வண்ணத்துப்பூச்சி மழித்த சாவு-கவிதை-கோ.நாதன்

வண்ணத்துப்பூச்சி மழித்த சாவு

கோ.நாதன்
ஓவியம் : எஸ்.நளீம்

குளிர் காலம்,
முன்பகல் பொழுது,
செம்மஞ்சள்,
மெல்லிய வெள்ளை
வண்ணத்துப்பூச்சி வான்வெளி
எங்கும் சலனத்தில் ஊடறுக்கிறது.

பூக்கள் வாசங்களை மொய்த்தசையும்
மென் காற்றின் ஒத்திசைவில்
காம்புகளுள் கால் தடங்களைப் பதிக்கிறது.

நதி கழித்த வெண்மணல்
படர அரவங்களில் நீர்க்கழி
உப்பிய செடி
மேற்பரப்பில் முகம் புதைத்து
நீர் பருகத் தேன் உதடுகள் ஒத்துகிறது.

தோற்கடிக்கப்பட்ட நிலத்தில்
விரிந்து உக்கிக் கிடக்கும்
ஆயுதங்களுள் இனப்
பெருக்க கலவி புணர்கிறது.

இரவின் பாதை கடக்க எத்தனிக்கும்
தருணத்தில்
அந்தியொளி நிறத்தைக் குடித்த நிலவு
பசி நிறைந்த வௌவால்
மின்கம்பியில் கடைசிச்சொட்டு
உயிரோசை இரத்தம் மூழ்கிய
வைகறை மழையில் கழுவுகிறது.

கண்ணிலிருந்து விலகும் விம்பம்
பெருவெளி எல்லாவற்றிலும்
அழகிய வண்ணத்துப்பூச்சி
மரணத்தைச் சிறகொடித்து விதைத்திருக்கிறது
அகவிழி துழாவும் தடம்.

புலர் காலை ஒவ்வொன்றிலும்
எங்கோ ஒரு தெருவிலிருந்து
மரணத்தைக் காவு கொடுத்த உறவின்
ஒப்பாரி ஓசை
என்னுடைய செவியைக் கடந்து செல்லுகிறது.

மின் கம்பியில் தொங்கும்
வௌவாலின் மரணமும்,
சந்தி மரத்தில் இருக்கும்
ஆந்தையின் அலறலும்,
வீதியில் திரியும் நாயின் ஊளையும்,
வளவில் அலையும் பூனையின் உறுமலும்,
பயத்தின் அச்சத்தை
என்னுடைய உடலெங்கும் புழுவாய் ஊறுகிறது.

இராணுவ வாகனத்தின்
இரைச்சல் கேட்கும் வேளை
என்னுடைய வாயை மூடி
நிறுத்தப்படும் இடத்திலிருந்து
வீரர்களின் சப்பாத்து அதிர்வுகளை
செவிப் புலன் சேமிக்க தொடங்கியது.

கருமை நிறமுடைய ஆடைகளும்,
நீட்டப்பட்ட துப்பாக்கிகளும்,
என்னுடைய ஊரின்
அமைதி குழையும் இரவுகளை
பெரும் பயங்கரவாதத்தை நிர்ணயித்தது.

ஏதொரு கடலின் கரையில்,
ஏதொரு ஆற்றின் கரையில்,
ஏதொரு குளத்தின் கரையில்,
ஏதொரு வாவியின் கரையில்
தமிழ் மகனின் சாவை
தினம் எழுதிச் செல்லும் காலம்.

மனித நடமாட்டம் முடக்கிய
சாலை எல்லாவற்றிலும் எழுந்திருக்கும்
சாவடிகளின்
மண் குவியல்களுள் புதைந்த
என்னுடைய
பரம்பரையின் எலும்பு எச்சங்கள்
எந்த நூற்றாண்டில் வெளிவருமோ?

00000000000000000000000000

மரணம் யாருடைய தீர்மானம்

அறுக்கப்பட்ட கோழியின்
இறைச்சித் துண்டுகளுள்
வயிற்றிலிருந்து பிரித்தெடுத்த
கருவுள்ள முட்டையும்,
இரைப்பையிலிருந்து வகிந்தெடுத்த
முளையுள்ள தானியமும்
நிலையற்ற
வாழ்வின் ஆயுளை எடுத்துரைக்கின்றதா?

பெருங்காடுகளைச் சுற்றி சுற்றி
வாழ்ந்தாலும் விலங்கு
அந்த ஒற்றை குளக்கரைக்கு தான்
தாகம் தீர்க்க வந்து கொண்டிருக்கிறது.
ஆதி வனத்தின் விதி
இன்னுமொரு விலங்கு இரை என்பதா.
மரணம் யாருடைய தீர்மானம்.?

குளிர் நிலத்து மழை
மரம் நனைக்க முயற்சித்து
அதன் தோல்வியை
இலையற்ற கிளையில் உறைக்கிறது
உடல் சூடேற்றத்திற்காக
தண்டவாளத்தின் தணியும் பறவை.
சிறகில் பொழுதுக்கான வெப்பத்தை சேமிக்கிறது.
சுழல் மாற்றத்தின் பரிணமிப்பா?

இடையில் விடுபட்ட
ஒரு நீண்ட கனவை
மீள் நித்திரைக்கு உந்தப்படும் மனம்
நினைவுகளில் சரி செய்யும் எண்ணக்கோடு
நித்திரையற்று அசைகிறது.
கனவு ஆழ்மனசின் உதிரிகளா?

சோளம் பூவின்,
ஒற்றை வாசம் உடலெங்கும்;
நறுமணம் ஏற்றிய பழமை.
சேனை நிலத்திடைய,
தூர்ந்து அலைகின்ற
சுவை அரும்பு சோளம்.
தகரப் பேணி அடைக்கப்பட்ட
சோளம் விதை ருசி இழக்கின்றன.

கோ.நாதன்-பிரான்ஸ்

கோ.நாதன்

 

(Visited 137 times, 1 visits today)