இரத்தத்தின் கதை-கூடுதல் பொறுப்பினைக் கோருகிறது-கட்டுரை-சுகன்யா ஞானசூரி

அலெக்ஸ் பரந்தாமன்என் இரத்தத்தின் இரத்தங்களே எனும் பெண் சிங்கத்தின் கணீர் குரலில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு. அதனைக் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்றபோது அது தன் முடிவுரையை எழுதிக்கொண்டது. மூர்க்கத்தின் உச்சத்தில் இரத்தம் பார்க்காமல் விடமாட்டேன் என்பார்கள் அதை பார்த்ததும் அத்தனையும் அடங்கிவிடும் இல்லையா? அரசர் காலம் முதல் இன்றைய நவீன யுகத்திலும் இந்த இரத்தம் பார்த்தல் என்பது தொடரவே செய்கிறது. இது ஆதியில் மனிதன் வேட்டைச் சமூகமாக உருவாகிய போதிருந்தே தொற்றிப் படர்ந்து வருகின்ற ஒரு செயல்.

உணவின் தேவைக்காக இரத்தம் பார்க்க வெளிக்கிட்டவர்கள் தங்களுக்குள் இனக்குழுக்களாக பிரிந்து பின்னர் அதிகாரத்தினை கைக்கொள்வதில், கைக்கொண்ட அதிகாரத்தினை நிலத்தினை தக்கவைத்துக்கொள்ளவென இரத்தம் பார்த்தல் தொடரும் ஒரு செயலாகி இன்றைக்கு கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் இரத்தம் சுண்டச் சுண்ட அடிமைகளாகிக் கொண்டிருக்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி மீது எப்போதும் ஒரு விருப்பம். அதனை கையிலேந்தி நடக்கும்போதே உள்ளத்துள் இனம்புரியாத ஒரு கம்பீரம் ஏற்படும். பெரியார் கருப்புக் கொடிக்கு மத்தியில் ஏன் சிவப்பினை வைத்தார்? தர்க்கரீதியாக சமூகத்தின் சிந்தனைக்குள் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் இரத்தம் சிந்தாமல் புரட்சி செய்யாமல் மனிதர்களின் விடியல் சாத்தியம் இல்லையென்பதனை அவர் நம்பியிருக்கக்கூடும். தமிழீழ தேசியத்தின் கொடியில் சிவப்பு மஞ்சள் காரணத்தோடுதான் வைக்கப்பட்டிருக்கும். மங்கல வாழ்வு வேண்டும் எனில் நாம் இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும். புரட்சி செய்துதான் ஆகவேண்டும். என்பதனை நோக்கமாகக்கொண்டே உருவாகியிருக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு கம்யூனிச எண்ணம் இல்லை என்றால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஏன் இவற்றையெல்லாம் இங்கே சொல்கிறேன் என்றால் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் செவ்வண்ணம் இல்லாமல், இரத்தம் சிந்தாமல் விடுதலை சாத்தியமில்லை.

போர் என்றால் இரத்தம் சிந்தாமல் வெற்றி இல்லை என்பார் புரட்சியாளர் மாவோ. ஆனால் ஈழத்தில் அளவுக்கதிகமாகவே இரத்தம் சிந்தப்பட்டும் ஏன் புலிகளால் வெற்றியினை ஈட்டமுடியவில்லை? இறுதிக்காலத்தில் அது மக்கள் புரட்சியாக மாறவில்லை. துரோகத்தின் சதிராட்டங்களால் மாற்றுச் சக்திகளின் ஊடறுப்பினால், மக்கள் மனங்களில் ஏற்பட்ட வெறுப்பினால், காலம் கடந்துவிட்ட போரினால் தலைமையின் கட்டளைகளுக்குள் இல்லாமல் சிதறிப்போன போராளிகளின் விரக்தியான மனநிலையென எல்லாம் சேர்ந்து ஈழப்போரினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

கிட்டத்தட்ட போர் நிறைவுற்று பத்தாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் தமிழ்ச்சமூகம் தன் விடியலை கண்டடைய முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமைதிவழியில் செல்வநாயகத்தின் போராட்டம் முடிவுற்ற தறுவாயில் ஆயுதவழியே தீர்வென அன்றைய இளையசமூகம்  நம்பியது. அதனை தொடர்ந்து பல குழுக்கள் உருவாகின. ஒன்றையொன்று தின்று செரித்தன. யாழிலிருந்து இரண்டு வெளியேற்றங்களை செய்தபோதே அவர்கள் தம் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தவறிவிட்டனர் என்றே கொள்ளலாம். இறுதியாக வன்னியைவிட்டு வெளியேற முடியாமல் முடித்துக்கொண்டனர். இதுதான் ஈழப்போராட்டத்தின் சுருக்க வரலாறு.

இறுதி யுத்தகாலத்தில் எப்படியான மனிதர்கள் இருந்தார்கள் இறந்தார்கள் இப்போது வாழ்கிறார்கள் என்பதனை பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவருகின்ற எழுத்தாளர் கோமகன் அவர்களின் “நடு” இதழில் ஈழ எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள் “இரத்தத்தின் கதை” என தலைப்பிட்டு போர்க்கால அனுபவங்கள் என எழுதி வருகிறார். இதுவரை பதினோரு தொடர் வெளியாகியிருக்கிறது. சரியாக யாராலும் கவனப்படுத்தப்படவில்லை என முகநூலில் அவர் பதிவு பார்த்ததும் ஏன் என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. அதுவரை நான் மூன்று தொடரே வாசித்திருந்தேன். மற்றவைகள் ஏன் நம் தொடர்புக்குள் வரவில்லை என்ற கோள்வியோடு பதினோரு தொடரையும் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விபரங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தாலும் அத்தனையிலும் இரத்தத்தின் வீச்சம் பிரதானமாக உள்ளது. பொருத்தமான தலைப்புதான்.

இவைகள் சிறுகதைகளுக்குள்ளும் அடங்காமல் கட்டுரைக்குள்ளும் அடங்காமல் ஒரு பத்தி எழுத்தாக இருந்தாலும் எல்லாவற்றையும் சீராகத் தொகுத்தால் ஒரு நாவலுக்கான வடிவம் கிட்டும் என்பது என் கணிப்பு. அதேபோல் தன்வரலாற்றுக் குறிப்பு என வாசித்தாலும் (போர்க்கால அனுபவங்கள் என்பதால்) புனைவுத்தன்மை வெளியே துருத்திக்கொண்டிருக்கிறது. அதற்கொரு உதாரணம் கர்ப்பிணிப் பெண்ணின் மேல்ப்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் விட்டு பனங்குற்றி வயிற்றின் நடுப்பகுதியில் வீழ்ந்து இறப்பது போன்ற விவரணையை மிகு புனைவு என்பதை வாசிப்பவர்கள் உணரமுடியும். ஒருவேளை அப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் அதை எதார்த்தமாக முன்வைக்கலாம். இதேபோல் வளவைப் பார்த்துவரச் சென்றவர் மரவள்ளித் தடிகள் கிண்டிக் கிடப்பதையும் ஆடு ஒன்று உரிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வில் பிஸ்டல் வைத்திருந்தவர்கள் மிரட்டல் விடுவதாக மொட்டையாக எழுத வேண்டியது இல்லை இல்லையா? அவர்கள் யார்? புலிகளா அல்லது புலித்தோல் போர்த்திய கயவர்களா என்பதை தெளிவாக்க வேண்டிய பொறுப்பு தன் அனுபவக் குறிப்புகளை எழுதுகின்ற  எழுத்தாளருக்கு இருக்கிறது இல்லையா? ஏனெனில் ஏற்கனவே பல குழப்பங்கள் தமிழ்சூழலை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு தொடரிலும் பிள்ளைபிடிகாரர்கள் வருகிறார்கள். அவர்களால் போராளிகள் மீது மக்களுக்கு எழுகின்ற வெறுப்பும், இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையத்துக்குள் சென்றவர்கள் மீதான செல் வீச்சு, இராணுவப் பகுதிகளுக்குள் செல்ல விரும்பிய மக்களுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு சாவொறுப்பு செய்யப்படும் நிகழ்வுகள் என இறுதியுத்தத்தின் நாட்கள் மிகவும் கொடூரமான மனவுளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சிவத்தார் மூலம் சாதி வெறியர்களுக்கு இந்த விடுதலைப்போர் பிடிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துவைத்துள்ளார். சாதிய துவேசத்திற்கு புலிகள் சிவத்தாருக்கு வழங்கிய தண்டனை அதுமுடித்து வெளியே வந்தபின்பும் அடங்காத சாதியத் திமிர். போருக்குப் பின்னான ஈழத்தில் அவர்கள் தங்கள் சாதிய தடிப்புகளை எண்பதுகளுக்கு முன்னான இலங்கையைப்போல் கட்டமைக்கத் துடிக்கிறார்கள். இப்போது அதை நிகழ்த்துகிறார்கள்.  செந்தூரன் போன்றே பல போராளிகள் இறுதி யுத்தகாலத்தில் உண்ண உணவில்லாமல் நாள்கணக்காக குளிக்காமல் விரக்தியான மனநிலையோடு இராணுவத்திடம் சரணடைந்தார்கள் என்பது தீர்க்கமான உண்மை. எவ்வளவுக்கெவ்வளவு கெளரவமாக இருந்த போராளிகள் ஏன் இப்படி ஆக்கப்பட்டார்கள்? வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை, புனர்வாழ்வு முகாம்களில் அவலமான வாழ்க்கை என இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்பது? சமர்க்களங்களில் வெற்றிபெற்ற போதெல்லாம் உடனிருந்துவிட்டு தோற்றுப்போன பின்னால் தூற்றுகின்ற மக்களாகிய நாமும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இல்லையா?

எம் துயர்மிகு வாழ்வை நாம் எழுதித்தான் கடக்கவேண்டும். கவிதையாக, சிறுகதையாக, நாவலாக, ஓவியமாக நாடகமாக ஒவ்வொரு படைப்பாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இதில் எதிர், ஆதரவு என்ற நிலைப்பாடுகளில் இல்லாமல் உண்மைத்தன்மை இருக்கவேண்டும். அவைகள் காலம் கடந்தும் நிற்கும். மற்றவர்களாலும் கவனிக்கப்பட்டு பேசப்படும். முடிந்துபோன இறுதியுத்த நிலப்பகுதியிலிருந்து அனுபவக் கதைகளை எழுதுகையில் கூடுதல் பொறுப்புகள் இருக்கின்றன. இதைத்தான் இரத்தத்தின் கதைகளும் கோருகின்றன.

சுகன்யா ஞானசூரி-இந்தியா

சுகன்யா ஞானசூரி

(Visited 64 times, 1 visits today)
 
சுகன்யா ஞானசூரி-கவிதைகள்

சுகன்யா ஞானசூரி-கவிதைகள்

நீலம் பாரித்த கடல்! அழும் குழந்தைக்கு கொஞ்சம் திரவம் வேண்டியிருக்கிறது. மார்பு வற்றியவளின் கண்கள் பனித்திருக்கிறது. நீலம்பாரித்த கடல்மீது அகதியின் பாதங்கள் சிறுதுண்டு நிலம் தேடுகிறது. இயலாதவர்களின் கண்ணீராலே கடல் […]