புலம்பெயர் தமிழிலக்கிய உருவாக்கமும்,(Diaspora Tamil Literature Formation ) கோமகனின் சிறுகதைகளின் வகிபாகமும். முரண் தொகுப்பை முன் வைத்து- கட்டுரை-கோ.நாதன்

கோமகன்முதலில் இந்த கட்டுரைக்குள் இறங்க முன்னதாக ‘புலம்பெயர்தல்’ என்பதற்கான வரையறையை கூற விரும்புகின்றேன். ஏனெனில் ‘புலம்பெயர்தலை எல்லோரும் தங்களது வசதிக்கு ஏற்றவாறு பார்த்து தாங்களும் குளம்பி எல்லோரையும் குளப்புகின்றார்கள். புலம்பெயர்தல் அல்லது இடம்பெயர்தல் என்பதனை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்தல் அதாவது சொந்த நிலத்தை விட்டு பிரிந்து செல்லுதல் என்று நாங்கள் வரையறை செய்யலாம். அதேவேளையில் ஒருவரது முன்னோர் அல்லது சந்ததியினர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே அவருக்குச் சொந்தமான புலம் என்பதாகின்றது. காலங்காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து சுய விருப்பத்துடன் இன்னுமொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து போகும் போது அத்தகைய பெயர்வு ‘புலம்பெயர்தல்’ என்ற  வரையரைக்குள் அடங்காது.

ஒரு இனக்குழுமம் தமது  வாழ்விடத்தில் தொடர்ந்து வாழ முடியாத அக- புறவய நெருக்கடிகளுக்கு ஆளாகி வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேறுவதை அல்லது வெளியேற்றப்படுவதை ‘புலம் பெயர்தல்’ எனக்கொள்ளலாம். தத்தமது நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்களை உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் என்றும் பிற நாடுகளுக்கு தப்பித்துதீ தஞ்சம் அடைந்தவர்களை எதிலி/அகதி என்றும் வகைப்படுத்தலாம்.

போர்ச் சூழலும் ,அரசியல் கெடுபிடிகளும் புலம்பெயர் வாழ்வியலில்  எப்போதும் ஒரு துன்பியல் நகர்வைத் தந்து கொண்டிருக்கிறது. மொழிப் பரிச்சியம் இல்லாத தேசத்தில் வாழ்ப்பபடும் ஒருவர் அதன் தாக்கத்தில் முகம்கொடுக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் உளவியல் ரீதியாகப் பலத்த மனச்சிதைவுகளை சந்திக்கின்றார். அவர் தனது வாழ்வாதாரத்திற்கான புறத் தேடலில், தொழில் தளங்களில் சந்திக்கும் மன இறுக்கம் /மன அழுத்தம், மொழியால் பல்வேறு தொடர்பாடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உணவுப் பழக்க வழக்கங்களின் ஒவ்வாமை, பல்லினக் கலாச்சார சமுகவாழ்வில் எதிர்கொள்கின்ற கலாச்சார சீர்கேடுகள், தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஒருவர் தன்னினம் சார்ந்து சாராத வாழ்வியல் முறைமைகளுடன் சமசரம் செய்து கொள்கின்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார். இந்தவலிகளின் அமுக்கங்கள், ஆற்றாமைகள், ‘புலம்பெயர்ந்த இலக்கியமாக’ வடிவெடுக்கின்றது.

இலக்கியத்தை இரு வகையாக பிரிவுகளாக பிரிக்க முடியும்.

புலம்பெயர்ந்த இலக்கியத்தை மேலும் இரண்டு கிளைப்பகுப்புகளாக அவதானிக்க முடியும்.

  1. புகலிட இலக்கியம்.
  2. புலம்பெயர்ந்தோர் இலக்கியம்.

புகலிட இலக்கியம் என்பது புலம்பெயர்ந்து வாழும் ஒருவர் தான் வாழும் நாட்டில் அல்லது பிரதேசத்தில் புவியியல் – அரசியல் சமூக -பொருளாதார பண்பாடுகளின் விளைவுகளை வெளிப்படுத்தி படைக்கும் எழுத்துக்கள் புகலிட இலக்கியம் எனலாம்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை புலம்பெயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு புலத்தின் ஏக்கங்களையும் பிரிவின் ஆற்றாமைகளையும் மட்டும் எழுத்தில் கொண்டுவருவதை இந்தவகையான பகுப்பினுள் அடக்கிவிட முடியும்.

இற்றைக்கு கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமானதொரு இலக்கிய வகையாக திகழ்ந்து வருகின்றது. தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் இன்னொர்  கட்ட வளர்ச்சியாகவும் திகழ்கின்ற இவ்விலக்கியத்துள் இதுவரை தமிழ் உலகு  எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சினைகளும், வாழ்வனுபவங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ் படைப்புக்கு புதிதாக அமைகின்ற அதே வேளை உந்துதலும் பல மாறுதல்களையும் வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது. கொஞ்சம் கெந்தி வரத்தக்கதாக போடும்

புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை முறைமையானது நம் தமிழ்ச் சமூகத்திலும் சில புதிய நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. முன்பு நமக்கு ஆங்கிலத்தோடும் ஆங்கிலம் வாயிலாகவும் மட்டுமே தொடர்பாடிய மரபுத்  தொடர்பு, இன்று நமது இலக்கியமும், அதன் மொழியும் பல்வேறு வித்தியாசமான கலாச்சாரங்களோடும், பல்வேறு மொழிகளோடும் இலக்கிய பாரம்பரியங்களோடும் தொடர்புறுகின்றன. புலம்பெயர் படைப்பாளிகள் புதிய உணர்வுகளையும் அனுபவங்களையும் தமிழ் இலக்கியத்தில் வரைகின்றார்கள். இந்தப் படைப்பாளிகளது அநேகமான படைப்புகள்: மேற்கத்திய சமூகத்தின் முன்னேற்றம், வினோதம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை, போன்றவற்றால் ஏற்படும் ஈர்ப்பு, நிறவாதம், இனப்  பயங்கரவாதம், புரியாத பண்பாட்டு பொருளாதார நெருக்கடிகள், வேலை இல்லா திண்டாட்டம், அந்நிய நாட்டில் ஏற்படும் பயம், அங்கலாய்ப்பு அன்னியமாதல் அகதி வேற்றுமையை எதிர் கொள்ளல் என்று பொருள்களில் என்று அந்த  விரிவுகள்  நிகழ்கின்றன.

இன்று பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் மோதுவது சர்வதேச அரங்கில் ஒரு எழுதாத நீதி ஆகிவிட்டது. அந்தப்பண்பாட்டு விழுமியங்கள்  இனங்களுக்கிடையேயும்  கொடுக்கப்பட்டு மொழிகளும் கலாச்சாரங்களும் கலப்படைவது தவிர்க்க முடியாதிருக்கிறது. சில படைப்புகளையேனும் புலம்பெயர் இலக்கிய வகைக்குள் படைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  இந்த சூழலானது புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகின் ஆரோக்கியமான சூழல்  உருவாக்கத்தின் வளர்ச்சி எனலாம். இதன் ஊடாக பிரான்ஸில் வாழுகின்ற தியாகராஜா ராஜராஜன் என்கின்ற கோமகனின் படைப்புலகத்தைக் காண விழைகின்றேன்.

இவர் ‘கோமகன்’ எனும் புனைப்பெயரில் தொடர்ந்து இலக்கிய உலகில் எழுத்தால் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் யாழ் இணையத்தின் கருத்துக்களத்திலும் , நிலா முற்றத்தின் கருத்துக்களத்திலும், ஆக்காட்டி ஆசிரியர் குழுமத்திலும் இயங்கியவர். இப்போது நடு இலக்கிய இணைய இதழின் பிரதம ஆசிரியராவார். குரலற்றவரின் குரல், கோமகனின் ‘தனிக்கதை’ சிறுகதை தொகுதியையும்  வெளிக்கொண்டு வந்த அவரது மூன்றாவது தொகுதி ‘முரண்’ என்பது குறிப்பிடத்தக்கது.

கோமகன் தனது முன்னுரையில் தனது கதைகள் பற்றி கருத்துக்களை முன்வைக்கின்றார்:

‘இந்தக் கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண்பட்டிருக்கிறேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றேன். எம்மவரிடம் காலங்காலமாகப் பேணப்பட்டு வரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கிறேன். பேசாப்பொருட்களை பேசியிருக்கிறேன். அவைகளில் நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா என்பதெல்லாம் எனக்கு தெரியாது . ஆனால், இந்த சிறுகதைத் தொகுதியில் சில பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன் என்பதை என்னால் உறுதிபடச்  சொல்ல முடியும்.’

இவரது முதல் சிறுகதைத் தொகுதியான கோமகனின் ‘தனிக்கதை’யில்  மொத்தமாக 11 கதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. கதைகள் ஒவ்வொன்றும் தாயகத்திற்கும்- புலம்பெயர்ந்த தேசத்திற்குமிடையே நிகழ்ந்தேறிய சம்பவங்களை முன்நிறுத்திக்  கதைகள் புனையப்பட்டுள்ளன. கதைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மையைக்  கொண்டுள்ளன.  இந்தக் கதைகளை  வாசிக்கும் ஒவ்வொருவரும் இந்தத் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளமுடியும். ஒரு கதைக்கும் மற்றொரு கதைக்கும் எவ்வித சமநிலை கோடுகள் இல்லை என்பதை வாசகர்களால் உணர்ந்து கொள்ளலாம்.

புலம்பெயர் இலக்கிய கதைசொல்லியின் பட்டியலில் நிரந்தர இடம் நிச்சயம் கோமகனுக்கு உண்டு என்பதை என்னால் உறுதிபடுத்த முடியும். ஒரு தொடர்ச்சியான வாசகனால் இவரது கதைகளில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் கோமகன் கதை என்று இனம் காண முடியும். இவர் கதையை சொல்லும் வகையில் தனக்கென்று ஒரு தனித்தன்மையை  எடுப்பதில் கோமகன்  வெற்றி பெற்றிருக்கின்றார் என நாம் சந்தேகமில்லாது உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எங்காவது கோமகனின் பெயரைத் தவிர்த்து புலம் பெயர் பட்டியல் நீளும் என்றால் அது காழ்ப்புணர்ச்சியைத்  தவிர வேறொன்றுமில்லை என்று  இந்தக் கட்டுரையின் ஊடாகச் சொல்ல வேண்டியுள்ளது.

புலம்பெயர் இலக்கியம் எனும் வரையறைக்குள் நவீன இலக்கிய வடிவக்கதை சொல்லும் வகைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் கோமகனின் கதைகள் பல உளவியல் தாக்கங்களின் பாதிப்புகளைப்  படம்பிடித்தும் உள்ளடக்கங்களின் பண்புகளையும் சுட்டி வெளிப்படுத்தும் பொதுதன்மை ஒழுங்கில் கதைகள் நகர்ந்து சென்று இருக்கிறது.

ஈழத்து இலக்கியத்தின் போக்கினையும் கதைக் களத்தில் புகுத்தி, வட புலத்து பிராந்திய வட்டார சொற்களின் அலகுகளை அழகியல் முறையில் மதிப்பீடுகளை திறன்படக்  கையாண்டு இவையனைத்தையும்  கதைகள் ஒவ்வொன்றிலும் கவனப்படுத்தி புனையப்பட்டுள்ளன. புலம்பெயர் இலக்கிய பண்பாட்டு உறவு முறைகளை அழகியல் கோட்பாடுகளின் ஒப்பீட்டு முறையில் கதைகள் படைக்கப்பட்டுள்ளது. தாயத்திற்கும் புலம்பெயர் வாழ்வியலுக்கும் மொழி வழக்கு தேய்வடைந்து போகாமல் நுண்ணிய பார்வையில் கவனம் சிதறாமல் தெட்டத் தெளிவாக கையாண்டு கதைகள் படைக்கப்பட்டுள்ளன.

‘முரண்’ தொகுதியின் கதைகள் தாய் நிலத்தின் வாழ்வை இழுத்து புலம்பெயர் வாழ்வுக்குள் வந்துவிட்ட காலத்தை தனது கதைகளின் எழுத்துக்கான போரில் அறுக்கப்பட்ட வாழ்வினை ஏங்கங்களாகவும் உறவுகளின் பிரிவுகளாகவும் ஏற்படுத்தப்பட்ட ஆறாத வடுக்களாகவும் இன்னும் பல காயங்களாகவும் கதறல்களாகவும் கதைகளை வேறொரு பாங்கில் படைத்திருக்கின்றார் கோமகன். அவைகளில் பல கதைகள்    பெரும்பாலும் வாசகனை வலியோடு தான் உள்வாங்கி இருக்கின்றன. அதிலும் புலம்பெயர்ந்த பின்னர் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் கலாச்சார சீரழிவுகளை கலாச்சார அதிர்வுகளை எதிரொலியாக சில கதைகள் படைக்கப்பட்டுள்ளன. இதுவொரு கதைசொல்லியின் மனதைரியத்தின் பெரும் முயற்சியிலான பிரதிபலிப்புக்கள் என்றே சொல்லலாம்.

புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள் பெரும்பாலும் என்பது கருத்து மெய்மையில்(Realism) என்று எழுதப் பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் இலக்கிய எழுத்துக்கள் அனைகமானவைகள் பின் நவீனத்துவப் பாணியில்  கதைகள் எழுத்தாக்ககம் பெறுகின்றன. பெரும்பான்மையான கோமகனின் கதைகள் யதார்த்த  மொழியை பேசும்  கதைகள் முன் வைக்க  கூடிய பாத்திரங்களை கொண்டிருப்பதை  காணக் கூடியதாக இருக்கின்றன.

பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தாயக நிலத்தில் இருந்து பிரிந்து வேறு நிலத்தில் வாழ்கின்றவர்கள் இன்னும் வேர் விடாமல் ஒரு புதிய மண்ணில் பதியம் போடப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் தன்னுடைய சொந்த நாட்டை பற்றிய நினைவுகளையும் அவலங்களையும் பல கதைகளில் மொழியாக கையாண்டுள்ளார். நன்கு அறியப்பட்ட கதைமாந்தர் மறைமுகமான முறைகளில் கதைகளில் வலம் வந்திருக்கிறார்கள். அது கதை எழுத தேர்வு செய்யப்பட்ட சிந்தனை கச்சிதத்தின் பரிணாமம் எனலாம்.

கோமகன் ஒரு சில கதைகளை பரிசோதனை  முயற்சியாக இருக்கலாம் அல்லது புதிய முயற்சியாக இருக்கலாம் என்றவகையில் கூறியவாறே, சடப்பொருளுக்கு உயிர் கொடுத்துப்  பேச வைத்தல் மற்றும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு ஆறறிவு கொடுத்துப்  பேச வைத்தல் என்று முதல் முயற்சியாக கதைகள் படைக்கப்பட்டுள்ளது. அதிலும் ‘அகதி’ என்ற சிறுகதை கோமகனின் தனிமுத்திரை என்றே சொல்வேன்.  ஈழம் அல்லது புலம்பெயர் சூழலில் கோமகன் தான் முதலாவதாக பரீட்ச்சித்த கதைசொல்லியாக இருக்கின்றார் என தோன்றுகிறது. இது கதை சொல்லியின் கற்பனை, சிந்தனைகளில் மாற்று வழிப்பாதையாக தெரிகின்றது. இந்த முயற்சிகள் சில கதைகளில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு சாத்தியப்பாடுகளையும், சகிப்புத்தன்மையையும் கடந்த ஒரு வலைப்பின்னல் எனலாம். சில கதைகள் மட்டும் பரிசோதனை செய்து விட்டு விலகிச் சென்றிருப்பது அவரின் எதிர்கால கதை சொல்லும் பாங்கில் இன்னும் முத்திரை பதிப்பார் என்று  எண்ணத் தோன்றுகின்றது.

சமீப காலங்களாக  புலம்பெயர்ந்தோர் படைப்பாளிகள், மற்றும் அவர்களது  படைப்புகள் தொடர்பாக விமர்சனங்கள் கருத்துக்களை நான் அவதானித்த பொழுது  தனிப்பட்ட உறவு நிலை, குழுவாதம், அன்பளிப்பு முதலியவற்றிலேயே தீர்மானிக்கப்படுதாக எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறான குழுவாத விமர்சனப் போக்கினால் நல்ல படைப்புகளும், படைப்பாளிகளும்  நிராகரிக்கப்படுவதுடன் அவ்வாறானதொரு போக்கினால் அது ஈழத்து புலம்பெயர் இலக்கியப் பரப்பில் ஒரு தேக்க நிலையை தோற்றுவித்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எழுத்தளர் கோமகனின் கதைகள் ஊடே புலம்பெயர் சூழலில் ஏற்படுத்திருக்கும் தாக்கம் பல்வகை படைப்பாளர் மத்தியில் ஒரு அகசிக்கல் நிலையைத் தோற்றுவித்துள்ளதென நான் திண்ணமாக எண்ணுகின்றேன். புலம்பெயர் இலக்கியத்தில் ஒருசில வங்குரோத்து இலக்கியவாதிகளும் சிறந்த படைப்பாளிகளை வெளியே கொண்டு வராமல் ஏதோவொரு வகையில் மறைக்கப்படுவதன் நுண்அரசியல் எனக்கு இன்றுவரை விளங்கவில்லை?

‘முரண்’ சிறுகதை தொகுப்பானது புலம்பெயர் இலக்கியத்தில் பெரும் வேலைபழு மத்தியில் காலத்தை சிக்கனப்படுத்திய சேமிப்பில் கிடைத்திருக்கும் அரிய படைப்பு என்பேன்.

கோ.நாதன்-பிரான்ஸ்

கோ.நாதன்

00000000000000000000000000

நூலாசிரியர் பற்றிய சிறுகுறிப்பு :

கோமகன்யாழ்ப்பாணம் கோப்பாய் கிராமத்தில் பிறந்து ‘கோமகன்’ என்ற புனைபெயரில் புலம்பெயர் தமிழ் எழுத்துப்பரப்பில் தொடர்ச்சியாக இயங்கி வரும் தியாகராசா ராஜராஜன் என்ற கோமகன் பாரிஸின் புறநகர் பகுதியான ‘செவ்ரன்’ நகரில் வசித்து வருகின்றார். ஆரம்பக்கல்வியை கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் உயர்கல்வியை யாழ் இந்துக்கலூரியிலும் பயின்ற இவர், தனது 22 ஆவது வயதில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். தனது 40 ஆவது வயதுக்கு மேலேயே தீவிரமாக எழுதத்தொடங்கிய கோமகனால் இதுவரை , கோமகனின் ‘தனிக்கதை’ ( சிறுகதைத்தொகுப்பு ) , குரலற்றவரின் குரல் ( நேர்காணல் தொகுப்பு ), முரண் ( சிறுகதைத்தொகுப்பு ) ஆகியவை புலம்பெயர் எழுத்துப்பரப்பிற்கு கிடைத்துள்ளன.

கோ.நாதன்

(Visited 324 times, 1 visits today)