மனவுரியும் மரவுரியும்-சிறப்பு எழுத்துகள்-வடகோவை வரதராஜன்

வடகோவை வரதராஜன்இந்த வேப்பமரம் என்னமாய் வளர்ந்து விட்டது ?

இது ஐயா வைத்த வேம்பு!

எனக்கு இப்போதும் நன்றாக  ஞாபகம் இருக்கிறது.அப்போது நான் ஒன்பதோ பத்தோ படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நெடிய மழையின் தூறல் விழுந்து கொண்டிருக்க ஐயா தலையில் ஒர்  குல்லாய் துண்டைப் போட்டுக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கட்டியபடி மழையில் இறங்கினார்.

அம்மா தேநீருடன் வந்து என்னை விசாரித்தா.

“கோடிப்பக்கம் மம்பட்டியோடை போறார்”.

“இந்தாளுக்கு அஞ்சு நிமிசம் சும்மாயிருக்கேலாது.பக்கத்து வளவான் நரகல் எல்லாவற்றையும் அடிச்சுக்கொண்டு வெள்ளம் எங்கடை வளவுக்கை வருகுது.அதுக்குள்ளை நிண்டு காலெல்லாம் நீர்ச்சிரங்கு பிடிக்கப்போகுது.மழை பெய்தாக்  காணும் வெட்டிறதும்,கொத்திறதும் தான் வேலை.இந்த ஆற முன்னம் இந்தத் தேத்தண்ணியைக் கொண்டேக்குடு”.

நனைந்த நிலத்தில் இறங்கவே அருவருப்பாக இருந்தது.பளபள என மினுங்கும் பித்தளை மூக்குப் பேணியை வாங்கிக்கொண்டு கோடிப்பக்கம் நடந்தேன்.

ஐயா, கோடியில் வெள்ளமும் சேறுமாக இருந்த மண்ணில் மண்வெட்டியால்  வெட்டிக்கொண்டிருந்தார்.

கெட்டுகள் கிளைகள் இல்லாது ஒரே சீராக திமிறி வளர்ந்த ஓர் வேப்பம் கன்று.

ஐயாவின் வேட்டியில் எல்லாம் புள்ளிப் புள்ளியாக சேறு தெறித்து இருந்தது.

குளிரான அந்த மழை நாளிலும் வழுக்கைத் தலையில் வியர்வை அரும்பி நின்றது.

“ஏன் ஐயா இது “?

“அங்காலை தள்ளி நில்.சேறு தெறிக்கப் போகுது”.

வெப்பம் கன்றின் அடியில் இருந்த கல்லைப் புரட்டினால் ஒழிய கன்றை வேருடன் கிளப்ப முடியாது.ஐயாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.ஐயாவிடம் இருந்து மண்வெட்டியை நான் வாங்கினேன்.ஒவ்வோர் பொழி மண்ணில் விழும்போதெல்லாம் “கவனம் வேர் அறுந்து போகும்”என ஐயா எச்சரித்தவாறிருந்தார்.ஒரு மாதிரியாகக் கல்லைப்புரட்டி ஆணிவேர் அறாமல் கன்றைக் கிளப்பியாகி விட்டது.பக்க வேரில் மாத்திரம் ஒன்று அறுந்து போயிற்று.

 “எல்லாத்திலேயும் அவசரம்.’பாத்து வெட்டு’.’பாத்து வெட்டு’.எண்டு எத்தினை தரம் சொனனான்?”அந்தப் பக்கவேர் வெட்டுப்பட்ததற்கு ஐயா பலமுறை அங்கலாய்த்தார்.பின்பு முற்றத்தில் என்னைக் கொண்டு குழி வெட்டுவித்து,அதில் உக்கிய மாட்டெரு விட்டு,மரத்துக்கு ஆதரவாக ஓர் காட்டுக் கம்பு வைத்து அந்த மரத்தை நட்டு முடித்தோம்.

இந்த அமளி துமளிக்கிடையில் அம்மா அடுக்களையில் இருந்து வந்தா.

“ஏனப்பா முற்றத்திலை வேம்பை நடுகிறியள்?”

“உமக்கொண்டும் தெரியாது.நீர் கொஞ்சம் சும்மா இரும்”-அம்மாவுக்குப் பிடிக்காத காரியங்கள் செய்யும் போதெல்லாம் ஐயா இவ்வாறு அசடாகத் தட்டிக்களிப்பார்.

“உங்களுக்கு வேம்பிலை ஆரோ  செய்வினை செய்து போட்டினம் போலை கிடக்கு.வளவைச் சுற்றி எத்தினை வேம்புகள் வைச்சிருக்கிறியள்.”அம்மா புறுபுறுத்தா.ஐயாவுக்கு இது ஒன்றும் கேட்காது.அவர் வெப்பம் கன்றிற்குப் பாத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வோர் நாட்காலையிலும் ஐயாவை வாயினுள் ஓர் குச்சியுடன் அந்த வேப்பங் கன்று அடியில் காணலாம்.மற்ற மரங்களை போல் அல்லாது வேம்பின் வளர்ச்சி வேகம் மிக மிக அதிகம்.பார்த்துக்கொண்டிருக்க அது கிடு கிடுவென சடைத்து வளர்ந்து பருத்தது.

வெப்பம் காற்று உடம்பில் பட்டாலே 100 வருசம் வாழலாம் என ஐயா அடிக்கடி சொல்வார்.

ஒய்வுபெற்றபின்   ஐயா அந்த வெப்ப மரத்தில் பலகை ஊஞ்சல் கட்டிக்கொண்டார்.காலை எழுந்து பல்துலக்கிய பின்  அந்த ஊஞ்சலில் அமர்ந்து கொள்வார்.

தேநீரை அம்மா வெப்பமரத்தடிக்கே கொண்டு செல்வார்.அங்கிருந்தே பத்திரிகை படிப்பார்.

அண்ணனின் திருமணப்பேச்சு,தம்பியின் வெளிநாட்டுப் பயணம் எல்லாம் அந்த வேப்பமரத்தின் கீழ் அலசப்பட்டே முடிவெடுக்கப்பட்டன.அம்மாவும் ஐயாவும் இரவு வேளையில் அந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.அலுப்பு சலிப்பில்லாத என்ன கதையோ?

இதெல்லாம் பழங்கதை!

நான் படித்து சாதாரண கிளரிக்கல் சேவிஸில் நுழைத்து பின் எஸ்.எஸ்.ஏ.எஸ் சித்தியெயெய்தி நிர்வாக சேவையதிகாரியாக இருந்து……….இப்போ ஒய்வு பெற்று விட்டேன்.

ம்……….நான் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன ?ஒவ்வோர் வயதிலும் ஒவ்வோர் அர்த்தமோ?

படிக்கின்ற காலத்தில் விளையாட்டே வாழ்க்கையின் அர்த்தமாக இருந்தது.அப்போ யார் வாழ்வின் அர்த்தத்தைப்  பற்றி சிந்தித்தார்கள்?இவைதான் வாழ்வின் சொர்க்கமாகத் தெரிந்தன.பின் காதலிக்கின்ற பருவத்தில் காதலே வாழ்வின் அர்த்தமாயிற்று.உத்தியோகம் எடுத்தபின் பதவி உயர்வு வாழ்வின் அர்த்தமுள்ள வெறியாயிற்று.

நகக்கணுவில் வைத்திருக்கின்ற புள்ளி விபரங்களையும்,சரளமான மொழியறிவையும் வைத்துக்கொண்டு எத்தனை கருத்தரங்கங்களில் புகழ் குவித்திருக்கின்றேன்.எனது திறமையால் சக அதிகாரிகளைப் பொறாமையூட்டி அதில் ஒரு குரூர இன்பம் அனுபவித்தேன்.அவர்களைப் பொறாமை கொள்ளச் செய்ய இன்னும், என் திறமைகளைக் காட்டத் தீவிரமானேன்.

இப்போது அதை நினைத்தால் ‘ப்ச்’என்று போகிறது.இந்த அதிமேதாவித்தனத்தால் நான் சாதித்தது என்ன?வசதியுள்ள வாழ்க்கை!பிள்ளைகட்கும் வசதியான வாழ்க்கை!

இவையெல்லாம் சாதனையாகுமோ?!

இவை எல்லாம் வாழ்வின் அர்த்தமாகுமோ ?

இல்லை !இல்லை!இவை எல்லாம் வாழ்வின் ஆத்மார்த்த அர்த்தங்கள் அல்ல !

இப்போ மண்ணைக் கிண்டுவதும்,இந்த மரஞ்செடிகளைப் பராமரிப்பதும் தான் எனது வேலை.பொழுது போக்கு எல்லாம்!இது எனக்கும் ,என்னுள் இருக்கும் என் மூதாதை மனிதனுக்கும் ஓர் ஆத்மார்த்த தொடர்பை ஏற்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்கின்றது.

வயதான காலத்தில் வேறு என்ன செய்ய முடியும் ?

நெடுநேரம் படுத்துக்கிடக்க முடியாது.குண்டிச்சதை வற்றி இடுப்பெலும்பு படுக்கையில் அண்டுகின்றது.

ஒய்வு பெற்றபின் ‘கிளப்’சமூக சேவை என்று கொஞ்ச நாள் அலைந்தது உண்மைதான்.ஆனால் இப்போ அவற்றில் எல்லாம் நம்பிக்கை போய் விட்டது.அவை எல்லாம் சுத்த பம்மாத்தாகவும்,’ஹம்பக்காகவும்’தெரிந்தன.தம் அந்தஸ்தையும் பெருமைகளையும் பறைசாற்றிக் கொள்ளவும் கடந்த காலத்தை ஒரு மெத்தனமான அசட்டுத்தனத்துடன் அசை போடவும் இந்த கிளப்புகள் பயன்படுகின்றன போல் தெரிகிறது.

வயதிற்கேற்ப கதை வேண்டாம் ?

இத்தனை வயதில் உடம்பால் ஆக முடியாததை வாயால் பேசி திருப்தி காணுகிற ஒரு வக்கரிப்புத் தனத்தையே இங்கு காண முடிகிறது.

எனக்கு இந்த மண்வாசனையும் மரத்துடன் பேசுவதும்,பரமானந்தமாகவும் இருக்கிறது.மண்ணைக் கிளறக் கிளற எத்தனை புது விடயங்களை அறியக்கூடியதாக இருக்கிறது.

செவ்விரத்தையின் இலைகளைத் தன் அலகால் குத்தி மெல்லிய நார் கொண்டு தைத்து ‘வாழும் இலைக்கூடுகளை’ அமைகின்ற தையற் சிட்டுகள் மனிதனின் அறிவைக் கேலி செய்கின்றன.

இரண்டு நாட்கள் தண்ணீர் விடாவிட்டால் சோர்ந்து போய் பரிதாபமாகப் பார்க்கின்ற காசித்தும்பைக்குத் தண்ணீர் விட அது மகிழ்ச்சியுடன்  மீண்டும் தலை நிமிரும் பொழுது மனதிற்குள் உற்சாகம் கொப்பளிக்கின்றது.

வாழ்வின் அர்த்தமே இத்தகைய இயற்கையுடனான நேசம் தானோ ?

ச் ….சீ இது தெரியாமல் 60 வயது வரை புள்ளி விபரங்களுடனும் மாரடித்து வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்ற ஆதங்கம் கூட எழுகின்றது.ஆத்மார்த்தமான சந்தோசங்களை அறிய எத்தனை வாய்ப்புகளைத் தருகின்றது.இந்த மண் !காலமெல்லாம் கற்றுக்கொண்டிருப்பதும் ஓர் சந்தோசமான விடயம்தானோ ?

ஆரம்பத்தில் இதை எல்லாம் அறிந்திருந்தால் இந்த வயதான காலத்தில் அறிவதற்கே ஒன்றுமே  இல்லாமல் வாழ்கை ஓர் நகராத கால்வாய் போல் இருந்திருக்குமோ ?

வேப்பமரத்துக் கிளையொன்று மழைப்பீலியிலை உரோஞ்சி உரோஞ்சி கிறீச் கிறீச் என சப்தம் எழுப்பியது.

சை !எத்தனை ஓடுகளை நாசம் பண்ணி விட்டது.இந்த மரம் மத மத என்று மதாளித்து வீட்டுக்கு மேல் கொப்புகளை விரித்திருக்கும் இந்த விருட்சத்தை பார்க்கச் சில சமயம் பயமாக இருக்கின்றது.

ஒரு காற்றிலோ,மழையிலோ இது சரிந்தால் சுக்குநூறு!அதுமாத்திரமா ?

முற்றத்தின் முழுப்பாகத்தையும் நிழலால் விழுங்கி எந்தவோர்பயிரையும் வைக்க விடாமல் செய்துவிட்டது.

ஒவ்வோர் நாளும் பழுத்த இலைகளால் சொரிந்து முற்றம் நிறைய குப்பை போடுகின்றது.

சருகுகள் மழைப் பீலியை அடைத்து மழைக்காலங்களில்  பீலியால் நீர் தேங்கச் செய்கின்றது.பழுக்கும் காலத்தில் காகங்களும் வெளவால்களும் கூடி வளவெங்கும் அசிங்கமாகஎச்சமிட்டு வைக்கின்றன .இது நிற்கின்ற இடத்தில் இரண்டு விலாட் மாமரங்கள் நின்றால்!

“என்ன அங்கிள் விடியக்காலை ஒரே யோசினையாய் கிடக்கு ?”

“வாரும் ! வாரும்!சும்மா பழைய நினைவுகள்!வயது போன காலத்திலை வேறை என்ன வேலை ?பழைய நினைவுகள் இரை மீட்கிறதுதான்.அதிலை சிலது சந்தோசமாய் இருக்கும்.சிலதுகள் இப்ப வெக்கத்தைத்தரும்.விட்ட தவறுகள் எண்ணி வேதனைப்படும்.இப்படிப்பலப்பல.

என்னிலை ஒரு பழக்கம்,நிசமான ஓர் சந்தோசம் அனுபவிக்கிற அந்தக் கணத்தில் சந்தோசமாய் தெரியிறேலை.ஆனால் கொஞ்சக்காலத்துக்குப் பிறகு அதை இரைமீட்கேக்கை தான் அந்த சந்தோசத்தின்ரை பூரணத்துவம் தெரியும்.கடைசி சொட்டும் அடிநாக்கிலை இருந்து தித்தித்துக் கொண்டிருக்கும்.என்ன போராடிக்கிறானா?”

“இல்லை இல்லைச் சொல்லுங்கோ.”

வயதுபோன காலத்திலை இது ஒரு சாபக்கேடு தம்பி.பிள்ளையள் மரியாதையாலையோ இல்லை தங்கடை தங்கடை குடும்ப பிரச்சினையாலோ அதிகம் கதைக்க மாட்டுதுகள்.பேரப்பிள்ளையளின்ரை குறும்புகள் சிலது பிடிக்காமல் பொத்தெனக் கோபம் வரும்.வயது போகுதே ஒழிய வயதுக்கேற்ற மனவயது வளர்றது ரொம்பசிலோ தம்பி.

மனம் விட்டுக்கதைக்க மனிசர் வேணுமே!நெருங்கிய சிநேகிதர் பலர் நான் முந்தி நீ முந்தி எண்டு போய்ச் சேர்ந்திட்டினம். அவேன்ரை மரணம் ஒரு பயத்தைத் தரும்.இந்த வயசிலை புதுசாய்

இனியொரு சிநேகிதம் பிடிக்கேலுமே?

“கதைக்காமல் இருக்கிறது ஒரு பெரிய தியானம் தம்பி ! அது ஒரு தவம்!”

ஆனா எங்கடை கனபேரிட்டை அந்தப்பக்குவம் இல்லை.மனுசன் கதைக்கிறதே அனாவசியம்.அதிலை அனாவசியமான கதைகள்வேற  கதைச்சுக்கொண்டிருக்கிறம்.

கிழடுகளுக்கு ஆள் கிடைச்சால் விடுகிறேலை.அறு அறு எண்டு அறுத்துப் போடுங்கள்.கதைகள் கால மாற்றத்தோடை இருந்தால் இளசுகளுக்கும் பிடிக்கும்.கிறிக்கற் மச் பாக்கப் போறவனைப் பிடிச்சு,நாங்கள் அந்தக்காலத்திலை எண்டு தொடங்கினால் எரிச்சல் படமாட்டானோ?இதிலை ஆரோ விசயம் பாரும் கிழடுகள் அறுக்கிறம் எண்டது கிழடுகளுக்குத் தெரியும்.ஆனாக்கதைக்கிறதுக்கு ஒரு ஆள் வேணுமே!

“அதுசரி ஏன் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லையோ ?”

இண்டைக்கு  ஞாயிற்றுக்கிழமையெல்லே அங்கிள்.”

“ஓகோ ! அப்பிடிச்சொல்லும்!அதுதான் மகளும் இண்டைக்கு ஓய்வாய் நிக்கிறா.நாள் கிழமையளுக்கே இப்ப அர்த்தம் தெரியாமல் போச்சுபாரும்.சாந்தி வீட்டை நிண்டா  ஞாயிற்றுக்கிழமை.கோயில்லை மேளம் கேட்டா வெள்ளிக்கிழமை.”

சாந்தி விரதம் பிடிச்சா செவ்வாய்க்கிழமை.இப்பிடித்தான் கிழமையளுக்கு அர்த்தம் புரியுது.நீண்டுகொண்டே இருக்கிறீர்.உள்ளை வாருமன்.இருந்து கதைப்பம்!

“நீங்கள் முகத்தைக் கழுவுங்கோ. நான் ஒருக்கா கடைக்கு போக வேணும்.என்ரை சைக்கிள் காத்துப் போட்டுது.அதுதான் உங்கடையை கேப்பம் எண்டு வந்தனான்.போட்டு பேந்து வாறன்.”

“எடுத்துக்கொண்டு போம். மறந்திடாமை வாரும்.உம்மட்டை ஒரு விசயம் கேக்க வேணும்.”

இவன் விநோதன்!

எனது அயல் வீடு!

விவசாயத்திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் இருக்கிறான்.வயதுக்கு சம்மந்தம் இல்லாமல் மண்ணிலும் ,மரத்திலும் ,விலங்கிலும் நண்பரைத் தேடும் பிறவி.இவனது அறிவிற்கு முன்னால் எனது புள்ளி விபரங்களையும் வரைபுகளையும் குப்பையில் கொட்டவேண்டும்போல் ஒரு வெட்கம் வருகிறது.வாழ்வதற்கு உதவாத வரைபுகளால்பயன் என்ன?

இவன் எத்தனை விநோதங்கள் செய்கிறான்.விளாமரத்தில் தோடம்பழம் பறிக்கிறான்.கத்தரியில் தக்காளி பழுக்கிறது.

தண்ணீர் மட்டும் கொண்ட போத்தல் ஒன்றில் பாகல் கொடி படர்ந்து பிஞ்சு விடுகிறது.!

பூசணியும் வத்தகையும் சதுரமாய் காய்க்கிறது!இவ்வாறு சதுரமாய் காய்க்கச் செய்தால் சந்தைப்படுத்துவதற்காக லொறிகளில் அடுக்குவது சுலபமாம்.

பூஞ்சாடியில் ஆலமரம் வளர்ந்து விழுது விடுகிறது.போன்சாய் என்கிற ஜப்பானியக்கலையாம் இது!

ஒருசெவ்வரத்தையில் ஒன்பது நிறங்களில் பூக்கிறது!

நாலடி உயரத்தில் பப்பாசி பழுக்கிறது!

ஐந்தடி உயரத்தென்னை சுமக்க முடியாத குலைகளுடன் வாசல் புறத்தில் வரவேற்கிறது!

எனது தோட்டசெய்கைக்கு ஆலோசனைகள் இந்த விநோதன் தான்.

“இந்த கோடித் தென்னை மரம் பாளைவிட்டு குரும்பை பிடிக்குது. ஆனா ஒண்டும் தங்காமல் உதிர்ந்து போகுது தம்பி.இதுக்கு என்ன செய்யலாம்?”

“பசளை பத்தாததாலை தான் இப்பிடி குரும்பட்டி கொட்டுது அங்கிள். தென்னைக்கு நிறைய பொட்டாஸ் பசளை வேணும்.தென்னோலை விழவிழ மரத்திலை இருக்கிற பொட்டாசும் குறையுது.இப்பிடி குறையிற பொட்டாஸை நாங்கள்தான் பசளை போட்டு சரிக்கட்ட வேணும்.கடையிலை தென்னை உரம் எண்டு விக்குது.”

“அதிலை ஒரு நாலு கிலோ வேண்டி மழைக்காலத்திலை மரத்துக்கு போட்டு பாருங்கோ”

ஆனா உரம் போட்டா மண் பழுதாய் போகுமெண்டும் மரம் கொஞ்சக்காலம் தான் காய்க்குமெண்டும் சிலர் கதைக்கினம்.” விநோதன் கலகலத்துச் சிரித்தான்.

“கந்தோரிலை வாற ஆக்களும் உதைத்தான் என்னட்டைக்கேக்கினம்.உதிலை உண்மையில்லை அங்கிள். மரத்துக்குப் பொச்சு,மாட்டெரு,குப்பை,சாணம் இவையளை வெட்டித் தாக்கிறம்.இவையள் கொஞ்சம் கொஞ்சமாய் உக்கி கொஞ்சம் கொஞ்சமாய் மரத்துக்கு கிடைக்குது.ஆனா இந்த இரசாயன உரங்கள் உடனடியாய் மரத்தாலை உறிஞ்சப்பட்டிடும்.ஒரு பத்து பதினைந்து நாளைக்குள மரம் முழுவதையும் உறிஞ்சிடும்.பேந்து அடுத்த வருசம் உரம் போட்டாத்தான் மரத்துக்கு சத்து கிடைக்கும்.ஒருக்காப் போட்ட உரம் ஒருக்கா காயகத்தான் காணும்.அடுத்தமுறை உரம்  போடாட்டி காய்க்காது.வருசா வருசம் தொடர்ந்து உரம் போட்டுக்கொண்டு வந்தால்த்தான் மரமும் தொடர்ந்து காய்க்கும்.”

“விநோதன் இந்த செவ்ளிக் கண்டுக்குப் போன மார்கழியிலை உரம் போட்டானான்.இப்ப ஆனி மாசமாச்சு.மரம் இன்னும் காய்க்க காணேலை.என்ன சிரிக்கிறீர்?தெரியாததைத்தானே கேக்கிறன்.”

“இல்லை அரசமரத்தை சுத்திப்போட்டு அடிவயித்தை தடவிப் பாத மாதிரி கிடக்குது உங்கடை கதை.தென்னையின்ரை ஒரு பாளை மரத்துக்குள்ளை உருவாகி வெளியிலை வந்து உங்களுக்கு காயாய் கிடைக்க 24மாசம் எடுக்குது.அதாவது ரெண்டு வரிசம்!இன்னும் ஒரு வரியத்தாலை பாளை வெளியாலை வரேக்கைதான் உங்களுக்கு மரம் பாளை தள்ளுது எண்டது தெரியவரும்.”

“இதாலைதான் ஒரு வரியம் மழை இல்லாட்டி அந்த வரியும் தேங்காய் விலையிலை மாற்றம் இருக்காது.ஆனா வறட்சி வந்த வரியத்துக்கு ரெண்டு வரியம் களிச்சுதான் தேங்காய் விலை கிடு கிடு எண்டு கூடும்.”

இவன் எதனை விடையங்களை தெரிந்து வைத்திருக்கிறான்.உயிரோட்டமான விடயங்கள்,சாதாரண மனிதனுக்குப் பயன்தரக்கூடிய விடயங்கள்.

வாசலில் சைக்கிள் மணி சப்தித்து.கேற்றின் நாதாங்கி கழற்றும் ஓசை,விநோதன்தான்.

பிரம்புக்கதிரைகளைத் தூக்கி தோட்டத்தில் போட்டேன்.வேப்பம் காற்று சிலுசிலுத்தது.காகமொன்று வேப்பம் கிளையில் அலகு தேய்த்துவிட்டு ஆறுதலாக இறகு கோதியது.

“உம்மட்டை கனகாலமாய் கேக்கவேணும் எண்டு நினைச்சு கொண்டிருந்தனான்;இண்டைக்குத்தான் நேரம் கிடைச்சுது.”

“சொல்லுங்கோ.”

“இந்த வேப்பமரத்தை அகத்துவம் எண்டு பாக்கிறன்.”

“ஏன் உங்களையது என்ன செய்யுது?”அது தரும் இடைஞ்சல்களை சொன்னேன்.விநோதன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.தேநீர் ஆறிக்கொண்டிருந்தது.”என்ன யோசிக்கிறீர்.” தேத்தண்ணி ஆறுது முதல்லை அதைக்குடியும்”.

“அருமையான வேப்பமர விருட்ச்சத்தை அகத்திறதை நினைக்க கொஞ்சம் வேதனையாய் கிடக்கு.இப்பிடி ஒரு மரம் வளர்ந்து வர எத்தினை வரியம் வேணும்.பத்து எயர்கொண்டிசனுகள் ஒரு நாளைக்கு தாற குளிர்மையை இது ஒரு நாளைக்குத் தருது.ஆறு ஒக்சிசன் சிலிண்டருகள் தாற ஒக்சிசனை இது ஒரு நாளைக்குத் தருகுது.இதை அகத்தினால் எவ்வளவு நட்டம் எண்டு கணக்குப்பாருங்கோவன்.”

  எனக்கும் கொஞ்சம் கஸ்ரமாய்தான் கிடக்கு.என்ரை கடைசி மகன்.வீடு ஒண்டு கட்ட வெளிக்கிட்திருக்கிறார்.அரைவாசி மரத்தேவையை இதைக்கொண்டு சரிக்கட்டலாம்.இப்பிடி பலதையும் பத்தையும் யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான்.ஆனா இதிலை ஒரு சிக்கல் இருக்கு. இப்ப இதை தறிக்கிறதெண்டால் ஓடுகளை எல்லாம் உடைச்சு போடுவாங்கள்.தறிக்காமல் பண்ணிப்போட்டு கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டி எடுக்கலாம்.படப்பண்ணுறதுக்கு  நீர்தான் ஒரு வழிசொல்ல வேணும்.”

நீங்கள் முடிந்த முடிவாய் எடுத்தபிறகு நான் என்னத்தை சொல்லேலும்.படப்பண்ணிறது சிம்பிள் வேலை.மரத்தின்ரை அடிப்பாகத்திலை முழுவட்டமாய் ஆறு அங்குல அகலத்திலை வடிவாய் பட்டையை உரிச்சு விடுங்கோ.மரம் கொஞ்சமாய் பட்டுப்போகும்.

அடுத்தநாள் சாமுவேல் நிலத்தில் இருந்து  இரண்டடி உயரத்தில் முழுவளையமாக கைக்கோடரி கொண்டு கொத்தி மரவுரியை அகற்றினான்.கோடாலி பட்டையை சிம்பு சிம்பாக அகற்றும்போது எனக்கு சம்பவம் ஒன்று  நினைவுக்கு வந்தது.

அப்போது தம்பிக்கு 12வயது இருக்கும்.அவனுக்கு எங்கே தெரியப்போகிறது ஐயாவிற்கும் வேம்பிற்கும் உள்ள உறவுகள்.ஐயா வைத்த இந்த முற்றத்து வேம்பில் பிசின் எடுப்பதற்காக.பட்டையை கத்தியால் கொத்தி சில இடங்களில் காயப்படுத்தி இருந்தான்.ஐயாவிற்கு அன்று வந்த கோபத்தைப்போல்   ஒரு கோபத்தை நான் காணவில்லை. துவரங்காம்பால் சளார் சளார் என்னத்தம்பிக்கு விழுந்தது;முதுகில் மூன்று இடங்களில் இரத்தம் கசிந்தது.

அன்று இரவு தம்பியின் தூக்கம் கலையாமல் ஐயா ஒற்றடம் கொடுத்தார்.அடுத்தநாள் வேப்பமரத்தின் காயம்பட்ட பகுதிகட்க்கு சாணம் அப்பி விட்டார்.

பட்டை அகற்றப்பட்ட வேம்பைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.உள்ளே வைரமான பகுதிகள் வெண்மையாகவும் அகற்றப்பட்ட மரவுரியின் குறைப்பகுதிகள் சிறிது சிவப்புக்கலந்து மண்ணிறத்திலும் இரத்தக்காயம் பட்டு வெண்தசை தெரியும் ஓர் உயிர் பிராணியைப் போலவும் அது பீலியில் உரசும் ஓசை வேதனை முனுகல் போலவும் எனக்குப்பட்டது.

அன்றிரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை.ஐயாவின் நினைவு வந்து வந்து என்னைச் சித்திரவதை செய்தது.குறைத்தூக்கத்திலும் ஐயா தோன்றினார்.அவரின் நெஞ்சுக்கூட்டுக்கு கீழே மூன்றங்குல அக்காலத்தில் ஓர் முழுவளையமாக தோல் உரிக்கப்பட்ட வெண்தசை தெரிவது போன்ற கனவு வந்து என்னைத் தூக்கித் தூக்கிப் போட்டது.விபரிக்க முடியாத குற்ற உணர்ச்சியொன்று என்னைக் குத்தி குத்தி வதைத்தது.அடுத்த நாள் வேப்ப மரத்தைப் பார்க்கவே எனக்குத் துணிவு வரவில்லை.ஏறத்தாழ ஒருமாதம் வேம்பின் பக்கம் போவதைத் தவிர்த்தேன்.தான் அறியாச் சோகமொன்று என்னைக் கவிந்து கொண்டது.

ஒரு மாதமாகி விட்டது!ஆனாலும் இன்னும் வேம்பின் பசிய இலைகள் காற்றில் சிலுசிலுத்தன.

மரம் இன்னும் படவில்லையோ?

இந்த தெம்பில் வேம்பின் அருகே  சென்றேன்.மரவுரி அகற்றிய தளும்பில் பிசின் வடிந்தது ஆறி இருந்தது.ஆனால் இது என்ன ?

பசுங்கன்றின் நாக்குப் போன்ற பகுதிகள் வெட்டப்பட்ட இடத்தின் மேல் வளையத்தில் இருந்து கீழ்வளையத்தை  நோக்கி இறங்கி இருந்தன.விநோதனுக்கு இந்த அதிசயத்தை அறியத்தந்தேன்.வந்து பார்த்துச் சிரித்தான்.

“என்ன தம்பியிது ?”

“அங்கிள் வேம்பு தன்ரை உயிரை காப்பாத்தக் கடைசி வரை போராடிப்பாக்குது. மரவுரி எண்டது எங்களுக்கு ரத்த நாளங்கள் மாதிரி.மரவுரியை அகத்தி விட்டமெண்டால் வேருக்குச் சாப்பாடு போகாமல் மரம் மெல்ல மெல்லப் பட்டுப்போகும்.ஆனா இந்த வேம்பு மரவுரியின் மேல் பகுதியில் இருந்து சில வளர்ச்சிகளை உருவாக்கி கீழே இறங்கி வெட்டப்பட்ட இடத்துக்குப் பாலம் போட்டு வெட்டின இடங்களை நிரப்பப் பாக்குது.கீழை வாற இந்த வளர்ச்சிகளை வெட்டி விட்டமெண்டால் ரெண்டு மூண்டு மாதத்திலை மரம் பட்டுப்போகும்” என்றவாறே தன் பேனாக்கத்தியை விரித்தான்.

“வேண்டாம் தம்பி வேண்டாம் !”

நான் அவசரத்துடன் அவனைக் கையைப்பற்றித் தடுத்தேன்.

“அது எவ்வளவு கஸ்ரப்பட்டு தன்ரை உயிரைக் காப்பாத்தப் போராடுது.

அதை விட்டு விடுவோம்.ஓடுகள் உடைஞ்சால் வருசா வருசம் மாத்திட்டுப் போறது.”

விநோதன் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான்.

வடகோவை வரதராஜன் -இலங்கை  

வடகோவை வரதராஜன்

(Visited 148 times, 1 visits today)

2 thoughts on “மனவுரியும் மரவுரியும்-சிறப்பு எழுத்துகள்-வடகோவை வரதராஜன்”

Comments are closed.