நிகழ் கணம்-கவிதை-சித்தாந்தன்

நிகழ் கணம்

சித்தாந்தன்
ஓவியம் : எஸ்.நளீம்

ன் மார்பைப் பிளக்கப்போகும்
துப்பாக்கிக் குண்டை
ஒரு மலர்க்கொத்தை தாங்கிக் கொள்வதைப் போல
ஏந்திக் கொண்டார்.
சுட்டவனைப் பற்றி அவனோ
அவனைப் பற்றிச் சுட்டவனோ அறிந்திருந்ததில்லை
அவனை அவர்
யாரென்றுகூட விசாரிக்கவில்லை.
கடைசிவரை
அவனுக்குப் பதற்றந்தொற்றாமல்
பார்த்துக் கொண்டார்.
வழிச்செலவுக்கு ஒருதொகை
பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அவனை நோக்கிப் புரிந்த புன்னகை
வழியெல்லாம் மலர்களாகி
அவனின் குற்றவுணர்ச்சியை போக்கிவிடும் என
நம்பிக்கை கொண்டார்.
பிறகு,
காலைத் தேநீரை பருகிக்கொண்டே
அன்றைய நாளிதழை வாசிக்கத்தொடங்கினார்
நான்காவது பக்கத்தின்
கீழ் மூலையில்
சன்னங்கள் துளைத்து இறந்து கிடக்கும்
தன் சடலத்தைக் கண்டார்
அவரைப் பதற்றந் தொற்றிக்கொண்டது
தெருவுக்கு ஓடினார்
தூரத்தில்
அவன் ஒரு புள்ளியாகி மறைந்தபடியிருந்தான்.

000000000000000000000000000000000

தாழிடப்படாத தெருவின் பறவை

என் தெருவின் நான்காவது கதவின் வழியாகத்தான்
அது பறந்திருந்தது.
முதலில் நான் அதை நம்பவில்லை
சிதிலமான கனவைக் கூட்டியள்ளியடி
தெருவின் மூன்றாவது கதவை அடைந்தபோது
அது கதவின் மேல் விளிம்பில் அமர்ந்திருந்தது.
நான் அமைதி குலையவில்லை
மிகச் சாதாரணமான பார்வையால்
அதை மேய்ந்தேன்.
அது என்னைப் பொருட்படுத்தவில்லை.
பதட்டமற்ற அதன் விழிகளில்
தெருவின் இரண்டாவது கதவு திறந்துகொள்ளவதைக் கண்டேன்.
உண்மையில்
நான் துணுக்குற்றுத்தான் போனேன்.
அதனோடான எனது காலத்தில்
அதன் இருதயத்தை நான் முட்களால் கிழிக்கவில்லை.
அதன் இறகுகளைப் பிடிங்கி காற்றில் எறியவில்லை.
சமரசத்தின் இழைகளால் நெய்யப்பட்ட
எனது கடைசி வார்த்தைகள்
அதன் மனத்தில் அலையெழுப்பவில்லை.
மிகச் சாதாரணமாகச் சுருங்கி துளியாயின.
துளியின் ஒளித்தெறிப்பில்
தெருவின் முதலாவது கதவு திறக்கக் கண்டேன்.
பிறகு
எனக்குப் பூமி
அதற்கு வானம்.

சித்தாந்தன் -இலங்கை

சித்தாத்தன்

(Visited 132 times, 1 visits today)