நகரத்திலிறங்கிய பறவைக்குஞ்சு-கவிதை-தேவ அபிரா

நகரத்திலிறங்கிய பறவைக்குஞ்சு

தேவ அபிரா

எனது மகன் பெரு நகரங்களின் மேலாகப்பறப்போம் வாவென்றான்
அவனது சிறகுகள் எனது முகத்தில் அடிக்கத்தொடங்கி வெகுநாட்களாகின்றன.
சிறகுகள் முளைக்கும் போதே இலக்குகளும் முளைப்பதில்லை.
இலக்கற்ற பறத்தலில் ஆர்வமுற்றவன் என் வாயை மூடச் சொல்லிவிட்டான்.
தரையிறங்கிய நகரவாசலில் தன்னைக் கைவிட்டு விடுவென்றான்.
நான் பறக்கத்தொடங்கிய காலமும் வெளியும் வேறொன்று.
போரின் அம்பு மழைக்குள் இருப்பின் வாசத்தை முகர்ந்து,
இரத்தம் தெறித்தும் சிறகிழக்காத பறவைநான்.
பெருவனங்களின் வாசத்திற் கிறங்கி நதிகளின் ஈரத்தில் இறகு கோதியவன்.
விசும்பளாவும் கோபுரங்களின் பாதாள வேர்களுக்கிடையில் ஓடும் மானுடச் சாக்கடைகளில் மணம், வாசனைத்திரவியங்கள் விற்கும் தெருவிலும் வீசும் வெப்பமான நாளொன்றில்
அவனுக்கிங்கே  மானுடவாசம் வீசும்  தானியமணியொன்றாவது கிடைக்குமென்ற நம்பிக்கை என்னிடம் இருக்க வில்லை.
அவனைப் பெருவனங்களுக்குத் தூரமாக அழைத்து வந்தவன் நான்தானே.
என் கையத்தட்டிவிட்டவனின் கையிற் தொலைபேசியும் கடனட்டையும் இருந்தன.
மீண்டும் சந்திக்கும் நேரத்தை அறிவிப்பதாகக் கூறினான்.
நகரத்தின் போதையைச்  சுமந்த கண்கள்  என்னைக் கடந்து செல்கின்றன.
போதையின் நரகத்தைச் சுமந்த கண்கள் வீதிச்சமிக்கை விளக்கின் கீட் தொப்பியை ஏந்தியுள்ளன.
” என்னை எப்படியென்றாலும் ஏசிக்கொள்
ஆனாற் பிச்சையிடு” என்கிறான் ஒருவன்.
பகலின் இரைச்சலைக் கிழித்துக்கொண்டு வரும் பெண்குரல்
சல்லாப லகரியா? பொல்லாத வன்முறையா? சூதா?
அறியா நகரம்.
கட்டங்களிடையே புகுந்து வாவியை நோக்கி வீசிய கோடைக்காற்றிற்  சன்னமாய் நிரம்பியிருந்த மனிதக் குரல்களைப் பிரித்தறியத் தண்டவாளங்களிற் கிறீச்சிட்ட தொடர்வண்டி விடவில்லை.
மகன் என்னை மீண்டும் அழைத்த போது  இரவை மாய விளக்குகள் துன்புறுத்திக்கொண்டிருந்தன.
பிரபஞ்சம் தொலைந்து போயிருந்தது.
மகனின் முதுகுப்பையோ நிறைந்திருந்தது.
ரொரொன்ரொ நகரின் கட்டுமானத்தில் உயிரிழந்த நூறு தொழிலாளர்களின் பெயர் சுமந்த கற்களின் முன் சில நிமிடங்கள் நின்றான்.
தனது தோட்பையைக் கழற்றி என்னிடம் தந்தான்.
என் தோழிற் சாய்ந்து கொண்டான்.
ஒரு சிறு தானிய மணியை அவன் கண்களுட் கண்டேன்.

28-07-2016

0000000000000000000000000000000000

கவிதையைத் தயாரித்தல்

தேவ அபிரா

நட்பைப்பற்றியொரு கவிதையை எழுதுவதற்குப் பலவாண்டுகளாக முயன்றுகொண்டிருக்கிறேன்.
பயன்படா வார்த்தைகள் மீள்சுழற்சிக்  கூடைக்குள் விழுந்து கொண்டிருக்கின்றன.
உள்ளிருப்புத்தீர்ந்தது.
அங்காடித்தெருவுக்கு நடை.
கடைகள் ஆயிரம்; தெரிவுகள் ஆயிரம்.
எங்கும் மலர்ந்து சிரிக்கும் கவிதைக்கடைகள்.
உவமானங்கள் உவமேயங்கள் படிமங்கள்  குறியீடுகள்  புனைவுகள் புரட்டுக்கள் தயாரிக்கப்பட்ட சம்பவங்கள் என யாவும் வர்ண விளக்குகள் ஒளிரும் கண்ணாடிப் பெட்டிகளுள் மிளிர்ந்து கொண்டிருந்தன.
நீண்ட நேரமாகத் தேடிக் கொண்டிருந்த என்னை விற்பனையாளன் கேட்டான்:
“நீ என்ன தேடுகிறாய்”
நட்பின் கவிதையை
“ ஓ! நிலவறைக்குச் சென்றுபார். தயாரிப்பு நிலையில் இருக்கக்கூடும்.”
குறுகலான படிக்கட்டுகள் ஒளியற்ற வெளிக்குள் என்னைச் செலுத்தின.
இளகிய தீப்பெட்டி, ஆயிரம்முறை தட்டியபின், முடியும்தறுவாயிலிருந்த மெழுகுதிரியை ஒளியுமிழச் செய்தது.
எல்லையும் காலமும் அற்ற வெளியை  கண்ணுறும் விழியுண்டேல் சிற்றொளி பேரொளி.
மதுவருந்தி உரையாடும் கவிதைகளின் வார்த்தைகளோ பனிச்சறுக்குப்போல வழுக்கிச் செல்வதை அங்கே கேட்டேன்..
ஆன்மா அடங்கிய கவிதைகள் சிலந்திவலைகளுக்குள் சிக்கித் தூசி படிந்து கிடந்தன.
சிறுகடலுள் விழுந்து சிதிலமாகிச் சிதைந்த கவிதைகள் மீது தர்மச்சக்கரம் வைக்கப்பட்டிருந்தது.
கல்லறை இல்லாத கவிதைகளின்  மீது காய்ந்த கண்ணீர்த்துளிகளிருந்தன.
மேலேறக்காத்திருந்த கவிதைகளின் அடுக்கைப் பார்த்தேன்.
அடிகழுவும் கவிதைகள்
ஒன்றின்மீதொன்று காறியுமிழும் கவிதைகள்
நண்பனின் மனைவியை வருடும் கவிதைகள்
பெண்களின் ஆடைகளைக் களையும் கவிதைகள்
காலை வாரிவிடும் கவிதைகள்
காசுப்பைக்குள் கைவிடும் கவிதைகள்
காலத்தை வையும் கவிதைகள்
கண்ணீரை விற்கும் கவிதைகள்
கலியுகத்தின் வியாபாரக் கணக்கைப் பார்க்கும் கவிதைகள்
எனக்கு  மூச்சு முட்டியது.
வீடு திரும்பி மீள் சுழற்சிக்கூடைக்குள்ளிருந்த  சொற்களை எடுத்து மீள அடுக்கத் தொடங்கினேன்
தயாரிக்கப்பட்ட நட்பொன்று உருவானது.
இதை வைத்து என்ன செய்வது?
மீண்டும் அங்காடித் தெருவுக்கு நடை.

27-11-2016

தேவ அபிரா – ஹொலண்ட்

தேவ அபிரா

 

(Visited 150 times, 1 visits today)