மென்பனி உள்ளிழையும் நதி-கவிதை கோ.நாதன்

கோ.நாதன்

வாழ்ந்த வாழ்வின்
இருப்பிடங்களை இழந்து,
இடம்பெயர்பின் தொடர்தல்,
கால்கள் போன போக்கில்
கடைசியான வாழ்வைக் கடத்துகிறேன்.
பகல்களையும் ,இரவுகளையும்
சுட்டெரிக்கும் வெயிலின் பொழுதிலும்,
குளிரொடுக்கும் பனிப் பொழுதிலும்,
துருவக்கரடி தோல்களாகிய உடல்
ஒரு
பிரளயத்திலானது
துயர்க்காலம்.

கட்டிட காடுண்ட வழியே
இயற்கையின் உன்னதம்,
நிலம் தந்த வெளியில்
நிலவொளியை,
சூரியோதயத்தை,
வானவில் வண்ணத்தை
கனத்த மனதால் சோர்ந்தும், புணர்ந்தும் போகிறேன்.

கிழித்தெறியப்பட்ட
காகிதத்தாள்களிலான
குவியல் குப்பையில்
மேலாகவே,
கவலை உணரும்
வாழ்வின் நீளத்தை
இழுத்துக் கொண்டிருக்கிறது
தீராப்பசி.
உள்ளாடைகளுக்கு
மாற்றாடைகளில்லாமல்
பாவித்து கிழிந்த உள்ளாடைகள்,
வழிப்போக்கர்களின்
கையளிப்பில் வருபவை,
பொலித்தீன் பைகளுக்குள்
சேமிக்கப்பட்டன.
‘தொற்று நோயை மறந்தது தன்மானம்’

திராட்சைத் தோட்டங்களையும்,
அப்பிள் தோட்டங்களையும்
கண் பசியின் வறட்சியை
பார்வை செலுத்தி நகர்கிறேன்.
ஒரு பழத்தை ருசிக்க இயலவில்லை.
வந்தேறிகளின் காலடிகளை
விளை நிலங்கள் அனுமதிப்பதில்லை.

‘அழுக்குப் படிந்த மனித விலங்கு யார்?
புகலிடம் தேடும் தேசமெங்கும் வாழ்பவர்களும்,
குடியேறியவர்களும் புன்னகை முகங்களில்
தேவையற்று யாரிடமும் கொணர்வதில்லை?
எஞ்சிய புன்னகையை சாகடித்த ஆறாமறிவு.

எனினும் என்னிடமிருந்து
போர்க் குழந்தையின் முகத்தை
கழற்ற முடியாமல் போனதேனோ?

0000000000000000000000000000000

அந்தியம்

நான் பயங்கரவாதியென
குரோதம் நிறைந்த சூழ்ச்சி காரர்களாலே
பெயர் சூட்டப்பட்ட பின்
என்னுடைய இரத்தம் அசுத்தப் பட்டவர்களிடையே
சிந்தப்படுவது எந்த வகை நியாயம்?

நான் பிறப்பெடுத்த நிலம்,
நான் மிதித்துத் திரிந்த நிலம்,
நான் காதல் வசப்பட்ட நிலம்,
நான் இரத்தம் சிந்திய நிலம்,
சுடுகாட்டு நிலமாய் வளர்ந்திருப்பதேனோ?

துப்பாக்கி மரங்கள் விளைந்து மிளிரும்
என்னுடைய எல்லைத் தெருக்களெல்லாம்
நாய்கள் வாய் திறக்கும் சந்தர்ப்பங்களுள்
கொலைகள் நிறையும் சவக்கிடங்கானதே.
மனித அணங்குதலின் அழுகுரல்கள்
வீரத்திரட்சி அழிந்துண்ட புழுதி மண்.

எனக்கான இலட்சிய வழிமுறையுள்
மதவாதம் இருக்கவில்லை,
இனவாதம் இருக்கவில்லை,
வர்க்க பேதம் இருக்கவில்லை,
இறைக்கொள்கை இருக்கவில்லை,
இனவாத வெறியர்களிடையே ஒத்தோதுவர்கள்
பிரிவினை சர்வதிகாரனென சூழ்ச்சியில்
ஒரு கற்பித்தலை சமன் செய்துள்ளார்கள்?

என்னுடைய நிலம் எனக்கில்லை என்றதும்
எல்லாவற்றின் அதிகாரங்களையும் கையகப்படுத்திருப்பது
எலும்புகள் மீதான பிரகடனம் தவிர
அதுவுமொரு அதிகாரமிக்க துஷ்பிரயோக சூட்சுமம்.

நான் மரணமடைந்த தருணம்.
என்னுடைய நகரமும் மரணமடைந்திருந்தது.
என்னுடைய மரணத்தின் பெயரில் அடக்குமுறை,
என்னுடைய மரணத்தின் பெயரில் படுகொலை,
என்னுடைய மரணத்தின் பெயரில் பால்சோறு
என் மரணத்தின் பெயரில் அபிஷேகம்.
‘எல்லாம் மரணமும்
போற்றுதலுக்குரியதே.’

என் இனத்துக்கான போராட்டம்
புனிதம் என்பதால்
எனது மரணமும் மிக மகத்துவமானது.
என் மரணம் கோழை உடையதல்ல
என் மரணம் மாவீரனுக்குரியது.

கோ.நாதன்-பிரான்ஸ்

கோ நாதன்

(Visited 130 times, 1 visits today)