நுரைத்துச் சீறியும், தெளிந்து வளைந்தும் சென்ற ஆற்று நீரவன் கருணா- கட்டுரை- போப்பு

கண்டு கண்டாகத் திரண்ட சதை. கருத்து உருண்ட முகம். கரகரப்பான குரல். முதல் பார்வைக்கு ஒரு விலகலை ஏற்படுத்தும்படியாகவே இருப்பான் கருணா.

ஆனால் ஓரிரு சந்திப்பிற்குப் பின் சட்டென்று ஊடுருவி எவருள்ளும் நிரந்தரமாகத் தங்கி விடக்கூடிய தனித்துவம் கருணாவிடம் மட்டுமே காண முடிவது. அப்படி வயது, பால், பொறுப்பு, பொருளாதார, அதிகார அடுக்கு அத்தனையும் கடந்து ஆயிரக்கணக்கானோரிடம் மிகவும் நெருக்கமாக உணரச் செய்யும் நட்புறவைப் பெற்றிருந்தான்.

அமுக்கி விட்டது போன்ற சற்றே குள்ள உருவம் போலத் தோன்றினாலும் அவனது விரல்கள் கலைஞனுக்கு உரியவை. நீள நீளமாக அதிலும் வெளீரென்ற நீண்ட நகக் கண்கள் சோழி முத்துக்கள் போன்று ரசிப்பிற்குரியவை. வேகமாக இழுப்பதற்கென்று முனை குறுக்கிய பட்டை பிரஷ்ஷினை சரசரவென்று ஓட்டிச் செல்பவை அந்த விரல்கள். மிகச் சின்ன வயதிலேயே விரல்களின் வேகத்திற்குக் கை அவனுக்கு ஈடு கொடுக்கவில்லை. ஒரு தட்டி எழுதி முடித்ததும் விரல்கள் மரத்துப் பிடித்துக் கொள்ளும். டாய், டூய், மச்சான், தோழா என்ற நெருக்கமான பலர் அந்தக் கையைப் பிடித்து விட்டு வெப்பமேற்றி ரத்தவோட்டத்தைச் சீராக்கும் காட்சி அடிக்கடிக் காணக் கிடைப்பது.

தமுஎச நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத் தெருக்களில் செவ்வக மரச் சட்டங்களில் பளீரென்ற வண்ணக் காகிதங்களை ஒட்டி அவற்றில் கவிதைகளை எழுதி வைக்கும்  பொருள் பொதிந்த நடைமுறையை தமுஎசவுக்குள் துவக்கி வைத்தவன் கருணாவே. வடாற்காடு நாட்டுப்புறத் தமிழை எந்த இடத்திலும் அழுத்தாமல் ஆற்று நீரோட்டம் சிலீரென்று நழுவிச் செல்வதைப் போல பேசுகிற கருணா தேர்வு செய்யும் கவிதைகள் அவனது தோற்றத்திற்கும், பேச்சிற்கும் தொடர்பில்லாது மிகவும் நளினமானவை, நுட்பமான உணர்வுகளைக் கிளர்த்துபவை.

வாழ்க்கை முச்சந்தியில் நின்று திகைக்கிறது/ திசையறியாப் பெருங்குழப்பம்/ சரி வாங்க டீ சாப்பிடலாம் – சச்சிதானந்தன்

இத்தகைய வெகுநுட்பமான உணர்வயப்பட்ட கவிதைகளே இவனைக் குறைத்து எடை போடாதே என்று எச்சரிப்பதைப் போல இருக்கும். கவிதையை மக்கள் மயப்படுத்தும் முயற்சி பெரிதாக விரிவடையவில்லை. ஆனாலும் பிடிவாதமாகச் செய்தான். இடதுசாரி இயக்க மாநாட்டு கருத்தரங்க வெளியில் வண்ண வண்ணக் காகிதங்கள் ஒட்டி கருணா எழுதி வைக்கும் கவிதைகளை நின்று ரசிக்கவும், நோட்டுப் பேடுகளில் எழுதி வைக்கவும், ஆண்ட்ராய்டு போன் காலத்தில் போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவும் இளைஞ இளைஞிகள் கூட்டம் தமிழகமெங்கும் பரவலாக இருந்தது. தனது கவிதை பாமரனுக்கானதல்ல. கவிதைப் பயிற்சி உள்ளவன் மட்டுமே வாசிக்க முடியும் என்று அகந்தையுடன் பதில் சொன்னவர்களின் கவிதைகள் கூட கருணா கையால் எழுதப்பட்டு வாசிக்கப்பட அதனைக் கண்டு, உள்ளூரக் குளிர்ந்த கவிஞர்கள் பலருண்டு.

கருணாவின் கள, இயக்கப் பொதுவான பணிகள் குறித்தும் அதேபோல எந்தளவிற்கு அகவயமாக ஈரமும் இளக்கமும் மிக்கவன் என்பது குறித்தும் எழுதப் பலருக்கும் நிறைய உண்டு.

சம வயதினன், 36 ஆண்டுகள் காலமாகத் தொடர்ந்து வீட்டிற்கு வந்து போகும் பழக்கம் உள்ளவன் என்பதாலும் எனக்கும் கருணாவுக்குமான உறவு குறித்துப் பேச விழைகிறேன். அது தனிமனிதர்களுடன் அவன் எத்தகைய உறவுகள் கொண்டிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கும்.

கருணா பட்டம் முடித்து கல்லூரியை வளாகத்தை விட்டு வெளியேறும் தறுவாயில் எனக்கு நெருக்கமானான். 1986 நான் ஓசூர் அசோக் லேலண்டில் பணிக்குச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகி இருந்தன. தமுஎசவின் அறைக் கூட்டங்களிலும், வாசிப்பிலும் திளைத்து கிளைப் பொறுப்பாளாராக ஆகி இருந்தேன்.

அறைக்கூட்டம் இளைஞர்களின் கணிசமான சேர்க்கைக்குப் பின்னர் வெளி அரங்கக் கூட்டமாக மாறத் தொடங்கி இருந்தது. ஓசூர் கிளையின் மாதாந்திர மொட்டை மாடிக் கவியரங்கம் அந்நாட்களில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது அக்கம் பக்கம் சேலம், வடாற்காடு மாவட்டங்களிலும் பரவலாக அறியப்பட்டு வந்தது.

மொட்டை மாடிக் கவியரங்கத்திற்கு ஓசூர் வந்த கவிஞர் வெண்மணி திருவண்ணாமலை சுற்றுக் கிராமத் தெருச் சந்திகளில் நடத்தும்  காளிதாஸின் “விபரமில்லாதவர்கள்” நாடகம் குறித்தும், அதில் நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவரான கருணா குறித்தும் சொல்லி இருந்தார். அவர்களது நாடகத் தயாரிப்பு, நடிகர்களே தேர்ந்து கொள்ளும் சரளமான உரையாடல் முறை ஆகியன எங்களுக்குள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. தி.மலையைப் பிறப்பிடமாகக் கொண்டு சென்னையில் வசிக்கும் பிரளயனும், தி.மலைவாசியான பவாவும் மொட்டை மாடிக் கவியரங்கத்திற்கு வந்து செல்லும் போதெல்லாம் நிறைய நாடகப் பேச்சுக்களை மானாவரி விதைப்பாக விதைத்துச் சென்றனர். அதன் விளைவாகவே பின்னாளில் நான் ஆதவன் உள்ளிட்ட தோழர்கள் மாநில அளவிலான மதுரை நாடகப் பட்டறையில் பங்கேற்றது.  அங்கு எனது ஆக்கத்தில் ஆதவன், பெண் உடல்மொழியில் தலைமுடியை உதறி முடிவது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் மின் வாரியத்தில் கணக்காளராக இருந்த மேலூர் மாவேந்தன் கோம்பையில் இருந்து பணி மாற்றலாகி எங்களுடன் வந்திணைந்தார். அவரது வருகைக்குப் பின் தெருத்தெருவாக இலக்கியம் பேசிக் கொண்டலைவோம். அந்த வயதில் இலக்கியம் பேசி வறண்ட தொண்டையை நனைக்க தேநீர், சிகரட் குடித்தோமா அல்லது தேநீர் சிகரட்டுக்கு நியாயம் செய்ய இலக்கியம் பேசினோமா தெளிவாகச் சொல்ல முடியாது.

சாலைகளிலும், வனாந்தரங்களிலும் (அஞ்செட்டிக் காடு, மத்திரிகிரி சில்க்போர்டு காடு) இலக்கியம் பேசி அலைந்த நாங்கள் அடுத்த கட்டமாக ஊர் சுற்றத் துவங்கினோம். அதில் முதலில் செல்கிற ஊராக திருவண்ணாமலை இருந்தது. வேலூர் காட்பாடியில் எங்கள் ஜமாவில் ஒருவனான தோழன் விநாயகம் திருமணம். அதற்குச் செல்லும் வழியில் ஓசூரில் இருந்து வேலூருக்கு திருவண்ணாமலை வழியா என்றால் இல்லை தான். பவா- கருணாவைச் சந்திக்க அப்படி ஒரு வழியை அந்த வயது உருவாக்கிக் கொடுத்தது. பவா முன்னரே கவியரங்கத்திற்கு வந்து சென்றவன். நாடகம் குறித்த பேச்சுக்களால் கருணாவைப் பற்றிய மனச் சித்திரம் எங்களுள் முன்னரே வரையப்பட்டிருந்தது.

அந்தக் காலத்தில் 15 காசுக் கார்டில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்வோம். அது சரியாகவே பரிமாற்றம் அடையும். ஓசூரில் இருந்து கிளம்புவதற்கு முன் திமலை வரும் செய்தியை போஸ்ட் கார்டில் அஞ்சலிட்டிருந்தோம். பனியையும், சாலைத் தூசி மண்டலத்தையும் பிரித்தறிய முடியாத காலைப் பொழுதில்  நான், மாவேந்தன், அசோகன் இன்னும் ஓரிரு தோழர்களுமாக பெரியார் சிலைக்கு எதிரே பல்லவன் ஆர்ட்ஸிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறோம்.

பச்சை நிறத்திலான அட்லஸ் சைக்கிளை எங்கள் எதிரில் கொண்டு வந்து நிறுத்திய கருணா, ”நண்பா நீங்கெல்லாம் ஓசூர்லர்ந்து தானே வந்திருக்கிங்க பவா சொன்னான். வாங்க பல் விளக்கிட்டு டிபன் சாப்பிடலாம். பவா வந்துனே இருப்பான். அறிமுகமாதலின் அடுத்த கட்டமாக நட்பை இயல்புப்படுத்தலின் அடையாளமாக ப்ளைன் கோல்டு ப்ளாக் பாக்கெட்டை எடுத்து நீட்ட ஆளுக்கொன்றாகப் பற்ற வைத்தோம். நான் அப்போதே நான்கு இலக்க ஊதியம் பெறுபவன் என்றாலும் சிகரெட்டைப் பாக்கெட்டாக வாங்கும் பழக்கம் இருந்ததில்லை. இணுக்கி இணுக்கி ஒவ்வொன்றாகத் தான் வாங்குவேன். கருணா பாக்கெட்டை எடுத்து நீட்டும் முறையே அவனது தாராள மனத்தின் அடையாளமாகத் தோன்றியது எனக்கு.

எங்களூர்ப் பக்கம் ஏராளமான நிலபுலன் படைத்தவர்கள், பெருங்கொண்ட வியாபாரிகள் தான் அப்படி சிகரெட்டைப் பாக்கெட்டாக வைத்திருப்பார்கள். சிகரெட்டைப் பாக்கெட்டாக வைத்திருந்த சம வயதினனைப் பார்த்ததும் நெருக்கம் கூடுதலானதற்குக் காரணமாக இருக்கலாம். அடுத்த வேளை உண்பதற்கு எங்கே என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் சிகரட் மட்டும் பாக்கெட்டாக அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். அதையும் உடன் புகைக்கும் தோழர்களுக்கு வழங்குவதில் கை நீட்டம் குறைந்ததே இல்லை.

நாங்கள் இருவரும் பலமுறை ஒரே அறையில் தங்க நேர்ந்துள்ளது. அவற்றில் அனேக நாட்கள் காலையில் எழுந்ததும் ஒரு பாட்டம் இறுமி விட்டுத் தான் அவனால் அடுத்த வேலையில் கவனம் செலுத்த முடியும். திருவண்ணாமலையை உள்ளடக்கிய வேலூர் மாவட்ட தமுஎச மாநாட்டிற்கு முன் தயாரிப்பு வேலைகளுக்காக கருணாவைத் தொடர்ந்து நானும் தனியாக வரத் தெரியாதென்று வையம்பட்டி முத்துசாமியும் ஓரிரு நாட்கள் முன்னதாகச் சென்று விட்டோம். அரசு ஊழியர் சங்கத்தை நிலைப்படுத்துவதில் வேலூரின் பங்கு முக்கியமானது. வேலூர் சத்துவாச்சேரியில் தங்களது பலத்தின் அடையாளமாக சகல வசதிகளுடனும் கூடிய அரசு ஊழியர்  சங்கக் கட்டிடம் எழுப்பப்பட்டிருந்தது. அதில் தான் எங்கள் மூவருக்கும் தங்கல்.

காலையில் எழுந்து கூட்ஸ் ட்ரெயின் போல அடுக்குத் தொடராக இறுமிய கருணாவைப் பார்த்து ”இந்தப் புகைச் சனியப் பிடிச்சிட்டு இப்பிடி இறுமிக் கெடக்குறதுக்கு அத விட்டுத் தொலைய வேண்டியதானே” முத்துசாமி சொன்னார். ”த்த்தா நீ யென்ன மேடையேறி மைக்கப் பிடிச்சி புளியங்கா. மாங்கா, தேங்கா, கோங்கா ன்னு பாடிட்டுப் போயிருவ எங்கள மாறி மாநாட்டு அறிக்கை தயார்ப் பண்றதிலர்ந்து தவுலுக்காரனப் போயி உருவிக் கூட்டினு வர்ர வரைக்கும் அத்தினி வேலையும் பண்ணிப் பாரு அப்பத் தெரியும். இந்த நெருப்புல தான்யா வண்டி ஓடுது” என்று சிகரட் முனையைக் காட்டி எள்ளலாகவும், மீண்டும் முத்துசாமி அதுபற்றிப் பேசவிடாத படிக்கும் அறைந்து சொன்னான்.

இப்படிப் படீரென்றும், எதிராளியை அடுத்த வார்த்தைப் பேச விடாத அளவிற்கும், அதே நேரம் மிகுந்த அழகு நயத்துடனும். எதிராளித் தன்னை முறித்துக் கொள்ளாத அளவிற்கும் பேசுதல் கருணாவிற்கு மட்டுமே சாத்தியம். ஆனால் வேறு சூழலில் அவனது இத்தகைய பேச்சுக்களை சிலாகித்துப் பேசினால் அதில் திளைத்து மகிழ்ந்து போகிறவனல்ல. அதாவது அவனது கூர்மையான தாக்குதலானது நிலைமையைச் சமாளிப்பதற்கானது தானே தவிர தனது அகந்தையை நிறுவுவதற்கானது அல்ல. மனிதர்களைப் புறந்தள்ளி விடுவதற்கானதல்ல. எனக்குத் தெரிந்து அவனது நட்பு வட்டத்தில் நிரந்தர விலகலில் இருந்தது பவாவிடம் மட்டுந்தானே தவிர வேறு யாருடனும் அல்ல. அதிலும் அவன் பவாவுடன் பேசுவது இல்லை அவ்வளவு தான். மற்றபடி அவன் மீதான சில நல்ல மதிப்பீடுகளை இறுதி வரையிலும் கொண்டிருந்தான் எதிர் மதிப்பீடுகளைப் போலவே உறுதியாக. பவாவின் அம்மாவிற்கு இன்னொரு பிள்ளையாகவே இருந்தான். பவாவின் பிள்ளைகள் மீது சொந்தப் பங்காளிப் பிள்ளைகள் மீதான பாசத்தைக் காட்டினான்.

கருணா வீட்டிற்கு மூன்றாவது பிள்ளை. அண்ணன், அக்கா, கருணா இரண்டு தங்கைகள். அப்பா மண்டி வைத்திருந்தார். மிளகாய், பயிறுவகைகளைக் கொள்முதல் செய்து மொத்தமாக விற்பது தொழில். அடிப்படைத் தேவைகளைக்குக் கூடுதலாக ஓரளவு வீச்சாகச் செலவு செய்யவுமான குடும்பமாகத் தான் இருந்தது. நான் அறிமுகமாகும் நிலையில் கருணாவின் அப்பா விபத்தில் கால் உடைந்து வீட்டோடு முடங்கி இருந்தார். மண்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணனும் நோய்வாய்ப்பட்டு பின்னாளில் இறந்து விட்டார். இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் முடிக்க வேண்டிய பொறுப்பும் வயதான தாய் தந்தையரைக் கவனிக்கும் பொறுப்பும் கருணாவுடையதாக இருந்தது.

பிறந்த குடும்பத்தைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ளும்படியான வேலைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை கருணா. எப்பொழுதும் இயக்கம் சார்ந்து சிந்திப்பவனாகவே இருந்தான். தன்னுடைய சுபாவம் அரசுப் பணிக்கு ஒத்து வராதது என்று தீர்மானமாகவே அதற்கு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.

தமுஎசவில் பொறுப்பில் இருந்தான். அந் நாட்களில் ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் போடுவது என்ற திட்டத்துடன் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தாலும் நுகர்வுச் சந்தை வாழ்க்கை முறை, தொலைக்காட்சிப் பரவலாக்கம் இரண்டும் இத்தகைய லட்சிய நாடகப் பயணத்திற்குத் துணை செய்யவில்லை. அவனது தலைமையிலான தீட்சண்யா நாடகக் குழு தொடர்ந்து இயங்கவில்லை.

அவனுக்கு மிகவும் விருப்பமான அச்சுத் துறையையே வாழ்வாதாரமாகக் கொள்ள முயற்சி எடுத்து தீட்சண்யா அச்சகம் துவங்கி சுமார் இரண்டாண்டுகள் நடத்தி வந்தான். அவனுடைய இயல்புக்கு அதனை லாபகரமாகச் செய்ய முடியவில்லை. அச்சினை அழகுறச் செய்வதில், நேர்த்தியில் காட்டும் அக்கறையை பொருளீட்டுவதிலும், தொழிலைத் தக்க வைப்பதிலும் காட்ட வேண்டும் அதுதான் தொழிலை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கான விதி. கருணாதான் தன்னை எந்த விதிகளுக்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளாதவன் ஆயிற்றே.

நான் எல்லாவற்றையும் அதற்குரிய நியாயங்களுடன் செய்வேன். பொறுப்புடன் செய்வேன். மேலும் மேலும் சரியாகச் செய்வேன். எனது செயல்பாட்டின் விளைவு அதிகபட்சம் எனக்குத் தெரிந்தவரை சரியாக இருக்கும். அதற்கு முன் பின்னான பொருளாதாரக் காரணிகள் குறித்து எனக்கு அக்கறை இல்லை என்பது தான் கருணாவின் கோட்பாடு. என்னுடைய செயலின் விளைவு சரியாக இருக்கும் பொழுது அதன் பொருளாதாரத் தேவையும் சரியாகவே ஈடு செய்யப்படும் என்பது அவனது முடிந்த முடிபு.

அதற்காகப் பொருளாதாரம் தொடர்பான பொறுப்புகளில் இருந்து நழுவிச் சென்று விடுகிறவனல்ல. காசுபண விசயத்தில் எனக்குச் சில அனுபவங்கள் உண்டு. தனது தங்கையின் திருமணத்தை ஒட்டி பணவுதவி வேண்டினான். நானும் எப்போதும் பண விவகாரங்களைக் கையாள்பவன் அல்ல. ஆனால் நான் மாதாந்திரச் சம்பளம் பெறுகிறவன். அதற்கு முன்னர் ஒரு தங்கையின் திருமணத்தை நடத்தியவன் என்ற முறையில் அவனுக்கு உதவுவது கடமை என்று வரித்துக் கொண்டேன். இன்றைக்கு அது சிறிய தொகை என்றாலும் அன்றைக்கு அது முக்கியமான தொகைதான். அவன் கேட்டபடியே கொடுக்கவும் முடிந்தது. அதையும் திருப்பிக் கேட்கும் எண்ணத்தில் கொடுக்கவில்லை.

ஆனால் இச்சம்பவம் நடந்து ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நிகழ்வை முடித்து விட்டு இரவில் என்னுடைய அறையில் ஐந்தாறு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு என்னுடைய பண நெருக்கடிப் பக்கம் திரும்பியது. அப்போது ஒரு நண்பர் ”நீ இவன்ட்ட வாங்கின காசத் திருப்பிக் கொடுத்தா நெருக்கடியான நேரத்துல பாவம் உதவியா இருக்குமில்ல” என்றார் கருணாவைப் பார்த்து. அந்தப் பேச்சில் கருணா ஈடுபாடு காட்டவில்லை. ஆகவே நானும் காட்டவில்லை.

ஆனால் அடுத்த மாதமே திருவண்ணாமலையில் இருந்து அதிகாலையில் பஸ் ஏறி நான் ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பும் போது படபடப்புடன் தோழர் சாமிநாதன் அறை முன் வந்து நிற்கிறார். தொலைபேசி பரிமாற்றங்கள் பரவலடையாத காலமது. ”என்ன தோழா இந்த நேரத்துல” என்றேன். கருணா பணம் கொடுத்து விட்டாப்புல என்று நீட்டினார். கசங்களான பத்து ரூபாய்க் காகிதங்கள். ”மாச மாசம் கொடுத்தனுப்புறேன்னு சொன்னாரு” என்று பரபரத்த கால்கள் நிற்காமலே கிளம்பி விட்டார் சாமிநாதன்.

அதுபோலவே தொடர்ந்து அடுத்த மூன்று மாதங்களில் நான் கொடுத்திருந்த தொகை அனைத்தும் வந்து சேர்ந்தது. ஒருமுறை சங்கர் வந்தான் என்று நினைவு. பெரும் சிரமங்கள் மேற்கொண்டு தான் அந்தப் பணத்தை அவன் கொடுத்து அனுப்பி இருக்க வேண்டும். எனவே அவனது அச்சக எண்ணுக்குப் போனடித்து ”ஏம்பா இவ்ளோ ரிஸ்க் எடுத்து  கொடுத்தனுப்பாட்டி இப்போ என்ன கருணா. நமக்குள்ள இவ்ளோ கணக்குப் பாக்கணுமா என்ன” என்று சொல்வதற்குள் ”அட அத விடுப்பா. அதுல போயி என்னா  கெடக்குது”  என்று சகஜமாக்கப் பேச்சை வேறுபக்கம் திருப்பினான். அவனிடம் பொருள் இன்மையினால் எப்போதும் நெருக்கடியும், கூச்ச உணர்வும் இருந்தது. ஆனால் காசு பணம் இருக்கிற பொழுது அதனை ஒருபோதும் இறுக்கிப் பிடித்து செலவு செய்ததில்லை. தாராளமாகச் செலவு செய்வான்.

திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு நடக்கிற பொழுதெல்லாம் ஓசூரில் இருந்து ஒரு செட் முன்கூட்டியே போய்விடுவோம். தட்டி போர்டு கட்டுவதில் இருந்து வசூல் வேலைகள் உட்பட அத்தனையும் செய்வோம். அப்படிப் போயிருந்த பொழுது கலையிரவுச் செலவுக்காக அவசரமாக என்னிடம் ஆயிரம் ரூபாய் பெற்றான். அது அவ்வளவு தான் கலையிரவுக்கான என்னுடைய பங்காகி விடும் என்று நினைத்து விட்டேன். ஊர் திரும்பிய இரண்டு வாரம் கழித்து அப்போது பொருளாளராக இருந்த பாஸ்கரிடம் இருந்து போன் வந்தது. ”தோழர் உங்களுக்கு ஆயிரம் ரூபா எம்ஓ பண்ணனும் அடர்ஸ் சொல்லுங்க” என்று கேட்டார். நான் கருணாவுக்குப் போனடித்து ”ஏம்பா இவ்வளவு கணக்கா இருக்கணுமா? என்று கேட்டேன். “அட கையில காசு நிக்கிற மாதிரி எங்கூரு ஜனங்க வாரிக் கொடுத்திருக்காங்க. வையி…. உன்னட்ட இருந்தா எங்க போய்டும். அப்பறம் வாங்கிக்கலாம். அப்பிடியே விட்டுருவமா என்ன?” என்று உற்சாகக் கூவலோடு போனை வைத்தான். வீச்சாகச் செலவு செய்வோரிடம் இவ்வளவு கறார்த் தன்மை இருப்பது அரிதிலும் அரிது. கருணா எப்போதும் அரிதுகளால் ஆனவன் தானே.

தமிழகமெங்கும் அறிவொளிக் கலைப்பயணம் நடந்த பொழுது அதில் தமுஎகசவின் பங்கு கணிசமானது. அதற்கு முன்னர் 1989 இறுதியில் அறிவியல் இயக்கக் கலைப்பயணம் தமிழகம் முழுக்க இரண்டு குழுக்களால் நடத்தப்பட்டது. கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய நகரங்களில் அறிவியல் விழிப்புணர்வு நாடகம் நடத்தினோம். ஒரு நாளைக்கு மூன்று இடங்களில் என்ற விதமாக பத்துநாட்கள் பயணம். இந்தக் குழுவிற்குத் தலைமை நான். பதினைந்து பேர்கொண்ட குழுவில் கருணாவும் ஒரு கலைஞன். வயதில் நான் அவனை விட மூத்தவன் என்றாலும் மேடை நிகழ்ச்சிகளிலும், நாடகக் குழு உருவாக்கத்திலும் என்னிலும் மூத்த கலைஞன் கருணா.

அந்த வகையில் அந்தக் குழுவிற்கு தலைமை ஏற்கும் தகுதி உண்டு என்றாலும் எனது குழுவில் ஒருவனாக இருப்பதில் அவனுக்கு எந்த சலனமும் இருந்ததில்லை. இடதுசாரி இயக்கங்களில் தலைமை என்பது மற்ற யாரைக் காட்டிலும் கூட்டு முடிவை நிறைவேற்றுவதில் அதிக பொறுப்பு உடையது என்றே பொருள். எனவே எனக்கு ஒத்துழைப்பதில் கருணாவுக்கு எந்த மனத்தடையும் இல்லை. ஆனால் குழுவுக்குள் அடங்காத அவனது வழக்கமான பண்பு அதன் தலைவனாகிய எனக்கு இடையூறாக இருந்து கொண்டே இருக்கும். பின்னிருக்கை மாணவனுக்கு உரிய வகையில் எந்த நேரமும் எல்லாவற்றையும் உடையல் விட்டுக் கொண்டே இருப்பான். ஆனால் மறுபுறத்தில் மேடைநிகழ்வுகளைத் தூக்கி நிறுத்துவதில் அவனுடைய பங்கு தனித்துவமானது.

எங்களது நாடக முறையில் இன்னாருக்கு இன்ன பாத்திரம், அதற்குரிய வசனம் என்றெல்லாம் இல்லை. முதன்மை, இரண்டாம் நிலைப் பாத்திரங்களை ஏற்க எப்போதும் இரண்டு மூன்று பேர் தயாராகவே இருப்பார்கள். இருந்தாலும் குறிப்பிட்ட சில பாத்திரங்களைச் சிலர் செய்தால் தான் மிகச் சரியாக இருக்கும்.

ஆனால் எங்கள் நாடகங்களில் (ஒவ்வொரு மேடைக்கும் ஏழெட்டு) அனைத்து கனமான பாத்திரங்களையும் அநாசியமாக நடித்துக் கொடுப்பதில் கருணாவின் பங்கு அளப்பரியது. முந் நாடகத்தில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்றிருப்பான். அடுத்த நாடகத்தில் சோகமான பாத்திரம். முந்தைய நாடகத்தைப் பார்த்த அதே  பார்வையாளர்கள் கருணா வந்ததும் ஹே என்று குரலெடுத்துச் சிரித்து விடுவார்கள். ஆனால் ஓரிரு நிமிடங்களிலேயே வசன உச்சரிப்பில் கனமான சோகத்தை வரவழைத்து விடுவான். அந்நாடக முடிவில் பார்வையாளர்களின் கண்கள் கலங்கி விடும். அந்தளவிற்கு நேர் இரண்டு முரண்பட்ட உணர்வுகளையும் மிக இயல்பாகக் கையாளத் தெரிந்த மகத்தான கலைஞன் கருணா.

புதுவையில் பத்து நாட்கள் நாடகத் தயாரிப்பு முகாம். தொடர்ந்து அப்படியே கலைப் பயணம். நாடகத் தயாரிப்பே மாறுபட்டது. நாடக ஆசிரியர் எழுதிக் கொடுத்த வசனங்களை உருப்போட்டு எப்படி ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க வேண்டும். யார் எங்கே நிற்க வேண்டும். கையை எப்படித் தூக்க வேண்டும். முதுகை எப்படித் திருக வேண்டும் என்பதல்ல. நாடக நெறியாளரும் கலைஞர்களும் இணைந்தே வசனத்தில் இருந்து வடிவம் வரைக்கும் தயாரிக்கிற ஜனநாயகப் பூர்வ முறையாகும் அது.

உடலை இலகுவாக வைத்திருக்க வேண்டும் என்று பயிற்சியின் போதே வெறும் மரக்கறி உணவாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இறுதியாக வட்டச் சுற்றில் அனைத்து அம்சங்களும் பேசி விவாதித்து தீர்வு எட்டப்படும். ஒருங்கிணைப்பாளர்கள், நாடகத்தில் உடல் மொழிக்கும் உணவுக்கும் தொடர்புண்டு. ஆகையால் பயிற்சி காலத்தில் இறைச்சி உணவு வழங்கப்படாது என்றதோடு, நாடகப் பயணக் காலத்திலும் இறைச்சி உணவு வழங்கக் கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி விட்டார்கள். பயிற்சி தொடங்கி நான்கைந்து நாட்களில் கருணா ”இறைச்சி உணவு வழங்கப்பட வேண்டும். எங்கள் உடம்பு ஒன்றும் புதிதாக வளைகிற ஒன்றல்ல. காலங்காலமாக உழைத்துப் பழக்கப்பட்டது தான்.  எலும்புத் துண்டு கடிக்காம இருக்க நாங்க என்ன பூஜையா பண்ணிட்டு இருக்கோம் என்று வட்டச் சுற்றில் குரல் எழுப்பினான். அதனைச் சற்றும் எதிர்பார்த்திராத ஒருங்கிணைப்பாளர்கள் அவனது அழுத்தம் திருத்தமான குரலுக்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. அப்பயண நாட்கள் முழுவதும் ஒருவேளையாவது இறைச்சி உணவுடன் உபசரிக்கப்பட்டோம். குழுக் கலைஞர்கள் அனைவரும் இறுதி நாளன்று மேற்படி இறைச்சி உணவிற்குக் காரணகர்த்தனாகிய கருணாவுக்கு தனியாக ஒரு ”சுபோ ஜெயம்” போட்டோம்.

இயக்கத்திற்குள்ளேயே ”எனது உணவு எனது உரிமை” என்று 1990 ல் குரல் எழுப்பும் ஒரு தெளிவு பெற்றிருந்தவன் கருணா. அதனால் தான் இன்றைய இந்துத்துவ அரசு மாட்டுக்கறிக்கு தடை அறிவித்த உடனே திருவண்ணாமலையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தை முன்னின்று நடத்தும் உறுதி கை கூடி வந்தது. இயல்பிலேயே களப்போராளி கருணா.

’கருணா கறிக்கு ஏங்கி’ என்ற முடிவிற்கும் வந்து விட முடியாது. அது 1992 அல்லது 1993 ஆம் ஆண்டாக இருக்கும் (திருமணத்திற்கு முன்). அந்த ஆண்டு வறுமையால் தீபாவளி அன்று கருணா வீட்டில் தீபாவளிக்குக் கறி சமைக்க வகையற்றுப் போனது. நாடே கறி சமைத்துண்ணும் நாளில்  வயது முதிர்ந்த அப்பா அம்மாவிற்கு அதனை உண்ண வகை செய்ய முடியாமல் போனதே என்று இனி இறைச்சியே உண்பதில்லை என முடிவெடுத்து விட்டான்.

நண்பர்கள் குழாத்துடன் நாங்கள் உணவருந்தச் செல்கையில் இவனுக்கு (கருணா) அசைவம் சொல்ல வேண்டாம். சாப்பிடமாட்டான் என்று பவா சொன்னான். சொன்ன தொனியிலேயே அதில் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது என்பது புரிந்தது. உணவருந்தி விட்டு வெளியில் வந்த பின்னர் தோண்டித் துருவிக் கேட்டு மேற்படி விவரத்தைத் தெரிந்து கொண்டேன்.

அதற்கு அடுத்த தீபாவளியின் போது காலையில் கருணா வீட்டில் இட்டிலி கறிக் குழம்பிற்கு ஏற்பாடு செய்வது, ஓராண்டு முடிவில் சபதத்தை முறிப்பது என்று அங்கேயே தீர்மானம் எடுத்தோம். அந்த வருடம் தீபாவளிக்கு மறுநாள் எனது பிரம்மச்சாரி அறையில் எனது கையால் விதவிதமான அசைவ வகைகள் சமைத்து அதற்காகவே கருணாவை தி.மலையில் இருந்து வரவழைத்து விருந்தளித்தேன். ஆனால் அவனால் அந்த ஒரு ஆண்டு முழுமைக்கும் இறைச்சி உண்ணாமல் கட்டுப்பாடுடன் இருக்க முடிந்தது. அப்படியான அதிர்ச்சிகளையும் அவ்வப்போது அளித்துக் கொண்டிருப்பான்.

அறிவொளி நாடகப் பயணத்தை ஒட்டி கருணா தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களுக்கும் பயணப்பட்டிருந்தவன். எனவே நான் எந்தப் புது நகரத்திற்குப் போனாலும் அந்த ஊரில் நல்ல இறைச்சியுணவு உண்பதற்குச் சிறந்த இடம் எதுவென்று கருணாவைப் போனடித்துக் கேட்பது  வாடிக்கையாயிற்று.

மாதம் சுமார் 15 லட்சம் பணப் புழக்கம் கொண்ட எனது உணவகத்தை இடப் பிரச்சனையால் முற்றாக முடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். கையில் பணமில்லை. வருமானத்திற்கு வழி தெரியாத நிலையில் நெருங்கிய நண்பர்களது அழைப்பின் பேரில் பாண்டிச்சேரி வந்திறங்கினேன்.

பாண்டி வரும் முன் மூன்று மாத காலம் வம்சி பதிப்பகத்தில் தற்காலிகப் பணி செய்து கொண்டு திருவண்ணாமலையில் தங்கி இருந்தேன். அப்போது அடிக்கடி கருணாவைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இருந்தது. அவன் தினமதி செய்திப் பத்திரிகையில் இணையாசிரியனாக இருந்த நேரம் அது. எனது நிலையுணர்ந்து ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் 200, 500 என்று ரூபாயைக் கையில் திணிப்பான். வேண்டாம் கருணா என்று தயக்கத்தோடு மறுப்பேன். ”ஏய் சும்மா பழைய ஜம்பம் காட்டாதடா. பேசாம வையி” என்று அழுத்தித் திணித்து விட்டுப் போவான்.

வம்சியில் வேலை முடிவுக்கு வந்து சென்னைப் புத்தகக் கண்காட்சிக்காகச் சென்று சென்னையில் தங்கி இருந்தேன். எனக்குப் போனடித்து ”புத்தகக் கண்காட்சி செய்திகளை, புதிய நூல்கள் குறித்து அன்றாடம் ஏதாவது செய்தி அனுப்பிக் கொண்டே இரு. எங்கள் நாளிதழ் உனக்கு ஒரு தொகை வழங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினான். எனக்குப் புனைவு எழுதித் தானே பழக்கம். செய்தி எப்படி….? என்று இழுத்தேன்.

92 அல்லது 93 வாக்கில் ஓசூரில் தமுஎச நடத்திய கருத்தரங்கச் செய்திகளை நான் எழுதி மறந்து போனதை நினைவுபடுத்தி ”அதெல்லாம் நல்லாத் தானே எழுதின. உன்னால நல்லா கவர் பண்ண முடியும். எப்படியாவது டெய்லி எனக்கொரு மெய்ல் அனுப்பினே இரு. நானும் யார்ட்டயாவது பேசி நீ அனுப்புற டெக்ஸ்டை ஜிகினா வேலை பண்ணி சுவாரஸ்யப்படுத்திக்கிறேன். கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்க வேண்டிய நேரம் இது” என்று நெம்பி எழுதச் செய்தான். மொக்கை சுப்பிரமணி என்ற பெயரில் பத்து நாட்களாக நாளிதழில் அரைப் பக்கத்திற்கு புத்தகக் கண்காட்சி செய்தி அனுப்பிக் கொண்டிருந்தேன். அதேபோல தினமதியில் இருந்து பணம் பெற்றுத் தருவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டான்.

ஒருமுறை பணத்திற்காக நான் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அவனது பளிச்சென்ற யமாகா பைக்கில் வந்து விரல்கள் உதற பணம் கொடுத்து விட்டு எங்கள் நெருக்கத்திற்கு மாறான குற்றவுணர்வுடன் ”சாரி…. சாரிப்பா” என்று பலமுறை கேட்டுக் கொண்டிருந்தான். நான் சிரித்தபடி ”எதுக்குக் கருணா இத்தினி சாரி சொல்ற” என்று கேட்டதற்கு “இல்லடா…. நீ பழைய மாதிரி இருந்தா பரவால்ல. பொருளாதார ரீதியா சரிஞ்சு போய்ட்டதுனால இவன் காத்திருந்தா என்னான்னு நான் நினைச்சதா நீ நினைச்சிடுவோய்ன்னு எனக்குப் பயம். அதான். மற்ற நேரமா இருந்திருந்தா. த்தா கொஞ்சம் நேரம் பொறுடான்னு சொல்லிருவேன். இது அப்பிடிப்பட்ட நேரம் இல்லை. அதான்” இதுதான் ஒரு கலைஞனான கருணாவின் மென்னுணர்வு.

நான் பாண்டி வந்து நிலைபெறும் வரை அவ்வப்போது போனில் அழைத்து நிலைமையைக் கேட்டறிந்து கொண்டே இருந்தான். ஒருமுறை எனது குரலில் பலவீனத்தை உணர்ந்திருப்பான் போலும். “இங்க பாரு…. நீ நேத்து இருந்த நிலையையே நினைச்சிட்டு இருக்கக் கூடாது. பத்திருபது பேரை வைச்சி வேலை வாங்கி இருக்கலாம். கை நிறைய காசு பணம் புழங்கி இருக்கலாம். அதையெல்லாம் இழந்துட்டமேன்னு நினைச்சிட்டு ஏதாவது லூசுத் தனமா தவறான முடிவுக்கு வந்துறப் போற. உன்னட்ட ஒன்னுக்குப் பல திறமைகள் இருக்கு. இப்போதைக்கு கஷ்டங்கள் இருந்தாலும் அதெல்லாம் மீண்டு வந்துரலாம். மனசு விட்றாத தோழா” என்று மனதளவில் சரிந்து விடாமல் தாங்கி நிறுத்த அன்றைக்கு எனக்கு இருந்த ஒரே ஆள் கருணா தான்.

பொருளாதாரச் சரிவினால் எனக்குள் ஏற்பட்ட தாழ்வெண்ணத்தில் இருந்தும், பிறரிடம் இருந்த ஒதுக்க உணர்வில் இருந்தும் என்னை மீட்டெடுக்க தொடர்ந்து முனைப்பு காட்டினான். ஒரு தீபாவளியின் போது என்னைக் குடும்பத்துடன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான். நான் போகவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் பொங்கலின் போது செல்வியைப் போனடிக்கச் சொல்லி குடும்பத்துடன் வரவழைத்து இரண்டு நாட்கள் வீட்டோடு இருக்கச் செய்து தன் கைப்பட சமைத்துப் பரிமாறினான். சின்னச்சின்ன மொழிபெயர்ப்புப் பணிகளையும் அங்கங்கே பெற்றுத் தந்து எனது பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கத் துணை செய்தான்.

நான் பாண்டியில் குடியேறிய நிலையில் என்னை வீடுதேடி வந்து பார்ப்பவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து இயக்கப்பணிகளுக்காக பாண்டிக்கு வரும் போதெல்லாம் வீட்டுக்கு வந்து உணவருந்திச் செல்வதை ஆரம்ப நாட்களில் வழக்கமாக வைத்திருந்தான். பின்னான நாட்களில் வந்து அறை போட்டு விட்டு “டேய் யாத்ரி நிவாஸ்ல இருக்கேன். இட்லியும் மீன் கொழம்பும் சமைச்சி எடுத்து வந்துரு” என்று கட்டளை போடுவான்.

ஜிப்மரில் கண் ஆபரேசன் செய்த போது சில நாட்கள் நான் ஊரில் இல்லாத நிலையில் என் மூலமாக அறிமுகமான தோழர் கார்த்தியிடம் என்னளவிற்கே உரிமை பாராட்டி தனது துணிகளை துவைத்து எடுத்து வரச் சொல்லி இருக்கிறான். அவனோடு உறவு கொண்டுள்ள அனைவருமே அவனது குடும்ப உறுப்பினர்கள் தான். உடையை எப்போதும் பளிச்சென்று போடுவான். தான் வைத்திருந்த பொருட்களை நேர்த்தி குறையாமல் வைத்திருப்பதில் அவனுக்கு நிகராக இன்னொரு ஆளைப் பார்த்ததில்லை. உண்மை பிறருக்காக உயிரைக் கொடுப்பவன். கொடுத்தவன். ஆனால் தட்டி போர்டு எழுதுகையில் அவன் கையாளும் பிரஷ்ஷை மற்றவருக்குத் தரமாட்டான். சுமார் இருபதாண்டு காலம் அவனிடம் அந்த சிவப்பு நிற யமாகா பைக் இருந்தது. ஒருநாளும் நான் ஓட்டக் கொடுத்ததில்லை. கைப் பொருட்களைக் கையாள்வதில் அவ்வளவு நேர்த்தி.

கருணாவின் திருமணம் முடிந்து, சொர்ணா, சீனு பிறந்த காலங்களில் நான் பெரும்பாலும் நான் வெளிநாட்டில் இருந்தேன். ஆகையால் எனக்கும் கருணாவுக்குமான நெருக்கம்  செல்வி அறியாதது. ஒரு தமுஎகச நிகழ்வின் போது செல்வியும் பிள்ளைகளும் உடன் வந்திருந்தனர் ஓசூருக்கு. அப்போது ஆதவன் வீட்டில் தங்கி இருந்தாலும் அடிக்கடி சென்று பார்த்து, பிள்ளைகள் ஏதோ கேட்டு நான் வாங்கி வந்ததைக் கவனித்த செல்வி ”தோழர் ரொம்ப உரிமையாவும் பாசமாவும் இருக்காரில்ல” என்று கருணாவின் காதில் கிசு கிசுத்துள்ளார். தொலைவில் இருந்த என்னை அருகில் அழைத்த கருணா ”இவ என்ன சொல்றா கேட்டியா….?” என்று என்னைக் கட்டிக் கொண்டு சிவாஜி குரலில் ”நம்ம பயடீ இவேன். நம்மள மாதிரித் தானே இருப்பான்” என்றான்.

மேடைக்கலைஞனாக தன்னை நிறுவிய பின்னர் போதிய வாய்ப்புகள் இல்லாததால் ஆவணப் படம் எடுத்தல், மாற்றுத் திரை முயற்சி போன்றவைகளை இடைவிடாது மேற்கொண்டு வந்தான். மக்களுக்கான திரைப்பட, ஆவணப் படங்கள் எடுக்கும் இளைஞர்களைத் திறந்த மனதோடு வரவேற்பதுடன் அவற்றை திரையிடுவதற்கான களம் அமைத்துக் கொடுப்பதில் பெரு முனைப்பு காட்டினான். உலகத் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் தொடர் கட்டுரை எழுதினான்.

வியப்பூட்டும் விதமாக ஓராண்டிற்கு முன்னர் சிறுகதை எழுதினான். தனது தந்தையாருடன் மண்டி அனுபவங்களையும் இன்றைய உலக மயச் சந்தைச் சூழலில் பழைய வணிக உறவுகள் சிதைந்து இடைத்தரகர்களின் வேட்டைக் காடாக மாறி வருவதையும் மையக் களனாகக் கொண்டு மண்டித் தெரு என்ற தலைப்பில் புதினம் எழுதும் எண்ணமும் அவனுக்கு இருந்தது. காலம் அனுமதித்திருந்தால் செய்யக் கூடியவனே. அவன் விட்ட இடத்தைத் தொடர வேண்டிய பொறுப்பு என்னைப் போன்ற பலருக்கும் இருப்பதாகக் கருதுகிறேன்.

கொண்டாட்டமான மனநிலையிலேயே எப்போதும் இருக்க விரும்பியவன். வேலை, நிகழ்வு, போராட்டக் களம், நட்பு, உறவு அனைத்தையும் கலகலப்பாகவே வைத்திருந்தான். உடலால் நோய்மையில் தளர்ந்து கொண்டே வந்தாலும் தன்னைச் சுற்றிலும் எப்போதும் உற்சாக அலையை உருவாக்கிக் கொண்டே இருந்தான்.

கடைசியாக இறப்பிற்குச் சரியாகப் பத்துநாட்களுக்கு முன்னர் கருணா பாண்டிக்கு வந்திருந்த போது ஞாயிறன்று சந்திக்கத் திட்டமிட்டிருந்தும் தடை ஏற்பட்டு விட்டது. மறுநாள் திங்களன்றும் அவன் இங்கிருப்பது தெரிந்திருந்தால் சந்தித்திருப்பேன். அதற்கு முந்தைய சனிக்கிழமை முகநூலில் போட்ட படத்தில்  சற்றே உப்பலானது போலத் தோன்றியதால் உடல் நலனில் கவனம் செலுத்தச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்படிச் சொன்னாலும் அசிரத்தையான பதில் வரும் என்ற போதிலும் சொல்லாமல் இருக்கக் கூடாது என்பது என் முடிவாக இருந்தது. ஆனால் நான் சொல்லிக் கேட்கும் நிலையை அவன் முன்னரே கடந்து விட்டிருக்கிறான் என்பதை இறப்பு உறுதி செய்துள்ளது.

இறப்புச் செய்தி காதில் விழுந்த மறுநொடியே உடலின் குருதி முழுதும் வடித்தெடுக்கப்பட்டது போல் துவண்டு விட்டேன். ஒருபோதும் கண்டிராத பதற்றம் தொற்றிக் கொண்டது. கடந்த ஐந்தாண்டுகளில் அடுத்தடுத்து அம்மா, அப்பா, தம்பியர் இருவர் என நான்கு இறப்புகள் ரத்த உறவில் நிகழ்ந்தேறி விட்டன. ஒவ்வொரு சடலத்தைக் காணும் போதும் இரண்டு துளிகளாவது கண்ணீரை அவர்களுக்கு வடித்துத் தர வேண்டும் என்று நினைத்தேன். எத்தனை முயன்றும் கண்ணீர் வரவில்லை. சரி அவ்வளவு தான். தோளோடு ஒட்டிக் கொண்டிருந்து நீங்கிய மகளின் இறப்போடு எனது கண்ணீர் அத்தனையும் தீர்ந்து போனது என்று சமாதானம் கொண்டிருந்தேன்.

நிறைவான வாழ்வை முடித்து விட்டவன் போல நிலையான உறக்கத்தில் ஆழ்ந்திருந்த கருணாவைக் கண்ணாடிப் பேழையில் பார்க்கும் முன் அவனுக்குப் பிடிக்காது, அழக்கூடாது என்று நூறுமுறை எடுத்த உறுதி சிதைந்து போனது. அது ஒரு மனிதனின் இறப்பு அல்ல. ஆயிரம் மனங்களை வென்று தன்னகப்படுத்தியவனின் இன்மை. எனினும் அவன் எல்லோருள்ளும் தன்னைக் கரைத்திருப்பான்.

கருணா ஆற்றல் மயமானவன். அந்த ஆற்றலை அவசர அவசரமாக அள்ளி வழங்கித் தீர்ந்த நிலையில் காலத்தில் உறைந்து விட்டான்.

நீ அழுத்தமானவன் கருணா. அதே அழுத்தத்தோடு உறவு கொண்ட எங்களின் இறுதி நிமிடம் வரை நிலைத்திருப்பாய்.

போப்பு -இந்தியா

போப்பு

0000000000000000000000

எழுத்தாளர் பற்றிய சிறு குறிப்பு :

போப்பு புதுச்சேரியில்  எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் என்ற தளத்தில் இருக்கின்றவர். ஆக்கங்களாக புனைவு மற்றும் உணவு எழுத்துகள் என்ற பகுதில் இயங்குபவர். அத்துடன் இவர் ஒரு அக்குபஞ்சர் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார்.

நடு குழுமம்

நடு லோகோ

(Visited 125 times, 1 visits today)
 

3 thoughts on “நுரைத்துச் சீறியும், தெளிந்து வளைந்தும் சென்ற ஆற்று நீரவன் கருணா- கட்டுரை- போப்பு”

Comments are closed.