து(தூ)க்கம்-சிறுகதை-வடகோவை வரதராஜன்

வடகோவை வரதராஜன்சுவர் மணிக்கூடு அடிக்கத் தொடங்கியது.

ஒண்டு, ரெண்டு…. பன்னிரெண்டு! அடகடவுளே பன்னிரண்டு மணியாய்விட்டதா! இனித் தூக்கம் வந்தமாதிரித்தான்! நல்ல காலம்; பன்னிரண்டு மணி அடிக்கும்போதே ஒழுங்கா எண்ணியாய்விட்டுது. இதைத் தவற விட்டிருந்தால் அடுத்து அடிப்பது பன்னிரண்டரையா; ஒண்டா, ஒண்டரையா; என தலையைப் பிய்த்துக்கொள்வதிலேயே வந்த தூக்கம் பறந்திருக்கும்.

இப்படி எத்தின நேரம் அன்னாந்து பார்த்து முகம் தெரியாத இருளை வெறித்துக் கொண்டிருக்க முடியும்? சே… இந்தத் தூக்கத்திற்கு இவ்வளவு பாடுபடவேண்டியுள்ளதே! பள்ளியில் மட்டும், மதிய இடைவேளைக்கு அடுத்த பாடநேரத்திற்குச் சொல்லாமல் கொள்ளாமல் வந்து தூக்கி அடிக்கிற தூக்கம்; இப்ப மட்டும் இவ்வளவு எழுப்பப் பிரியம் விடுகிறது.

அதுவும் பௌதிக விரிவுரையாயின், தூக்கத்தை விரிவுரையாளர் பொட்டனி கட்டிக்கொண்டுவந்து வகுப்பில் அவிழ்த்துவிட்டாற்போல் இருக்கும். விரிவுரையாளர் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்க, இங்கு தூக்கம் தலையை ஒரு தள்ளுத் தள்ளி முன்னால் விழுத்தும். தலை விழுந்த உந்துதலில் ஓர் கணப்பொழுதில் தூக்கம் களைய நிமிர்ந்து உட்கார்ந்தால் மீண்டும் கண்களை இருக்கமாகக் கௌவ ஆரம்பிக்கும். எவ்வளவுதான் முயன்றும் கண்களை மூடவே கூடாது என்று பிடிவாதம் பிடித்தாலும், தூக்கம் கண்களில் சொருகியே தீரும்.

இருந்தாற்போல் ‘கொல்’ என்ற சிரிப்பொலியால் திடுக்குற்று விழித்தால், மாணவ மாணவியர் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். ஆசிரியரின் கோபத்தை அவரை அறியாமலே சிரிப்பு மீறி நிற்கும்.

உடல் வியர்வையால் தெப்பமாக நனைந்திருக்க, பிடரியைச் சொறிந்தபடி கதிரையில் நிமிர்ந்து உட்கார்ந்தால் திரும்பவும் சிரிப்பு வெடித்துக் கிளம்பும். மாணவர்களின் குறிப்பாக எதிர்பார்ப்பாளரான மாணவிகளின் சிரிப்புக்கு இடமாகிவிட்டோமே என்ற ரோச உணர்ச்சியால் அன்றைய தூக்கம் பறந்தோடும். அடுத்தநாள் மதிய இடைவேளையின் பின் பௌதிக பாடமாயின் தொடர்கதை தொடரும்.

பள்ளியில் திருட்டுத்தனமாகத் தூங்கிவிழும் இந்த கோழித் தூக்கத்தின்போது, ஏன் இவ்வளவு தூரம் புழுங்கி அவிந்து வியர்த்துக் கொட்டுகிறது? இதைப் பற்றி விலங்கியல் விரிவுரையாளரிடம் கேட்க வேண்டும் என்றிருந்தும் இன்றுவரை கேட்கவில்லை.

அப்போதைகளில் ஆளையே தூக்கியடிக்கிற தூக்கம் இப்போது மட்டும் வலிந்தணைத்தாலும் ஏன் வர மறுக்கிறது? போதாக்குறைக்கு இந்த ‘கராஜ்’ காரன் வேறு டொங், டொங் என்று தட்டித் தொலைக்கிறானே பாவி. ஆந்தை, வெளவால், பாம்பு, பூனை போன்று இவனொரு இராக்காலத்துக்குரிய விலங்கு.

சூரிய ஒளி இவனுக்கு ஒவ்வாதாம். பகல் முழுக்க குடித்துவிட்டு கும்பகர்ண கொர்…கொர்… மாலையில்தான் அவனுக்குப் பொழுதே விடியும். அப்போதுதான் வேலையைத் துவங்குவான். இரவு முழுக்க பிசாசு போன்று வேலை செய்துகொண்டே இருப்பான். இத்தனைக்கும் திறமையான ‘மெக்கானிக்’.

சே… எல்லாம் இந்த பகல் தூக்கத்தால் வந்த வினை. பகலில் ஒருமணித்தியாலம் தூங்கினால் இரவில் வட்டியும் குட்டியுமாகச் சேர்ந்து வழமையான தூங்கும் நேரத்திலிருந்து இரண்டு மணித்தியாலம் கழித்தே தூக்கம் வருகிறது.

இன்று சனிக்கிழமை. தப்பு… தப்பு… இரவு மணி பன்னிரண்டு அடித்துவிட்டதே! அப்போ, இப்பொழுது ஞாயிறு பிறந்து சில நிமிடங்கள் கழிந்திருக்கும்… ச்சா… ஒரு புதிய நாள் பிறக்கின்றபோது விழித்திருப்பது ஒரு புதிய அனுபவம்தான். ஆனால் அந்தப் புதிய அனுபவத்தை உற்சாகமான அனுபவமாய் ஏற்றுக்கொள்ளும் மன நிலை இப்போதில்லை. எல்லாம் இந்த தூக்கம் இன்மையால் வந்த வினை.

நேற்றுச் சனிக்கிழமை. அதாவது இப்போது தூக்கம் வராமல் உழலுகின்ற இந்த இரவிற்கு முந்திய பகற்காலம். சனிக்கிழமை வீட்டில் ஓய்வாக நிற்கும் நாள். தலை, உடம்பு, உள்ளங்கால் எல்லாம் நல்லெண்ணெய் பூசி, அதை சூடுபறக்க உடம்பெல்லாம் தேய்த்து, எண்ணெய் உடம்பில் சுவருமாறு நன்கு ஊறவிட்டு, பின் அரப்பெலுமிச்சங்காய் வைத்துத் தேய்த்து, மயிர்க்கால் மண்டையோடு எல்லாம் நோவெடுக்கும்படியாக பரபரவெனத் தேய்த்து, மோட்டரால் தண்ணீர் நிரப்பிய தொட்டிக்குள் விழுந்து நீச்சலடித்து, உள்ளங்கை தோல்கள் எல்லாம் நீலம் பாரித்து சுருங்கும் அளவு நேரத்திற்கு நீச்சல் அடித்து… மொத்தத்தில் திறமான முளுக்குத்தான்.

முளுக்குக்குப் பின் வயிற்றில் உள்ள வாயு களைய என்று அம்மா சுட்டு வைத்த உள்ளிகளை ஒவ்வொன்றாய் உடைத்துத் தின்று, உள்ளி தின்றதால் வாயு கலைந்து பசி வயிற்றில் அனலாகக் கிளம்ப, வாழையிலையின் முன் சப்பணம் கட்டி உட்கார்ந்து, வெங்காயப் பொறியல், பாவற்காய் பிரட்டல், சுட்ட கத்திரிக்காய் சம்பல் என்பவற்றுடன் சோற்றை ஒரு வெட்டு வெட்டி, வயிற்றை இறுக்கிய சாரத்தைத் தளர்த்திவிட்டு, மேலும் வயிறு புடைக்க உண்டு, சாப்பிட்ட இடத்திலிருந்து எழும்ப முடியாமல் திக்குமுக்குப்பட்டு ஒருவாறாக எழும்பி, உப்பிப் புடைத்த வயிற்றை முன்னேவிட்டு, உடலைப் பின்னே சாய்த்து அவிழ்த்துவிட்ட சாரத்தை ஒரு கையாலும், எச்சில் இலையை மறுகையாலும் பிடித்துக்கொண்டு நடந்து சென்று, பின் கோடியில் இலையை எறிந்துவிட்டு, வயிற்றின் காலியான மிகுதியடத்தையும் மடமட என தண்ணீரைக் குடித்து நிரப்ப, உப்பித்தள்ளும் வயிற்றுப் பகுதியில் சாரத்தைக் கட்ட முடியாது வயிறு நொந்ததால் வயிற்றுக்கு மேல் நெஞ்சுக் கூட்டடியில், சாரத்தை மிருதுவாகக் கட்டி, மாமர நிழல் கவிந்து குளிர்மையான விராந்தையில் பாயைப்போட்டு அகப்பட்ட புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு கட்டையைப் பாயில் சாத்தியபோது உண்டான சுகம்! அப்பப்பா என்ன சுகம்! என்ன சுகம்! புத்தகத்தின் ஐந்து பக்கங்கள் சும்மா பிரட்டுவதற்கு முன்பே வந்து கவியும் தூக்கம். ஆகா என்ன சுகம்! இதைவிடச் சுகமான இன்பங்கள் வேறு உள்ளனவா?

ஆகா! உடம்பு எல்லாம் பகுதி பகதியாகக் கழன்று, மென்மையான பஞ்சுப்பொதிகளின்மீது அந்தரத்தில் பறப்பது போன்ற இன்பம். கனவில் மாத்திரமல்ல, நிஜத்தில்கூட ஆகாயத்தில் பறப்பது போன்ற இன்பத்தைப் பெறலாம் என்பதை உணரவைக்கும் இன்பம்!

இதைவிடப் பேரின்பம் வேறு உண்டா? யோக நெறிகளை கைக்கொண்டு, யொகாசனங்களை சரிவரசந் செய்து, ‘யோ முத்திரவை’ நன்கு பயிச்சி பண்ணி, குண்டலனீ சக்தியை மேல் எழுப்பி, பிராணாயாமம் செய்து மூச்சை அடக்கி, விந்துவை அடக்கி, அக்கினி பீஜத்தின் சுக்கிலத்தை எல்லாவற்றிற்கும் சூக்ஷமமாய் உள்ள நாடிகளில் செலுத்தி, அங்கு அமிர்த பீஜத்தினால் குளிரச் செய்து, திரும்பவும் தகத்தினுள் பொழிந்து எல்லா அங்கங்களிலும் விந்தின் ஆவிபடரச் செய்வதால் உண்டாவதாகக் கூறப்படும் பேரின்பநிலை இதைவிட இன்பமானதா?

இப்போதுதானே யோகசனம் பழகத் தொடங்கி இருக்கிறது. கட்டாயம், ‘யோகமுத்திராவும்’, ‘பிராணாயாமமும்’ செய்து குண்டலனியை மேல் எழுப்பி இப்பேரானந்த நிலையை அடைந்து பார்க்க வேண்டும்.

அதெல்லாம் பின்பு பார்க்கலாம். இப்பொ தூக்கம் வரவேண்டுமே!

இதென்ன இந்தப் பூனைகள் சிறுபிள்ளைக் குரலில் கத்துகின்றன.

‘சூய்…சூய்’ கோதாரிவிழுந்த பூனைகள். மனிதன் படும் பாட்டில் இவைவேறு!

இந்தப் பூனைகள் புணர்சிக்காலத்தில் மட்டும் ஏன் இப்படி அசிங்கமான தொனியில் கத்துகின்றன? சிலவகை மீன்களுக்கு புணர்சிக் காலத்தில் நிறங்கள் மாறுவதுபோல், பூனைகட்கு புணர்சிக் காலத்தில் குரல் மாறுகிறதோ?

இதைப்பற்றியும் விலங்கியல் விரிவுரையாளரிடம் ஒருக்கால் கேட்கவேண்டும்.

பூனையும் காக்கையும் காணாமல் புணர்சி செய்யுமாமே! உண்மைதான் போலும்!

காக்கைப் புணர்சியை ஓர் பற்றை மறைவில் பார்த்தாய்விட்டது. ஆனால் பூனைப் புணர்சியை இதுவரை பார்க்க முடியவில்லை.

எங்கே முடியும். இப்படி அகால வேளைகளில் கத்திக்கொண்டு புணர்ந்தால் யார்தான் பார்க்க முடியும்?

இந்தக் கேடு கெட்டவன், இப்படி தகரத்தில் அடிப்பதை இப்போதைக்கு நிறுத்த மாட்டானா? மற்றவர்களின் தூக்கத்திற்கு இடைஞ்சலாய் இருக்கிறான் என்று இவன்மீது வளக்குப்போட ஒருவார்க்கும் தோன்றவில்லையா? கிளர்கின்ற ஆத்திரத்தில் ஓடிப்போய் அவன் மூக்கை உடைக்க வேண்டும் போன்றதோர் வெறி.

ஒழுங்கை மூளையில் நாயொன்று மூச்சுவிடாமல் குலைக்கத் தொடங்கியது.

‘ஏன் இந்த நாய் குலைக்கிறது ?’

‘கள்ளர் காடர் உலாவுகிறார்களோ ?’

பக்கத்தில், பாதுகாப்பிற்காக வைத்திருந்த பொல்லை இறுகப் பிடித்தபடி காதுகளை கூர்மையாகத் தீட்டிக்கொண்டு…

எந்தவித வித்தியாசமான அரவமும் இல்லை.

அப்படியாயின் ஏன் இந்த நாய் குலைக்கிறது?

ஒருவேளை பேய் பிசாசோ! நாயின் கண்களுக்குத் தான் பேயின் உருவம் தெரியுமாம்!

பேய்கள்தான் உலாவுகின்றனவோ, இன்று அமாவாசைவேறு. பேயைக் கண்டுதான் நாய் குறைக்கின்றதோ?

பேய்கள் நள்ளிரவு களிந்தபின்தான் உலாவுமாம். இப்போ பன்னிரண்டு களிந்து விட்டதே!

சே… இப்போதானா அறிந்த பேய்க் கதைகள் எல்லாம் நினைவிற்கு வரவேண்டும்?

பயம், மெல்ல மெல்லக் கவ்வுகிறது. இதயம் ‘பயம் பயம் என விழுந்து விளுந்து துடிக்கிறது. அவ்வோசை காதுவரை கேட்கிறது.

நாய் குரைத்க்கொண்டே ஓடிவருகிறது. அப்படியாயின் பேய் இப்பக்கமாக இராட்சத உலா வந்ததோ? பேய் இங்கு வருவதற்குமுன் உடம்பைப் போர்வையால் மூடிக்கொள்ள வேண்டும்.

விசையில் இருந்து புறப்பட்ட அம்பாக கை போர்வையை எடுத்துத்தர, போர்வைக்குள் அடக்கம். வேட்டைக்காரன் துரத்திவரும்போது தலையை மட்டும் மண்ணுக்குள் புதைத்து தான் ஒளிந்து கொண்டதாக நினைக்கும் தீக்கோழியின் தந்திரம். கண்ணை மூடிப் பாலைக் குடித்தால் தன்னை ஒருவரும் பாக்க மாட்டார்கள் என நினைக்கும் பூனையின் அசட்டுத் தந்திரம்.

இந்த புளுக்க காலத்தினில் போர்வையினுள் இன்னும் புளுங்கி அவிகிறது. போர்வையை முகத்தைவிட்டு நீக்கி மூச்செடுக்கக்கூட பயம் இடம்தரவில்லை. நாயின் குரைப்பின் உச்சக்கட்டம்.

உடம்பை சாதுவாக அசைத்தால்கூட, பேய் அசைவைக் கண்டு ஓடிவந்து பிடித்துக்கொள்ளும் என்ற பயம்.

போர்வைக்கு வெளியே கறுத்த உருவமும் கொள்ளிக் கண்களும், ஒரு முளநீளத்திற்கு தொங்கும் நாக்குமாக பேய் நிற்பது போன்ற மனக் குறளியின் பிரமை!

நாயின் குரைப்புச் சத்தம் நின்றது. பேய் போய்விட்டதோ?

மெதுவாக போர்வையை முகத்தை விட்டு விலக்கியபோது காற்று முகத்தில் பட்டதும் ஆகா என்ன சுகம்! இப்போ திடீர் எனக் கோவூர் வந்தார். பேய் பிசாசு என்பன உலகில் இல்லை. மனத்தில்தான் உண்டு என்று உபதேசித்தார்.

இவ்வளவு நேரமும் இந்தக் கோவூர் எங்குபோய் இருந்தார்? அவரின் ‘மனக்கோலம்’ புஸ்தகம் எங்குபோய் தொலைந்த. பாவம் அவரும் பேய்க்குப் பயந்து மன ஆளத்தின் எங்கோ ஓர் மூலையில் பதுங்கி இருந்தாதோ? என்ன இருந்தாலும் சமய சந்தர்ப்பத்தில் உதாவத மனிதர் இந்தக் கோவூர்.

இந்தக் கோதாரி விளுந்தவன் இந்தச் சத்தத்தை எப்போது நிறுத்தப் போகிறான். பிசாசுகள் போன்று இரவிரவாய் தட்டித்துலைக்கிறானே பாவி.

சே… இந்த நித்திரை வந்து தொலைக்குதில்லையே. அடித்தது என்ன ஒண்டா ஒன்டரையா? பகலில் ஒலியே கேட்காத இந்த மணிக்கூடுகூட இந்த நேரத்தில் இப்படி சுத்தியால் அறையு;போல் ‘டொக் டொக்’ என ஒலிக்கிறதே? இதைவிட அந்த இரவுப் பிசாசு அடிக்கும் சத்தம் தேவலாம்.

எழுந்து மணிக்கூண்டின் ‘பெண்டுலத்தை’ பிடித்து நிறுத்தினால் என்ன? ஐய்யோ கடவுளே இதென்ன நாராசமாய் ‘டொக் டொக்’ என அடித்துக்கொண்டு….

எழுந்துபோய் மணிக்கூட்டை நிறுத்தலாம் என்றால் கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருக்கிறது. புளுக்கத்திற்கென்று வெளியில் படுத்தது வில்லங்கமாகப் போய்விட்டது. வெளிக்கதவை அம்மா உட்பக்கமாகத் தாளிட்டுக்கொண்டுவிட்டா.

கதவைத் திறக்க முடியுமானால் இந்த மணிக்கூட்டுப் பிசாசைத் தூக்கி எறிந்துவிட்டு இரண்டு பேணி தண்ணீர் குடித்துவிட்டு வந்து கடுக்கலாம்.

அம்மாவின் குறட்டை கொர்ரிடுகிறது.

அம்மாவால் எப்படி படுத்த உடனேயே தூங்க முடிகிறது? சலனமற்ற மனமா? எனது மனம் சலனமுற்றிருக்கிறதா?

ஆறுபிள்ளைகளைப் பெற்று, அவர்களின் நல்வாழ்க்கையும், இன்பதுன்பங்களையும் எதிர்நோக்கி இருக்கும் அம்மாவிற்கு சலனமில்லாத மனம், ஒரு கூட்டை விட்டுப் பறக்காத குஞ்சான எனக்கு மட்டும் சலனமான மனமா?

ஒருக்கால் அம்மாவை எழுப்பி கதவைத் திறப்பித்து அப்பாவின் நித்திரைக் குளிகையில் பாதி விழுங்கினால்…?

ம்கூம்… குளிகைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. நித்திரை இன்மையால் இப்போதே இந்தப்பாடு என்றால், குளிகைப் பழக்கத்திற்கு அடிமையாகி குளிகை இல்லாமல் நித்திரை வரமறுக்கினற வயோதிப காலத்தில், குண்டிச் சதை எல்லாம் வற்றி, இடுப்பெலும்பு படுக்கையில் குத்த நித்திரை வராமல் கிடந்து உழல்வது என்றால் அது எவ்வளவு பெரிய அவதி.

இந்த மண்டைக்குள் ஏன் இப்படி nருக்கி நெறித்துக்கொள்கிறது? கடவாய் பற்கள் எல்லாம் ஏன் நெருடிக் கொண்டிருக்கின்றன? இவை சாதுவாக தளர்ந்தாலாவது தூக்கம் வருமே!

கிருஸ்ணா கிருஸ்ணா என்று தொடர்ந்து உச்சரித்தால் தூக்கம் வரும் என்று ஓர் இந்திய சஞ்சிகையில் வாசித்தது ஞாபகம் வந்தது.

அப்படிச் செய்து பார்த்தால் என்ன?

கிருஸ்ணா, கிருஸ்ணா, கிருஸ்ணா… கிருஸ்ணா? யாழ்ப்பாணப் பகுதியில்தான் விஸ்ணு வளிபாடு அதிகம் இல்லையே. தன்னை மதிக்காதவனுக்கு கிருஸ்ணன் உதவி செய்துவிடுவாரா?

உபகாரத்திற்கு பிரதி உபகாரம் செய்கிற பேர்வளிதானே இந்த மகாவிஸ்ணு. கோபியர் மத்தியில் துகில் கொடுத்து கண்ணனின் மானத்தைக் காப்பாற்றியதால்தானே பாஞ்சாலிக்கு துகில் ஈந்தார். அதுவும் இக்கட்டான நேரத்தில் இருக்கிறாளே என்று உணர்ந்து தானாக வலியக் கொடுக்கவில்லையே!

பாஞ்சாலி, கண்ணா கண்ணா என்று வாயோயக் கத்திய பின்தான் கொடுத்த உபகாரி அல்லவா அவர். அப்படியானவர் ஊர்பேர் அறியாத நான் கூப்பிட்டுவிட்டால் மட்டும் இந்த அகால வேளையில் கோப்பாய்க்கு ஓடி வந்துவிடுவாரா?

கிருஸ்ணனுக்குப் பதிலாக நம் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்தால் என்ன?

நமது குலதெய்வம் யார்?

இலுப்பையடிப் பிள்ளையாரா? இல்லை வடகோவை சித்திரவேலாயுதரா?

இந்த நேரத்தில் இப்படியொரு ஆராச்சி வேறு!

தூரத்தைப் பொறுத்துப் பார்த்தால் இலுப்பையடிப் பிள்ளையார்தான் அருகில் இருக்கிறார். மேலும் கந்தனுக்கு அண்ணன்தானே கணபதி. எனவே கணபதியின் பெயரையே உச்சரிப்போம்.

எத்தனை தரம் உச்சரிப்பது?

இதென்ன இந்த நேரம் கெட்ட நேரத்தில் இப்படி அசட்டுச் சந்தேகங்கள்? மந்திரங்களை 108 அல்லது 1008 தரம்தானே உச்சரிப்பது வளக்கம். எனவே 1008 தரம் உச்சரிப்போம்.

கணபதி ஓம் நம ஒண்டு, கணபதி ஓம் நம ரெண்டு கணபதி ஓம் நம மூண்டு… வாய் உச்சரிக்க மனம் எங்கோ அலைபாய்ந்தது.

…. இப்போ எண்ணியது என்ன ஐம்பத்தி எட்டா, ஐம்பத்தி ஒன்பதா?

இதென்ன சிக்கல். எண்ணியதில் பிளைவிட்டுவிட்டோமோ?

இனி என்ன செய்வது?

ஆரம்பத்தில் இருந்து எண்ண வேண்டியதுதான். கணபதி ஓம் நம ஒண்டு… கணபதி ஓம் நம ரெண்டு … ச்சீ இந்த தூக்கம் வருவதற்கு என்னென்ன பாடெல்லாம் படவேண்டி இருக்கிறது… கணபதி ஓம் மூண்டு…. கணபதி ஓம் நம… ஆயிரத்தியெட்டு.

…ம்…ம் 1008ம் முடிந்து விட்டது. கணபதியையும் காணோம் நித்திரையையும் காணோம்.

ஒருவேளை நம் குல தெய்வம் வடகோவை சித்திர வேலாயுதரோ?

அவரை உச்சரித்திருந்தால் தூக்கம் வந்திருக்குமோ?

சே… சுத்த மடத்தனம்! வெண்தாடியும் புன்னகையுமாக கோவூர் சொன்னார்

ஆமாம் சுத்த மடத்தனம்!

இனி இப்படியான பாச்சாக்களால் நித்திரை வரவே வராது. வேறு வளி பார்க்க வேண்டியதுதான்.

எழுந்து கெமிஸ்ரியில் கொஞ்ச கொன்வேசஸ் ( Convasions ) செய்து பார்த்தால் என்ன?

அதற்கும் மனம் இடம் தரவில்லை. இப்படி நெருக்கி நெறிக்கும் தலையுடன் பீனோலில் இருந்து தொலுயீன் தயாரித்து தொலுயீனில் இருந்து பென்சோயில் அசிற் தயாரிப்பத்கிடையிலேயே மண்டை வெடித்துவிடும்.

கொன்வேசனும் மண்ணாங்கட்டியும். இந்த மடைப்பயல் இந்த அகால நேரத்தில் இப்படிக் கல்லுளி மங்கத்தனமாக தட்டிக் கொண்டிருக்கும்போது கொன்வசன் என்ன கொன்வேசன்.

ஜானகிராமனின் மரப்பசு வாசித்து அரைகுறையில் விட்டிருக்கிறது. எழுந்து அதை வாசித்து முடித்தால் என்ன? அம்மணியும் கோபாசியும் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே!

அடி செருப்பாலை என்றானாம். படிப்பதற்கு வெளிச்சத்துக்கு எங்கே போவது மின் குமிழின் ஆளி கதவிற்கு உட்புறமாகவல்லவா இருக்கிறது. அம்மாவை எழுப்பி ‘லைற்றை’போடச் சொன்னால் என்ன?

வேண்டாம். நான்தான் நித்திரை இன்றி இப்படி பாயைப் பிராண்டிக்கொண்டிருக்கிறேன் இதில் அம்மாவையும் ஏன் துணைக்களைப்பான்?

மேலும், ஜானகிராமனைப் படித்து தூக்கத்தை வரவளைக்க முடியுமா? அவரை படிப்பதாயின் ஆள்ந்து அல்லவா படிக்க வேண்டும். அதற்கான மனநிலையும் இப்போதில்லை.

ஆனால் தூக்கம் வரவேண்டுமே?

யோகனத்தில் படித்த பிராணாயாமம் செய்து பார்த்தால் என்ன?

அதுதான் வளி. மனதை சாந்தப்படுத்தி ஒருமுகப் படுத்த அதுதான் வளி.

எழுந்து பாயில் உட்கார்ந்து பத்மாசனம் போட்டு வலது பெருவிரலால் வலது நாசியை அடைத்து, இடது நாசியால் நெஞ்சுக்கூடு நிரம்பும்வரை காற்றை மெதுமெதுவாக உள்ளீர்த்து பூரகம் செய்து, பின்பு கும்பகம் செய்து பின்பு இடது நாசியால் ரேசகம் செய்து பின்பு மீளவும் இடது நாசியால் பூரகம் செய்து….

பிராணாயாமத்தில் நன்மை இருக்கத்தான் செய்கிறது. பிராணாயாமம் செய்யத் தொடங்கி சிறிது நேரத்தின்பின் அலை எறிந்து கொண்டிருந்த மனம் அமைதியாவதை உணரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ‘பூரகத்தின்போது உட்சென்ற பிராணவாயு, கும்பகத்தின்போது நுரையீரலிலை சிற்றறைகள் எல்லாவற்றையும் நிரப்பி குளதியில் ஒட்சிசன் செறிவை அதிகரித்து உடலுக்கு புத்துணர்வை தருகிறதே ஒளிய தூக்கத்தை வரவளைக்கக் காணோம்.

பிராணாயாமத்திலும் தோல்வி!

இனிமேல் நம் முயற்சியால் ஒன்றுமே ஆகாது. இறைவன் விட்ட வளி (சும்மா இரும் காணும் கோவூர் இதற்குள் நீர் ஒன்று) நித்திரை எப்போது வருகிறதோ அப்போது வந்து தொலையட்டும். ஆண்டவனே இந்தக் குட்டிப் பிசாசு இந்தச் சத்தத்தை எப்போது நிறுத்தப்போகிறது?

டங் டங் டக், டங் டங் டக், டங் டங் டக் டங் டங் டக் அட இந்தப் பிசாசுச் சத்தத்தில்கூட ஒரு தாளலயம் இருக்கிறதே! இவ்வளவு நேரமும் இதை அவதானிக்காமல் விட்டுவிட்டோமே. இந்த தாளலயத்தையாவது கேட்டுக்கொண்டு படுத்திருக்கலாமே.

டங் டங் டக், டங் டங் டக், டங் டங் டக், டங் டங் டக்

டங் டங் டக், டங் டங் டக், டங் டங் டக், டங் டங் டக்

அட இது என்ன ஆச்சரியம்! தட்டும் சத்தம் தேய்ந்து கொண்டே வருகிறதே. கண்களில் மெல்லிய கவியலாய் தூக்கம் வருகிறதே! ஆண்டவனே இது தூக்கமேதான். இவ்வளவு நேரமும் இந்தத் தூக்கத்திற்கு பட்டபாடு!

டங் டங் டக், டங் டங் டக், டங் டங் டக், டங் டங் டக்

டங் டங் டக், டங் டக்!

இது என்ன மங்கலாய் கேட்ட தட்டும் சப்தம் நின்று விட்டதே. இரவுப் பிசாசு வேலையை நிறுத்திவிட்டானா? தேனீருக்கு ஓய்வு எடுத்துக்கொண்டானோ?

இவ்வளவு நேரமும் தாலாட்டுப் போல் தாளலயத்தில் ஒலித்த சத்தம் நின்றதால் கவிந்து வந்த தூக்கம் பறந்தோடி விட்டது.

அட கடவுளே பொறுத்த நேரம் பார்த்து நிறுத்திவிட்டானே இந்தப் பாவி. இன்னும் சிறிது நேரம் தட்டிக் கொண்டிருந்தால் சுகமாகத் தூங்கி இருப்பேனே! இந்தக் குறுக்கு வளி தெரியாமல் இந்த சத்தத்தை திட்டிக்கொண்டு தூக்கத்தை வரவளைக்க படாத பாடுபட்டோமே!

இனி அவன் தேனீர் குடித்து விட்டு வந்து திரும்ப அடிக்கத் தொடங்கும்வரை இப்படிக் கொட்டக் கொட்ட முளித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். ம்…ம்…

அட போங்காணும் கோவூர். உமக்கொரு சிரிப்பு வேறு.

எழுதிய திகதி : 06.05.1981

ஒக்டோபர் 81 மல்லிகை

வடகோவை வரதராஜன்-இலங்கை 

வடகோவை வரதராஜன்

000000000000000000000000000000000

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு :

வடகோவை வரதராஜன்கோப்பாயை சேர்ந்த வடகோவை வரதராஜன் ஈழத்து எழுத்துப்பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். குண்டகசாலை விவசாயக்கல்லூரியில் விவாசாயக்கலை தொடர்பாக உயர் படிப்பை மேற்கொண்ட இவர் இயற்கை நேசராகவும் இளைப்பாறிய கிராமசேவகராகவும் விவசாயக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்றுநராகவும் பலதளங்களில் செயற்பட்டு வருகின்றார். இதுவரையில் நிலவுகுளிச்சியாகவில்லை என்ற சிறுகதை தொகுப்பு இவரால் கிடைத்திருக்கின்றது. அன்றய காலத்தில் இவரது எழுத்துகள் சிரித்திரன் ,மல்லிகை ,அலை,கணையாழி ஆகிய சஞ்சிகைகளில் வெளியாகி இருந்தன.

நடு குழுமம்

 

(Visited 113 times, 1 visits today)