எனக்குள் இருக்கின்ற நீ-கவிதை-தில்லை

தில்லை

தில்லை
ஓவியம் : எஸ்.நளீம்

னக்குள்தான்
உன்னை வைத்துக்கொள்ள முடியும்
வெள்ளரிப் பழம்போல்த்தான்
நீ எனக்குள் வெடிக்கின்றாய்
எனக்குள் வற்றாது பெருக்கெடுக்கும்
வெருகல் ஆறு நீ.

நீ முதலைகளுடனும்
பாம்புகளுடனும்
சுறாக்களுடனும்
வாழ்வது நான் புரிவேன்.

என்பீடத்தின் உச்சியில்
நீ இருக்கிறாய்.
எப்படி உன்னை மறக்க முடியும்?
சும்மா இருந்த என்னை அரட்டி
உச்சாணியில் கொழுவியிருக்கும்
உன் மனதை ஏக்கத்துடன் மட்டும்தான்
பார்க்கிறேன்.

நானும் மனிசி
என் கோபத்தின் அர்த்தத்தை
நீ புரிந்து கொள்
ஒரு நாள் கூட
என் அடித்தொண்டையில்
நீ கசத்ததில்லை
புரிந்துகொள்.

பனிக்காட்டில் நீ
தவிக்கும்போது
நானும் உறைகின்றேன்
உனக்கு இதுவெங்க புரியும்?

என் உடல் உருகி உருகி
துருவமாகக் கரைகிறது
ஏக்கமும் பெருமூச்சும்
ஆயுளைத் தின்னுகிறது
நீதான் 99%…
எல்லாமும்
ஏகமுமாய்
நீக்கமற நிறைந்திருக்கிறாய்.

நீ இப்போ எங்கே?
என் மனட்சாட்சியில்
கட்டுண்டு கிடக்கும்
உன்னைத் தேடுகின்றேன்.

பனிக்காட்டில்
எங்கே? எங்கே?
உன்னை முத்தமிட அவாவுகின்ற மனதிற்குள்
வெருகல் ஆறுமட்டும்
சலசலவென ஓடுகிறது.

நீ ஏன் ஊரை விட்டுப் போனாய்?
என் உயிர் ஆவி எல்லாம்
ஊரையே வட்டமிட
நீ மட்டும்
என்னைப் போல்
ஏன் தொலைந்தாய்.
நான் உன்னை
என்மனசுக்குள்ளே வைத்திருக்கிறேன்.

23.09.2021

0000000000000000000000000

என்னவென்று…

சாளரத்தை அகலத்திறந்து
என் நட்சத்திரவீதியை
வெறித்துப்பார்க்கிறேன்.

பனிபடர்ந்தும் நட்சத்திரம்
ஜொலித்துக்கொண்டேயிருக்கிறது.

ஈர்ப்புக்கொள்ளாத மனம்
தொலைந்த நாணயக்குற்றியைத்
தேடித் துழாவுவதுபோல்
துழாவித் துழாவி
நெற்றிமுழுதும் ஈரம் அப்புகிறது.

மில்க்வைற் சவுக்காரமும்
வாயில் வைக்கமுடியாத
குறுநெல் சோறும், மங்குரொட்டியும்
யாரும்நேசிக்காத.
புள்ளிபோட்ட
சீத்தைச் சட்டையும்
நெரிஞ்சிமுள் குத்தும்
வெறும் பீச்சாண் கால்களுமென.
கழிவுகளின் மொத்த
அலங்காரத்தையும்
என்முன் நிறுத்துகிறது.

பிஞ்சுக்கால்களுக்கும்
பிஞ்சு இதயத்திற்கும்
ஒத்தடம் பிடிக்கமுடியாத
காலநீட்சியை…
நான் இன்னும் சுமக்கின்றேன்
என் கனவுகளாகப்போகாத
வாழ்வின் கூறுகள்
திமிறித் திமிறி எழும்போதெல்லாம்
துஸ்டர்களும்
என்னுள் எழத்தான் செய்கிறார்கள்
நான் என்ன செய்வேன்?

நான் நேற்று தராசில்
நிறுக்கப்பட்டு
நிராகரிக்கப்பட்டபோது
நான் மனம் நொந்துகொள்ளவில்லை.
என் தராசு ஏற்ற இறக்கமற்றது
என்னை யார் நிராகரிப்பது?

பட்டாம்பூச்சியாய் பறக்கும்
என் சிறகுகள்
சுயம்பாய் முளைத்தது
உயரஉயரப்பறக்கின்றேன்.
…………வானத்தை
அண்ணாந்து பார்க்காத
சிறகற்ற ஈசல்
வெறும் ஒளிவட்டத்தைச்
சூடிக்கொண்டு
…………எத்தனை
புற்றுக்களைகட்டியது?
எத்தனை கோட்டைகளை
உருவாக்கியது?

மழைக்குத் தப்பிக்க.
காகத்திற்கும்
வெளிச்சத்திற்கும்
பலியாகும் சிற்றுயிர்
என் சிறகு வளரவில்லையென
கூக்கிரலிட அறுந்துவிழுகிறது
முப்பத்திமூவாயிரம்
வோல்ட் கம்பிகள்.

நான் எந்தத்தராசிலும் நிற்பேன்
என் முள் செங்குத்தானது
நான் பறப்பேன்
என் செட்டை பலமானது.

நான்
ஒரு வேளைச்சோற்றிலும்
மில்வைற் சவுக்காரத்திலும்
சீத்தை துணியிலும்
பீச்சாண் கால்களுடன்
நடந்துவந்தவள்.

எது தகுதி? எது அழகு?
எது நியாயம்?

என்னிடம் மண்டியிடும்
தங்கம் கூட
24
22
18
நான் ஏறெடுத்துப் பார்த்ததில்லை
இப்போ வைரங்களைச் சூட அவாக்கொள்ளவில்லை.

நான் இப்போ
மில்க்வைற் சவுக்காரமும்
புள்ளிபோட்ட
சீத்தச்சட்டையும்
பீச்சாண் கால்களுடன்
உச்சி வெயிலில்
கிறவல் ரோட்டால் நடந்துபோகும்
காலங்களைச் சூடுகிறேன்.

குளிர் புகா
கோட்டுக்களையணிந்து
தராதரங்களையும்
தகுதிகளையும்
இனி என்னவென்று எழுதுவது?
தரிசி நிலத்தின் நெருஞ்சி
05.09.2021

தில்லை-சுவிஸ் 

 

தில்லை
ஓவியம் : றஷ்மி
(Visited 300 times, 1 visits today)