கவிதைகள் எப்பொழுது ஒழிந்து கொள்கின்றன?- தேவஅபிரா

 

தேவஅபிரா

அலைந்து மீளும் வழியிலொரு வீட்டைக் கண்டேன்

அவ்வீட்டுக்குள் அவர் ஏதோ செய்து கொண்டிருந்தார்.

கதவுகளற்ற அவ்வீட்டுக்குள் எப்படி நுழைந்தேனென்றும் அவர்
யாரென்றும் என்னைக் கேட்கவேண்டாம்.

நீ என்ன செய்கிறாய்?

நான் செயல்களையும் நிகழ்வுகளையும்
உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.

பார்! உன் வருகை கூட என்னால் உருவாக்கப்பட்ட செயல்தான்.

நிகழ்வுகளை நீ ஏன் உருவாக்க வேண்டும் உன்னைச் சுற்றி எண்ணற்ற
செயல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவே. நேற்றும் தொழும் தலத்தை
எரித்தார்களே?

கொள்ளிக்கட்டையை நான் எடுத்துக் கொடுக்கவில்லையே.

சிறுமி ஒருத்தி சிறைச்சாலை வாகனத்தை மண்ணுள் அழுத்தி என்
அப்பாவை விடு என்று கதறினாளே கேட்கவில்லையா?

கேட்டது. சனாதிபதிக்கு கடிதம் எழுதினார்களே?

இருக்கிறவர்கள் இதயத்தில் இருக்கிற இல்லாமலாக்கப்பட்டவர்களுக்காக,
இருக்கிறவர்கள் இருக்கிற விரதம் உன்னால் உருவாக்கப்பட முடியாத
செயல் அல்லவா?

அவர்கள் அதிகாரத்தாற் கொல்லப்பட்டவர்கள். ஆம்,
அவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகள் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல.

கந்தகமும் ஒலிவ் எண்ணையும் கலந்து செய்த தீந்திற் தொட்டுக்
குர்தியர்கள் தங்கள் தடித்த புருவங்களாற் மெசபத்தோமிய மலைகளில்
எழுதிய கவிதைகளைப் படித்திருக்கிறாயா?

வரும் வழி எங்கும் ஜாசிடிஸ் (Jazidis)பெண்களின் இரத்தப்போக்காற்
பாதைகள் சிவந்திருப்பதைப்பார்த்தாயா?

கண்களில் இரத்தத்தையும் இதயத்தில் கண்ணீரையும் வரவழைக்கிற
குழந்தைகளின் மென் விரல்கள் நிலமெங்கும் சிதறிக்கிடக்கின்றன.
பொறுக்கி எடுத்திருக்கிறாயா?

முறைப்பாட்டுச் சுவரைக்கடந்து வரும் ஆக்கிரமிப்பாளனின் எல்லா
வாகனங்களுக்கும் சிறுவர்கள் கல்லெறிகிறார்கள். உன்னால் அக்கற்களை
உருவாக்க முடியுமா?

ஊன் வற்றி உயிர்வற்றித் தீனின்றி இன்னொரு தேசம் கையேந்தி
நிற்கிறதே, இடிபாடுகளுக்கு மேலாக உயிர்க்கரம் நீட்டும் செயற்திட்டம்
உள்ளதா?

நிறுத்து நிறுத்து!

நீ இரத்தமும் சிதைந்த தசையும் மரணங்களும் நிரம்பிய குவளை.

கண்ணீர் நிரம்பிய உன்னைத் தாகப்பட்ட எனக்குத் தண்ணீரென்கிறாய்.

பின்ணணியில் ஓலத்தை இசைக்க விடுகிறாய்.

உனக்குள் இல்லை கவிதை.

ஓ. நீ கவிதைகளை உருவாக்குகிறாயா?

நிகழ்வுகளை உருவாக்குகிறாயென்றாயே!

கவிதை நிகழ்வுகளை முட்டாளே.

உன்னைச் சுற்றி நீ உருவாக்கிய நிகழ்வுகள்
எதனையும் காணமுடியவில்லையே?

காணக்கற்பனை வேண்டுமே அசடா!!

அவரது வீட்டைச்சுற்றிக் கற்பனையிற் கட்டப்பட்ட ஆடுகள் நிற்பதை
அப்பொழுதுதான் கண்டேன்.

காலங்களை உய்த்தறி;பட்டறி.

புலக்காட்சியனுபவங்களின் இயற்தூண்டுதல் மூளையிற்
கற்பனையை நிகழ்த்துகிறது.

மொழி பிணைகிறது.

மூளையின் செயல்கள் நிறைந்து வழியும் மொழியின் ஆறு
நேர்கோட்டிலோ முறிகோட்டிலோ வளைகோட்டிலோ இல்லை
எதிர்க்கோட்டிலோ போகட்டும்.

உள்ளடுக்குகள் உறு உணர்வுகள் கொண்ட சொல்லடுக்குகள் செறிந்து
வழிகிறது கற்பனையிற் கள்.

ஏந்தி என் குவளையை உயர்த்திக் கொள்கிறேன்.

வாழ்வின் கவிதை நம் மொழியுள்.

கவிதையின் வாழ்வு காலத்தில்.

அவரில் இருந்த கதவொன்றால் வெளியேற உன்னினேன்.

அடே நாடோடியே,

காலக்கோட்டுப் பதிவாளனே,

அரசியற்கவிஞனே,

இரு. இரு. தப்பிக்கப்பார்க்கிறாயே?

அரசியற் கழிவுகளும் அதிகாரத்தின் வாந்திகளுமே புலக்காட்சிகள்.

அவற்றை நான் விரும்புவதில்லை.

புற உலகம் உருவாகும் சம்பவங்களை உண்டால் எனக்கு மலச் சிக்கல் வருகிறது.
எனவே

எனது எழுதுமேசையை விட்டெழும்பி வருவதில்லை.

சரி இருந்துகொள்.

ஒரேயிடத்தில் இருந்தாலும் மலச்சிக்கல் வரும்.

மனச்சிக்கலும் வரலாம்.

உன் முளைக்குத் தரவுகள் தேவையே?

மூளைக்கான தரவுகள் முகப்புத்தகத்திற் கொட்டிக்கிடக்கின்றன.

உனது மூளையைப் முகப்புத்தகம் எடுத்துக்கொள்கிறது.

வா வெளியே.

கவிதையின் அரசியல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நான் எழுந்து வெளியில் வந்தால் அறைக்குள் இருக்கும் எனது பூனை

அங்கிருக்கும் எனது பாலைக் குடித்து விடுமே!

உனக்கான பால் வெளியிலிருந்துதான் வருகிறதா?

நான் மனப்பால் குடிப்பதில்லை

உனது பூனை என்ன குடிக்கிறது?

கற்பனையானதும் அருவமானதுமான இடத்தில் விளையும் சொற்களை
எனது பூனை குடிக்கிறது.

உனது சொற்களை நீ எலிகள் என்கிறாய்.

நீயோ புறப்பாலைத்தான் குடிக்கிறாய்.

அதனை எனது பூனையும் குடித்தால் அறைக்குள் நிலவும் அமைதி
கலைந்து விடும். பூனைகள் அமைதியாகவும் அழகாகவும் இருக்க
வேண்டும். அவற்றைத் தடவிக் கொண்டு தேனீர் அருந்துவது எவ்வளவு
சுகமானது.

உனது பூனையை நீ வெளியில் விடுவதில்லையா?

அவை அகத்துள் உலவும் பிராணிகள்.

அவை உனது அகத்தை விறாண்டுவதில்லையா?

இல்லை அவ்வாறு செய்தால் அவற்றை மதில் மேற் சென்றமரும்படி
தண்டித்து விடுவேன்.

மதில் எங்கேயிருக்கிறது?

அதை ஏற்கனவே மனதிற்குள் கட்டி வைத்திருக்கிறேன்.

வெளியே உள்.

உள்ளே விழி.

தேவ அபிரா- ஹொலண்ட்
ஆடி 2018

தேவ அபிரா

(Visited 120 times, 1 visits today)