வரலாற்றின் நகைப்பு-கட்டுரை-கருணாகரன்

கருணாகரன்
பித்தன் ஷா

இது அ.செ.முருகானந்தன், பித்தன் ஷா ஆகியோருடைய நூற்றாண்டு. இருவரும் நம்முடைய முதல் தலைமுறையில் முக்கியமான எழுத்தாளர்கள். ஆனால் தங்களுடைய காலம் முழுவதும் துயரங்களுடனேயே வாழ்ந்து முடித்தவர்கள். வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கூட இருவரும் மிக நெருக்கடியான ஒரு நிலையில்தான் கழித்துள்ளனர். ஆச்சரியமான – துயரமான ஒற்றுமை என்னவென்றால் இருவருமே ஆதரவற்றோருக்கான இல்லத்திலேயே இறந்துமிருக்கின்றனர். இதில் அ.செ.மு வின் இறப்புக் குறித்து சரியான தகவலை எடுப்பதற்கே முடியாத சூழல் வேறிருந்திருக்கிறது. இதை விடத் துயரமானது, அ.செ.மு இதற்கு முன்னரே இறந்து விட்டார் என்று பத்திரிகைகளில் கூடச் செய்திகள் வந்திருந்தன. அது தவறான சேதி. அவர் உயிரோடிருக்கிறார் என்பது கூட சில நாட்கள் கழித்தே பலருக்கும் தெரியவந்தது. ஆக மொத்தத்தில் நம்முடைய அருந்தமிழ்ச் சூழல் அவரை இரண்டு தடவை மரணமடையச் செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் அ.செ.மு பத்திரிகைகளில் வேலை செய்தவர். அதுவும் ஈழகேசரி, வீரகேசரி, ஈழநாடு ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில். அதை விட மறுமலர்ச்சி, எரிமலை என இலக்கியத்துக்கான இதழ்களையும் நடத்திய ஒருவர். அப்படியிருந்தும் அவருடைய மரணச் செய்தியைக் கூட தீர விசாரித்துப் பொறுப்புடன் வெளியிடக்கூடிய அளவுக்கு யாரும் இருக்கவில்லை. இதை விட இன்னொரு அவலம் அவரைப் பற்றி தகவல்கள் எதுவும் இடைப்பட்ட காலமொன்றில் (1995 – 1998) தெரியாதிருந்தது என்பது.

கருணாகரன்
அ.செ.மு

அ.செ.மு அதிகம் எழுதவில்லைத்தான். ஆனால் மூன்று நாவல்களையும் 25 க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். ஏராளமான கட்டுரைகள். அவற்றை தொகுத்து வெளியிடுவதற்கான வாய்ப்புகள்தான் அவருக்குக் கிடைக்கவில்லை. இவ்வளவுக்கும் அவர் பணியாற்றியது முழுவதும் பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும். இருந்தும் தன்னுடைய புத்தகங்களை வெளியிட முடியாமலே இருந்தது. 1950 ஒரேயொரு புத்தகம் – புகையில் தெரிந்த முகம் வெளியாகியுள்ளது. அதுவும் பெரிய சிரமங்களுக்கு மத்தியிலேயே. அதற்கான முன்னுரையில் அ.செ.மு எழுதுகிறார் “சில மாசங்களின் முன் சிறுகதை ஒன்று எழுதி ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன். சில தினங்களின் பின் ஒருநாள் அது திரும்பி வந்தது. திரும்பி வந்தபோது ஒரு கடிதத்தையும் அது கொண்டுவந்தது. கடிதம் பின்வருமாறு போயிற்று.

அன்ப,

உங்கள் கதையைப் பார்த்தேன். தயவுசெய்து அதனை ஒரு தொடர்கதையாகவே நீட்டி எழுத வேண்டுகிறேன். ஒரு நல்ல தொடர் கதையைப் பொறுத்த வரையில் நமது பத்திரிகைக்கு இப்பொழுது மழைக்காலம்” (அதாவது பஞ்சகாலம்).

இந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எப்பொழுதும் தங்கள் தங்கள் பத்திரிகைகளைப் பற்றித்தான் முதல் கவலை. நாலைந்து இதழ்களுக்கு நல்ல சரக்காக ஏதாவது கிடைக்குமா வென்று எங்கேயும் எந்த சந்தர்ப்பத்திலும் து}ண்டில் போட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்களத முக்கிய பிரச்சினை அதுதான். இல்லாவிட்டால் ஒரு சிறு கதையை பெருங்கதையாக நீட்டும்படி கேட்க என்ன துணிச்சல்! சிறுகதை என்றால் என்ன இழுப்பு மிட்டாயா அல்ல ரப்பரா?

அந்த ஆசிரியருக்கும் எனக்கும் ஏற்கனவே அறிமுகமிருந்தபடியால் போனால் போகிறது என்று விட்டுவிட்டேன். அவர் கேட்டுக்கொண்ட படியே சிறு கதையைப் பெருங் கதையாக நீட்ட (நீட்டி முழக்க!) தொடங்கினேன். அந்த உருக்குப்பட்டடை வேலையின் முடிவு தான் – 50 பக்கங்கள் வரை கொண்ட இந்தச் சிறு புத்தகம்.

000000000000000000000000

இந்தப் புத்தகத்தை என் அன்பார்ந்த வாசகர்களின் தலையில் சுமத்தவேண்டி ஏற்பட்டதற்கு இதோடு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

“உமது புத்தகங்களை அன்பளிப்பாகவே அனுப்பிச் செலவாக்கவேண்டிய நிலைவரம் உமக்கு ஏற்படாமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். அதைப்பற்றி நீர் கொஞ்சமும் யோசிக்காமல் புத்தகத்தை வெளியிடும்” என்று தைரியம் கூறிய ஒரு நண்பர், இதை மனமுவந்து அச்சிட்டுக் கொடுத்த ‘சுதந்திரன்’ அதிபரும் அச்சுக்கூட நிர்வாகஸ்தர்களும், இதை தங்கள் பொறுப்பாகவே ஏற்று வெளியிட முன்வந்த நவலட்சுமி புத்தகசாலையார், சித்திரம் எழுதி உதவிய அன்பர் ‘கதிர்’, மகாகவி சுப்பிரமணி பாரதியார் – ஆகிய இத்தனை பேர்களும் தான் இந்தப் புத்தகம் வெளியாவதற்கு, காரணமாக – காரணஸ்தர்களாக உள்ளனர்.

பத்தகத்தைப் படித்து முடித்த வாசகர்களுக்கு, யாரையாவது பாராட்ட வேண்டுமென்று தோன்றினால் உங்கள் பாராட்டுதல்களை மேலே கூறியவர்களுக்கே செலுத்துங்கள்” என்று. இதிலே அவர் பாரதியாரைக் குறிப்பிடுவது உள்ளுணர்வினால் ஏற்பட்ட மரியாதையின் நிமித்தமாகவே.

கருணாகரன்அ.செ. முவின் சிறுகதைகளை “மனித மாடு” என்ற பேரில் யாழ் இலக்கியப் பேரவை வெளியிட்டது. அதில் முழுக்கதைகளும் இடம்பெறவில்லை. மீதிக் கதைகள் உதிரிகளாகவே உள்ளன. அவருடைய கதைகளைப் படிக்கும்போது புதுமைப்பித்தனின் பாதிப்பை உணரலாம். மெல்லிய கிண்டலும் கேலியுமான நடை இயல்பாக அ.செ.முவுக்கும் கூடி வந்திருக்கிறது. இதைப்பற்றித் தனியாக ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இந்த இரண்டு புத்தகங்களையும் தவிர வேறு எவையும் நூலாக்கப்படவில்லை. இப்பொழுது அவருடைய எழுத்துகளை முழுமையாகத் தொகுத்து வெளியிடலாம் என்றொரு எண்ணம் பலரிடத்திலும் உருவாகியுள்ளது. குறிப்பாக கடந்த 27.06.2021 அன்று தமிழ் மொழிச் செயற்பாட்டகத்தினால் நடத்தப்பட்ட அ.செ.மு பற்றிய நிகழ்ச்சியின்போது  சேரன், சபேசன், கெங்கா போன்றோர் இதைப்பற்றிச் சொன்னார்கள்.  அ.செ.முவின் நூற்றாண்டையொட்டி அது சாத்தியமானால் மகிழ்ச்சியே.

அ.செ.முவைப்போன்ற இன்னொருவர் பித்தன் ஷா. அ.செ.முவுக்கு நிகர் நண்பர் என்று குறிப்பிடப்பட்ட பித்தன் ஷா (காதர் முகைதீன் மீரான் ஷா). வின் நிலையும் கதையும் துயரூட்டும் ஒன்றே. இவரும் புதுமைப்பித்தனின் மீது பெருமதிப்பும் விருப்பும் கொண்டவர். பித்தன் என்ற பெயரே புதுமைப்பித்தனின் மீதான மதிப்பினாலும் ஈடுபாட்டினாலும் வைத்துக் கொண்டதுதான். மட்டுமல்ல, படிக்கிற காலத்திலேயே தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டின் காரணமாக சென்னைக்குச் சென்று அங்கே புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா போன்றோரைப் பார்த்திருக்கிறார் பித்தன். இதற்காக அங்கே ஒரு பிரசுர நிலையத்தில் வேலையும் செய்திருக்கிறார். இதைப்பற்றி தினகரன் வாரமஞ்சரியில் தெளிவத்தை யோசப் எழுதும்போது “கிழக்கிலங்கையின் கே.எம்.ஷா. புதுமைப்பித்தனின் படைப்புக்களால் ஈர்க்கப்பட்டுப் பித்தாகி பித்தன் என்னும் புகை பெயர் கொண்டு சிறுகதைகள் எழுத்து தொடங்கியவர். புதுமைப்பித்தன், மௌனி, கு.பராஜகோபாலன் போன்ற இலக்கியவாதிகளைக் காணவேண்டும், பேசவேண்டும், பழகவேண்டும் என்னும் இளமைக்கால வேட்கையில் ஜே.எஸ். சி. என்னும் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே தமிழகம் சென்றார். அங்கு புதுமைப்பித்தன், மௌனிபோன்ற இலக்கிய பிரம்மாக்களின் நூல்களை வெளியிடும் ஸ்டார் பிரசுரத்தில் ஒரு சிற்றூழியராக வேலைக்கும் சேர்ந்து கொண்டார்.

கருணாகரன்தனது ஆதர்ச எழுத்தாளர்களை கண்டுகளித்து பேசி ஆசை தீர்த்துக் கொண்டார். புதுமைப்பித்தனைக்  கண்டும் பேசியும், பழகியும் மகிழ்ந்தார். இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட காலம் அது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலமும் அது வென்பதால் பிரிட்டிஷ் அரசாங்கம் இராணுவப்பலத்தை அதிகரித்துக் கொள்வதில் ஆர்வம் மிக்கதாகவே இருந்தது. ஸ்டார் பிரஸ்வேலையும் ஒழுங்காக அமையாத சூழலில் நமது ஷா இராணுவத்தில் அடைக்கலமானார். பட்டாளத்தில் இணைந்தயின் பல ஊர்களுக்குப் பயணம். இராணுவத்தில் பணி என்று தொழிலாடிப் பிறகு இலங்கை திரும்பினார். (1944)” என்று குறிப்பிடுகிறார்.

பித்தனும் தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் மிகச் சிரமப்பட்டு அகதி முகாம், முதியோர் இல்லம் என்றே கடைசிகாலத்தைக் கழித்திருக்கிறார். இவருடைய கதைகளில் ஒரு தொகுதியை “பித்தன் கதைகள்” என்ற பேரில் மல்லிகைப் பந்தல் மூலம் டொமினிக் ஜீவா வெளியிட்டிருக்கிறார். பித்தனும் அ.செ.முவைப்போல பத்திரிகை, இலக்கிய இதழ்கள் என்றே கலந்து வாழ்ந்திருக்கிறார். லங்கா முரசு என்ற பத்திரிகையை எம்.எஸ்.ஏ. அஸீஸ், செல்லையா இராசதுரை ஆகியோரோடு இணைந்து நடத்தியிருக்கிறார். அப்போது இராசதுரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.

இப்பொழுது பித்தனுடைய எழுத்துகளை முழுதாகத் தேடித் தொகுக்க வேண்டும் என்ற முனைப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இதற்கான முதலடியை தமது வழித்தடம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் இதைச் செய்யலாம். பலருடைய ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால் விரைவில் இதைச் சாத்தியப்படுத்தி விடலாம் என்கிறார் சிராஜ் மஷ்ஹூர். இது சாத்தியமானால் மகிழ்ச்சியே.

இவர்களுடைய சமகாலத்தவர்களாக தமிழ்நாட்டில் ப. சிங்காரம், தி.ஜானகிராமன் போன்றோர் உள்ளனர். தமிழகத்தில் சிங்காரத்தின் முழுமையான எழுத்துகள் செம்பதிப்புகளாக வந்துள்ளன. இப்பொழுது நூற்றாண்டையொட்டி மேலும் அவை மீள்பதிப்பாகிக் கொண்டிருக்கின்றன. சிங்காரத்தின் எழுத்துலகம் பற்றி விரிவான பல கட்டுரைகளையும் விமர்சனங்களையும் பலரும் கடந்த இருபது ஆண்டுகளுக்குள் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சிங்காரம் எழுதிய காலத்திலும் வாழ்ந்த காலத்திலும் தன்னுடைய புத்தகங்களை வெளியிடுவதற்கு மிகச் சிரமப்பட்டிருக்கிறார். “சிங்காரம் இரண்டு புதினங்கள் மட்டுமே எழுதியுள்ளார், ஆனால் அவற்றை வெளியிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால் அவரால் மேலும் எழுத இயலவில்லை. அவர் எழுத விரும்பியபோது அவரை யாரும் பெரிதாக ஊக்கப்படுத்தவில்லை என்றும், அவர் எழுதிய 2 நாவல்களை வெளியிட்ட பிறகு அவர் ஊக்கத்தை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதைப்பற்றி சி. மோகன் குறிப்பிடும்போது, “மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய சிங்காரம், தனது முதல் படைப்பான ‘கடலுக்கு அப்பால்’ நாவல் புத்தகமாவதற்காக, அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை சென்று பதிப்பாளர்களைச் சந்தித்திருக்கிறார். எதுவும் கூடிவரவில்லை. ஏழெட்டாண்டு அலைச்சல்களுக்கு பிறகு, ‘கலைமகள்’ நாவல் பரிசுப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார். அது முதல் பரிசு பெற்றுப் புத்தகமாகவும் 1959-ல் வெளிவந்தது. அந்த உத்வேகத்தில், 1960-ல் காலமும் களமும் வாழ்வும் ஒன்றையொன்று மேவிய, முழு வீச்சான தளத்தில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அந்த நாவலின் கைப்பிரதியோடு அவ்வப்போது சென்னை சென்று பல பதிப்பகங்களை அணுகியிருக்கிறார். எதுவும் நடந்தபாடில்லை. பத்தாண்டு அல்லாட்டங்களுக்குப் பின், நவீனத் தமிழ் இலக்கியத்தோடும், சிற்றிதழ் இயக்கத்தோடும் உறவுகொண்டிருந்த மலர்மன்னன் வசம் அது சென்றுசேர்ந்திருக்கிறது. சிங்காரம் ஒரு பத்திரிகையாளர் என்பதன் மூலம் நடந்த ஒரு அனுகூலம்.

கையெழுத்துப் பிரதியை வாசித்துப் பிரமிப்படைந்த மலர்மன்னன் எடுத்துக்கொண்ட பிரயாசைகளின் விளைவாக, 1972-ல் ‘கலைஞன்’ பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை வெளியிட்டது. பத்தாண்டு தொடர் முயற்சிக்குப் பின் அது புத்தகமாகியபோது நிகழ்ந்த விபரீதங்களும், நாவல் சற்றும் கவனிக்கப்படாத சூழலும், மனச் சோர்வுகளும் கடைசி வரை அவருடைய புனைவுப் பயணத்தை முடக்கியிருந்தன. ப.சிங்காரம் தனது நாவலின் சிறந்த பகுதிகள் என்று நினைத்து எழுதியவை சில காரணங்களால் நீக்கப்பட்டன. அந்தப் பகுதிகள் இப்போதும் கிடைக்காமல் தொலைந்துபோனவைதான்” என்ற துயர நிலையை அறிய முடிகிறது.

ப.சிங்காரத்தின் இறுதிக் காலமும் ஏறக்குறைய தனிமையில்தான் நிகழ்ந்திருக்கிறது. பின்னாளில் பலரும் அவரைச் சந்தித்து தொடர்ந்தும் எழுதுங்கள் என்று கேட்டபோதும் சிங்காரம் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டார். பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 30 டிசம்பர் 1997 இல் காலமானார் சிங்காரம். தான் இறந்ததைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். அவருடைய வாழ்க்கையும் கசப்புடன்தான் முடிந்திருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் விட்டு விலகியதாக இருக்கிறது தி. ஜானகிராமனுடைய எழுத்து வாழ்க்கை. எழுதும்போதே புகழடைந்தவர் தி.ஜா.  “சக்தி வைத்தியம்” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர். தமிழில் மிகுந்த பாராட்டைப் பெற்ற மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள்  போன்ற நாவல்களை எழுதியவர். ஜானகிராமனும் ஊடகத்தில் பணியாற்றியிருக்கிறார். அகில இந்திய வானொலியில். ஏனைய மூவரையும் விட ஏராளமாக எழுதியவர் ஜானகிராமன். வாழும் காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். அப்பொழுதே அவருடைய புத்தகங்கள் தொடர்ந்து பிரசுரமாகியுள்ளன. இப்பொழுது தி.ஜாவின் முழு எழுத்துகளும் செம்பதிப்புகளாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் மோகமுள் என்ற நாவல் பின்னர் அதே பெயரில் சினிமாவாக்கப்பட்டது. இப்பொழுது அவருடைய சிறுகதைகளில் ஒன்று பாயாசம் என்ற பேரில் சினிமாவாகியுள்ளது.

தமிழகச் சூழலில் முன்னோடிகளையும் சிறந்த படைப்பாளிகளையும் மீள்நிலைப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இது அவசியமான ஒன்று. ஈழத்தில் இது போதாக்குறையாகவே உள்ளது. முன்னர் வடக்குக் கிழக்கு மாகாணசபையின் நிதியூட்டத்தில் சில நூல்கள் வெளியாகியுள்ளன. இப்பொழுது வடக்கும்  கிழக்கும் தனித்தனியாகப் பிரிந்து இயங்குகின்ற சூழலிலும் இந்தத் தொகுப்பாக்க முயற்சிகள் நடக்கின்றன என்பது கொஞ்சம் மகிழ்வளிக்கிற சேதி. இந்த முயற்சியில் ஈழநாடு கதைகள், மறுமலர்ச்சிக் கதைகள், சுதந்திரன் கதைகள், ஈழகேசரிக்கதைகள், கலைச்செல்வி கதைகள் என்று இதழ்களில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டன. தனியாளுமைகளின் தொகுப்புகள் என்றால் கவிஞர்கள் முருகையன், கல்வயல் வே. குமாரசாமி ஆகியோரின் கவிதைளும் மற்றும் மயிலங்கூடலூர் பி. நடராஜனின் (ஆடலிறை) எழுத்துகளும் வந்துள்ளன. இதைப்போல பிரதேச செயலக கலாசாரப் பேரவைகளின் வழியாக சிலருடைய எழுத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக செ.கதிர்காமநாதன் படைப்புகள்.  இப்பொழுது கவிஞர் செ. கதிரேசம்பிள்ளையின் கவிதைகளை அவருடைய மாணவர்களாக இருந்தோர் வெளிக்கொண்டு வரும் முயற்சி நடப்பதாக அறிய முடிகிறது. கற்சுறாவினால் என்.கே. ரகுநாதனின் எழுத்துகள் ரகுநாதம் என்ற பேரிலே முழுத்தொகுப்பாக அண்மையில் வந்துள்ளது. வீரமணி ஐயரின் எழுத்துகளை வடமாகாணசபை தொகுத்து வருகிறது. மற்றும்படி வரட்சியான நிலையே தொடருது. மஹாகவியின் எழுத்துகளை அவருடைய குடும்பத்தினர் இப்பொழுது முழுத்தொகுப்புகளாகக் கொண்டு வந்துள்ளனர். தா. இராமலிங்கத்தின் கவிதைகளை அவருடைய பிள்ளைகளின் ஏற்பாட்டில் ரஜீவனும் மார்க்கண்டுவும் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போன்ற சாத்தியங்கள் எல்லோருக்கும் வாய்க்கும் என்றில்லை. அவர்களுக்கும் கூட இவற்றைத் தனித்து வெளியிடுவது என்பது கடினமானதே. இதைச் செய்யக் கூடியதொரு பண்பாட்டுச் சூழல் உருவாக வேண்டும்.

சி. வை. தாமோதரம்பிள்ளை ஒரு முன்னோடியாக பழந்தமிழ் இலக்கியத்தைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார். பின் வந்த காலத்தில் இந்த முயற்சியைப் பலரும் பல விதமாக முன்னெடுத்துள்ளனர். சுண்ணாகம் திருமகள் பதிப்பகம் இதில் முக்கியமான ஒன்று. இதழ்களைத் தொகுத்து அளித்ததில் தமிழியல் வெளியீட்டகத்தையும் பின்னர் செங்கை ஆழியானையும் உதாரணங்களாக, முன்னோடிகளாகக் குறிப்பிடலாம்.

ஆனால் தொகுப்பும் பதிப்பும் என்பதற்கு அப்பால் இந்தப் படைப்பாளிகளைப் பற்றியும் இவர்களுடைய எழுத்துகளைப் பற்றியும் முன்வைக்கப்படும் விமர்சனங்களும் ஆய்வுகளும் அவசியமானவை. அதுவே சூழலை உயிரப்பூட்டும். மதிப்பீடுகளை உருவாக்குவது என்பது அவற்றைப் பற்றிய விமர்சனங்களும் ஆய்வுகளுமே. அதை நோக்கிக் காத்திருக்கிறது வரலாற்றுச் சூழல். அ.செ.மு, பித்தன் ஷா ஆகியோரின் இந்த நூற்றாண்டிலிருந்தே இதைத் தொடங்கலாம். தொடங்க வேண்டும்.

யாரிந்தப் பூனைக்கு மணியைக் கட்டுவது என்று யோசிக்கிறீர்களா? நீங்களே கழுத்தில் மணியொலிக்கும் ஒரு சூரப் பூனைதானே!

கருணாகரன்-இலங்கை

கருணாகரன்

(Visited 82 times, 1 visits today)