உயிர்த்தெழப்போவதில்லை-கவிதை-கருணாகரன்

உயிர்த்தெழப்போவதில்லை

குழைத்துச் சாப்பிடுவதற்குச் சீமெந்தும் வெயிலுமுண்டு
கால்வலியைப் பொருட்படுத்தாமலே
மேலும் இரண்டு சுமை மணல் வந்து விட்டது
கொட்டிப்பரப்புவதற்கென்று
அப்படியே கருங்கற்கள். சீமெந்து, இரும்புக் கம்பிகள்,
ஆணி, பலகை, முட்டுக்கம்பு
எல்லாம் வந்து நிறைந்தன
தின்று முடிய
எப்போதும் அழிகின்றன பாதியிரவுகள்.
ரொட்டியும் சம்பலும் பிளேன்ரீயும் அவனும்
ஒரு நேர்கோட்டில் சந்திப்பதை
KFC யும் Mc Doanld ம் தடுக்கவே முடியாமல்
கழிந்தது இன்றும் .
எவ்வளவோ முயன்றும் அவனை
Food City யை நோக்கித் தள்ளி விட முடியவில்லை
என்று நிதியமைச்சரைக் கடிந்தன International traders.
இரவை எரித்து விடுகிறது கடன்தீ
பகலில் நீரூற்றாகப் பெருக வைக்கிறது
பனங் கள்ளு
சுருள் குலைந்து மேலெழும் பீடிப்புகையின் முன்னே
நடந்து செல்லும் அவனைக் கடந்து போகின்றன
மணல் லொறிகள்
கிறேன்கள்
தள்ளு வண்டிகள்
எல்லாம் போய் முடிய
அருகே நின்ற மரநிழலில் தன்னையாற்றியவன்
காதலும் காமமும் பொங்கி ருஸியாகும்
புணர்ச்சியைப் பற்றி யோசித்தேயாகவேணும்
என்றெண்ண
வந்ததோர் கட்டளைக் குரல்
“அங்கெயென்ன மசிரையா புடுங்கிறாய்
இங்க வா“ என்று.
வானத்தை ஏந்தி வைத்திருக்கும் அக் கட்டிடத்தை விட்டு
எப்படி ஓரடி நகர்வதென
நின்றொரு கணம் நிதானித்துக் கழிவதற்குள்
கல்லையும் மணலையும் இரும்பையும்
விடக் கடினமான அக்குரல்
குருதியோலம் மேலெழ ஆணியறைந்தது
அவன் மீது.
மூன்றாம் நாளென்ன
முப்பது நாளின் பிறகும் உயிர்த்தெழப்போவதில்லை அவன்

கருணாகரன்-இலங்கை 

கருணாகரன்

(Visited 61 times, 1 visits today)