மழைப் பஞ்சாங்கம்-சிறுகதை-வடகோவை வரதராஜன்

 

வடகோவை வரதராஜன்சின்னண்ணை 10 மணிக்கே மாடுகளை அவிழ்க்கத் தொடங்கி விடுவார். ஒவ்வோர் மாட்டிற்கும் தாவளை போட்டு கேணியடிக்கு கொண்டுவர கிட்டத்தட்ட 11 மணியாகிவிடும்.

மாடுகள் என்றால் எல்லாம் மாடுகள் தானே?

இல்லை என்பார் சின்னண்ணை!

மனிதரைப் போன்று ஒவ்வோர் மாட்டிற்கும் தனித்தனிக் குணங்கள் உண்டு.

பட்டியில் அடங்க மறுக்கிற ‘அடங்காப்பிடாரி மாடு’ எல்லா மாடுகளையும் கொம்பால் முட்டி ஓடோடக் கலைக்கிற சண்டியன்மாடு.

கட்டால் அவிழ்த்ததும் நாலுகால் பாச்சலில் வயலுக்கு ஓடமுனைகிற அவசரக்காறமாடு!

அவிழ்த்தது தான் தாமதம் கன்றிற்கு அண்மையில் சத்தப்படாமல் நகர்ந்து போய் பால்கொடுக்கிற காரியக்கார மாடு!

கொஞ்சம் முரட்டுத்தனம் காட்டினால் பொத்தென விழுந்து படுத்து, எவ்வளவுதான் முயன்றாலும் எழும்ப மறுத்து அழிச்சாட்டியம் பண்ணுகிற பாசாங்கு மாடு!

இவை ஒன்றிலுமே கலந்துகொள்ளாமல் தான் உண்டு தன் மேய்ச்சல் உண்டு என்று இருக்கிற அப்புராணிமாடு’

இவை அனைத்தையும் ஓர் கட்டுப்பாட்டிற்குள் வைத்து மேய்ச்சலுக்குக் கொண்டுபோய் கொண்டு வருவது என்றால் அது ஆமான தேகக்கட்டுள்ள ஆம்பிளையாலேயே முடியும்.

சின்னண்ணைக்கு அவ்வளவு பெரிய தேகக்கட்டுக் கிடையாது. ஆள் சுள்ளலாகத்தான் இருப்பார். அத்தனையும் வைரம். உடம்பு சாட்டை நார் போன்று முறுகித் திரிந்திருக்கும். வயறு உட்குழிந்து எக்கியிருக்கும். சின்னண்ணையின் 25, 30 மாடுகளும் அவரின் கட்டுக்குள் அடங்குவதன் காரணம் அவரின் தேகக்கட்டல்ல!

அவரின் குரல்வளம்! அது என்ன குரல்? சிங்கத்தின் கர்ஜனை! கோடையிடியின் முழக்கம்! ஒரு கட்டை தூரத்திற்குக் கேட்கும்!

‘டேய்’ என்றால் குடல் தெறிக்க ஓடுகிறவனும், ஏதோ ஓர் அமானிய சக்திபிடித்து இழுத்தாற்போல் நின்றுவிடுவான். சிறுபிள்ளைகட்கு காற்சட்டை நனையும். அத்தகைய குரல் அது! அந்தக் குரல் கொண்டு எத்தனை நேரம் கத்தினாலும் சின்னண்ணைக்கு தொண்டை கட்டாது. குரல் பிசிறடிக்காது.

இந்தக்குரல் வளத்தாலேயே சின்னண்ணைக்கு ‘குழறி சின்னத்தம்பி’ என்றோர் பட்டப்பெயர் உண்டு. ஊரில் இரண்டு மூன்று சின்னத்தம்பி உண்டு. ‘குழறி’ என்றால் சட்டென இனம் கண்டுகொள்ள முடியும்.

சின்னண்ணைக்கு எவ்வாறு இந்தக் குரல் வளம் வந்தது?

நீர்வேலி கந்தசுவாமி கொடியேறி 16-ம் நாள் வேட்டைத் திருவிழா. வேட்டை திருவிழா ஓர் கோலாகலத் திருவிழா!

கந்தசுவாமியார், பருத்தித்துறை வீதியை குறுக்காக கடந்து வயல் வெளியூடு இறங்கி கோப்பாய்க்கு வேட்டையாட வருவார். வயல்வெளியின் மத்தியில் உள்ள தாழம் புதர் மண்டிய நாச்சிமார் கோவில் சுற்றாடலே அவரின் வேட்டைத்தலம். சுவாமிக்கு பின்னால் குஞ்சும், குளுவானும், இளசும் முதிருமாக கொள்ளை சனம் தாமே வேட்டைக்குப் போகிற உற்சாகத்தில் தூள்பறத்தும்!

எல்லா மனிதனும் மனதளவில் வேட்டையாடிகள் தான். கல்கொண்டு முயல்கொன்ற ஆதிமனிதன், எல்லா மனித மனங்களிலும் ஏதோ ஓர் மூலையில் இருக்கவே செய்கிறான். வேட்டைக் கதைகளையும், வீரதீரக் கதைகளையும் படிப்பதன் மூலம் அல்லது சினிமாவில் பார்ப்பதன் மூலம் ஓர் பொய்யான கற்பனையில் நாமும் வேட்டையாடி வீரதீரச் செயல்களைச் செய்து அந்தக் கற்கால மனிதனுக்கு ஒவ்வோர் மனிதனும் தீனிபோடுகிறான்.

அதிர்ஷ்டவசமாக இந்த நீர்வேலி கோப்பாய் கிராம மக்களுக்கு முருகனுடன் கூட்டுச் சேர்ந்து வேட்டையாடி மகிழ்கின்ற நிஜச்சந்தர்ப்பமே 16ம் திருவிழா.

வயது வித்தியாசம் இன்றி இந்த மனவேட்டையாடிகள் தங்கள் கற்கால மனிதனை வெளிக்கொணர்ந்து ஆக்ரோத்துடன் தாழம் பற்றைக்குக் கற்களை வீசுவார். தாழம் புதரைச் சுற்றி மூச்சிரைக்க ஓடுவர்.

மாலை மயங்கிவிரும் மையல் பொழுதில் அலங்கார தீபங்களுடன் முருகனும், பட்டைதரித்த வேட்டையாடிகளும் கண்கொள்ளாக்காட்சி!

எங்கும் ஹே..! ஹே… என்ற சத்தங்கள்!

பிடிபிடி என்கிற கூச்சல்கள்.

எறி, கொல்லு! என்கிற காட்டுக் கத்தல்கள்!

நெல்லறுப்பு முடிந்து நில ஈரத்தில் வயல் வெளியில் விதைக்கப்பட்டிருக்கும் பயறு காய்க்கத் தொடங்குகிற பருவமது!

எல்லா வயல்களும் துவளபடும். எல்லோர் வாயிலும் பச்சைப் பயிற்றின் பால் வாசனை மணக்கும்! சுவாமி வேட்டையாடிய களைப்புத்தீர இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலில் வந்து இளைப்பாறுவார். வேட்டையாடிக்கு அவல் சுண்டலும், வாழைப்பழமும், சர்க்கரைத் தண்ணீம் வழங்கப்படும்.

அதன் பின்னர் ‘ஓ’ வென்றிருக்கிற வயல் வெளியில் பொய்க்கால் குதிரையாட்டம் தொடங்கும். சனங்கள் வட்டமாக குழுமி நிற்க மையத்தில் குதிரைகள் ஆடத் தொடங்கும்.

துள்ளி எழும்பியும், பிருஸ்டத்தைக் குலுக்கியும், வாலைச் சுழற்றி வீசியும், மின்வெட்டு நேரத்தில் சடார் எனத் திரும்பியும் குதிரைகள் ஆடத்தொடங்கும். அப்போதுதான் சின்னண்ணையின் உதவி அங்கு தேவைப்படும்!

ஆட்டத்தைப் பார்க்கும் ஆவலில் சனங்கள் நெருங்க வட்டம் சிறுத்துவரும். வசதியாக ஆட இடம் போதாமையால் குதிரைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்! உயரத் துள்ளும். சிறுத்த வட்டத்தின் எல்லைவரை வந்து பிருஸ்டத்தால் சனங்களைத் தள்ளும். இந்த மக்களை ஒழுங்குபடுத்துவது தான் சின்னண்ணையின் வேலை. கையில் ஒப்புக்கு ஓர் கம்புடன் ‘ஹேய்’ என்று ஓர் சர்ச்சனை போட்டபடி வந்தால் கூட்டம் தானாய் ஒதுங்கும். கம்பு காற்றில் ‘வீர் வீர்’ என வெறுமனே ஓசை கிளப்பும்.

பொய்க்கால் குதிரையாட்டம் முடியுமட்டும் சின்னண்ணையின் இந்த ‘ஹேய்’ சத்தமும் ‘டேய்’ கர்ச்சனையும் சனங்களை கட்டுக்குள் வைத்திருக்கும்.

இந்த சனம் அடக்கும் வேலையை சின்னண்ணையில் குரலை அகட்டி அகட்டிக்கொடுத்தது.

குழறி என்பதற்கு இன்னுமோர் காரணம் உண்டு. சின்னண்ணை முன்னிற்காமல் ஊரில் எந்தவோர் நல்லது கெட்டதும் நடந்தது கிடையாது. சின்னண்ணை வராமல் எந்த பிரேதமும் சுடலை போனது கிடையாது. ஆள் முடியப்போகிறதிற்கு அறிகுறியாக சேடம் இழுக்கத் தொடங்கவே சின்னண்ணை ஆஜராகிவிடுவார். ஆள் கண் மூடியதும், கண்வாய் பொத்தி, சீவனின் கடைசிநேரப் பயத்தால் வெளியேறிய மலசலங்களை அப்புறப்படுத்தி, குத்துவிளக்கேற்றி… இத்தியாதி வேலைகளை சின்னண்ணை தனக்கென ஒதுக்கப்பட்ட கடமைகள் போல செய்து முடிப்பார். முடிந்ததும் உடையவரிடம் குளறட்டே என்பார். அவர் தலை அசைத்ததும், ஐய்யோ!! என்ரை அய்யோ!! என்ற ஓர் அதிபயங்கரமம், கலக்கமும் உள்ள தொனி அவரின் கண்டத்தில் இருந்து புறப்பட்டு காற்றில் அலை அலையா ஒருமைல் வரை போகும். இந்த அசுரக் குரலைக்கேட்ட குழந்தைகள் தாய்மாரின் மடிக்குள் புகுந்து வீரிடும்.

இந்த குலை நடுங்கவைக்கும் குரல் வந்த திக்கை வைத்து ஊர்ச்சனங்கள் இந்த வீட்டில் ‘செத்தவீடு’ என வரத் தொடங்கும். இந்தக் குழறல் கலையாலும் சின்னண்ணைக்கு ‘குழறி’ என்ற பட்டப் பெயர் வந்திருக்கலாம்.

மாடுகளுடன் சின்னண்ணை பலவித சுருதிபேதங்களுடன் பேசுவார். சண்டித்தனம் பண்ணுகிற மாடுகள், பட்டியைவிட்டு விலத்தி தோட்டங்களுக்குள் புகுகிற மாடுகள், கட்டை அவிழ்க்க முன் திமிறி வயலுக்கு ஓட முயலும் மாடுகள், இவற்றிற்கெல்லாம் ‘ஏய்’ என்றோர் சிம்ம கர்ச்சனை.

சின்னண்ணையின் குரல் கேட்டதும் எந்தக் குழப்படி மாடும் கடைக்கண்ணால் அவரை ஒருதரம் பார்த்துவிட்டு அப்புராணி போல பட்டியில் அடங்கிவிடும்.

சின்னண்ணையின் ஒவ்வோர் மாட்டிற்கும் ஒவ்வோர் பெயர் உண்டு. மயிலை, வெள்ளைச்சி, நரைச்சி, சிவப்பி, கறுப்பி, கழுகன் என்று அந்த அந்த மாட்டின் நிறங்களைக் கொண்ட பெயர். சுட்டிச்சி (நெற்றியில் சுட்டி உள்ளது) மொட்டைச்சி (கொம்புகள் இல்லாதது), ஆடு கொம்பி (இரண்டு கொம்புகளும் சுயாதீனமாக அசைக்க கூடியது) தலை சுழற்றி (கட்டப்பட்டு இருக்கும்போது தலையை எப்போதும் சுழற்றிக்கொண்டிருப்பது), அஞ்சு முலைச்சி (4 முலைக் காம்புகளுடன் மேலதிகமாக ஓர் காம்பு கொண்டது), ஆமை மடிச்சி (பால்மடி அதிகம் பெருத்து தெரியாமல் உள்வாங்கி இருப்பது), மலடியன் கண்டு (6 வருடங்கள் கருத்தரிக்காமல் இருந்த மாடொன்று மலடி என்று நினைத்திருக்க 7ம் வருடம் கருத்தரித்து பிறந்த கன்று)… இவ்வாறு தனித்தனி அடையாளங்களைக் கொண்ட பெயர்! ஒவ்வோர் மாட்டிற்கும் தங்கள் தங்கள் பெயர் தெரியும். ‘அஞ்சு முலைச்சி நில்’ என்றால் மற்ற மாடுகள் போக ஐந்து முலைச்சி நிற்கும்.

மேய்ச்சலுக்கு மாடுகளை அவிழ்க்கும் போது சின்னண்ணை அவற்றுடன் செல்லம் பொழிவார். அப்போது அவரின் குரலைக் கேட்பவர்கள் இவரா அந்த சிம்ம கர்ஜனைக்காரர் என ஆச்சரியப்படுவர்.

ஒவ்…! ஒவ்…! கொஞ்சம் பொறடி! நக்காதை ஆச்சி! பாரன் அவவின்ரை அவசரத்தை என்று அவர் மாடுகளுடன் செல்லம் கொஞ்சும்போது குரல் இழகி பாகாய் இருக்கும்!

அன்று சின்னண்ணையின் மாடுகள் இலுப்பையடிப் பிள்ளையார் கோவில் கேணியடிக்கு வரும்போது மணி பகல் பதினொன்று. மாடுகள் கேணியில் இறங்கி நீர் குடித்தன. அவசரம் அவசரமாக கேணியினுள் இறங்கிய மாடுகள் ஆறுதல் ஆறுதலாக வெளிவந்தன.

அதுவரை அனலாக பொரிந்து கொண்டிருந்த வெய்யில் தணிந்தது. இருந்தால்போல் கிழக்கே மப்புக்கட்டியது. கிழக்கு மூலையில் கோப்பாய் கடலுக்கு மேல் வானம் இருளத் தொடங்கியது. அனலை வாரி இறைத்த காற்று தணிந்து, திடீர் என திசைமாறி வடக்கில் இருந்து வீசத் தொடங்கியது.

‘வாடை பிறக்கிறது’ என்றபடி சின்னண்ணை வலது கையை புருவ மேட்டின் மேல் ‘சன்சேட்’ ஆக வைத்துக்கொண்டு கிழக்கே பார்த்தார். இருண்டிருந்த கிழக்குப் பகுதியின் மேகங்கள் மேற்கு நோக்கி அசைந்து கொண்டிருந்தன.

மாடுகள் சில மூஞ்சியை மேலே தூக்கி மோப்பம் பிடித்தன. பெருமழை பெய்வதற்குரிய அத்தனை சாத்தியக்கூறுகளும் சின்னண்ணைக்குத் தென்பட்டன.

அவர் மாடுகளை திரும்பவும் பட்டியை நோக்கி திருப்ப முற்பட்டார். மேய்ச்சலுக்கு எனப் புறப்பட்ட மாடுகள், மேய்ச்சல் இல்லாமல் பட்டிக்குத் திரும்ப மறுத்தன.

மாடுகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. இந்த முதல் மழையில் நனையக்கூடாது. இதில் சின்னண்ணை வலு கண்டிப்பு.

கடும் வறட்சிக்குப் பின் பெய்கிற முதல் மழையில் நனைகின்ற மாடுகள் நோய்வாய்ப்படுகின்றன என்று சின்னண்ணை சொல்வார். வறட்சியின் பின் முறையாக இரண்டு மழை பெய்து பூமி ஆறி சூடு தணிந்தபின் பெய்கிற மழையில் 24 மணிநேரமும் மாடுகள் நனையலாம். ஆனால் முதல் மழையில் நனைய கண்டிப்பாய் சின்னண்ணை விடமாட்டார்.

அத்தனை மாடுகளையும் பட்டிக்குத் திரும்பிவந்து கொட்டிலினுள் அதன் அதன் இடங்களில் கட்டி முடித்தபோது சின்னண்ணை நன்றாய்த்தான் களைத்துப்போனார். அவரின் உடம்பு வியர்வையில் குளித்திருந்தது. ஆனாலும் முதல் மழையில் மாடுகளை நனையவிடாமல் காப்பாற்றிவிட்ட நின்மதி உணர்வு அவரின் வெள்ளைத்தாடி மண்டிய முகத்தில் தெரியாவிட்டாலும், அவரின் கண்களில் தெரிந்தது.

அந்த முறையைப் போல் கோடை ஒருபோதும் கொழுத்தியதில்லை. பருவமழை பிந்தி இன்றுதான் முதல் குறி காட்டுகிறது. இந்த ஒரு மாதமும் கொழுத்தி எரிந்த வெய்யிலின் வேகரம் கொஞ்சம் நஞ்சமல்ல. பகலும் இரவும் வித்தியாசம் இன்றி நிலம் கொதித்து பாலையாய் கிடந்தது. பவனம் எந்தவித அசைவும் இன்றி இறுகி மரங்கள் அசையாது வானத்து நீருக்குத் தவம் புரிந்தன.

கோப்பாய் கிராயின் களிமண் பூமி பாளம் பாளமாக வெடித்து நீருக்கு வாய்பிளந்து நின்றது. சம்பைப் புற்கள் எல்லாம் கருகி மாடுகள் எதையும் மேயமுடியாது இங்கும் அங்கும் அலைந்து திரிந்தன. நாச்சிமார் கோவில் தாளை மரங்களின் இலைகள்கூட பழுத்து பொன்னிறமாகிவிட்டன.

பருவம் பொய்த்து ஒருமாத காலமாய் அவிச்சலும் புழுக்கமுமாய் உறுத்திய காலநிலை இன்றுதான் சற்று நெகழ்ந்து கொடுத்தது. புழுக்கம் தாங்கமுடியாமல் பெண்கள் மார்புச்சட்டையும் முதுகு சேலையையும் அடிக்கடி இழக்கி விடுவது போல ஏறக்குறைய ஒரு மாதத்தின்பின்பு ஊதத் தொடங்கிய காற்றில் மரங்கள் தம் இலைகளை இளக்கிவிட்டன.

பெருமழை கொட்டத் தொடங்குவதற்குரிய அத்தனை ஆயத்தங்களும் ஏமாற்றத்தில் முடிந்தது. 11 மணிவாக்கில் கருக்கூடிய மேகங்கள், பிற்பகல் இரண்டு மணி வாக்கில் மேற்கே சென்று மறைந்தன. இரண்டு மணியின் பின் வானம் நிர்மலமாக பவனம் பழையபடி இறுக வாடிச்சோர்ந்த மரங்கள் மீண்டும் வானத்தை நீருக்கு இரங்கி நின்றன.

அன்றிரவு வடக்கு மூலையில் மின்னல் வெட்டியது. சில்வண்டுகள் இரையத் தொடங்கின. கிணற்றுத் தவளைகள் முதல் மழைக்குக் கட்டியம் கூறி ‘றிக் றிக்’ பாடத் தொடங்கின. வெளவால்கள் வடக்கிலிருந்து தெற்காகப் பறந்தன. ஆனாலும் அன்றிரவு மழை ஏமாற்றிவிட்டது.

அடுத்தநாள் சின்னண்ணை பதினொரு மணிவாக்கில் மாடுகளை தரவைக்குக் கலைத்தார். இரண்டு மணியளவில் வானம் இருளத் தொடங்கியது. இறுகிய பவனம் மேலும் இறுகி அவித்துக் கொட்டியது. மழை வருவதை உணர்ந்த குக்குறுப்பாச்சான்கள் அவலக்குரலில் கத்தியபடி பறந்தன. மஞ்சள் வெய்யில் அடித்தது.

சின்னண்ணை அவசரம் அவசரமாக மாடுகளைச் சாய்க்கத் தொடங்கினர். முதல் மழை பேயாக கொட்டப்போகிறது. அதற்குள் மாடுகள் பட்டிக்குப் போய்ச் சேரவேண்டும். வழமையான நேரத்தைவிட முன்னதாக பட்டிக்குத் திரும்ப மாடுகள் மறுத்தன. வயிறார மேயமுன் தம்மை திருப்பிக் கலைக்கிற எஜமானின் சொல்லுக்குக் கீழ்ப்படியாமல் முரண்டு பிடித்தன. மாடுகளைக் குரலாலேயே அடக்கியாள்கிற சின்னண்ணை வழமைக்கு மாறாக நாச்சிமார் கோவில் பூவரசு மரமொன்றில் கொம்பொன்றைப் பிடுங்கி சில மாடுகட்கு ‘சுரீர்! சுரீர்!’ என வைத்தார்.

“ஓடு! கெதியாய் ஓடு! மழைக்கு முன்னம் போய்ச்சேர்” அடிபட்ட மாடுகள் ரோசம் கொண்டன. புழுதி கிழப்பியபடி பட்டிக்கு விரைந்தன. அத்தனை மாடுகளையம் கொட்டிலில் அதன் அதன் இடத்தில் கட்டிமுடித்து நாரியை நிமர்த்தியபோது மழை மேகங்கள் மேற்கால் நகர்ந்துவிட்டன.

சின்னண்ணை எரிச்சலுடன் காறி உமிழ்ந்தார். இனி மாடுகளைத் திரும்பவும் வயலுக்கு ஓட்டிச் செல்வதென்பது முடியாத காரியம். இன்று மாடுகள் வாழை இலையுடன் அரைவயிற்றை நிரப்ப வேண்டியதுதான்.

ஏறத்தாழ ஒரு கிழமைவரை மழை கண்ணாமூச்சி காட்டி சின்னண்ணையை அலைக்கழித்தது. மாடுகளை வயலுக்கு ஓட்டிச் செல்வதும், பின் மழைக்குறி கண்டதும் மாடுகளைக் கலைத்து வருவதுமாக சின்னண்ணை நன்றாய் களைத்துப் போய்விட்டார்.

தொடர்ந்து வெய்யில் கொளுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் சில்வண்டுகள் இரைச்சலை நிற்பாட்டவில்லை. மாரிக்காலத்தில் கோப்பாய் வயல்வெளியில் குளமாய் தேங்கி நிற்கும் தண்ணீரில் உணவு தேடி வலசை வருகின்ற கொக்குகளும், நாரைகளும், மடையான்களும் தனது கணக்கில் இம்மியும் பிசகாது குறித்த நேரத்தில் படைபடையாக வயல்வெளியால் வந்து இறங்கத் தொடங்கிவிட்டன. பருவமழை பொய்த்த கதை அவைகட்கு தெரிய நியாயம் இல்லைத்தானே!

தண்ணீர் இல்லாத வயல்வெளியில் அவை கிழித்து எறியும் பட்ட வெள்ளைக் கடுதாசி போல அங்கும் இங்கும் அலைந்து திரிந்து உணவு எதுவும் இன்றி ஏங்கிய காட்சி மனதில் வெறுமையைக் கொடுத்தது.

இலுப்பையடி பிள்ளையார் கோவில் கேணியின் நீர்மட்டம் இருந்தாற்போல் உயர்ந்து முதல்படியைத் தொட்டுவிட்டது. வயல் வெளிகளில் மருந்துக்குக்கூட நீர் இன்றி பிரமியும் ‘பொடுதலையும்’ முளைத்திருந்த துரவுகளில் இரவோடு இரவாக அரையடிவரை நீர் வந்து விட்டது. மழை பெய்வதற்கு முன் இவ்வாறு கோப்பாய் பகுதி நீர் நிலைகளின் நீர்மட்டம் திடீர் என உயர்வது அசாதாரணமானது அல்ல.

அன்று என்றுமில்லாதவாறு புழுங்கி அவிந்தது. பிள்ளையார் எறும்புகள் பிரகாசமான வெய்யிலில் முட்டைகளை காவிக்கொண்டு மேட்டுப்பாங்கான இடங்களுக்கு விரைந்தன.

அன்றும் சின்னண்ணை வழக்கம்போல் மாடுகளைச் சாய்க்கத் தொடங்கினார். வலசை வந்து கொக்குகளும், நாரைகளும் மாடுகளின் பின்னால் உண்ணி பொறுக்குவதற்காக அலைந்தன. இருந்தாற்போல் தென்கிழக்கு மூலையின் மின்னல் பளீரிட்டு மேகம் முழங்கியது. சூல் கொண்ட மேகங்கள் விரைவாக கூடத் தொடங்கின. ஆனால் சின்னண்ணை இன்று ஏமாறத் தயாரில்லை. மாடுகள் வழக்கம்போல் வயலுக்கு விரைந்தன.

இறுகிய வானம் இருந்தாற்போல் இளகியது. திடீர் என ஓர் காற்று சுழற்றியடித்தது. மிகமிக வேகமாய் கருமுகில்கள் திரண்டு வந்தன. சுழன்றடித்த சூறைக்காற்று வாழை மரங்களை அடியுடன் புரட்டித் தள்ளியது. கேணியடித் தென்னைகள் பேய்பிடித்த பெண்ணைப் போல் சுழன்றாடின. காவோலைகளும், பன்னாடைகளும் பனைமரங்களில் இருந்து பிடி சுழன்று அப்பால் போய் விழுந்தன.

கோபமுற்ற வானம் கர்ச்சித்தது. அதற்குப் பழிப்புக்காட்டி மின்னல் வானத்தைத் துண்டு துண்டாக கிழித்தது. கோபம் கொண்ட இரண்டு அரசர்கள் உறுமி உறுக்கி ஒருவரை ஒருவர் வெருட்டுவது போல் நெடுநேரம் வானம் இரண்டு குரலில் உறுமிக்கொண்டே இருந்தது.

இருந்தாற்போல் ஆலம் கட்டிகள் சடசடவென விழத்தொடங்கின. ஒவ்வோர் துளியும் ஈயக்குண்டுகள். சின்னண்ணையின் வெற்று மேனி இந்தக் குண்டுத்தாக்குதலால் நோவெடுத்தது. அவர் அவசரம் அவசரமாக பட்டி நோக்கி மாடுகளை விரட்டத் தொடங்கினார். ஆலம் கட்டி மழையும் சீறும் காற்றும், மூன்றடி தூரத்திற்கப்பால் பார்வைப் புலனை மறைத்தன. கோப்பாய் கடலுக்கப்பால் கைதடி வெளியில் மழை சோனா வாரியாக பெய்கிற சத்தம் பேய் இரைச்சலாக கேட்டுக்கொண்டிருந்தது.

சின்னண்ணை பிள்ளையார் கோவிலடிக்கு வருவதற்கிடையில் தொப்பலாக நனைந்துவிட்டார். புழுதிவாசமும், மாடுகளில் பட்ட மழைநீர் கிளப்பிய மாட்டு வாசனையும் ஓர் கதம்ப வாசனையுலகை சிருஸ்டித்தன.

சின்னண்ணை மடுகளை கொட்டிலில் கட்டிவிட்டு வேர்வையும் புழுதியும் மழை நீரும் பட்டு கசகசத்த உடலை நீராட்ட கேணியடிக்கு வந்தார்.

காற்று இன்னும் உக்கிரத்துடன் வீசிக் கொண்டிருந்தது. மழை கண்டு ஆடுகள் உச்சஸ்தாதியில் கத்தின. கேணியில் இறங்கி முழுகினார் சின்னண்ணை. மழை தந்த வருண பகவானுக்கு நன்றி சொல்லி கிழக்கு நோக்கி கைகூப்பினார். கூப்பிய கை தாழ்ந்தது.

வேகம் வேகமாக வந்த மழை மேகங்கள் வேகம் வேகமாக காற்றால் ஊதித்தள்ளப்பட்டு மேற்கே சரிய கிழக்கு வெளுத்தது. சிறிது நேரத்தின் பின் சூரியன் சிரித்தான்.

சூரியன் சிரிப்பதைக் கண்ட சின்னண்ணைக்கு ஆவேசமே வந்துவிட்டது. கேணியை விட்டு விரைந்து வந்தார். கோவிலுக்கு முன்னால் கொட்டிக் கிடந்த மண்ணில் பிடியெடுத்து ஆவேசத்துடன் ஊதியெறிந்தார்.

“இன்னம் மூண்டு நாளேக்கை நீ இறங்காட்டி உன்னை இறங்க விடமாட்டன்! ஓ! பாத்துக்கொள்; இது விளையாட்டில்லை; மூண்டு நாளேக்கை நீ இறங்க வேண்டும்! இல்லாட்டி ஒரு துளியும் இறங்கிவிட மாட்டேன்” – ஆவேசம் வந்தவராய் கத்தி இன்னும் இரண்டுபிடி மண்ணெடுத்து ஊதியெறிந்தார்.

சின்னண்ணை மடியில் கட்டி வைத்திருந்த புகையிலைச் சுருளை கசக்கி எறிந்தார். கோயில் முன் சால்வையை உதறி விரித்தார். விரித்த சால்வையில் ஈரம் சொட்டச்சொட்ட அமர்ந்துகொண்டார்.

கோயிலில் நின்ற சனம் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டு நின்றது. சின்னண்ணையின் கூட்டாளியான கெந்தல் தம்பா “சின்னத்தம்பி என்ன வேலை செய்யிறாய்” என்று பதட்டப்பட்டார்.

சின்னண்ணை யாருடனும் பேசாமல் சகட யோகிபோல் சம்மணமிட்ட நிலையில் கோயிலின் முன் உட்கார்ந்திருந்தார். மாலை மயங்கி வந்தது. சின்னண்ணை எழும்பவில்லை. மாடுகள் பட்டியில் கதறின. காற்று இன்னம் உக்கிரத்துடன் வீசிக்கொண்டே இருந்தது. அந்த ஊதல் காற்றில் இரவு முழுவதும் வெற்று மேனியுடன் ஒடுக்கிக்கொண்டு, தன் பிடிவாதத்துடன் இருந்தார் சின்னண்ணை. சின்னண்ணை மழையுடன் சபதமிட்டு கோயில் வாசலில் விரதம் இருக்கும் கதை இரவோடு இரவாக ஊரெல்லாம் பரவிவிட்டது.

மறுநாள் கிழக்கு வெளுத்தது. அன்று இரவு முழுவதும் வீசிய காற்று எங்கோ ஒளிந்து கொண்டது. பவனம் பழையபடி இறுகிக் குமைந்தது. சின்னண்ணையைப் பார்க்க ஊர்ச்சனம் எல்லாம் கோயில் வாசலில் கூடியது.

சின்னண்ணை யாருடனும் பேசவில்லை. எந்நேரமும் வாய் நிறைய புகையிலையைக் குதப்பி ‘புளிச்சு, புளிச்சு’ எனத் துப்பும் அவர் இன்று இரவு முழுவதும் புகையிலை போடவில்லை.

எட்டுமணியளவில் கோவில் குருக்கள் வந்து இந்தக் கூத்தைப் பார்த்தார். பூசை முடிந்த கையோடு சின்னண்ணைக்கும் இரண்டு பூப்போட்டு தீர்த்தமும் தெளித்த குருக்கள், “எழும்பு சின்னத்தம்பி இனி மழை வரும்” என்றார். சின்னண்ணை அசையவில்லை. குருக்களைப் பார்ப்பதைத் தவிர்க்க கண்ணை மூடிக்கொண்டார்.

அன்று என்றுமில்லாதவாறு வெய்யில் அகோரம் கொண்டது. சூட்டு வெய்யில் சின்னண்ணையின் உடலைப் பொசுக்கித் தள்ளியது. அவர் உடல் எல்லாம் சலம் சலமாக வியர்த்துக் கொட்டியது. இந்தக் கண்றாவியைப் பார்க்கச் சகிக்காத கெந்தல் தம்பர் அவசரம் அவசரமாக நாலு பூவரசம் தடிகளை நட்டு பச்சை ஓலையில் கிடுகு பின்னி சின்னண்ணைக்கு சிறு கொட்டகை போட்டுக்கொடுத்தார்.

கொள்ளை சனம் அந்தக் கொளுத்தும் வெயிலில் சின்னண்ணையைப் பார்த்துப் போயினர். சிலர் சின்னண்ணைக்கு இரண்டு பூப்போட்டு கும்பிட்டுச் சென்றனர்.

அன்று மழைவருவதற்குரிய எந்த அறிகுறியும் தென்படவில்லை. சில் வண்டுகள் கூட தம் இரைச்சலை நிற்பாட்டி விட்டன. நேற்று துமித்த மழையின் ஈரம் அடியோடு காய்ந்து கோப்பாய் கடல்வெளியில் புழுதிபறந்தது.

சின்னண்ணையின் மாடுகள் மேச்சலின்றி பட்டியில் முறைவைத்து கத்தின.

பாவம் இந்த வாயில்லாச் சீவன்களுக்காகவாவது மழை பெய்யாதா? சின்னண்ணை எழும்பமாட்டாரா? எனச் சனம் பரிதவித்தது. கெந்தல் தம்பர் “விசரன்! வெறும் விசரன் கடவுளோடை சபதம் போட்டு மனிதன் வெல்லேலுமே?” எனப் புறுபுறுத்தவாறு கொஞ்ச வாழையிலைகளைக் கொய்து மாடுகட்குப் போட்டார்.

வானம் எவ்வித கவலையும் இன்றி வழித்து துடைத்து விட்டாற்போல் நிர்மலமாய் இருந்தது. வீடுகட்குள் அடைபட்டுக் கிடந்தோர்க்கே தாகம் வரட்டி எடுக்க செம்பு செம்பாக தண்ணீர் மொண்டினர். மதியம் 12 மணிவாக்கில் சின்னண்ணை எழுந்தார். கோயில் கிணற்றில் நீர் அள்ளி வயிறு நிறையக் குடித்தார். பின் பழைய இடத்தில் வந்தமர்ந்து கொண்டார். அன்றைய இரண்டாம் நாள் பொழுது அவ்வாறே கழிந்தது.

மூன்றாம் நாளும் வெய்யில் வறளக் காய்ச்சியது. இரண்டு கிழமையாய் குறி காட்டிய மழை, குறிகூடக் காட்டாது ஒளிந்து கொண்டது.

ஆனி, ஆடி மாதத்து முதுவேனில் காலம்போல் வெய்யில் பொசுக்கிப் புலுட்டியது. வெய்யில் வேகம் தாங்காது காகங்கள்கூட கிளையில் மறைந்து கொண்டு சோகமாய் கத்தின.

நாளை விடியலுக்குள் மழை பெய்தாக வேண்டும். பெய்யாவிட்டால் சின்னண்ணையின் நிலைப்பாடு என்ன? சனங்கட்கு இதே கதையாக இருந்தது.

இன்று மழை வருமா? சின்னண்ணை எழும்புவாரா? சனம் வெற்று வானத்தைப் பார்த்துப் பார்த்துக் கண் கூசினர். விருத்தெரிந்தவர்களிடையே, மெல்லிய பய உணர்வு பதட்டமாக உருவெடுத்தது. சின்னண்ணை எவ்வித பதட்டமும் இன்றி தாடியை நிமிண்டிக் கொண்டிருந்தார்.

ஊர் இளவட்டங்கள் வைக்கோலில் கொடும்பாவி கட்டி “கொடும்பாவி சாகாளோ, கோடி மழைபெய்யாதோ”

“மாபாவி சாகானோ மாரிமழை பெய்யாதோ”

என்று கத்தியவாறு ஊர் முழுவதும் ஒப்பாரி சொல்லி, இழுத்து வந்து சுடலையில் போட்டு கொளுத்தினர். பிற்பகல் இரண்டு மணியாய் விட்டது. வானத்திடம் எந்தவித இரக்கக் குறியும் இல்லை. தாங்கொணா வெய்யில் பூமியைப் பழுக்கக் காய்ச்சியது. சனத்தின் நம்பிக்கை தளர்ந்து கொண்டே வந்தது.

மூன்று மணி வாக்கில் ஓர் இராட்சத கரும் பறவை சூரியனை மறைத்தாற்போல் வானம் திடீர் என இருண்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடும் என வானம் பொழியத் தொடங்கியது. தென்கிழக்கு மூலையில் மின்னல்கள் வெட்டியடித்தன. கோடை இடி கொடூரமாக முழங்கியது. இடிச்சத்தத்திற்கு வெகுண்ட குயில்கள் அவலக் குரலில் கத்தியபடி பறந்தன.

ஆயிரம் ஆயிரம் யானைகள் எங்கிருந்தோ வந்தாற்போல் கருமுகில்கள் கூடி அவற்றின் தும்பிக்கை போன்ற பாகம் கீழிறங்கி மழை கொட்டிக்கொண்டிருந்தது. வறண்ட பூமி புதுநீரைக் குடித்துக் குடித்து புளகாங்கித்தது.

கொட்டும் மழையிலும் கொள்ளை சனம் குடைகூட இல்லாமல் கோயிலடியில் குவிந்தது. வெற்றிக்கூத்தாடியது. அரோகரா அரோகரா என்ற கோசங்கள். யாரோ ஒருவர் சின்னண்ணைக்காக ‘அரோகரா’ என்று குரல் கொடுக்க, சனம் மகிழ்வெறியுடன் சின்னண்ணைக்கு ‘அரோகரா’ என்று வானைப்பிளந்தது.

சின்னண்ணை இன்னும் எழும்பவில்லை. வானமே பொத்துக்கொண்டாற்போல் மழை பொழிந்து கொண்டிருந்தது. இடி இடித்து மழை முகில்களை ‘கீழிறங்கு, கீழிறங்கு’ என்று வெருட்டியடிக்க, இருட்டில் வழி தெரியாமல் தடுமாறிய மழை முகில்களுக்கு மின்னல் வெளிச்சம்காட்ட மழை குமுறிப் பெய்தது.

ஆசை தீர புதுப்புனலாடிய பூமி இனிக்காணும் என்பதுபோல் தன் உட்கொள்கையை நிறுத்த மழை நீர் சிறிது சிறிதாக சேரத் தொடங்கியது. பின் பள்ளத்தை நாடி ஊர்ந்தது. வீதிக்கு மேற்கே, செம்மண் பூமியில் பெய்த ‘செம்புலபெயல் நீர்’ சிறு ஓடை போல் பெருகத் தொடங்கி மகிழடிப் பிள்ளையார் கோவில் கேணியை நிறைத்தது. கேணி நிறைந்ததும் வெள்ளம் வான் பாய்ந்து வெள்ள வாய்க்கால் ஊடாக வயலை நோக்கி விரைந்தது. வரத்து வெள்ளம் கோயிலடி ஒழுங்கையாலும் நுரைத்துக்கொண்டு வந்தது.

ஒழுங்கையால் வரத்து வெள்ளம் வரத் தொடங்கத்தான் சின்னண்ணை தன் இருப்பித்த விட்டு எழுந்தார்.

‘அரோகரா’ என்று ஓர் பிளிறல் அவர் கண்டத்தில் இருந்து பிறந்து இடிச்சத்தத்தை அமுக்கியது.

சனம் அரோகரா என பதில் குரல் கொடுத்தது. ஆவேசக் கூத்தாடியது. சின்னண்ணை கோயில் கேணியில் இறங்கி இரண்டு ‘முங்கு’ முங்கினார். பின் கோவிலினுள் நுழைந்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டுவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.

மழை தொடர்ந்து பேயாகப் பொழிந்து தள்ளிக்கொண்டிருந்தது. அன்று எல்லோர் வீட்டிலும் சின்னண்ணை சபதத்தைப் பற்றிய கதையே பக்திப் பரவசத்துடன் அடிபட்டுக் கொண்டிருந்தது. எங்கள் வீடுமட்டும் விதிவிலக்கா என்ன? எதற்கும் பகுத்தவிவாதம் புரிகின்ற மாமாவைச் சீண்டினேன். மாமா தாடிக்குள்ளால் சிரித்தார்.

‘விசரன்! விசரன்! குழறி வெறும் விசரன்… தான் விசரனாகினதோடை மட்டுமில்லாமல் சனத்தையும் விசரனாக்கிப் போட்டான். உனக்கு மழைப்பஞ்சாங்கம் எண்டொரு பஞ்சாங்கம் இருக்கு தெரியுமா? அதிலை விஞ்ஞான முறைப்படி வானிலை அவதான நிலையம் ஒவ்வொரு வருசமும் எந்தெந்த மாதத்திலை எந்தெந்த தேதிகளில் எத்தினை அங்குல மழை பெய்தது எனக் குறிச்சுவைச்சிருக்கு. ஒண்டு ரெண்டு வருசமில்லை. கடந்த அம்பது வருச ரொக்காடுகள் இதில் இருக்கு” என்று ஓர் புத்தகத்தை தூக்கிப்போட்டு பிரித்துக் காட்டினார்.

“இந்த முறைக்கோட்பாடுகளின்படி மழை தனக்குத்தானே ஒரு ஒழுங்கு அமைச்சு பெய்து வருகுது. ஒரு குறிப்பிட்ட வருசத்திற்கொருமுறை, மழைத் தொடக்கம், நீடிப்பு, பெய்த அளவு, மழை முடிவு என்பன ஒரு ஒழுங்கைப் பின்பற்றி வருகிறது. இந்த ரெக்காட்களின்படி இந்த வருசம் மழை ஒரு மாதம் பிந்தித்தான் தொடங்குது. கிட்டமுட்ட இண்டைய திகதியை அண்டித்தான் மழை தொடங்கவேணும். அதோடை இண்டைக்கு மாதப்பிறப்பும் எல்லே. எப்பிடி மழை இண்டைக்குப் பெய்யாமல் போகும்?” சபதம் போடுகிறாராம் சபதம்.

மூன்று நாளைக்குள்ள பெய்யாட்டி “ஒரு துளியும் இறங்க விடமாட்டாராம். இவர் பெரிய அகத்தியர், மழையை வாவெனவும், போவெனவும் மூண்டுநாள் தவணை குடுத்திருக்கிறாராம். மூண்டு நாள் கழிச்சு மழை பெய்திருந்தால் குளறி என்ன செய்திருப்பான்? பெய்யாத மழையை குடைபிடிச்சா தடுத்திருப்பான்?

மாமா மழைப்பஞ்சாகத்தைப் பிரித்து காண்பித்து புள்ளி விபரங்களுடன் சின்னண்ணை சபதத்தை பீஸ் பீஸ் ஆக கிழித்தெறிந்தார்.

எனக்கென்னவோ சின்னண்ணை மழைப்பஞ்சாங்கம் என்ற வார்த்தையைக்கூட கேள்விப்பட்டிருக்க மட்டார் என்றே தோன்றியது.

மல்லிகை

புரட்டாதி  1990

வடகோவை வரதராஜன்-இலங்கை

வடகோவை வரதராஜன்

(Visited 332 times, 1 visits today)