மயக்கம் என்ன?-‘குறுக்கும் மறுக்கும் 06’-கருணாகரன்

கருணாகரன்விதை எழுதுவோர் அதிகம். ஆனால் கவிதை நூல்கள் அந்தளவுக்கு விற்கப்படுவதில்லை” என்கின்றனர், தமிழ் நூலாக்குநர்கள், வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் போன்றோர். “கவிதைப் புத்தகங்களை விட சிறுகதைகளுக்கும் நாவலுக்குமே அதிக  வரவேற்பு. அதிலும் நாவல்களுக்குக் கூடுதல் இடமுண்டு” என்று மேலும் சொல்கிறார்கள். புத்தகச் சந்தை தொடக்கம் நூல் விற்பனை நிலையங்கள் வரையில் இதுதான் நிலவரம் என்கின்றனர். இவர்கள் சொல்வது அவதானத்தின் வழியானது, அனுபவ உண்மை என்பதால் இந்த உண்மையை மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது நாம்.

எனக்குப் பரிச்சயமான வெளியீட்டாளர் எப்பொழுதும் சொல்வார், “ஆயிரக்கணக்கானவர்கள் எழுதுகிற சங்கதியை (கவிதையை) எழுதினால் நீங்கள் ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருப்பீங்க. அதில நீங்க தனித்து நிற்கிறது, தனித்துத் தெரியிறது ரொம்பச் சவாலானது. சிறுகதை கூட அப்பிடித்தான். எப்பிடியும் ஒரு இருநூறு முன்னூறு சிறுகதைப் புத்தகங்கள் ஒவ்வொரு ஆண்டும் வருது. அதில எப்படிப் பார்த்தாலும் ஒரு ரண்டாயிரம், மூவாயிரம் கதைகள் வந்திடுது. அதுக்குள்ள உங்களை நிறுத்திறதும் சவாலே. அதை விட நாவலை எழுதுங்க. ஆண்டுக்கு அதிகபட்சமாக ஒரு ஐம்பது நாவல்தான் தமிழ்ல வருது. அதில நிண்டால் உங்க பேர் தெரியும். அதுக்கு மெனக்கெடுங்க. உழைப்பைச் செலவழியுங்க” என்று.

அவருடைய இந்தக் கருத்து பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், இது எவ்வளவு சரியானது என்று நாம் பார்க்க வேண்டும். இதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிய வேண்டும்.

ஏனென்றால் “இவையெல்லாற்றையும் விட புனைவு சாராத (Non-Fiction) நூல்கள்தான் அதிகம் விற்பனையாகிறது என்பதே உண்மை. புனைவை (Fiction) விட, புனைவற்ற (Non-Fiction) புத்தகங்களையே பெருமளவானோர் வாங்குகிறார்கள். இதையும் கூட வெளியீட்டாளர்களும் புத்தக விற்பனையாளர்களுமே சொல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகிற – விற்பனையாகிற புத்தகங்களின் வகையைத் தொகுத்துப் பார்க்கும்போது புனைவு சாராத (Non-Fiction) புத்தகங்களே அதிகமாக வருகின்றன. அதிகமாக விற்பனையாவதும் இவையே. இதில் எந்த வகையான புத்தகங்கள் என்பது தனிக் கேள்வி. ஆனாலும் புனைவு சாராத  (Non-Fiction) புத்தகங்களுக்கே முதற் கிராக்கி என்பது உண்மை.

இதை நூலகங்களும் உறுதி செய்கின்றன. ஏனென்றால், நூலகங்களும் புனைவற்ற (Non-Fiction) புத்தகங்களையே அதிமாகக் கொள்வனவு செய்கின்றன. நூலகங்களின் வாசகர்கள் கேட்பதும் பயன்படுத்துவதும் அவற்றையே. ஆனால், “1970, 80 களில் இப்படி இருந்ததில்லை. அப்பொழுது அதிகமாகக் கதைப்புத்தகங்களும்  (நாவல்களும் சிறுகதைகளும் கவிதைப் புத்தகங்களும்தான் (Fiction) அதிகமாக நூலகங்களில் இருந்தன. அவற்றைத் தேடித்தான் வாசகர்களும் வந்தார்கள். அவர்கள் இரவல் எடுத்துக் கொண்டு சென்றதும் அவற்றைத்தான். இப்பொழுது புனைவு சாராத புத்தகங்களையே பலரும் கேட்கிறார்கள், குறிப்பாக இளைய தலைமுறையின் ஈடுபாடும் தேவையும் அது ( புனைவு சாராத புத்தகங்கள்) தான்” என்கிறார் முதுநிலை நூலகர் ஒருவர்.

இன்று அந்தச் சூழல் மாறி விட்டது. அன்று கேளிக்கைக்கும் கொண்டாட்டத்துக்குமான ஊடகங்கள் மிகக் குறைவு. புத்தகங்கள் – வாசிப்பு, நாடகள் மற்றும் கிராமியக் கலைகளான கூத்து போன்றவையே இருந்தன.  சினிமா பார்ப்பதாக இருந்தால் தியேட்டருக்குச் செல்ல வேண்டும்.

இது வேறு ஒரு சூழல். தொலைக்காட்சியும் கைத்தொலைபேசியும் கோலோச்சுகின்ற காலம். இந்தச் சூழல் உருவாக்கியுள்ள வாழ்க்கையும் மன நிலையும் வேறு. தேவைகளும் நோக்கும் வேறு.

இந்த நூலகர் குறிப்பிடுவதைப் போல, இதற்கு ஏற்ற மாதிரி, புனைவற்ற நூல்கள் அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நேரடியாகவே வழங்குகின்றன. இதுவே உண்மை. தொழில்துறை, வரலாறு, தொழில்நுட்பம், தகவல் பரிமாற்றம், பண்பாடு தொடக்கம் அறிவியல் வரையில். இவை எல்லாவற்றையும் எளிதாகப் புரிந்து கொள்வதற்கான வாசல்களையும்  புனைவற்ற (Non-Fiction) நூல்களே நேரடியாகவும் இலகுவாகவும் திறக்கின்றன. அதனால் இவற்றை இவர்கள் நாடுகிறார்கள்.

வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி, தொழில் வழிகாட்டி, அதிர்ஸ்டம், நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம், உங்கள் கைகளில் நீங்கள் என்ற மாதிரியான புத்தகங்கள் பல பதிப்புகள் காண்பதும் ஆயிரக்கணக்கில் விற்பனைச் சாதனையாவதும் இந்த வகையில்தான்.

இளைய தலைமுறையின்  எதிர்பார்ப்புகள் அவர்களுடைய தேவைகளோடு சம்மந்தப்பட்டவை. அந்தத் தேவைகள் அவர்களுடைய வாழ்க்கையோடு இணைந்தவை. எனவே அதனை எட்டுவதற்காக அவர்கள் அவற்றைத் தேடுகிறார்கள். ஏனென்றால் முன்னரை விட இன்று வாழ்க்கைத் தேவைகள் அதிகமாகி விட்டன. வேறாகியும் விட்டன. அவற்றுக்கான சவால்களும் அதிகரித்துள்ளன. அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும் என்பதே அவர்களின் முன்னிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை. எனவே அதற்கான வழிகளும் வேறாகியுள்ளன. இதனால் தமக்கு வாய்ப்பளிக்கக் கூடிய திசைகளை நோக்கி அவர்கள் செல்கிறார்கள். அதில் எளிதாக வெற்றியைப் பெற்று விட வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம்.

எளிதாக என்று இங்கே குறிப்பிடப்படுவது இன்றைய இளைய தலைமுறையின் முயற்சி, தேடல், வாசிப்புப் பயிற்சி, மொழி ஆற்றல், வாழ்க்கை பற்றிய நோக்கு போன்ற பலவற்றோடு சம்மந்தப்பட்டது. எதையும் அதிக சிரமம் இல்லாமல் எளிதாகப் பெற்றுக்கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பது இதில் முக்கியமானது. இந்த மனநிலையின் வெளிப்பாடே எதையும் எளிதான வழிகளில் தேடுவதாகும். இதனால் படிப்பதை (வாசிப்பதை) விட கேட்பதன் மூலமாகவும் பார்ப்பதன் வழியாகவும் தமக்குரியதைப் பெற்று விடலாம், அடைந்து விடலாம் என்று நம்புகிறார்கள். இன்று அதற்கான சாதனங்களும் அதிகமாகி விட்டன. வழிகளும் அதிகமாகத் திறந்துள்ளது. பெருகியிருக்கும் YouTupe Channel கள் இதை நிரூபிக்கின்றன.

‘அறிவியலின் அடிப்படையே அதுதானே. எதையும் இலகுவாக்குவது’ என்று யாரும் இந்த இடத்தில் தம்முடைய தருக்க நியாயத்தை முன்வைக்கக் கூடும் . கை விளக்கை விட மின் விளக்கு சுலபமானது. எளிதானது. ஒரு சுமையை நாமாகச் சுமப்பதை விட, அதை மாட்டு வண்டியில் ஏற்றிச் செல்வதை விட இயந்திர வாகனத்தில் எடுத்துச் செல்வது இலகுவானது. இதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்? என்றும் அவர்கள் கேட்கலாம்.

ஆனால் அந்த மடைமாற்றத்துக்கான அறிவியல் உழைப்பு எளிதானதல்ல. அந்த உழைப்பின் அடிப்படையில்தான் இலகுத்தன்மை உருவாகியது, பகிரப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது மாபெரும் முயற்சியின் விளைவு. பேருழைப்பின் வெளிப்பாடு. ஆனால், அதைச் செய்வதற்குப் பலரும் தயாரில்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதேயில்லை. பதிலாக எதையும் எளிதாகப் பெற்று விட வேண்டும் என்ற முனைப்பே மேலோங்கிச் செல்கிறது. இந்த மனநிலை மிக வேகமாக – எளிதாக – சுபலமாக என்ற திசையில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தவர்களை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள், சரியாகத் தெரியாத – சரியாக நிர்ணயிக்க முடியாத வழிகளில், சவால்கள் நிறைந்த பயணங்களைச் செய்தே பல திணைகளையும் நாடுகளையும் கண்டடைந்தனர். இதில் கடற்பயணங்கள் இன்னும் சவால் மிக்கவை. அறிவியற் சாதனைகளும் அப்படித்தான். ஏன் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே பல கோடிப் பேருக்குப் பெரிய சவாலான விசயமாக இருந்தது. கிராமங்களை விட்டு நகரங்களுக்குச் செல்வதும் நகர வாழ்க்கையில் இணைந்து கொள்வதும் கூட மிகக் கடினமான ஒன்றாகவே காணப்பட்டது. இவற்றிற்கிடையில் இருக்கும் பிரச்சினைகளையும் நுட்பமான சிக்கல்களையும் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவற்றைக் கடப்பதும் கூடக் கடினமாக இருந்தது.

அப்படி அன்றைய மனிதர்கள் மிகக் கடினமான முயற்சிகளின், உழைப்பின் வழியாகத்தான் சவால்களை வென்று வாழ்ந்தனர். அதிலேதான் அவர்களுடைய மகிழ்ச்சியும் ஈடுபாடும் இருந்தது. “எதையும் சிரமம் எடுத்துச் செய்வதே சிறப்பு. அதுவே வாழ்க்கைக்குப் பெறுமதி” என்ற எண்ணம் ஒரு பண்பாடாக  மேலோங்கியிருந்தது. அதிலே பெருமிதம் கொண்டனர். “கடின உழைப்புக்கு நிகரில்லை” என்று நம்பினார்கள். இதனால்தான் “உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே..” என்றெல்லாம் பாடினார்கள். பிள்ளைகளைக் கூட கடினமான பயிற்சிகளின், உழைப்பின்  வழியாகத்தான் வளர்த்தனர். எதையும் இலகுவில் பெற்று விடக் கூடாது. அது அதற்கான முயற்சியின் விளைவாகவே எதையும் பெற வேண்டும். அதுவே நியாயமானது. அதுவே அழகு என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். உழைக்காமல், முயற்சியின்றிப் பெறப்படும் அனைத்தும் இழிவானது. நியாயமற்றது என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது. இதனால்தான் பிள்ளைகளிடத்திலோ துணையிடத்திலோ அன்பைப் பகிர்வதில் கூட அவர்களிடையே ஒரு இறுக்கம் இருந்தது.  அவர்களுடைய கலைகளும் கூட அப்படியாகத்தான் இருந்தன. எழுத்தும் வாசிப்பும் கூட அப்படித்தான். சற்று இறுக்கமாக, சிடுக்குகள் நிறைந்ததாக.

அந்த இறுக்கத்தை, சிடுக்குகளின் முடிச்சை அவிழ்த்துப் படிப்பதும் பெறுவதுமே வாழ்க்கையின் உயர் கலை என்ற நம்பிக்கை மேலோங்கியிருந்தது.

இன்றைய தலைமுறையின் மன நிலை வேறு. எதையும் தேடிப் பெறுவதை விட எங்கேயிருந்தாவது பிரதி (Photo copy) எடுத்துக் கொண்டால் போதும் என்ற நிலை. இப்பொழுது பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற மாணவர்கள் கூட தங்களுடைய ஆய்வுகளுக்குரிய எல்லைகளையும் திசைகளையும் நோக்கிச் செல்ல முயற்சிப்பது குறைவு. மிக அபூர்வமாக – விலக்காகச் சிலர் மட்டும் அப்படி விரிந்த எல்லைகளை நோக்கித் தங்களுடைய சிறகுகளை விரிக்கிறார்கள். ஏனையோரெல்லாம் கிடைக்கக் கூடியதைப்  பொறுக்கிக் கொள்ளவே விழைகிறார்கள். இவர்களுக்கு கவிதை போன்ற இறுக்கமான – சிடுக்குகள் நிறைந்த, ஆழம் கூடிய ஒரு வடிவம் அந்நியமானதாக, விலக்காகவே இருக்க முடியும். இதனால்தான் கவிதையை விட்டுத் தொலைவில் நிற்கிறார்கள். கவிதை மட்டுமல்ல, சிறுகதை, நாவல், ஓவியம், ஆழமும் கலைப் பெறுமானமும் கூடிய சினிமா போன்றனவும் சற்று எட்டத்தில்தான் இருக்கும்.

“கவிதை எழுதுவதற்கு கடினமான பயிற்சியும் முயற்சியும் தேவை. சொற்களைச் செதுக்கி எடுத்து அவற்றை உருவாக்க வேண்டும். விரிந்தும் பரந்தும் இருப்பதை சுருக்கி, உருக்கி எடுத்து உருவாக்க வேண்டும். அது எளிதில் கூடி வராத ஒன்று. அது நமக்குத் தோதுப்படாது என்பதால் நான் புனைவு எழுத்துக்குப் போய் விட்டேன்” என்று எழுத்தாளர் (நாவலாசிரியர்) இமயம் சொல்லியிருப்பதை இங்கே மனங் கொள்ளலாம். இது பாலைக் கடைந்து வெண்ணெய் ஆக்குவதைப்போன்றது. உரை நடையானது, தயிரில் நீரைக் கரைத்து மோராக்குவதைப்போன்றது. இதன் அர்த்தம், ஒன்றை ஒன்று எதிர் நிலையில் வைத்து நோக்குவதோ ஒன்றைக் குறைத்து ஒன்றை உயர்த்துவதாகவோ என்றில்லை. ஒவ்வொன்றுக்கும் அதனதன் தளத்தில் சிறப்பும் பெறுமானமும் உண்டு.

ஆனால், உரைநடையில் உள்ள இலகுத் தன்மை – அதில் விரிக்கப்படும் வாய்ப்புகள் –  அதிகம் என்பதால், எளிதாகக் கொள்ள விரும்பும் மனம் அதில் ஈர்க்கப்படுகிறது. இதிலும் வணிக எழுத்து ஏற்படுத்தும் ஈர்ப்பு இன்னும் அதிகமானது. வணிக ரீதியான கவிதைகளும் இதில் சேர்த்தி. ஏனென்றால் இவற்றில் இன்னும் மேலோட்டமான எளிய தன்மை (எளிமை அல்ல) நிறைந்துள்ளது அல்லவா. இதனால்தான் நாவல், சிறுகதை போன்றவற்றிலும் மிக ஆழமான வாசிப்புக்குரியவற்றைத் தேடி பலரும் கூடாமல், சிறிய எண்ணிக்கையானோர் மட்டுமே அவற்றில் கூடுகின்றனர். தமிழில் அதிகபட்சம் ஒரு நாவல் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படுவது இன்னும் அபூர்வமாகவே உள்ளது. சிறுகதையும் அப்படித்தான். மிஞ்சிப் போனால் ஐநூறு பிரதிகள் ஒரு ஆண்டில் விற்பனையாவது சாதனை. ஆனால், கவிதையை விட நாவலுக்கும் சிறுகதைக்கும் உள்ள இடம் கூடுதல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. வணிக எழுத்தின் வாசகப் பரப்பு இதற்கு மாறானது. அது ஒப்பீட்டளவில் பல மடங்கு அதிகமானது.

எனவே அடிப்படையில் ஆழம், தீவிரம், சிடுக்கு, மாற்றான தன்மைகள் போன்றவற்றில் பொதிந்திருக்கின்ற திரவியத்தைத் தேடுவதில் உள்ள அலுப்பு – பஞ்சிக் குணமே முதற் தயக்கமாகும். அதுவே எதன் மீதும் அந்நியத்தையும் விலக்கத்தையும் உண்டாக்குகிறது. அதுவே நவீன, நவீனத்தைக் கடந்த கவிதை, நவீன, நவீனத்தைக் கடந்த ஓவியம், நவீன, நவீனத்தைக் கடந்த சிற்பம் போன்றவை  தூரத்தில் விலக்கப்படுவதாகவும் உள்ளது.

வாழ்க்கையின் நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கலைக்கும் இலக்கியத்துக்கும் முக்கியமான இடமுண்டு. அவை புறவயமான நெருக்கடிகள் என்பதை விட அகவயமான நெருக்கடிகளை நோக்கியே பேசுகின்றன. வாழ்க்கை (சவால்கள்) உண்டாக்கும் உளநெருக்கடிகள் – அக நெருக்கடிகள். ஆகவே அதிலேயே கவனத்தைக் குவிக்கின்றன. கலையின், இலக்கியத்தின் அடிப்படையே அதுதான். அது உள்முகமாக ஆழத்தை நோக்கிச் சென்று விரிவது. அதில் உண்டாகும் ஒளியே வெளிச்சத்தை அளிப்பது, வழிகளைக் காட்டுவதாகும்.

இன்று உள நெருக்கடிகளைப் பிறிதொன்றாக – இன்னொரு துறையாக (உளவியலாக) – பார்க்கின்ற, அணுகுகின்ற போக்கு உருவாகியுள்ளது. இதனால் கலைக்கும் இலக்கியத்துக்குமான இடம் மாற்றமடைந்துள்ளது. அல்லது அப்படி ஆகி வருகிறது. அது பொழுது போக்கிற்கானது என்ற அளவில் சுருங்கியுள்ளது அல்லது அவ்வாறு சுருக்கப்படுகிறது. பொழுது போக்கிற்கும் கொண்டாட்டத்திற்கும் ஏராளம் சாதனங்களும் அவற்றின் உற்பத்திகளும் உள்ளன. அறிதல் என்பது சுருங்கி வருகிறது. அதன் தன்மை மாறியுள்ளது. தேடல் சார்ந்தாக இல்லாமல், தகவலைத் தெரிந்து கொள்வதாக மாறியுள்ளது. தேடலில்தான் அடிப்படைகளை நோக்கிய, ஆழத்தை நோக்கிய பயணம் நிகழும். அதுவே தீவிரத்தை உண்டாக்கக் கூடியது. நிதானத்தை அளிக்க வல்லது. அவ்வாறான ஒரு நிலையை உடைத்து விடுவதே இன்றைய வணிக உலகத்தின் நோக்கு. வணிக உலகமே எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதால் அது அதற்குத் தேவையான கவர்ச்சிகரமான உத்திகளைப் பயன்படுத்துகிறது. நிதானத்தை உடைத்து விடுவது இதில் முதன்மையான ஒன்று. நிதானத்தை உடைப்பதன் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். தனக்கு வேண்டியதை அள்ள முடியும் என்பதால் அது இதை உக்கிரமாகச் செய்து கொண்டிருக்கிறது.

இதில் தீவிர, மாற்று வடிவங்கள் அனைத்தும் இப்படித்தான் பின் தள்ளப்படும். அது இலக்கியமாக இருந்தாலென்ன, அரசியலாக இருந்தாலென்ன? கலையாக இருந்தாலென்ன.

இதைக் கடந்து நிற்பது என்பதே சவால். இதில் கவிதை அதன் தன்மைக்கு ஏற்ப இன்னும் கூடுதலான சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. அவ்வளவுதான்.

கருணாகரன்-இலங்கை

கருணாகரன்

(Visited 159 times, 1 visits today)
 

2 thoughts on “மயக்கம் என்ன?-‘குறுக்கும் மறுக்கும் 06’-கருணாகரன்”

Comments are closed.