மனக்கழிவு-கவிதை-தேவ அபிரா

மனக்கழிவு

தேவ அபிரா

தேவநகரில் ஒர் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு.
இல் அய்க்கியக்கூட்டம் .
தேவசாகரம் அழைத்திருந்தார்.
தேவையானவர் போயிருந்தேன்.
எழுத்து என்பது ஸ்கின்னிற்( Skin) குத்தும் நீடில்( Needle) போல இருக்க
வேண்டும்.
இக்கதைகள் அப்படி இல்லையே என விமர்சகர் முழங்கிக்
கொண்டிருந்தார்.
தேநீர் உரையாடலின் போது இவருக்கு அங்குசம் தான் சரி
எனப் புறுபுறுத்தார் எழுத்தாளர்.
ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் உச்சரிப்பாக்கிப் பேசுவதை
எழுதுவதைத் தவிர்க்கலாமே என்று விமர்சகருக்குச் சொல்லுங்கள்
அது ஊசி போற் தைக்குமென எழுத்தாளருக்குச் சொன்னேன். அத்தோடு நீங்களொரு கதையில் அப்படி எழுதியதை இப்படி எழுதினால்
இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்றும் பணிவன்புடன் கூறி
விட்டேன்.
அவர் முறைத்தபடி நன்றி சொன்னமை உடனுறைக்காதபடி என்னருகில்
இருந்தவளின் அழகிற் சொக்கிப்போகத் தொடங்கியிருந்தேன்.
அவளோ தொலைக்காட்சியொன்றிற்காக நேர்காணலில் ஈடுபடுபவள் போல்
எழுத்தாளரைக் கேள்விகளால் அணைக்கத் தொடங்கி இருந்தாள்.
எனக்குப் பிடித்த எழுத்தாளர் நீங்கள்.
உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரைச் சொல்லுங்களேன்

எனக்குப்பிடித்தவர்கள் இருக்கட்டும்
எனக்குப்பிடிக்காதவர்களைச் சொல்கிறேன்
எனக்கு இராஜ என்று தொடங்கும் எவரையும் பிடிக்காது
ஐயையோ நிற்கிறீர்களே இம் மென்கதிரையில் அமருங்களேன் இன்னும்
பேசுவோம்

சக்தி இருக்கும் வரை நிற்போமே.
அவர் நிற்கட்டும்.
தேவ தையலே உனக்குக் கால் கடுத்தால் என் நெஞ்சிருக்கை என்றேன்
நீ யாரடா நஞ்சிருக்கை என்றாள்.
நான் இராஜ தேவன் என்றேன்.
2019

000000000000000000000000000000

மூத்திர முட்டு
கோப்பிக் கடையில்( koffeeShop) வாங்கிய கஞ்சாத்தூளை இட்டுச்
சுருட்டாக்கிப் பற்ற வைத்து இழுத்தான்.
காற்றில் மிதந்த வளையங்களுக்குட் தானும் புகுந்து மிதந்து
செல்வதைக்கண்டான்.
சிரிக்கத்தொடங்கினான்.
உஸ் சிரிக்காதே.
முத்தமிடமுடியாது.
அட கடவுளே என்மீது இவளெப்படி வந்தாள்?
அணங்கே யாரடி நீ?
அதுதான் த- வாலன் வீதியிற் (De wallen- Amsterdam) புடைத்து நின்றாயே.
நான் யாரென்று அறிய வந்தாயா
அல்லது நீ யாரென்று அறிய வந்தாயா
சரிதான் தலையை உலுக்கிக்கொண்டான்.
பின் எழுந்து நடக்கத்தொடங்கினான்.
ஹெய்னெகனும் (Heineken) அம்ஸ்ரலும் (Amstel) அவனைக்
கேளிக்கை விடுதிக்குள் வருமாறு அழைத்தனர்.
வெள்ளிக்கம்பத்தில் வழுக்கிச் செல்லும் பெண்ணுடல் போல
மது அவன் நாவில் வழுக்கிச் சென்றது.
எழுந்து நடந்தானோ மிதந்தானோ
மூத்திரப்பை முட்டிக்கொண்டு வந்தது.
நெடுவழிக்கரையில் நின்ற மரத்தருகில் நின்றான்.
அண்ணார்ந்து பார்த்தான்
நெஞ்சை நிமிர்த்தி அது பிரபஞ்சம் வரை உயர்ந்து நின்றது.
அட இதிலேறியும் சொர்க்கம் போகலாமே!
முதலில் மூத்திர முட்டுத்தீரவேண்டுமே!!
காற்சட்டைப்பொத்தான்களை ஒரு வழியாகக்கழற்றி
ஆண்குறியை இரண்டுதரம் உலுக்கி மூத்திரப்பையைத் திறந்தான்.
அய்யோ!!
கண் விழித்த போது வைத்தியசாலையில் இருந்தான்
என்ன இப்படி அடிபட்டிருக்கிறாயே.
வைத்தியரே
அந்த மரம் என்னை ஓங்கி உதைத்து விட்டது.
இயற்கை அழைத்தால் மதிலென்ன மரமென்ன?
அதற்குத் தான் அனபிராங் மரமென்று (Anne Frankboom- Aesculus hippocastanum)
நினைப்பு.
கையுக்குப் பத்தும் தலைக்குக் கட்டும் போட்ட பின் வைத்தியர்
கூறினார்
மழையை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மரங்களுக்கு
மதுவும் சுகிலமும் யூரியாவும் கலந்த கழிவு நீரைப்பீச்சினால்
அவை உதைக்கத்தானே செய்யும்
அடுத்த முறை உன் சேட்டையை மதிலோடு வைத்துக்கொள்.

2 FEB 2020, 15:18

தேவ அபிரா -ஹொலண்ட்

தேவ அபிரா

(Visited 184 times, 1 visits today)