நேர்காணல்-கே.எல். நப்லா-பிரகாசக்கவி

“பெண்கள் தாம் எதை அணிய வேண்டும்,அணியக் கூடாது என்பதனைத் தீர்மானிப்பது யார்”?

கே.எல். நப்லா

உங்களது கவிதை உலகம் எப்படிப்பட்டது? அதற்குள் ஒரு வாசகன் உள் நுழைந்தால் அவனுக்கு பரிசாக என்ன கிடைக்கும்?

எனக்கென்று ஒரு கவிதை உலகத்தை அமைத்துக்கொண்டு விட்டேனா என்று யோசிக்கிறேன். அவ்வாறு அமைக்க முடியுமா என்ன? அப்படி அமைத்துக்கொண்டால் எனக்கானதொரு வட்டத்தைப்போட்டுக் கொண்டதாகி விடும். பின் அதைவிட்டு மீற முடியாததாகி விடும் அல்லவா?

என் கவிதைகள் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் தட்டுத்தடுமாறி இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன் எனச்சொல்வதுதான் பொருத்தம் என்று படுகின்றது. ஏனென்றால் என் எழுத்தின் மீதான முழுத்திருப்தி இன்னும் எனக்கு ஏற்படவில்லை.

வாசகர்களுக்கான பரிசை நான் எப்போதுமே தயார் செய்வதில்லை. அதை அவர்கள்தான் உருவாக்கிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் சிலருக்கு அது கிடைக்கிறது. சிலர் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். சிலருக்கு எதுவுமே கிடைப்பதில்லை.

ஒரு வாசகியாக உங்களுக்குள் இருக்கும் தேடல்கள் எப்படிப்பட்டவை?

ஒரு வாசகியாக இது தான் என் தேடல் என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நான் வாசித்ததற்கும் இப்போது நான் வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சொல்வதானால், அடுத்தடுத்த முன்னேற்றத்தை நோக்கி என் வாசிப்புச்செயல் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறலாம். புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள் நோக்கிய தேடலாகவும் அது இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

இன்று பல்கலைக்கழகங்கள் பகடிவதையின் கூடாரமாக  மாறிப்போனதன் மர்மம்தான் என்ன? ஒரு பல்கலைக்கழக மாணவியாக நீங்கள் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பகடிவதை என்கின்ற கொடிய நோயை அறிவார்ந்த சமூகத்திலிருந்து களைவது எப்படி?

இன்று பல்கலைக்கழகங்கள் பகடிவதையின் கூடாரம் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனைய பல்கலைக்கழகங்களின் நிலவரம் வேறாக இருக்கலாமாமோ என்னவோ. மாணவியாக இருந்தபோது நான் அவ்வாறு வன்முறையானது என எதையும் எதிர்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு பாதுகாப்பான சூழல் அப்போது எங்களுக்கு உருவாக்கித்தரப்பட்டிருந்தது. முதலாம் வருட மாணவர்களின் பாதுகாப்பிற்காக ‘மார்சல்’ என்ற பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அதனால் சிரேஷ்ட மாணவர்கள் மிகச்காதாரணமாக குசலம் விசாரிப்பதும் அவர்களுக்கு சவாலானதாகவே இருந்தது. இன்றுகூட நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தால் மிகச்சுமுகமான நிலமையினையே காணமுடியும். இதைத்தான் எனது பல்கலைக்கழகத்தில் அனுபவத்தில் நான் பார்க்கிறேன். அதுதவிர, ஒரு சாரார், ஆகவும் சொற்ப மாணவர்கள் செய்யும் ஒரு தவறினால் முழுமொத்த மாணவர்களையும் கூண்டில் ஏத்துவது நியாயமானதல்ல. எனக்குத்தெரிந்து, சமூக வலைதளங்களில் சிலர் நிலவரம் தெரியாமல் எழுதி வருகின்றனர். அதன் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டும்.  அதிலிருந்து திடீர் முடிவுகளுக்கு வருவது அறிவுபூர்வமானது அல்ல.  அவர்களுக்கு சொல்ல முடிந்ததெல்லாம் ஒரு சம்பவம் தொடர்பில் அறிந்தால் அதை யார் செய்தார்கள்? எங்கு நிகழ்ந்தது? என்ற விபரத்ததை அறியாமல் சமயம் சார்ந்தோ, பாலினம் சார்ந்தோ பேசிக்கொண்டிருப்பது நல்ல புரிதலை தரப்போவதில்லை. சில விடயங்கள் உண்மையில் பேசப்பட வேண்டியவைதான். ஏனென்றால் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற பயம் இருந்தாலாவது சில கொடூர நிகழ்வுகளைத் தவிர்க்கலாம். சமூக வளைதளங்களினதும், தொழில்நுட்ப சாதனங்களினதும் வளர்ச்சியின் ஒரு நன்மையாகவே இன்றைய காலகட்டத்தில் அதனைப் பார்க்க முடியும். பல்கலைக்கழகங்களில் பகடிவதைக்கு எதிராகச் செயற்படுகின்ற மாணவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகின்ற போது அவர்களுக்கு பகடிவதைக்கு உள்ளானால், ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கம், நபர்கள் பற்றிய அறிமுகம் என்பன வழங்கப்படும். ஆனால் பகடிவதைக்கு உள்ளாகின்ற மாணவர்கள் அது ஒரு ‘நடைமுறை’ என்ற ரீதியில் ஏற்றுக்கொண்டு கடந்து விடுவதும் பகடிவதை தொடர்ந்து ஏற்படுவதற்கான காரணமாகக் கூறமுடியும். மாணவர்கள் துணிந்து இவ்விடயத்தில் செயற்படுவது ஆதரிக்கப்பட வேண்டும். அதற்கான உத்வேகத்தையும், தைரியத்தையும் பெற்றோர் மற்றும் பகடிவதைக்கு எதிரான மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு அளிப்பது நல்லது.

நான் நினைக்கிறேன், பகிடிவதை என்பது ஒரு வகையான ஆதிக்க மனநிலையை வெளிக்காட்டும் இயல்புதான். ‘அதிகாரம் செலுத்துவதற்கான விருப்புறுதி’. புதிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வரும்போது இயல்பாகவே முன்னைய மாணவர்கள் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், தன்னை மீறிச் செல்லாதிருக்கும் ஒரு வட்டத்திற்குள் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் நிலையன்றி தன்னை முன்னிலைப்படுத்தி ஏனையோரைத் தனக்குக்கீழே வைத்திருக்கும் மனநிலையின் ஆரம்பத்தளமாக இதை நோக்கவேண்டியுள்ளது. இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, நிச்சயமாக  விமர்சிக்கப்பட வேண்டியதே.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலினால் சீர்குலைந்து போயிருக்கும் சமூக நல்லிணக்கத்தை புநர்நிர்மாணம் செய்ய முஸ்லிம் சமூகம் எவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்? அதற்காக முஸ்லிம் சமூகத்தின் முன் இருக்கின்ற சவால்கள் என்ன?

ஈஸ்டர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற செயல். எந்தத் தரப்பிலிருந்தும் இதற்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்க முடியாது. இருந்தும் இதனை நிகழ்த்துவதற்கு ஒரு சாராருக்கு நியாயம் ஒன்று இருந்திருக்கிறது. இதற்குப்பின்னால் மதஅமைப்புக்களோ அல்லது அரசியல் காய் நகர்த்தல்களோ எவையாக இருப்பினும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

இந்தத் தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று ISIS பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. இஸ்லாம் மதத்தின் பெயரால் இவ்வமைப்பின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை பலரும் அறிந்ததே. குறிப்பாக, இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் ((NTJ)) என்ற ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச்  சேர்ந்தவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வமைப்போடு சேர்த்து ஜமாஅத்தே மில்லத் இப்றாஹீம் ((JMI) எனும் அமைப்புக்கும் அரசாங்கத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில முஸ்லிம் தீவிரவாதிகளினால் 300 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்த அவலத்தைத் தொடர்ந்து, நாட்டில் நிகழ்ந்தேறுபவை குறித்து நாம் அறிந்து கொண்டும், இடைவினையாற்றிக் கொண்டும் வருகின்றோம்.

இலங்கையில் யுத்த வரலாறும், அதன் இழப்புக்களும், அதன் பின்னரான விளைவுகளும், வடுக்களும் நாம் அறிந்தவையே. அவ்வாறானதொரு மோசமான சூழ்நிலையை நாம் யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் எதிர்கொண்டு, அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருப்பதுதான் இன்றைய துரதிஷ்டவசமான நிலை.

மனிதநேயமற்ற இக்கொடூரத் தாக்குதல்களின் பின்னணி என்ன? இது தொடர்பில் முன்னரே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது என்ற கருத்துக்கள் பரவாலாக நிலவி வரும் சூழலில் ஏன் முன்கூட்டியே எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை?, ‘தற்கொலைக் குண்டுதாரி’களின் மனத்தயாரிப்புக்கான செயன்முறை என்பது குறுகியகாலத் திட்டமாக இருக்க முடியாது. அவ்வாறெனில் நீண்டகாலமான   காய்நகர்த்தலுக்கான பின்புலங்கள் இன்றி இதனைச் செயற்படுத்தியிருக்க முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றது. இந்நிலையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலர் சிரியா போன்ற நாடுகளில் விஷேட பயிற்சி பெற்றவர்கள் எனும் செய்தியும் கூறப்படுகின்றது.

முஸ்லிம் மதக்குழு ஒன்றினால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இத்தாக்குதலுக்கான அடித்தளம் கடந்த காலங்களிலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் குறித்த சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவங்களுக்கான எதிர்வினையாக உருவானதா? அல்லது தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் அடுத்த ஆட்சியினை நிர்ணயிக்கும் சர்வதேச சக்தியைத் தீர்மானிப்பதற்கான முன்னோட்டமா? என்றெல்லாம் நாம் அரசியல் சார்ந்தும் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதன் மூலம் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இந்நாட்டு அனைத்து மக்களும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தவர்களும் பலியாகிவிடக்கூடாது என்பதிலேயே நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. இதனையே நாம் கடந்த கால வரலாறுகளினூடாக உணர்ந்தும் கற்றும் வருகின்றோம்.

இன்னொரு புறம் இப்பயங்கரவாதச் செயற்பாடுகளின் பின்னணியில் உள்ள மத அடிப்படைவாதம் தாக்கம் செலுத்தியலுள்ள விதம், அதன் பின்னணியில் உள்ள அரூபமான உளவியல் வெளி ஆகியன குறித்தும் நுண்பார்வைகளை நிகழ்த்தி ஆராய வேண்டியும் உள்ளது. மேலோட்டமாக இது வெறுமனே  அரசியல் பின்னணி கொண்ட செயல் என்று பேசிவிட்டு நகர்ந்து விட முடியாத அளவுக்கு, இஸ்லாமிய மத அடிப்படைவாதம் உருவாக்கியுள்ள பயங்கரவாதத்தை விதைப்பதற்கான சாத்தியச் சூழலே நாம் எதிர்கொண்டிருக்கும் பெரும் அச்சுறுத்தல். தாக்குதலை மேற்கொண்டவர்கள் அல்லது தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதும், அவர்கள் இஸ்லாமிய இயக்கமொன்றினூடாக மத அடிப்படை வாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதுமே எம்மிடம் இருக்கும் இதற்கான நியாயங்களாகும்.

சமூகக் கதையாடல்கள், கலாசாரக் கதையாடல்களை, அவற்றின் உருவாக்கம் குறித்து எத்தகைய பிரக்ஞையும் இன்றி, ஏற்றுக்கொள்ளச் செய்யப்படும் சூழலும், இயல்பான சுதேச இருப்பினை விட்டும் தடம் மாறி, பன்மைத்துவக் கூறுகளை விலக்கி, ஒற்றைத் தன்மையான அடையாளத்தை வலிந்து திணித்துக் கொள்ளும் மனநிலையும், அதன் வழியாக வெளிப்படும் கருத்தியல் ரீதியான வன்முறைகளைப் பற்றி கவலையும் கரிசனையும் கொள்ளாத ஒரு சூழலும் இதற்கு முக்கியமான காரணிகள். எப்பொழுதும் தமது மதமும் கலாசாரமுமே உயர்ந்தது என்ற வகையிலான புனிதக் கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்ற போது, அங்கு பின்பற்றப்படக் கூடிய பிற மதங்களும், கலாசாரங்களும் அதனோடு பிணைப்புக் கொண்டிருப்பவர்களும் மற்றமைகளாக வெறுத்து ஒதுக்கப்படுகின்ற ஒரு சூழல் உருவாகின்றது. இலங்கையில் நிலவுகின்ற பன்மைத்துவக் கலாசார சூழலில் இஸ்லாமிய ஒற்றைத் தன்மையான, அதி தூய்மை வாதத்தை முன் நிறுத்தும் மையப்படுத்தல் செயற்பாடுகள், சமூக உறவுகளில் விரிசல்களையும், மத ரீதியான முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்பதையே நாம் கண்டும் அனுபவித்தும் வருகின்றோம்.

இஸ்லாமிய வரையறைகளை முன்நிறுத்தி ஹராம் – ஹலால், சொர்க்க வாதி – நரகவாதி, முஸ்லிம் – காபிர் போன்ற எதிர் நிலை உரையாடல்களை முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் திணிக்கின்றமை, வித்தியாசமான பண்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமை, அவற்றின் இருப்பின் நியாயத்தை உணராமை, இனம், மதம், மொழி, பாலினம் சார்ந்த ஒடுக்குதல்கள் போன்றன வெளிப்படையான வன்முறைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

இன்று சிறுபான்மை இனங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சாடியும், பழைய சம்பவங்களை மேற்கோள் காட்டியும் இனமுறுகல்கள் துளிர்விட்டிருக்கின்றன. ஒரு வகையில் கடந்தகால வடுக்களையும், கசப்பான சம்பவங்களையும் கடந்து சகவாழ்வை நோக்கிப் பயணிக்க விடாமல் இருப்பதற்கு குறித்த வன்முறைக்கான நினைவுத் தடயங்கள் மீட்டப்பட்டு வருவதும் ஒரு காரணம்தான்.

மட்டுமன்றி ஒருவருடைய தனிப்பட்ட கருத்தையோ, செயற்பாட்டையோ முன்நிறுத்தி முழுச் சமூகத்தையும் குற்றம் காணும் மொத்தத்துவ அணுகுமுறைதான் இன்றைக்கு இருக்கின்ற மிகப்பெரும் சவால். ஒருவருடைய பிரச்சினை முழு இனத்தினுடைய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஒருவருடைய கருத்து முழு இனத்தினுடைய கருத்தாக பிரதிநிதித்துவப் படுத்தக்கடுகிறது. தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து சமூக வளைதளங்களில் அதிகமாக இத்தகை போக்கினைக் காணமுடிகின்றது. உணர்ச்சி வசப்பட்டு சிந்திக்காமல் நாம் பேசுகின்ற வார்த்தைகள் குரோதத்தை வளர்த்துவிடக்கூடாது. அதே நேரத்தில் தாக்குதலாக இருக்கட்டும், அதன் பின்னரான முறுகல்நிலையாக இருக்கட்டும் அதனை மொத்தத்துவப் பார்வையில் அணுகுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது.

இந்நாட்டில் பயங்கரவாதத்தையோ, தீவிரவாதத்தையோ விரும்பாத வெகுஜன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். நாட்டில் தற்போது நிலவும் நம்பிக்கையற்ற சூழல் மாறிவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் எப்பொழுதும் உண்டு. எனவே, அனைத்து இன, மத, மொழி, பாலினக் கலாசாரங்களையும் அவற்றின் வேறுபாடுகளோடு ஏற்றுக்கொள்கின்ற மனநிலை நம் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். வீடு, பாடசாலை, பல்கலைக்கழகங்கள் போன்ற சமூகமயமாக்கலுக்கான பயிற்சி நிறுவனங்களிலிருந்து இவை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இவையெல்லாம் உரையாடல்கள் மூலமும், கல்வியின் மூலமும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை என்னுள் எப்பொழுதுமே இருக்கின்றது. ஒருவர் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதற்காக அவரது இருப்பைக் கேள்விக்குட்படுத்த முடியாது, அது தான் சார்ந்து மட்டும் சிந்திக்கின்ற ஒற்றை மனநிலைக்குக் காரணமாக அமையும் என்பதை கற்பிக்கப்பட வேண்டும். இருக்கின்ற வித்தியாசங்களோடும், வேறுபாடுகளோடும் மனிதர்களை ஏற்று, நேசிக்கின்ற மனோநிலையயை உருவாக்க இதனை நாம் சாத்தியப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது.

இலங்கையில் இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற புர்கா மீதான தடை பற்றிய தங்களது நிலைப்பாடு என்ன?

இலங்கை மனித உரிமைகளின் பிரகாரம் விரும்பிய ஆடையை அணிவதற்கான சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அடையாளம் காண்பதற்கு இலகுவாக முகம் மறைத்து அணியப்படும் ஆடைகளுக்கு மட்டும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதன் அவசியம் எம்மால் உணரப்படுகின்றது. ஆனால் அதை வேறொரு வகையிலும் நோக்க வேண்டியுள்ளது.

அதாவது, ஏன் பெண்கள் முகத்தை மூடிய ஆடைகளை அணிகின்றனர்? என்கிற கேள்வி எழுகின்ற பொழுது, ஒரு பெண்ணுடைய விருப்பமும், சுய தெரிவுமே முக்கியப்படுத்தப்பட வேண்டும். ஆனாலும், துரதிஷ்டவசமாக இன்றைய ஆண்மைய சூழலில் பெண்; ஒரு இயங்காப் பொருளாக அணுகப்படும் நிலையே காணப்படுகின்றது. தீர்மானிக்கப்பட்ட ஒன்றைச் செயற்படுத்துவதும், அதன்படி நடந்தொழுகுவதும்தான் இங்கு பெண்களுக்கு வழங்கப்படும் அதிகபட்சமான சுதந்திரம். அது வெளித்தெரியாத வகையில் மிக இயல்பானதாக பகுத்தறிவு இத்தகைய சூழலை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறது. (சமூகத்திற்குச் சமூகம் அதன் தன்மை மாறுபடும்). இங்கு முஸ்லிம் பெண்களின் சட்டங்களையும், ஒழுங்குகளையும் தீர்மானிப்பவர்களாக ஆண்களே இருக்கின்றனர். அதனை கடைப்பிடித்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கலாசாரத்திலும் பெண்களுக்குரியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக இங்கு உரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் வரையறுத்தல்களுக்குள் கட்டுண்டு கிடப்பதைக் காணலாம்.

பெண்கள் தாம் எதை அணிய வேண்டும், அணியக் கூடாது என்பதனைத் தீர்மானிப்பது யார்? ‘முகத்தை மூட வேண்டும்’ என்பதும், ‘மூடக்கூடாது’ என்பதெல்லாம் பெண்கள் மீதான கட்டளைகளாகவே மேற்கொள்ளப்படுகின்றது. அன்றிலிருந்து இன்று வரை ஆடைச்சுதந்திரம் என்பதெல்லாம் வெறுமனே பெயரளவிலேயே இருந்து வருகின்றது. புர்காவுக்குப் பழக்கப்பட்ட ஒரு பெண்ணை திடீரென அதனை அணியக் கூடாது என்று பணிக்கப்படுவதையும், பின்னர் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் எனப் பணிக்கப்படுவதையும் என்னவென்று சொல்வது. இங்கு பெண் எதை விரும்புகிறாள், எத்தகைய தெரிவினை மேற்கொள்ள விரும்புகிறாள் என்பதிலேயே நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. அவள் மீது திணிக்கப்படும் எவையும் அத்து மீறல்களே.

உங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘Let her fly’ என்னும் குறும்படம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும்போது, சமூக நல்லிணக்கத்திற்கான காட்சிவழி வெளிப்படுத்துகைக்காக ஐஊநுளு என்ற சமூகத்தொண்டு நிருவனமும் யுபநனெய 14 என்ற திரைப்படத்தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவிற்கு அம்பாரையில் நான்கு (04) நாள் முழு நேர கருத்தரங்கை நடத்தினார்கள். அதில் இன நல்லிணக்கத்தின் அவசியம் பற்றியும் அதனை எவ்வாறு சினிமாவாக முன்வைப்பது என்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நான்கு நாட்களும் மறக்க முடியாத அனுபவமாகவே இருந்தது. இலங்கையின் மிக முக்கியமான சினிமாவுடன் தொடர்புடைய சகோதர மொழிக் கலைஞர்களால் எமக்கு பயிற்சியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பயிற்சியின் முடிவில் மூன்று (03) குறுந்திரைப்படங்களுக்கான திரைக்கதைகளை எழுதி அனுப்பி, அதில் தெரிவு செய்யப்படும் கதைகளை Agenda 14’  இன் தயாரிப்பில் படமாக்குவதாகக் குறிப்பிடப்பட்டது. ஆவணப் படம் ((Documentary Film), புனைவுப் படம் (Fiction Film)  என்ற இரண்டு வகைக் கதைகள் கோரப்பட்டன. நான் மூன்று குiஉவழைn களை எழுதி அனுப்பினேன். அதில் என் இரண்டு கதைகள் தெரிவு செய்யப்பட்டன. ஆனால் அன்றிருந்த நிலையில் ஒன்றைச் செயற்படுத்துவதே சாத்தியமாக இருந்தது. அதுதான் Let her fly’. Agenda 14  இன் இயக்குனர் (Director of Agenda 14) அனோமா ராஜகருண அவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் என் இயக்குனர் கனவு ஒரு நாளில் சாத்தியமாகியது. ஒரேயொரு கதாப்பாத்திரத்தைச் சுற்றித்தான் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது என்பதால் தேர்ந்த நடிகை ஒருவர் வரவழைக்கப்பட்டார். உதவி இயக்குனர், கெமரா மேன், மேக்கப் மேன், ஒலிப்பிடிப்பாளர் என ஒரு குழுவுடன் ஒரே நாளில் அம்பாரையில் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் ஒருநாள் படத்தொகுப்பு வேலைக்காகப் போக வேண்டியிருந்தது.

பின்னர் பல திரைப்பட விழாக்களில் Let her fly’ திரையிடப்பட்டது. அது எதிலும் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.  Agenda 14 இன் ‘சிறந்த இளம் அறிமுக இயக்குனர்’ என்ற விருதையும் அந்தக் குறும்படம் பெற்றுக்கொண்டது. ICES  இனால் ஒழுங்கு செய்யப்பட்ட இன நல்லிணக்கக் கருத்தரங்குகள் அனைத்திலும் Let her fly’ திரையிடப்பட்டு கலந்துரையாடப்பட்டது. ICES இன் செயற்பாட்டளர்களான சகோதரர் பஸ்லான், குஸான் யுபநனெய 14 இன் இயக்குனர் பெருமதிப்புக்குரிய அனோமா மிஸ் போன்றோர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவர்களால் தான் இது சாத்தியமாகியது.

ஒரு இயக்குனராக நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

இயக்குனர் என்றெல்லாம் முழுதாகச் சொல்லி விட முடியாது. எதிர்பாராமல் எதுவும் தெரியாமல் தட்டுத்தடுமாறித்தான் என் முதல் முயற்சி எனக்கமைந்தது. மிகுந்த அனுபவம் பெற்ற ஒரு குழு என்னுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அது ஒரு வகையில் எனக்குப் பலம் என்றால், நான் நினைத்த எல்லாவற்றையும் குறும்படத்தில் கொண்டுவர முடியவில்லை என்பது ஒரு பலயீனம்தான். இப்போது பார்க்கும் போது அதை இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும் என்ற எண்ணம் மேலெழாமல் இல்லை. அப்போதிருந்த அனுபவமும் மனநிலையும் அப்படி இருந்தது. கற்றுக்கொண்ட பாடம் என்றால் முன்னர் ஒரு பார்வையாளராக படம் பார்த்தேன். இந்த அனுபவத்திற்குப் பின்னர் கெமராவுக்குப் பின் நின்று ஒரு இயக்குனர் பார்வையில் சினிமாவைப் பார்க்கிறேன் என்று கூற முடியும். தெரியவில்லை, ஏதோவொன்றைப் புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று மட்டும் கூறி வைக்கிறேன்.

நான் அறிந்த வகையில் இலங்கையில் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நீங்கள்தான் முதலாவது முஸ்லிம் பெண் குறும்பட இயக்குனராக இருக்கின்றீர்கள். இதற்கு உங்கள் குடும்ப மற்றும் சமூக மட்டங்களில் இருந்து எவ்வாறான ஒத்துழைப்புக்கள் கிடைக்கின்றன?

அப்படியா? எனக்குத் தெரியவில்லை. Agenda 14  இல் நிறையப்பேர் இணைந்து செயற்படுகிறார்கள் என நினைக்கிறேன். சமூக மட்டத்தில் இது பெரிதாக யாருக்கும் தெரியாது. அப்போது நான் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவி, நிறையக் கனவுகளோடும் திட்டங்களோடும் வாய்ப்புக்களுக்காக காத்துக் கொண்டிருந்த காலம். இருந்தாலும், குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே எல்லாவற்றையும் சாத்தியப்படுத்திப் பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. அந்த நான்கு நாள் பயிற்சி நெறிக்கும் எங்களது ஏற்பாட்டுக் குழுவினால் வாகனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது என்பதால் போய் வருவதில் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் கதை தெரிவு செய்யப்பட்டு இயக்குவதற்காக அழைத்த போது வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. ‘நான் வர மாட்டேன்’ எனத்தெரிந்ததும் அனோமா மிஸ் அவருடைய குழுவோடு என் வீட்டுக்கே வந்து விட்டார்கள். என் குடும்பத்தாரைச் சந்தித்து என்னை ஏன் அனுப்ப வேண்டும் என்பதையும், அவர்களது முயற்சிகள் பற்றியும் எடுத்துப்பேசி கட்டாயம் அனுப்புங்கள், தனியே அனுப்பத்தேவையில்லை துணைக்கு யாரேனும் அனுப்புங்கள் என்று போய் வர வாகனத்தையும் அனுப்பி வைத்தார்கள். அனோமா மிஸ் இற்கு இதற்காக எவ்வளவு நன்றி கூறினாலும் ஈடாகாது. கொழும்பில் நடைபெற்ற விருது நிகழ்வு, திரைப்பட விழாக்கள் என எதற்கும் என்னால் போக முடியவில்லை. ஏனென்றால் அன்று எனது சூழ்நிலை அதற்குச் சாதகமாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அந்நேரத்தில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற ‘கவிதா ஆற்றல்’ போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கெல்லாம் தந்தையோடு போய் வந்திருக்கிறேன்.

சினிமா முயற்சியில் இதுவரை ஒரு குறும்படத்தை என்னால் சாத்தியமாக்க முடிந்திருக்கிறது என்றால் என் பெற்றோரின் ஒத்துழைப்பில்லாமல் அது முடியாது அல்லவா. அன்றிருந்த நிலை வேறு (படித்துக் கொண்டிருந்தேன்) இன்றிருக்கும் நிலை வேறு. சில தடைகளைத் தாண்டித்தான் சில விடயங்களைச் சாத்தியப்படுத்த வேண்டியிருக்கிறது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கும் ஈழத்தில் கவிஞர்கள் அதிகரித்துப்போய் விட்டார்கள் கிருமி நாசினி மருந்து கொடுத்து சாகடிக்க வேண்டும். பெண்கள் கற்புக்குப் பாதுகாப்பு இல்லை. என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்று பற்றிய தங்களது பார்வை என்ன?

இந்த இரண்டு கூற்றுக்களையும் வேறு வேறாகப் பார்த்தால்,

‘ஈழத்தில் கவிஞர்கள் அதிகரித்து விட்டார்கள்’ என்பது பொதுவாக முன்வைக்கப்படும் ஒரு விமர்சனமாகக் கொள்ள முடியும். இது பரவலாக அனைவரும் சொல்வதுதான். இது பற்றி ஆய்வினை மேற்கொள்பவர்கள்கூட ஈழத்தின் கவிஞர்கள் பற்றியும் கவிதை பற்றியும் பேசப்பட்ட அளவில் ஏனைய இலக்கியங்கள் பற்றிய கவனம் கொள்ளல்கள் குறைவு என்பர். ஒப்பீட்டளவில் கவிதை சார்ந்த வெளியீடுகள் அதிகரித்திருப்பதும் உண்மைதான். சமூக வலைதளங்கள் அதனை இன்னும் புதினமாக்கியிருக்கிறது. ஒருவருடைய இலக்கிய ஆர்வம் என்பது அவருடைய இயல்பூக்கம், வாசிப்பு அனுபவம் சார்ந்ததாக அமையலாம். ஆனால் இலக்கிய விமர்சகர்களின் பார்வையில் ஒரு பன்மைத்துவ எழுத்துச் சூழல் அவசியமான ஒன்றே. அதற்காக ஈழத்தில் கவிதை மட்டுமே எழுதப்படுகிறது என்பது குற்றச்சாட்டாக இருப்பின் அதனை ஏற்க முடியாதுதான். இருப்பினும் இங்கு ‘வாசிப்பது – எழுதுவது’ என்பதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு என்ற சூழ்நிலைதான் இன்றும் இருந்து வருகிறது என்பதை ஏற்கத்தான் வேண்டும். எழுத்தை இங்கு யாரும் முழு நேர வேலையாகச் செய்வதில்லை. ஏனென்றால் அடுத்த கட்ட வாழ்வாதாரம் (Survival)  கேள்விக்குறியாகி விடும் அல்லவா? இங்கு துறை சார்ந்து, சுதந்திரமாக வாசித்து, ஆய்வு செய்து அதுவே கதி என்று இருப்பது எழுத்தாளர்களுக்குச் சாத்தியமில்லை. ஆக இந்த எதிர்வினை எந்தப் பின்னணி மீது முன்வைக்கப்படுகிறது என்பது நோக்கத்தக்கது. எழுதப்படுபவை எல்லாமே இலக்கியம் என்ற ஏற்றுக் கொண்டதாலா? என்றாலும்; இக்கூற்றில் இருக்கும் வன்முறைக் கருத்தியல் பிரயோகம் விமர்சிக்கப்பட வேண்டியது.

‘கவிஞர்களைக் கிருமிநாசினி மருந்து கொடுத்துச் சாகடிக்க வேண்டும்’ என்பது இரண்டு புரிதல்களுக்கு வழிவகுக்கிறது. ஒன்று, கவிஞர்கள் எல்லோரும் கிருமிகள், அதாவது அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்து. அப்படியென்றால் அதனைச் சொன்னவரின் மனநிலையில் நின்று பார்க்கின்ற போது தான் கவிதை எனக்கருதுவதற்கு மாறான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற ஒற்றைத்தன்மையான நிலை. இங்கு செயற்படும் அதிகாரம் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வன்முறையை நேரடியாகச் சொல்கிறது. மற்றது, ‘கவிஞர்கள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற வரையறை மீறப்பட்டுள்ளது, ஆகவே அவர்களை அழித்தாக வேண்டும்’ என்ற அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அப்படியென்றால், இதன் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட வரையறையும், அதை மீறினால் தண்டிக்கப்பட வேண்டும் என்ற முதலாளித்துவ மனநிலையையும் வெளிப்படுகின்றது. இது எதிர்வினையாற்றப்பட வேண்டியதே.

அடுத்து, ‘பெண்கள் கற்புக்குப் பாதுகாப்பு இல்லை’ என்ற கூற்று. (அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அதைக் கவிஞர்கள்தான் கூற வேண்டும்.) பொதுவாகப் பார்த்தால், இதில் எனக்குப்பல கேள்விகள் உண்டு. கற்பு என்று எதனைக் குறிப்பிடுகிறார்கள்?, அதை ஏன் பெண்களோடு தொடர்புபடுத்துகிறார்கள்?, பாதுகாப்பு என்பது பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமா? இல்லை ‘கற்பு’க்கு வழங்க வேண்டுமா?, எப்போதும் இன்னொருவர் பாதுகாத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலையிலேயே பெண்களை வைத்திருப்பது ஏன்? இந்தக்கூற்றுக்கெதிராக இத்தகைய கேள்விகளைக் கேட்டுப்பார்த்தால், ‘இது பாதுகாக்கப்பட வேண்டியது என்று தூக்கி வைத்தவர்களும், அதன் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியவர்களும் ஒரே கூட்டம்தான் என்பது புரியும்.

கவிதை காலாவதியாகுமா?

கவிதை சொல்லி வேறு, கவிதை ஆசிரியர் வேறு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு பிரதியின் ஒற்றைக்கருத்தியலை நிராகரித்து சிதறலான, பன்மைத்துவ வாசிப்பை வரவேற்கிறோம். இதனடிப்படையில் வாசகப் பார்வையில் இருந்து பிரதியின் அர்த்தம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். நான் நினைக்கிறேன் ஒரு பிரதி காலம், வெளி என்பதில் உறைந்து விடுவதில்லை, அத்தகைய ரீதியிலான வாசிப்பைக் கட்டாயமாக்குவதுமில்லை. பிரதியானது, (அது கவிதையாக இருப்பினும்) பின்னணியற்ற ரீதியில் புரிந்து கொள்ளப்படுவதைத்தான் எதிர்பார்க்கிறது. அத்தகைய அர்த்தப்படுத்தலைப் பெற்ற அல்லது கவனிப்பைப்பெற்ற பல படைப்புக்களை நாம் பார்க்கிறோம். ‘காலாவதியாகி விட்டது’ என்ற கூற்று ‘புறக்கணித்தல்’ என்றாகி விடுகிறது, அப்படியென்றால் ஒவ்வொன்றினதும் வேறுபாடுகளைக் குற்றமாக்கி ஒற்றைப்படுத்தலை நியாயமாக்குகிறது அல்லவா? அவ்வாறல்லாமல் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்கின்றபோது, வரிசைப்படுத்தலற்ற பல கருத்தியல்கள் சாத்தியமாகிறது.

இன்னொரு பார்வையில், ‘ஏன் காலாவதியாக வேண்டும்?’ என்று பார்த்தால், புதிய சிந்தனைக்கும், மாற்றுக் கருத்தியலுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பதால்தானே. அப்படியென்றால் நான் இன்னொன்றைக் கேட்கிறேன், ‘மாற்று அல்லது புதிய சிந்தனை’ என்பது எப்படித் தோன்றுகிறது? ஏற்கனவே உள்ள பிரிதி ‘ஏன் அது இப்படி இருக்க வேண்டும்’ என்ற கேள்வி எழுந்ததால்தானே. அதற்காக இது சரி, அது பிழை என்று மொத்தமாகப் புறக்கணிக்க முடியாது. ஆக, உருவாக்கம் பெறும் ஒவ்வொன்றும் சார்பானவையே. அவை பன்மைத் தன்மையுடன் சிதறலான இருப்பைக் கொண்டிருக்கும்.

‘கவிதை காலாவதியாகுமா?’ என்ற கேள்விக்கு ஆம் / இல்லை என்று பதலளித்தால் வேலை முடிகிறது. அதாவது ஒன்றில் நான் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். மாறாக, ஏன் காலாவதியாக வேண்டும்? ‘காலாவதியாதல்’ என்பது கருத்தியலை  (Ideal) சடம் (Material)  நோக்கி நகர்த்துகிறது. அதை ஏன் கவிதைக்குப் பயன்படுத்த வேண்டும்? அப்படியே அதை ஏற்றாலும், யாருக்கு அது காலாவதியாகிறது?, இந்தச் சொல்லின் மூலம் மொத்தமான ஏற்றுக்கொள்ளல் வேண்டப்படுகிறதா? என்றவாவாக இந்தக் கூற்றுக்கு அல்லது கேள்விக்குப் பின்னாலுள்ள அரசியலையும் பேச முடியும்.

மெய்யியல் மற்றும் உளவியல் உளவளத்துணை ஆய்வு மாணவியாக உங்கள் ஆய்வு முயற்சியின் நெடும்பயணம் பற்றிச் சொல்லுங்கள்.

இந்தக்கேள்வி கேட்டதற்கு நன்றி. என் சிந்தனையும் தேடல்களும் மெய்யியலைக் கண்டடையும் காதலை ஏற்படுத்திற்று. Philosophy’ என்பதன் அர்த்தம் ‘ஞானத்தின் மீதான காதல்’ Love of Wisdom’ –. ஆய்வுகளைத்தாண்டி சிந்தனையிலும், செயற்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான முக்கிய பங்கினை மெய்யியல் சார்ந்த வாசிப்பும் தெளிவும் எனக்குள் உண்டாக்கியது என்பதுதான் உண்மை. அந்த ஆர்வமும் விருப்பமும் மெய்யியல் விரிவுரையாளராகக் கடமையாற்றும் பக்குவத்தைத் தந்திருக்கிறது.

ஒரு பல்கலைக்கழகத்தின் முதுகெலும்பு ஆய்வு முயற்சிகள் என்பர். மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்குவதுதான் பல்கலைகழகங்கள் செய்ய வேண்டிய பணி என உறுதியாக நம்புகிறேன். சிந்திக்கவும் செயலாற்றவும் கூடிய உயிர்ப்புடையவர்களாக மாணவர்களை உருவாக்காத கல்வி அதிகபட்சம் எதைச் செய்து விடும்? சிந்தனைதான் மெய்யியலின் அடித்தளம். எனது சிந்தனைகள் மெல்ல மெல்ல பிரச்சினையைத் தோற்றுவிக்கத் தொடங்கிய போது, ஒவ்வொரு பிரச்சினையையும் இனங்காணும் முயற்சி ஆய்வு சார்ந்து சிந்திக்கும் திறனை எனக்குள் உருவாக்கியது. பல்கலைக்கழகங்களில் நடாத்தப்பட்ட ஆய்வரங்குகள் அதற்கான களம் அமைத்துக் கொடுத்தது.

பல்கலைக்கழக முதலாம் வருடத்தில் அந்தப்பெரிய நூலகத்தையும் அத்தனை நூல்களையும் பார்த்த மாத்திரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகத்தில் தஞ்சமடைதலே வாடிக்கையானது. வாசித்ததை எழுத்துருவாக்கும் முயற்சி இலக்கியம் சார்ந்திருந்தது. ஆனால் பாடம் சார்ந்த வாசிப்பு மற்றும் அதன்வழியான எழுத்து முயற்சிகளுக்கும்; அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் ஆய்வு முயற்சிகள் இலக்கியத்தைப் பின்தள்ளி விட்டது. இப்போதெல்லாம் அதில்தான் இன்பம், இலக்கியத்தை விட.

புனைவு இலக்கிய வெளி மீதான உங்கள் புரிதல் என்ன? உங்கள் கவிதைகள் கவிதை வளர்ச்சியின் எந்தப்படிநிலை சார்ந்நது?

இங்கு எல்லாமே புனைவுதான். உருவாக்கப்பட்டவைதான். யதார்த்தம், உண்மை என நாம் கருதுபவை கூட புனைவுகள் தான். மாறக்கூடியவைதான். நாம் என்னவாக அதை நினைக்கிறோம், அதை எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் நாம் அதை எப்படி அழைக்கிறோம் என்பது தங்கியிருக்கிறது. பிரதிபலிப்பு இலக்கியங்கள், வன்முறை இலக்கியங்கள், போலச்செய்தல் இலக்கியங்கள் என்பதைத்தாண்டி புனைவு முயற்சிகள் தமிழில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். மற்றப்படி இப்போதெல்லாம் கவிதைகள் எழுதுவதற்கான நேரம் அமைவதில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எழுதியவைகளை எப்போதாவது எடுத்துப் பார்க்கும்போது அவற்றில் ஒரு பற்றாக்குறையையே  உணர்கிறேன். ஆகச்சிறந்த என்று கூறக்கூடிய அளவுக்கு அல்லது ‘இதற்கு மேல் எதுவும் இல்லை’ என்ற அளவுக்கு ஒரு பிரதியை அல்லது செயலை இதுவரை யாரும் செய்யவில்லை, இதற்குப்பின்னரும் யாரும் செய்ய முடியாது என நம்புகிறேன். ‘இதுதான் உச்சம்’ என நினைக்கும்போது இன்னொரு அதை மீறி விடுகிறது அல்லவா!

தமிழ் இலக்கியப்பிரதிகள் பிற மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட வேண்டியதன் அவசியமும் அதன் நன்மைகளும் பற்றிய உங்கள் எண்ணக்கரு?

முதலில் தமிழ் இலக்கியப்பிரதிகள் தமிழில் வாசிக்கப்படுகின்றதா? எனக்குத்தெரிந்து இப்போதெல்லாம் புத்தகங்கள் வெளிவரும் வீதம் அதிகரித்திருக்கிறது. உண்மையில் அவையெல்லாம் வாசிக்கப்படுகின்றதா? எழுதுபவர்கள்தான் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். புத்தகங்கள் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படுவதா அல்லது பராட்டப்படுவதா இப்போது விரும்பப்படுகிறது? நான் ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் எந்த மொழியில் இருந்தாலும் வாசிக்கப்படவும், அது தொடர்பில் கலந்துரையாடவும் விமர்சிக்கப்படவுமான ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான். பிற மொழியிலும் குறித்த படைப்புக்கள் வாசிக்கப்படுகிறது, தேடப்படுகின்றது என்றால் அவை மொழிபெயர்க்கப்படுவதில் அவசியமாகத் தான் இருக்க வேண்டும்!.

விருதுகள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல உங்களிடம் ஏதேனும் வார்த்தைகள் உண்டா?

வாசகர்கள் பற்றாக்குறையாகிப்போன எழுத்தாளர்களுக்கு விருதுகள் ‘ஆறுதல்’. பொதுவாகவா கேட்டீர்கள்? அப்படியென்றால், ‘பெருமை’

நீங்கள் அறிவுப்புத்துறையில் ஆர்வமுள்ளவர் என்பதால் சொல்லுங்கள், இன்றைய இலங்கை வானொலிகளில் இடம்பெறும் தமிழ்மொழிக் கொலை எந்த அளவு ஆபத்தானது?

போட்டியும், வியாபார நோக்கமும் அதிகரித்திருக்கும் காலத்தில் இப்போது இதையெல்லாம் யார் கவனம் கொள்கிறார்கள் ? இன்னொருபுறம் தமிழக ஊடக கலாசாரத்தைப் பின்பற்றுவது போலச் செய்தலால் நமது ஒரிஜினாலிட்டியை தொலைத்திருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். நிபுணத்துவம் பெற்றவர்களால் திறன்வாய்ந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டால் கொலைகளைத் தவிர்க்க முடியும். இல்லையென்றால் ஆபத்து காதுகளுக்குத்தான்.

ஒரு கவிஞரிடம் கேட்கக்கூடாத கேள்வி எது?

தெரியவில்லை. இது என்னிடம் கேட்கக்கூடாத கேள்வியாகவும் இருக்கலாம்.

இலக்கியத்துறையில் உங்களுக்கு எத்தனை முகங்கள்?

முகம் காட்டுவதில்லை, முகமூடிதான்.

000000000000000000000000000000000000000

கே.எல். நப்லா பற்றிய சிறுகுறிப்பு :

பிரகாசக்கவிஈழத்து இலக்கியப் பரப்பில் அதிலும் குறிப்பாகத் தென்கிழக்கில் கவிதை, குறும்படம், ஆய்வுக்கட்டுரை, அறிவிப்பு என பல்துறை சார்ந்து காத்திரமான தனது இலக்கிய பிரதிகளின் வாயிலாக இன்று தனக்கென ஓர் இடத்தினை தக்க வைத்திருக்கும் இளம் இலக்கியச் செயற்பாட்டாளரும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை துணை விரிவுரையாளரும் Let her fly’ என்னும் குருந்திரைப்படத்திற்காக  ‘Agenda 14’ இன் ‘சிறந்த இளம் அறிமுக இயக்குனர்’ விருது பெற்ற கவிஞர் கே.எல். நப்லாவுடனான நேர்காணலை வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

000000000000000000000000000000000000000

பிரகாசக்கவி-இலங்கை

பிரகாசக்கவி

 1,069 total views,  1 views today

(Visited 636 times, 1 visits today)
 

One thought on “நேர்காணல்-கே.எல். நப்லா-பிரகாசக்கவி”

Comments are closed.