லொறி-சிறுகதை- க.கலாமோகன்

க.கலாமோகன்சில வாரங்களாகவே நான் அவளை எனது வீட்டின் அருகில் உள்ள மதுச்சாலையில் கண்டு வருகின்றேன்.  அங்கு சில வேளைகளில்தான் போயிருந்தாலும் , அவள் மீண்டும் அங்கு போக  என்னைத்  தூண்டினாள். நிச்சயமாக எனக்கு அவள் மீது காதல் தொடங்கியது என நினைக்கவேண்டாம். ஆனால் அவள் என்னைக் கவர்ந்தாள். அவளது முகம் வட்டம். விழிகள் பச்சை. உடல் மிகவும் மெலிவு. நீல டவுசர். அவளின் முன் ஓர் பியர்க் கிளாஸ்…. அவளது அருகிலோ சிரித்தபடியும் ஆடியபடியும்  சிலர்…

நான்  அதிகாலையில்  தொழிலுக்குச் செல்லும் வேளையில் மதுச்சாலை மூடிக் கிடக்கும். ஆழமாக அதன் கதவுகளைப் பார்ப்பேன். அந்தக் கதவுகளில் உள்ள  சித்திரங்கள் எனக்கு மகிழ்வைத் தருவன. ஓர் வயோதிபர் தனது கண்களைச் சிமிட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார். ஓர் இளம்பெண் தொப்பியால் தனது முகத்தை மூடியபடி…. பாரிஸில் நிறைய வீதிச் சித்திரங்கள் இருந்தாலும் மதுச்சாலையினது  கதவுச் சித்திரங்களையே நான் ஒவ்வொரு காலையிலும் பார்த்து ரசிப்பேன். நிச்சயமாக அந்த வேளைகளில் அவளது நினைப்பு எனக்கு வரும்.

நான் அவளை ஒருபோதுமே வெளியால் கண்டதில்லை. அந்த மது விடுதிக்குள்தான்.  அவள் அங்கு போவதையும், அங்கிருந்து வெளியே போவதையும் நான் கண்டதில்லை. விடுதியின் முன்னால் உள்ள பாண் கடையிலிருந்து நான் அவளைப்  பார்க்க முற்படுவேன். நிச்சயமாக அவள் நிழல்போலத் தெரிவாள். பின்பு நான் போய்விடுவேன்.

எனது நண்பர் ஆதாமுக்கு இவள் மீது சொன்னபோது என்னை விசித்திரமாகப் பார்த்தார்.

“உனக்கு அவளில் விருப்பமா ?”

“ஓர் விருப்பமா என்பது எனக்குத் தெரியாது….  ஆனால் என் மனதுக்குள் அவள் நிற்கின்றாள்….  “ என்றபோது ஆதாமின் மனைவி தனது அறையில் இருந்து எம் முன் வந்தாள்.

“உங்களைப் பார்த்துப் பல மாதங்கள்…. தொழில் அதிகமோ?” எனச்  சொன்ன அவளது உதடுகள் காய்ந்து இருந்தன.

“இல்லை, பல மாதங்களாக மருத்துவர் குறிப்பினால் தொழில் செய்யாமல் உள்ளேன்.”

அவளது கண்கள் கலங்கின. அவள் கேட்கப்போகும் கேள்வி எனக்கே தெரிந்ததால் பதிலைச் சொன்னேன்.

“எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் எனது முதலாளிக்கே வருத்தம். நிறைய லாபத்தை அடைந்தாலும் சம்பளத்தைப் பல ஆண்டுகளின் பின்பும் கூட்டாமல் உள்ளார். கம்யூனிசக் கட்சியின் எங்கள் பிரிவின் நண்பன் ஓர் சிவப்பு டாக்டரை அறிமுகப்படுத்தினான். அவரது கிருபையால் நான் 7 மாதங்கள் தொழிலில் இல்லை, ஆனால் சம்பளம் கிடைக்கின்றது.”

“இப்படிப்பட்ட டாக்டர்கள் கிடைப்பதே அரிது. எனது  டாக்டர் ஒரு கிழமையாவது  எனக்கு வருத்தம் இல்லையென்று குறிப்பிடமாட்டார். உங்களுக்கு அதிஷ்டம். ஆனால்  எனக்குத் தொழில் அதிகம். நான்கு பேர் சில காரணங்களால் தொழிலில் இல்லை. அவர்களது தொழிலைச் செய்ய நிறுவனம் எவரையுமே எடுக்கவில்லை….  வேலைக்கு வருவோரே அவர்களது வேலைகளையும் செய்ய வேண்டும். களைப்புடன் வேலைக்குப் போவேன், களைப்புடன்தான்  வேலையில் இருந்து திரும்புவேன்.”

அவளது முகம் எனக்குள் இரக்கத்தைத் தந்தது.

“சரி, எனது டாக்டரது இலக்கத்தை உங்களிடம் தருவேன்.  அவரிடம் சென்றால் , உங்களுக்குப் பல மாதங்கள் ஓய்வு கிடைக்கும். …..” என்றபடி இலக்கத்தைக் கொடுத்தேன்.

“பல மாதங்களின் பின்பு உங்களைச் சந்திப்பது மகிழ்வாக இருக்கின்றது … இப்போதும் வைனா ?”

“இப்போதும்… ? நான் இப்போது நிறையைக் குடிப்பதில்லை….”

“நீங்கள் அதிகம் குடிப்பதில்லை என்பதை நான் அறிவேன்…”

“சில வேளைகளில் ரமணன் அதிகம் குடிப்பதுண்டு” என்றான் ஆதாம்.

ஆதாமின் மனைவியின் பெயர் ஏவாள் அல்லள். பற்றீசியா. அவர்களது வாழ்வு மிகவும் சுகமாகப் போவதை நான் விரும்பினேன்.  இரண்டு  ஆண் பிள்ளைகள், பெரியவர்கள் ஆகி தமது வேறு வீடுகளிலும் வேறு தொழில்களிலும்….

ஆதாம் ஓர் வைன் போத்தலை எடுத்துத் திறக்கின்றான்.

“உனக்குக் Côte de Rhône நிறையைப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும்.”

இரண்டு கிளாஸ்களில்  விட்டதும் “பற்றீசியாவுக்கு   வெண் வைன்தான் பிடிக்கும்” என்று  குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஓர் போத்தலை எடுக்கின்றான்.

“நீ இப்போதும் தனியாகவா ?” பற்றீசியா.

“இல்லை.”

“உனது புதிய காதலி மீது ஏன் எமக்குச் சொல்லாது இருந்தாய் ?”

“எனக்குப் புதிய காதலி இல்லை… ஓர் சிறு பூனையுடன் வாழ்கின்றேன்…”

இருவரும் சிரித்தனர்.

“பூனைக்கு எவ்வளவு வயது ?” ஆதாம்.

“6 மாதங்கள்… என நான் நினைக்கின்றேன்…”

“எது அதனது நிறம் ?” பற்ரீசியா.

“பல நிறங்கள்.”

வைன் எனது நாவுக்கும் உணர்வுக்கும் சுவையைத் தந்தது.

அவர்களது வசிப்பிடம் எப்போதுமே பல அழகு நிலைகளில். நிறையப் புத்தகங்கள் கிரமமாக அடுக்கப்பட்டு இருந்தது.  சில பூச்சாடிகள். சிறிய டெலிவிஷன். ஓர் கண்ணாடி அலுமாரிக்குள் விழிகளைக் கவரும் மதுப் போத்தல்கள்.

அங்கு ஒன்று நீங்கியது போல இருந்தது. எது நீங்கியது என்பது எனக்கு உடனடியாகத் தெரியவில்லை. வைனைக் குடித்தபடி எது என எனக்குள் கேட்டேன். எமது அருமையான சந்திப்புள் ஓர் நீக்கம் இருந்தது. எது? அவர்களிடம் கேட்க எனக்கு விருப்பம் இல்லை. தேடினேன். சில தேடல்களில் எப்போதுமே பதில்கள் கிடைப்பதில்லை.

பற்றீசியா பண்டி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட காய்ந்த ஸோசிஸன்களை  எனக்கு முன் நீட்டினாள்.

நான் ஒன்றை எடுத்துவிட்டு, தட்டினை அவளிடம்  இருந்து பெற்று  ஆதாமின் முன்   நீட்டினேன்.

ஒரு துண்டை எடுத்துக்  கடித்துக்கொண்டு  “கோழி அவிந்து விட்டதா….” எனச் சொல்லியபடி  சமையல் அறைக்குள் சென்றான். அவனது சமையல் எப்போதுமே சிறப்பானது. கொஞ்சம் தூள். மிகவும் குறைவாக  உப்பு.

“எங்களது உலகம் நரகத்தை நோக்கித்தான் போகின்றது.” என்றாள் பற்றீசியா.

“முதலாளித்துவத்தின் அடிமைகளாகத் தொழிலாளிகள் போவது கொடுமையானது…”

“தொழிலாளிகள் மட்டுமில்லை, அனைவரும்…”

“எமது நிறையக் கட்சிகள் மக்கள் நலத்தைக் கவனிக்காது தங்களது நலன்களையே கவனித்துக்கொண்டுள்ளன என்பது என் கருத்து. தீர்வு  இவர்களுக்கு இலக்கு இல்லை, தங்களது லாபங்களே இவர்களுக்கு முக்கியம். மனிதத்தின் சமாதானத்தை உடைப்பதுதான் முதலாளித்துவத்தின் அரசியல்.” என்றேன்.

“பிரான்ஸ் நாட்டை உலகம் பெரிய, அபிவிருத்தியடைந்த நாடாகக் கணிக்கின்றது. ஆனால் இது வறுமை இல்லாத நாடா? இந்த நாட்டின் வறுமையைப் பற்றி மீடியாக்களும், அரசியவாதிகளும் பேசுவது குறைவு. தேடித் தேடியும் இப்போது தொழிலைக் கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளது. இனவாதம் இல்லாமல் எப்போதும் எனது நாட்டின் அரசியல் இருந்ததில்லை. பிரெஞ்சுப் புரட்சி என்பது ஓர் போலிப் புரட்சியே.” என அவள் கொதித்துப் பேசினாள்.

அவளது பச்சை விழிகள் கலங்கின.

ஆதாம் சூடு பறக்கும் கோழித் துண்டுகளைத்  தூக்கிவந்தான்.

“இது கிராமக் கோழியல்ல…. வெள்ளைக் கோழியே …..வெள்ளைக் கோழிகளே எமக்குத் திணிக்கப்படுகின்றன….”

“இது வெள்ளைக் கோழியா ?” என ஐயத்துடன் அவன் சொன்னதை அறிந்தும்  கேட்டேன்.

“ஆம்… “ – ஆதாம்.

“இது கிராமக் கோழி போல தெரிகின்றது…”

“அதிகம் அவிந்து நிறம் மாறியது காரணமாக இருக்கலாம்.”

உணவு மிகவும் சுவையாக இருந்தது.  அனைத்து விஷயங்களும் எமது சம்பாசிப்புக்குள் இருந்தன. ஆனால் அரசியல் செய்திகளே பற்றீசியாவிடம் இருந்து வந்தது. அவள் தொடக்கத்தில் கம்யூனிசக்  கட்சிக்குள் இருந்தாள் என்பது  எனக்குத் தெரியும். அவளது கொள்கை விளக்கத்தைக் கேட்டபின்பு நானும் அதற்குள் சில ஆண்டுகளாக இருந்து பல ஊர்வலங்களுக்கு ஆவலுடன் சென்றுள்ளேன்.  ஆனால் ஆதாம் ஒரு கட்சியிலும் இருக்கவில்லை.

சிகரெட் பெட்டியை என் முன் நீட்டினான் ஆதாம்.

“சில ஆண்டுகளாகப் புகைப்பதில்லை… சரி இன்று புகைக்க விருப்பம். “ என்று ஓர் சிகரெட்டை  எடுத்தேன்.

பற்றிசியா தனது சிகரெட் தூள்களில்  போதைத்  தூளை எரித்துக் கலந்து சுருட்டியபின் “இப்போது போதை கலந்து சிகரெட் புகைப்பதில்லையா?” எனக் கேட்டாள்.

“இல்லை… உங்களோடு புகைப்பதற்கு விருப்பம்…”

நான் ஓர் தடவை இழுத்தேன். எனது நினைவு கொஞ்சம் விழித்தது. இரண்டாவது தடவை இழுத்துவிட்டு நான் அவனிடம் நீட்டினேன். “நான் ஒருபோதும் இதனைக் குடிப்பதில்லை என்பது உனக்குத் தெரியும்தானே? என்னைக் கேட்டான் ஆதாம்.

“எனக்கு மறந்துவிட்டது.”

மீண்டும் என்னிடம் சிகரெட்டைத் தந்தாள் பற்ரிசியா.

“நீ இப்போதும் தொழில் சங்கத்தில் இருக்கின்றாயா ?” எனக் கேட்டாள்.

“இல்லை, இப்போது தொழில் சங்கங்கள் தொழிலாளர் சங்கங்கள் அல்ல. அவை நிச்சயமாக முதலாளிகள் சங்கங்களே… இவைகள் எம்மைப் போருக்கு அழைப்பதில்லை. முதலாளிகளின் கருத்துகளை தொழிலாளிகளுக்கு மறைமுகமாகப் புகுத்துவனதாம் இப்போதைய தொழில்  சங்கங்கள்….  “

“நீ சொல்லுவது சரி. இப்போது நானும் ஓர்  கட்சிக்குள்ளும் இல்லை. தொழிலாளர் கட்சிகள் அரசை ரகசியமாக ஆதரிக்கும்போது  எப்படி அவைகளுக்குள் இருப்பது? எது எப்படியோ என்றாவது ஒருநாள் புரட்சி வெடிக்கும்….” என்றபடி இரண்டு தடவைகள் இழுத்தாள்.

நான் அன்று பல தடவைகள் இழுத்தேன். எனது சிந்தனைகள் பல விஷயங்களில் சென்றாலும் மதுச்சாலைக்குள் கண்ட ஓர் வெள்ளைப்பெண் என் நினைவில் வந்தாள். எது எப்படியோ அவள் குடித்துக்கொண்டிருக்கும்போது அங்கு போவது என நினைத்துக்கொண்டேன். எனக்கு அவள் மீது காதல் வந்தது என்றில்லை. ஆனால் அவள் எனது கவனத்துக்குள் எப்படியோ. சில வேளைகளில் நாம் காரணங்களை அறியாமலேயே வாழ்கின்றோம்.

எனது வதிவிடத்துக்கு அருகில் ஓர் சிறிய வீதி உள்ளது. நான் பல தடவைகள் அந்த வீதியில் நடப்பதுண்டு. இன்று வரை அதனது பெயர் எனது ஞாபகத்தில் இல்லாமல் உள்ளது. அந்த வீதியின் அழகு மீது பல தடவைகள் பலரிடம் பேசியுள்ளேன். “வீதியின் பெயர் என்ன?” என்று  கேட்பார்கள். சிரமத்துடன் தெரியாது எனச் சொல்வேன்.”

“உங்களது அழைப்புக்கு நன்றி …. “ எனச் சொன்னபோது பற்றீசியா தூங்குவதுபோல பட்டது.

“இரவு 12 மணி… இங்கேயே தூங்கலாமே…” என்றான் ஆதாம்.

“நன்றி…  இந்த இரவில் எனது வதிவிடத்துக்கு நடந்து செல்லவே விருப்பம்.”

“மீண்டும் சந்திப்போம்.” எனச் சிரமமாக  விழித்தப்படி  பற்றீசியா சொன்னாள்.

இருவரையும் முத்தமிட்டபின்னர் நான் வெளியால் வந்தேன்.  மெல்லிய  குளிர் . இதமான காற்று.  எனது வதிவிடம் 2 கிலோ மீட்டர்களில் உள்ளது. ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகும்போது கொஞ்சம் நடப்பேன். இன்று அதிகம்  நடக்கவேண்டும் போல இருந்தது.

சுவர்களில் அரசியல் விளம்பரங்களும், அழகு விளம்பரங்களும். பல நிறங்களில். நான் ஒருபோதுமே கார்ல் மார்க்ஸ் படத்தைச்  சுவர்களில் கண்டதில்லை. எமது புரட்சி அரசியல்வாதிகள் “மூலதனம்” எனும் நூலை வாசித்தார்களா? அல்லது மூலதனத்தைத் தேடித்தான் தமது ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றார்களா? என எனக்குள் கேட்டேன்.

எனது நடை இலகுவானதாக இருந்தது. எப்படி நடக்கின்றேன் என்பது எனக்குள் கேள்வியாய்.  இது சுகமான நடை.

தலை ஓர் மரத்தில் தட்டுப்பட்டது. நல்ல காலம்…. உடையவில்லை. சில மாடுகள் என் முன் தெரிந்தன…. பின்பு தெரியாமலும். அனைத்து உருவங்களும் என்முன் தெரிந்தன. என்னை நான் என் முன் பலவிதமாகப் பார்த்தேன்.

எனது அம்மா ஓர் பச்சைக் கொடியுடன் போனாள். நான் அவளை அண்மிக்க ஓடினேன். அவள் மறைந்தாள். ஏன் அவள் ஓடவேண்டும்? சிவப்புக் கொடிகளுடன் அவள் என்னை எனது சிறுவயதில் கண்டாளா? ஏன் கட்சிகள் நிறங்களைக் கொண்டுள்ளன என்று அப்போது நான் என்னிடம் கேட்டேன். நிறங்கள் இவைகளுக்கு அவசியமா? இந்த நிறங்களால் இரத்தங்கள் உலகு பூராவும் ஓடவில்லையா? நிறங்கள், நிறங்கள்…. உயிர்களின்  மோசமான இறப்புகள்  எமது வாசிப்புகளாகக் கிடைக்குப்போது  நிறங்களை அருந்தலாமா? இருப்பையும், சுதந்திரமான நடத்தலையும்  தரும் வீதிகள் எங்கு உள்ளன…. ?

எனது தொடை தட்டப்பட்டது. தட்டுவது யார்? திரும்பினேன். நான் மதுச்சாலையில்  காணும் வெள்ளைப் பெண். நடுங்கினேன். அவளது கூந்தல் கலைந்திருந்தது. ஏன் எனக்குள் நடுக்கம்? இந்த நடுக்கத்தின் காரணம் என்ன? தெரியாது.  அவள் பல உருவங்களாகத் தெரிந்தாள்.

“எனக்கு உதவ முடியுமா ?”

“என்ன உதவி ?” என்று கேட்டேன்.

“உங்களிடம் சுத்தியல் உள்ளதா ?”

“என்னிடம் நிறையச் சுத்தியல்கள் உள்ளன.”

“உங்களிடம் பெரிய ஆணிகளும் உள்ளனவா ?”

“ஆம் ? இவைகளை ஏன் கேட்கின்றீர்கள் ?”

“நான் திறப்பைத் தொலைத்துவிட்டேன்.”

இந்த இரவில் திறப்பைத் தொலைத்துவிடுவது மிகவும் சிக்கலே. கதைவைத் திறக்கும் நிபுணர்களை எப்படி இந்த இரவில் அழைப்பதாம்? திறப்புக் கதைகள் எனக்கு நிறையவே தெரியும். சில ஆண்டுகளின் முன்பு ஓர் ஓவியக் கண்காட்சியில் ஓர் பெண்ணுடன் நிறையப் பேசினேன். பின் எமக்குள் செக்ஸ் ஆசை. எனது வீட்டுக்கு அவளுடன் சென்றேன். கதவின் முன் திறப்பு எனது கையில் தட்டுப்படவில்லை. அனைத்து பாக்கெட்டுகளிலும் தேடினேன். கிடைக்கவில்லை. அவளது செழுமையான முகம் காய்ந்தது.

“மன்னிக்கவும் திறப்பைத் தொலைத்துவிட்டேன்…”

“சரி ஹோட்டலுக்குப் போவோம்…”

எனது இருப்பிடத்தின் அருகில் சில ஹோட்டல்கள். அவைகளில் இடமே இல்லை. எனது செக்ஸ் ஆசைகள் முறியத் தொடங்கின.

“உனது வீட்டுக்குப் போவோமே…” என நான்.

“முடியாது…. “ அவள் முகத்தில் கோபம்.

“ஏன் ?”

“எனது கணவன் அங்கு உள்ளார்…”

அன்று நான் அவளை அவளது வீட்டுக்கு டாக்சியில் போக வைத்தேன்.

“இந்த இரவில் திறப்பு நிபுணர்களை அழைக்க முடியாது… நீங்கள் விரும்பின் எனது வதிவிடத்துக்கு வந்து தூங்கலாம்…”

“நன்றி…. உங்களிடம் சுத்தியலும் ஆணிகளும் உள்ளதால்  கதைவைத் திறந்துவிடலாம்…அவைகளைத் தரமுடியுமா? .”

“நிச்சயமாக”

நாம் எனது இருப்பிடத்துக்கு நடந்தோம். அவளது வெண் கூந்தலின் அசைவை நான் உணர்ந்தேன். அவளது முகத்தில் மதுச்சாலை  தெரிந்தது. நான் அங்கு செல்லத் துடித்தேன். இப்போது அவள் சுத்தியலையும் ஆணிகளையும் பெற எனது வதிவிடத்துக்கு….. எனது திறப்பு என்னிடம் உள்ளதா என்பதைச் சோதித்தேன். கிலுங்கல் சத்தம் கேட்டது.

நாம் உள்ளே போனோம்.

“இது உங்களது வதிவிடமா ? ஓர் வாசிகசாலையா?” என அவள் என்னிடம் உடனடியாகவே கேட்டாள்.

“நூல்கள் எனது இடத்தில் பல பகுதிகளைப் பிடித்துள்ளன.”

“உங்களுக்கு வாசிப்பில் நிறைய விருப்பம் உள்ளது என நினைக்கின்றேன்.”

“தவறு. நான் பெரிதாக வாசிப்பதேயில்லை.”

“ஏன் இவ்வளவு நூல்கள்… ?”

“எனது நண்பர்களில் ஒருவன் நிறைய வாசிப்பவன். ஓர் கொடூர நோயில் இருந்தபோது தனது நூல்களை எனக்குத் தந்ததால்தான் எனது இருப்பிடத்தில் நிறைய நூல்கள். இந்த நூல்களைப் பார்க்கும்போது அவனது நினைவுகள் எனக்கு எப்போதும் வரும். அவன் இறந்துவிட்டான். நூல்கள் இப்போதும் உயிருடன்…. நீங்கள் எதையாவது குடிக்க விருப்பமா?”

“நாம் பின்பு குடிப்போம். இப்போது எனக்குத் தேவையானது  உங்களது சுத்தியலும் ஆணிகளும்….”

நான் தேடத் தொடங்கினேன். அவளுக்குத் தேவையானவைகளை  எங்கு வைத்தேன் என்பதை உடனடியாக அறியாத  சிக்கல் எனக்குள் வந்தது.

“எடுத்துவிட்டீர்களா ?”

“மன்னிக்கவும், தேடுகின்றேன். நான் ஆணிகளையும் சுத்தியலையும் உபயோகிப்பது அரிது…. சில நிடங்களில் எடுத்துவிடுவேன்.”

சில கணங்களில் நான் நானாக வருவதுபோலத் தெரிந்தது. மதுச்சாலையில் கண்ட அவள் இப்போது  என்முன். எனது வீட்டுக்கு அருகில் வாழ்பவளாக இருக்குமோ? ஆனால் நான் அவளை மதுச்சாலைக்குள்தான் கண்டுள்ளேன். இப்போதிற்கு  முன்னால் நான் ஏன் அவளை எப்போதுமே வெளியில் காணவில்லை? அப்படியும் நடக்கலாம்தான். எனது பக்கத்து வீட்டில் வசித்தவரின் முகத்தை நான் நான்கு வருடங்களின் பின்னர்தான் கண்டதுண்டு.

எப்படியோ எனது மெக்கானிக் பெட்டியை எடுத்துவிட்டேன். அது கொஞ்சம் பாரமானதுபோல இருந்தாலும் அதற்குள் யாவும் உள்ளது. பெட்டியைக் கண்டதும் அவள் சிரித்தாள்.

“நன்றி, மன்னிக்கவும். எனது திறப்புத் தொலைந்ததால் உங்களைச் சிரமப்படுத்தியுள்ளேன்.”

“இல்லை, சிரமமே இல்லை. திறப்பை இழந்தவரின் மனம் எப்படி வாடும்  என்பது எனக்குத் தெரியும். மன்னிக்கவும், உங்களிடம் ஓர் கேள்வி கேட்கலாமா?”

“நிச்சயமாக…. “

“நீங்கள் இந்த ஏரியாவில்தான் வாழ்கின்றீர்களா ?”

“இல்லை.”

“எங்கு ?”

“போலந்து தேசத்தில்…. நான் ஓர் போலந்துப் பெண்

என்பது எனது உச்சரிப்பில் இருந்து உங்களுக்கு விளங்கவில்லையா?”

“உங்களது உச்சரிப்பு சிறப்பான பிரெஞ்சு உச்சரிப்பு.”

“இல்லை, இல்லை… ஆனால் பலர் நீங்கள் சொல்லியது போலவே சொல்லியுள்ளார்கள்.”

“போலந்து நாட்டில் வாழும் நீங்கள் இங்கு எங்கு வாழ்கின்றீர்கள் ? “

“லொறியில்…”

“லொறியிலா ?”

“நான் இங்கு வரும்போது எனது வீடு எனது லொறியே.”

“நீங்கள் சொல்வது எனக்கு அதிகமாக விளங்கவில்லை.”

“நான் போலந்திலிருந்து இங்கு வருவது ஓர் தொழிலுக்காகவே. இந்தத் தொழிலை நடத்துவது எனது லொறியே. நான் இங்கு வரும்போது அங்குள்ள பல பொருள்களைக் கொண்டுவந்து இங்கேயுள்ள போலந்து வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு,   பின்பு இங்கிருந்து வீதியில் எறியப்பட்டிருக்கும் பல பொருள்களோடு அங்கு போவேன். பாரிஸில் எனது லொறியை நிறுத்துவதானால் நிறைய டாக்ஸ் கட்டவேண்டும். நீங்கள் வசிக்கும் பகுதியில் போலீஸ் கண்காணிப்பு அதிகம் இல்லை என்பதால் இங்கு வருகின்றேன். லொறியின் முன் உள்ள மதுச்சாலையின் முதலாளிப் பெண்ணுக்கு போலீஸ் அதிகாரிகளோடு நிறைய நட்புள்ளது ….  சரி… நாம் இறங்கி லொறி உள்ள இடத்துக்குப் போவோம்….”

நாம் இறங்கி வீதியில் வந்தபோது மிகவும் குளிராக இருந்தது. ஆனால் அது ஓர் கோடை காலம். அவள் என்னைவிட வேகமாக நடந்தாள். என்னிடம் எனது மறுப்பையும் மீறிப் பெற்றுக்கொண்ட  மெக்கானிப் பெட்டி அவளது கையில் லாவகமாக இருந்து ஆடியது. அவளது நடையை எனது விழிகள் ரசித்தன.

“இதுதான் எனது லொறி…”

அவளது குரலைக் கேட்டு ஆழ் தூக்கத்தில் இருந்தவனைப்போல விழித்தேன்.

அந்த லொறியை நான் பல காலைகளில் கண்டுள்ளேன். ஒருபோதுமே கவனத்துக்கு எடுத்ததில்லை. இப்போதுதான் முறையாக எனது விழிகள் அதன்மீது.

அது பெரிய லொறி. அதில் பல விளம்பரங்கள் ஒட்டப்பட்டும், சில சித்திரங்கள் கீறப்பட்டும் இருந்தன. முன்னே இரண்டு கதவுகள், பின்னே ஓர் கதவு.

“இந்த லொறிக்கு மூன்று திறப்புகளா ?”

“ஓர் திறப்பே மூன்று கதவுகளுக்கும்.”

எனது மெக்கானிப் பெட்டியைத் திறந்தேன். அது ஓர் அழகிய பெட்டி. அதனை நான் ஒருபோதுமே விலைக்கு வாங்கவில்லை, எவரும் பரிசாகக் கொடுத்ததுமில்லை.  அதிகாலை ஒன்றில் வீதியில்தான் எடுத்தேன்.

நான் எடுத்தேன் குறட்டை.

“வேண்டாம்…”

பின் சுத்தியலை…

“அதுவும் வேண்டாம்…” என்றபடி என் அருகில் குந்தினாள்.

கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “திருப்பு உளிதான் எனக்கு வேண்டும்” எனச் சொன்னபோது நான் அதனைத் தேட வெளிக்கிட்டேன். மேலே இல்லை. அனைத்துக் கருவிகளையும் நிலத்தில் போட்டேன்.  உளி எனக்குத் தெரிந்தது.

“நானே திருத்துவேன்.” என அவளிடம் சொன்னபோது என்னை அவள் வியப்புடன் பார்த்தாள்.

“உங்களிடம் லொறி உள்ளதா ?”

“இல்லை, நான் அதனுள் ஒருபோதுமே ஏறியதும் இல்லை.”

“இது எனது மூன்றாவது லொறி. திருத்துதல்கள்  எனக்கு நிறையத் தெரியும்.” என்றபடி  திருப்பு உளியை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டாள்.

லொறியின் சாரதி இருக்கைப் பக்கத்தின் பூட்டினது துளைக்குள் உளி நுழைய மறுத்தது.

“மன்னிக்கவும், ஓர் மெல்லிய உளி உள்ளதா ?”

மீண்டும் தேடினேன். இரண்டு மெல்லிய உளிகள்.

“ஆ, இவைகளால் நிச்சயமாகத் திறக்க முடியும்.”

உளியைக் கொண்ட அவளது கைகள் அமைதியாக அசைந்தன. அனைத்து அசைவுகளும் எனக்குள் ரசிப்பைத் தந்தன. ஓர் கட்டத்தில் தனது கூந்தலைக் கட்டிக் கொண்டாள்.

“ராஷித் வந்து விட்டான்.” என அவள் சொன்னபோது… நான் அவளைப் பார்த்தேன்.

அவளது விழிகள் தூரத்தில்.

“உங்களுக்கு ராஷித்தைத் தெரியுமா ?”

“தெரியும், பழக்கமில்லை”

“அவன்தான் எப்போதும் சிரித்தபடியே இருக்கும் மதுச்சாலைச் சேவகன்.  இப்போது காலை 6 மணி.”

அவன் அந்த மதுச்சாலையைத் திறந்து கொண்டிருந்தான்.

“நன்றி…” என்றாள் அவள்.

“ஏன் நன்றி ?”

“முதலாவது பூட்டைத் திறந்துவிட்டேன். உங்களுக்கு நேரம் உள்ளதா?”

“ஆம்…”

“நாம் அங்கு சென்று ஏதாவது குடித்துவிட்டு மீதிப் பூட்டுகளைத் திறப்போமா ?”

“ஆம்… “

இப்போது நாம் மதுச்சாலைக்குள்.

ராஷித் எம் முன் வந்து எனக்குக் கையைத் தந்தான். அவளுக்கு முத்தங்கள்… உதடுகளில்…

“எனக்கு பியர்… உங்களுக்கு ?”

“காப்பி…”

அவள் பியர் குடிப்பது அழகாக இருந்தது. அடிக்கடி ராஷித் வந்து அவளது உதட்டில் முத்தமிடுவது எனக்குப் பிடிக்கவில்லை.

“லொறியைத் திருத்தும் கருவிகளை ராக்ஷித்திடம் கேட்டு இருக்கலாமே ?”

“கேட்டபோது இல்லை என்றான்.”

“எனக்கு நேரம் போகின்றது… மீதியாக உள்ள இரண்டு கதவுகளையும் திறப்போம்…”

நாம் வெளியே. இரண்டு கதவுகளும் விரைவிலேயே திறக்கப்பட்டன.

எனது மெக்கானிப் பெட்டியை எனது கையில் தந்துவிட்டு “ மிகவும், மிகவும் நன்றி…” என்றாள்.

மீண்டும் அவள் மதுச்சாலையின் உள்ளே. நான் வெளியே. இப்போது நான் லொறியைப் பார்த்தேன். பெரியது, அழகியது. போலந்து போகும்  ஆசை எனக்குள்.

மீண்டும் நான் மதுச்சாலைக்குள் நுழைந்தேன்.

“ஏன் இங்கே ?” என அவள்.

“உன்னோடு குடிக்க விருப்பம். ராஷித்!  இரண்டு பியர்களை த் தயவுசெய்து தா .”

கிளாசுகள் தட்டப்பட்டன.

“உன்னை முத்தமிடலாமா ?”

அவள் தனது உதடுகளை எனது உதடுகளின் முன் நீட்டினாள். ராஷித் அமைதியாகச் சிரிப்பதைக் கண்டேன்.

 க.கலாமோகன்-பிரான்ஸ்

 க.கலாமோகன்

(Visited 305 times, 1 visits today)