திமிர் கொண்ட விலங்கு-கவிதை-சுந்தர் நிதர்சன்

திமிர் கொண்ட விலங்கு

சுந்தர் நிதர்சன்

ஒரு வெள்ளை
செம்மறிக் கடாவின்
மயிரைப் போல்தான்
எனது அதிகாரம்…

எப்போதும் ஒரு
இடையனுக்கு நான்
அடிமையாய்தான் இருக்கிறேன்.

நான் எனக்கு உடைமையாய்
இருப்பதாய் பெரிதும்
கர்வம் கொள்ளக்கூடிய
மயிரைக்கூட
தீட்டப் படாத ஒரு சவரக்கத்தி
பிய்த்தெறிகிறது..

என் திமிருக்கு சொந்தமான
உடல்
சிறு பிரம்பால்
தட்டி அடக்கப்படுகிறது.

ஒரு சிறிய கத்தி
என் கழுத்தை அறுத்து
துண்டாடுகிறது.

ஒருவன் என் தோலினைக்
கிழித்தெறிகிறான்…
சிலர் என்னை சமைத்து
தின்கிறார்கள்..

பச்சையாய் எறியப்பட்ட
என் கழிவுகளுக்காய்
சிலதுகள்
மிக மூர்க்கமாய்
சண்டையிடுகின்றன.

இறுதியில் கழிவாகி
காணாமல் போகிறேன்.

நான்……..
மிகவும் திமிர் கொண்ட
ஒரு விலங்கு…

சுந்தர் நிதர்சன் -இலங்கை

சுந்தர் நிதர்சன்

 586 total views,  1 views today

(Visited 214 times, 1 visits today)