ஆண் நிலவு-கவிதை-தேவ அபிரா

ஆண் நிலவு

தேவ அபிரா

அவன் எழுந்து ஆடைகளை அணிந்தான்
சிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டு போனான்.

அவள் எழுந்து சாளரத்தைத் திறந்து விட்டாள்.
சன்னமான காற்று சாளரச்சேலைகளை விலக்கியது.

வண்ணமிழந்த சுவர்களில்
இருளும் மௌனமும் படிந்திருக்கின்றன.

அவ்விரவிற் கழற்றி வீசப்பட்ட முன்றாவது விந்துறையின் நெடியை வெளியனுப்பவே அவள் சாளரத்தைத் திறந்தாள்.
நிலவு எதற்காக இளிக்கிறது?

மார்கழி 2020

000000000000000000000000000000

தூங்கா நகரம்

தேவ அபிரா

நான் வாகனங்களின் ஆறுகள் வழுக்கிச் செல்லும் பெரும் சாலையிற் பகலில் விரையும் வாழ்க்கையுள் விழுந்தவன்.
அவன் பகலில் வீதிகளைச் சுமக்கும் பாலங்களின் கீட் மின்சாரத் தொடரூந்துகளின் கண கண அதிர்விற் பெட்டி அட்டைகளின் மெத்தையிற் தூங்குபவன்.
இரவுகளில் நினைவுகளின் சுமையைத் தொலைக்க நகரம் ஒதுக்கி வைத்த வீதிகளில் நடக்கையிற் கறுப்பின் ஓளியிற் பிறந்த நானும் அவனும் ஒருவரையொருவர் தினமும் காண்கிறோம்.
ஊசித்தழும்புகள் நிறைந்த கைகள்,
உறிஞ்சிச் சலிக்காத மூக்கு,
புகையும் வாய்.

தலை குத்திச்சரிந்த பின்னும் பார்க்கும் கண்கள் கேட்ட பிச்சையை நான் ஒரு பொழுதும் கொடுத்ததில்லை.

இன்றிரவு
அவனைக்கடக்கையிற் குடங்கி நடுங்கிக் கொண்டிருந்தவன்,
கூவினான்: ”ஏ பனங்கொட்டை காசு தா.”

திரும்பி அவனருகிற் சென்று அவன் தலையைத் தூக்கி, அவன் கண்களைப்பார்த்தேன்.
சீவனிழந்த நான்கு கண்களுக்கிடையிற் அப்படியென்ன பரிமாற்றம் நிகழப்போகிறது.

உடனே கூறினான்: ”இப்போ வேண்டாம். பின்னாற் பார்க்காதே. போ.
காவல் நாய் வருகிறது”
நான் மேலே நடக்கிறேன்.

ஒருவன் தூசண வார்த்தைகளைப் பேசிய படி மதுப்புட்டியை வீதிக் கல்லடுக்கில் எறிகிறான்.
இன்னொருவன் இருண்ட சந்தில் மூத்திரம் பெய்கிறான்.
மோகத்திற்கிறங்கும் சோடிகள் முத்தமிடுகின்றன.
அவள் சைகைகளால் விலையைத் தெரிவிக்கிறாள்.
இரவு எப்படித் தூங்கும்?

மார்கழி 2020

000000000000000000000000000000

வாக்குகளை எண்ணும் இரவு

தேவ அபிரா

வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியபொழுது
நாள் தன்னை இருளாக்கிக் கொள்ளத்தொடங்கியிருந்தது.
அவர்கள் தங்கள் நிலத்திலிருந்து மிகத் தொலைவிலிருந்தார்கள்
அதனாற்றான்
இருந்த இடத்திலேயே தங்களைத் தங்கள் சொந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லக்கூடிய பானத்தைத் அடைத்திருந்த போத்தல்களின் மூடிகளைத்
திறக்கிறோமென்றார்கள்.
அப்பானம் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை
அங்கிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றுவிடும்.
தேர்தலின் இறுதிமுடிவுகளையும் அறியும் வரை விழித்திருக்க விரும்புகிறோமென்றார்கள்.
அவர்கள் தங்களது உரையாடலை ஆரம்பித்த பொழுது மனைவிமார்களை உறைப்பான தொடுகறிகளைச் செய்வதற்காக அடுக்களைக்கு அனுப்பி விட்டார்கள்.
மனைவிமார்களின் முணுமுணுப்பு கணப்படுப்புகளிலிருந்து பறக்கும் நுண்பொறி போற்பறந்தழிந்தது.
கிண்ணங்களை உயர்த்தி ஒரு தட்டு.
முதலாவது கிண்ணம் போய் மடிந்த போராளிகளை எண்ணிக் கவலைப்பட்டது.
இரண்டாவது கிண்ணம் போர்க்குற்றங்களை எண்ணிக்கவலைப்பட்டது.
மூன்றாவது கிண்ணம் பழைய காதலை எண்ணி அழுதது
நான்காவது கிண்ணம் முதலாவது உடலுறவை எண்ணி முட்டி வழிந்தது.
ஐந்தாவது கிண்ணம் காணித் தரகர்களின் முகவரியைப் பரிமாறியது.
வெறுமையான போத்தல்களை வைத்து ஆறாவது கிண்ணத்தை நிரப்ப முடியாதென்று ஒருவன் சொன்னதும்,
கல்லறைகள் சிதைக்கப்பட்ட புதை மேடுகளின் மீதும்
கல்லறையே இல்லாதவர்களின் நினைவுகளின் மீதும்
காணாமலாக்கப்பட்ட உயிர்களின் ஒளிப்படங்களின் மீதும் வழிந்து நிலத்திற் தேங்கியிருந்த அதிகாரமற்றவர்களின் உப்பேறிய கண்ணீரை அவர்கள் எட்டிப்பார்த்தார்கள்.
அக்கணம்
தலைநகரத்திற் நலிந்தவர்களின் உயிரையும் வாழ்வையும் ஒரே மூச்சிற் கொன்றவர்களின் வெற்றிக் கூச்சல் கேட்டது.
அங்குக் குடித்துக்கொண்டிருந்தவர்கள் காற்சட்டை அணிந்திருந்த போதும் வேட்டி அவிழ்ந்து விட்டதான உணர்விற் மண்ணைத் துளாவினார்கள்.
பிறகு
சத்தியெடுத்துக்கொண்டு படுக்கப் போனார்கள்.
மனைவிமார்கள் அவர்கள் விட்டுச் சென்ற எல்லாக்கழிவுகளையும் அவ்விரவையும் அள்ளி உக்காத குப்பைகள் போடும் கழிவுத் தொட்டிக்குள் போட்டார்கள்.

தேவ அபிரா-நெதர்லாந்து-புரட்டாதி 2020

தேவ அபிரா

 

(Visited 181 times, 1 visits today)