அண்ணி-சிறுகதை-கறுப்பி சுமதி

கறுப்பி சுமதிசெந்தணலாய் பரவிக்கிடக்கும் மேப்பிள் இலைகளைக் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் கவிதா. நாகபூசனி அம்மன் கோவிலில் தலையில் குடத்துடன் நடந்து கடந்த செந்தணல்தான் இதுவோ?

“பின் கதவு பூட்டிக்கிடக்கே ?”

யாரைக் கேட்கிறாளென்று தெரியவில்லை, குசினிக்குள்ளிருந்து அனுவின் குரல் ஒலித்தது.

கவிதா அசையவில்லை.

“அண்ணி, வாங்கோ சாப்பிட.” கவிதாவின் கையைப் பிடித்துவந்து சோபாவிலிருத்திய அனு, சோற்றைச் சிறு குழையலாக உருட்டி அவள் வாயினுள் ஊட்டிவிட்டாள்.

“ஜோசுவா………..” என்றாள்  கவிதா.

“அவனுக்கு காய்ச்சலெண்டு டோனா டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போயிட்டா, வரட்டும் போய்ப் பாப்பம் அண்ணி.”

“ஜோசுவாக்குச் சாப்பாடு ?” வீணீர் வடியும் வாயோடு சுவரில் சாய்ந்திருக்கும் ஜோசுவா, அவளையே பார்த்துக் கொண்டிருப்பது போலொரு பிரமை.

அனுவிற்கு கண்கள் கலங்கின, அண்ணியை long term care center இல் சேர்க்க வேணுடுமென்று  கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டது வீடு. எப்படி முடியும்? அவரையும், பிள்ளைகளையும் எதிர்த்து அவளால் எத்தனை நாட்கள்தான் போரட முடியும்?

திடீரென்று சாப்பாட்டைத் தட்டிவிட்டாள் கவிதா. அது சுழன்று சென்று வளர்ந்து நின்ற அந்துாரியத்தை முறித்துக்கொண்டு விழுந்தது.

“அண்ணீ……” கோவத்தின் எல்லையில் அனுவின் குரல் எழும்பி, பின்னர் அடங்கியது.

அண்ணி மேல் அவளுக்கு கோவம் வருவதேயில்லை. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் கோவம், வெறுப்பு ஏதாவதொன்று வந்தேயாக வேண்டும் ஆனால் வருவதில்லை.

“அண்ணி நான் என்ன செய்யப்போறன் ?” கவிதாவை அணைத்துக் கொண்டாள் அனு.

00000000000000000000000000000000000000

“ச்சீ போ கிட்ட வராதை.”

வீணீரைப் புறங்கையால் துடைத்தபடியே விலகிச் சென்று நிலத்தில் இருந்த ஆதவன், விரட்டிய அண்ணியைப் பயத்துடன் பார்த்தான். அவன் பருத்த உடல் அதிர்ந்து அடங்க, தலை ஆடியபடியிருந்தது.

“பிள்ளை இதை அவனுக்குத் தீத்திவிடு நான் சங்கக்கடைக்குப் போட்டுவறான், அரிசி வந்திருக்காம்”.

மாமி பறந்தது போல் மறைந்துவிட்டாள்.  சங்கக்கடைக்குச் சாமான்கள் வந்தால், முதல் அறிவித்தல் வரும் பட்டியலில் மாமியின் பெயரும் இருந்தது. ரமணன் அதற்கான ஏற்பாட்டைப் பணம் கொடுத்துச் செய்திருந்தான்.

தலையை நிமிர்த்தாமலே ஆதவனின் கண்கள் அண்ணிமேல் பதிந்தது. மீன் பொரியலின் மணம் வீணீரை இரட்டிப்பாக்கியது. கவிதா திரும்பி ஆதவனைப் பார்த்தாள், குமட்டிகொண்டு வந்தது. கால்நீட்டி வாசல்படியில் அவளையே முறைத்துக் கொண்டிருந்த ஜிம்மியின் முன்னால் சாப்பாட்டைக் கொட்டிவிட்டுத் தொலைக்காட்சி முன்னர் இருந்து கொண்டாள் அவள்.

“வாடி, வந்து சாப்பிடுவாடி.” மிஞ்சிக்கிடந்த சாப்பாட்டைக் குழைத்து அனுவுக்கு தீத்திவிட்ட போது ஆதவனின் முனகல் தொலைக்காட்சியில் பெருத்த ஒலியில் கரைந்து போனது. பருத்த வயிற்றோடு ஜிம்மி புழுதியில் புரண்டு விளையாடியது.

திருமணம் என்பதை ஒரு நைலெஸ் சீலை, இரண்டு பிங்கோ செருப்புகள், மூன்று தமிழ்ப் படங்கள் என்பதோடு சுருக்கிக்கொண்டுவிட்டான் ரமணன். இப்போதெல்லாம் பரிசுப் பொருட்கள் இல்லாமலே எப்போதாவதுதான் வந்து போகின்றான். படுக்கையிலும் அவளின் வேகம் அவனுக்கில்லை. ரமணனின் நெஞ்சு மயிரைக் கையால் அளைந்தபடியே ஒருநாளிரவு,

“நானும் உங்களோட கொழும்புக்கு வாறன்” குழைந்தாள் கவிதா.

அவள் கையை விலக்கி நகர்ந்து படுத்த ரமணன்

“என்ன விளையாடுறீரே, நினைச்சே பாக்கேலாது, தமிழ்ப் பொம்பிளைகள் இனி அந்தப்பக்கம் வரெவே ஏலாது”

கவிதாவின் அறியாமை ரமணனுக்கு கைகொடுத்ததைப் போல், ரமணனின் அலட்சியம், கவிதாவிற்கு வெஞ்சினத்தைக் கொடுத்தது.

கையின் நெருப்புக் காயத்தை ஊதியூதி அழுதான் ஆதவன்.

“நெருப்புக்கு கிட்டப் போகாதையெண்டு எத்தின தரம் சொன்னனான்.”

அம்மாவின் கத்தலை விட அண்ணியைப் பார்க்க அவனுக்கு நெஞ்சு நடுங்கியது. கவிதா தேங்காய் எண்ணெய்க்குள் மஞ்சள் துாளைக் கிளறிக் கொண்டுவந்து மாமியின் பக்கத்தில் வைத்துவிட்டு, நமட்டுச் சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தாள்.

தன் கால் காயத்தைத் நக்கிய ஜிம்மி கவிதாவைக் கண்டதும் நொண்டியபடியே அங்கிருந்து ஓடியது.

தண்ணீர் நிறைந்த தொட்டியில் குறுக்குக் கட்டோடு குளிக்கப் போன கவிதாவின் பின்னால் ஆதவனையும் இழுத்துக் கொண்டு

“பிள்ளை ஒரு கை குடம்மா, இவனைக் குளிப்பாட்டுறதெண்டால் மாட்டைக் குளிப்பாட்டுற மாதிரி” வந்து நின்றாள் மாமி.

இறுகிய உட்காற்சட்டையோடு ஆண்குறி புடைக்க நின்ற ஆதவனைப் பார்த்துத் திடுக்கிட்ட கவிதா, துவாயால் தன் மேலுடம்பை போர்த்திக் கொண்டு, கிண்ணத்தையெடுத்து தண்ணீரை அள்ளி, அள்ளி ஆதவன் மேல் ஊற்றினாள். வாயைக்  கோணி ஆவென்று அலறினான் அவன். ஒரு முழுமையான ஆணாக அன்று அவன் கவிதாவிற்குத் தோன்றினான்.

83ஆம் ஆண்டுக்கலவரத்தின் பின்னர் கொழும்பிலிருந்து ஊருக்குத் திரும்பிய பலர், வந்த வேகத்தில் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து போய்விட்டார்கள். அப்படி ஒருவரின் காணி கேட்பாரற்று காடுபத்தி வீட்டின் பின்னால் கிடந்தது. வேலியோரக் கிளுவை மரங்கள் செழித்து அடர்ந்து கிடந்தன. புல்லுக்கும் பஞ்சமில்லை.  கொக்கத்தடியும், உழவாரமுமாக ஆட்டுக்கு புல்லும், குழையும் எடுத்துவரவென்று கவிதா அங்கே போகத் தொடங்கினாள். தனக்குத் துணைக்காக ஆதவனையும், ஜிம்மியையும் இணைத்துக் கொண்டாள். அப்பா இருந்த காலத்தில் ஆதவனை அவர் வெளியில் நடப்பதற்கு கூட்டிக்கொண்டு போவது வழக்கம்.  நடைக்குப் போயிருந்த ஒருநாள், இலங்கை இராணுவம் அடித்த செல் தாக்குதல் ஒன்றில் தலை பிளந்து கணவன் இறக்க ஆதவன் சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டான். அவருக்குப் பதில் ஆதவன் போயிருக்கலாமென்று ஊரே ஆதங்கப்பட்டது.

ஆதவனின் கள்ளச்சிரிப்பை அறியாத அம்மா

“அம்மாளாச்சி நீ கண் திறந்திட்டாய், நானில்லாக் காலத்தில அவனைப் பாத்துக்கொள்ள நல்ல ஒரு அம்மாவை அனுப்பி வைச்சிருக்கிறாய்” என்று நாகபூசணி அம்மாளுக்கு விரதமிருந்தாள் அம்மா.

“அண்ணி ராஜாத் தியேட்டரில கமலின்ர படம் வந்திருக்குப் போவமா ?”

“அண்ணி உங்களுக்கு பொன்ஸ் பௌடரும், ஒட்டுப் பொட்டும் வாங்கிக்கொண்டு வந்தனான்.”

அனுவும், கவிதாவும் நல்ல நண்பிகளாக ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். ரமணனைப் பற்றிய நினைவுகள் கவிதாவின் மனதிலிருந்து விடுபடத்தொடங்கிவிட்ட காலமது.

அடிக்கடி பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று தெரிவித்து ஊருக்கு வருவதை மூன்று, நான்கு மாதங்களுற்கு ஒருமுறையென்று மாற்றியிருந்தான் ரமணன். கவிதா கடும் சாமி பக்தையாகி மாறி, அவன் வந்து நிற்கும் சிலநாட்களும் விரதம் என்று அவனிலிருந்து விலத்தியிருந்தாள். அவன் அருகில் வந்தால் அவளுக்கு சாமி வந்துவிடும், இந்தச் சாமி வேடம், பின்னர் தீ மிதிப்பதென்று தீவிரம் கொண்டது. கிழமையில் இரண்டு, மூன்று தடவைகள் ஆதவனையும், ஜிம்மியையும் அழைத்துக்கொண்டு ஆட்டுக்கு குழையொடிக்கச் செல்வது, பின்னர் சாமியாடுவது, நேரம் கிடைக்கும் போது அனுவோடு ரவுணுக்குச் செல்வது கவிதா நிறைவாகத்தானிருந்தாள்.

கொழும்பு மத்திய பேருந்துநிலையத்தின் மேல் விடுதலைப் புலிகளின்  மேற்கொண்ட வெடிகுண்டுத்தாக்குதல், மீண்டும் கொழும்பு வாழ் தமிழரிடையே பதட்டத்தை எற்படுத்திய போது திடீரென்று ஒருநாள் தனது உடமைகளோடு நிரந்தரமாக ரமணன் ஊருக்கே வந்துவிட்டான். வந்ததிலிருந்து அவன் ஒருவருடனும் அதிகம் கதைக்காமல் ஒதுங்கியேயிருந்தான். மகனுக்கு எதுவோ நடந்து விட்டது என்று மாமியும், அவன் தனிமையை விரும்புகின்றான் என்று கவிதாவும் அவனிடமிருந்து விலகியிருந்தார்கள். ஊடரங்குச் சட்டங்களால் அனுவின் கல்வியும் இழுபடத் தொடங்கியது. தாக்குதல்கள், மரணங்கள் அவலங்கள் என்பது மட்டும் செய்தியாக உலவிக்கொண்டிருந்தது. வாழ்வின் நிரந்தரமற்ற தன்மை வீட்டை உலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில்தான் இந்திய இராணுவத்தின் இலங்கை வருகை, நம்பிக்கைக்குப் பதிலாக, அவநம்பிக்கையாக மாறிப்போயிருந்தது.

இந்திய இராணுவம் அப்பாவி மக்கள் மேல் தாக்குதல்களை மேற்கொள்கின்றது என்ற செய்தி  ஊரெல்லாம் தீயாகப்பரவத் தொடங்கியது. ரமணன் தற்போது நண்பர்களைச் சந்திக்கவென்றும், வாசகசாலைக்கு  என்றும் வெளியில் போகத் தொடங்கியிருந்தான். வங்கியில் கணிசமான தொகை கையிருப்பு இருந்ததால் பணப்பிரச்சனையில்லை, இருந்தும் சாப்பாட்டுப் பொருட்களின் தட்டுப்பாடு எத்தனை நாட்களுக்குத் தாங்குமோ என்று ஊரே நடுங்கத் தொடங்கிவிட்டது. ரமணன் ஒருவரையும் வெளியில் போக அனுமதிக்காமல் முடிந்தவரை தேவையான பொருட்களைத் தேடி வாங்கிவரத் தொடங்கினான். கவிதாவிடமும் மனம் விட்டுக் கதைக்கத் தொடங்கியிருந்தான். ஆதவன் மௌனமாக முனகிகொண்டிருந்தான். அவனைக் கொண்டிழுக்க முடியாமல் மாமி போராடிக்கொண்டிருந்தாள்.

ஊரிலிருந்து மக்கள் முடிந்தவரை பொருட்களைக் கட்டிகொண்டு ஊரைவிட்டு நகரத்தொடங்கினார்கள். பணம் படைத்தவர்கள் ஏஜென்ஸிக்குப் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குப் போகத் தொடங்கினார்கள். ரமணனை வெளிநாட்டிற்குப் போக முடியுமா என்று  கவிதா கேட்டதற்குத் தான் கொழும்பு போக முடியாது என்ற மறுத்துவிட்டான் அவன். அதன் பின்னர் அவன் கூறியதைக் கேட்டு கவிதா இடிந்து போய் அப்படியே அசையாது இருந்துவிட்டாள்.

“இனி இஞ்ச இருக்கிறது பாதுகாப்பில்லை, இன்னும் ரெண்டு கிழமையில நாங்கள் இந்தியாக்கு போர்ட்டில போக நான் நாலு பேருக்கு காசு கட்டீற்றன், அதுக்கு முதல் இஞ்சயிருந்து வெளிக்கிட்டு வேற ஒரு இடத்தில போய்த் தங்க வேணும், முக்கியமான கொஞ்ச சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு போனால் காணும்.”

“நாலு பேருக்கெண்டால், ஆராரைச் சொல்லுறீங்கள் ?”

“எனக்குத் தெரிஞ்சாள்தான் போர்ட்காறன், அவன் தம்பியைக் கூட்டிக்கொண்டு போகேலாது எண்டிட்டான்.”

“அப்ப அவனை யாரிட்ட விட்டிட்டுப் போறது, எல்லாச் சனமும் வெளியேறுது.”

“அவனுக்கு ஒண்டும் விளங்காது விட்டிட்டுப் போவம்.”

பேச்சை முடித்துவிட்டு ரமணன் வெளியேறிவிட்டான்.

வீடு மௌனமானது. எல்லாம் முடிவாகிவிட்டது. மாமி அதிர்ந்து போய் அசையாதிருந்தாள். ஆதவனுக்கு ஏதாவது விளங்கியதா என்று தெரியவில்லை, மூலையிலேயே முடங்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டான். தினம், தினம் கோவிலுக்குப் போகத் தொடங்கிவிட்டாள் கவிதா. இரண்டு முறை அவளுக்குச் சாமியும் வந்துவிட்டது. ரமணன் எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் மும்மரமாகவிருந்தான். ஊரைவிட்டுக் கிளம்ப இன்னும் நான்கு நட்களேயிருந்தன. ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. கோயில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டுத் தானும் இரண்டு நாட்களில் வன்னிக்குப் போக உள்ளதாகச் சொன்னார்.

அன்று வெள்ளிக்கிழமை கவிதா கடுமையான விரதமிருந்தாள். இரண்டு நாட்களாக அவள் ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் சாமி அறையிலேயே அடைந்து கிடந்தாள். திடீரென அவளுக்கு சாமி வந்தது. குரலெழுப்பிக் கத்தி விபூதியை எடுத்து வீடெங்கும் துாவி குதித்தாடினாள். ரமணன் வீட்டிலில்லை, அனுவும், மாமியும் கை கூப்பி இந்த ஆட்டத்தை நம்புவதா வேண்டாமா என்று தயங்கியபடியிருந்தார்கள். சாமி ஆடிக் கத்திய கவிதா, ஆதவனை கோவிலில் கொண்டுவந்து விடுமாறு நாகபூசணியம்மா அழைப்பதாகக் கூறினாள். மாமி ஒன்றும் சொல்லவில்லை.

ஆதவனைக் குளிப்பாட்டி வேட்டி கட்டி கவிதா கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போனாள். அம்மாவும், அனுவும், ஜிம்மியும் கூடவே போனார்கள். கவிதாவின் கோலத்தைக் கண்ட பூசாரி பூட்டைத் திறந்து அவர்களைக் கோவிலுக்கு உள்ளே விட்டார். இருள் வர கோவிலைப் பூட்ட வேண்டும் என்று பூசாரி கேட்டும் கவிதா அசையவில்லை. வாயில் எதையோ முணுமுணுத்தபடியே கண்களை அவள் மூடியிருந்தாள். ஆதவன் சோர்ந்து அவள் அருகிலேயே நித்திரையாகிப் போய்விட்டான். பார்த்துப் பார்த்து இருந்துவிட்டு அவர்களை அப்படியே விட்டுவிட்டு பூசாரி போய்விட்டார். துப்பாக்கிச் சூடும், குண்டுச் சத்தமும் தவிர வேறொரு சத்தத்தையும் அந்த ஊரில் அப்போது இல்லை.

இருந்திருந்து பார்த்துவிட்டு அனுவும், அம்மாவும் வீட்டிற்குப் போய்விட்டார்கள். விடிந்த போது கவிதா மட்டும் வீட்டிற்கு வந்தாள். யாரும் எதுவும் கேட்கவில்லை. அடுத்தநாட் மதியம் போல் பூசாரி அவசர அவசரமாக ஓடி வந்தார்.  கால் நீட்டி அமைதியாகப் படுத்திருந்த ஆதவன் இறைவனிடம் போய்ச் சேர்ந்து விட்டான் என்று அவர் தெரிவித்தார். கோயிலுக்கு எல்லோரும் ஓடினார்கள். கவிதா போகவில்லை. என்றும் காணாத சாந்தமான முகத்தோடு வெள்ளை வேட்டியுடன் அமைதியாக ஆதவனின் உடல் கிடந்தது.

00000000000000000000000000000000000000

காலம் ஓடத்தில் கனடாவில் அகதிகளாகக் கால்பதித்துவிட்டது அந்தக் குடும்பம். அம்மா இந்தியாவிலேயே இறந்துவிட்டாள். அனு கனடாவில் திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்குத் தயாகிவிட்டாள். ஆதவன் மறைவிற்குப் பின்பு அண்ணி ஒருவரிடமும் கதைப்பதில்லை. கனடாவிலும் கோயில், கோயில் என்று ஓடத் தொடங்கினாள். ரமணன் குடிக்கு அடிமையாகி ஈரல் அழுகி இறந்து போனான். அனு, அண்ணியைத் தன்னோடு அழைத்துவந்துவிட்டாள்.

பக்கத்து வீட்டிலிருந்து ஜோசுவாவின் குரல் அலறியது. கதவு அடித்துச் சாத்தும் சத்தம். அனு கதவைத் திறந்து வெளியில் எட்டிப் பார்த்தாள். டோனா நடுங்கும் கையோடு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டிருந்தாள்.

“what happened?”

“I am really tried Anu” டோனாவின் குரல் நடுங்கியது.

அனு மௌனமாக நின்றாள். கவிதா தன்னையும் வெளியில் விடும்படி கதவைத் தட்டினாள். அனு கதவைத் திறக்க விடுவிடுவென்ற வெளியில் வந்த கவிதா

“ஜோசுவா, ஜோசுவா” என்று கத்தினாள்.

“உஸ் அண்ணி சும்மா இருங்கோ” அனு அதட்டினாள்.

” it’s okay” டோனா கதவைத் திறக்க வெளியே ஜோசுவா ஓடிவந்து, அனுவின் பின்முற்றத்துக்குள் புகுந்து கவிதாவைக் கட்டிக்கொண்டான். அனுவிற்கு கண் கலங்கியது.

கவிதா தமிழில் அவனோடு கதைக்க, ஜோசுவா அவளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்துக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து வீணீர் வந்துகொண்டிருந்தது. திடீரென்று ஒருவரும் எதிர்பார்க்காத நேரம் ஜோசுவா கவிதாவின் கன்னத்தில் ஓங்கி அறைய அவள் தடுமாறி நிலத்தில் விழுந்தாள்.

“oh my god, I am so sorry, he is getting extremely aggressive now.” சொன்னபடியே ஜோசுவாவை இழுத்துக்கொண்டு உள்ளே போனாள் டோனா. அவன் அலறினான். கவிதா நிலத்திலிருந்தபடியே முன்னும், பின்னும் ஆடிக்கொண்டிருந்தாள். அனு அவளின் கையைப் பிடித்து எழுப்ப முயல அவள் அடம்பிடித்து நிலத்திலேயே இருந்தாள்.

ஜோசுவாவை வீட்டில் வைத்துப் பார்ப்பது சிரமமாயுள்ளதால், அவனை “home” இற்கு அனுப்ப உள்ளதாக டோனா சொன்னதிலிருந்து கண்ணாடிக் கதவோடு ஒட்டிக்கொள்ளத் தொடங்கியிருந்தாள் கவிதா. ஒருநாளாவது ஜோசுவாவின் முகத்தை பார்க்காவிட்டால் சாப்பிட மறுத்தாள்.

ஜோசுவா அலறும் சத்தம். இது வழமைதான் என அனு தனது வேலையிலிருந்தாள். கவிதாவும் வழமை போல் கதவில் முகத்தை வைத்து தட்டியபடியே ஜோசுவாவின் தரிசனத்திற்காகக் காத்திருந்தாள். ஆனால் கிடைக்கவில்லை. அடுத்தநாட்காலை ஜோசுவா நித்திரையில் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.

“நான் ஜோசுவாவைக் கொண்டிட்டன், நான் ஜோசுவாவைக் கொண்டிட்டன்”

அறைக்குள் அடைந்து கிடந்த அண்ணியில் குரல் வீட்டை நடுநடுங்க வைத்தது. இடையிடையே ஆதவனை நினைத்துப் புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்ட அனு வீடு விரும்பியது போல் அண்ணியை அனுப்பி வைக்க சம்மதித்தாள்.

கறுப்பி சுமதி – கனடா

கறுப்பி சுமதி

 

 

(Visited 241 times, 1 visits today)
 

2 thoughts on “அண்ணி-சிறுகதை-கறுப்பி சுமதி”

Comments are closed.