கலை இலக்கிய செயற்பாடுகளும்–எதிர்கொள்ளும் சவால்களும்-கறுப்பி சுமதி

 கறுப்பி சுமதிகோண்டாவில் யாழ்ப்பாணத்தில் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவள் நான். எனது பெற்றோரின் வாசிப்புப் பழக்கத்தினால் எனக்கு சிறுவயதிலேயே ஜானகிராமன், ஜயகாந்தன், பெரியார் போன்றோரின் எழுத்துக்கள் பரிச்சயமானது. வாசிப்பில் அதிகம் ஆர்வமிருந்த போதிலும் நானும் எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஒரு போதும் எழுந்ததில்லை. 80களின் கடைசியில் புலம்பெயர்ந்து திருமணமாகி ஒரு குழந்தையுடன் கனடா வந்த பின்னர், பொழுது போக்கு அற்ற நிலையில் எனது வாழ்வில் நான் ஒரு பெண்ணாக எதிர்கொண்ட அவலங்களும் சவால்களும் ஒன்றாகச் சேர்ந்து என்னை எழுதத் துாண்டியது. நான் எனது வாழ்வில் எனது சொந்த அனுபவங்களை முதல் முதலாகச் சிறுகதைகளாக எழுதத் தொடங்கினேன். அச்சிறுகதைகளுக்கு கணிசமான வரவேற்பும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நான் அறிந்த, என்னைச் சுற்றியுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தேடி அறிந்து சிறுகதைகளாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எனது எழுத்துக்கள் இருப்பதனால் நான் ஒரு பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தப் பட்டேன்.

90களின் கடைசியில் ”அரங்காடல்” மேடைநிகழ்விற்காக ஜெயகரனின் எழுத்து இயக்கத்தில்  ”இன்னொன்று வெளி” எனும் நாடகத்தில் நடித்ததின் மூலம், ஒரு மேடை நாடக நடிகையுமானேன். தொடர்ந்த பல மேடை நாடகங்களை நடித்து வந்த எனக்கு, ரொறொன்டோவில் பெண்கள் நடிகர்களாக மட்டும் இயக்கப்படுகின்றார்கள் என்றொரு ஆதங்கம் எழுந்தது. நான் ஒரு சிறுகதை ஆசிரியராய், மேடை நாடக நடிகையாய் இருந்ததோடு எனக்கு நாடகங்களிலிருந்த ஆர்வம் ரொறொன்டோவில் மேடையேறும் பல ஆங்கில நாடகங்களை தேடிச்சென்று பார்த்து வந்த அனுபவமும் சேர்ந்து எனது முதல் மேடை நாடகப் பிரதியான ”அதன் வருகைக்காய்” எனும் நாடகப் பிரதியை எழுதத் துாண்டியது. ஆனால் அதனை மேடையேற்றுவதற்கு மேடை கிடைக்கவில்லை. அதன் காரணமாக 2006ம் ஆண்டு ”உயிர்ப்பு பெண்கள் பட்டறை” எனும் நாடகப் பட்டறை ஒன்றை ஆரம்பித்து பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முக்கியத்துவப்படுத்தும் நாடகங்களை மேடையேற்றி வருகின்றேன்.

ரொறொன்டோவில் இயங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றியதன் மூலம் கமெரா, எடிட்டிங் போன்றவற்றை சிறிதளவு என்னால் கற்க முடிந்தது, அப்போது எழுந்த ஆர்வத்தினால் எனது நண்பர் ரூபனுடன் இணைந்து எனது சிறுகதைகளை குறும்படமாக்கினேன்..

சிறுகதைகள், மேடை நாடகங்கள், குறும்படங்கள் என்ற தொடர்ச்சியில் ’நியோகா” எனும் முழு நீளத் திரைப்படத்தை எழுதி இயக்கியதன் மூலம் முதல் கனேடியத் தமிழ்  பெண் திரைப்பட இயக்குனர் என்ற பெருமையைக் கொண்டிருக்கின்றேன்.

ஒரு இயக்குனராக நான் எதிர்கொள்ளும் சவால்கள்

மிக முக்கியமானது பொருளாதாரம் :

ஒரு பெண் இயக்குனராக தயாரிப்பாளர்களைத் தேடி தமிழ் வர்த்தகர்களிடம் உதவியை நாடும் நிலையில் ஆண் இயக்குனருக்கு இருக்கும் வரவேற்பு பெண் இயக்குனரான எனக்கு இல்லை என்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது,

இதற்கான காரணங்களாக நான் பார்ப்பது,

  1. தமிழ் வர்த்தகர்கள் அதிகம் ஆண்களாக இருப்பது,
  2. பெண்களை விட ஆண்களால் எதையும் சிறப்பாகச் செய்து விட முடியும் என்ற முன்தீர்மானங்களுடன் அவர்கள் இயக்குவது. பெண் வர்த்தகர்களிடமும் இந்த மனோபாவம் உள்ளது.
  3. எனது படைப்பிற்காக நான் தேர்ந்தெடுக்கும் கருப்பொருட்கள். நீங்கள் ஆண்களைப் போட்டு அடிப்பீர்கள் அதற்கு நாம் பணம் தரவேண்டுமான என்ற அவர்களது சிந்தனை.

அதே நேரம் பெண் படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் அவர்களுக்கு ஆதவு கொடுக்க வேண்டும் என்று எண்ணும் ஒருசில வர்த்தகர்களும் உள்ளார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியாது. கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கும்  Art council களிடம் பெண்களுக்கான  பிரத்தேக சலுகைகள் இருக்கின்றன என்பது பற்றிய தெளிவு என்னிடமில்லை.

தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்ட போதும் இங்கும் பொருளாதாரம் முக்கிய பங்களிக்கின்றது. இதன் காரணமாக தமிழ் தொழில்நுட்ப வாதிகளை அணுக் வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப் படுகின்றோம். தொழில்நுட்பத்தில் போதிய பரிச்சயம் எனக்கு இல்லாத போதும், ஓரளவுக் கேனும் கமெரா, எடிட்டிங், லைட்டிங் பற்றிய அறிவு எனக்குள்ளது.

பெண் இயக்குனராக ஆண்களை வைத்து இயக்கும் போது (தொழில்நுட்பத்துறையில் பெண்கள் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்) ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, முன்தீர்மானங்களுடன் ஒரு பெண்ணிற்கு என்ன பெரிதாகத் தெரிந்திருக்கப் போகின்றது என்ற அலட்சிய மனப்பான்மையோடு பல தருணங்களில் நான் அணுகப்பட்டிருக்கின்றேன். தொழில்நுட்ப வார்த்தைகளை என்னால் சரளமாகப் பேச முடியாத காரணத்தினாலும், மீண்டும் இங்கே பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக இருப்பதாலும் நான் இப்படியான தருணங்களில் பின்வாங்கி மௌனமாகியிருக்கின்றேன்.

வயது – பல தருணங்களில் second – one and half generation உடன் வேலை செய்யும் போது, எனது வயதை வைத்து அவர்களும் முன்தீர்மானமாக இவருக்கு ஒன்றும் தெரிந்திருக்கப் போவதில்லை என்ற மனப்பான்மையுடன் அணுகுவதை பல தருணங்களில் அவதானித்திருக்கின்றேன். எப்போதும் எதையாவது எனக்கு கற்றுத்தர முனைந்து கொண்டிருப்பார்கள். நான் இயக்கும் நாடகப்பட்டறையில் அவர்களுக்கு நான் இடம் கொடுத்திருப்பேன், எனது திரைப்படத்தில் அவர்கள் வேலை செய்வார்கள் ஆனால் எமக்கிடையிலான வயது வித்தியாசம் நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் காணும் தமது அம்மா, அன்ரி போன்றவர்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டு இவர் இப்படித்தான் இருப்பார் இவருக்கு இவ்வளவுதான் தெரிந்திருக்கும் என்பதாய் அவர்கள் என்னுடன் உரையாடுவார்கள். கனேடிய நீரோட்டத்தில் தமக்கிருக்கும் அதிக பட்ச உறவையும் மொழிப் புலமையையும் தமது அறிவின் வளர்ச்சியாக இவர்கள் கணிக்கின்றார்கள். இந்துத் துவத்தின்அடையாளமான நுாலைக் கையில் கட்டியிருப்பார்கள், திருமணம் என்று வரும் போது சாதி பார்ப்பார்கள், மணவறை வைத்து தாலி கட்டித் திருமணமும் செய்வார்கள், கேட்டால் அம்மா அப்பாவின் சந்தோஷத்திற்காக என்று பதில் வரும். ரொரொன்டோவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றிருப்பதாலும், ஆங்கிலத்தை சரளமாகப் பேச முடிவதாலும், வெள்ளையர்கள் போல் உடை உடுக்கத் தெரிவதாலும் தம்மை முற்போக்குவாதிகள் விழிம்பு நிலை மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களையும் ஒரு புன்னகையோடு நான் கடந்து போய்க்கொண்டிருக்கின்றேன்.

தலைமைத்துவம்-Leadership :

என் தனிப்பட்ட அனுபவத்தில் நான் கண்டு கொண்டது, எவ்வளவு பெண்ணியம், முற்போக்கு, பேசினாலும் Leadership என்று வரும் போது பல பெண்களுக்கு ego பிரச்சனை வந்து விடுகின்றது. பெண்களால் இன்னும் பெண் தலமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை எனது நாடகத்துறையில் நான் பெரிதும் உணர்ந்திருக்கின்றேன். எனக்குச் சிலவேளைகளில் சந்தேகம் வருவதுண்டு பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமையான இருப்பதைத்தான் விரும்புகின்றார்களோ என்று, ஆண்கள் உறுக்கி, வெருட்டி வேலைவாங்கும் போது வாய் பொத்தி ஓடித்திரிவதைத்தான் அவர்கள் மனதளவில் விரும்புகின்றார்கள். இந்த இடத்தில் அண்மையில் வெளியான இரு தமிழ் திரைப்படங்கள் பற்றிக் குறிப்பிடலாம் இயக்குனர் மணிரத்தினத்தின் ”காற்றுவெளியிடை” இயக்குனர் ராம் இன் ”தரமணி” இந்த இரு திரைப்படங்களின் நாயகிகளும் தமக்கான முழு சுதந்திரத்தையும் அறிந்தவர்களாகவும், எவரையும் சார்ந்திருக்க விரும்பாத தனித்தன்மை கொண்டவர்களாகவும் தொடக்கத்தில் காட்சி படுத்தப்படுகின்றார்கள், ஆனால் காதலன் மிகவும் வன்முறையாளன் என்று அறிந்த போது அதிக பட்ட வன்முறையை, அவமானங்களைச் சந்தித்த பின்னர் உறவை முறித்துக்கொண்டு விட்டு காதலன் தான் மாறிவிட்டதாய் மூக்கைச் சிந்திக்கொண்டு வந்து நின்ற போது காதலன் மேல் கொண்டிருக்கும் உண்மைக் காதலால் மீண்டும் இணைந்து கொள்கின்றார்கள். இயக்குனர் மணிரத்னமும், ராமும் இப் பெண் நாயகிகளை எப்படி உருவாக்கிறார்கள்? பெண்நிலைவாதம் என்பது படைப்புகளில் மட்டும் இருந்தால் போதாது வாழ்தல் வேண்டும் என்று நம்புபவள் நாள்.

ஒரு பெண்ணியவாதியாக, ஒரு பெண் இயக்குனராக நான் எந்த ஒரு நிலையிலும் எந்தக் காரணத்திற்காகவும் எனது படைப்பில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன். அது என்னை அழித்தால் கூட.

பிற்குறிப்பு :

2017 செப்டெம்பர் கனடா யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழியல் மகாநாட்டில் வாசிக்கப்பட்டது.

 கறுப்பி சுமதி- கனடா

கறுப்பி சுமதி

 321 total views,  1 views today

(Visited 111 times, 1 visits today)
 

2 thoughts on “கலை இலக்கிய செயற்பாடுகளும்–எதிர்கொள்ளும் சவால்களும்-கறுப்பி சுமதி”

Comments are closed.