எட்டாம் ஸ்வரம்-சிறுகதை-ஷாதிர் ( அறிமுகம் )

ஷாதிர்சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே இன்று சுனாமி அலைகளாக பொங்கும் என் இளமைக்கால அனுபவங்களை மனவெளியில் மோதவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.ஒருபக்கமாய் ரேடியோவில் எட்டாம் ஸ்வரம் நிகழ்ச்சி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அயல்வீட்டுக்காரி பற்றவைத்த குப்பையில் என் வீடு பூராய் சாம்பல் புகை. என் மனதிலும் கூடத்தான்.

Mozart  இன் 40வது சிம்பனியை விட என் மனதுக்கு நெருக்கமானது சாராவின் குரல்தான். கரப்பில் மாட்டிய விரால் போல அவளின் பரதமாடும் கண்களில் சிக்கித்தவித்த காலம் தான் அதிகம். ரோமியோ ஜுலியட் அளவுக்கு பிரபல்யம் இல்லாவிட்டாலும் அவள் என் கிளியோபெட்ரா.அவளுக்கு பிஸ்கட் புடிங் பிடிக்கும். என்னை நையாண்டி பண்ணப்பிடிக்கும். என் தோளில் அவள் இதுவரை சாயாவிட்டாலும் அது அவளுக்குப்பிடிக்கும். அய்ந்தாம் வகுப்பு ஏ பிரிவில் குளிக்காமல் வரும் ஜுயியின் நண்பி இவள். அந்நேரத்தில் அவள் அம்சமான பிகரில்லை. அப்போதெல்லாம் பானு தான் அழகி. பாடசாலை ஓட்டப் போட்டியில் மின்னலாய் பறப்பாள் பானு. எட்டாம் ஆண்டு முதல் அவள் ஓட்டப் போட்டிகளில் பறக்காமல் விட்டதற்கு பின்புதான் வயதுக்கு வந்திருந்தாள் என்பதும் தி.ஜா வின் ‘அம்மா வந்தாள்’  சிறுகதையும் எங்களுக்கு ஏககாலத்தில் தெரியவந்தன.என்னவளின் நெருங்கிய தோழி தான்.எட்டிக்கடந்தால் பாடசாலை ,இடறிவிழுந்தால் வீடு என இருந்த எனது அன்றாட நேரசூசி அவள் மீதான விருப்புக்கூடியவுடன் மாறியது.தரம் பத்து கரீமா டீச்சரின் வகுப்பு. வகுப்புக்கு லேட்டாய் தான் வருவாள். அவளுடன் நெருங்கி பழகிய காலங்களில் ஏன் என்று கேட்டிருக்கிறேன். இன்னும் எனக்கு அந்த கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. வகுப்பு மேசையில் அவளின் பெயரை காம்பாசால் கிறுக்கியிருக்கிறேன். அதைப் பார்த்த அவள் முகத்தில் புன்னகை மட்டுமல்ல வெட்கமும் இரண்டறக்கலந்திருந்து.இப்படியாக பதின்பருவம் அவள் காதலியா கிரஸ்ஸா என்ற குளப்பத்தில் முடிவுற்றது.

இப்படியாக உயர்தரம் படிக்கையில் சுற்றுலா சென்றிருக்கிறோம். ஆண்கள் வேறு பெண்கள் வேறாக இரு பேரூந்துகள். என்னை பொருத்தவரையில் அப்போதைய அதிபரே மிகப்பெரிய பிரிவினைவாதி. அவள் முகம் தெரிகிறதா என பின் இருக்கையில் உட்கார்ந்து மற்றைய பேரூந்தின் கண்ணாடி வழியாக தேடியிருக்கிறேன். சுற்றுலாவின் இரண்டாவது நாள் பதினெட்டு செல்சியஸ் குளிரிலும் விகாரமகாதேவி பூங்காவில் நடந்து சென்றுகொண்டிருந்த  எங்களை திடீரென பூத்த மழை ஓர் மரத்தடியில் சேர்த்தது. கூட்டம் கூட்டமாக மரத்தடிகளில் மழையிலிருந்து பாதுகாப்பு வேண்டி நின்று கொண்டிருக்கையில் நாங்கள் இருவரும் தனியாக ஓர் மரத்தடியில், அவள் என் கையைப்பற்றிய பத்தாவது நொடியில் இறுக்கி அணைத்து என் கன்னத்தில் முத்தமிட்டாள். அடுத்து என் உதட்டில். அம்முத்தங்கள் முப்பது செக்கன்கள் நீளமானவை. சூடானவை.குளிரில் என் மனம் ஏங்கி நின்ற கோப்பியை மறக்கச்செய்தவை. என்னதான் நடந்தது என நான் சுயநினைவுக்கு வர சில மணிக்கூறுகள் ஆகின.முத்தத்திற்கு முன்பும் பின்பும் அவள் முகத்தில் எந்த ஆரோகண அவரோகணங்களும் இல்லை.ஒருவேளை மனதில் இருந்திருக்கலாம், இருந்திருக்கும். அன்று முதல் மழை எனக்கு  வேண்டியதாயிற்று. அவள் இதழ்கள், நாக்கின் நுனி, என் நெஞ்சோடு சேர்ந்திருந்த அவளின் இளம் கொங்கைகள் எல்லாமே எனக்குப் புதிது. அவளுக்கும் தான்.அதுவரை நாங்கள் இருவரும் வாய்விட்டு காதல் என்று மொழிந்ததில்லை. சகபாடிகள் அவள் பெயர் சொல்லி கூக்குரலிடுவர் அவ்வளவும் தான். தினமும் பாடசாலை விட்டதும் அவள் பின்னால் வீடுவரை சென்று விட்டு வந்தேன்.என்னில் விஷேடமாக ஒன்றுமில்லை. ஆனால் அவள் தைரியசாலி. ஒருமுறை பானு செய்த தவறுக்காக டீச்சர் அவளைத் தண்டித்தபோது டீச்சருக்கே மறுமொழி கூறியவள். பின்பு யாருக்கும் தெரியாமல் பல காலங்களாக கை கோர்த்து நடந்து இன்னும் பல முத்தங்கள் மைதானம், சயன்ஸ் லப், மாடிப்படியில் என்று இடம்பெற்றன.

பைனல் எக்ஸாம் முடிந்த பிற்பாடு அவள் கையில் அலைபேசி வந்து சேர்ந்தது. “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா…”  என்றவாறு பேசிக் கழித்திருக்கிறோம். ரிஸல்ட் வந்ததும் அவள் மருந்துவக்கல்லூரி தெரிவானாள். படிப்பில் அவள் வெறித்தனமாக இருந்தாள் என்பதும் எனக்குத்தெரியும். கிழமை நாட்களில் நாங்கள் பேசும் நேரங்களுக்காக ஒர் நேரசூசி இருந்தது. எனக்காக அவள் ஒதுக்கும் நேரம் குறைந்து தான் சென்றது. அவளின் படிப்பின் கடினத்தன்மை தான் கரணமாக இருக்கக்கூடும் என நான் மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அவள் கல்லூரி சென்று ஒரே வருடத்தில் லீவுக்காக ஊருக்கு வந்தாள். முற்றாக மாறிவிட்டாள். கடைசியாக என்னுடன் பேசி ஒரு மாதமிருக்கும். லீவு விட்டு வரும் நாளில் தான் வருவதாக ஒரு குறுஞ்செய்தி இட்டாள். அவள் வரும் பேரூந்துக்காய் காத்துக் கிடந்தேன். தந்தையாருடன் வந்திறங்கி ஓர் முச்சக்கர வண்டியில் வீடு சென்றாள். அப்போதும் எனக்கு லுமாலா மிதிவண்டி தான். பின்னால் சென்றே அவள் வீட்டினுள் நுழையும் வரை பார்த்திருந்து வந்துவிட்டேன். டெனிம் காற்சட்டை போட்டு அவ்வளவு அழகாய் இருந்தாள். மாற்றங்கள் அவசியம் என்று தான் எனக்கும் தோன்றியது . தலைநகரில் படிப்பு. அதுவும் வருங்கால மருத்துவர் என்றால் சும்மாவா. ஒரு கணம் அவளின் தகுதிக்கு நான் பொருத்தமானவனா என்று எண்ணத்தோன்றியது. அன்று இரவு குறுஞ்செய்திகள் நிறையப்பறிமாறினோம். இதுவரை காதல் என்ற சொல்லை நாங்கள் இருவரும் மொழியாவிடினும் அது காதல் தான். எனக்கு இருந்த ரிசல்ட்டுக்கு குமாஸ்தா வேலை தான் கிடைக்கும். இரண்டாவது முறை எக்ஸாம் எழுதியும் எந்தப்பயனும் இல்லை. சின்னப்பாவின் கடையில் வேலை செய்து கொண்டிருந்த காலம் அது. தந்தையாருடன் அந்த லீவில் கடைக்கு வந்திருந்தாள். நான் தான் பலசரக்கு சாமான்கள் கொடுத்தேன். அன்று மாலையே லீவு விட்டு கல்லூரி சென்றாள்.

இன்றோடு பதினேழு வருடங்கள். ஒரு குறுஞ்செய்தி கூட இன்னும் வந்தபாடில்லை. மறந்திருக்க மாட்டாள். தலைநகருக்கு ஒரு முறை சென்றபோது அவளின் கல்லூரிப்பக்கமாக சென்று அவள் பெயர் சொல்லி விசாரித்தேன். அப்படி யாரையும் தெரியாது என்று தான் அங்கிருந்தவர்கள் சகோதர மொழியில் பதிலளித்திருக்க வேண்டும். இன்று நான் ஒரு அரச ஊழியன். பதினைந்து வருட அனுபவத்துடனான ஒரு குமாஸ்தா.அவள் ஞாபகமாய் எந்த தஸ்தவேஜுகளும் என்னிடம் இல்லை. நாங்கள் பரிமாறவும் இல்லை.அவளுக்கு என்னையும் எனக்கு அவளையும் நன்றாக தெரியும். என் சகபாடிகளுக்கு எங்கள் இருவரையும். எனக்கு இப்போது அய்ந்தாம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான். அவளை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற என் பல வருட ஆசை இப்போது மக்கிப்பேய்விட்டது.

அவள் கைம்பெண்ணாய் இருக்கிறாள் என்று பானு சொன்ன தகவலின் பிரகாரம் பேரூந்தில் ஏறி தலைநகரம் சென்றேன். கல்லூரியில் கூடப்படித்த ஒருவனை சாரா திருமணம் செய்திருந்தாள் என்ற செய்தியும்,அவள் தலைநகரில் எங்கிருக்கிறாள் என்ற செய்தியும் எனக்கு அறியக்கிடைத்து பத்துவருடங்களாவது இருக்கும். மனதாற வாழ்த்தி என் மனைவியிடம் கூட சொல்லாமல் மறைத்த இரகசியம் அது.

அவள் வீட்டை அடைந்ததும் மழை தூறலில் வடிகட்டிய காற்று வீசி ஆரம்பித்துவிட்டது.காளிங் பெல்லை அழுத்தினேன். கதவு திறந்தது.என் சாரா தான் அது. அவள் அப்போதும் அழகாய்த்தான் இருந்தாள். ஆச்சர்யம், சந்தோஷம், வெட்கம் எல்லாம் சேர்ந்து அவள் முகம் காட்டிய உணர்ச்சிகள் சொல்லி மாளாது.”உள்ளே வா முகைதீன்” என்றாள்.ஒருகணம் இடிந்து போனேன்.முகத்தின் தசைகள் எல்லாம் இலேசாக சுருங்க ஆரம்பித்துவிட்டன அவளுக்கு.ஆனாலும் என் சாரா எனக்குள் இருந்த சாரா தான் முன்னிருப்பது. எதுவும் பேசவில்லை. பெரிய சோபாவில் என்னை அமர வைத்துவிட்டு கோப்பிப்பானம் தயார் செய்து வந்தாள். இவள் அன்று ஆஸ்பத்திரிக்கு லீவு போல. கோப்பியைக்குடித்துக்கொண்டே உரையாடினோம்.என் குடும்பம், அவள் குடும்பம், எங்கள் ஊர், எங்கள் நண்பர்கள் பற்றியெல்லாம் அளவளாவினோம் . அவள் பேச்சிலிருந்து ஏதோ ஒன்று குறைவாய் இருந்தது. ஒருமணிநேரம் முடிந்திருக்கும். அவள் மகன் பாடசாலை முடிந்துவரும் நேரமாகிவிட்டது என்றாள்.சிறிது நேரத்தில் அவனும் வந்து சேர்ந்தான். என்னை அவனுக்கு அறிமுகம் செய்த பிற்பாடு சாராவின் மகன் அறைக்குள் சென்றுவிட்டான். நானும் வேலை இருப்பதாகச்சொல்லிவிட்டு வெளியேற முனைந்தேன். வாசல்படிவரை வந்த என்னை “முகைதீன்”என அழைக்கும் குரல். சாராம்மாவின் குரல். திரும்பிப் பார்த்த போது என் அருகில் வந்து இறுக்கி அணைத்து இதழ்களைப்பதித்துக் கொண்டாள். சிம்மசொற்பனமாய் இருந்த கணம் அது.  அன்றொருநாள் விகாரமகாதேவி பூங்காவில் கிடைத்த அதே சுகம் மழைத்தூறலில் இருவரும் நனைந்து கொண்டே வாசற்படியில் கிடைத்தது. பத்து செக்கன்கள் சுகானுபவம்.பதினோராவது செக்கனில் பின்னால் இருந்து பாரத்துக்கொண்டிருந்த மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.அவள் கட்டி அணைக்கும் போது என் கைகளில் இருந்து விழுந்த குடையை எடுத்துக்கொண்டு அவள் வாசல் கதவை மூடிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.அங்கிருந்து நேராக ஒரு முச்சக்கர வண்டியில் விகாரமகாதேவி பூங்காவின் அதே மரத்தடி வந்தேன். அன்று பூராகவும் மழை தூறிக் கொண்டு தான் இருந்தது. எனக்கும் அவளுக்குமான தொடர்பு அங்கேயே துவங்கி அங்கேயே முடிந்து விட்டது.அவளுக்கு நான் தகுதி இல்லாதவன் தான். அவளை திருப்தி படுத்த என்னால் முடிந்திருக்குமோ தெரியவில்லை. அவளைப் பொறுத்தவரையில் என் குமாஸ்தா வேலை வைத்தியருக்கு நிகரில்லை. துலாத் தட்டில் அவள் குணம்,படிப்பு எல்லாமே கீழே தான்.என் காதல் வாங்கிய வரம் அந்த முத்தந்தான்.

ரேடியோவில் நா.முத்துக்குமார் வரிகள் இசையாக ஒலிக்கின்றன.

‘காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை……’

ஷாதிர்-இலங்கை

ஷாதிர்

(Visited 459 times, 1 visits today)
 

8 thoughts on “எட்டாம் ஸ்வரம்-சிறுகதை-ஷாதிர் ( அறிமுகம் )”

Comments are closed.