பொண் புடியன்-சிறுகதை-சுந்தர் நிதர்சன்

சுந்தர் நிதர்சன்
ஓவியம் : சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

காலை 11மணி. உக்கிர வெயில்.பொதுச் சந்தையிலிருந்து கடற்கரையை நோக்கி நேர்க் கோடாய் நீண்டிருக்கும் பாதை. ‘உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாரு…’ என குழைவுறும் குரலில் இடைவிடாது அழைத்துக் கொண்டிருக்கும் தொலைபேசிக்கு பதிலளிக்காமலேயே அவள் வியர்க்க வியர்க்க வேகவேகமாய் சந்தையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாள்.

திடீரென சந்தைக்கு உள்புறமாய் திரும்பும் சிறிய திருப்பமொன்றின் இருக்கும் வெற்றிலைக்கடைக்கு அருகாமையில் இருந்து வெளிப்பட்ட ஒருவன் அவளை வழிமறித்தான்.நீண்ட நேரம் அவளுடன் ஏதோ கதைத்தப் பின் அவளை சனம் முட்டி மோதிக் கொண்டிருக்கும் அந்த சந்தை தொகுதிக்குள் அழைத்துச் செல்கிறான். பெருங் கலக்கத்துடன் வேண்டா வெறுப்பாக  அவனுடன் பழைய மறக்கறி கழிவுகள், பழக்கழிவுகள் கொட்டி லேசாய் நாறும் கொஞ்சம் தண்ணீர் தேங்கிக் கிடந்த சிறு ஓடைக்கு அருகில் நுழையும் நடைபாதைக்குள்ளாக அவள் சனத்தோடு சனமாக சந்தைக்குள் சென்று, அடுத்த ஓடை வழியின் ஊடாக நடந்தவள், அவனை ஏமாற்றிவிட்டு பக்கத்து சந்திற்குள் நுழைகிறாள்.பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சந்தையிலிருந்து வெளியேறினாள்.மீன்கடைகளுக்கு முன்புறமிருந்த சனக் கூட்டம் அதிகமாயிருந்த சில்லறைக்கடை ஒன்றினுள் புகுந்தாள். தனது கருப்புநிறத் தோல் பைக்குள்ளிருந்த தொலைபேசியை எடுத்து அழைப்பு எடுத்து கதைத்து விட்டு பொருட்கள் வாங்குவது போல் அந்த கடைக்குள் சனத்தோடு சனமாக ஒளிந்து நிற்கிறாள்.

அவளை சந்தைக்குள் அழைத்துச் சென்றவன் சந்தையின் கிழக்குப்புற கோவிலுக்குச் செல்லும் வாயிலிருந்து வெளிப்பட்டு, அவளைத் தேடிக் கொண்டிருப்பதனை கடைக்குள்ளிருந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.இவளை தேடி அங்குமிங்கும் அலைந்த அவனது தலை சிறிது மறைய அக்கடையில் இருந்து வெளியேறி மீண்டும் அந்தக் கடற்கரை சாலையின் வழியே ஓட்டமும் நடையுமாக பெரும் பதற்றத்துடன் விரைந்து கொண்டிருக்கிறாள்.

அவள் ஓடிக் கொண்டிருந்த அவ்வீதி கடற்கரைக்கு அருகில் முடிவடையும் இடத்தில் இருக்கும் இராணுவ முகாமுக்கு  போய்ச் சேரும். இராணுவ முகாமிக்கு அருகில் உள்ள பாதையில்  இருந்து வெளிப்பட்ட சிவப்புநிற மோட்டார் சைக்கிளை கண்டாள். அவளது முகத்தில் கொஞ்ச பயம் நீங்க பெருமூச்சு விட்டவளாக, மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் அந்நியோன்னியமாய் படபடப்புடன் பேசிக் கொண்டே மோட்டார் சைக்கிளில் ஏறி கல்முனை சந்தையடி வந்து இறங்கினாள்.

சந்தையடியில் இறங்கி நின்றவள் கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.மோட்டார் சைக்கிளில் அவளை ஏற்றி வந்தவர் யாருக்கோ தொலைபேசியில் கைகளை உயர்த்தி உயர்த்தி பேசிக் கொண்டிருந்தார். அவள் அவர் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் பேசி முடிய அவ்விடத்தில் இருவரும் மௌனமாக சந்தையின் இரைச்சலை கேட்டுக் கொண்டு நின்றனர். சிறிது நேரத்தில் அவள் நின்ற இடத்திற்கு இன்னும் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்திறங்கினர்.அவளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு மூவருமாக  சந்தைக்குள் சென்று அவளை துரத்தி வந்த அவனை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை அவளை ஒரு சோடி சிவந்த கண்களில் ஆரம்பம் முதல் சந்தைக்கு அருகினில் இருந்து அடர்ந்த தாடியுடனும் வேட்டைக்காக காத்திருக்கும் ஓநாய் போல மறைந்திருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றான் டினேஷ்.

டினேஷ் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன். 38 வயது கடந்தும் இன்னமும் திருமணத்திற்கு ஒரு பெண் கிடைக்காமல் அந்த ஊரில் எவரையேனும் திருமணம் முடித்து விட முடியாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன். என்னேரமும் போதையுடன் இருக்கும் அவனிடம் கதைப்பதற்கு கூட அவ்வூர் பெண்களே விரும்புவதில்லை.

ஒரு தடவை அவன் வசிக்கும் தொடர் மாடிக்கு தலைவராக கூட அவன் இருந்திருக்கிறான்.அப்போது நடந்த பண ஊழல் பிரச்சினைகளால் அவனது நிர்வாகம் இடையிலேயே கலைக்கப்பட்டது.அதன் பின்னர் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு தொடர்மாடியின் நிர்வாக வேலைகள் ஒப்படைக்கப்பட்டன.புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அந்தத் தொடர் மாடியில் ஒரு ஜீவன் கூட அவனை மதிப்பதே இல்லை. இது அவனது மனதில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விட்டிருந்தது.குறிப்பாக ஊர் பெண்கள் அவனுடன் கதைப்பதனை தவிர்த்தது அவனது தன்மானத்தினையே சிதைக்கத் தான் செய்தது.பார்க்கும் பெண்களை எல்லாம் விழுங்கி விடுவதைப் போல் பார்த்தால் யார்தான் கதைப்பார்?

தொடர்மாடிக்கான புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்ட புதிதில் அங்கு கடமையிலிருந்த கிராம உத்தியோகத்தர் ஓய்வு பெற்றுச் செல்கிறார்.அதன் பின்னர் புதிய கிராம உத்தியோகத்தராக அந்த பிரிவினை பொறுப்பேற்று கடமை செய்து வருகிறார் காந்தன். அனைவரிடமும் சகஜமாக பழகுவார்.காந்தனிடம் அனைவரும் நன்றாக கதைத்து பழகினர்.இயல்பாகவே உதவும் குணம் கொண்ட காந்தன் அங்கு வறுமையில் இருந்த விதவை பெண்கள், ஊனமுற்றோர்,வயோதிபர்களுக்கு நிறைய நிறுவனங்கள் ஊடாக வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்து வருவதனால் அனைவரும் அவருடன் அன்பாக பழகினர்.

அந்தக் கிராமத்தில் மிகவும் வறுமையில் இருக்கும்  விதவைகள் அடிக்கடி காந்தன் மூலம் பல உதவிகளை பெற்று வந்தனர்.இதனால் ஊரில் இருக்கும் வசதி படைத்த சிலர் காந்தனைப் பற்றி தவறான பல கதைகளை ஊரில் கதைத்து வருவதை அவர் பெரிதாக கணக்கெடுப்பதில்லை.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரை தவறாக கதைக்கும் அவர்களுக்கும் சேர்த்தே நிறையத் தடவைகள் நிறைய உதவிகள் செய்து தான் வருகிறார்.எவரிடமும் தனிப்பட்ட முறையில் கோபம் பாராட்டுவதும் பழிவாங்குவதும் காந்தனுக்குத் தெரியாத விடயங்கள்.பொதுவாக சில வசதி படைத்தவர்கள் தவிர அவ்வூரிலுள்ள அனைவருமே காந்தனிடம் மிகவும் அன்பாக தான் நடந்து வருகின்றனர்.தற்போது இரண்டு வருடங்கள் இந்த ஊரில் அவர் கடமை செய்து வருகிறார்.

000000000000000000

2020 ஜனவரி நடந்த சம்பவம் ஒன்றினைக் கூறிவிட்டு கதையைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

இவ்வூரில் வசித்து கணவனால் கைவிடப்பட்டு இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பில் வசித்து வரும் ஒரு பெண் காந்தனின் அலுவலகம் வருகிறார்.தான் கொழும்பில் காமெண்ட் தொழிற்சாலை  ஒன்றில் வேலை செய்வதாகவும் தனது பிள்ளைகள் இரண்டும் கொழும்பில் தனது அறையிலேயே தங்கியிருப்பதாகவும் அப்பிள்ளைகளின் கல்வியினை தொடர்ந்து கொண்டு செல்வதற்காகவும் அக்குழந்தைகளின் எதிர்கால நன்மை கருதி தனது குழந்தைகளை சிறுவர் விடுதி ஒன்றிற்கு சேர்த்துவிட உதவி செய்யுமாறு காந்தனிடம் வந்து நிற்கிறார். அவரும் முறைப்படி அவளிடம் கோரிக்கை கடிதம் ஒன்றினை வாங்கி எடுத்து விட்டு அவளை அனுப்பி வைக்கிறார்.

பின் இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருடன் கதைத்து பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் இணைந்து குறிப்பிட்ட பெண்ணையும் அவளது பிள்ளைகள் இருவரையும் வரவழைத்து கதைத்து, நன்னடத்தை காரியாலயத்தின் ஊடாக பிள்ளைகள் இருவரையும் சிறுவர் விடுதி ஒன்றுக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைகளை அவள் அவரை சந்தித்த இரண்டு வாரங்களுக்குள் செய்து முடிக்கிறார்.

அந்த இரண்டு சிறுவர்களும் சிறுவர் விடுதிக்கு அனுப்பிவைக்கப்பட  முன்னர் திடீரென ஒரு நாள் காந்தன் அலுவலகத்தில் இருந்த நேரம் அவரது தொலைபேசிக்கு அவள் அழைப்பினை ஏற்படுத்தி இருந்தாள். மிகவும் நடுக்கத்துடனும் பதற்றத்துடன் அந்த அழைப்பில் அவள் அவருடன் கதைத்தாள்.கதைக்கும் போது அவள் வெகுவாக மூச்சு வாங்கி வாங்கி கதைத்தாள்.

சிறுவர் நலன் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, அத்துடன் சிறுவர்களின் பாதுகாப்பு உரிமைகளை பாதுகாப்பதற்கென இருக்கும் அந்த அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தன்னுடன் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும் தனக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை சந்திக்குமாறு வற்புறுத்துவதாகவும் தற்போது சந்தையில் தன்னை வழிமறித்து சந்தைக்குள் அழைத்துச்சென்று தன்னுடன் தனது அலுவலகத்துக்குள் வருமாறும் சந்தையில் தனக்குத் தேவையான பொருட்களையும் அவளது பிள்ளைகளுக்கு ஏதேனும் தேவை இருப்பின் அந்த பொருட்களையும் கொள்வனவு செய்யுமாறு வற்புறுத்தி கொள்வனவு செய்த உடன் தனது அலுவலகத்துக்குள் செல்வோம் என்றும் மதிய நேரமாதலால் மற்ற உத்தியோகத்தர்கள் சாப்பாட்டுக்காக சென்று விடுவார்கள் நாம் சிறிது நேரம் தனியாக இருக்கலாம் என்று தன்னை தொந்தரவு செய்வதாக காந்தனுக்கு தொலைபேசியில் கூறுகிறார். உடனடியாக தன்னை அவரிடமிருந்து அவ்விடத்தில் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கிறார்.

காந்தன் ஜி.எஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சந்தைக்கு செல்லும் வழியில் இராணுவ முகாமுக்கு அருகில்  மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது அவள் அவ்விடத்தை எட்டி இருந்தாள். அவளிடம் நடந்தவற்றை விசாரித்து அறிந்துகொண்டு இருந்த போது தினேஷ் அவர்களைக் கடந்து செல்கிறான்.பின் அவளை காந்தன் தனது மோட்டார் சைக்கிளில்  ஏற்றிக்கொண்டு சந்தை அருகில் சென்று அந்த பெண் குறிப்பிட்ட அந்த உத்தியோகத்தர் வேலை செய்த நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து அவரையும் அவ்விடம் வரச்சொல்லி அவ்விடத்தில் காத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் எல்லாம் ஒரு உயர் அதிகாரியும் இன்னுமொரு அதிகாரியும் அவ்விடத்திற்கு வர குறிப்பிட்ட உத்தியோகத்தரை தேடி சந்தைக்குள் நுழைகிறார்கள்.

அதன்பிறகு அவரை கண்டுபிடித்து அவரது அலுவலகத்துக்கு கூட்டிக்கொண்டு போய் உயர் அதிகாரி மூலம் குறிப்பிட்ட பெண்ணையும் வைத்து விசாரித்து எச்சரித்து அந்த உத்தியோகத்தர் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட பின் அந்தப் பெண்ணை அவரது இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு  உடனடியாக அந்தப் பெண்ணின் குழந்தைகள் தங்கி கற்பதற்கான ஆவணங்கள் அனைத்தும் பூரண படுத்தப்பட்டு முடித்து கொடுக்கப்பட்டது. இது நடந்து ஒரு வருடம் கடந்து விட்டிருந்தது.

சரி கதைக்கு வருவோம்.2021 ஜூலை மாதத்தில் ஒரு நாள்,

காந்தனது கடமை பிரிவிற்கு அடுத்த ஊரில்  ஒரு வீட்டில் தினேஷ் கதைத்துக் கொண்டிருக்கிறான். அவனது பால்யகால நண்பன் ஒருவன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான்.அவனிடம் எதுவும் கறக்கலாம் எனும் நோக்கம் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.கொரோனா காலம் .தொழில் தட்டுப்பாடு.சாராயம் கஞ்சாவிற்கும் தட்டுப்பாடு அவனுக்கு இருக்கத்தான் செய்தது.

அந்த வீடு பெரியது.அந்த வீட்டில் இன்னும் ஒரு குடும்பமும் வாடகைக்கு இருக்கிறது.அவர்கள் காந்தனது கடமை பிரிவிலிருந்து அண்மையிலேயே இடம் மாறிச் சென்றிருந்தனர்.வாடகைக்கு இருந்த அந்த பெண்ணின் தாயினை அழைத்த டினேஷ்

“என்னம்மா உங்கட பிள்ளைகள் எங்கள்ட எல்லாம் கதைக்கிற இல்லை. ஜி.எஸ் கிட்ட மட்டும் நல்லா கதைக்கிறாங்கள். ஊர் பொறந்த எங்களைவிட புதுசா வந்தவன் நல்லவனா போயிட்டான் என்ன.” என அவன் சொல்ல

“என்ன தம்பி இப்படி கதைக்கிறாய்.அந்தப் பெடியன் எல்லாருக்கும் நல்லதுதானே செய்யுது.விதவையான எனக்கு கூட நிறைய உதவிகள் செஞ்சிருக்கு.பிள்ளைகள் அவரிட்ட கதைக்கிறதால உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?

“ஓ….. நல்ல பொடியன்தான்.பச்சை பொண் புடியன். நானே கண்டிருக்கிறன். ஒரு நாள்,வடிவான பிள்ளை ஒருத்திய ஆமி கேம்ப் கிட்ட  இருந்து அவன்ட பைக்கில் ஏத்தி எடுத்துட்டு மார்கெட்டுக்கு போயி லவ் பன்னிட்டு நின்டான்.திடீரென்டு அவங்க ஒப்பீஸ் ஆக்கள் ரெண்டு பேரு வந்து இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு நின்டத கையோடு புடிச்சி மார்க்கெட்டுக்குள்ள கூட்டிகொண்டு போனவங்க. நான் என்ட கண்ணால கண்டேன்.தொடர்மாடில முழு பேருக்கும்  தெரியும் சொல்லியிருக்கேன்.உங்கட பிள்ளைகள் அவன்ட கதைக்கிறது நல்லம் இல்ல.அவங்களுக்கும் கெட்ட பெயர்தான் கிடைக்கும்.கதைக்க வேண்டாம் என்டு சொல்லுங்கோ.சரி அம்மா நான் வரட்டா?” என்று ஒரு மிகப்பெரிய சாதனை செய்தவனாய் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் மறைந்து போகிறான் அந்த நல்லவன்.

இது கற்பனை அல்ல.

சுந்தர் நிதர்சன்-இலங்கை

சுந்தர் நிதர்சன்

 

 

 

 

 

 

(Visited 156 times, 1 visits today)
 

2 thoughts on “பொண் புடியன்-சிறுகதை-சுந்தர் நிதர்சன்”

Comments are closed.