‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக  சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ?

வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை.  இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில்  நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல்  மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து  செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் துண்டித்து விட்டார். திரைப்படத்துறையில் நான் நடிக்கா விட்டால் என்னுடன்  இப்பொழுது நீங்கள் கதைத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். அவ்வளவு தூரத்திற்கு மனஉளைச்சல்களுடன் அமைதியின்றித் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனேயே அந்த நாட்களில் இருந்தேன். இத்தகைய புறச்சூழல்களே என்னை திரைப்படத்துறைக்குத் தள்ளியது.

கோமகன் : ஒரு பிரதியை கவிதை என்றும், கவிதை இல்லாதது என்றும் எப்படி வரையறை செய்யலாம் ?

..ச: வரையறை செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் மஹாகவி பாரதியாரின் கவிதைகளையே கவிதை இல்லை என்று கருதப்பட்டு வந்தது. ஏன் பல முன்னணிக் கவிஞர்களது கவிதைகளே கவிதை இல்லையென்று ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்டு இருந்தது. என்னைப்  பொறுத்தவரையில் ஒரு பிரதியின் மதிப்பீடு என்பது காலம் சார்ந்தது என்றே சொல்வேன். சமகாலத்திலோ அல்லது முன்னைய காலங்களிலோ நிரக்கரிக்கப்பட்ட கவிதைகள் வருங்காலத்தில் கொண்டாடப்படவும் கூடும். ஆனால் உரைநடையில் சொல்கின்ற உத்திகளுக்கும் கவிதையில் சொல்கின்ற உத்திகளும் உள்ள வேறுபாடுகள் மேலும் இரண்டுக்கும் இடையிலான உருவ மற்றும் மொழி உள்ளடக்க வேறுபாடுகள் போன்றவை கவிதையை இனங்காட்டுவதில் பங்களிக்கின்றன. முக்கியமாக எமது மனமே கவிதையை இனங்காட்டுவதில் முன்னணி வகிக்கின்றது. முக்கியமாக கவிதையென்பது அறிவு சார்ந்தது என்பதனை விட மனம் சார்ந்தது என்றே நான் கருதுகின்றேன். அறிவுப்பூர்வமாக கவிதையை இனங்காண முடியுமோ தெரியவில்லை ஏனெனினில் நான் கவிதை இயலில்  தேர்ந்தவன் அல்ல. கவிதை எழுதுகின்றவன் மட்டுமே. உண்மையில் உங்கள் கேள்வியானது ஒரு விவாதத்திற்குரிய விடயமே. இந்தக்கேள்விக்கான பதிலை கவிஞனான என்னிடம் மட்டும் கேட்காது  மொழியியல் கவிதையியல் துறைசார் வல்லுனர்களிடமும் கேட்டு நீங்கள் இந்தப் பதிலைப்  புரணப்படுத்துமாறு வேண்டுகின்றேன்.

கோமகன் : சொல்லாடல்கள், எண்ணங்கள் நாளாந்தம் மாறக்கூடிய சூழலில்நவீன கவிதைகள்என்ற பகுப்பு அவசியம் எனக் கருதுகின்றீர்களா ?

..ச: என்னைக் கேட்டால் கவிதைகளுக்கு எல்லைகள் இல்லையென்றே சொல்வேன். கடலுக்கு எல்லைகள் கிடையாது. அதே போல் உலகிற்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை மனிதன் தான் சக மனிதனுக்கு இலகுவாகப் பிரிவதற்காகவும் தெரியப்படுத்துவதற்காகவும் உருவாக்கிக் கொண்டான். ஆக மனிதனே தனது விருப்புகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்றாற் போல் பகுப்புகளை உருவாக்கிக் கொண்டான். நான் பகுப்புகளுக்கு ஏற்றாற் போல் கவிதைகளை யாத்ததில்லை. ஒரு சிலர் பகுப்புகளுக்கு ஏற்றாற் போல் கவிதை யாத்திருக்கின்றார்கள் தான், மறுப்பதற்கில்லை. ஆனால் பல நல்ல கவிதைகளை தந்த தருகின்ற கவிகள் வளைந்து குனிந்து கவிதைகளை யாப்பதற்குத் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். மரபுக்கு கவிதையில் உள்ள ஓசை நயம் எதுகை மோனை சமகாலத்தில் இல்லை. சமகாலத்துக்  கவிதைகளின் ஓசை நயங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அவை வெறும் வசன நடையாகவே உள்ளன. மரபுக்கவிதையில் ஓசை நயம் எதோ ஒருவகையில் தொடரத்தான் செய்கின்றது. அத்துடன் பாடமாக்கத் தக்க வகையிலோ அல்லது நினைவில் நிறுத்தும் படியான சொல்லாட்சிகளோ சமகாலத்துக் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதில்லை.  கவிதைகள் பற்றிய ஆய்வுகள் வேண்டும் தான் ஆனால் அதை பெரிய அளவுக்கு மூளையைக் கசக்க வேண்டிய அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன்.

கோமகன் : போர்க்கால கவிதைகள் குறித்து ?

..ச: உலகின் அனைத்துப் பாகங்களிலுமே போர்கள் நடைபெறும் பொழுது போர்க்கால இலக்கியங்கள் தன்முனைப்புப் பெற்று வந்திருக்கின்றன. இதற்கு ஈழமும் விதிவிலக்கல்ல. எனது ” உயிர்த்தெழுந்த நாட்களில்” சொல்லப்படுகின்ற மாதிரி எல்லாக் காவியங்களுமே தோற்றுப்போனவர்களின் பிரக்ஞைகளில் இருந்தே அதாவது போர் பிரக்ஞைகளில் இருந்தே உன்னதமான காவியங்கள் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. பெரும் போர்கள் நடைபெற்ற நாடுகளில் போர் இலக்கியங்களில் “உருவம்” தொடர்பான பல வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன. பல விடயங்களைக் குறிப்பாக நேரடியாகச் சொல்ல முடியாத பல விடயங்களை இந்தப் போர் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன.

ஈழத்துக்கவிதை வரலாற்றில் போர்க்காலக் கவிதைகள் பெரும் செல்வாக்கப் பெற்று இருக்கின்றன. எமது போர்க்காலக் கவிதைகள் கடல்கடந்து தமிழகம் புலம்பெயர் தேசங்கள் அனைத்திலுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. எமது போர்க்காலக் கவிதைகளில் கவிதைகளும் பாடல்களும் போர்காலக்  கோஷங்களும் பாடுபொருளாக இருந்திருக்கின்றன. அத்துடன் போர்க்காலங்களில் போராடிய அனைத்துத் தரப்புப்  போராளிகளின் கவிதைகளில் அவற்றின் தரத்தை விட அவர்களின் ஈடுபாட்டையும் மனவுணர்வுகளையும் முக்கியமாகக் கணிக்கின்றோம். போர்க்காலக்  கவிஞர்களில் பலர் போர்க்களக் கவிஞர்களுடைய கவிதைகளில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தக் கவிதைகளிலோ இல்லை கதைகளிலோ  தரம் இருக்கின்றதா என்பதனைப்  பார்ப்பதை விடுத்து அதிலுள்ள உண்மைத்தன்மையை சமகாலத்து எழுத்தாளர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளல் வேண்டும்.

கோமகன் : ‘போர் இலக்கியம் என்றாலே, மக்களைக்கொல்லுவதற்கு உற்சாகமூட்டுவதும், கொல்லப்பட்ட மக்களுக்கு   இரங்கல் செய்வதும்தானே போரிலக்கியங்களின் வேலை’ என்று கவிஞரும் விமர்சகருமான றியாஸ் குரானா எனக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.  இதுபற்றி.. ?

..ச: போரிலக்கியங்களை நாம் இருவகைப்படுத்தலாம். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பொழுது ஜெர்மன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பாசிஸ்ட்டுகள் பாடிய கவிதைகழும் இருக்கின்றன. அவர்களையும்  பாசிசத்தையும்  எதிர்த்து விடுதலைக்காகப் போராடியவர்களினுடைய கவிதைகளும் போரியல் இலக்கியம் என்ற வகையில் தான் இருக்கின்றன. இவைகள் இரண்டையும் ஒரே தராசில்தான் வைத்துப் பார்க்கப் போகின்றோம் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு எதோ கோளாறு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

கோமகன் : உங்கள் முன்னைய கவிதைகளில் இருந்த மூர்க்கம் இப்பொழுது தளர்ந்ததிற்கான காரணம் என்ன ?

..ச: சூரியனுடன் பேசுதல் காலத்தில் இருந்து உயிர்த்தெழுந்த நாட்களின் பின்னர் அண்மையில் நாம் அனைவரும் தோற்றத்தின் பின்னரான எனது கவிதைகள் வாசித்தீர்களோ எனக்குத் தெரியவில்லை. குறிப்பாகத் “தோற்றுப் போனவர்களின் பாடல்” படித்திருக்கின்றிர்களா ?

கோமகன் : படித்திருக்கின்றேன். ஆனால் மரணத்தில் வாழ்வோம் காலப்பகுதியில் வெளியாகிய உங்கள் கவிதைகளின் பாடுபொருகளில் உள்ள  இறுக்கம் வாசகருக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையினைக் கொடுக்கின்ற விடயங்கள் போன்றவை சமகாலத்துக் கவிதைகளில் சற்று நெகிழ்வுத்தன்மையைப்  பார்க்க கூடியதாக இருக்கின்றது. அதைத்தான் குறிப்பிட்டேன்.  

..ச: நான் எனது கவிதைகளை நிரூபிப்பது கிடையாது. எனது கவிதைகளில் கோளாறுகள் இருக்கலாம் இருக்கக் கூடும்.  நீங்கள் மரணத்தில் வாழ்வோம் கவிதைத்தொகுப்பு வந்த கால கட்டத்தில் இலங்கையில் இருந்து வெளியாகிய பத்திரிகைக் குறிப்புகளையும் பின்னர் போர்க்களத்தில் வெளியாகிய மற்றும் சமகாலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்ற பத்திரிகை குறிப்புகளையும் கால அட்டவணைப்படுத்திப் பார்த்து விட்டு அதேவேளை வெளியாகிய கவிதைகளையும் மறுவளத்தில் அட்டவணைபடுத்தினீர்களானால் இந்த வேறுபாடுகளை இலகுவாகப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகின்றேன். ஒருவேளையில் அவை தொட்டுக்காட்டா விட்டால் அவை எனது தோல்வி என்றே எடுத்துக் கொள்கின்றேன்.

கோமகன் : இலக்கியத்தில் சிற்றிதழ்களின் பங்களிப்பு குறித்து ?

..ச: எங்களுடைய காலத்தில் சிற்றிதழ்கள் இல்லாவிட்டால் இலக்கியமே இல்லை என்ற நிலை இருந்தது அதுதான் எங்களுடைய தளமாக இருந்தது. முக்கியமாக மல்லிகை டொமினிக் ஜீவா அண்ணையை எனது வாழ்வில் மிகப்பெரிய முக்கிய பாத்திரமாகக் கணிப்பதற்கும் இதுதான் முக்கிய காரணம். தன்னுடைய முழுநேரத்தையுமே மல்லிகைக்காக அர்ப்பணித்த மனிதர் அவர்.எண்களைத் துரத்தித் துரத்தி எங்களிடம் படைப்புகளை வாங்கி பிரசுரித்துப் பல்வேறு அவமானங்களையும் தாங்கி மல்லிகையை பொன்விழா வரை கொண்டு சென்று விட்டவர். அவர் மட்டுமல்ல “அலை”  யேசுராசா ,டானியல் அன்ரனி, ராதேயன் போன்றவர்கள் சிற்றிதழ் துறைக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். போர்காலத்திலும் சிறப்பான போரிலக்கியம் முழுமையாக வீச்சடைவதற்குப்  போரின் முன்னே சிற்றிதழ்களை நடாத்தியவர்கள்தான் முழுமுதற் காரணியாக இருந்திருக்கின்றார்கள்.ஆனால் இதில் துயரமென்னவென்றால் சமகாலத்தவர் யாருமே அவர்களைக் கொண்டாடுவதுமில்லை கண்டு கொள்வதுமில்லை. குறிப்பாக டொமினிக் ஜீவா அண்ணையை அவர் வாழுங்காலத்தில் அவரை உங்களை போன்றவர்கள் எமது இதழியல் மற்றும் பதிப்பக வரலாறுகளை நேர்காணல் மூலம் ஆவணப்படுத்தினால் அது நாம் அவருக்கு கொடுக்கின்ற அதியுச்ச கௌரவம் என எண்ணுகின்றேன்.

கோமகன் : சிற்றிதழ்கள் ஓர் அருகிவரும் இனம் என்ற குற்றச்சாட்டு உண்டு ?

..ச: சமகாலத்தில் சிற்றிதழ்களுக்கான சூழல் அருகி வருகின்றது என்பது உண்மைதான். ஏறத்தாழ 70/80களில் திருமணமாகாத காலங்களில் இருந்த இளையவர்களால் சிற்றிதழ்களை உருவாக்கி தொடர்ச்சியாக இயங்க முடிந்தது.அதற்குப் பின்னரான கால கட்டங்களில் குறிப்பாக ஈழத்தவருக்கு வாழ்தலே துயரமாகிப் போனது அதில் இருந்து மீட்சி பெற அவர்களுக்கு ஏறத்தாழ 30 வருடங்கள் தேவைப்பட்டன. இந்தகாலகட்டங்களில் சிற்றிதழ்கள் தாமாகவே அருகி விட்டன. இந்தவேளையில் இலத்திரனியல் புரட்சியும் சமாந்தரமாக அசுர வளர்ச்சியடைந்தது. இப்பொழுது இலத்திரனியல் வழியாக இணைய சிற்றிதழ்கள் வெளியாகின்றன ஆனால் இவைகளை நாங்கள் இடைநிலை சிற்றிதழ்களாகவே கருதமுடியும் ‘சிற்றிதழ்கள்’ என்ற பகுப்பினுள் கொண்டுவரமுடியாது.  இருந்தபோதிலும் சமகாலத்தில் வாசிப்பு பழக்கங்கள் முன்னேறுகின்ற சூழலில் பேரிதழ்களுக்கும்  சிற்றிதழ்களுக்கும்  இடைப்பட்ட ‘இடைநிலைசிற்றிதழ்கள்’ உருவாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

கோமகன் : சமகாலத்து  சிற்றிதழ்கள் ஓர் பொறிமுறைக்குள்ளேயே சுழல்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

..ச: பொறிமுறை என்று நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?  

கோமகன் : பொறிமுறை என்றால் ‘ஒரே பகுப்புகள்’ சில சிறுகதைகள் , கவிதைகள் , கட்டுரைகள் என்று ஒன்றிற்குள் சுற்றியிருத்தலைக் குறிக்கும்.

..ச: முன்பு எப்படியாக இருந்தது என்று எண்ணுகின்றீர்கள்?

கோமகன் : முன்னைய சிற்றிதழ்கள் அரசியல் ரீதியாகவும் சமூகவியல், இலக்கியம் என்று பல்வேறு விடயங்களில் வாசகர்களை ஊக்குவித்தது. விவாதக்களங்களை உருவாக்கியது. ஏன் இலக்கிய ரீதியாகப் பல கோட்பாடுகளை உருவாக்கியது. ஆனால் இன்று இவைகள் அருந்தலாகவே இருக்கின்றன.

..ச: நீங்கள் குறிப்பிடுகின்றவை எல்லாம் கடந்த போர்க்காலங்களில் ஆரோக்கியமான போக்குகளைக் கொண்டு வரவில்லை. அது வடமாகாணமாகிலும் சரி தலைநகர் கொழும்பிலும் சரி இறுக்கமான போக்குகளே காணப்பட்டது. அதற்கு முன்னர் பேராசிரியர் கைலாசபதியும் அவருடைய எதிர்தரப்பினரும் நிறைய விவாதங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். கோட்பாடுகள் /கருத்தியல் ரீதியாக விவாதங்கள் அன்று முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மைதான். இத்தகைய விவாதங்கள் ஒரு போர் போலவே அன்று நடைபெற்றன. இந்தக்  கோட்பாட்டு அலைகளில் நானும் அள்ளுப்பட்டு இருக்கின்றேன். எனது பதின்ம வயதுகளில் அதாவது 72-களில் சாதிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து வன்முறையாளனாகவே சித்தரிக்கப் பட்டிருக்கின்றேன்,ஏன் என்னை ‘விசாரணையற்ற கொலை’ க்கு கூட காவல்துறை தேடியது. ஆனால் இன்று கோட்பாடுகள் / கருத்தியல் ரீதியாக முட்டி மோதுவதற்கான சூழல்கள் இன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் குறிப்பிடுகின்றது போல் இன்று அந்த விடயங்கள் பின்தள்ளி போய் விட்டன என்றுதான் எண்ணுகின்றேன். ஆனாலும் இன்றய இலத்திரனியல் வளர்ச்சியில் எந்த ஒரு விடயமும் அதன் உண்மைத்தன்மையும் இன்றுள்ள இளையவர்களுக்கு இலகுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிட விரும்புகின்றேன்.

கோமகன் : உங்களுடைய அரசியலானது எங்கிருந்து தொடங்கியது ?

..ச: எனது தாயார் உடுவில் மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிரும்பொழுது அதாவது 1917-இல் நவம்பர் மாதம் என எண்ணுகின்றேன் மஹாத்மா காந்தி  இலங்கைக்கு வந்த வேளையில் உடுவில் மகளிர் கல்லூரிக்கும் வருகின்றார். அவர் வரும்பொழுது எனது தாயாரும் அவரது தோழிகளும்  அவரை மாலை போட்டு வரவேற்கின்றார்கள். அன்றிலிருந்து எனது தாயார் ஒரு தீவிர காந்தீய சிந்தனைகளுக்குள் உள்வாங்கப்பட்டார். குறிப்பாக சாதிகள் தொடர்பான எனது தாயாரின் பார்வைகள் இங்கு முக்கியமாகின்றது. அவரது இறுதிக்காலம் வரையில் சாதிகளை பாராதும் இழிவு படுத்தாத வகையிலுமே நான் அவரால் வளர்க்கப்பட்டேன். அப்பொழுது இளவாலையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் பாடசாலையில் இருந்து களவாக கொம்யூனிஸ்ட் கட்சி நடாத்தும்சாதி எதிர்ப்பு போராட்டங்களுக்கு சென்று வந்திருக்கின்றேன். பின்னர் வன்னிக்கு செல்லும்பொழுது, குறிப்பாக மல்லாவி வடகாடு மாங்குளம் போன்ற பகுதிகளில் யாராவது சாதி பார்த்தால் அவர்களுடன் சண்டை பிடிப்பது என்று எனது இளமைப்பராயம் சென்றது.  அதிலும் குறிப்பாக மன்னாரில் கச்சேரியில் கடமை புரிந்த ஒரு காவல்துறை அலுவலகரைத் தாக்கியதால் நான் காவல் துறையாலும் தேடப்பட்ட நபராகவே இனம் காணப்பட்டேன். அனறைய காலகட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியும் வடக்கு தெற்கு மலையகம் முஸ்லீம் இடங்களில் இருந்த புரட்சிகரக்கருத்துள்ளவர்களும் என்னை அரண் போல் காத்தனர். அதேவேளையில் கொம்யூனிஸ்ட் கட்சியின் இனக்கொள்கையை நான் நிராகரித்தேன். வன்னியில் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு கிளைகள் இல்லாத காரணத்தினால் பல இடதுசாரிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்னை ஆதரித்தார்கள். இதனாலேயே  பல்வேறு தளங்களில் / கருத்துக்களுடன் ஒன்றிணைந்து பொது நோக்கத்திற்காக வேலை செய்கின்ற பண்பை நான் பெற்றுக்கொண்டேன். போராட்டகாலங்களிலும் எல்லா அமைப்புகளிலும் உள்ள நல்ல சக்திகளை இனம் கண்டு வேலை செய்ததும் அது பற்றி அந்த அமைப்புகள் என்மீது சந்தேகம் கொள்ளாது இருந்ததற்கும் அடிப்படை காரணிகளே நான் எனது இளமைப் பருவத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தான்.

கோமகன் : யாழ் பல்கலைகழக மாணவனாக இருந்த பொழுது அது உங்களை கூர்மைப் படுத்தியதா? ஆம் என்றால் எந்தவகையில் ?

..ச: நான் பல்கலைக்கழகம் சென்ற வேளையில் ஏறத்தாழ 60 வீதம் தமிழ் மாணவர்களும் 40 வீதம் சிங்கள மாணவர்களும் இருந்தார்கள். நான் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த வேளையில் ஒரு மருத்துவரை சாதி பார்த்த காரணத்தினால் செருப்பால் அடித்தேன் அதேவேளையில் ஒரு மக்கள் பணியாளரை சாதி பார்த்த காரணத்தினால் ஓர் அறையினுள் போட்டு பூட்டி தாக்கியதால் நீதிமன்றம் எனக்கு 5 வருடங்கள் சிறை செல்வதற்கு தீர்ப்பெழுத தயாராக இருந்தவேளையில் என் மீது விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல் துறையை சேர்ந்த காவலர் ஒருவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதை மக்கள் எனக்குத் தெரியப்படுத்திய காரணத்தினால் நான் அந்தக்காவலர் மீது வழக்குப் பதிய முயலும் பொழுது அந்தக்காவலர் என்னுடன் சமாதானத்திற்கு வந்து எனது வழக்கை திசைதிருப்பி நான் சிறை செல்லாது தப்ப வைத்தார். இந்த நிலையில் எனது பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் முடிந்தவிட்டது.  அத்துடன் எனக்கு பொருளாதார ரீதியாக அத்தனை வலு இல்லை. பல்கலைக்கழக விண்ணப்பம் அனுப்புவதற்கான செலவை  இப்பொழுது லண்டனில் வசித்துவருகின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடராஜா எனக்கு தந்தார். ஒருவாறாக எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.

எப்படியும் இந்த நான்கு வருடமும் அமைதியாக இருந்து படிக்க வேண்டும் என்று உறுதியுடனேயே பல்கலைக்கழகத்தில் நுழைந்தேன். ஆனால் முதல் நாளே அங்கு நடைபெற்ற பகிடி வதையினால் மிகவும் ஆத்திரமடைந்து பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முயன்ற பொழுது பேராசிரியர் கைலாசபதி வந்து என்னை தடுத்தார்.

76 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலே முறுகல் நிலை ஏற்பட்டது. அப்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மாணவர்கள் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்ததாக எனக்கு சொல்லியிருந்தார்கள்.  தமிழ் முஸ்லீம் மலையகம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பொதுவான மாணவர் தேர்தல் பட்டியலை உருவாக்குவதற்கு முன்னின்று அதற்கு தலைவராக ராஜரட்ணம் என்பவரை தெரிவு செய்தோம். அனால் அவரை மிரட்டி இறுதியில் தலைமை பதவிக்கான தேர்தலில் இருந்து அவர் விலகினார். ஒருவருமே தேர்தலில் நிற்கத்தயங்கிய பொழுது தவிர்க்க முடியாத காரணத்தினால் எனது பெயரைப் போட்டார்கள். 77 ஆம் ஆண்டு கலவர நேரத்தில் நாட்டின் வேறு இடங்களில் இருக்கும் தமிழ் மாணவர்களை பாதுகாப்பாக இங்கு கொண்டு வரவேண்டும் என்று இராணுவ போலீஸ் தரப்பிற்கு நான் கண்டிப்பாக சொல்லியிருந்தேன். யாழ் பல்கலைக்கழகத்தை இட்டுப் பல வதந்திகள் நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பரவியிருந்த வேளையில் எனது தோழர்களாக இருந்த பெரும்பான்மை இணைத்து மாணவர் தலைவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொன்னேன். அதேவேளையில் யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களை பாதுகாப்பாக அவர்களது இடங்களுக்கு செல்வதற்கு வேண்டிய வழிகளை மேற்கொண்டேன். இப்படியான சூழல்களே என்னைத் தீவிரமான போராட்ட சூழல்களுக்குத் தள்ளியது.

கோமகன் : தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்ப கால கட்டத்தில் இருந்த சூழலுக்கும் சமகாலத்து சூழலுக்கும் இடையில் வேறுபாடுகளை உணருகின்றீர்களா ?

வ.ஐ.ச.ஜெயபாலன்..ச: மாற்றங்களும் சூழல்கழும்  எப்பொழுதும் மாறக்கூடியவைதானே.  ஆனால் சூழல்களின் மாற்றங்களை உணராது இருந்தது நாங்கள் செய்த மாபெரும் தவறு என்று சொல்வேன். புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் உணர மறுக்கின்ற/தவறுகின்ற சூழல் என்னவென்றால்,” தாயகத்தில் போரில் தப்பிப் பிழைத்த பொதுமக்களும் போராளிகளும் இன்று கையறு நிலையில் இருக்கின்றார்கள். அவர்களளது இயல்பு வாழ்க்கை இன்னும் சீரான நிலைக்குத் திரும்பவில்லை. மீள்கட்டுமானப் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. வெளியிலே இருந்து கிடைக்கின்ற நிதிஉதவிகள் போதுமானதாக இல்லை. நான் ஏலவே சொல்லியவாறு  போராட்ட காலங்களிலும் அதன் பின்னரும் புலம் பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பல மில்லியன் யூரோக்கள் இன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தப்பணங்கள் தாமதமின்றி அங்குள்ள மக்களுக்குப் போய் சேரவேண்டும். இதை இந்த நேர்காணல் மூலம் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

வெளிநாடுகளில் இருக்கின்ற போராட்ட சக்திகள் தாயகத்தில் இருக்கின்ற போராட்டத் தலைமைகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கலாமே தவிர அவர்களது போக்குகளை தீர்மானிப்பவர்களாக இருப்பதற்கு எதுவித அருகதைகளுமற்றவர்கள். மீள் கட்டுமானப் பணிகள் பேதங்கள் பாராது வடக்கு கிழக்கு என்று அனைத்து பிராந்தியங்களிலும் இங்குள்ளவர்களால் முடக்கிவிடப்படல் வேண்டும். தாயகத்தில் இருக்கின்ற மக்கள் தங்களது நோக்கில் சரியாகவே செல்கின்றார்கள். அவர்கள் புலம்பெயர்ந்தவர்களின் எதிர்பார்த்த வேகத்திற்கு செல்லவோ இல்லை அவர்களது நலன் சார்ந்த முன்னெடுப்புகளுக்கோ தயாராக இல்லை என்பதே யதார்த்தம். குறிப்பாக மீண்டும் அகதி அந்தஸ்து கோருவதற்கான முன்னெடுப்புகளை புலம்பெயர் தமிழர்கள் கைவிடவேண்டும். அது மிகவும் பாரதூரமான விழைவுகளை ஏற்படுத்தும். இனியும் தாயாக மக்கள் ஒரு கொடிய போரை சந்திக்கத் தயாராக இல்லை. அவர்கள் தங்கள் சக்திக்குட்பட்ட வேகத்தில் போராட்டத்தை நகர்த்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நான் இதுவரை பேசாத விடயங்களை இந்த நேர்காணலில் பேசவிளைகின்றேன். போர்க்குற்றங்கள் தொடர்பாக பல ராஜதந்திரிகள், ” போர்க்குற்ற விசாரணைகளின் நலன்கள் தாங்கள் தடைசெய்திருந்த இயக்கத்துக்கு மட்டும் செல்லுமானால் தாங்கள் இந்த போர் குற்ற விசாரணைகளில் அக்கறை கொள்ள மாட்டோம்” என்று கூறியிருக்கின்றார்கள். ஆனால் அனைத்துப் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ஊர்வலங்களிலும் புலிக்கொடியை ஏந்திச்சென்று அதற்கான சூழலை நாமே அழித்துக்கொண்டோம். புலிக்கொடி தொடர்பான மாட்சிமையில் நான் பின்வாங்கவில்லை அனால் அதைத் தேவையில்லாத இடங்களில் பாவித்து போர்க்குற்ற விசாரணைகளின் போக்குகளை நாங்களே மாற்றியமைத்து விட்டோம். புலம் பெயர்ந்த மக்களாகிய நாங்கள் போரையும் தோற்கடித்து போருக்குப் பின்னர் மக்களிற்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளையும் தடுப்பவர்களாக நாம் இருந்து விடக்கூடாது. இந்தப் போரில் சேர்த்த பணங்களை அபகரிப்பவர்களாக நாங்கள் இருக்கக்கூடாது. மாறாக நாங்கள் சர்வதேச அரசியல் ராஜதந்திர சூழல்களை உணர்ந்து அதற்கேற்ப போராட்டத்தினை மறுசீரமைத்து “இணைப்பாட்சியை” கோரவேண்டியது எமது கடமை. இதையே இந்த நேர்காணலில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கின்றேன்.

கோமகன் : 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததாக குறிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எந்தவகையில் மனமுடைந்து மனஉளைச்சலுக்கு ஆளானீர்கள்

..ச: ஜெசிக்குறு தாக்குதல் கால கட்டங்களில் இருந்து வன்னியுடன் நான் பலத்த வாதப் பிரதி வாதங்களுடன் தொடர்பில் இருந்தவன். காடுகளை விட்டு போராளிகளை எடுத்து மரபுசார்  இராணுவ முறைமைகளில்  கட்டியெழுப்புவதை நான் பல காரணங்களுக்காக எதிர்த்தேன். அதில் முக்கிய காரணமாகக்  காடுகளை இழக்கும் பொழுது எதிரிகள் அதற்குள் சுலபமாக நுழைந்து விடுவார்கள். அதன் பின்னர் எவ்வளவுதான் செல்வங்களை குவித்தாலும் படைகளைக் குவித்தாலும் ஆளணிகளைப் பெருப்பிக்க முடியாது.முக்கியமாக நான் ஒரு சிறிய இனம் இதற்காக நாங்கள் சைனாவிலோ இந்தியாவிலோ ஆளணிகளை வாடகைக்கு அமர்த்த முடியாது. எதிரியினால் ஆளணிகளை அதிகரிக்க முடியும். நாம் சிறிய ஆளணிகளுடன் போராட்டத்தை நடாத்தி வருபவர்கள் என்று வன்னிக்குத் தெடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். அப்பொழுது நான் கடுமையாக வாதப்பிரதி வாங்கலை மேற்கொள்வதற்கு பறந்து பட்ட தளம் அங்கிருந்தது. எனது வாதங்களில் ஒரு சிலவற்றை வன்னி ஒத்துக்கொண்டாலும் புலம்பெயர் நாடுகளில் இருந்த அமைப்புகள் அதற்கு இடைஞ்சலாக இருந்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு வடகிழக்கு மாகாணங்களிலும் தென்னிலங்கையிலும் இருக்க முடியாது என்ற தோற்றப்பாட்டினைக் கட்டி எழுப்புவதில் தீவிரமாக இருந்தார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இருந்த அமைப்புகளின் தேசபக்தியை நான் சந்தேகம் கொள்ளவில்லை. இருந்த போதிலும் சர்வதேச நாடுகளில் “அகதி அந்தஸ்து கோருவதற்கான சூழலை தாயகத்தில் ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்கள். முக்கியமாக தலைநகர் கொழும்பில் பல தாக்குதல்கள் நடாத்தப்பட வேண்டும் என்பதனை எதிர்த்தேன்.  அந்த தாக்குதல்களில் எம்மிடையே இருக்கின்ற மிகச்சிறந்த வீரர்களை இழக்க நேரிடும் என்றும், தலைநகரில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டால் தற்கொலை தாக்குதல்களால் ஏலவே கிலி கொண்டுள்ள சர்வதேசம் உலகப் பயங்கரவாதிகள் பட்டியலில் இலகுவாக எம்மை இனத்து விடுவார்கள் என்று நான் சொல்லியிருந்தும் கூட வெளிநாடுகளில் இருந்த அமைப்புகளின் அழுத்தங்களினால்  பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. ஏலவே நான் கூறியிருந்த அவர்களது தேசபக்தியில் எனக்கு சந்தேகம் இல்லாவிட்டாலும் தாயகப் போராட்டத்தில் எமது நோக்கங்களும் அவர்களது நோக்கங்களும் முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் அவர்களுக்குப் பலிக்கடா ஆவோமானால் இறுதியில் தோல்வி நிட்சயம் என்று பலமுறை வன்னிக்கு இடித்துச் சொன்னேன்.

காடுகளில் இருக்கின்ற கெரில்லா போரியல் முறமையை தொடரும்பொழுது இலங்கையில் இருக்கின்ற காடுகள் அனைத்தும் எங்கள் வசமாகும் ஆனால் மரபுரீதியிலான இராணுவக்கட்டமைப்பைக் கொண்டு வரும் பொழுதும் தலைநகரில் அதிக தாக்குதல்களைக் கொண்டுவரும் பொழுதும் எதிரியினால் அதிகளவு பாதுகாப்பு வலையங்கள் ஏற்படுத்தப்படும். இது எமக்குப் பின்னடைவையே கொண்டுவரும் என்று சொல்லியிருந்தேன். அதே வேளையில் சர்வதேசம் வன்னியை ஒதுக்குவது விட வன்னியே சர்வதேசத்தை ஒதுக்குகின்ற சூழலை கொண்டு வருகின்றது என்றும் சொன்னேன். விடுதலைப்புலிகள் எனது ஆலோசனைகளை ஆமோதித்தாலும்  கஸ்ரோவின் செல்வாக்கை என்னால் உடைக்க முடியவில்லை.  ஒருகட்டத்தில் எனது கருத்துகளால் கஸ்ரோ என்னைக் கொலை செய்யக்கூட முயற்சித்தார் ஆனால் இயக்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்தச் சூழலில் 2005-ல் சிவராம் கொல்லப்பட்டத்தின் பின்னர்  பலர் பலமுறை எச்சரித்தும் சிவராம் வீட்டிற்குசெல்ல வேண்டும் என்பதற்காகவும் 2006-ல் நான் வன்னிக்குச் சென்றிருந்தேன். அத்துடன் ஒரு பெரும் மழை வந்து ஆறுகள் பெருக்கெடுத்தால் தோல்வியை தவிர்த்திருக்கலாம் ஆனால் இயற்கை எமக்கு மாறாகவே இருந்தது. அத்துடன் சர்வேதேசம் தற்கொலை தாக்குதல்களுக்கு எதிராக இருந்தமை அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் சர்வதேச ராஜதந்திரிகள் என்னுடன் பேசிய பொழுது, “அன்ரன் பாலசிங்கம் ஒருவரே சமாதானத்தை விரும்புகின்றார் அமைப்பில் இருக்கின்ற ஏனையோர் எல்லோருமே சமாதானத்துக்கு எதிராகவே இருக்கின்றார்கள். நாம் அன்ரன் பாலசிங்கத்திடம் மட்டுமே தொடர்ந்து பேசமுடியும் அல்லாவிட்டால் அவர்களை அழிக்கின்றதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார்கள். அத்துடன் பாலசிங்கம் தனது இறுதிக்காலத்தில் இதய சுத்தியுடன் நிரந்தரமாக சமாதானம் வரவேண்டும் என்று முனைப்பாக வேலை செய்தார்.

அன்ரன் பாலசிங்கம் இந்தியாவுடன் கூட ஒரு நல்ல உறவுகளை பேணி வந்தார். மேற்குலக ராஜதந்திரிகள் என்னிடம் சொல்லிய முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று விடுதலைப் புலிகள் காலையில் தம்மிடம் சமாதானத்தைப் பேசியவாறே மாலையில் இறுதி யுத்தத்திற்குக் காசு தரும் படி கூட்டம் போட்டு பேசுவார்கள் என்றும் இந்தவிடயங்களை எல்லாம் மேற்குலகம் கவனிக்க முடியாத நிலையில் இந்த மேற்குலகம் இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா” என்று அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் மீண்டும் சொல்கின்றேன், சர்வதேசப் புலி ஆதரவாளர்களின் தேசபக்தியை நான் சந்தேகிக்கவில்லை ஆனால் அவர்களுடைய முனைப்புகள் எல்லாமே சர்வதேசத்தில் அகதி அந்தஸ்துகோருவதை, ஊக்கிவிப்பதை அடிப்படையாகவே இருந்தன. இதனால் நம் சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் பலத்த தோல்வியினைத் தழுவ நேர்ந்தது.

அத்துடன் போராட்டத்தை கெரில்லா யுத்தமாக நடக்க விடாது அமைப்பின் பல திறமையான போராளிகளைக் கொழும்பில் குவிப்பதன் மூலம் ஒரு நேரடியான யுத்தத்தை வலிந்து இழுப்பதினால் எமது வெற்றியை விட நாட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்ற தோற்றத்தை நிறுவுவதிலும் சர்வதேச புலி அமைப்புகள் முனைப்பாக நின்றன. இப்படியான தொலைநோக்கற்ற செயற்பாடுகளினாலேயே நாம் தோல்வியைத் தழுவிக்கொண்டோம். நான் இதை அழுத்தம் திருத்தமாக வன்னிக்குச் சொல்லி இருந்தேன். அதிலும் கூட காஸ்ரோ அணியினரை மிஞ்சி என்னால் எதுவுமே மேலதிகமாகக் கூற  முடியவில்லை. அவர்கள் எனக்கு அனுப்பிய பதில்களைப் பாதுகாப்புக்கு காரணங்களுக்காக உங்களுடன் பரிமாற்ற முடியாது. ஆனால் ” அண்ணை நீங்கள் சொல்வதுதான் சரி காஸ்ரோ அணியினர் பல செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றார்கள்” என்று தலைவர் எனக்குப் பதில் அனுப்பியிருந்தார்.

அத்துடன் கையகப்படுத்திய மக்களது பணத்தை நாட்டிற்குக் கொடுக்காது இருப்பதற்காகத்  தொடர்ந்தும் இவர்கள் தீவிரவாதத்தைக் கையில் எடுக்கின்றார்கள் என நான் கருதுகின்றேன். அவர்கள் தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவு தருபவர்களைக் குளப்பி பிழையாக வழி நடாத்துகின்றார்கள்.  இந்தப்பணத்தை வைத்திருப்பவர்கள் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் கொடுக்கப்படாவிட்டால் அவர்களும் அவர்களது சந்ததிகளும் தலைமுறை தலைமுறையாக அழிந்து போக வேண்டும் என்று நான் ஓர் கவிஞனாக, எனது தமிழின் பெயரிலும் கவிதையின் பெயரிலும் முழு அறத்துடன் சபிக்கின்றேன். புலம் பெயர் நாட்டில் வாழுகின்ற இளைய தலை முறையினரே இந்த இரத்தத்தில் தோய்ந்த பணத்தை உங்கள் தாய் தந்தையர் வைத்திருந்தால் அதனை நீங்கள் தொடாது மக்களுக்கே கொடுக்கும் படி உங்கள் தாய் தந்தையர்களை வற்புறுத்துங்கள்.”( இந்த இடத்தில் உணர்ச்சி மேல்லீட்டால் அவரது குரல் உடைந்து தழுதழுக்கின்றது).

கோமகன் : நீங்கள் எதற்காக  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து விலகினீர்கள் ?

..ச: நான் அனைத்து விடுதலை அமைப்புகளிலும் ஒரு ஆலோசகர் மட்டத்திலேயே பங்களிப்புச் செய்திருக்கின்றேன்.  அவ்வாறே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் என்னை உள்விவகாரங்களில் சேர்த்துக்கொண்டதில்லை. ஆனாலும் கழகத்தில் ராணுவப் புவியியல் தொடர்பாகவும் அரசியல் ராஜதந்திரம் தொடர்பாகவும் வகுப்புகள் நடாத்திக்கொண்டிருந்தேன். அந்தநேரங்களில் அவர்கள், குறிப்பாகச்  சங்கிலி கந்தசாமி என்மீது குற்றச்சாட்டுகளாக வைத்தவை,” நான் பத்மநாபா, பாலகுமார்,சங்கர்ராஜி  போன்றவர்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக்கொண்டு தங்களை மட்டுமே காரசாரமாக விமர்சிக்கின்றேன்” என்பதாகும். ஆனால் நான் எல்லா அமைப்புகளுக்குமே நெருக்கமாக இருந்து அரசியல் வகுப்புகளை நாடாத்தியிருக்கின்றேன்.

நான் இயக்கத்தில் இருந்து முரண்பட்டு வெளியே இருந்த காலத்தில் 1984 ஆம் ஆண்டு பொட்டம்மானை பட்டுக்கோட்டையில் வைத்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகதினர் கைது செய்திருந்தார்கள். அன்றிரவே அவரைக் கொல்வதற்கும்  தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் இயக்க மோதலே உருவாக்கப்போகின்றது என்று  தோழர்கள் அனைவரும் என்னிடம் முறையிடார்கள். நான் எல்லா இடமும் தேடி கிடைக்காத நிலையில் “தொழிலாளர் பாதை” பத்திரிகை நடாத்திக்கொண்டிருந்த கட்சியின் பொருளாளர் மாதவன் மாஸ்ரர்  வீட்டில் முகுந்தன் இருப்பதை அறிந்து அங்கு சென்று முகுந்தனிடம் பலத்த சண்டை போட்டேன். அப்பொழுது சிவாசின்னப்பொடியும் அங்கிருந்தார். அப்பொழுது சங்கிலி என்னிடம் சண்டைக்கு வர முகுந்தன் தடுத்து நான் சொல்வதுதான் சரி என்று சொல்லி பொட்டம்மானை விடுவிக்க உத்தரவு போட்டார். இதேவேளையில் தம்பி தன்னிடம் வரச்சொல்லி சொல்லியிருந்தார்.  ஆனால் நான் கழகத்தைக் கையறு நிலையில் விட்டு விட்டு செல்லவில்லை. காரணம் அப்பொழுது கழகத்தில் உட்படுகொலைகள் உச்சத்தில் இருந்த நேரம். பாரிஸில் இருக்கின்ற தோழர் அசோக் போன்றவர்கள் உட்படுகொலைகளை எதிர்த்து நின்றார்கள் அவர்களுக்கு நான் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதாலும் நான் கழகத்தை விட்டு பிரியவில்லை. எங்கும் சரி எனது சுதந்திரத்தை நான் விட்டுக்கொடுக்கவில்லை. கழகத்திலும் சரி புலிகளிடமும் சரி விடுதலை தொடர்பாக நான் எனது காட்டமான விமர்சனங்களை வைப்பதற்கு நான் பின்தங்கியதில்லை. அதனால் நான் ஒரு கலகக்கவிஞனாகவே அடையாளப்படுத்தப்பட்டேன்.

கோமகன் : தாரக்கி சிவராம் படுகொலை தொடர்பாகப் பலர் பலவிதமாகச் சொல்கின்றார்கள். உண்மையில் அவருக்கு என்னதான் நடந்தது?

..ச: 2013 இல் நான் தாயகம் சென்றபொழுது இது தொடர்பாக பல தோழர்களுடன் தொடர்பு கொல்லப் பல சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும் அதற்கு முன்பே நான் கைது செய்யப்பட்டேன். அதுவும் கோட்டபாயாவின் விசேட பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டேன். எனது நண்பன் பாஷிர் சேகு தாவூத் இது பற்றி உசாவிய பொழுது: “நாங்கள் அவரை விடுதலை செய்வதற்கு கைது செய்யவில்லை. அவருடைய காலம் இங்கேயே முடிந்து விட்டது” என்று எகத்தாளமாக அவர் பதில் சொல்லியிருந்தாலும்  பல முஸ்லீம் தோழர்களது குறிப்பாக ஹக்கீம் மற்றும் எரிக் சொல்கெய்ம்  போன்றவர்களது அழுத்தங்களினால் இறுதியில்  நான் நாடுகடத்தப்பட்டேன். பாலகுமாரனை தம்முடன் இணைந்து செயல்படுமாறு கேட்டு அவர் மறுத்ததினால் கொலை செய்யப்பட்டார் என்றும் புதுவை இரத்தினதுரையும் இதே காரணத்தினால் கொலை செய்யப்பட்டார் என்றும் ஒரு ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் எனக்கு கிடைத்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவதற்குள் நான் கைது செய்யப்பட்டேன். இந்தக் கைது சம்பவம் இடம்பெறாது இருக்குமானால் பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை மற்றும் தாரக்கி ஆகியோரது மரணம் தொடர்பான தகவல்களை நான் பெற்றிருப்பேன்.

கோமகன் : ஆனால் தாரக்கிதான் கருணா அம்மான் பிரிவதற்கு முக்கிய ராஜதந்திரியாக இருந்து செயற்பட்டவர் என்று ஒரு கருத்தும் இருக்கின்றதே ……….?

..ச: இதில் நாங்கள் ஒரு விடயத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றுங் கூட நாங்கள் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்துக்குச் சென்றால் தாயகத்தின் எல்லா பகுதிக்கும் செல்வோம். ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு செல்வதை நைச்சியமாகத் தவிர்த்து விடுவோம். ஈழம் என்று சொல்வதற்கு எல்லா புலம்பெயர்ந்த தமிழனுக்கும் உருத்து இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. மிக அருந்தலான புலம்பெயர் தமிழர்களே கிழக்கு மாகாணத்திற்கான மீள்கட்டுமானங்களை செய்கின்றார்கள். மற்றவர்கள் கிழக்கு மாகாணத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கிழக்கு மாகாணத்தில் இருந்து இளைஞர்களை கொண்டு வந்து பயிற்சி கொடுத்த பொழுது நானும் தான் எதிர்த்தேன். இதை ஒத்த கருத்தையே சிவராமும் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த வரையில் சிவராம் கருணா அம்மானை ஒன்றிணைப்பதற்குத்தான் பாடுபட்டார். கருணா அம்மான் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் குரலை வன்னியில் மேலும் ஒலிக்க வைக்க வேண்டும் என்பதே சிவராமின் நோக்கமாக இருந்தது. ஆனால் கருணா அம்மான் பிரிவார் என்று சிவராமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனது கைது விவகாரங்களினால் என்னால் இந்த தகவலை நூறு வீதம் உறுதிபட சொல்ல முடியாது.

கோமகன் : உங்களிற்கும் காஸ்ரோவிற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைகளே உங்களை வன்னிப்பகுதிக்கு வர தடை விதித்ததாக ஒரு கதை உண்டு. இது குறித்து?

..ச: முற்று முழுதாக இதனை மறுதலிக்கின்றேன். நான் கொழும்பு வந்தாலே எனது பாதுகாப்பு தொடர்பாக வன்னி பாதுகாப்புத்துறை கவலையடைவது வழமை. பொட்டம்மானை நான் எப்படி விமர்சித்தாலும் எனது பாதுகாப்பு விடயங்களில் கவனமாக இருந்தார். நான் வவுனியாவுக்கு வந்தாலே முகமறியாத பலர் எனது பாதுகாப்பிற்காக பின்தொடர்வதை நான் பலமுறை உணர்ந்தவன்.

புளொட்டில் எனக்கு உயிராபத்து ஏற்பட்ட காலங்களில் என்னை அறியாதவர்கள் எனக்கு பாதுகாப்பு கொடுத்து என்னுடன் பயணம் செய்தவர்களை நான் உணர்ந்திருக்கின்றேன். காஸ்ட்ரோ எனக்கு தீங்கு விளைவிப்பதை தலைமை ஒருபொழுதும் அனுமதித்ததில்லை என்பதே உண்மை. அவ்வாறு தலைமை அனுமதித்திருந்தால் நான்   காஸ்ட்ரோவால் கொல்லப்பட்டிருப்பேன். எனது கடுமையான விமர்சனங்களை வைப்பதற்கும் எனது பாதுகாப்பு தொடர்பாகவும் வன்னித் தலைமை நேர்மையுடனேயே என்னுடன் நடந்து கொண்டது. உதாரணத்திற்கு வன்னிப்  பிராந்தியத்திலேயே நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற கவிஞர் கருணாகரனது நூல் வெளியீட்டில் நான் புலிகள் மீது கடுமையான விமர்சனம் வைத்திருந்தேன். அதில் காஸ்ட்ரோவையும் நந்தவனத்தையும் நான் மிகவும் கடுமையான முறையில் விமர்சித்திருந்தேன். புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே நான் இருந்து வந்திருக்கின்றேன். அதாவது நான் பணியாமலும் நேர்மையாகவும் உண்மையைப் பேசுவதற்கான சூழலே வன்னியில் பராமரிக்கப்பட்டது. காஸ்ட்ரோ இயக்கத்தைப் பிழையாக வழிநடாத்துகின்றார் என்ற கருத்து எனக்கு நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கின்றது. நான் என்றும் நிமிர்ந்த தலையுடன் ஒரு கவிஞனாகவே வலம் வர விரும்புகின்றேன்.

கோமகன் : ஆரம்ப காலப் போராளியாகிய உங்களுக்குப்  பல மக்களைக் காவு கொடுத்து விட்டுஆயுதங்களை மௌனிக்கின்றோம்என்ற விடுதலைப்புலிகளின் அறிவித்தலானது எத்தகைய மனஉணர்வினை  ஏற்படுத்தியது

..ச: தமிழர் விடுதலைப்போராட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த விடுதலைப்புலிகள் மரபுவழி ராணுவத்தில் இருந்து கெரில்லா போராட்ட முறைமைக்கு திரும்பாவிடில் எமது போராட்டத்தை வெற்றிப்பாதைக்கு நகர்த்த முடியாது என்று ஆரம்பம் முதலே அவர்களுக்கு சொல்லி வந்தவன் நான். அத்துடன் சர்வதேசத்தை அச்சுறுத்துகின்ற போராட்ட உத்திகளை கைவிட வேண்டும் என்றும் சொல்லியவன் நான். அவ்வாறு கைவிடாவிட்டால் எல்லோரும் ஒருநாள் விடுதலைப்புலிகளை சுற்றிவளைத்து போராட்டத்தை நசுக்கி இருந்த இடமே தெரியாது செய்துவிடுவார்கள் என்றும் அவர்களுக்குச்  சொல்லியிருந்தேன். ஆகவே இதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன். நெஞ்சு நிறைந்த துயருடனும் கண்ணீர் முட்டிமோத அப்பொழுது எழுதியதுதான் ‘தோத்தவர்களின் பாடல்’

கோமகன் : தமிழர்தேசிய விடுதலைப்போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் முக்கிய வகிப்பாகத்தைக் கொண்ட இந்தியாவானது சமகாலத்தில் எமது  பிரச்சனையில்  நட்பு சக்தியாக  இருக்கும் என்று சொல்பவர்கள் குறித்து ?

..ச: ராஜதந்திரங்களின் அடிப்படை விதியே மாற்றங்கள் தான். அதாவது , இந்த ராஜதந்திரங்கள் மூன்று   வகைப்படும்.

01 நாங்கள் உலகை மாற்ற வேண்டும்.

02 நாங்கள் உலக ஒழுங்கு மாறும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது

03 நாங்கள் உலக ஒழுங்குடன் ஒன்றிணைந்து பயணித்து எமது போராட்ட இலக்குகளை வெல்லுதல்

இதனடிப்படையிலேயே இன்று உலக இயக்கம் இருக்கிறது. இதில் மூன்றாவது  வைகையையே மதியுரைஞர் பாலசிங்கம் தனது இறுதிநாட்களில் கொண்டிருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழர்களாலும் காஸ்ரோவாலும் அவர் தோற்கடிக்கப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு என்றே நான் சொல்வேன். இன்னும் சொல்லப்போனால் எமது போராட்டம் இந்த இழிநிலைக்கு வந்ததற்கான முக்கிய பொறுப்பாளிகள் புலம்பெயர்ந்த தமிழிழர்களில் இருந்த ஒருசில அமைப்புகளும் காஸ்ரோவுமே ஆகும்.

கோமகன் : தமிழர் தரப்பு பலமுறை பொதுவெளிகளில் தம்மை முஸ்லிம்கள் தொடர்பாக சுயவிமர்சனங்களை வைத்த பொழுதும் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து அப்படியான சுய விமர்சங்கள் வெளியாகியிருந்தததா ?

..ச: உங்கள் கேள்வியில் சிறிய திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகின்றேன். அதாவது அமைப்பு ரீதியாக சுயவிமர்சனம் மேற்கொள்ளப்பட்டதா என்று வருவதையே விரும்புகின்றேன். தமிழர் தரப்பில் இருந்து அமைப்பு ரீதியாக எந்தவொரு விமர்சனங்களும் வந்திருக்கவில்லை தனிப்பட்டவர்களே  தார்மீகப்பொறுப்பெடுத்து சுயவிமர்சனம் செய்திருக்கின்றார்கள். முஸ்லீம் தரப்பில் இருந்து அமைப்பு ரீதியாக வந்திருக்கின்றது . ஆனால் புறநடையாக 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கழும் மக்களும் அழிக்கப்பட்டபொழுது தோழர் அஷ்ரப் அதற்கு எதிரான கண்டன அறிக்கை விட்டு விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி கொழும்பில் அஞ்சாத வாசம் இருந்தார். முக்கியமாக இந்த அறிக்கையை எல்லோரும் வாசிக்க வேண்டும். எமது அழுத்தங்களை  இயங்கங்கள் ஓரளவு ஏற்றுக்கொண்டதால் நிலைமைகள் ஓரளவு சீருக்கு வந்தன. சுருங்கக் கூறின் இருபக்கத்திலுமே சீரிய தொடர்பாடல்கள் இல்லாததால் ஒருவர் பக்கத்து நியாயங்கள் மற்றவருக்குத் தெரியாமலே போய் விட்டது. இன்னும் சொல்லப்போனால் அன்றய காலத்தில் ஆட்சி அதிகாரம் படையணிகள் என்று அனைத்து வளங்களையும் கொண்டிருந்த தமிழர் தரப்பு முஸ்லிம்கள் விடயத்தில் நிதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்திய அமைதி காக்கும் படையின் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளைக் காப்பாற்றியதில் பெரும் வகிப்பாகத்தைக் கொண்டிருந்தவர்கள் முஸ்லீம்கள். ஆனால் இந்திய ராணுவம் வெளியேறிய பின்னர் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப்புலிகள் பக்கசார்பாகவே நடந்து கொண்டார்கள். இந்தப்போக்கு மிகவும் தவறானதொரு விடயமாகும். இதை நான் வன்னியிலும் இடித்துரைத்திருக்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் பிராந்தியங்கள், எமது அழுத்தத்தினால் தலைமையில் இருந்து போன உத்தரவுகளை அமூல்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

கோமகன் : உங்களின் ஆதர்சங்கள் யார் ?

..ச: எல்லோரையும் நான் கேள்விக்குட்படுத்தி விமர்சனம் செய்த காரணத்தால் குறிப்பாக யாரையும் சுட்டிட விரும்பவில்லை.

கோமகன் : உங்களுக்கென்று இலக்கிய அரசியல் உண்டா ?

..ச: பெரிதாகக் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை. ஆனால் என்றும் நேர்மையும் உண்மையும் கலந்த நிமிர்ந்த தலையுடன் ஒரு கலகக் கவிஞனாகவே வலம் வர விரும்புகின்றேன்.

ஜெயபாலன் பற்றிய சிறுகுறிப்பு :

வ.ஐ.ச.ஜெயபாலன்
ஓவியம் : நளீம்

ஈழத்துக் கவிஞர்களில் சமகாலத்தில் பெரும் சொத்துக்களில் ஒன்றாக விளங்கும் வ ஐ ச ஜெயபாலன் காலத்தில் நாங்கள் வாழ்வது கொடைகளில் ஒன்றாகும். 1944 ஆம் ஆண்டு ஆடி மாதம் 13 ஆம் திகதி உடுவிலில் பிறந்த இவர், எழுத்துப்பரப்பில் ஒரு கலகக்காரக் கவியாகவே அறியப்பட்டிருக்கின்றார். இதுவரையில் : 12 கவிதைத் தொகுப்புகளையும் சில சிறுகதைகளையும் அரசியற் கட்டுரைகளையும் எழுத்துப்பரப்பிற்கு தந்திருக்கின்றார் அவற்றில் ,

சூரியனோடு பேசுதல் (1986)

நமக்கென்றொரு புல்வெளி (1987)

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)

ஒரு அகதியின் பாடல் (1991)

வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

என்பன ஈழத்துக்கவிதை வெளியில் இவரை முன்நிறுத்தின. இன்று ஒரு திரைப்பட நடிகராக இவர் தமிழக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படம்  இந்தியாவின் தேசிய விருது பெற்ற திரைப்படமாகும். நோர்வேயில் வசித்து வந்தாலும் இந்தியாவில் ஈழத்து இலக்கியத்துறையை முன்னெடுத்தவர்களில் ஒருவராக திகழ்வது எமக்குப் பெருமையே .

00000000000000000000000000000

பிற்குறிப்பு :

இந்த நேர்காணல் 25 சித்திரை 2019-ல் ...ஜெயபாலன் அவர்களுடன் இடம்பெற்ற நேரடி உரையாடலினை ஒலிப்பதிவு செய்து தட்டச்சு செய்யப்பட்டது.”

கோமகன்-பிரான்ஸ்

25 சித்திரை 2019

கோமகன்
ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 288 times, 1 visits today)
 

2 thoughts on “‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்”

Comments are closed.