கடன்-சிறுகதை-ஐ.கிருத்திகா

அந்த  க்ளினிக்  படு  தூய்மையாயிருந்தது. பாலிவினைல்  நாற்காலிகள்  வரிசையாக  போடப்பட்டிருந்தன. சுவரின்  வலது  மூலையில்  ஒரு  டிவி  இருந்திருக்க வேண்டும். அதற்கு  அத்தாட்சியாக  ஒரு  ஒயர்  மட்டும்  தொங்கிக்கொண்டிருந்தது.

உள்  நுழைந்ததுமே  இடதுபக்கம்  ரிசப்ஷனும்  அதைப்  பார்த்தவாறு  எதிர்புற சுவரில்  ஒரு  சிசிடிவி  கேமராவும்  பொறுத்தப்பட்டிருந்தது. புனிதா  ரிசப்ஷன் பெண்ணிடம்  பெயர்  சொல்லி  மகனை  மடியில்  கிடத்தி  நாற்காலியில் புதைந்தாள்.

கிருத்திகா ஐயப்பன்
பிருந்தாஜினி பிரபாகரன்

ஊர்  புதிது. எல்லோரும்  இந்த  டாக்டரை  கைராசிக்காரரென்று  சொன்னார்கள். வந்துவிட்டாள்.

“ஈஸ்வரனுக்கு  வெயிட்  பாருங்க…”

ரிசப்ஷன்  பெண்  சொல்ல, புனிதா  மகனை  அழைத்துபோய்  எடை  பார்க்கும் கருவியில்  நிறுத்தினாள். இருபது  கிலோ  காட்டிற்று. பின்  அழைத்துவந்து சுவரோடு  ஒட்டி  நிற்கவைத்தாள்.

மேலே  தொங்கிகொண்டிருந்த  இன்ச்  டேப்பை  இழுத்து  உயரம்  பார்த்த ரிசப்ஷன்  பெண்  அவன்  வாயில்  தெர்மாமீட்டரை  சொருகி  காய்ச்சல்  அளவு பார்த்தாள். நூற்றியிரண்டு  காட்டியது.

“காய்ச்சல்  எப்பலேருந்து  இருக்கு?”

“நேத்திக்கு  ராத்திரியிலேருந்து…”

“வரும்போது  மருந்து  குடுத்தீங்களா…?”

“இல்லம்மா….”

“பையனை  அழைச்சிட்டுபோய்  உட்கார  வச்சுக்குங்க….” என்றவள்  அளவுக் குப்பியில்  ஐந்து  எம்மெல்  மருந்து  எடுத்து  ஈஸ்வரன்  வாயில்  ஊற்றி  விட்டாள்.

அவ்வளவு  ஜுரத்திலும்  வாய்  ஆ……வென  ராகமிழுத்துக்  கொண்டிருக்க, ஈஸ்வரன்  மலங்க, மலங்க  விழித்தபடி  படுத்திருந்தான். புது  இடம்  என்பதால்  அல்ல. எப்போதுமே  அவன்  அப்படித்தான்.

நிலையற்ற  பார்வையும், சிலசமயம்  வெறித்த  பார்வையுமாய்  அவனுடைய  உலகம்  வேறுமாதிரி. யோசிக்க  தெரியாத  மனநிலையோடு, ஆனால்  யோசிக்கும்  பாவனையில்  அவனிருப்பதை  பார்க்கும்  புனிதாவுக்கு  வயிறு  பிசையும்.

போகாத  கோவிலில்லை, வேண்டாத  தெய்வமில்லை, செய்யாத  நேர்த்திக்கடனில்லை. எத்தனை  இல்லைகள். அதனால்  பிரயோஜனமுமில்லை  என்பதுதான்  வேதனை.

நாலுவார்த்தை  பேசத்தெரியாது, தானாக  சாப்பிடத்தெரியாது, மல, ஜலம்  கழிக்க  வேண்டுமென்று  சொல்லத்  தெரியாது. மொத்தத்தில்  உயிருள்ள  ஜடம்.

“நாளாக, ஆக  கொஞ்சம், கொஞ்சமா  முன்னேற்றம்  தெரியும்” என்றார்கள். அவர்களெல்லோரும்  மன  ஆறுதலுக்காக  சொல்கிறார்கள்  என்பதை  புனிதா  புரிந்துகொண்டாள்.

க்ளினிக்கில்  கூட்டம்  சேர  ஆரம்பித்தது. குழந்தைகள்  அவ்வளவு  சுகவீனத்திலும்  சும்மாயிருக்கவில்லை. சிலர்  நாற்காலியை  நகர்த்தி  விளையாடினர். ஒரு  குழந்தை  எடை  இயந்திரத்தில்  ஏறி  குதித்தது. ஒரு  பெண், மருத்துவர்  அறைக்குள்  ஓடப்பார்த்தது.

பதினான்கு  வயது  ஈஸ்வரனோ  வாயில்  எச்சில்  ஒழுக  அமைதியாய்  படுத்துக்  கிடந்தான். புனிதா  டவலால்  அவன்  வாயை  துடைத்துவிட்டாள்.

முன்பெல்லாம்  யாராவது  பார்த்து  விசாரிப்பார்களோ  என்று  பயமாக  இருக்கும். இப்போது  பழகிவிட்டது. கடக்கும்போது  ஒரு  பார்வை  அழுத்தமாக  பதித்துவிட்டு  நகர்பவர்களை  எளிதாக  கடக்கின்ற  மனோபாவத்துக்கு  அவள்  வந்து  விட்டிருந்தாள்.

அடிமட்ட  வர்க்கம். கோபாலுக்கு  தனியார்  உத்தியோகம். சொற்ப  வருமானம். சொத்து, பத்து  எதுவுமில்லாத  பின்புலம். எல்லாமே  குறைவுதான்.

அந்த  குறைவிலும்  ஒரு  நிறைவிருந்தது  ஆரம்பத்தில். மறுநாள்  விடியும்போது கவலைகளற்ற  விடியலாக  இருந்தது  அப்போது. பிள்ளை  உண்டானபோது மகிழ்ச்சியாயிருந்தது. அந்த  குழந்தை குறைப்பிரவசத்தில்  ஏழாம்  மாதமே பிறந்தபிறகு  நிலமையே  அடியோடு மாறிப்போனது.

“குழந்தைக்கு  மனவளர்ச்சி  இல்லை. சராசரி  குழந்தையா  இவனால  வளரமுடியாது. நீங்க  அதீத  பொறுமையோட  இவனை  வளர்க்கணும். தன்  வேலைகளைத்  தானே  செஞ்சிக்கற  அளவுக்கு  இவனுக்குப்  பயிற்சி  கொடுக்கவேண்டியது  உங்க  கடமை.”

மருத்துவர்  கூறியபோது  அவ்வளவுதானா  என்றிருந்தது  புனிதாவுக்கு. ஓங்கி குரலெடுத்து  அழவேண்டும்  போலிருந்த  எண்ணத்தைக்  கட்டுப்படுத்தி முந்தானையில்  முகத்தை  அழுந்த  துடைத்துக்கொண்டாள்.

ஈஸ்வரன்  பெயரை  எப்போது  கூப்பிடுவார்களோ  என்றிருந்தது  புனிதாவுக்கு. ஃபேனுக்கு  நேராக  அமர்ந்திருந்தபோதும்  கோடை  வெயிலுக்கு  உடல்  வியர்த்து  வழிய, கழுத்தைத்  துடைத்து  கொண்டு  நிமிர்ந்தவள்  கண்ணெதிரே  அந்த  வாசகம்  பளிச்சிட்டது.

‘வருத்தப்பட்டு  பாரம்  சுமக்கிறவர்களே, நீங்கள்  என்னிடம்  வாருங்கள். நான் உங்களுக்கு  இளைப்பாறுதல்  தருகிறேன்.’

இயேசுநாதர்  இருகைகளையும்  விரித்து  ஆசீர்வதிக்க, கீழே  எழுதப்பட்டிருந்த அந்த  வாசகம்  புனிதாவின்  மனதை  என்னவோ  செய்தது.

“ஈஸ்வரன்….” பெயர்  சொல்லி  அழைத்த  ரிசப்ஷன்  பெண்,

“அடுத்தது  நீங்கதாம்மா  போகணும். பையனைக்  கூட்டிட்டு  வாங்க….” என்றாள்.

புனிதா  மகனை  எழுப்பி  மருத்துவரின்  அறையின்  முன்பாக  கொண்டுவந்து  நிறுத்தினாள். காய்ச்சல்  விட்டு  உடல்  லேசாக  வியர்த்துவிட்டிருந்தது. ரோஸ்  நிற  மருந்து  செய்த  வேலை.

மருத்துவர்  அழைக்க  உள்ளே  சென்றவள்  ஈஸ்வரனை  மடியில்  அமர்த்தி  தானும்  அமர்ந்தாள். ஒரு  நொடிப்பொழுதில்  அவனின்  நிலைமை  புரிந்துகொண்ட  மருத்துவர்  ஸ்டெதாஸ்கோப்  வைத்துப்  பரிசோதித்தார். கண்ணின்  கீழிமைகளை  இழுத்து  பார்த்தார்.

“குறைமாசத்துல  பிறந்த  குழந்தையா…?”

“ஆமாங்க  டாக்டர். ஏழு  மாசத்துல  பொறந்துட்டான்.”

“ட்ரீட்மெண்ட்  கொடுத்தீங்களா…?”

“ஆரம்பத்துல  கொஞ்சநாள்….அப்புறம்  முடியலை.”

அவளின்  தோற்றம்  பார்த்தவர்  புரிந்துகொண்டு  நிதானமாய்  புன்னகைத்து  பின்,

” இதுவும்  கடந்து  போகும்” என்று  மெல்லச்  சொன்னார்.

“மருந்து  கசப்பாயிருந்தா  துப்பிடறான்  டாக்டர்.”

புனிதா  கவலையோடு  சொன்னாள்.

” இனிப்பான  மருந்தா  எழுதி  தர்றேன்மா….இதுல  எழுதியிருக்கிற  மருந்துகளை  மூணுநாள்  விடாம  கொடுங்க. அதன்பிறகும்  காய்ச்சல்  விடலன்னா  திரும்பவும்  கூட்டிட்டு  வாங்க” என்றவர்,

” ஏம்மா, பையன்  தன்  வேலைகளை  ஓரளவு  செய்வானா….கையில  உருட்டி  போட்டா  சாப்பிடறது, தண்ணி  எடுத்துக்  குடிக்கறது, வயிறு  வலிச்சா  சைகையால  உணர்த்தறது  இந்தமாதிரி…” என்று  கேட்க, புனிதா மறுதலிப்பாய்  தலையசைத்தாள்.

” இ…இல்ல  டாக்டர். சோறூட்டி, குளிப்பாட்டி, மல, ஜலம்  கழிக்க  வச்சு  எல்லாமே  நான்தான்  பார்த்து, பார்த்து  செய்யறேன். பொறந்தப்ப  எப்படியிருந்தானோ  அப்படித்தான்  இப்பவும்  இருக்கான்.”

இதைச்  சொன்னபோது  புனிதாவுக்கு  தொண்டை  அடைத்தது. மற்ற  குழந்தைகள்  துருதுருவென்ற ஓடியாடி விளையாடிக்கொண்டிருக்கையில்  கை, கால்கள்  சாட்டை, சாட்டையாக  வளர்ந்திருந்தும்  மடியை  விட்டிறங்காத  தன்  குழந்தையை  எண்ணியவள்  கண்களில்   குபுக்கென்று  கண்ணீர்  எட்டிப்பார்த்தது.

சட்டென  கண்ணீரை  உள்ளிழுத்து  மருத்துவர்  எழுதித்தந்த  மருந்துச்சீட்டை  வாங்கிக்கொண்டு  ஈஸ்வரனோடு  வெளியில்  வந்தவள்  ரிசப்ஷனில்  பணம்   செலுத்தி  அருகிலிருந்த   மருந்துக்கடையில்  மருந்து  வாங்கி   ஆட்டோ  பிடித்து  வீடு  வந்து  சேர்ந்தபோது  மணி  பன்னிரண்டாகியிருந்தது.

காலையில்  கிளம்பும்போதே  சாதம்  வடித்து, ரசம்  வைத்துவிட்டு  சென்றிருந்தாள். கோபால்  மிளகாய்ப்பொடி  தடவிய  இட்லி  கட்டிக்கொண்டு  போய்விட்டான்.

வாய்க்கு  ருசியாக  தின்று  பார்க்க  இருவருக்குமே  ஆசையில்லை. பொருளாதார  வசதியில்லாதது  ஒரு  காரணமென்றால், ஈஸ்வரன்   இன்னொரு  காரணம்.

ருசியற்ற  வாழ்க்கையில்  ஒட்டவைத்துக்கொண்டு  வாழ்ந்து  தொலைக்க  வேண்டியிருந்ததில்  உணவின்  ருசி   பற்றிய  அபிப்ராயம்  இருவருக்கும்  தொலைந்துவிட்டிருந்தது.

புனிதா  இரண்டு   மேரி  பிஸ்கட்டுகளைத்  தண்ணீரில்  நனைத்து  ஈஸ்வரனுக்கு  ஊட்டிவிட்டாள். உதட்டுக்கு  மேலே  மெல்லறும்புகளாக  செம்பட்டை  மயிர்  முளைவிட்டிருந்தது.

பதின்ம  வயதின்  ஆரம்பகட்ட  வளர்ச்சி. பெண்ணுடையதைப்  போல  ஆணின்  வளர்ச்சி  வெளியே  தெரிவதில்லை. அது  அவனுக்கு  மட்டுமேயான  ரகசியமாக  அமைந்துவிடுகிறது.

 

ஈஸ்வரன்  ரகசியங்கள்  ஏதுமற்ற  ஆனால்  வளர்ச்சிகளை  சுமந்து  நிற்கின்றவன்  என்றெண்ணிய  புனிதாவுக்கு  மறுபடியும்  அழுகை  வந்தது. அவன்  பிறந்தது  முதலே  இப்படித்தான்  எதெதற்கோ  புனிதா  அழுது  கொண்டிருந்தாள்.

” புனிதாக்கா…..ரேஷன்ல  பருப்பு  போடுறாங்க. வர்றீங்களா  வாங்கிட்டு  வரலாம்.”

வாசலிலிருந்தபடியே  பக்கத்துவீட்டு  சியாமளா  குரல்  கொடுத்தாள். ஒருவரும்  வீட்டிற்குள்  வர  மாட்டார்கள்.  ஈஸ்வரனை  நினைத்து  பயம்.

” நீ  போ  சியாமளா. நான்  வரல…..”

புனிதா  அவளை  அனுப்பி  வைத்தாள்.

ஈஸ்வரனைத்  தனியேவிட்டு  எங்கும்  செல்லமுடியாது. கோபால்  இருந்தால்  பார்த்துக்கொள்வான். அதனாலேயே  வெளியில்  செல்ல  புனிதா  மாலை  நேரங்களைத்  தேர்ந்தெடுத்துக்கொண்டாள்.

மளிகை, காய்கறி  வாங்க, மில்லுக்குப்போக  மாலை  நேரம்  தோதாக  இருந்தது. மற்றபடி  கல்யாணம், காட்சிக்கெல்லாம்  செல்வதில்லை. இனிமேல்  நமக்கென்ன  நல்லது  நடக்கப்போகிறது, அவர்கள்  வர  என்கிற  விட்டேத்தியான  குணம்  அவளை  இறுகப்பிடித்திருந்தது. ஆனால்  இழவு, துக்கத்துக்கு  தவறாமல்  போய்விடுவாள். கேட்டால்,

” நாளைக்கு  நம்மளை  தூக்கிட்டுப்போக  நாலு  பேரு  வேணுமில்ல. அதுக்காகத்தான்  போறேன்” என்பாள்.

என்னவோ  ஒரு  வாழ்க்கை. அதில்  பொருந்தமுடியாத  சூழல். தினந்தினம்  முன்னோக்கி  நகர்வதில்  ஒரு  ஆசுவாசம். காலண்டரில்  தேதி  கிழிக்கப்படும்போது  நாளில்  ஒன்று  முடிவதாய்  ஒரு  சின்ன  திருப்தி.

புனிதா  வேதனையோடு  ஈஸ்வரனை  ஏறிட்டாள். வாழ்க்கையில்  இடைச்செருகல்  இந்த  ஈஸ்வரன். அவனைச்  சுற்றி  சுழன்றடிக்கிற  எண்ணங்களை  கட்டுப்படுத்த  முடிந்ததேயில்லை.

கவலைகள்  திணித்த  பொம்மைகளாக  கோபாலும், புனிதாவும்  ஒரு  வட்டப்பாதையில்  சுழலும்  பூமிபோல  ஈஸ்வரனை  சுற்றி  வந்து  கொண்டிருந்தனர்.

இருவருக்குமிடையேயான  பேச்சு  குறைந்துபோய்விட்டது. வாயைத்  திறந்தால்  ஈஸ்வரனைப்  பற்றிய  பேச்சின்றி  வேறெதையும்  பேச  முடிந்ததில்லை. அதனாலேயே  பேச்சு  சுருங்கிவிட்டது.

இரவின்  புழுக்கங்கள்  மீது  கோபாலுக்கு  ஏக  வெறுப்பு. அன்றொருநாள்  உண்டான  புழுக்கத்தில்  கிளர்ந்தெழுந்த  காதல்  கைச்சுமையாகிப் போனதிலிருந்தே  அவன்  புழுக்கத்தை  அறவே  வெறுத்தான்.

புனிதா  குப்பியில்  மருந்தை  சரித்து  ஈஸ்வரனுக்கு  புகட்டினாள். கொஞ்சம்  கடக், கடக்  சத்தத்தோடு  தொண்டைக்குள்ளிறங்க, மீதி  கடைவாயோரம்  வழிந்தது.

ஈரத்துணியில்  அவன்  வாயைத்  துடைத்தவள்  மெல்ல  பாயில்  படுக்கவைத்தாள். அவன்  முரண்டு  பிடித்து  இடவலமாக  தலையை  ஆட்டினான்.

” படுத்து  தூங்குடா….அம்மாவுக்கு  நெறைய  வேலையிருக்கு.”

புனிதா  சொல்ல  அவன்  இலக்கின்றி  வெறித்தான். பார்வையில்  காட்சிகள்  பதிவதில்லை  என்றாலும்  அந்தப்பார்வை  எங்கோ  வெறித்திருக்கும்.

‘ இந்த  வாழ்க்கை  இவனுக்கு  சந்தோஷமா, துக்கமா…..இரண்டிற்கும்  நடுவிலான  மத்யம  நிலையா….அல்லது  கடன்  கழிக்க  பூமியில்  இறக்கிவிடப்பட்டவனா  இவன். இந்த  விதை  என்  கருப்பைக்குள்  விதைக்கப்பட்டதன்  மூலமாக  என்  கடன்  கழிக்கப்பட்டுவிட்டதா…..கடனுக்கான  வட்டியை  இப்போது  நான்  செலுத்திக்கொண்டிருக்கிறேனா……’

எண்ணங்கள்  குமிய, குமிய  மனம்  அசதியானதில் கண்களை  இறுக  மூடிக்கொண்டாள். நல்லதாய்  உடுத்திக்கொண்டதில்லை, நாலுபேரோடு  சிரித்து  பேசியதில்லை, கோவில், குளம்  போனதில்லை. ஈஸ்வரன்  பிறந்தபிறகு  வழித்து   போட்டாற்போல்  அத்தனை  சந்தோஷங்களும்  வடிந்துவிட்டன.

புனிதா  ஜன்னலுக்கருகில்  நாற்காலியை  இழுத்துப்போட்டு  ஈஸ்வரனை  அதில்  அமர்த்தினாள்.

” சமத்தா  இப்படியே  உக்காந்துக்கோ. அம்மா  துணி  துவைச்சிட்டு  வந்துடுறேன்.”

சொல்லிவிட்டு  கொல்லைப்புறம்  வந்து  ஊற  வைத்திருந்த  துணிகளைக்  கசக்கி  பிழிய  ஆரம்பித்தாள். உச்சி  வெயில்  மண்டையைப்  பிளந்தது.

” ஈஸ்வரா, சமத்தா  உக்காந்துக்கோ….”

புனிதா  குரல்  கொடுத்தாள். அடிக்கடி  இப்படி  குரல்  கொடுப்பதன் மூலமாக  தன்னிருப்பை  உணர்த்துபவளுக்கு  மனசு  மட்டும்  எப்போதும்  அவனிடமிருக்கும்.

ஒரு  சிறு  ஓட்டம்தான்  வீடு. அதில்  பத்துக்கு  பத்தில்  சிறிய  அறை. அந்த  அறையில்  ஈஸ்வரனின்  மூத்திர  வாடையை  மீறி  பினாயில்  மணக்கும். புனிதா  எவ்வளவோ  சுதாரிப்பாயிருந்தும்  சில  நேரங்களில்  அவன்  நின்றவாக்கில்  மல,ஜலம்  கழித்து  விடுவான்.

அதை  சுத்தம்  செய்வதற்குள்  புனிதா  திக்குமுக்காடிப்போவாள். முன்  செய்த  வினையில்  சிறு  துரும்பளவு  குறைகிறது  என்று  அந்நேரத்தில்  மனம்  அவளை  ஆசுவாசப்படுத்தும்.

புனிதா  துணி  அலசிய  தண்ணீரை  கீழே  சாய்த்துவிட்டு  துணிகளைக்  கொடியில்  உலர்த்தினாள்.

ஈஸ்வரனிடமிருந்து  இரண்டு  நிமிடங்களாக எந்த  சத்தமுமில்லை. அவனைப்  பொறுத்தவரை  அரை  நிமிடம்கூட  கணக்கில்  எடுத்துக்கொள்ளப்படவேண்டிய  மணித்துளிதான்.

சாதாரணமாக  அவன்  ஆ…..ஊ…..என்றோ, உஸ்  என்றோ  சத்தமெழுப்பிக்  கொண்டேயிருப்பான். வாய்  ஓய்ந்துவிட்டால்  கையால்  படபடவென்று  ஜன்னல்  கதவையோ, சுவரையோ  அடிப்பான். சிலசமயம்  முட்டிக்கொள்வதும்  உண்டு.

ஆரம்பத்தில்  சகித்துக்கொள்ளமுடியாமல்  தவித்த  புனிதா  அதுதான்  சாசுவதம்  என்றுணர்ந்து  அதில்  பொருந்திப்போக  பழகிக்  கொண்டாள்.

எண்ணங்களற்ற  தன்  வாழ்க்கையை  ஈஸ்வரன்  சத்தங்களால்  நிரப்பிக்கொண்டான். சத்தங்கள்  எப்போதும்  அவனை  சூழ்ந்திருந்தன. சத்தங்களடங்கிய  அமைதி  அவனை  அச்சுறுத்தியதோ  என்னவோ, ஏதோ  ஒருவகையில்  ஒலியை  எழுப்பிக்கொண்டேயிருந்தான்.

சில  நிமிடங்களாக  எந்த  ஒலியுமின்றி  அறை  அமைதியாயிருந்ததில்  புனிதாவுக்கு  இருப்பு  கொள்ளவில்லை. புடவையை  உதறி  சொருகிக் கொண்டவள்  அவசரமாய்  உள்ளே  வந்தாள்.

அறையில்   ஜன்னல்  கம்பிகளைப்  பற்றியபடி  ஈஸ்வரன்  முதுகுகாட்டி  நின்றிருந்தான். புனிதா  சத்தம்  உண்டாக்காமல்  அருகில்  போனாள். ஒருநாளும்  அவன்  அப்படி  அமைதியாய்   நின்றதில்லை. நின்றிருந்த  தோரணை  வித்தியாசமாயிருந்தது.

ஈஸ்வரன்  ஜன்னல்  கம்பிகளை  அழுந்தப்  பற்றியிருந்தான். முகத்தில்  ஒரு  பரவசநிலை. கண்கள்  ஒளிர்ந்தன. வாய்  திறந்த  நிலையிலிருந்தது. குழைவான  உடல்  மொழியோடு  நின்றிருந்த  அவனின்   அரைக்கால்  சட்டை  நனைந்திருந்தது.

ஐ.கிருத்திகா-இந்தியா

ஐ.கிருத்திகா

(Visited 237 times, 1 visits today)