ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை-முருகபூபதி-அங்கம் 03

காந்தீயவாதியாக வளர்ந்து-மார்க்ஸீய மனிதநேயவாதியாக மாறிய  செ. கணேசலிங்கன்

பொன்னாடையோ – பூமாலையோ – பாராட்டுகளோ – வெண்கல – வெள்ளித்தகடு விருதுகளோ – விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி எமது தமிழ் சமூகத்தில் தொண்ணூறு  வயது கடந்தபின்பும் அயராமல் எழுதியவாறு இயங்கிக்கொண்டிருக்கிறார் என்றால்,  அவர் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன்தான் என்று உறுதியாகப் பதிவுசெய்யமுடியும்.

2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். சென்னையிலிருந்து ஒரு இலக்கிய அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. அதில் தமிழகத்தில் வதியும் மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களுக்கு 75 வயது பிறந்துவிட்டது. அதனை முன்னிட்டு இலக்கிய நண்பர்கள் இணைந்து அவருக்கு பவளவிழா நடத்தவிருக்கின்றோம். அந்த விழாவில் வெளியிடுவதற்கு ஒரு மலரைத் தயாரிக்கின்றோம். நீங்களும் கணேசலிங்கன் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பவேண்டும். விரைவில் எதிர்பார்க்கின்றோம். – என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நானும் தாமதிக்காமல் ஒரு கட்டுரையை எழுதி தபாலில் அனுப்பிவைத்தேன். மாதங்கள் பல கடந்தும் பவளவிழா நடந்த செய்தியோ மலர் வெளியான தகவலோ எனக்குக்கிடைக்கவில்லை.

ஒரு நாள் கணேசலிங்கனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு  “ என்ன நடந்தது?  “ எனக்கேட்டேன்.

“பிறப்பதும் இறப்பதும் – வயதுகள் கடப்பதும் இயற்கை – ஆனால் – வாழ்வை அர்த்தமுடன் கடப்பதுதானே உன்னதம். எதுவுமே வேண்டாம் உங்கள் அனைவரதும் அன்பு மாத்திரம் போதும்   “ எனச்சொல்லி அன்புக்கட்டளை இட்டேன். – என்று இரத்தினச்சுருக்கமாக பதில் தந்தார்.

கணேசலிங்கனுக்கு 75 வயது பிறந்ததும் பவளவிழாக்காலத்தை முன்னிட்டு சென்னையிலிருக்கும் சில இலக்கிய நண்பர்கள் இணைந்து – இவருக்காக பவளவிழா மலரையும் தயாரித்து விழாவும் கொண்டாட முனைந்தனர்.

மலருக்கான கட்டுரைகளையும் கணேசலிங்கனுக்குத் தெரியாமலேயே சேகரிக்கவும் தொடங்கினர். எப்படியோ இத்தகவலை அறிந்துகொண்டு  மறுத்துவிட்டார் இந்த வித்தியாசமான மனிதர்.

இந்த நூற்றாண்டில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக்கொண்டு முற்போக்கு – பிற்போக்கு பேதமற்ற நட்புறவைச் சகல எழுத்தாளர்களோடும் கொண்டுள்ள ஒரு – சிலவேளை ஒரே ஒரு ஈழத்து எழுத்தாளர் கணேசலிங்கன் – என்று இலக்கு – என்னும் இதழ் 1996 ஆம் ஆண்டு இவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது.

“கணேசலிங்கனின் குமரன் இதழ்களைப்படித்தே அரசியல் அறிவுபெற்றேன்  “ என்று ஒருசந்தர்ப்பத்தில் கவிஞரும் இலக்கிய ஆர்வலருமான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மறைந்த அஷ்ரப் குறிப்பிட்டிருக்கிறார்.

“எனக்கு நல்லதொரு நண்பராக மாத்திரமன்றி மூத்த சகோதரனாகவும் இருப்பவர் கணேசலிங்கன்  “ என்று ஒரு நேர்காணலில் பதில்சொல்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.

இன்றும் இலக்கிய உலகில் பேசப்படும் சரஸ்வதி இதழின் ஆசிரியர் விஜயபாஸ்கரன் – கணேசலிங்கனின் திருமணத்திற்காக இலங்கை வந்து வாழ்த்தினார். அவரது வருகையின் மூலம் இலங்கை – தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான உறவு மலர்ந்தது  “ என்று சொன்னார் எஸ்.பொன்னுத்துரை.

“காலம் காலமாக ஆங்கிலம் கற்றோரிடமும் அரசியல் ஆய்வாளர்களிடமுமே மறைத்துவைக்கப்பட்டிருந்த சொத்துப்போலிருந்த கருத்துக்கள் மிகவும் எளிமையான தமிழில்,கருத்துப் பேதமோ சேதமோ இன்றி மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச்செல்லும் பணியில் கணேசலிங்கன் வெளியிட்ட குமரன் இதழ்கள் முனைப்புடன் செயற்பட்டது.  “ என்று ஆய்வு செய்தார் தெளிவத்தை ஜோசப்.

“தஞ்சாவூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்தவிடத்தில் எதிர்பாராத விதமாக மரணமடைந்த டானியலின் மறைவுச்செய்தி அறிந்தவுடன் சென்னையிலிருந்து ஓடோடி வந்து சகல வேலைகளையும் பொறுப்பேற்று முன்னின்று செய்தார் கணேசலிங்கன்.  “ என்று பிரான்ஸில் வதியும் எழுத்தாளரும் டானியலின் சகாவுமான இளங்கோவன் கூறுகிறார்.

“செ.யோகநாதன் சென்னையில் இருதய நோயால் பாதிக்கப்பட்டபோது சொந்தச் சகோதரனைப் பராமரிப்பது போன்று அக்கறையுடன் கவனித்துக்கொண்டவர் தோழர் கணேசலிங்கன்  “  என்று சொன்னார் தாமரை இதழின் முன்னாள் ஆசிரியரும் தமிழ்நாடு மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் துணைச்செயலாளருமான  மகேந்திரன்.

“இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீதத்தை இயற்றியவருமான அ. ந. கந்தசாமி கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில் அவரைப் பராமரித்தவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் கணேசலிங்கன் . மற்றவர் கலைஞர் லடீஸ் வீரமணி  “ என்பது இலங்கை இலக்கிய வட்டாரத்தில் உலாவும் தகவல்.

இந்த அரிய தகவல்கள் ஒருபுறம் இருக்கட்டும் ,   மல்லிகை ஜீவா சொல்கின்ற செய்தி உண்மையிலேயே எம்மையெல்லாம் நெகிழச்செய்கிறது. வியப்பூட்டுகிறது.

அப்பொழுது ஜீவா யாழ். கஸ்தூரியார் வீதியில் ஜோஸப் சலூனை நடத்திக்கொண்டிருந்த காலம். யாழ். பரமேஸ்வராக்கல்லூரியில் அக்காலப்பகுதியில் படித்துக்கொண்டிருந்த கணேசலிங்கன், மாலை வேளையில் அங்கே வருவாராம். ஜீவாவுடன் உரையாடிக்கொண்டே தரையில் சிந்திக்கிடக்கும் தலைமயிர்க்குவியல்களை தும்புத்தடியினால் கூட்டிப்பெருக்கி அவ்விடத்தை சுத்தம் செய்வாராம்.

பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை எழுத்திலும் மேடையிலும் மாத்திரம் சொல்லாமல் இதயசுத்தியோடு வாழ்ந்தும் காட்டியவர் இந்த தொண்ணூறு  வயதும் கடந்துள்ள மனிதநேய வாதி.

கார்ல் மார்க்ஸ் நுற்றாண்டு விழா கொழும்பில் கொண்டாடப்பட்ட காலகட்டத்தில் அதன் அமைப்புக்குழுவில் இணைந்து இயங்கியவர் கணேசலிங்கன். விழாச்செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டபோது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து யோசித்துக்கொண்டிருக்கையில் பல ரூபாய் நாணயத்தாள்களை எடுத்துக்கொடுத்து செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள். மேலும் தேவைப்பட்டால் சொல்லுங்கள் என்றாராம் கணேசலிங்கன்.

அவர் அன்று வழங்கிய நன்கொடையில் ஆயிரம்ரூபாவுக்கும் மேலிருக்குமாம் என்று எனது நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான  தனபாலசிங்கம் ஒரு தடவை சொன்னார்.

இச்சம்பவத்தினால் சற்று அதிர்ந்துபோன தோழர் என். சண்முகதாஸன்  “ தன்னிடம் இருந்திருந்தால் கூட அப்படி தூக்கிக்கொடுத்திருக்கமாட்டேன்  “ என்று சக தோழர்களிடம் சொன்னாராம்.

கம்யூனிஸம் – மார்க்ஸிஸம் பேசுபவர்கள் சரியான நெஞ்சழுத்தக்காரர்கள். கடினமான போக்குக்கொண்டவர்கள் என்பதுதான் பொதுவான அபிப்பிராயம்.

இந்தப்பதிவை எழுதும் எனக்கும் ஒரு கால கட்டம்வரையில் அந்த அபிப்பிராயம்தான்!

பேராசிரியர் கைலாசபதியின் மறைவின்போதுதான்  (1982) கணேசலிங்கனின் மென்மையான-நாமெல்லோருமே நெகிழ்ந்துபோகும் உள்ளத்தை புரிந்துகொள்ள முடிந்தது. பேராசிரியரின் எதிர்பாராத மறைவினால் நாம் உறைந்துபோயிருந்தபோது கணேசலிங்கன் மாத்திரம் கதறிக்கதறி அழுதுகொண்டிருந்தார்.

மரணச்சடங்கிற்கு முதல் நாளிரவு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான விசேட இரங்கல் நிகழ்ச்சியில் நண்பர் நுஃமானுடன் சேர்ந்து அஞ்சலி உரை நிகழ்த்திய கணேசலிங்கன்,  வானொலிக்கலையகம் என்றும் பாராமல் வானலைகளில் கருத்துக்கள் பரவுகின்றன என்ற பிரக்ஞையுமில்லாமல் அழுது அரற்றிக்கொண்டே உரையாற்றியது இன்றும் எனது நினைவுகளில் சஞ்சரிக்கிறது.

சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் ,  கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் இந்த அமைதியும் தன்னடக்கமும் மிக்க சாதனையாளர் என்ற முடிவுக்கு வரமுடியும்.

மூத்த அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர். மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார்.

அச்சிலே வெளிவந்த இத்தனை நூல்களும் எத்தனை ஆயிரம் பக்கங்களைக்கொண்டவை என்ற ஆராய்ச்சியில் நாம் ஈடுபடத்தேவையில்லை.

2007 ஆம் ஆண்டு இந்தியாவில் சாகித்திய அகடமி விருது பெற்ற நீலபத்மநாபனைப்பற்றிய தகவல்களைப் பதிவு செய்து அவரது நேர்காணலை வெளியிட்ட குமுதம் – தீராநதி – நீலபத்மநாபன் எழுதி அச்சில் வெளிவந்த பக்கங்கள் மொத்தம் 6467 என்று பதிவு செய்கின்றது.

கணேசலிங்கன் இச்சாதனையை முறியடித்திருப்பார் என நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இவரது நீண்ட பயணம் நாவல் குறிப்பிடத்தகுந்ததொன்று. ஈழத்து தமிழ்நாவல் இலக்கிய வளர்ச்சியில் இந்நாவலே முதன்மையிடம் பெறுகின்றது எனச்சொல்கிறார் கலாநிதி செ. யோகராசா.

இக்கருத்து விமர்சனத்துக்கும் விவாதத்திற்குமுரியது. என்றபோதிலும் கூட செ.க.வின் நீண்டபயணம் நாவல் அவரது எழுத்துலக நீண்டபயணத்தின் தொடக்கத்தில் ஆழமாகப்பதியப்பட்ட ஒரு மைல்கல் என்பதில் அபிப்பிராய பேதமிருக்காது.

செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து வெங்கட்சாமிநாதன் மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற சிறு நூலை எதிர்வினையாக எழுதினார். 1973 இல் பூரணி காலாண்டிதழ் இதனை மறுபிரசுரம் செய்தது. நுஃமான் இதற்கு எதிர்வினையாக நீண்ட கட்டுரைத்தொடரை மல்லிகையில் எழுதினார். அதற்கு மு.பொன்னம்பலம் மல்லிகையிலேயே எதிர்வினை எழுதினார். இவ்வாறு ஆரோக்கியமான விமர்சன கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய மூலவர் செவ்வானம் படைத்த கணேசலிங்கன் என்பது இலக்கிய உலகின் பழையசெய்திதான்.

எனினும் இப்படியும் எமது தமிழ் இலக்கியப்பரப்பில் நிகழ்ந்திருக்கிறது என்ற தகவலையும் இச்சந்தர்ப்பத்தில்,  புதிதாக எழுதவந்துள்ள இளம் ஆக்க இலக்கிய வாதிகளுக்கும் இளம் விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.

பேராசிரியர் கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை 1976 இல்  நடத்தியபொழுது சமர்ப்பிக்கப்பட்ட பல கட்டுரைகளில் கணேசலிங்கனின் நாவல்கள்தான் அதிகம் பேசுபொருளாக இருந்தன.

ஆய்வரங்கு நிறைவுபெற்றதும் நண்பர் டானியல் தமது இல்லத்தில் அனைவருக்கும் இராப்போசன விருந்து வழங்கினார்.

இந்த நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கில் கணேசலிங்கனும் கலந்துகொண்டிருந்தால் மிகவும் சிறப்பாகவிருந்திருக்கும் என்று கைலாசபதியிடம் அந்த விருந்தின்போது குறிப்பிட்டேன்.

உண்மைதான். அவரது செவ்வானம் நாவலிற்குத்தான் நான் நீண்ட முன்னுரை எழுதினேன். அவர் இங்கு வரக்கூடிய சூழ்நிலை இல்லை. அதனால் வரவில்லை. எனினும் அவர்பற்றி நாம் இங்கு நிறையப்பேசுகின்றோம். அந்தவகையில் அவர் மிகுந்த கவனிப்புக்குள்ளான நாவலாசிரியர் என்று கைலாஸ் சொன்னார்.

சர்வதேசப்புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா (இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்) இலங்கை வந்த சமயம் அவரை வரவேற்கும் எழுத்தாளர்களின் கூட்டத்திற்கு தலைமைதாங்கிச்சிறப்பித்த பெருமையும் கணேசலிங்கனுக்குண்டு.

கமல்ஹாஸன் நடித்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான கோகிலா (கன்னடம்) திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இயங்கியிருக்கும் கணேசலிங்கன் – தமிழக சினிமா உலகின் கோலங்களை தமது கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரித்துள்ளார்.

நான் வதியும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகப்பிரவேசப் பரீட்சைக்கு தமிழும் ஒரு பாடம்.

தமிழ்மொழிப்பாடப் பரீட்சைக்கு தோற்றும் பல மாணவர்களுக்கு பெண்கள் தொடர்பாக வரும் நேர்முக – எழுத்துப்பரீட்சைகளுக்கு கணேசலிங்கனின் பெண்ணடிமை தீர என்ற நூல் உசாத்துணையாகப்பயன்பட்டது என்ற புதிய தகவலையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.

நாவல் சிறுகதை கட்டுரை விமர்சனம் திறனாய்வு மொழிபெயர்ப்பு பயண இலக்கியம் சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியிருக்கும் கணேசலிங்கனின் எழுத்துக்களை சமூகவியல் பெண்ணியம் மாக்சீயம் தத்துவம் முதலான கண்ணோட்டங்களிலேயே வாசிப்பு அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.

கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற நாவலின் தலைப்பு ஒரு கட்டுரை நூலுக்கான தலைப்பாக இருந்தபோதிலும் – தமிழ் சினிமாவில் வெளி உலகத்தால் கண்டுகொள்ளப்படாத துணை நடிகர்கள் மற்றும் காதல் பாடல் காட்சிகளில் நாயகன் நாயகிக்குப்பின்னால் உடலை வருத்தி ஆடும் துணை நடிகைகளின் தீனமான அவலக்குரல் அந்த நாவலில் கேட்கிறது.

இவருடைய செவ்வானம் நாவல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. பட்டப்படிப்பிற்கு இலக்கிய பாட நூலாக தெரிவாகியுள்ளது. நீண்ட பயணம் நாவல் இலங்கையில் தேசிய சாகித்திய விருதைப்பெற்றது. மரணத்தின் நிழலில் நாவல் தமிழக அரசின் பரிசுபெற்றுள்ளது.

மகாகவி பாரதி தொடர்பாக நிறைய ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் கைலாசபதி – தொ.மு.சிதம்பர ரகுநாதன் ஆகியோர். எனினும் அவர்களுடன் பாரதி விடயத்தில் நிரம்பவும் கருத்து ரீதியாக முரண்பட்டு எழுதியவர் கணேசலிங்கன்.

ஆயினும் – அவர்களிடத்தில் துளியளவும் பகைமை பாராட்டாமல் அவர்கள் வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் உணர்வுபூர்வமாகவும் அதேசமயம் ஆக்கபூர்வமாகவும் செயற்பட்டவர் கணேசலிங்கன்.

கொழும்பு கனத்தை மயானத்தில் கைலாசின் பூதவுடல் தகனத்திற்காக இருக்கிறது. பலரும் அடுத்தடுத்து அஞ்சலி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கணேசலிங்கன் கைலாசின் உருவப்படம் பதிந்த அஞ்சலி பிரசுரங்களை அழுதழுது விநியோகித்துக்கொண்டிருக்கிறார். கைலாஸ் மறைந்து சில நாட்களில் அதாவது 1982 டிசம்பர் 15 ஆம் திகதிய குமரன் இதழில் கைலாஸின் படத்தை அட்டையில் பிரசுரித்து சிறப்பிதழ் வெளியிட்டார்.

கைலாஸ் மறைந்து ஒரு மாத காலத்திற்குள் கைலாஸின் சில கட்டுரைகளைத்தேடித்திரட்டி இலக்கியச்சிந்தனை என்ற நூலை வெளியிட்டார். பின்னர் பாரதி தொடர்பாக கைலாஸ் எழுதிய பல கட்டுரைகளைத்தொகுத்து பாரதி ஆய்வுகள் என்னும் நூலை பதிப்பித்தார்.

தொ.மு.சி.ரகுநாதன் இறந்தவுடன் ஃபுரன்ட்லைன் இதழில் விரிவான கட்டுரை எழுதியதுடன் நில்லாமல் பொன்னீலன் எழுதிய ரகுநாதன் வாழ்வும் பணியும் என்ற நூலை தூரதேசங்களிலும் வாழும் இலக்கிய ஆர்வலர்க்கு கிடைக்கச்செய்தார்.

இந்தத்தகவல்களை இங்கு பதிவு செய்வதற்கு காரணங்கள் பலவுண்டு.

கருத்து முரண்பாடு வந்தவுடனேயே பகைமையை வளர்த்துக்கொண்டு முகம்கொடுத்தும் பேசாமல் ஆணவ மனப்பான்மையுடன் நடமாடும் எம்மவர் பலருக்கு இந்த முதிய வயதிலும் தளராது இயங்கிக்கொண்டு சகோதர வாஞ்சையுடன் மாற்றுக்கருத்துக்கொண்டோரையும் அரவணைக்கும் பண்பு கொண்ட கணேசலிங்கன் மிகச்சிறந்த முன்னுதாரணம்.

கருத்து முரண்பாடுகள் எனச்சொல்லிக்கொண்டு முதுகிலே குத்துபவர்கள் பல்கிப்பெருகியுள்ள கலை இலக்கிய அரசியல் உலகிலே எது கருத்துமுரண்பாடு ? எது துரோகம் ? என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது? என்ற கேள்வியும் எழுவது தவிர்க்கமுடியாதது.

இக்கேள்விக்குரிய பதில்கள் – உளப்பாதிப்பு ஏற்படுத்துபவர்களினதும் -பாதிக்கப்பட்டவர்களினதும் மனச்சாட்சியிலேயே கிடைக்கப்பெறும். ஆனால் – அந்தப்பதில்களும் மௌன மொழியில் கரைந்துவிடும்.

கணேசலிங்கன் 1971 முதல் 1983 வரையில் கொழும்பு புறக்கோட்டையில் டாம் வீதியில் அமைந்த தமது குமரன் அச்சகத்திலிருந்து குமரன் இதழை வெளியிட்டார். அத்துடன் பல எழுத்தாளர்களின் நூல்களையும் பதிப்பித்தார்.

குமரன் இதழில்தான் வரதபாக்கியான் என்ற புனைபெயரில் முன்னர் கவிதைகள் எழுதிய புதுவை ரத்தினதுரை எமக்கு அறிமுகமானார். அச்சமயம் புதுவை ரத்தினதுரை தீவிர சீனச்சார்ப்பு இலக்கியவாதியாக இருந்தார். அவரின் பெரும்பாலான கவிதைகள் சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் குரலாகவே காணப்பட்டன.

குமரன் இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்த காலம் பற்றி கணேசலிங்கன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: –

புதுக்கவிதை எழுதி குமரனில் வெளிவரவிரும்புபவர்கள் மட்டும் பெருந்தொகையினராக இருந்தனர். எடிற் செய்து – தேர்ந்து – திரட்டி வெளியிடுவதிலும் சிரமமிருந்தது. கவிதைத்துறையில் என்னைக்கவர்ந்தவர்கள் இருவரே. முதலாவதாக புதுவை ரத்தினதுரையைக் கூறவேண்டும். வரதபாக்கியான் என்ற பெயரிலும் அவர் எழுதிவந்தார். அவர் குமரன் இதழுக்காக எழுதிய கவிதைகள் யாவும் எழுதியபடியே வெளிவந்தன. மணிமேகலை என்ற பெயரிலும் கவிதை வெளிவந்தது. சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட கவிதைகள். கவிதைக்குரிய ஓசைநயத்தையும் அவர் விட்டுவிடவில்லை.

மற்றவர் சாருமதி. புரட்சி அரசியலே அவரது கோட்பாடு. ஓசை நயம் பற்றி அவர் கவலைப்படவில்லை. சமூகப்புரட்சியை வேண்டிய அரசியல் சார்ந்த கோட்பாட்டை அவர் என்றும் விட்டுவிடவில்லை.

குமரன் இதழ்கள் யாவும் தொகுக்கப்பட்டு 933 பக்கங்களில் வெளியான பெரியதொரு தொகுப்பினை தமிழகத்தில் கணேசலிங்கனை சந்தித்தபொழுது எனக்குத்தந்தார்.

எனது சில நூல்களை அவரது சென்னை குமரன் பதிப்பகம்தான் வெளியிட்டிருக்கிறது. அவர் எனக்கு பெரும்பாலும் ஏரோகிராமில்தான் கடிதங்கள் எழுதுவார். எனக்கு அதிகம் கடிதம் எழுதியவர்களின் வரிசையில் அவரும் இணைந்துள்ளார். அவரது கடிதங்கள் யாவற்றையும் ஒரு தனிக்கோவையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.

ஒரு மனிதனின் இயல்புகள்தான் அவனது விதியைத்தீர்மானிக்கும் என்று வட இந்திய எழுத்தாளர் அருண்ஷோரி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். எங்கள் செ.க. என்ற கணேசலிங்கனுக்கும் மிகச்சிறந்த குண இயல்புகள் இருக்கின்றன. கலை இலக்கிய அரசியலில் மாற்றுக்கருத்துக்களுக்கு அப்பாலும் அவர் படைப்பிலக்கியவாதிகளினாலும் விமர்சகர்களினாலும் வாசகர்களினாலும் நேசிக்கப்படுவதற்கு அவரது இயல்புகள்தான் காரணம்.

02.

மாணவர் மாத இதழாக 15-01-1971 முதல் கொழும்பிலிருந்து வெளிவரத்தொடங்கிய கணேசலிங்கனின் குமரன், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மார்க்ஸீய சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத்தொடங்கியது.

தமது குமரன் இதழுக்கெனவே ஒரு வாசகர் குழாமை உருவாக்கியவர்.

மகாகவி பாரதி தொடர்பாக பேராசிரியர் கைலாசபதியின் பார்வைக்கும் கணேசலிங்கனின் பார்வைக்கும் இடையே மார்க்ஸீய வெளிச்சத்திலேயே வேறுபாடுகள் இருந்தன. அதன் எதிரொலியை குமரன் இதழ்களிலும் பார்க்க முடிந்தது. தனது பார்வைக்கு ஆதார சுருதி சேர்க்கும் கட்டுரைகளையும் குமரனில் கணேசலிங்கன்  வரவாக்கினார். கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் விஞ்ஞானபூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 56 ஆவது இதழுடன் தடைப்பட்டு, மீண்டும் பாரதி நூற்றாண்டு காலத்தில் 1982 நவம்பர் மாதம் முதல் வெளிவந்தது.

ஆயினும், 1983 ஜூன் மாதத்திற்குப்பின்னர் குமரன் வெளியாகவில்லை.

கொழும்பில் இனவாத வன்செயல்கள் நிகழ்ந்த சமயம் கணேசலிங்கனின் வெள்ளவத்தையில் அமைந்திருந்த விஜயலக்ஷ்மி புத்தகசாலையும் தீக்கிரையானது.  குமரன் 57 ஆவது இதழில் ஆசிரியர் கணேசலிங்கன் பின்வருமாறு எழுதுகிறார்:

“மீண்டும் சிந்தனை அலைகளை எழுப்ப ‘ குமரன்’ வெளிவருவது கண்டு மகிழ்ச்சி” – என்று இந்திய நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். இங்கும் தமிழ்நாட்டிலிருந்தும் நண்பர்கள் அடிக்கடி குமரன் பற்றி நலம் விசாரித்துக்கொண்டேயிருந்தனர். மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. குமரனின் வெற்றிடத்தை வேறு எந்த இதழாலும் நிரப்ப முடியவில்லை. நண்பர் பலரின் ஆர்வம் , உறுதி, கூட்டுழைப்பாகவே குமரன் மீண்டும் வெளிவருகிறான். புதிய உருவில், புதிய சிந்தனைகளை நிட்சயம் தருவான். பாரதி நூற்றாண்டு விழாக்கள், நூல்கள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் அளப்பில.

ஆயினும், முழுமையான பாரதியை விஞ்ஞானபூர்வமாக எவரும் காட்ட முனையவில்லை. ” பாரதி – யார்” என்ற புலவர் இராசாமணி அவர்கள் தொடர்கட்டுரை இக்குறையைத்தீர்க்கும். பாரதியை முழுமையாகத் தரிசிக்க உதவும். பாரதி பற்றிப்பரப்பப்படும் பல பொய்மைகளை ஆராய்வாளர் பலர் அறிவர். ஆயினும் வெளியே கூற அச்சம். தம் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற பயம். ‘ அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும்’ என்ற பாரதி வரிகள்தான் நினைவில் வருகிறது.

கணேசலிங்கனின் இக்கருத்துக்கள் தொடர்பாக ஈழத்து இலக்கியப்பரப்பில் சர்ச்சைகளும் தோன்றின. பாரதியைத்தரிசிப்போர், அவரைப்பல்வேறு கோணங்களில் நின்றே பார்க்கின்றனர்.

கணேசலிங்கன் சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார்.  ஸ்ரிபன்  செவாக் (Stefan Zweig)  எழுதிய      Letter from an Un-known Woman  என்ற   குறுநாவலை     அபலையின்  கடிதம் என்ற பெயரில் வரவாக்கினார்.

StefanZweig    ஜெர்மனியில்  மூத்த  படைப்பாளி.  இவர்  1881  இல் வியன்னாவில்   பிறந்து  1942  இல்   தமது  60  வயதில் பிரேசிலில் மறைந்தார்.

ஆனால் –  அது  இயற்கை  மரணமல்ல.  அவரும்  அவரது மனைவியும்  நஞ்சருந்தி  தற்கொலை    செய்துகொண்டதாகவே செ.கணேசலிங்கன்   இந்நூலின்   முதல்  பதிப்பில்  1965 இல்   பதிவு செய்துள்ளார்.

அதன்பிறகும்  இந்த  நாவல்  இரண்டாம்  பதிப்பில் வெளியாகியிருக்கிறது.

03.

கணேசலிங்கன் இலங்கை வடபுலத்தில் உரும்பராய் கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி, செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது பிள்ளையாக பிறந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை ஊரிலிருந்த கிறிஸ்தவ பாடசாலையில் கற்றார். பின்னர் தனது ஆறாம் வகுப்பில் சந்திரோதயா வித்தியாசாலையில் இணைந்தார். பின்னாளில் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் உயர் கல்வியை தொடர்ந்தார். இதுவே பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று இரண்டு தடவைகள் விசேட வகுப்பேற்றம் ( Double Promotion ) பெற்றவர்.

1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வேளையில் இவருக்கு 20 வயது. காந்தீயத்தில் தீவிர பற்றுக்கொண்டிருந்த மாணவப்பருவத்து கணேசலிங்கன், தனது ஊர்பாடசாலையில்,  காந்தி கொல்லப்பட்டு ஒரு சில நாட்களில் காந்தி நினைவாக ஒரு அஞ்சலிக்கூட்டம் நடத்தினார்.

அதில் அவர் நிகழ்த்திய உரை அக்காலப்பகுதியிலேயே பத்திரிகைளில் கட்டுரையாக வெளியானது.

அந்த உரையின் கடைசி வரிகள் இவ்வாறு அமைந்திருந்தன:

“ மகாத்மாவின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும். அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைப்பிடிப்பதானால், இங்கே நிலவும் சாதி வெறி ஒழிக்கப்படவேண்டும். இங்குள்ள கோயில்களை தாழ்த்தப்பட்டவர்கள் எனக்கூறப்படும் மக்களுக்காக திறந்துவிடவேண்டும். கோயில்களில் உயிர்ப்பலி நிறுத்தப்படவேண்டும் “

மாணவப்பருவத்தில் காந்தீயவாதியாக வாழ்ந்திருக்கும் கணேசலிங்கன், இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கியதும் மார்க்ஸீயவாதியாக மாறினார்.

நான் இலக்கியப்பிரவேசம் செய்த 1970 காலப்பகுதியில் படித்த முதல் தமிழ் நாவல் கணேசலிங்கன் எழுதிய நீண்ட பயணம். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்த என்னை,  நாவல் எழுதுமாறு தூண்டியவரும் இவர்தான்.

கட்டுரையுடன் தொடர்புபட்ட புகைப்படங்கள் :

லெ.முருகபூபதி லெ.முருகபூபதி லெ.முருகபூபதி லெ.முருகபூபதி லெ.முருகபூபதி  லெ.முருகபூபதி லெ.முருகபூபதி

இவரது சென்னை குமரன் பதிப்பகத்தின் ஊடாக எனது சில நூல்கள் வெளியாகியுள்ளன. அவ்வேளைகளிலும் இவர் என்னை நாவல் எழுதுமாறு வலியுறுத்தினார்.

அவருடைய ஊக்கத்தினால் 2001 இல் பறவைகள் நாவலை எழுதி அனுப்பினேன். அதனை அவர் வெளியிட்டபோது, அவருக்கே அதனை சமர்ப்பிக்க விரும்பினேன். அதனை தனது குமரன் பதிப்பகம் ஊடாக வெளியிட்ட அவர் எனது விருப்பத்தை ஏற்காமல், எனது தாத்தாவும் பாரதி இயல் ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான  தொ.மு. சி. ரகுநாதனுக்கே அந்த நாவலை சமர்ப்பிக்கச்செய்தார்.

இவ்வாறு தன்முனைப்பு அற்று  அடக்கமாக வாழ்ந்துவரும்  இந்த மனிதநேயவாதியின் இயல்புகள், படைப்புலகம் பற்றி விரிவான ஆவண நூல் செ. கணேசலிங்கனின் படைப்பும் படைப்பாளியும் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

கடந்த மார்ச் மாதம் தனது 91 வயதை அடைந்துள்ள எங்கள் மூத்த இலக்கியவாதியை “நடு“ இணைய இதழ் ஊடாக வாழ்த்தி கொண்டாடுகின்றேன்.

லெ.முருகபூபதி

லெ முருகபூபதி

 797 total views,  1 views today

(Visited 304 times, 1 visits today)
 

One thought on “ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை-முருகபூபதி-அங்கம் 03”

Comments are closed.