குறுக்கும் மறுக்கும் 01 –‘திசையற்ற பயணம்’ -கருணாகரன்

”நம்முடைய கதைகளையும் கவலைகளையும் சொல்ல முற்படுகிற அறிக்கைகளும் வரலாற்றுப் பதிவேடுகளும்தானா  ஈழத்தின் (புலம்பெயர் எழுத்துகள் உட்பட)  அண்மைக்கால நாவல்கள்? அதற்கப்பால் இவற்றின் பெறுமானம் என்ன? நாவல் எழுப்பக் கூடிய கேள்விகள், தருகின்ற தரிசனம்,  நமக்குள் உண்டாக்கும்  மாற்றங்கள் எவை? அதாவது, ஒரு போரையும் அதன் அழிவையும் நேரிலே  சந்தித்தவர்களிடமிருந்து எழுந்த படைப்புகள் என்ற வகையில் இவை நமக்கு எதை உணர்த்துகின்றன? நமக்குத் தருகின்ற தரிசனம் எத்தகையது?” என ஈழ நாவல்களைக் குறித்த உரையாடல் ஒன்றின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

கருணாகரன்டோல்ஸ்ரோய் காட்டிய தரிசனமே காந்தியை வன்முறையை நிராகரித்து அகிம்சையின் பக்கமாகத் திருப்பியது போல நமக்குள் இந்த நாவல்கள் உண்டாக்கும் ஒளிப் பரப்பு எத்தகையது?

உணர்ச்சி வசப்படாமல் ஆழமாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கேள்வியின் பின்னுள்ள உண்மையையும் நியாயத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். படித்த அத்தனை நாவல்களையும் மீள்நினைவுநிரலுக்குள் கொண்டு வந்து பார்க்கும்போது, எல்லாமே நாம் அறிந்த நம்முடைய கதைகளின் (நம்முடைய கடந்த காலத்தின்) மையத்திலும் ஓரத்திலுமாகவே நிகழ்ந்திருப்பதை உணர முடியும். வந்திருக்கும் – வந்து கொண்டிருக்கும் நாவல்களில் அநேகமானவையும் ஏதோ ஒரு வகையில் நம்முடைய துயரங்களின் கதையைச் சொல்லும் தவிப்பையே கொண்டிருக்கின்றன . சில கதைகள் மட்டும் வீரத்தின் சுவடுகளை மெல்ல உணர்த்த முற்படுகின்றன.

அடிப்படையில் இவை இரண்டும் ஒன்றுதான். ஒட்டுமொத்தத்தில் அவரவர் கோணத்தில் அவரவர் கொண்டிருக்கின்ற அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கதை சொல்லல் நிகழ்கிறது. அல்லது நிகழ்த்தப்படுகிறது. விலக்காக அங்கங்கே நிகழும் மெல்லிய மாறுபடுதல்களையும் குறிப்பிட வேண்டும். அவை ஒரு வளரியக்கமாகப் பரிணமிக்கவில்லை. இதற்கு வாசகச் சூழலின் எதிர்பார்ப்பு இறுக்கமும் ஒரு காரணம். அதை மீறக்கூடிய அளவுக்கான வீரிய எழுச்சியும் முறுக்கும் எழுதுவோரிடம் குறைவு.

மற்றும்படி இந்தப் போக்கிற்கான எழுத்தை ஒவ்வொரு எழுத்தாளரும் மிக வெளிப்படையாக – எளிய சூத்திரத்தின் வழியே செய்கின்றனர். கதை நாயகன் – நாயகி அல்லது கதை நாயகர்கள்  – நாயகிகள் மற்றும் எதிராளிகள் என்ற இரு நிலைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டுமானத்தில் மிகப் பழகிய வடிவத்தில் இந்த நாவல்கள் உருவாக்கப்படுகின்றன. சற்று விலகலாக அல்லது அதைப்போன்றதொரு தோற்றப்பாட்டை எழுத்துத் திறனுள்ள சிலர் உருவாக்குகின்றனர். உதாரணம் ஷோபசக்தியின் நாவல்கள். உருவாக்கப்படும் இந்த இரு நிலைகளும் கூடப் புதியனவல்ல. நமக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயப்பட்ட கள்ளன் – பொலிஸ் பின்னாளில் இயக்கம் – ஆமி என்றாகிய கதைகளே அநேகம். கதைகளை வாசித்து முடிக்கும்போது நமக்கு மிஞ்சும் சித்திரம் இதுவே. இதற்குக் காரணம், யாரும் இந்த மெய்நிகர் பாடுகள் நிறைந்த – போர் தின்ற – வாழ்க்கையைக் கூட புற நிலைப்படுத்திப் பார்க்க முற்படவில்லை என்பதே.

இதற்கான காரணம், எல்லோரும் எதையும் அகநிலைப்பட்டே பார்க்கின்றனர் என்பதாகும். அகநிலைப்பார்வையில் குறுகலான எல்லைகளை மட்டுமே மட்டுப்படுத்திப் பேசக்கூடியதாக இருக்கும். அதுவும் உட்சுருங்கி. அதாவது, சுயநிலைப்பட்ட பார்வையே மேலோங்கும். மாறாக புறநிலைப்பார்வையே விரிந்த பரப்பில் நம்மை இன்னொரு தரப்பாக்கி வெளியே நின்று நோக்க வைக்கும். அதற்கே உலக அளவிலும் வெளிப்பரப்பிலும் வரலாற்றிலும் மதிப்பதிகம். அப்படிப் புறநிலைப்பட்ட பார்வையில் வெளிவந்த ஈழ நாவல்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளன. விமல் குழந்தைவேல், ஷோபாசக்தி, சயந்தன், நடேசன் போன்ற மிகச் சிலரே ஓரளவுக்கு  புறநிலைப் பார்வையைச் செலுத்த விளைந்துள்ளனர். ஓரளவுக்கு தேவகாந்தனையும் இதில் சேர்த்துக் கொள்ள முடியும். இவர்களும் இதைப் பாதி நிலையிலேயே செய்துள்ளனர். இந்தக் குறைபாட்டுக்குக் காரணம், எழுதும்போது மனதில் எழும் தளம்பலாகும். தம்மை ஒரு தரப்பாக்கிக் கொண்டு எழுதுவதால் நிகழ்கின்ற கொடுவினை இது. இதனால் ஈழ அரசியல் எந்தளவுக்கு உட்சுருங்கியும் சிதிலமடைந்தும் உள்ளதோ அதையும் விடச் சிதிலமாகி விட்டது இந்த நாவல்களின் வெளியும். இதில் விமலுக்கும் நடேசனுக்கும் புறநிலைப்பட்ட பார்வைச் சாத்தியங்கள் ஒப்பீட்டளவில் சற்றுக் கூடுதலாக இருந்தாலும் அவர்களாலும் முழுமையான அளவில் எல்லைகளை விரிக்க முடியாமலே உள்ளது.

இது ஏற்கனவே நம்முடைய மனதிலும் அரசியல் வெளியிலும் நிர்ணயிக்கப்பட்ட எதிர்த்தரப்பின் மீது மேலும் குற்றப்பத்திரங்களை அடுக்கிவிடும் எத்தனங்களை நோக்கி நகர்த்துகிறது. இந்த முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்களாகவே ஒவ்வொருவரும் செயலாற்றுகின்றனர். பழி சுமத்துதல் இதில் அதிகமாக நடந்து விடுகிறது. மறுவளத்தில் இது நம்மைச் சுத்தப்படுத்தும் முயற்சிகளாகும். இதை ஒரு பொதுக்குணமாகவே எல்லோருடைய நாவல்களும் கொண்டுள்ளன. மிக அண்மையில் இதில் ஒரு திரும்பல் சிறிய அளவில் நிகழ்ந்துள்ளதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். இதற்கு உதாரணம், சாத்திரியின் ஆயுத எழுத்து, விமல் குழந்தைவேலின் கசகறணம், தமிழ்க்கவியின் ஊழிக்காலம், சயந்தனின் ஆதிரை, அஷேரா போன்றவை. (இவை மட்டும்தான் என்றில்லை, உதாரணம் மட்டுமே.வேறு பலவும் உண்டு).

மற்றும்படி கறுப்பு வெள்ளைப் பிரதிகளே அநேகமும். இதை எளிதாகவே வகைப்படுத்திக் கொள்ள முடியும். அரசு எதிர்ப்பு அல்லது படைகளின் மீதான குற்றப்பத்திரம். புலி ஆதரவு அல்லது அதற்கு நேரான புலி எதிர்ப்பு. இந்திய எதிர்ப்பு அல்லது ஆதரவு. இந்த மாதிரி ஒரரே வகைப்பட்ட Formula க்குள்ளேயே எல்லாக் குதிரையோட்டுங்களும் பகடையாட்டங்களும் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் எல்லாமே யுத்தத்தை ஆழமாக ருசிக்கின்றன. போரை உள்ளும் வெளியுமாகக் கொண்டாடுகின்றன. வீர யுகக் கனவில் உள்ளுரத் தித்திக்கின்றன.

இது தேர்ந்த வாசகர்களுக்கு அலுப்பூட்டுவது. அவர்களால் நாவல் தொடங்கும்போதே இதை இனங்கண்டு விட முடிகிறது. அல்லது நாவலின் போக்கில் இதை உணர்ந்து சட்டெனத் தம்மை இதிலிருந்து நிறுத்திக் கொண்டு விலக்கமாகி விடுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் வந்த ஈழ – புலம்பெயர் நாவல்களைக் குறித்து இலக்கிய வாசிப்புத் தொடர்ச்சியுள்ளோரின் ஈடுபாட்டை அவதானித்த போது அவர்களிடம் சலிப்பே மிஞ்சியிருந்ததைக் காண முடிந்தது. ஏற்கனவே பரிச்சியமான களம், கதைகள், பாத்திரங்கள், சம்பவங்கள், தொடக்கம், நகர்வு, முடிவு என ஒரே தன்மை மீந்திருப்பதே இந்தச் சலிப்புக்குக் காரணம். இதை மீறி எழுதவே முடியாத நிலை ஒரு தீரா வியாதிபோல நம்மவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பதே இவர்களுடைய கணிப்பு. புதிதொன்றை காண முடியாத ஏமாற்றம் சலிப்பை ஊட்டுகிறது. ஆகவேதான் திரும்பத்திரும்ப ஒன்றையே மாற்றி மாற்றி எழுதி இன்பம் காண முற்படுகின்றனர். அதை எத்தனை தடவைதான் சகித்துக் கொள்ள முடியும்?

ஆனால் இதை நம்மவர்கள் வெற்றி – தோல்வி என்ற தீராத மோதல்களுக்கிடையில் ஏற்படும் அழிவு, இழப்பு, அநாதரவான நிலை, துயரம் என்பனவற்றோடு இணைத்து ஒரு கலப்பு உற்பத்தியாகச்  செய்கின்றனர். போரின் தோல்வியினால் (இதை எதிர்பார்க்கப்பட்டதாக ஒரு சாராரும் எதிர்பார்க்கவேயில்லை என இன்னொரு சாராரும்) உருவாகிய துயரத்தையும் அவலத்தையும் மையப்படுத்தி உரத்துப் பேச முனையும் போக்கு கழிவிரக்கத்தைக் கோருவதாகிறது. கழிவிரக்கத்துக்கு இந்த உலகில் எந்த மதிப்புமில்லை. அது இயலாமையின் வெளிப்பாடு. மற்றவர்களின் மடியில் செய்யப்படும் –செலுத்தப்படும் சுமையிறக்கமாகும்.

இந்தக் கழிவிரக்கத்தின் மறுபக்கம் மறுபடியும் வன்முறைக்கான தூண்டற் புள்ளிகளையே அதிகமாகக் கொண்டிருக்கிறது. இழைக்கப்பட்டது அநீதி. படுகின்றது மாபெரும் துயரம் என்றால் அதற்குப் பதில் பழிதீர்த்தல் என்று ஆழ்மனதில் பதியப்படுகிறது. ஆக இது மீளவும் வன்முறையின் மீது தலையை வைத்து உறங்க வைப்பதற்குச் சமனானது. அப்படியென்றால் நமது எழுத்தின் மகத்துவமும் மாண்பும் எத்தகையது?

ஆனால் இது நமக்குத் தெரியாத வகையில் எழுத்தின் லாவகத்தினால் உருமறைப்புச் செய்யப்படுகிறது. இதிலே சற்று வாசிப்புச்  சுவாரசியமும் கவனமும் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தக் கவனம் வெளிப் பரப்பில் பெரிய அளவில் எடுபடுவதில்லை. வெளிப்பரப்பென்பது, தமிழின் விரிந்த எல்லைகளிலும் உலகப் பரப்பிலுமாகும். ஆனால் நமக்கோ அதைப்பற்றிய கவலைகள் ஏதுமில்லை. நாமே உள்ளும் வெளியும் எல்லாம் என்று நம்பி விடுகிறோம். இதனால் எல்லாம் நமக்குள்ளேயே குதியாட்டம் போடுகின்றன. ஊரில் பேரெடுத்த ஆட்டக்காரனைப்போலத்தான் இது. வெளிப்பரப்பில் ஆடும் வரைக்கும் உள்ளுரின் ஆட்டக்காரன் ஹீரோதான். வெளியே வந்து வேறு களங்களில் ஆடும்போதுதான் தெரியும், தகுதியின் நிலையை. பரிதாபத்தின் உச்சத்தை.

எனவேதான் எவ்வளவுதான் தேடித்தேடிப் பார்த்தாலும் புதிய அனுபவத்தைத் தரக்கூடிய எழுத்துகளைக் கண்டடைய முடியாமல் உள்ளது. புதிய பார்வையை, புதிய தரிசனத்தை எதையும் உருவாக்க முடியாமல் இவை திரைந்து கொண்டிருப்பதை. ஆனால் நம்முடைய நினைவுகளைக் கிளறி பழைய சுவடுகளின் வழியே அழைத்துச் செல்வதால் அந்த கலவையில் ஒரு சுவாரசியத் தித்திப்பு நமக்குள் நம்மை அறியாமலே ஏற்படுகிறது. ஏற்கனவே நாமும் கன்னை பிரிந்து நிற்பவர்கள் என்பதால் எதிரி – நண்பன் – துரோகி – தியாகி என்ற கட்டுமானத்தின் ருசி அதீத இனிப்பாகிறது.

இதை விட்டு விலகியவர்களாலும் விலக எண்ணுகின்றவர்களாலும் ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல முடியவில்லை. இதனால் அவர்களும் அடிப்படையில் இந்த வட்டத்துக்குள்ளிருந்து விலகிச் செல்லவில்லை. முடியாமலே உள்ளனர். என்பதால்தான் எல்லா நாவல்களும் ஒன்றின் தொடர்ச்சி இன்னொன்றாக அல்லது ஒரே மாதிரியானவையாக ஓலமிட்டுக் கொண்டுள்ளன. எந்த ஊழை தனித்ததென்று தெரியாதவாறு.

எல்லோரிடத்திலும் கணிக்கக் கூடிய ஒன்றுள்ளது. அது தவிர்க்க முடியாமல் அதிகமதிகமாகப் புலிகளை உச்சாடனம் செய்வது. இது எப்படியானதென்றால், பில்லி சூனியம் செய்வதைப்போன்றது. அதாவது ஒன்று எதிராக வைப்பது. இன்னொன்று ஆதரவாக எடுப்பது என. அடிப்படையில் சூனியத்தோடு உறவாடுவதே. இதைப்போலத்தான் எதிராகவோ ஆதரவாகவோ அதீதமாகப் புலிகளை மையப்படுத்தி எழுத்துவது. அதைக் கடக்க முடியாமல் திணறுவது. வாச்க நிலையும் இப்படித்தான் உள்ளது. கடந்து செல்ல முடியாமல் சுழிக்குள் சிக்கியதாக.

நீ எதைப் பேசுகிறாய்? அதை எப்படிப் பேசுகிறாய் என்பதை விட அதை அடிக்கடி பேசுகிறாய் என்பது முக்கியமாகிறது. வரலாற்றின் மனதில் அதுவே நிலைபெற்றுவிடுகிறது. காந்தியைப் பற்றிய பல நூறு பக்க எழுத்துகளிலும் பல்லாயிரம் சொற்களிலும் பார்க்க கோட்ஸேயைப் பற்றி அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு வரியும் சில சொற்களும் போதும் வரலாற்றின் மறுபக்கத்தையும் புரிந்து கொள்வதற்கும் அடையாளம் காண்பதற்கும். அந்த ஒற்றைப் புள்ளியிலிருந்தே ஒரு தேடல், ஒரு பார்வை தொடங்குகிறது. இது ஏன்?எதற்காக? எப்படி? எதனால்? என்ற பல கேள்விகளை அது விதைக்கும். எழுப்பும். அந்தக் கேள்விகள் பெரியதொரு விசாரணையை நிகழ்த்தி, இன்னொரு கோணத்தை அல்லது மறுகோணங்களைக் காட்டும். அது சரியா தவறா என்பதல்லப் பிரச்சினை. அப்படியொன்று இருந்ததே என்பதே முக்கியமானதாகிறது. குறிப்பாக எதிர்த்தரப்பைப் பற்றிய பொதுப்பார்வையை – பெருந்திரள் நோக்கைக் கடந்து இன்னொரு பார்வையையும் நோக்கையும் அது முன்வைக்கும்.

நமது சூழலிலும் இதுவே நடக்கிறது. புலிகளை மறுத்துரைக்கும் முனைப்புகள் புலிகளை வரலாற்றின் நினைவடுக்குகளில் ஏற்றி விடுகின்றன. அவ்வாறே அரசையும் படைகளையும் எதிர்ப்படுத்துவதும் வரலாற்றேத்தில் நிகழ்கிறது. பிள்ளையார் குரங்காகி நம்முடைய தலைகளில் துள்ளித் தெறிக்கக் காண்கிறோம்.

கருணாகரன்-இலங்கை

கருணாகரன்

(Visited 171 times, 1 visits today)