங்கு ஒளிரவில்லை. உயிரைக் காக்கவும் வழி தெரியவில்லை. ஓடித்தப்பவும்  பாதை புரியவில்லை. விழிநீர்த் துளிகளையும், விம்மல் ஒலிகளையும், ஒப்பாரி ஓலங்களையும் சுமந்தபடி கனத்த துயராக இரவு நகர்ந்து கொள்ள, புலரத் தொடங்கியது ஒரு பொழுது.

அவரவர் தங்கள் உறவுகளைத் தேடுவதற்காய் ஷெல் விழுந்த பகுதிகளை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். அப்படி ஓடும்போது இடைவழியில் தெரிந்த ஒரு காட்சியைக் கண்டு, அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள்.

எந்த உறவுகளுமற்று வலைஞன்மடத்துக்கு வந்து, தஞ்சமடைந்த அவனும், அவளும்  தரப்பாள் கொட்டிலோடு, உடல்கள் சிதைந்த நிலையில் அலங்கோலமாகக் கிடந்தார்கள்.

அலெக்ஸ் பரந்தாமன்- இலங்கை

அலெக்ஸ் பரந்தாமன்
அலெக்ஸ் பரந்தாமன்
(Visited 219 times, 1 visits today)