நாய்கள் உலகம் -மொழிபெயர்ப்பு சிறுகதை-ஹிலால் ஷுமான்-தமிழில்: மிஸ்பாஹுல்-ஹக்

அவனது கனவு தன் கண்முன்னால் நிகழ்ந்துக்கொண்டிருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அடிக்கடி அவனிடம் வருகின்ற அந்த கனவில், எந்த இலக்குமின்றி அவன் அந்த நகரின் வீதிகளில் நடந்துக்கொண்டே இருப்பான், மனிதர்களே இல்லை, இருபுறமும் வெறிச்சோடிக் கிடக்கும் கட்டிடங்கள் இடிபாடுகளிலும் குப்பைகூளங்களிலும் மூழ்கிக்கிடக்கும். நாய்கள் மட்டுமே அவனை நெருங்கி நடக்கும். அவை அண்மிக்கும்போது, அவனது அச்சம் இன்னும் அதிகரிக்கும். தன் இதயத்துடிப்பின் சப்தத்தை பலமாக அவனால் கேட்க முடியும். அச்சத்தை வெளிக்காட்டாமல் கவனமாக தனது மெதுநடையை அவன் தொடர்ந்துக்கொண்டே இருப்பான். ஓடுவது அவைகளின் கவனத்தை ஈர்த்துவிடக்கூடும். நானும் அவர்களில் ஒருவன் என அவை உணரவேண்டும், அப்படி நிகழ்வதற்கு, நான் என் நிலையான வேகத்தில் நகர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும். இருந்தாலும், நாய்கள் அவனை காணததுபோல கடந்து செல்கின்றன. இந்த உலகில், இந்த நாய்களின் உலகில் அவன் ஒரு அந்நியன் என்கிற காரணத்தினாலா?

மிஸ்பாஹுல் ஹக்
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

அவன் நடந்துக்கொண்டே இருந்தான். அவனை சூழ்ந்த கட்டிடங்கள், இடிபாடுகள், குப்பைகள் மீளுருப்பெற்று பெருக்கம் அடைந்தன. தொடக்கமொன்றில் முடிவும், முடிவொன்றில் தொடங்கும் மூடிய வெளியிடம் ஒன்றில் சிக்கிக்கொண்டது போன்ற மாயையை அவனில் அவை  உணர்த்தியது. ஆனாலும்  அந்த பிராணிகள் அவன் தவறு என்பதை உணர்த்தின. அப்படி அவன் ஒரு மீள்சுழலும் தடமொன்றில் இருந்திருந்தால், நாய்கள் மீண்டும் தோன்றியிருக்கும், அவனை நெருங்கி அணுகியிருக்கும், அவன் அருகால் மீண்டும் நடந்திருக்கும். அப்படி நிகழவில்லை. நாய்கள் அவனுக்கு மிக முன்னால் தூரமாக நடந்துக்கொண்டிருந்தன, அவைகளை வழித்தொடர அவன் தன்னை துரிதப்படுத்த வேண்டியிருந்தது. மற்றொரு யோசனையும் அவனைக் கவ்விக்கொண்டது: முடிவிலியான இந்த பாதையில், மீளுருப்பெரும் சிறு சிறு அலகுகள் கொண்டு இந்த உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சடுதியாக, அவன் முன்னால்  பார்த்தபோது, அவனால் எந்த நாய்களையும் காணமுடியவில்லை. நான் அவைகளை மறையச்செய்திருந்தேன். காரணம், நான் எண்ணங்களில் மிக ஆழ்ந்து மூழ்கிக் இருந்தேன். அடுத்த முறை, என் கவனத்தை அதிகம் குவித்திருப்பேன். ஆனாலும், தொடர்ந்து பின் வந்த இரவுகளில், மீண்டும் மீண்டும் அதே காட்சிகள் அதே அங்கங்கள்; கட்டிடங்கள், இடிபாடுகள், குப்பைகள், நாய்கள், தடயம் கூட இல்லாமல்போன மனிதர்கள். அவனது உணர்வுகள் கனவுக்கு கனவு மாறுபட்டாலும் எண்ணங்கள் எப்போதும் மாறவே இல்லை. நாய்களை அவன் தொலைத்த நாழிகையில் கனவுகளும் முடிந்து போயின.

தன் படுக்கையிலிருந்து விழித்து, அவனது அருகில் உறங்கும் அவளை பார்ப்பான், காலம் இரவில் சிக்கிக்கொண்டதைப் போல. அவரால் நிகழ்வுகளை தவிர்க்க முடியவில்லை என்பதைப்போல. அவர்களின் உறவு பாதாள முடிவை அடைவதைப் போல. கனவுகள் பற்றி ஆழ்ந்து யோசித்து அவைகளை வியாக்கியானம் செய்வதைப் போல, அப்படியே அவன் படுக்கையில் கிடந்திருப்பான். கவனமாக, எந்த அசைவுமற்று, அவளை பார்த்திருப்பான். தன் கனவுகளின் நினைப்பை நீர்த்துவிடும் வரைக்கும், அவனது இதயத்துடிப்பு அமைதியடைகிற வரைக்கும், அவர்கள் இருவரைத் தவிர யாருமே இல்லாத அந்த தனித்த அறையில் அப்படியே செய்துக்கொண்டிருப்பான்.

அவன் தன் கனவுகளை கொடுங்கனவாக எப்போதும் கருதவில்லை. அவனது உறக்கம் எப்போதும் அமைதியான சீரான தூக்கமாகவே இருந்தது, அவன் எப்போதும் சிறு சப்தமேனும் எழுப்பவில்லை, கண் அசைவு தூக்கம் கொள்ளும் அவள் கூட அவனால் ஒருபோதும் உறக்கம் கலையவே இல்லை. கனவுகள் போலில்லாமல், கொடுங்கனவுகள் அவனை படுக்கையில் வியர்க்கச் செய்பவை. வெறும் உற்சாகத்தால்தான் தன் நாடித்துடிப்பு அதிகரிப்பதாக காரணம் கொண்டான். அவன் நியாயப்படுத்திக் கொண்ட காரணம், குறிப்பிட்டு உறுதியாக இல்லாதபோ

அவனது கனவு மெய்ப்படுவதற்கு முன்பிருந்த இரவில், புதிய ஒரு முடிவிடத்தை அவன் கண்டான். இம்முறை, நாய்கள் காணமல்போன பின்பு, எதுவுமே அற்ற திறந்த வெளியை கண்டான், அங்கே கட்டிடங்கள் இல்லை, இடிபாடுகள் இல்லை, குப்பைகள் இல்லை.அது மிக இறுக்கமானதாக மூச்சுத்திணறல் தருவதாக இருந்தது. அந்த உணர்வு இன்னும் வளர்ந்தது. இருந்தாலும் அவனால் முன்நகரவோ அல்லது பின்வாங்கவோ முடியாமலே இருந்தது. அங்கே வெளியேற எந்த வழியும் இருக்கவில்லை, அவனால் தெளிவாக சிந்திக்க முடியவே இல்லை. அளவிட்டுக் கொள்ள முடியாத நாழிகைகள் அவன் அங்கேயே ஸ்தம்பித்து நின்றிருந்தான், கடைசியாக கதறிக்கொண்டே அவன் விழித்துக்கொள்ளும் வரை, அப்போது அவனது உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது. ‘இதுவொரு கொடுங்கனவு’ அவன் சொல்லிக்கொண்டான்.  ‘இதுவொரு கொடுங்கனவு’.

அவன் பக்கமாக உருண்டு, அங்கே அவள் இல்லை என்பதை கண்டபோது அச்சர்யபட்டான். அவள் மறைந்துபோனதை கனவின் மாற்றத்தின் ஒரு பகுதியாகவே அவன் கண்டான். விரைந்த அவனது மூச்சோடு இணைந்து வளர்ந்த அவனது எண்ணங்கள், கழிப்பறையின் பறிப்பு அழுத்தும் சப்தத்தால் குலைந்தன. அவனுடைய டீ-ஷர்ட்டை கழட்டிவிட்டு, அருகில் இருந்த துவாலையினை எடுத்து, தன் வியர்வையினை உலர்த்தினான். ஈரமாகி கிடந்த படுக்கை விரிப்பை அகற்றினான். பின்பு அவன் சமையலறை பக்கமாக நகர்ந்து, எல்லாவற்றையும் சலவை இயந்திரத்தினுள்ளே எறிந்தான். அதே நிறத்தில் இன்னொரு பொருத்தமான விரிப்பை கொண்டுவந்தான். அவன் படுக்கையை மீண்டும் சரி செய்கிறபோது, துாவாலைக்குழாயில் இருந்து நீர் கொட்டும் சப்தம் அவனால் கேட்கக்கூடியதாக இருந்தது. படுக்கை அருகில் இருந்த இழுப்பறையில் இருந்து குறிப்பேடுவொன்றை எடுத்துக்கொண்டான், படுக்கையில் சாய்ந்துக்கொண்டு, எழுதினான்;

கட்டிடங்கள்-இடிபாடுகள்-குப்பைகள்.

அவன் அந்த வார்த்தைகளையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான், அவைகளுக்கு இடையிலான தொடர்பை கண்டடைய முயற்சித்துக் கொண்டிருந்தான்.  இன்னும் இரண்டு வார்த்தைகள் சேர்த்தான்: ‘நான்’ இடது புறமாகவும், ‘நாய்கள்’ வலதுபுறமாகவும், அவைகளை சுற்றி ஒரு வளையமிட்டான். அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவே இல்லை, குளியலறையின் கதவருகில் அவளை, அவள் புன்னகையை பார்ப்பதற்காக மட்டும்  மீண்டும் அவன் அந்த குறிப்பேட்டை இழுப்பறையிலேயே வைத்துவிட்டான்.

அடுத்த நாள், தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருந்த போது அவனது கனவை காட்சியாக திரையில் கண்டான். பெய்ரூத்தின் வீதிகள் குப்பைமேடுகளால் நிரம்பி வழிந்தன. இதுவே முதல் தப்படி என அவன் நினைத்தான். அடுத்து, இடிபாடுகளின் குவியல்கள் தோன்றும், மனிதர்கள் காணமல்போய்விடுவார்கள், கட்டிடங்கள் தரைமட்டமாகி விடும். அவன் கவனமாக பார்த்தான், கனவுகளில் அவன் பார்த்த வீதியை காண்பதற்கு காத்திருந்தான், ஆனாலும் அவை தோன்றவே இல்லை.

‘எல்லாமே சரியாக இருக்கிறதுதானே’ அவனது கவனமாற்றத்தை கவனித்த அவள் கேட்டாள். அவன் தொலைகாட்சியை சுட்டிக்காட்டி, இவை நிகழ்வதை அவனது கனவுகளில் கண்டதாக பதில் சொன்னான்.

‘அடுத்தமுறை லாட்டரியில் வெல்வதாக நீ கனவுகண்டால் நல்லது’ என அவள் சிரித்தாள். அவளோடு சேர்ந்து அவனும் சிரித்தான். தனது புதிய கோட்பாட்டை வெளியே சொல்லிவிடக்கூடாது என முடிவு செய்து கொண்டான். கனவு நிதர்சனமாகிவிட்டதனால் அவன் தன கனவை இழந்துவிட்டான். அந்த கனவுகள் மீண்டும் வரவே வராது என உறுதியாக நம்பினான். இது அவனை தொந்தரவு செய்தது, இழப்பிற்காக மட்டுமில்லை, தொடர்ச்சியாகவே அது அவனுக்கு புரியாமலே இருந்ததிற்காகவும். தனக்கு ஏதோவொன்று தெரியும் என சொல்ல முடியும், ஆனால் அதனை அவனால் எந்த வழியிலும் வரையறை செய்ய முடியாது. எந்தவித அர்த்த்தத்தையும் உணர்த்தாமல் அவனது கனவுகள் இந்த உலகில் கடப்பது அவனுக்கு மேலும் எரிச்சலூட்டுவதாக இருந்தது.

தனது எண்ணங்களை கொல்வதற்கும், எரிச்சல்களை தணிப்பதற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தான். அவன் இறுதியாக சமையலறைக்கு வந்தான். நேற்றைய இரவுணவின் அழுக்கு பாத்திரங்கள் குவிந்திருந்தன. அவன் தன் சூழல் தெரியாதபடி அவைகளை கழுவி சுத்தப்படுத்துவதில் மூழ்கிப்போனான்.

‘நான் முடித்துவிட்டேன்’ கடைசித் தட்டை கழுவி முடித்து உலர் சட்டத்தில் வைத்து முடித்தும் சொன்னான். அவளுடைய பெயரை சொல்லி அழைத்தான், ஆனாலும் அவள் பதில் சொல்லவில்லை. அவளை தேடி படுக்கையறை நோக்கி அவன் நடந்தபோது, அவனது குறிப்பேட்டை திறந்தபடி அவள் நிற்பதை கண்டான். அவனது கிறுக்கல்களை அவள் கண்டுவிட்டாளோ? அவள் தன் தலையை உயர்த்திய போது இருவரது பார்வையும் சந்தித்துக் கொண்டன. அந்த நொடியில், அவனுக்கு நிச்சயமானது அவனுக்கு புரியாதது அவளுக்கு புரிந்திருக்கிறது.

ஆசிரியர் பற்றி:

மிஸ்பாஹுல்-ஹக்ஹிலால் ஷுமான் 1982 பெய்ரூத்தைபூர்வீகமாக கொண்ட லெபனிய நாவலாசிரியர். Stories of Sleep (2008), Napolitana (2010), Limbo Beirut (2012), and Once Upon a Time, tomorrow (2016) என்கிற நான்கு அரேபிய நாவல்களின் ஆசிரியர். அன்னா ஸியாஜ்கா ஸ்டாண்டனின் ஆங்கில மொழிபெயர்ப்பான Limbo Beirut (2016) PEN மொழிபெயர்ப்பு பரிசிலுக்காக 2017 வருடம் பரிந்துரைக்கப் பட்டதோடு Saif Ghobash Banipal பரிசிலுக்காக 2017 குறுகிய பட்டியலில்  தேர்ந்தெடுக்கப்பட்டது. மென்பொருள் வடிவமைப்பாளராக பணியாற்றிவரும் ஹிலால் ஷுமான் தற்போது ஐக்கிய அரபு ராச்சியம், மற்றும் டொராண்டோவில் வசித்து வருகிறார்

ஆங்கில மொழிபெயர்ப்பு.

தமிழில்: மிஸ்பாஹுல்-ஹக்

தமிழ் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு:

மிஸ்பாஹுல்-ஹக்ஹிலால் ஷுமானுடைய கதைகள் பெரும்பாலும் மீள்வாசிப்பை வேண்டுபவை. கதை நிகழ்கிற காலங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அது சென்று சேர்கிற மையம் பெய்ரூத், மே 2008. உற்புகையாக கவிந்துக் கொண்டிருந்த லெபானின் உள்நாட்டு யுத்தம் வெளிப்படையாக மீண்டும் உயிர்பெற்று எழுந்த காலம். உள்நாட்டு யுத்தம், அதன் அலைக்களிப்புக்கள், சேதாரங்கள், அங்கிருந்த அரசியல் இவைகளை அவர் நேரடியாக பேசாது, கதைகளின் படிமங்களின் வழியாக உணர்த்திப் போகின்றார். தெளிவான வரலாற்று செய்திகள், தகவல் துணுக்குகள் அவரின் கதைகளில் காணமுடிவதில்லை. அவரது மையப்புள்ளியை சென்றடைவதற்கு, அவர் பேசியிருக்கும் அரசியலை புரிவதற்கு அவர் பின்னியிருக்கும் படிமங்களை ஒரு வாசகன்  விலக்கி வாசிக்க வேண்டியிருக்கும். அவரது கதைகளும், நாவல்களும் மீள்வாசிப்பை வேண்டிநிற்கும்.

மிஸ்பாஹுல்-ஹக்- இலங்கை

 

(Visited 121 times, 1 visits today)