பெண்களின் உரிமைகள் என்பது அவர்களுடையது, அவற்றை அவர்களுக்கு எவரும் வழங்கவேண்டியதில்லை-நேர்காணல்-ஸ்ரீரஞ்சனி

இந்தக் கதையாடலை மெருகூட்ட எங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைக்கலாம் என எண்ணுகின்றேன்….

ஸ்ரீரஞ்சனிவளம்மிக்க தெல்லிப்பழை மண்ணில், ஓர் ஆசிரியத் தம்பதிகளின் மூத்த பிள்ளையாகப் பிறந்த எனது பாடசாலைக் கல்வியின் பெரும்பகுதி பெருமைமிக்க மகாஜனாக் கல்லூரியில் பூர்த்தியானது. அதைத் தொடர்ந்து அழகும் கல்விச் செழிப்பும் மிக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதன் பின்னர் கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் ஆசிரியப் பணி என்னை வரவேற்றது. முடிவில், தனிப்பட்ட வாழ்விலும் நாட்டிலும் நிகழ்ந்த மாற்றங்கள் கனடாவில் தஞ்சம் கோரவைத்திருந்தன.

கனேடிய மண் நிம்மதி நிறைந்த, மனதுக்கு இனிய வாழ்க்கை ஒன்றை எனக்குத் தந்திருக்கிறது. அங்கு செய்த ஆசிரியப் பணியை இங்கும் என்னால் தொடரமுடிகிறது. அங்கு ஒரு முழுநேர விஞ்ஞான ஆசிரியராக இருந்தேன், இங்கு ஒரு பகுதிநேரத் தமிழ் ஆசிரியராக இருக்கிறேன், அதுதான் ஒரேயொரு வித்தியாசம். மற்றும்படி மனதுக்கு மிகுந்த திருப்தி தரும் சந்தோஷமான தொழில் அது. அத்துடன் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழிபெயர்ப்பாளாரவும் வேலைசெய்கிறேன். நெருக்கீடான தருணங்களில் உதவிபெறுவதற்கோ அல்லது அந்த நேரத்துக்கான உதவிகளை வழங்குவதற்கோ மொழி ஓர் இடையீடாகவிருக்கும் சூழல்களில், அந்த நபர்களிடையேயான தொடர்பாடலை இணைக்குமொரு பாலமாக நான் அமைவதால் அதுவுமொரு ஆத்ம திருப்தி தரும் தொழிலாகவே இருக்கிறது.

இவ்வகையில் தமிழ் எனது தொழிலின் மூலதனமாகவும் மாறியதால் அந்த மொழி அறிவை வளப்படுத்த வேண்டுமென்பதற்காக தமிழில் முதுமாணிக் கல்வியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி ஊடாகப் பூர்த்திசெய்திருக்கிறேன்.

மனம் விட்டுப் பேசும் உண்மையான உறவுகளை எனக்கு மிகவும் பிடிக்கும். இயற்கை மேலான வாஞ்சையும், வாழ்க்கை மீதான மோகமும், தொழில் தரும் திருப்தியும், எழுத்து மேலான பிடிப்பும், என் பிள்ளைகளின் மேலான என் அபாரக் காதலும் அவர்கள் எனக்குத் தரும் உத்வேகமும், ஊக்கமும், ஆதரவும் என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

ஏன் நீங்கள் எழுத்தை நேசிக்க வேண்டும் ?

வாழ்க்கை அனுபவமொன்றை அல்லது மனதைக் குடைந்துகொண்டிருக்கும் விடயமொன்றை ஒரு படைப்பாக மாற்றும்போது கிடைக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் அளவிடமுடியாதவை. அத்துடன், என் கருத்துக்களை, வேதனைகளை, கோபங்களை, ஏமாற்றங்களை, மகிழ்ச்சியை, நன்றியை, அன்பை வாய்மொழியில் கூறுவதைவிட எழுத்து மூலம் கூறுவது எனக்குச் சுலபமானதாக இருக்கிறது. அதனால் எழுத்தையே, என் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் ஒரு வழியாக நான் பொதுவில் தெரிவுசெய்கிறேன். அந்த எழுத்து கடிதமாகவோ, கட்டுரையாகவோ அல்லது கதையாகவோ இல்லை, விமர்சனமாகவோ வெளிப்படும்போது அது என் மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனத்திருப்தியை அதிகரிக்கிறது, இதயத்தை நிறைவிக்கிறது. இவ்வகையில் எழுத்து என்னில் ஒரு பகுதியாகவும் எனக்கான ஒரு வடிகாலாகவும் அமைந்திருக்கிறது. அதற்காகவே எழுத்தை நான் நேசிக்கிறேன்.

என் கடிதங்கள் என் வாழ்க்கையின் முக்கிய பங்காளிகளுடனான உறவுகளை எனக்குச் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. பதின்மவயதில் கே.எஸ். பாலசந்திரனுக்கு நான் எழுதிய விமர்சனக் கடிதங்கள் புகழ்பெற்ற தணியாத தாகம் நாடகத்தின் முடிவை கே.எம். வாசகர் அவர்கள் சற்று மாற்றுவதற்கு உதவியிருக்கின்றன. அதேபோல என் கதைகள் என் திருமணத்துக்கு அத்திவாரமிட்டிருக்கின்றன, நல்ல நண்பர்களைத் தேடித்தந்திருக்கின்றன.

படைப்பொன்றின் ஊடாக, சமூகத்துக்கு ஏதாவது ஒரு செய்தி சொல்லப்படவேண்டும் என்பதே என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானதாக இருக்கிறது. அவ்வகையில் என் மனதில் ஏற்பட்ட கீறல்கள் அல்லது அசைவுகள் உருவாக்கிய பேசுபொருள்கள் வாசகர்களின் மனங்களிலும் ஏதோ ஒரு அசைவை ஏற்படுத்தும்போது அது என் எழுத்துக்களுக்கான சன்மானமாகிறது.

நான் ஒரு சிறந்த எழுத்தாளர் என என்றுமே நான் நினைப்பதில்லை. குறியீடுகளும், உவமைகளும், செழுமையும் நிறைந்த கலைப்படைப்புக்களைப் படைப்பதற்கு எனக்குத் தெரியவும் மாட்டாது. எழுத்து ஒரு தவம் என்று சிலர் சொல்வார்கள், ஆனால் என்னைப் பொறுத்தளவில் அது ஒரு வரம் என்பேன்.

என் மூத்த மகளை நல்லதொரு எழுத்தாளரெனப் பலர் இனம்காண்கிறார்கள். அவளின் அந்தத் திறன் சலங்கைகட்டி விட்டதுபோல என் இதயத்தை மிகவும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. எனக்குள் நிறையப் பெருமையை விதைத்திருக்கிறது. ஆனால், வாசிப்பதில் இருக்கும் காதல் அவளுக்கு எழுத்தில் கிடையாது. ஆனால் நான் அதற்கு நேர் எதிர்மாறு.

மேலும், மொழிபெயர்ப்பானது குறித்த மொழிக்குரிய இயல்புகளுடன் இருப்பதற்கு எழுதத் தெரிந்திருப்பதும் அவசியம். அவ்வகையில் எழுத்து மேலான என் நேசம் என் மொழிபெயர்ப்பு வேலைக்கும் மிகவும் உதவிசெய்கிறது.

சமகாலத்துக் கல்வி முறையானது இளையவர்களுக்கு வாழ்வில் பொறுப்புகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கான மனோதிடத்தை சொல்லத்/கொடுக்கத் தவறுகின்றது என்று சொல்கின்றேன் ?

பெற்றோர், பாடசாலை, வாழும் சூழல், நண்பர்கள், ஊடகங்கள், வாசிக்கும் புத்தகங்கள் எனப் பல்வேறு காரணிகள் இளையோரின் வாழ்க்கையைச் செப்பனிடுகின்றன, எனினும், உண்மையான கற்றல் என்பது ஒருவரின் தேடல் மூலமே நிகழ்கிறது எனலாம்.

ஆர்வத்தை விதைத்தல், விடயங்களைப் பிரித்தறியும் திறன்களை வளர்த்தல், சவால்களைக் கையாள்வதற்குத் தர்க்கரீதியாகச் சிந்திக்கப் பழக்குதல், தோல்விகளிலிருந்து மீண்டெழுவதற்கான உத்திகளைக் கற்பித்தல், சூழல் பற்றிய விழிப்புணர்வை வழங்குதல் போன்றவற்றைத்தான் பாடசாலைகள் செய்யமுடியும். அவ்வகையில் ரொறன்ரோவில் இன்றுள்ள கல்விமுறைமை வாழ்வில் பொறுப்புகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதற்கான மனோதிடத்தை  இளையவர்களுக்கு நிறையவே கொடுக்கிறது என்றே நான் சொல்வேன்.

நாங்கள் படித்த படிப்பு வெறும் ஏட்டுப் படிப்பு. ஆனால், இன்று கல்வி பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது. தேடல் ஊக்குவிக்கப்படுகிறது. அதனால், எது சரி ? எது பிழை? பிழை என்றால் அது ஏன் பிழை ? என்றெல்லாம் இளையவர்கள் அலசி ஆராய்ந்து கற்கிறார்கள். இவ்வகையான கற்றல் அவர்களை அறியாமலேயே முக்கியமான வாழ்க்கைப் பெறுமானங்களை அவர்களுக்குள் விதைத்துவிடுகிறது. அதனால்தான், அதிகாரத்துக்குப் பயந்து பிழைசெய்யாமலிருக்கும் எங்களைப் போலன்றி அவர்கள் பிழையெனக் கருதுவதை பெரும்பான்மையான இளையோர் ஒருபோதுமே செய்யாமலிருக்கிறார்கள்.

நாங்கள் மனப்பாடம் செய்தோம், இன்று அபிப்பிராயங்களைத் தர்க்கரீதியாகக் கூறுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏன்? எதற்காக? எப்படி? எனச் சிந்திப்பதற்குப் பழக்கப்படுகிறார்கள். அதனாலேயே பெற்றோர் சொல்லும் படிப்பைத்தான் படிக்கவேண்டும் என்ற மனநிலையிலிருந்து விலகி அவர்களுக்குப் பிடித்த கற்கைநெறியை, ஏன் வாழ்க்கைப் பாதையைக்கூட அவர்கள் தேடிக்கொள்கிறார்கள். பதினெட்டு வயதில் தொழில் தேடுகிறார்கள். பெற்றோரின் பொறுப்பில் வாழாமல் அவர்களின் படிப்பு, உடை போன்றவற்றுக்கான செலவுகளைத் தாமே ஏற்றுக்கொள்கிறார்கள். சீதனம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என உறுதியாக இருக்கிறார்கள். பிரச்சினைகளைச் சொல்லிச்சொல்லி மாய்வதை விடுத்துத் தீர்வுகளைத் தேடுகிறார்கள். அதனால் அவர்களின் சுயமதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்தச் சுயமதிப்பு, பிரச்சினைகளையும் பொறுப்புக்களையும் எதிர்நோக்குவதற்கான மனோதிடத்தை அவர்களில் வளர்க்கிறது. என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதால் சார்ந்துவாழல் அவர்களிடம் இல்லாமல் இருக்கிறது.

அங்கு நல்லதொரு தொழிலைப் பெறுவதற்கோ அல்லது பல்கலைக்கழகம் செல்வதற்கோ பரீட்சையில் சித்தியடைதல் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் இங்கு பாடசாலைக்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடல், தன்னார்வத் தொண்டுகள் செய்தல் போன்றன முக்கியமானவையாக இருக்கின்றன. இவ்வாறு, நேரத்துடன் போராடும் பாங்கு அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுப்பதும் வாஸ்தவமாக இருக்கிறது. அந்த மன அழுத்தத்தைச் சமாளிக்கமுடியாமல் ஒரு சிலர் தப்பான வழியில் சென்றாலும்கூடப் பெரும்பான்மையோர் அதைச் சாமர்த்தியமாகக் கையாள்கிறார்கள். அவர்களாகவே அதற்கான உதவிகளையும் தேடிக்கொள்கிறார்கள். மேலும் சூழல் மாசாக்கம் பற்றிய மிகுந்த கரிசனையுடன் செயற்படுகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. எங்குதான் எல்லாமே சீராக இருக்கிறது? எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இங்குள்ள கல்விமுறை இளைஞர்களை வாழ்க்கைக்கு நன்கு தயார்செய்கிறது என்றே நான் சொல்வேன்.

இப்போதைய இளையவர்கள் எதுவித சட்டவலுக்களும் அற்ற இணையர் வாழ்வில் அதிக ஆர்வம் காட்டுவது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட அபிப்பிராயம் ஏதாவது இருக்கின்றதா ?

 “பொய்யும் வழுவும் தோன்றிய பின்பே,திருமணம் என்ற சடங்கும் அமைப்பும் உண்டானதாக பழம்பெரு நூலான தொல்காப்பியம் கூறுகிறது. அவ்வகையிலேயே இடைக்காலத்தில் சட்டத்தைச் சாட்சியாக வைத்து நாங்கள் இணைய ஆரம்பித்திருந்தோம்.

இப்போது அதே பார்வையில், உண்மையாக இருந்தால்போதும்தானே, மற்றும்படி சட்டங்களுக்கும் மனங்களுக்கும் என்ன தொடர்பென இளையவர்கள் நினைக்கிறார்கள்போலும். அத்துடன்,

இது அவர்களின் உறுதிப்பாடு பற்றியோ, காதல் பற்றியோ ஐயத்தினால் விளைந்ததல்ல, ஆண் பெண்ணை அவனுடைய உடமையாக்குகிறான் என்ற அமைப்புமுறையிலான கருத்தாக்கத்தை உடைத்தெறியும் விருப்பத்தில் உருவானதென்றே நான் கருதுகிறேன். திருமணம் என்பது குடும்பத்தவர்களின் சாதி, சமயம், அந்தஸ்து என்ற புறக் காரணிகளின் அடிப்படையிலானதாகவே இதுவரை இருந்திருக்கிறது. இப்போது இதை அவர்கள் அகம் சம்பந்தப்பட்டதாக மாற்றுவதற்கு விழைகிறார்கள்.

ஜெயகாந்தனின் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற நாவலின் வரும் அந்தத் தம்பதிகள் விவாகரத்துக்கு விரும்பியபோது அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. பின்னர் விவாகரத்துக்கான  காரணம் அவர்களுக்குக் கிடைத்தபோது விவாகரத்துப் பெற அவர்கள் விரும்பவில்லை என்பது அந்த நாவல் வாசித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். சட்டத்தின் வரையறைகள் கட்டாயப்படுத்தும் விடயங்களை மனங்கள் ஒத்திசையாமல் செய்வதில் என்ன பயன் இருக்கிறது?

எங்களின் இருப்புத் தொடர்பான விடயங்களை நாங்கள் தீர்மானிப்பதைவிட, சமூக எதிர்பார்ப்புக்களும், அரச சட்டங்களும்தான் அதிகமாகத் தீர்மானிக்கின்றன. இல்லையா? இருப்பினும், அந்தவகையான வாழ்க்கைக்கு நாங்கள் பழக்கப்பட்டு விட்டதால், சட்டத்தை முன்வைக்காமல் இணையும் வாழ்க்கையை எங்களால் ஜீரணிக்க முடியாமலுள்ளது. ஆனாலும், இப்போது இனம் மாறித் திருமணம் செய்வது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதுபோல, கால ஓட்டத்துடன் விரைவில் அதுவும் சகஜமானதாக வந்துவிடுமென நான் நினைக்கிறேன். அத்துடன் பெயருக்குத் துணைவர்களாக வாழ்வதைவிட, சட்டத்துக்காகச் சேர்ந்திருப்பதைவிட – விரும்பும்வரை, ஒத்திருக்கும்வரை வாழ்வதும், ஒத்துப்போகாதபோது பேசாமல் பிரிந்துவிடுவதும் நல்லதுதானே.

இருப்பினும்,  இளையவர்களில் பலர் இணைவதற்கு முன்பாக ஒப்பந்தங்களைச் செய்துகொள்கின்றனர். எந்தவகை இணைதல் ஆயினும் பிரிவு கொடுமையானது. ஆனால், அன்புடனும் கரிசனையுடனும் காதலுடனும் செய்யும் இத்தகைய ஒப்பந்தங்கள், பிரியும்போது வெறுப்புடனும் குரோதத்துடனும் நிகழும் தீர்வுகளை விட நியாயபூர்வமானவையாக இருக்கும், இல்லையா? எனவே பிரிவு நிகழ்ந்தால் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை அவை கொஞ்சமாவது குறைக்கக்கூடும்.

மேலும், இணைந்து வாழ்பவர்களின் வாழ்க்கை ஒன்ராறியோவில் மாகாணச் சட்டங்களினால்   பாதுகாக்கப்படுகின்றது.  ஆதலால் அவர்கள் இணைந்த பின்பான அந்த வாழ்க்கை சட்டவலுவற்றது எனக் கூறமுடியாது.  ஒற்றுமையாக வாழும்போது சட்டம் இருந்தென்ன, இல்லாமலிருந்தென்ன ? பிரிவுவந்தால்தானே அதைப் பற்றிக் கவலைப்படவேண்டும். பிரிவுவந்தால் முறைசார் திருமணத்தைப்போல, இணைந்து வாழும் வாழ்க்கைக்கும் சட்டங்கள் துணைசெய்கின்றன.

எனினும், புள்ளிவிபரவியல்படி நோக்கினால் இங்கு சட்டப்படியான திருமணங்கள்தான் அதிகமாக நடக்கின்றன. ஐந்தில் ஒரு பகுதியினரே திருமணமாகாமல் இணைந்துவாழ்வதைத் தெரிவுசெய்கின்றனர். சட்டபூர்வமான திருமணம் செய்பவர்களிடையே அர்ப்பணிப்பும், மகிழ்ச்சியும், உணர்ச்சிரீதியான, மனரீதியான மற்றும் உடல்ரீதியான ஆரோக்கியமும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆர்வமும் அவர்களிடையே அதிகமாக இருக்குமென்பதும் உண்மையே.

அத்துடன் பெயருக்குத் துணைவர்களாக வாழ்வதைவிட, சட்டத்துக்காகச் சேர்ந்திருப்பதைவிட விரும்பும்வரை, ஒத்திருக்கும்வரை வாழ்வதும் ஒத்துப்போகாதபோது பேசாமல் பிரிந்துவிடுவதும் நல்லதுதானே. /// ஐந்தறிவு படைத்த மிருகங்களும் இதைத்தானே செய்கின்றன ………….

இந்தக் கேள்வி மூலம் பெயருக்காக என்றாலும் துணைவர்களாக வாழ்வதும் சட்டத்துக்காக என்றாலும் சேர்ந்து வாழ்வதும் நல்லதெனக் கூறவருகிறீர்களா? எங்களுக்குப் பிடிக்காத விடயங்களுடன் விலங்குகளைத் தொடர்புபடுத்துவது எங்களின் வழக்கமாக இருக்கின்றது. நன்றி கெட்ட நாய் போன்ற வெளிப்பாடுகளும் அதைத்தான் சொல்கின்றன. மனிதர்களுடன் விசுவாசமாக இருக்க மிருகங்களால் முடியுமெனில், அவற்றின் இனத்துடன் விசுவாசமாக வாழ ஏன் அவற்றால் முடியாது எனவும்  சிந்திக்கலாம், அல்லவா?

அத்துடன், மிருகங்களும் பிணைப்பையும் காதலையும் உணர்கின்றன என்பதைத் தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. சில பறவைகள் அதே துணையுடனே வாழ்க்கை பூராவும் புணர்வதையும், ஆமைகள் தங்கள் துணையுடன் தொடர்ந்து வாழ்வதையும் விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். எனவே சூழலின் அடிப்படையில், தேவைக்கேற்ப சிறப்பாக வாழ எது உகந்ததோ அதைத் தெரிவுசெய்வதில் தப்பேதும் இல்லை.

அன்புடனும் கரிசனையுடனும் காதலுடனும் செய்யும் இத்தகைய ஒப்பந்தங்கள், பிரியும்போது வெறுப்புடனும் குரோதத்துடனும் நிகழும் தீர்வுகளை விட நியாயபூர்வமானவையாக இருக்கும், இல்லையா ? /// சட்ட வலுவற்ற வெறும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தை ஒப்பந்தங்கள் எந்தவகையில் அவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் என நம்புகின்றிர்கள்?

நான் ஒரு சட்டவல்லுநர் இல்லை, அத்துடன் ரொறன்ரோ தொடர்பாகத்தான் நான் பதிலளிக்கமுடியும். இங்கு அத்தகைய ஒப்பந்தங்களுக்குச் சட்டவலு இருக்கிறது. மேலும், திருமணத்துடன் தொடர்பான பொதுவான சட்டங்களை மேவும் தன்மையும் அவற்றுக்கு உள்ளது. எனவே அவை வெறும் உணார்ச்சிவசப்பட்ட வார்த்தை ஒப்பந்தங்கள் அல்ல.

எமது வாழ்வியல் முறை இந்திய குடும்ப வாழ்வியலுடன் தொடர்புடையது எமது ஒவ்வொரு இணையர்களும் நீண்டகால திருமண உறவில் இருந்திருக்கின்றார்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஒருபோதும் தனித்திருக்க விரும்பியதில்லை. காரணம் அங்கு ஒரு பண்பாட்டியல் தொடர்பும் கூட்டு ஆற்றுகைப்படுத்தலும் இருந்தது. ஆனால் இன்றைய புலம்பெயர் இளையவர்களது வாழ்வியல் முறை பத்து வருடங்களை தாண்டுவதே கடினமாக இருக்கிறதே…..?

அவர்கள் தனித்திருக்க விரும்பியதில்லை என்ற உங்களின் கூற்று முற்றுமுழுதாகச் சரியானதென நான் கூறமாட்டேன். அதேபோல இன்றைய இளையவர்கள் யாவருமே பத்து வருடங்களைத் தாண்டவே சிரமப்படுகிறார்கள் எனவும் எழுந்தமானமாகக் கூறமுடியாது. இரண்டுக்குமே ஆய்வுகளோ தெளிவான சாட்சியங்களோ இல்லை.

எங்கள் நாட்டில் அனேகமான பெண்கள் பொருளாதரத்துக்கு ஆண்களில் தங்கியிருந்தார்கள். அத்துடன் சுற்றவர இருந்த சூழல் அவர்களை நான்கு சுவர்களுக்குள் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, எதையும் சகித்து வாழும்படி நிர்ப்பந்தப்படுத்தியது. புல்லானாலும் புருஷன் என்ற நிலைப்பாடு திரும்பத்திரும்ப அங்கு வலியுறுத்தப்பட்டது. பிரிதல் என்பது அன்றைய அகராதியில் இருக்கவில்லை.

அத்துடன் நீங்கள் சொன்ன ஆற்றுப்படுத்தல் அங்கிருந்தது, சொல்லி அழவும், முட்டுத் தீர்க்கவும் அக்கம் பக்கம் இருந்தது.  வீட்டுக் கடமைகளைப் பிரித்துச்செய்வதற்கும், தேவைக்குத் தோள் கொடுப்பதற்கும் அருகில் உறவுகள் இருந்தன. ஆனால், இங்கு அப்படியான தாங்குதல் எதுவும் கிடையாது. மேலும், இங்குள்ள இளையவர்களுக்கு சொந்தக் காலில் வாழும் திறன் இருக்கிறது. ஆண்களின் வன்முறைகளைப் பொறுத்துப் போகத்தேவையில்லை என்ற விழிப்புணர்வு உள்ளது. சுயமதிப்பை பேணல் அவசியம் என்ற மனப்பாங்கினால், அதைப் பேண முடியாத சூழல்களில் அவர்களால் சேர்ந்து வாழ முடியாமல் போகிறது.

மனசால் தனித்துப்போன பெண்களும், விரிசலுள்ள வாழ்க்கையுள்ளவர்களும் பொய்க்கு வாழக் கற்றுக்கொண்டிருந்தனர். எங்களின் அந்தப் பண்பாட்டியல் திருமணத்து அப்பாலான தகாத உறவுகளைக்கூடத் தூண்டியது, தூண்டுகிறது. ஆனால் இங்குள்ள இளையோர் மனசுக்கு உண்மையாக வாழவேண்டுமென நினைக்கின்றார்கள் என நான் நினைக்கிறேன்.

எம்மிடையே இருக்கின்ற சாதீய ஏற்றத்தாழ்வுகளை ஈடுசெய்வதற்காக தமது பிள்ளைகள் இனம் மாறித்திருமணம் செய்தால் புலம்பெயர்ந்த பெற்றோர்கள் மறுப்பு சொல்வதில்லை என்பதை ஏற்றுகொள்கின்கிறிர்களா ?

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஈடுசெய்வதற்காக இனம்மாறித் திருமணம் செய்வதற்கு பெற்றோர் மறுப்புச் சொல்வதில்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. இருக்கலாம். ஆனால் பிள்ளைகள் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருப்பதுதான் இனம் மாறியோ, சாதி மாறியோ திருமணம் செய்வதற்கான பிரதான காரணமென நான் நினைக்கிறேன்.

பிள்ளைகளின் மனதில் அனைவருமே சமமானவர்கள் என்ற எண்ணம் இருப்பதால் அவர்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களைத் திருமணம் செய்ய விரும்புகின்றனர். பிடிக்குதோ இல்லையோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் பெற்றோர் இருக்கின்றனர், அதுதான் உண்மை.

புலம்பெயர் நாடுகளில் பெற்றோர்கள் முதலில் எதிர்கொள்கின்ற தலையாய சவால் தமது பிள்ளைகளுடன் உள்ள தொடர்பாடல் வறுமை. இதை எப்படி சீர்செய்யலாம் என எண்ணுகின்றீர்கள் ?

பெற்றோர் பிள்ளைகள் தொடர்பாடலில் இருக்கும் வறுமைக்கு முக்கிய காரணங்களாக, இரட்டை மொழி வழக்கு, நேரமின்மை, கலாசார வேறுபாடு என்பவற்றைக் கூறலாம். தமிழில் பேசுவதற்குப் பிள்ளைகளுக்குத் தெரிந்திருந்தாலும்கூட நினைப்பதையெல்லாம் சொல்லக்கூடியளவுக்கு, அவர்களின் பக்க நியாயங்களை தர்க்கரீதியாக விவாதிக்கக்கூடியளவுக்கு பிள்ளைகளுக்கு மொழியறிவு பொதுவாக இருப்பதில்லை.

அடுத்தாக பொருளாதாரச் சவால்களுக்காக நேரத்துடன் ஓடும் பெற்றோருக்கு நின்றுநிதானித்துப் பிள்ளைகளுடன் பேசுவதற்கு வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. எங்களின் மேலான கலாசாரம் என நாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் விடயங்கள், தலைமுறை இடைவெளியினால் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகளை மேலும் பெரிதாக்குகின்றன. எனவே பெற்றோருக்கு விளங்காது அல்லது அவர்களுடன் கதைத்தும் என்ன பயன் என்ற அசமந்தப் போக்கும் பிள்ளைகளில் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.

மேலும் எங்கள் நாட்டில் வாழ்ந்த காலங்களில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதே எங்களின் மூளைக் கலங்களுக்குள் செதுக்கப்பட்டிருப்பதால், பிள்ளைகள் இங்கு எதிர்நோக்கும் மன அழுத்தங்கள் பெரிதல்ல என்பதே எங்களின் முடிந்த முடிபாக உள்ளது. அத்துடன் நாங்கள் பட்ட அந்தக் கஷ்டங்களுக்குப் பிரதிபலனாக எங்களின் கனவுகளைப் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டுமென்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவற்றையெல்லாம் எப்படி மேவுவது என்பது ஒரு சவால்தான். அதற்கு முதலில் புரிதல்தான் அவசியமானது. பிள்ளைகள் அவர்களுக்கென ஆசாபாசம் கொண்ட தனிமனிதர்கள் என்ற அங்கீகாரத்துடன், அவர்களை மரியாதையுடன் நடத்துவதற்கு நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறுபிள்ளைகளாக இருக்கும்போது அவர்கள் சொல்வதை நாங்கள் காதுகொடுத்துக் கேட்டிராவிட்டால், தொடர்பாடலைப் பேணுவதற்குக் கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனப்படவேண்டியிருக்கும்.

பிள்ளைகளின் வயதுக்கேற்ப தினமும் ஒரு மணித்தியாலத்தை அல்லது வாராந்தம் ஒரு சில மணித்தியாலங்களை எந்தவிதமான இடையூறுகளும் அற்றதொரு உரையாடலுக்காக ஒதுக்குவதும், எங்களின் நாளாந்த விடயங்கள் மற்றும் சவால்களைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்வதும், குறுக்கீடு செய்யாமல், அவர்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்பதும், தவறுசெய்வது மனித இயல்பு என்பதை உணர்ந்து நாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தாமல் அவற்றுக்கு மன்னிப்புக் கேட்பதும், அவர்கள் தவறுசெய்யும்போது மன்னித்து ஏற்பதும், தலைமுறை இடைவெளியை விளங்கிக்கொள்வதும், இந்தத் தொடர்பாடல் வறுமையை ஓரளவு சீர்செய்ய உதவும் என நான் நம்புகிறேன்.

அத்துடன் எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் பொதுவான ஒரு விடயத்தைக் கண்டறிந்து அதனை ஒன்றாகச் செய்வதும் சிறப்பானது. உதாரணத்துக்கு, ஒன்றாக ஹைக் (hike) போகலாம், அல்லது பாபக்கியு (bbq) செய்யலாம், அல்லது சயிக்கிள் ஓடலாம். ஒரு பழக்கத்தை உருவாக்கிவிட்டால் அது அவர்களுக்கும் தேவையான ஒரு விடயமாக மாறிவிடும்.

கதைக்கவிரும்பும் விடயங்களை எப்படி ஆரம்பிப்பது என்பதில் சிக்கல் இருந்தால், அது தொடர்பான செய்தி ஒன்றைப் பகிர்வதன் மூலமோ அல்லது கதை புத்தகமொன்றை வாசித்து அது பற்றி உரையாடுவதன்மூலமோ ஆரம்பிக்கலாம். அது எது என்பதை பிள்ளையின் வயதை வைத்து முடிவுசெய்யலாம்.

புலம்பெயர் நாடுகளில் எம்மிடையே சமபால் உரிமைகள் எவ்வளவு தூரத்துக்கு நடைமுறையில் உள்ளது ?

நாங்கள் எதனையும் பொதுமைப்படுத்த முடியாது என்றாலும்கூட, இலங்கையில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது இங்கு சமபால் உரிமைகள் ஒரளவுக்கு மதிக்கப்படுகின்றன என்றே சொல்லலாம். அரசாங்கமாக  இதனை அமுல்படுத்துவது என்பது சாத்தியமற்றது. இது பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். அதற்கேற்ப பிள்ளை வளர்ப்புமுறைகளை மாற்றவேண்டும் என்பது இங்கு ஒரளவுக்கு நடைமுறையில் நிகழ்கிறது. அதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது எனலாம்.

இளம்குடும்பத்தவர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுத்து நடக்கின்றனர். வீட்டுவேலைகளில் பங்கெடுக்கின்றனர். தீர்மானங்களை ஒன்றுசேர்ந்து எடுக்கின்றனர். பொருள் தேடுவதற்கென ஆணும் வீட்டுவேலைகளைச் செய்வதற்குப் பெண்ணும் பிறந்துள்ளனர், ஆண்தான் பெண்ணை வழிநடத்த வேண்டியவன் என்ற கருத்துப்பாடு அருகிவருகிறது.

இருந்தாலும், மேம்படுவதற்கு இன்னும் நிறைய உள்ளது என்பதைத்தான் இங்கு நிகழ்ந்துவரும் குடும்பவன்முறைகள் கூறுகின்றன. பெண்களின் உரிமைகள் என்பது அவர்களுடையது, அவற்றை அவர்களுக்கு எவரும் வழங்கவேண்டியதில்லை என்ற யதார்த்தத்தைச் சமூகம் உணர்ந்துகொள்ளும்வரை இவை தொடரத்தான் போகின்றன.

ஒரு பெண்பிள்ளையின் உடல்ரீதியாக முதிர்ச்சியடைதலை பிறருக்கு தமுக்கடிப்பது தொடர்பாக என்ன சொல்கின்றீர்கள் ?

அந்தக் காலத்தில் இளம்வயதில் திருமணங்கள் நிகழ்ந்தன. ஒரு பெண்பிள்ளை திருமணத்துக்குத் தயாரென அறிவிப்பதற்காக அவரின் உடல்ரீதியாக முதிர்ச்சி பிறருக்குப் பறைசாற்றப்பட்டது.  பின்னர் இந்தச் சம்பிராதயம் அருகிப்போனது, இருந்தாலும் குறிப்பிட்ட சில குழுவினரிடம் மட்டும் இதனை எங்கள் நாட்டில் தொடர்ந்து செய்துவந்தனர். சீதனத்துகாகப் பணம் சேர்க்கும் ஒரு உத்தியாகவும் அது பயன்பட்டது. ஆனால், இப்போது புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி எங்கள் நாட்டிலும் இது ஒரு பகட்டாக மாறியிருக்கிறது. தாராளமாகச் செலவழிக்கிறார்கள்.

என் பிள்ளை பிறகு எவரை எப்படித் திருமணம் செய்வாரோ தெரியாது, அதனால் எங்கள் ஆசைக்குச் செய்து பார்க்கிறோம் என அதற்கு ஒரு சமாதானம் வேறு இங்கு சொல்லிக்கொள்கிறார்கள். அத்துடன் அது கலாசாரத்தைப் பேணுவதற்கான ஒரு வழியெனவும் பிழையான விளக்கம் கொடுக்கப்படுகிறது.

இப்படியான நிகழ்வுகளுக்குப் போகும் சில பெண் பிள்ளைகள் அந்த ஆடம்பரங்கள் தங்களுக்கும் வேண்டுமென ஆசைப்படவும் செய்கிறார்கள். அதேவேளையில், மற்றவர்கள் இது ஆண் பெண் சமத்துவமற்றது. உடல்ரீதியாக நிகழும் ஒரு மாற்றத்தை, அந்த அந்தரங்கத்தை ஊருக்கு அறிப்பது அசிங்கமானது, அவர்களின் தனியுரிமையை மேவுவது என ஆக்ரோஷமடைகிறார்கள். பிள்ளை ஒருவரின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர் இந்தச் சடங்கினைச் செய்யும்போது அந்தப் பெண்பிள்ளை உணரக்கூடிய உணர்ச்சிகளைக் காட்டுவதற்காக,  ‘சிக்குண்ட சினம்’ என்றொரு சிறுகதையை நான் எழுதியிருக்கிறேன்.

இனிமேல் இப்படியான சடங்குகளுக்குப் போகாமல் விடுவதன் மூலம், இது பற்றியதொரு நிலைப்பாட்டை வெளிக்காட்டி இந்தச் சடங்குகளைச் செய்பவர்களைக் கொஞ்சமாவது சிந்திக்கச்செய்ய வேண்டுமென நான் நினைக்கிறேன்.

பெண் விடுதலை தொடர்பாக தென்காசியப் பெண்களினது புரிதல்கள் ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாக சொல்கின்றேன் ?

இந்தக் கேள்வி மூலம் எதைச் சொல்லவருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. பெண் விடுதலை தொடர்பாக தெற்காசியப் பெண்களின் புரிதல்கள் குழப்பான நிலையில் இருக்கின்றன என நீங்கள் சொல்வதை மாற்றி பெண் விடுதலை தொடர்பாக பெண்கள் ஒவ்வொருவரினதும் வரையறைகள் வேறுபட்டிருக்கின்றன என்று சொல்வதற்கு நான் விரும்புகிறேன். அந்தப் பெண் தெற்காசியப் பெண்ணாகவோ அல்லது வட அமெரிக்கப் பெண்ணாகவோ, அல்லது வேறு எந்தப் பெண்ணாகவோ இருக்கலாம்.

பெண்ணியம் மற்றும் பெண் விடுதலை பற்றி வெவ்வேறு கால கட்டத்தில் வேறுபட்ட அலைகள் தோன்றியமை எங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. அவ்வாறே பெண்கள் ஒவ்வொருவரினதும் நிலைக்கேற்ப அவர்களின் எதிர்பார்ப்புகளும் வேறுபடுகின்றன.  பெண் விடுதலை என்பது சமூகம் சார்ந்ததாக இருக்கவேண்டும். ஆணுக்கிருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கும் இருக்கவேண்டும், அவள் இரண்டாம்தரப் பிரஜையாக இருக்கக்கூடாது. பெண் என்பதால் குறித்ததொரு விடயத்தைச் செய்யக்கூடாது, அல்லது பெண் என்பதால் குறித்ததொரு விடயத்தைச் செய்யவேண்டும் என்றில்லாத ஒரு நிலையே பெண் விடுதலை என நான் கருதுகிறேன்.

சில இடங்களில் உடுப்புத் தொடர்பான கட்டுப்பாடு உள்ளது, வேறு சில இடங்களில் கருத்துச் சுதந்திரம் இல்லை, இன்னும் சில இடங்களில் வேலைக்குப் போகமுடியாது. எனவே சீலை கட்டாமல் விடுவதோ, மது அருந்துவதோ, கார் ஓடுவதோ அல்லது ஆணை மதிக்காமல் நடப்பதோ அல்ல பெண் விடுதலை.

ஒருவருக்குச் சீலை அணிவது பிடித்திருக்கிறது என்றால், பெண் விடுதலை கதைத்துக்கொண்டு நீ சீலை அணியலாமா என்று கேட்பது அர்த்தமற்றது. அதைப் போலவே மது அருந்துவதற்கு ஒருவருக்குப் பிடித்திருந்தால் அது அவரது உரிமை. நீ பெண், எப்படி மது அருந்தலாமெனக் கேட்பது பெண் அடக்குமுறை. அவ்வாறே குடும்ப வாழ்க்கை ஒரு ஆசீர்வாதமென ஒரு பெண் கருதலாம். ஆனால் இன்னொருவருக்கு அது தளையாக இருக்கலாம்.

எனவே, ஒரு பெண் தான் சந்தோஷமாக இருக்கிறேன், தனக்குப் பிடித்ததைத் தன்னால் செய்யமுடிகிறது என நினைப்பதே உண்மையான பெண் விடுதலை ஆகும்.

எனவே சீலை கட்டாமல் விடுவதோ, மது அருந்துவதோ, அல்லது ஆணை மதிக்காமல் நடப்பதோ அல்ல பெண் விடுதலை.  /// ஆனால் இதுதான் பெண் விடுதலை என்ற புரிதல்கள் அதிகமாக தெற்காசியாவில் இருக்கின்றது. சிந்தனைகளில் பழமைவாதங்களை பேணிக்கொண்டு நடத்தைகளில் பெண்விடுதலை என்று சொல்வதை குழப்பமான புரிதல் என்று சொல்லாது வேறு எப்படி சொல்ல முடியும்?

தெற்காசியாப் பெண்களின் புரிதல்கள் அவையென எப்படி நீங்கள் பொதுவாகச் சொல்ல முடியும் ? ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல பெண் ஒருவரின் சூழல் எதற்குத் தடைபோடுகிறதோ அதை மேவுவது அந்தப் பெண்ணைப் பொறுத்தளவில் பெண் விடுதலையாக அமையலாம். சீலைதான் கட்டவேண்டுமென அடம்பிடிக்கும் சூழலில் சீலை கட்டாமல் விடுவது பெண் விடுதலையின் வெளிப்பாடாக அமையலாம், இல்லையா ?

அதுபோலவே ஒருவருக்குப் பழமைவாதமாகத் தெரிவது குறித்த ஒரு பெண்ணுக்குப் பிடித்த விடயமாக இருக்கலாம். அதிலென்ன பிழை இருக்கிறது? உதாரணத்துக்குத் தாலி கட்டுவது பெண்ணை அடிமையாக்குவது என்ற மனப்பாங்கு ஓங்கியிருக்கும் இந்தக் காலத்தில்கூட அன்பின் ஓர் அடையாளமாக் கருதி அதை அணிபவர்களும் இருக்கிறார்கள்தானே. பெண் விடுதலையை வேறொரு வகையில் அவர்கள் எதிர்பார்க்கக்கூடும்.

இதுதான் பெண்விடுதலை என நாங்கள் வரையறுக்க முடியாது. பெண் விடுதலை என்பது பன்முகத்தன்மை வாய்ந்தது. சுருக்கமாகச் சொல்வதானால். தனக்குப் பிடித்ததைத் தெரிவு செய்யும் உரிமையை வேண்டுவதே பெண் விடுதலை எனலாம்.

ஒரு பெண் எதையும் மீறலாமா ? ஆம் என்றால் எப்படியாக ?

குறித்ததொன்றை ஆண் மீறலாமா? அப்படி அதை ஆண் மீறலாம் என்றால் ஏன் பெண் மீறக்கூடாது? எதை மீறக்கூடாதோ அதை ஒருவரும் மீறக்கூடாது. ஒரு விடயம், ஏதாவதொரு வகையில் பாதகமாக அமையக்கூடியதெனில், உடல்ரீதியாகவோ, உளரீதியாகவோ ஓர் உயிரை அது காயப்படுத்தக்கூடியதெனில் அதை எவருமே மீறக்கூடாது. மற்றும்படி கலாசாரம் இப்படித்தான், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் எனக் கூறப்படும் எந்த விதியையும் ஒரு பெண் மீறலாம்.

அன்று வீட்டுக்கு வெளியில் பெண் வரக்கூடாது, பெண்ணுக்குக் கல்வி தேவையில்லை, கணவன் இறந்தால் தீக்குளிக்க வேண்டும், மொட்டையடிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அதேபோல மேலைத் தேசங்களிலும் பெண்களுக்குத் தடைகள் இருந்தன. உதாரணத்துக்கு அன்று பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. இவற்றையெல்லாம் கடந்து இன்றைய நிலைக்கு வருவதற்குப் பெண்கள் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. அது இன்னும் முழுமையடையவில்லை. எங்களின் உரிமைகளைப் பேணுவதற்கு இன்னும்தான் நாங்கள் போராட வேண்டியுள்ளது. சில பெண்களும் பெண் விடுதலைக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்.

எனவே,

குடும்ப மட்டத்தில் இந்தப் போராட்டங்களும் மீறல்களும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.  பெண்கள்தான் கலாசாரக் காவலர்கள் என்ற எண்ணப்போக்கையும் சமூகக் கற்பிதங்களையும் அனைவரும் மீறவேண்டும். அப்போதுதான் சக மனிதநேயம் வலுப்பெறும், மனித மேம்பாடு நிகழும்.

சரி நாங்கள் இருவரும் எம்மைச்சுற்றி இருக்கின்ற இந்த  சமூகத்தைப் பற்றி ஆழமாகவே கதைத்திருக்கின்றோம் கொஞ்சம் எழுத்து, இலக்கியப்பக்கம் வலம்வருவது நல்லது என எண்ணுகின்றேன்.

எந்த வயதில் இருந்து எழுதத்தொடங்கினீர்கள் ? அது தொடர்பாக கொஞ்சம் செல்லலாமே ……….

நான் பிறந்தபோது பண்டாரவளையிலுள்ள ஒரு பாடசாலைக்கு அம்மாவுக்கு மாற்றம் கிடைத்திருந்தது. அதனால் அப்பாவின் அம்மாவுடன்தான் நான் வளர்ந்தேன். அவர் இறந்தபோது எனக்குப் பதினாறு வயது. அவரின் இறப்பு என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை ஒரு கதையாக்கிப் ‘பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி’க்கு அப்போது அனுப்பியிருந்தேன். அதுதான் நான் எழுதிய முதல் கதை.

கதைகள் கேட்பதையும் வாசிப்பதையும் நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது ஊக்குவித்த என் பெற்றோருக்கு வளர்ந்த பின்னர் நான் அவற்றைச் செய்வது பிடிக்கவில்லை. படிப்பில் நான் கவனம்செலுத்துவதை அவை பாதிக்குமென அவர்கள் எண்ணினர். அதனால் அந்தக் கதை ஒலிபரப்பாகுமா என அறிவதற்காக சித்தப்பா வீட்டுக்குப் போய் சில வாரங்கள் காவல் இருந்திருக்கிறேன். பின்னர் அது ஒலிபரப்பப்பட்டதா அல்லது ஒலிபரப்பப்படவில்லையா என்றுகூடத் தெரியாது.

பின்னர் கோகிலா அக்காவின் அறிமுகம் கிடைத்தபோது எழுதவேண்டுமென்ற ஆசை மீண்டும் வந்தது.  ஆனாலும், பல்கலைக்கழகத்தில் கடைசி வருடத்தில் இருந்தபோதே எழுதியவற்றைப் பிரசுரத்துக்கு அனுப்பும் துணிவு வந்தது. அப்படியாக ’நான்’ எனும் உளவியல் சஞ்சிகையில் என் கட்டுரைகளும், ஈழநாடு பத்திரிகையில் என் கதைகளும் 84 இல் பிரசுரமாகியிருந்தன. அதைத் தொடர்ந்து திருமணமானது. எனக்குள் முகிழ்ந்த அந்த ஆர்வம் பின்னர் எப்படியோ எனக்குள்ளேயே அமுங்கிப்போய்விட்டது.

கனடாவுக்கு நாங்கள் வந்த சில காலங்களின் பின்னர், எங்களுக்கு நன்கு தெரிந்த பதின்மவயதுப் பெண் ஒருவர் காணாமல்போய், கடைசியில் எச்சங்களாகக் கண்டறியப்பட்டார்.  அந்த அவலத்தால் ஏற்பட்ட பெரும் வலியை ‘புகலிடம் தேடி’ என ஒரு கதையாக்கினேன். 2004 இல், கனடா உதயன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் அதற்கு முதல் பரிசு கிடைத்திருந்தது. அது மீளவும் எழுதுவதைத் தூண்டியிருந்தாலும்கூட, 2010இல் நூற்றாண்டை நிறைவுசெய்த எனது கல்லூரிக்குச் சமர்ப்பணமாக ஏதாவது செய்யவேண்டுமென்ற உத்வேகமும், அந்த நேரம் கிடைத்திருந்த மொழிபெயர்ப்பாளர் வேலையில் கிடைத்த அனுபவங்களும், வலிகளும்தான் தொடர்ந்து எழுதச் செய்தன. இப்போது எழுதுவதற்கான அவகாசமும் கிடைத்திருப்பதால் என் எழுத்துத் தொடர்கிறது.

ஒப்பிட்டளவில் எமது எழுத்துப்பரப்பில் பெண்களது வகிபாகம் குறைவாக இருக்கிறது என்று எண்ணவே தோன்றுகின்றது. இப்படியானவொரு தேக்க நிலைக்கு முக்கியமான தடையாக இருப்பது எதுவென்று கருதுகின்றிர்கள் ?

எழுத்துப்பரப்பில் பெண்களின் வகிபாகம் குறைவாக இருப்பதற்குத் தடையாக இருப்பவை என பலவற்றைச் சொல்லாம். மிகப் பெரிய காரணமாக இருப்பது குடும்பப் பொறுப்பு. பிள்ளைகளுடனும், வீட்டுவேலைகளுடனும் பெண்களின் நேரம் போய்விடுகிறது. இப்போது அனேகமான பெண்கள் தொழிலுக்கும் செல்வதால் அவர்களுக்கென நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் சவாலான ஒரு விடயம் என்பது சொல்லித்தெரிகிற விடயமல்ல. அவற்றையெல்லாம் மேவி ஒரு பெண் எழுதினால், அவளின் கதைக்கான ரிஷி மூலம், நதி மூலத்தைச் சமூகம் தேடுகிறது. அதுவும் பெண்ணுக்கு ஒரு தடையாகிறது.

உதாரணத்துக்கு, “உங்கடை கணவர் நல்லவராய்த்தானே இருக்கிறார், பிறகேன் இப்பிடியான கதைகளை நீங்க எழுதுறியள் ?” என்று இங்கு வெளியாகும் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியர் என்னைக் கேட்டிருக்கிறார்.  “ஏன் உன்ரை மனுசி உன்னைப் பற்றி இப்பிடியெல்லாம் எழுதிறா ?” என அவரின் நண்பர் ஒருவர் அவரை வினவியிருக்கிறார்.  ’அம்மா வந்தாள்’ நாவலைப் படித்தவர்களில் எவராவது அலங்காரம் உங்களின் அம்மாவா என்றோ அல்லது அது உங்களின் மனைவியின் கதையா என்றோ தி. ஜானகிராமனிடம் கேட்டிருப்பார்களா?

மேலும், “பொம்பிளை எண்டபடியால்தான் உங்களையெல்லாம் தேடிப் பேட்டியெடுக்கினம், முன்னுக்கு வைக்கினம், நானும் இனி ஒரு பொம்பிளையின்ரை பெயரிலைதான் எழுதவேணும்,” என்று சக எழுத்தாளர் ஒருவர் குமுறியிருக்கிறார். இப்படியாக, “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” எனச் சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமன்றி, எங்களுடன்கூட இருப்பவர்களும் எங்களின் எழுத்தையும் எங்களையும் பெண்கள் என்ற போர்வையில் கீழ் விமர்சிக்கவும், அதை வைத்து எங்களுக்குப் பெயரிடவும் முன்நிற்கும்போது, இவற்றையெல்லாம் எதிர்கொள்வது என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. அதற்கு ஒரு துணிச்சல் தேவையாக இருக்கிறதென நான் நினைக்கிறேன்.

புலம்பெயர் தேசத்து எழுத்தாளர்கள் உண்மையிலேயே தமது சகஇனத்தவரை மதிப்புடன் தங்கள் எழுத்துக்களில் வெளிப்படுத்தி இருக்கின்றார்களா ?

ஆய்வு எதுவும் செய்யாமல் புலம்பெயர் தேசங்களில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் எழுத்துக்களில் சக இனத்தவரை உண்மையிலேயே மதிப்புடன் வெளிப்படுத்துவது அதிகமாக உள்ளதா, இல்லையா என எழுந்தமானமாகக் கூறமுடியாதென நினைக்கிறேன். பொதுவில் கூறுவதானால் இருபக்கங்களும் இருக்கின்றன என்றே கூறலாம். இப்படியும் நடக்கிறதே என மனம் வெந்திருக்கும் சந்தர்ப்பங்களில் சகஇனத்தவரில் வெறுப்பைக் கொட்டும் எழுத்துக்களையும், இதுவும் நிகழ்கிறதே எனப் பூரிப்படையும்போது சகஇனத்தவரில் மதிப்பைக் காட்டும் எழுத்துக்களையும் நான் வாசித்திருக்கிறேன்.

இங்கு இருக்கின்ற எமது எழுத்தாளர்கள் தாங்கள் இருக்கின்ற நாடுகளிலுள்ள கதைக்களங்களை தேர்வு செய்வதில் தவறிழைக்கின்றனர் என்று சொல்வதை இப்பொழுது அதிகமாக கேட்கமுடிகின்றது ……     

இதன்மூலம் கதைக்களங்கள் பொதுவாக எங்கள் நாட்டுக்குரியவையாக இருக்கின்றன எனச் சொல்ல வருகிறீர்களா ? அப்படியாயின், தாங்கள் இருக்கின்ற நாடுகளிலுள்ள கதைக்களங்களைத் தேர்வு செய்வதில் எழுத்தாளர்கள் தவறிழைக்கின்றனர் என்று சொல்லமுடியாதென நான் நினைக்கிறேன். ஏனெனில், பொதுவாக அவரவரைப் பாதிக்கும் விடயங்களையும், அவரவருக்கு முக்கியமாகத் தெரியும் பிரச்சினைகளையும்தானே எழுதவேண்டுமென யாரும் நினைப்பார்கள். இல்லையா?

இலங்கைப் பிரச்சினைகளே வாசகர்களிடம் அதிகமாகப் போய்ச்சேரும் என்ற நினைப்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம். போரில் நேரடி அனுபவங்கள் இல்லாதவர்களே கற்பனையில் அவை பற்றி நிறைய எழுதியதற்கும், எழுதுவதற்கும் அந்த விடயங்கள் அனைவரையும் தொடுமென்ற எதிர்பார்ப்பும், அவை பதியப்படவேண்டுமென்ற வேட்கையும்கூட அடிப்படையாக இருக்கலாம். அத்துடன் விட்டிட்டு வந்தவை, இழந்தவை பற்றிய அங்கலாய்ப்பும் எங்கள் நாட்டைக் கதைக்களமாக்குவதில் முன்னிடம் வகித்திருக்கிறது. இதுவரை சொல்லமுடியாமல் இருந்த மனக்குமுறல்களை எல்லாம் கொட்டிவிட வேண்டுமென்ற துடிப்பையும் இப்போது பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

இருப்பினும், அவரவர் இருக்கின்ற நாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் முன்பைவிட இப்போது அதிகமாகப் பேசப்படுகின்றன என்றே நான் நினைக்கிறேன். அப்படிப் பேசப்படும்போது அந்தந்த நாடுகளின் கதைக்களங்களும் தெரிவுசெய்யப்படுகின்றன.

எழுத்துப்பரப்பில் தோன்றுகின்ற அக்கப்போர்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றும் ?

எழுத்துப்பரப்பில் தோன்றுகின்ற அக்கப்போர்கள் ஒருவகையில் தன்முனைப்பினால் ஏற்படுகின்றது என்று சொல்லலாம். அத்துடன் இது பொறமையாலும், இன்னொருவர் மேலெழும்பாமல் செய்யவேண்டுமென்ற வேட்கையாலும்கூட எழுகின்றது. இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்ல வழியென நான் நினைக்கிறேன்.

எதிர்ப்புச் சொல்லும்போது எதிர்மறையான கவனத்தேடலுக்கு நாங்கள் தீனி போடுபவர்களாக இருப்போம்.

நீங்கள் எழுதுவதற்கு யாரெல்லாம் ஆதர்சங்களாக இருந்திருக்கின்றார்கள் ?

சிறுபிள்ளைகளாக இருந்தபோது,  ‘ஒற்றுமையின் பலம்’ என்ற கதையைச் சொல்வதற்காக நான்கு தடிகளை ஒன்றாகக் கட்டி அதை உடைக்கும்படி எங்களை அப்பா கேட்டதும், பின்னர் தனித்தனியே தந்து உடைக்கும்படி சொன்னதும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவ்வகையில் அப்பாதான் கதைகளில் முதலில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அம்மா நன்கு வாசிப்பார். அதனால் குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற சஞ்சிகைகள் வீட்டில் இருந்தன

குமுதத்தில் வந்திருந்த இரட்டை வால் சித்திரக்கதையில் ஆரம்பித்து அம்புலி மாமா, விக்கிரமாதித்தன் கதைகள் முதல் கல்கியின் சிவகாமியின் சபதம் ஈறாக சின்ன வயதிலேயே நிறைய வாசித்திருக்கிறேன். பதினொராவது வயதில் காந்தியின் சத்தியசோதனை, வியாசர் விருந்து போன்றவை வாசித்ததும் நினைவிருக்கிறது. பின்னர் உயர்தர வகுப்புக்களில் இருந்தபோது, எனக்குப் பிடித்த எழுத்தாளார்கள் பட்டியலில் டாக்டர் மு.வ,  ஜெயகாந்தன், சூடாமணி  ஆகியோர் இருந்தனர். அதற்கு அந்த நேரத்தில் கல்லூரி அதிபராக இருந்த பொன். கனகசபாபதி அவர்கள் நூலகத்தில் குவித்த நூல்கள்தான் காரணமெனலாம். பாடசாலைப் பரிசளிப்பு விழாக்களில் பெறும் பரிசுகள்கூட கதைப்புத்தகங்களாகவே இருந்தன. அப்படியாக பாலகுமாரன், சிவசங்கரி, அம்பை, இந்துமதி, வாஸந்தி, பாலமனோகரன், செங்கைஆழியான், அகிலன், புதுமைப்பித்தன்,  நா. பார்த்தசாரதி, ந. பாலேஸ்வரி எனப் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இருப்பினும் எந்த எழுத்தாளரினதும் வழி நின்று எழுதவேண்டுமென நான் நினைத்ததில்லை, அப்படி முயன்றதுமில்லை.

0000000000000000000000

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா பற்றிய சிறுகுறிப்பு :

கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர் என்று ஆற்றல்கள் மிகுந்த ஸ்ரீரஞ்சனி கனடாவில் வசித்து வருகின்றார். இதுவரையில் இவரால்,

ஸ்ரீரஞ்சனிதமிழ் படிப்போம், பகுதி 1 & பகுதி 2 –  2009

நான் நிழலானால் – சிறுகதைத் தொகுதி- 2010

தமிழ் ஓர் அறிமுகம் / Tamil An Introduction – 2018

தமிழ் – ஆரம்பநிலை – 2018

தமிழ் – மேம்பட்டநிலை – 2018

சிறுவர் கதைகள் – 2018

உதிர்தலில்லை இனி – சிறுகதைத் தொகுதி -2018

பின் தொடரும் குரல் – கட்டுரைத் தொகுதி – 2018

சிந்துவின் தைப் பொங்கல் /Sinthu’s Thai Pongal – 2019

Read with me (என்னுடன் சேர்ந்து வாசியுங்கள்), Youtube Video in Tamil – 2020

ஆகிய படைப்புகள் ஈழத்துத் தமிழ் எழுத்துப்பரப்பிற்கு கிடைத்துள்ளன.

கோமகன்

25 ஆவணி 2020

கோமகன்

 

(Visited 361 times, 1 visits today)
 

3 thoughts on “பெண்களின் உரிமைகள் என்பது அவர்களுடையது, அவற்றை அவர்களுக்கு எவரும் வழங்கவேண்டியதில்லை-நேர்காணல்-ஸ்ரீரஞ்சனி”

Comments are closed.