“பார்வைகளின் எதிர்விளைவே படைப்பிலக்கியமாகிறது ! – “அப்பாக்களும் அம்மாக்களும்” நூலின் மீதான ஒரு சிறு பார்வை-உமைபாலன்

அலெக்ஸ் பரந்தாமன் சமூகத்தை நேசிக்கின்ற எந்தவொரு படைப்பாளனும் மெளனநிலை கொண்டு வாழ்வினைக் கடந்து விடுவதில்லை. பார்வைகளினூடாக உள்வாங்கும் காட்சிப்பிம்பங்களை அவன் தன் மன ஆழத்துள் ஊறப்போட்டு, தனக்குப் பொருத்தமான வேளைதனில் எழுத்தாக்கிக் கொள்கிறான். இந்தப் பார்வையும் மனதில் ஊறப்போடுதலும்  என்பது படைப்பாக்கத்துக்கு ஒரு உதவிகரமாக, உந்துசக்தியாக அமைதல் என்பது மிகையான தொன்றல்ல.

ஒருவர், தான் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை எழுத்தாக்கும்போது, அப்படைப்பு வாசகனிடத்தில் எந்தளவு தாக்கத்தை, அதிர்வை ஏற்படுத்துகிறது என்பதற்கப்பால், அப்படைப்பில் எழுதப்பட்டிருக்கும் விடயம் எந்தவிடத்தைச் சுட்டி நிற்கிறது என்பதும் அவதானத்தில் கொள்ளப்படுதலும் ஒன்று.

அனுபவங்களின் வெளிப்பாடுகள் படைப்புகளாக உயிர்ப்புப் பெறுவது மொழிநடையின் வீச்சைப் பொறுத்தே அமைகிறது. உரைகள் சுருங்கியும் விரிவாகவும் இடம்பெறினும், அவ்வுரைகளை வாசகன் படிக்கும்போது, அவனுள் சிறிதேனும் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்துமாக இருந்தால், அப்படைப்பை எழுதியவன் வெற்றி பெற்றுள்ளான் என்றே கொள்ளலாம்.

கரவை மு. தயாளன் அவர்கள் எழுதியுள்ள “அப்பாக்களும் அம்மாக்களும்”  எனும் சிறுகதைத் தொகுப்பினுள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற பத்துச் சிறுகதைகளும் ஆசிரியரின் பார்வையில் பட்டவையும், அனுபவங்களின் வெளிப்பாடு களுமாகவே அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவர் தன் எழுத்தினூடாக அவற்றைச் சொல்ல வருகிறார். இதில் ‘கொரோனாக் காலமும்’ அடங்குவது கவனிக்கத்தக்தொன்று.

படைப்பாளன், தான் வாழும் சமூகத்தை கூர்ந்து நோக்கும் திறன் இருந்தாலன்றி, அவனால் எந்தவொரு எழுத்தாக்கமும் செய்ய முடியாது. கரவை மு.தயாளன் அவர்களிடம் அந்த ‘கூர்ந்து நோக்கும்’ தன்மை உண்டு… என்பதை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் நிரூபணம் செய்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பார்வை கொண்டவையாக அமைகின்றன. ஒவ்வொரு விடயங்களை எடுத்துரைக்கின்றன. எளிமையான மொழிநடை!  சிறுசிறு வசனங்கள்! புலம்பெயர்தேசத்து பிரச்சினைகளைப் பதிவாக்கி உள்ளார். ஒவ்வொரு கதைகளிலும் குடும்ப அவலங்கள் வெளிப்படுகின்றன.

“புனைவு ஒரு பத்து வீதம் என்றால், மிகுதி அனுபவமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது (படைப்பு) உயிர்ப்பாக இருக்கும்” என்று கூறுகிறார் ‘நடு’ இணைய இதழின் ஆசிரியர் திரு. கோமகன் அவர்கள்.

ஆனால், தயாளன் அவர்களுடைய இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் எதுவும்,  எந்தவொரு  ‘புனைவுமற்ற வெளிப்பாடுகள்’ என்பதை, கதைகளைப் படிக்கின்ற எந்தவொரு வாசகனாலும் புரிந்து கொள்ள முடியும்.

சரி… இனி தொகுப்பினுள் நுழைவோம்!

என்னதான் ஒன்றுக்குள் ஒன்று இரத்த உரித்துடைய உறவுகளாக இருந்தாலும், காலநகர்வில் அவர்களது வாழ்க்கை மாறுபட்டு, அதிலிருந்து புதிய பந்தபாசம் உருவாகும்போது, மூத்தவர்கள் ‘பழசாகப்’ போவதே யதார்த்தம் என்பதை வெளிப்படுத்துவதோடு, வாழ்வின் வளர்ச்சிக்கும்  பிற்காலத் தேவைக்கும்  சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதைச் சொல்கிறது ‘ அப்பாக்களும் அம்மாக்களும் எனும் சிறுகதை.

தங்கள் நலனைக் கருதாது, பிள்ளைகளின் வளர்ச்சிக்காக, வாழ்வுக்காக தம்மையே உருக்கிவிட்டு, இறுதியில் அவர்கள் முன்பாகக் கையேந்துவதும், குறுகி நிற்பதும் காலத்தின் கொடுமை என்பதை இச்சிறுகதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இது சாதாரண குடும்பங்களில் நிகழும் சம்பவங்களாக இருந்தாலும், பெற்றோர் தம்மீது செலுத்திய அன்பைவிட, பணமே பிரதானமென நினைக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில், பெற்றோர்கள் தமக்காகச் சேமிக்க வேண்டும்… என்பதை வலியுறுத்துகிறார் தயாளன் அவர்கள்.

மனிதனுக்குள் மனிதம் என்றொரு உணர்வு இருக்க வேண்டும். அது இல்லையேல், அந்த மனிதம் வெறும் பிணம் என்பதற்குச் சான்றாக, சில கதாபாத்திரங்கள் மூலம் புறவெளிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது ‘ கடவுளைக் காணோம்’ எனும் சிறுகதை.

சொந்த தேசத்தில் தன்இனத்துக்காய் போராடிய முன்னாள் போராளி ஒருவரின் துன்பியல் கடிதத்தைப் படித்துவிட்டு, தன் நண்பர்களிடம் உதவி கேட்கப் புறப்படுகிறார் ஒருவர். அவர் சந்திக்கச் சென்ற மனிதர்கள் புறத்தே பகட்டாகவும், அகத்தில் இருட்டாகவும் வாழும் வாழ்க்கை முறையை விபரிக்கிறது இக்கதை. உதவி கேட்கப்போன நண்பனுக்கு, உதவி புரிய மறுத்தவர், ஏற்கனவே கோவில் ஒன்றுக்குக் கோபுரம் கட்டியவர் என்பது தெரிய வருவதும், இன்னொரு பக்கத்தில் கோவில் தர்மகர்த்தா  தங்கள் ஆலயம் சார்பாக அறப்பணிகள் செய்ததைக்கூறிவிட்டு, முன்னாள் போராளிக்கு உதவிகள் செய்ய மறுப்பதும், அதற்கு அந்த நபர் கூறும் ” அவங்களெல்லாம் ரவுடிக்கூட்டமாய் மாறியிட்டாங்கள். போராளிப் பொம்புளையள் அங்கை சரியாய் இல்லை. அதுகளுக்கு உதவி செய்யிறது கடவுளுக்கே அடுக்காது” என்ற வார்த்தைகள் மூலம், சில புலம்பெயர்முகங்களின் அக அழுக்குகளை அப்படியே வெளிப்படுத்துகிறார் தயாளன் அவர்கள்.

“பணமென்ன கொடியில முளைக்கிற பறங்கிக்காயெண்டு நினைச்சானா…” இதுவொரு சினிமா வசனமாக இருந்தாலும், புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்களது வார்த்தையாக ஒலிக்கிறது இன்று.   ‘இலண்டன்காரர்’ என்பது ஒருகாலத்தில் கெளரவமாகப் பார்க்கப்பட்ட ஒரு சொல். இந்தச் சொல்லுக்குப் பின்னால், எத்தனை கண்ணீர்க்கதைகள் தேங்கிக் கிடக்கின்றன  என்பதை ஒரு பெண்ணின் புலம்பலூடாக ‘ என்ர இவரின்ர கதை’ வெளிப்படுத்திச் செல்கிறது.

சமூக நோக்கத்துக்காக முன்னிற்பவனது மன உணர்வுகளை அவனது அழுகையினூடாகச் சொல்லவரும் கதையின் ஆசிரியர், அதனால் அவனை எந்தக் கண்ணோட்டத்துடன் இந்தச் சமூகம் அனுகிறது என்பதையும் ‘ஒரு சாமானியனின் அழுகை’ சிறுகதையூடாகச் சொல்லிவிட்டு நகருகிறார்.

‘நான்கு கடிதங்களும் நண்பனும்’ எனும் சிறுகதை மூலம், விடுதலைப்போராட்டம் இறுதியில் போராடியவர்களுக்கு விட்டுச் சென்றது என்ன ? என்பதை உடைக்கப்படாமல் இருந்த நான்கு கடிதங்களைக் கொண்டு, கதையை நகர்த்திய விதம் சிறப்பு. கதையின் முடிவு பளீரென அறைகிறது வாசகனின் முகத்தில்.

இருக்கின்ற வசதியுடன் திருப்திப்படாத மனிதர்கள் தங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் எப்படிச் சீரழிந்து போகிறார்கள் என்பதைச் சொல்ல வருகிறது ‘ வரட்டுக் கெளரவம்’ எனும் சிறுகதை.

இக்கதையின் நாயகன் ஏகாம்பரம். இவரது பிள்ளைகளில் ஒருவர் வைத்தியப்படிப்புக்குத் தெரிவாகியதும், தான் வசிக்கும் பகுதியிலும் வாடகைவீட்டிலும் தங்கியிருப்பது கெளரவக்குறைவு என நினைக்கிறார். இதன்நிமித்தம் சொந்தமாக வீடு வாங்க முயன்று, அதில் ஏமாந்து, தோல்வி கண்டு போவது கதையின் உள்ளடக்கமாக இருந்தாலும், இறுதியில் அவர் என்ன முடிவெடுக்கிறார்… என்பதை வாசகர்களிடம் விட்டு விடுகிறார் ஆசிரியர். ” பேராசை பெருந்தரித்திரம்”  என்பதை வலியுறுத்துகிறது இச் சிறுகதை.

மனப் பொருத்தமற்ற காதலும், புரிந்துணர்வற்ற மனங்களும், விட்டுக்கொடா மனப்பான்மையும்,இரு இளம் உள்ளங்களை எப்படியெல்லாம் சிதைத்து, சீரழித்து முடிவில் தற்கொலைவரை கொண்டு போகும் என்பதை ‘ ஒரு காதலின் முடிவு சொல்கிறது. கதை நகரும்விதம் நன்று! ஆயினும், கதை சற்று நீளமாகிவிட்டது போல் உள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம்… எந்தளவுக்கு மனிதர்களின் வாழ்வியலோடு தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதை இத்தொகுப்பில் உள்ள மூன்று கதைகள் வெளிப்படுத்துகின்றன.

முதலாவதாக, ‘ ஒருநாள் ஒரு மனிதன், ஒரு குடும்பம்’ எனும் சிறுகதைமூலம்,  வைரஸ் குறித்த அச்சத்தால் ஏற்படும் அடுத்த நிகழ்வுகளாக ஊரடங்குச்சட்டம், நடமாட்ட முடக்கம், வேலையிழப்பு, பணப்பற்றாக்குறை, பொருள்களின் விலையேற்றம் என்பன ஒரு சராசரி நிலையில் வாழும் குடும்பங்களை எப்படியெல்லாம் பாதிக்கச் செய்கிறது…என்பதை கூறுகிறது.

அடுத்தது, ‘ அர்ப்பணம்’ எனும் சிறுகதை! கொரோனா நோய்த்தாக்கத்துக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரொருவரின் மனவோட்டங்களூடாக இந்தக் கதை நகருகிறது. அங்கே நோயாளர்கள் மரணிக்கிறார்கள்.அது ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக விளங்கும் வைத்தியசாலை. இதனால், மேற்கொண்டு கடமையைச் செய்ய மறுக்கும் வைத்தியர்கள் மற்றும் தாதிகளுக்கு மத்தியில், கதையின் நாயகி எந்தவித பாதுகாப்புக் கவசமுமின்றி இறக்கப்போகின்ற ஒரு முதியவருக்கு வைத்தியம் செய்ய அவரருகில் செல்கிறாள். பந்தபாசங்களுக்கப்பாற்பட்ட வைத்தியத்தொழிலின் மேன்மையை எடுத்துரைக்கிறது இச்சிறுகதை.

இறுதியாக, கொரோனா காலத்தில் ஊரடங்குச் சட்டத்தால் வீட்டுக்குள் முடக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்குள் ஏற்படும் நிகழ்வொன்று கதையாக விரிகிறது. ஒருகாலம் வெளிநாட்டு வாழ்க்கைக்காக  இங்குள்ளோர் பலர் ஏங்கியிருந்தது ஒரு தனிக்கதை. ஆனால்,  அந்த ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை இன்றைய கொரோனா புரட்டிப்போட்டுள்ளது என்பதே யதார்த்தம். இக்கரைக்கு அக்கரை பச்சையில்லை இப்போது என்பதை, கதையில் வரும் வீட்டுக்கார அம்மணியூடாக பேச வைக்கிறார் தயாளன் அவர்கள்.

“பேசாமல் எங்கட நாட்டிலேயே இருந்திருக்கலாம். சிங்களவனோட ஒருமாதிரிச் சமாளிக்கலாம். அங்கை சாகிற ஆக்களும் குறைவாம். இஞ்சை ஒவ்வொருநாளும்  முன்னூறு நானூறென்று சாகுதுகள். ஏதோ வளர்ந்த நாடு வளர்ந்தநாடு என்கிறாங்கள். ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.

‘ஆட்சியதிகாரம் கைமாறுகிறது’ எனும் இச்சிறுகதை… படிக்கும் வாசகனை நிச்சயம் சிந்தனைகளைத் தூண்டச் செய்யும் என்பதோடு, நல்ல பொருத்தமான தலைப்பாகவும் அமைந்துள்ளது.

தொகுப்பானது அருமையான அச்சுப்பதிப்புடன், அழகான அட்டைப்படத்தோடு, மட்டக்களப்பு மகுடம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. இத்தொகுப்புக் குறித்து நக்கீரன்மகள் “சமூக அக்கறையுள்ள எழுத்து” எனும் ஒரு பதிவை உள்வைத்துள்ளார். அதில்: “எந்த இலக்கியமானாலும், சமூகத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும். அந்தவகையில், ‘ அப்பாக்களும்அம்மாக்களும்’  என்ற இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் சமூகம் சார்ந்த கதைகளாகவே எழுதப்பட்டுள்ளமை மனதிற்கு நிறைவைத் தருகிறது” எனக் கூறியிருப்பது மறுதலிக்க முடியாத உண்மைமே!

“நடந்ததையும் பார்த்ததையும் பதிவு செய்வது எழுத்தின் ஒரு பணி” என்று கூறும் பேராசிரியர்

அ. ராமசாமி அவர்களின் உரைக்கொப்ப, கரவை மு. தயாளன் அவர்கள் இச் சமூகத்தில் நடந்ததையும் பார்த்ததையும் பதிவு செய்துள்ளார் இத்தொகுப்பினூடாக!

உமைபாலன்-இலங்கை

(Visited 138 times, 1 visits today)