எழுத்ததிகாரம் ! சொல்லதிகாரம் !!-ஆசிரியர் குறிப்பு

வணக்கம் வாசகர்களே ,

நடு லோகோஎல்லோரையும் போல் மனித நேயத்தையும் வாழ்வின் மீதான செழிப்பையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டினை வரவேற்கின்றேன். பொது வெளியில் ஒருவரின் அடையாளத்தை / நடத்தையை சொல்லும் எழுத்துமே தீர்மானிக்கின்றன. இந்த இரண்டு தளங்களும் இன்று கயமையும், பித்தலாட்டமும் தன்முனைப்புப்போதையும் என்று பொதுவெளியில்  நிரம்பி வழிகின்றன. ஒரு  படைப்பு பொதுவெளிக்கு வருவதற்கு முதல் அதன் எழுத்ததிகாரம் படைப்பாளியிடம் இருக்கிறது. அது பொதுவெளிக்கு வந்த பின்னர் படைப்பின் சொல்லதிகாரம் அதைப் பற்றி சொல்பவர்களான வாசகர்கள், விமர்சகர்களிடமே  போய் சேருகின்றது .

‘ஒரு எழுத்தாளனிடம் சாமானியன் ஒருவன் கேள்வி எழுப்ப முடியாது’ என்று ஒரு புதிய தேற்றத்தை தனது தளத்தின் மூலம் போடுகின்றார் ஜெயமோகன். அதாவது எழுத்ததிகாரத்திடம் சொல்லதிகாரம் செல்லுபடியாகாது என்று சொல்கின்றார். இந்தக் கூற்று வாசகனுடையதும்  விமர்சகனுடையதும் சொல்லதிகாரத்துக்கு வேட்டு வைக்கின்ற செயலாகும். வாசகனும் விமர்சகனும் இல்லாது போனால் அங்கே எழுத்தாளன் என்பவன் ஒரு ஸீரோ. அத்துடன் நின்றாரா………., ஒரு ஈழத்துப் படைப்பாளியைப் பார்த்து ‘இவன் ஒரு ‘மனநோயாளி’. இவனின் எழுத்துக்கள் உங்கள் சஞ்சிகையில் இருக்க கூடாது’ என்று சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்துக்கு அழுத்தங்களை/மிரட்டல்களைக் கொடுக்கின்றார் ஜெயமோகன். ஜெயமோகன் மூலம் சொல்லதிகாரத்துக்கு நேர்ந்த இந்த இழிநிலைக்கு எனது வன்மையான கண்டனத்தை  இங்கே பதிவு செய்கின்றேன்.

‘வாசகனும் விமர்சகனும் சொல்லதிகாரம் மூலம் எதையும் எதையும் எழுதி விடலாமா ?’ என்றொரு கேள்வி எழுவதும் இயல்பானதே. அதற்கு ‘இல்லை’ என்பதே எனது பதில். ‘எப்பொழுதும் சொல்லதிகாரம் எழுத்தையும் அதன் தன்மையையும் மட்டுமே கருத்தில் கொண்டு, எழுத்தைப் பிரித்துப் போட்டு நல்லது கெட்டதுகளை சொல்ல வேண்டும்’ என்பதில் நான் உறுதியாக இருப்பவன். ஆனால், இன்று சொல்லதிகாரம் என்பது பொதுவெளியில், அதன் உயிர்ப்பை இழந்து படைப்பாளியையும் அவனது சொந்த வாழ்க்கையையும் பொதுவெளிக்கு இழுத்துக் காழ்ப்புணர்வு , குழும செயற்பாடு, எரிச்சல், போன்ற பல அகச்சிக்கல்களால் கடும் நோயாளியாகி விட்டிருப்பதையும் இங்கு சுட்டிட விரும்புகின்றேன். இந்த நிலைக்கு சொல்லதிகாரம் மட்டுமல்ல காரணம். மாறாக இன்று, ‘தம்மை பொதுவெளியில் இழிவு செய்து விட்டனர், காழ்ப்புணர்வுடன் தமது படைப்புகளை நோக்குகின்றார்கள்’ என்று கூப்பாடு போடுகின்ற படைப்பாளிகள் முன்னொருகாலத்தில் இலக்கிய வன்முறையாளர்களாக பொதுவெளியில் வலம் வந்து இன்றைய சொல்லதிகாரிகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தவர்கள் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடம் இல்லை. இன்று அவர்கள் தம்மைப் புனிதர்களாகத் தகவமைத்துக்கொள்ளத் துடியாய் துடிக்கின்றார்கள். அவர்கள் தமது சுயநலன்களுக்காகவும் இருப்புக்காகவும்  வளர்த்துவிட்ட சொல்லதிகாரிகள் தான் இன்று பொதுவெளியில் சொல்லதிகாரத்தை செல்லாக்காசாக்கின்றனர் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது. சமகாலத்துச் சொல்லதிகாரத்தின் இழி நிலைக்கு ஒருவகையில் பொதுவெளியில் தம்மை ‘இழிவு படுத்துகின்றார்கள்’ என்று சொல்கின்ற  இன்றைய எழுத்ததிகாரிகளும் பங்காளிகளாகின்றனர். இனியாவது அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆவல்.

ஒருவிடயத்தில் நாங்கள் தெளிவாகம் உறுதியாகவும்  இருக்க வேண்டும். புலம்பெயர் இலக்கியம் ஒருகாலத்தில் ஆறாம் திணையாகப் பார்க்கப்பட்டது. புலம்பெயர் எழுத்துப் பரப்பில் 80-களில் இருந்து ‘சிற்றிதழ்களின்’ வகிபாகம் அளப்பரியது. அது பலத்த நெருக்கடிகளையும் பலத்த அச்சுறுத்தல்கள் மத்தியிலும் புலம்பெயர் படிப்பாளிகளால் வளர்த்தெடுக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை மாற்றான்கள் எவரும் ஆசிரியர்பீடங்களை கட்டைப்பஞ்சாயத்து செய்ததோ  / கை நீட்டியதோ வரலாற்றில் இல்லை. ஆனால் இன்று அப்படியொரு இழிநிலையை புலம் பெயர் இணைய சிற்றிதழ் ஒன்று சந்திக்கின்றது. உண்மையில் புலம்பெயர் படைப்பாளிகள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமிது.

எமக்கான ஒரு தளத்தில் கட்டைப்பஞ்சாயத்து வைப்பதற்கு தமிழகத்தில் இருந்து ஜெயமோகன் போன்ற இலக்கிய தாதாக்களை தமது அற்ப சலுகைகளுக்கும் இருப்புகளுக்காகவும் சோரம் போன சொல்லதிகாரிகள் மற்றும் எழுத்ததிகாரிகள் அனுமதிப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவர்கள் அவர்களது தளத்தில் இயங்க வேண்டியவர்கள். நாங்கள் எமது தளத்தில் இயங்க வேண்டியவர்கள். எமக்கான சர்ச்சைகளை நாங்களே கூடிப் பேசி தீர்க்க வேண்டுமே ஒழிய மாற்றான்கள் அல்ல. நாங்கள் சரியான சொல்லதிகாரத்தாலும் எழுத்ததிகாரத்தலும் மற்றயவர்களை எமது பக்கம் திருப்பிப்பார்க்க வைக்க வேண்டுமே ஒழிய நாங்கள் ஒருபோதும் மாற்றான்களிடம் கையேந்திகளாக இருத்தல் கூடாது.

மக்கள் கலைஞனும் இலக்கிய செயற்பாட்டாளருமான தோழர் கருணாவின் மறைவு எம்மை அதிர்ச்சியுறச்செய்தது. அவரின் நினைவாக இந்த இதழ் அவரின் நினைவுக்குறிப்புகளைத் தாங்கி அவரது சிறப்பிதழாக வெளியாகின்றது. அவரது குடும்பத்தவரின் துயரில் நடு தோளோடு தோள் சேர்க்கின்து. இந்த இதழில் இருந்து சித்திரக்கலையை ஊக்குவிக்குமுகமாக ‘சொல் ஓவியம்’ என்ற புதிய பகுதியை நடு ஆரம்பிக்கின்றது. இந்த இதழில் சொல் ஓவியத்தை ஆரம்பித்து வைத்த நடுவின்  அறிமுக ஓவியரான சமித்திரா ஸ்ரீரங்கநாதனுக்கு  பாராட்டுகள் பல. நன்றி .

கோமகன்பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

 

 

(Visited 528 times, 1 visits today)