புத்தன் மிதியும் பாதை-கவிதை-கோ நாதன்

 

கோ நாதன்

அமைதியற்று உறங்கும் நிலத்தில்
இரத்தத் துளிகள் வழித்திருக்கும்
தனது காலடித் தடங்களை
அச்சமின்றி மிதித்து நடந்து கொண்டிருக்கிறான்
அந்த நொடிப்பொழுதில்
ஒரு நிலத்துண்டிலிருந்து இரத்த வீச்சம்
பதுங்கு குழிகளிடையே நிணம்
மணல் மேடுகளின் உரு
மரண மேடுகளின் குவியல் கொள்கிறது.?
பிணவாடை கலவியுறும் காற்றிடையில்
அசைவின்றி அசையும் புத்தனுடல்
உளம் மகிழ்ந்து ஒளிரும் புன்னகை
யாருமற்ற
நிலமெங்கும் சாவுகளில் எதிரொலிக்கின்றது.
டாங்கிகள்  ஏறியிருந்த உடல்களிடையில்
நசிந்திருக்கும் தாயின்
மார்பைக்  பருகிக் கொண்டிருந்த
மழலையின் அழுகுரல் திவலைக் கோடு
புத்தனின்
செவி வழியே ஒலித்தது தம்பதப்பாடல்.
ஊனம் வடிந்து எலும்பு வெளிறிக்
கூப்பிய  கரங்களை விலத்தி நகரும்
புத்தன்
கொலைகள் வியாப்பிருந்த இனமொன்றின்
எலும்புகளின் மேடுகள் மீது
நாட்டப்பட்ட வெள்ளரசு  நிழலில்
கொலை வாள் ஏந்திக் குந்திக் கொள்கிறான்

கோ நாதன்-பிரான்ஸ் 

கோ நாதன்

(Visited 89 times, 1 visits today)