ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை-முருகபூபதி-அங்கம் 04

               ‘மலையக இலக்கியத்தில் தெளிவத்தை ஜோசப்பின் வகிபாகம்’

இலங்கை பொருளாதாரத்திற்கு ஒரு காலத்தில்  அறுபது சதவீதமான அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த   மலையகத்தின் தேயிலைத்  தோட்டத் தொழிலாளர்களின் அந்தக்குடியிருப்புக்குப்பெயர் லயன் காம்பரா.

அந்தகுடும்பத்தின் தலைவன் இரவில் வெளியே சென்றுவிட்டு அந்த ஒரு அறை வீட்டுக்கு திரும்புகின்றான். ( ஒரு அறை என்றால் அதற்குள்தான் சமையல், படுக்கை, பிள்ளைகளின் படிப்பு) திடீரென்று அந்த அறைக்குள்ளிருந்து அவன் அலறிக்கொண்டு வெளியே வருகின்றான்.

அப்படி அங்கு என்னதான் நடந்தது?  கும்மிருட்டில், மனைவி என நினைத்துக்கொண்டு தெரியாத்தனமாக தனது பருவமகளின் பக்கத்தில் போய் படுத்திருக்கின்றான்.

மறுநாள் தோட்டத்தின் துறையிடம் தங்களின் அவல வாழ்வுபற்றி முறையிடச்செல்கின்றான்.

இப்படிப்பட்ட அவலமான  காட்சிகள் மலையகத் தோட்டங்களில் நடந்திருக்கலாம்.  1975 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த்திரைப்படத்தில் இக்காட்சி வருகிறது ! அந்தப்படம்தான் புதிய காற்று. இதற்கு திரைக்கதை வசனம் எழுதியவர்தான் இந்தப்பதிவில் நான் எழுதப்போகும் தெளிவத்தை ஜோசப்.

இந்தத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் இருவர்.  இன்று இலங்கையில் பிரபல அரசியல் தலைவர்கள். அவர்கள்தான் மனோ கணேசன் – பிரபா கணேசன்.  இவர்களின் தந்தையார் வி.பி. கணேசன் இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.

எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை வி.பி.கணேசன்தான் தயாரித்து கதாநாயகனாகவும் தோன்றினார்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின்  அவல வாழ்க்கையை சித்திரிப்பதற்காக அந்தப்படத்திற்கு  திரைக்கதை வசனம் எழுதுவதற்கு  அவர் தேடிச்சென்றது அக்காலப்பகுதியில் கொழும்பில் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில்  கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் ஸெயின்ஸ்தான்  திரையரங்கின் வேலிச்சுவர் எல்லையில் அமைந்திருந்த மொடர்ன் கொன்பெஃக்‌ஷனரி ( ஸ்டார் இனிப்பு தயாரிப்பு நிறுவனம்) வேர்க்ஸ் ஸ்தாபனத்தில் கணக்காளராக பணியிலிருந்த தெளிவத்தை ஜோசப் அவர்களைத்தான்!

காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். மலையகத்தில் பதுளையில் ஊவாகட்டவளை என்ற ஊரில் தெளிவத்தை என்ற இடத்தில் 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர், சிறிது காலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் வசித்துவிட்டு தாயகம் திரும்பியவர். தொடர்ந்தும் இவர் கும்பகோணம் வாசியாக இருந்திருப்பின் இன்று இவருக்கு கிடைத்திருக்கும் பிரபல்யத்திற்கு  வாய்ப்பில்லை.

கும்பகோணத்தில் ஆயிரத்தில் ஒரு மனிதராக சந்தனசாமி ஜோசப் இருந்திருப்பார். தான் பிறந்த இலங்கை மலையகத்தை இவர் நேசித்தார். மலையகமும் இவரை நேசித்து வளர்த்தது. மலையக இலக்கியத்திற்கும் வளம் சேர்த்தார். மலையக எழுத்தாளர் மன்றமும் இவரைத்  தலைவராக ஏற்றுக்கொண்டது.

தெளிவத்தை என்ற இடத்தில் தோட்டப்பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணிதொடங்கி, கணக்கியல் படித்து, பின்னர் கொழும்பு ஸ்டார் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இணைந்து கொழும்புவாசியாகவே மாறிவிட்டவர்.

1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கியவர். இவருடைய ஒரு சிறுகதை ஜி. உமாபதி அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வெளியிட்ட உமா என்ற இதழில் வெளிவந்திருக்கிறது.

யார் இந்த உமாபதி? இவர்தான் சிவாஜி கணேசன் நடிப்பில் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான ராஜராஜசோழன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்.

உமாபதியை  மணிரத்தினம் இயக்கிய அக்கினி நட்சத்திரம் திரைப்படத்தில் வில்லனாகப்பார்த்திருப்பீர்கள்.

1960 களில் தெளிவத்தை ஜோசப் சிறுதைகள் எழுதத் தொடங்கியிருந்தாலும், நூலுருவில் முதலில் வெளிவந்தது காலங்கள் சாவதில்லை – நாவல்தான். இதனை வீரகேசரி பிரசுரம் 1974 இல் வெளியிட்டது. அதற்குப்பின்னர்தான், மு. நித்தியானந்தனின் வைகறை வெளியீடாக இவருடைய கதைகளின் தொகுதி நாமிருக்கும் நாடே 1979 இல் வெளிவருகிறது.

இலங்கை மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்த தெளிவத்தை ஜோசப் இலங்கையின் முன்னோடி படைப்பாளி. ஈழத்து இலக்கிய வரலாற்றில் மலையக இலக்கியத்துக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்தப்பங்கில் அழுத்தமான பதிவுகளை தனது படைப்புகள் மூலம் ஏற்படுத்தியிருப்பவர்.  ஈழத்து இலக்கிய உலகில் தெளிவத்தை என்றால் அது ஜோசப் அவர்களையே குறிக்கும். ஊரின் பெயரால் தமது இயற்பெயரை தவிர்த்துக்கொண்டவர்களின் வரிசையில் இவரும் இணைகிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறி துன்பக்கேணியில் உழன்ற சந்ததியின் வாரிசு இவர்.

சிறுகதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்துக்கள், ஆய்வுத் தொடர்கள், திரைப்பட வசனம், தொலைக்காட்சி-வானொலி நாடகம் என தனது எழுத்தூழியத்தை அகலிக்கச்செய்தவர். இவரை எமது இலக்கிய உலகில் தெளிவத்தை என்றுதான் செல்லமாக அழைப்பது வழக்கம்.

சாகித்திய விருதினை இரண்டு தடவை பெற்றுள்ள தெளிவத்தை , சம்பந்தன் விருதும் பெற்றவர். கலாசார அமைச்சின் கலாபூஷணம் பட்டமும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. பேராதனை பல்கலைக்கழகம் அழைத்து பாராட்டி கௌரவித்திருக்கிறது. இங்கிலாந்து-கனடா-அவுஸ்திரேலியா –  சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் தமிழ்நாட்டுக்கும்   இலக்கியப்பயணமும் மேற்கொண்டவர். தமிழ்நாட்டில் 2003 இல் காலச்சுவடு நடத்திய தமிழினி மகாநாட்டிலும் கலந்துகொண்டவர். இலங்கையில் இலக்கியத்திற்கான உயர் விருது – சாகித்திய ரத்னாவும் இவருக்கு கிடைத்துள்ளது.

பின்னாளில் இவருக்கு ஜெயமோகன் ஏற்பாட்டில் வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருதும் கிடைத்திருக்கிறது.

இந்தப்பின்னணியில்,  அவுஸ்திரேலியாவில் எமது இல்லத்தில் 2009 ஆம் நடந்த ஒரு கதையையும் சொல்லிவிடுகின்றேன்.

எமது இல்லத்தில் ஜெயமோகன் – அருண்மொழி தம்பதியரும் தெளிவத்தையும் தங்கியிருக்கின்றனர். அவ்வேளையில் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 9 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா மெல்பனில் நடந்தது.

அவ்விழாவில் கலந்துகொண்ட தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு எமது சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடுத்தவர் ஜெயமோகன். அன்றுதான் தெளிவத்தையின் நீண்ட உரையையும் ஜெயமோகன் கேட்டு மலையக இலக்கியத்தை அறிந்துகொள்கிறார்.

அன்றிரவு இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்:

 “நீங்கள் காதலித்திருக்கிறீர்களா ?” என்று கேட்கிறார் ஜெமோ.

 “ஆமா”

 “காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டீர்களா ?”

 “ஆமா…, ஆமா…”

 “அந்தப்பெண்ணுடன்தான் தொடர்ந்தும் இருக்கிறீர்களா ?”

 “ஆமா…ஆமா. ஆமா…”

இவ்வாறு மூன்றுதடவைக்கு மேல் அன்று ” ஆமா”  போட்ட தெளிவத்தை ஜோசப் அவர்களின் துணைவியாரிடம் – சில வருடங்களுக்கு முன்னர்,  இவர்கள் இருவரையும் வைத்து ஆவணப்படம் எடுத்திருந்த வீரகேசரியில் சங்கமம் பகுதியை நடத்தும் ஜீவா சதாசிவம் ஒரு கேள்வியை கேட்கிறார்.

” உங்கள் விருப்பம் என்ன ?”

திருமதி பிலோமினா ஜோசப்பின் பதில்: ” யார் முதலில் போவோமோ தெரியாது, அவர்போகும்போது நானும் கூடவே போய்விடவேண்டும். அவர் இல்லாத வாழ்க்கை எனக்கில்லை!”

பிள்ளைகளையும் மணம் முடித்துக்கொடுத்து கரைசேர்த்து, பேரக்குழந்தைகளும் கண்டுவிட்ட ஒருமனத்தம்பதியர்கள் இவர்கள்.               ”  ஆலம் விழுதுகள் போன்று உறவுகள் ஆயிரம் வந்தாலும் வேராக இருந்து தாங்குவது அவரது மனைவிதான் ”  என்பதை அன்று நடுஇரவு எமது இல்லத்தில்  இரண்டு முக்கிய இலக்கிய ஆளுமைகளின் அந்த இலக்கிய சந்திப்பிலும்  அறியமுடிந்தது.

தெளிவத்தை மிகவும் மென்மையானவர், எளிமையானவர்.  இனிமையானவர். அதனால்தானோ கொழும்பில் பிரபலமான இனிப்பு-சொக்கலேட் தொழிலகத்தில் நீண்ட காலமாக கணக்காளராக  75 வயது கடந்த பின்பும் பணியாற்றியவர். நிர்வாகத்துக்கு இவரது வயது முக்கியமில்லை. அவரது நிதானமான சேவைதான் தேவையாகியிருக்கிறது.

அங்குதான் 1972 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் முதலில் தெளிவத்தையை சந்திக்கின்றேன். அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ( அமரர்) மு. கனகராஜன்.

அந்த இனிப்புக்கம்பனிக்கு அருகிலிருந்த அந்த ஸெயின்ஸ்தான் திரையரங்கில் இரண்டு நாட்கள் சிறைப்பட்டிருந்த அவலத்தை நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற உண்மைப்புனைவு நாவலில் தெளிவத்தை சித்திரித்திருக்கிறார்.

இன்று அந்த இனிப்புக் கம்பனியும் இல்லை ஸெயின்ஸ்தான் திரையரங்கும் இல்லை. அன்று நடந்த அவலக்கதை மாத்திரம் தெளிவத்தையின் படைப்பில் வாழ்கிறது!

இவரது வாசிப்புத்தளமும் விரிவானது. எந்தவொரு இலக்கியக்கூட்டத்திலும் மேம்போக்காக பேசமாட்டார். தான் எடுத்துக்கொண்ட தலைப்புக்காக பல நாட்கள் ஆதாரங்களையும் தகவல்களையும் திரட்டி கோவைப்படுத்திக்கோண்டே பேசுவார்.

சிறுகதை, நாவல்  இலக்கிய வராலாறாக இருக்கட்டும் மலையக இலக்கிய வளர்ச்சி குறித்த ஆய்வாக இருக்கட்டும் மேம்போக்காகப் பேசமாட்டார்.  எழுதமாட்டார். பல நாட்கள் அந்தப்பேச்சுக்காக நேரம் ஒதுக்கி உழைப்பார். இது பலருக்கும் முன்மாதிரியானது.

நாவல், சிறுகதை எழுதிக்கொண்டே பத்திரிகைகளில் ஆய்வுத்தொடர்களையும் தந்திருப்பவர்.  பல வருடங்களுக்கு முன்னர், தினகரன் வாரமஞ்சரியில் பல தமிழக – ஈழத்து முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்  தேடி எடுத்து பிரசுரித்து வந்தார். கதையை மாத்திரம் அறிமுகப்படுத்தாமல் குறிப்பிட்ட அக்கதையை எழுதியவரின் வாழ்க்கைச்சரிதத்தையும்  சுருக்கமாக பதிவுசெய்தார்.

தமிழில் சிறுகதை இலக்கியத்தின் மூலவர் வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம்,  கு.ப.ராஜகோபலனின் சிறிது வெளிச்சம் முதலான சிறுகதைகளையும் இந்த தொடரில்தான் அன்றைய இளம் தலைமுறை படைப்பாளிகள் படித்துத்தெரிந்துகொண்டார்கள்.

தமிழக, ஈழத்து படைப்பாளிகள் பலரது சிறுகதைகளை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தேடி எடுத்து அந்தத் தொடரில் பதிவுசெய்து வந்தார். அதற்காக கொழும்பில் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் இவர் செலவிட்ட நேரம் அதிகம். பெறுமதியானது.

இலக்கியத்தில் பல முகங்கள் இருப்பது போன்று பல முகாம்களும் இயங்குகின்றன. ஆனால்,  எந்த முகாமுடனும் முரண்பாடுகொள்ளாமல், தனது கருத்தை தெளிவாகவே முன்வைப்பார். அதனால் அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இலக்கியவாதி.

மலையக இலக்கியவாதிகள் மாத்திரமன்றி முழு தமிழ் இலக்கிய உலகமுமே இவரை காலம் பூராவும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அளப்பரிய பணியையும் மேற்கொண்டவர்.

மலையகச்சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள் ஆகிய கதைத்தொகுப்புகளை துரைவி பதிப்பகத்திற்காக உருவாக்கிக்கொடுத்தவர். அமரர் துரை.விஸ்வநாதனும் இந்தப்பணியினால் இலக்கிய உலகில் விதந்து பேசப்பட்டவர்.

தெளிவத்தை ஜோசப்பின் வாழ்வே ஒரு இலக்கிய வரலாறுதான்.

மிகவும் பெறுமதிவாய்ந்த இந்த இலக்கியவாதியை மலையக அரசியல் கட்சிகளோ தொழிற்சங்க அமைப்புகளோ தகுந்த முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்ற மனக்குறை எனக்கு நீண்ட காலமாகவே இருந்திருக்கிறது. கண்களுக்கு அருகில் இருக்கும் கண்ணிமைகள் கண்களுக்குத்தெரிவதில்லை.

தெளிவத்தைக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபின்னர் கொழும்பில் நடந்த பாராட்டுவிழாவில், தெளிவத்தையை வைத்து கதை வசனம் எழுதி புதிய காற்று திரைப்படம் எடுத்த வி. பி. கணேசனின் மகன் மனோ கணேசன் பாரட்டுரை வழங்கியபோது இந்தப்பதிவின் தொடக்கத்தில் வரும் அந்தத் திரைப்படத்தின் காட்சியைத்தான் குறிப்பிட்டுப்பேசியதுடன்,  மலையக மக்களின் அந்த லயன் குடியிருப்பு அவல வாழ்க்கைக்கு இன்னமும் முற்றுப்புள்ளி இடப்படவில்லை என்றார்.

துன்பக்கேணியில் உழன்ற மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வை இரத்தமும் சதையுமாக பதிவுசெய்தவர்களின் வரிசையில் தெளிவத்தைஜோசப்பும் ஒருவர்.

இலங்கையில் மலையக இலக்கியம் குறித்து ஒரு வெளிநாட்டவரோ அல்லது பல்கலைக்கழக மாணவனோ ஆராயப்புறப்படும்பொழுது அவர்களுக்கு உசாத்துணை ஆவணங்களாக இருப்பவை தெளிவத்தை ஜோசப்பின் ஆய்வுகள்தான். இவர் இலங்கை இலக்கிய இதழ்கள் குறித்தும் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சி தொடர்பாகவும் விரிவாக எழுதியிருப்பவர்.

எழுபத்தியைந்து சிறுகதைகளாவது எழுதியிருப்பார் என்பது எனது கணிப்பு. இவரது காலங்கள் சாவதில்லை என்ற நாவலில், ஒரு தோட்டத்தொழிலாளி பாடிச்செல்லும் பாடலை 1977 இல் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரி ஐக்கிய முன்னணியின் பிரசாரக்கூட்டங்களில் பேசும்போது பயன்படுத்தியிருக்கின்றேன்.

” யூ. என்.பி வந்தாலும் ஶ்ரீலங்கா( சுதந்திரக்கட்சி)  வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே…”

துலாபாரம் படத்தில்,

” பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே – இந்த

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே ”

எனத் தொடங்கும் பாடல் வருகிறது.  இந்தப்பாடலில் ஒரு வரியைத்தான் அந்தத் தோட்டத்தொழிலாளி அவ்வாறு மாற்றிப்பாடுவான்.

தெளிவத்தையின் தீர்க்கதரிசனம் இன்றும் நிதர்சனமானது.  எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் சில வருடங்களுக்கு முன்னர் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் தெளிவத்தை மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்த  மனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை  நயப்புரைக்காக எடுத்துக்கொண்டேன்.

காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தையும்  வென்றும் வாழும் கதையாக  அது என்னை கவர்ந்தது.

இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம்பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை.

இந்த அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.

பதுளையில் உள்ள தேயிலைத்தோட்டங்களுக்குச்செல்லும் பஸ்வண்டிகளையும் அங்கதச்சுவையுடன்தான் சித்திரிக்கிறார். பஸ்வண்டிகளை மாநகரசபை மின்விளக்குகளுக்கு ஒப்பிடுகிறார். அந்த விளக்குகள் இருந்தாற்போல் எரியும் இருந்தாற்போல் அணைந்துவிடும். இவ்வளவு விடயங்களும் சிறுகதையின் முதற் பக்கத்திலேயே வந்துவிடுகின்றன. வசனங்கள் சின்னச்சின்ன சொற்களினால் இணைகின்றன. அதனால் நீண்ட வாக்கியங்கள் இல்லை.

கதையின் மூன்றாவது வரி: கை நிறைந்த பைகளும் பை நிறைந்த சாமான்களுமாய்… என கவித்துவமாக தொடங்குகிறது. பண்டிகைக்காலத்தில் பஸ் நிலையம் எப்படி இருக்கும் என்பதை ஒரு ஓவியம்போலவே சித்திரிக்கின்றார்.

இலங்கையில் நீங்கள் சிங்களப்பிரதேசங்களில் கவிக்கொலகாரயாவை பார்த்திருப்பீர்கள். பஸ் நிலையங்களில் பிரசுரங்களை வைத்துக்கொண்டு இராகத்துடன் பாடிப்பாடி விற்பார்கள்.

அவற்றில் ஒரு உண்மைச்சம்பவம் பாட்டாக புனையப்பட்டிருக்கும். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கோகிலாம்பாள் கொலைச்சம்பவமும் இவ்வாறு பாடலாக புனையப்பட்டு பஸ்நிலையங்களில் பாடப்பட்டதாக புஷ்பராணி தமது அகாலம் நூலில் பதிவுசெய்துள்ளார்.

இலங்கையில் தம்புள்ள தொகுதி முன்னாள் எம்.பி. டி.பி. தென்னக்கோன் சமூக சேவைகள் அமைச்சராகவும் கலாசார அமைச்சராகவும் இருந்தவர். ஒரு தேர்தலில் தோல்வியுற்றபின்னர் அவரும் பஸ்நிலையங்களில் கவிக்கொல விற்று பாடிக்கொண்டிருந்தார்.

தெளிவத்தையின் கதையிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது. ஒரு தெருப்பாடகன், பீடா வெற்றிலை விற்பவர், பேனை கண்ணாடி விற்பவர், பொம்பாய் நைஸ் மற்றும் டொபி விற்பவர்கள் இவர்களின் கூக்குரலுக்கு மத்தியில் ஐயா தர்மஞ் சாமி என்ற பிச்சைக்காரனின் குரலும் கேட்கிறது. எப்படி சன்னமாக… கிணற்றுள்ளிருந்து கேட்பது போல். என எழுதுகிறார். கதைசொல்லிக்கு சிகரட் தேவைப்படுகிறது. ஆனால்,  அவர் கேட்ட சிகரட் நடைவியாபாரியிடம் இல்லை.

தருமஞ்சாமி – மீண்டும் சன்னமான குரல். காட்சியில் ஒரு கமிரா கோணம். பஸ்ஸில் நிற்கும் ஒருவர் ‘ அட ராமா பிச்சையா கேட்கிறாய் இந்தச்சத்தத்தில் நீ இவ்வளவு மெதுவாகக் கேட்டால் யார் காதில் விழும். சற்றுப்பலமாகக் கத்தேன்” என்கிறார். அவரிடம் கருணை இருப்பதாக கதை சொல்லி நினைக்கிறார். ஆனால்,  சொன்னவரின் கை மட்டும் சட்டைப்பக்கம் நகரவில்லை. கையை எடுத்தால் விழுந்துவிடுவோம் என்ற எண்ணமாக இருக்கும் எனச்சொல்கிறார் கதைசொல்லி. 12 வரிகளுக்குள் ஒரு திரைப்படக்காட்சியே வந்துவிடுகிறது. அனுபவித்துப்படித்துப்பாருங்கள்.

அந்த பஸ்ஸில் எத்தனையோ பாத்திரங்கள், ஆனால் அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் பலரும் விமர்சனம் செய்கிறார்கள். கதைசொல்லி அவனது தோற்றத்தை வர்ணிக்கிறார். சிகரட்டுக்கு வைத்திருந்த ஒரு ரூபாவில் சிகரட் வாங்கியிருந்தால் அது எவருக்கும் பிரயோசனமில்லாமல் புகைந்துபோயிருக்கும். தொலையட்டும் பாவம் என்று அதனை அந்தப்பிச்சைக்காரனுக்கு கொடுக்கிறார்.

இதனைப்பார்த்த ஏனைய பயணிகள் இப்பொழுது பிச்சைக்காரனை விமர்சிப்பதை விட்டுவிட்டு ஒரு ரூபாய் பிச்சை இட்ட கதைசொல்லியை விமர்சிக்கிறார்கள். பஸ் கிளம்பிவிட்டது. ( இந்த வார்த்தையையும் கவனியுங்கள். கிளம்பிவிட்டது என்ற மொழிவழக்கு மலையகத்திலிருக்கிறது. எம்மில் பெரும்பாலானோர் புறப்பட்டுவிட்டது என்போம், வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வீட்டை விட்டு வெளிக்கிடும்பொழுது இறங்கிவிட்டோம் எனச்சொல்வார்கள். பல சொல் ஒரு பொருள் – கிளம்பியாச்சு- புறப்பட்டாயிற்று – வெளிக்கிட்டோம் – இறங்கிட்டோம்….இன்னும் இருக்கலாம்)

கதையில் மீண்டும் மற்றுமொரு கமிராக்கோணம்: இன்று தீபாவளி என்று அந்தக்காட்சி தொடங்குகிறது.

எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்:

கிழக்கு வெளுக்கும் முன்பதாகவே தோட்டம் வெளுத்துக்கொள்கிறது. லயங்கள் வெளிச்சம் காட்டுகின்றன. விடியுமுன்னர் குளித்துவிடவேண்டும் என்னும் வேகம் தலையில் தண்ணீரை அள்ளி ஊற்றிக்கொள்ளும் அவசரத்தில் தெரிகிறது என தெளிவத்தை எழுதுகிறார். மலையகத்தின் பனிக்குளிரை சில வாக்கியங்களிலேயே சித்திரித்துவிடுகிறார்.

ஒரு கதையின் காட்சியை பாத்திரங்கள் பேசும் உரையாடல்களின் மூலமாகவும் சித்திரிக்க முடியும். சம்பவக்கோர்வையினூடாகவும் சொல்ல முடியும். நீட்டி முழக்காத செப்பனிட்ட இறுக்கமான சொற்களிலும் படிமமாக காண்பிக்கமுடியும். தெளிவத்தையின் படிமக்கலை அவரது கைவந்த கலை.

தீபாவளி வந்தால் சின்னஞ்சிறுசுகளுக்கு மட்டுமல்ல லயத்தில் அலையும் நாய்களுக்கும் கொண்டாட்டம்தான் என்கிறார். அங்கே மனிதர்களையும் நாய்களையும் மட்டும் காட்சிப்படுத்தாமல் கடவுளையும் அழைத்துவிடுகிறார். கடவுள் இருக்கிறாரா? என நாத்திகம் பேசிய மறுகணமே இருக்கிறார். உயர்ந்த ஓட்டு வீட்டுக்கருகே ஓட்டைக்குடிலும் இருக்கத்தானே வேண்டும் என்பது கடவுளின் சித்தமாக்கும் என்று வேதாந்தம் சொல்லப்படுகிறது.

கதைசொல்லி தீபாவளிக்கு முதல் நாள் பஸ் நிலைய காட்சியையும் தீபாவளியன்று தோட்ட லயத்துக்காட்சிகளையும் மனதில் அசைபோடுகிறார். மறுநாள் மீண்டும் பஸ்நிலையம் வருகிறார்.

தீபாவளிக்கு முதல் நாள் கண்ட பிச்சைக்காரனைத்தேடுகிறார். அவனைக்காணவில்லை. பஸ் நிலைய ஹோட்டல் முதலாளி ஏற்கனவே நண்பர். பேசுவதற்கு பிடித்துக்கொள்கிறார். அவரும் முதல் நாள் ஒரு ரூபா கொடுத்து வடை கேட்ட அந்தப்பிச்சைக்காரனைப்பற்றித்தான் விமர்சனம் செய்கிறார். அங்கே தேநீர் தயாரிப்பவனும் கடுமையான வார்த்தைகளினால் அந்தப்பிச்சைக்காரனை திட்டுகிறான்.

பிச்சைக்காரனுக்கு எப்படி ஒரு ரூபா கிடைத்திருக்கும் என்பது ஹோட்டல் முதலாளியினதும் தேநீர் தயாரிக்கும் சர்வரினதும் சந்தேகம்.

ஆனால்,  அதனை தீபாவளிக்கு முதல் நாள் அந்த ஒரு ரூபாவை பிச்சையிட்ட கதைசொல்லி- உளுத்துப்போயிருக்கும் ஓட்டைக்குடிலுக்கு ஓடு போடப்போய் குடிலையே உடைத்துவிட்ட குற்ற உணர்வுடன் நடக்கிறார். பிச்சைக்காரனுக்கும் முதலாளிக்கும் தனக்கும் இடையே இருப்பது என்ன என்ற சுயவிசாரணையிலும் சுயவிமர்சனத்திலும் கதைசொல்லி ஈடுபடுகிறார்.

கட்டுரை தொடர்பான புகைப்படங்கள் :

லெ முருகபூபதி லெ முருகபூபதி லெ முருகபூபதி லெ முருகபூபதி லெ முருகபூபதி

தெளிவத்தையின் பார்வையில் மனிதர்கள் நல்லவர்கள்தான். ஆனால் காலமும் சூழலும் சந்தர்ப்பங்களும்தான் அவர்களை கெட்டவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. எத்தனை கோணம்? எத்தனை பார்வை? இந்த வாழ்க்கையில்தான் எத்தனை முடிச்சுகள்? இதனைத்தான் சில நேரங்களில் சில மனிதர்கள் எனச்சொல்கிறோமோ?

1972 இல் தெளிவத்தையுடன் எனக்குத் தொடங்கிய நட்புறவு இற்றைவரையில் நீடிக்கிறது. நான்கு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட இந்த உறவு எந்தவிக்கினமும் இல்லாமல் தொடருகிறது. இலக்கிய உலகில் இவ்வாறு நட்புறவு நீடிப்பது அபூர்வம். என்னுடன் மட்டுமல்ல  எவருடனும் தெளிவத்தை நட்பை ஆரோக்கியமாகப்பேணும் இயல்புகொண்டவர்.

இலங்கையில் எழுத்தாளர்கள், சிற்றிதழ் ஆசிரியர்கள், தேசிய ஊடகங்களின் ஆசிரியர்கள், கலை, இலக்கியவாதிகள், சமூகப்பணியாளர்கள் உட்பட அனைவராலும் நேசிக்கப்படும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு தற்போது 85 வயதும் கடந்துவிட்டது.

இன்றும் வாசிக்கிறார். எழுதுகிறார். இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசுகிறார். பஸ்களில்தான் பெரும்பாலும் பயணிக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் இருதயத்தில் பைபாஸ் சத்திர சிகிச்சையும் செய்துகொண்டார். எனினும் இளமைத்துடிப்புடன் இயங்கி, இளைய தலைமுறை எழுத்தாளர்களையும் ஊக்குவித்துவருகிறார்.

லெ முருகபூபதி- அவுஸ்திரேலியா

 547 total views,  1 views today

(Visited 176 times, 1 visits today)