திமிரு-கவிதை-தில்லை

திமிரு

தில்லை

மலைக் காற்றின் காலைமுறித்து
ஜன்னலைச்சாத்துகிறேன்.
எனைமீறியெழுகின்ற காற்று எனக்கு
வேண்டாம்
மூச்சுக்காற்று வெப்பம் என் எல்லை
கடந்த பேரண்டம் மேலெழுந்து
விம்மித்திமிர்கின்றது .

என் கால் மிதிகையில் நசுங்குண்ட…….
காற்று
வார்வக்கட்டின் அடியில்
பயந்தொழிந்து
நேற்றும் புலம்பி என்னிடம்
மண்டியிட்டது.

இன்றும் அதிகாலையின் இருள்
மயக்கத்தில்
சோம்பல் முறித்து எழுந்தது காற்று
என் கனவுகளில் தோற்றுப்போன
புனிதர்களை
துவம்சம் செய்து என் இதயத்தில்
கசிந்து கிடக்கும் திமிர் கீற்றை ஒளிர்
ஏற்றி போயிற்று

0000000000000000000000000

உடல் புக்கா காப்பற்ரோட்டால்
தலைகீழாக நடந்துபோகிறேன்.
ஐந்து டிக்கிறி குளிர் கூட
கொட்டாவி விட்டோடுகிறது.

நீங்கள் சொல்லுங்கள்
நான் ஒற்றை முலை திருகி
பூ, பிஞ்சு, காய், கனிபற்றி..
திசைகளில் கூய்போடும் வக்கற்றவளல்ல…..

நான்
கலங்காத என் தாய்மண்ணிண் சுட்டுவிரலிருந்து
மீதெழுந்திருக்கும் ஒற்றை சன்னம் .

0000000000000000000000000

விம்மித்தணிதல்
நிலக்கண்ணாடியில் பதியமிட்டு
முளைத்திருக்கும்
‘காரைகள்’
கார்கால வெளியில்
மெல்ல..மெல்ல ஊர்ந்து
என் உடலைத் தின்னுகின்றன

கசக்கிவிடும் வலியும்
காற்றில் பறந்து
வேரிழந்த நிலத்தின்
நினைவுகளை
என் காலில் கொட்டுகின்றன.

ஒழுகல்கள்…..
என் உடலின்
ஈறுகளாய் எழுகின்றன.
சோடனைகள்….சுவர்களில் மோதி
மீளும் பந்தினைப்போல்
தாவுகின்றன.

கழுகுகளின் றாஞ்சல்கள்
புதுத்தளிர் ஒன்றினை
மனதிலிருந்துவளர்க்கிறது.
அடைக்கப்பட்ட
அறையிலிருந்து கனவுகள்
ஒளிபாச்சித்திறக்கின்றன

பேரண்டவெளியின் .
எல்லாவடிவங்களும்
எனைத்தூங்காமல் கொல்லும் கணம்.
நான் நேரம் கடந்தும்
இன்ப மயக்கத்தை
புதிய உலகமொன்றுக்கு
அனுப்பிவைக்கிறேன் .

தாகத்தின் பெருவலியை
தாங்கும் எனக்கு
காடுகளும் மலைகளும்
கடல்களும் போதாது என்பேன்

தோய்ந்து…தோய்ந்து
காங்கைகள் சிதற இன்று
குருசேத்திரத்தின்
18 நாள் நிறைவுற்றது.

தில்லை-சுவிஸ்

தில்லை

(Visited 234 times, 1 visits today)